8 Dec 2014

ஆதிவனம் - சிறுகதை (அறிவியல் புனைவு)

ஆதிவனம் குறித்து கேள்வி பட்டிருகிறீர்களா? மனிதர்கள் தங்களையும் விலங்குகளாக நினைத்துக் கொண்டிருந்த வரையிலும், நெருப்பும் சக்கரமும் கண்டுபிடிக்கப் பட்டிராத, ஆற்றுப்படுகைகளை ஆக்கிரமித்து நாகரீக வளர்ச்சி அடைந்திராத வரையிலும், காமம் கழிக்க மட்டுமே கட்டியணைத்த வரையிலும் ஆதி காடு சுகமாகத்தான் இருந்தது. அங்கே வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் அதனதன் தேவை கருதி ஒரு பல்லுயிர்ச் சுழற்சியை நிகழ்த்தி வந்தன. காட்டிற்கு ராஜா சிங்கம் என அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கானகத்தின் வேட்டையன் புலியும் தந்திரக்கார நரியும் வெறும் புலியும் நரியுமாகத்தான் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும்.


ஆதிகாடு குளிர் நிறைந்தது. பசுமை நிறைந்தது. இடைவிடாத பறவைகளின் சப்தமும் வண்டுகளின் ரீங்காரமும் கொண்டது. அடர்ந்து வளர்ந்த மரங்களின் இலைகளை ஊடுருவிப் பரவும் சூரிய ஒளி ஒரு மெல்லிய கோடாக வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும். இளம் இலைகளின் மீது பாய்கையில் அடர்த்தி குறைந்த பச்சை நிறத்தையும் மூத்த இலைகளின் ஊடாகப் பரவும் போது அடர் பச்சை நிறத்தையும் உமிழக் கூடிய சூரியன் அதுவரை தெய்வமாகியிருக்கவில்லை. ஆம் ஆதி காட்டில் தெய்வம் என்று யாருமே கிடையாது. தெய்வத்தின் தேவைக்கான காரணம் புலப்படாத வரைக்கும் மனிதன் வனத்தை, வனத்தின் இயற்கையை தொந்தரவு செய்திருக்கவில்லை. 

ஆதி காட்டைப் பற்றி அதிகமாக கேள்விப் பட்டிருக்கிறேன். அது சார்ந்த தேடல் என்னுள் இயற்கையாக எழுந்தது. மனிதன் எழுத்துப் பழகிய நாளில் இருந்து இப்போதுவரை அவன் அதிகம் சிலாகித்த விஷயம் ஆதி காடாகத்தான் இருக்க வேண்டும். கானகத்தைப் பற்றி நினைக்க நினைக்க நானும் அவற்றினுள் நுழைந்து அவர்களில் ஒருவனாகவே என்னை ஒப்புகொடுத்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. நல்லவேளை நல்ல தமிழில் கானகம் அதிகமாகவே புனையப்பட்டுள்ளது. என்னால் நேராடியாகக் காண முடியாத கானகம் மற்றொருவனின் கற்பனையின் வாயிலாகவாவது காண முடிகிறதே என்ற அல்ப சந்தோசம். 

ஆதி கானகத்தின் முதல் உயிர்பலி மனிதனால் வெட்டப்பட்ட முதல் மரமாகத்தான் இருக்க வேண்டும், அன்றிலிருந்து தான் நாகரிகம் வளரத் தொடங்கியது. தானும் மனிதனும் ஒன்று என அதுவரை நம்பிவந்த மனிதக் குரங்குகள் மனிதனைக் கண்டு அஞ்சத் தொடங்கின. நான் உன்னில் இருந்து உயர்வானவன் என்று ஒவ்வொரு உயிரினத்தையும் நம்ப வைக்கத் தொடங்கினான் மனிதன். ஆதிகாடு மெல்ல அதன் உருவழியத் தொடங்கியது. அது அழிகிறது என்பதை அவனே வேதனையுடன் பதிவும் செய்தான் என்பது தான் நகைமுரண். 

ஆதிகாடை காப்பாற்றி இருக்க வேண்டும். முழுவதுமாக காப்பாற்றியிராவிட்டாலும் அதன் எச்சங்களையாவது காப்பாற்றியிருக்க வேண்டும். முன்னோர்கள் சுயநலமானவர்கள். தாங்கள் மட்டுமே ஆண்டு அனுபவித்து வருங்காலத்தை அவதியுறச் செய்யும் அளவிற்கு சுயநலமானவர்கள். என்னால் மீண்டும் ஒரு ஆதிகாட்டை உருவாக்க முடியாது. உலகின் கடைசி மரம் அழிந்து ஐநூறு வருடங்கள் ஆகிவிட்ட பின் மீண்டும் ஒரு கானகத்தை உயிரோட்டமான வனத்தை உருவாக்க முடியும் என்பது கடவுளுடன் தேநீர் அருந்துவதற்குச் சமம். இருந்தாலும் அதற்காகத்தான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவோ அறிவியல் ஆரய்ச்சிகள் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதிலும் ஒருவராலும் ஒரு தேனீயின் மகரந்தச் சேர்க்கையை தாங்கள் தயாரித்த ரோபோ தேனீக்கள் கொண்டு நிகழ்த்தவே முடியவில்லை. 

உலகின் கடைசித் தாவரம் அழிவதற்கு முன்னரே கடைசித் தேனீ அழிந்துவிட்டது. அதை மட்டுமாவது காப்பாற்றியிருக்க முடியுமானால், அதன் மூலமாவது மகரந்த்தச் சேர்க்கையின் தொடர்ச்சியை நீளச் செய்திருக்க முடியுமானால் எங்களால் தாவரம் என்ற உயிரினத்தைக் கண்குளிர பார்த்திருக்க முடியும். வெறும் எழுத்துகளாகவும், பிம்பங்களாகவும், தொடர் காட்சிகளாக விரியும் படங்களாகவும் பார்த்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. 

இந்த நவீன யுகத்தில் ஒருவனது அறிவின் தேவையைக் கருத்தில் கொண்டு அவனது ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், தேவையில்லை எனில் அடுத்த நொடியே அழித்துவிடவும் முடியும் அளவிற்கு வளர்ச்சி கண்ட பின்னரும் இன்னும் எங்களால் ஒரு சிறு தாவரத்தைக் கூட உருவாக்க முடியவில்லை என்பது தீரா சோகம். 

ஆதிகாட்டில் இருந்து மனிதன் தன்னை வேறுபடுத்தி நிலப்பரப்புகளாக பிரிந்து செல்லத் தொடங்கியபோது தனது முதல் கடவுளாக வணங்கிய சூரியன் தான் இன்று எங்களின் முதல் எதிரி. சூரியனின் கதிர்வீச்சு எங்களின் ஆய்வுகளை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. சூரியனையே அழிக்கும் ஆயுதத்தைக் கண்டுபிடித்து விட்ட போதிலும், சூரியன் அழிந்தால் நாங்களும் அழிந்து போவோம் என்ற ஒரே அறிவியல் உணமையைக் கருத்தில் கொண்டுதான் நீங்கள் வணங்கிய கடவுளை நாங்கள் வெறுக்கும் எதிரியை உயிரோடு விட்டு வைத்திருக்கிறோம். 

ஒருகாலத்தில் மனிதர்கள் வீட்டு விலங்குகளாக நாய்களையும் பூனைகளையும் வளர்த்தார்களாம். இன்று நாங்கள் மனிதர்களையே தரம் பிரித்து அவர்களில் ஒரு குழுவினருக்கு வீட்டு அடிமைகள் என்று பெயர்சூட்டி வளர்ப்புப் பிராணிகளைப் போல் வளர்த்து வருகிறோம். எங்களின் நாய்களும் பூனைகளும் கூட அவர்கள் தாம். நாங்கள் வாலாட்ட சொன்னால் வாலாட்டுவார்கள், பந்தை தூர எறிந்து எடுத்துவரச் சொன்னால் சொன்ன பேச்சு மாறாமல் எடுத்தும் வருவார்கள்.

உங்களால் நம்ப முடிகிறதா தெரியவில்லை. நம்பாது போனாலும் கவலை இல்லை. நான் ஆதி காட்டினை வளர்க்கத் தொடங்கிவிட்டேன். என்னுடைய நெடுநாள்த் தவம் அது. கற்பனையில் வழிந்தோடிய கானகத்திற்கு உருகொடுத்து மீட்டெடுப்பது என்பது வாழ்நாள் வேட்கை. பலமாத நீண்ட உழைப்பிற்குப் பின் அதனை மீட்டெடுத்தும் விட்டேன். ஆம் நானே அதன் கர்த்தா. அம்முவும் இதனை முதலில் நம்பவில்லை.

அம்மு என் நான்கு வயதுக் குழந்தை. அவள் பிறந்ததில் இருந்தே மற்ற அப்பாக்களைப் போல அவளுக்கு அறிவியலும் ரோபாடிக்ஸும் ஏ.ஐ-யும் கற்றுக் கொடுக்கவில்லை. அவள் என் மகள். ஒருவேளை என்னால் முடியாது போனால் என் கற்பனையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் அவளிடம் இருக்கிறது என்பதால் வெறும் கானகத்தைப் பற்றி மட்டுமே அவளிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். கடவுளின் கதைகளைக் கேட்பது போல் தன்னை மறந்து கேட்டுக் கொண்டிருகிறாள். நான் மீட்டெடுத்த கானகத்தின் உள் நுழையும் முதல் இரு அதிர்ஷ்டசாலிகள் நாங்களே என்பது வரலாற்று உண்மை. 

அம்மு முதலில் அந்த பிரம்மாண்டத்தின் நீட்சியை நம்பவில்லை. தன் பிஞ்சுக் கரங்களால் என்னை இறுக்கப் பற்றிக் கொண்டாள். தென்றல் அவள் தலைமுடியை மெல்ல வருட, காற்றில் அலைபாய்ந்த முடிக்கற்றைகளை பறக்க விடாமல் செய்து கொண்டிருந்தாள். அப்படியொரு அலாதியான உணர்வை இதுவரைக்கும் அவள் அனுபவித்ததே இல்லை. சந்தோசத்தில் என்னை கட்டிக் கொண்டாள். கரடுமுரடான மண் தரை. அவற்றின் மீது வளர்ந்து கிடக்கும் சிறிய புற்கள், செடிகள், அதன் மீது படிந்திருக்கும் ஈரமும் அரவணைப்பும் மெல்ல எங்கள் உடலுக்குள் பரவ உங்கள் வேதங்களில் சொர்க்கம் என்று கூறுவீர்களே அதில் இருப்பது போல்தான் உணர்ந்தோம். அதுநாள் வரை நடந்து பழகாத பாதையில் எங்கள் பயணம் நீளத் தொடங்கியது. 

வெறும் நீல நிற வானத்தைப் பார்த்துப் பழகிய எங்களுக்கு எங்களின் தலைமேல் தெரிந்த பச்சை நிற வானம் அற்புதத்தின் ஆரம்பம். வனத்தினுள் நுழைய நுழைய குளிர் மெல்ல பரவத் தொடங்கியது. ஆங்காங்கு கம்பி இழை போல் நீளும் சூரிய ஒளி இதமான கதகதப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. 

எங்கிருந்தோ துள்ளிக் குதித்து வந்த உயிரனத்தைப் பார்த்ததும் சட்டென அடையாளம் கண்டுகொண்டாள் 'ப்பா மான் ப்பா, ப்பா மான் ப்பா'. 

மானும் மானுக்கு அருகில் இருந்த குட்டிமானும் இவளைப் போலவே துள்ளிக் குதிக்கத் தொடங்கின. பஞ்சுத் தலையணைப் போன்ற ஒரு குள்ள முயல் அம்முவின் கால்களை சுற்றிச்சுற்றி வந்தது. அம்மு பிறந்ததில் இருந்து இன்று வரை அவள் முகத்தில் அப்படியொரு ஆனந்தத்தைப் பார்த்தே இல்லை. பிறந்த இரண்டாம் பருவத்தில் இருந்தே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் அவளுக்கு இயற்பியலின் அத்தனை சூத்திரங்களும் அத்துபடி. என்னுடைய நான்கு வயதில் நான் காடுகளைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருந்தேன். அம்மு இயற்பியலைப் பற்றி. 

முதலில் என் கரம் பற்றி நடந்து கொண்டிருந்த அம்மு, இப்போது என்னை இழுத்துச் செல்ல ஆரம்பித்திருந்தாள். அந்தக்குட்டி முயலும் மானும் கொடுத்த தைரியம் அவளுக்குள் இருந்த பயத்தை மொத்தமாக நீங்கியிருந்தது. முதல் முறையாக அவளுக்குள் இருந்த குழந்தையை ரசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குள் இருக்கும் குழந்தை மனதை புரிய வைத்ததும் இந்தக் காடு தானே. 

தூரத்தில் நீர் சலசலக்கும் ஒலி கேட்டு ஓட அவளைப் பின் தொடர்ந்து நானும். கண்ணாடி போன்ற சிறு ஓடை சலசலத்துக் கொண்டிருந்தது. மெதுவாக அதைத் தீண்டினாள். ஒன்றிரண்டு நீர்த்துளிகளை என் மீது தெளித்தாள். உடம்பெல்லாம் ஒருவித சிலிர்ப்பு. எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் குட்டி முயலும் மானும் நீர் அருந்த அம்முவும் முழங்காலிட்டு அவற்றைப் போலவே நீர் அருந்தத் தொடங்கினாள். கைகளை நீரினுள் விட்டு வேகமாக ஆட்டினாள். தெளிந்த நீர் லேசாகக் கலங்கி மீண்டும் தெளிந்தது. உள்ளிருந்த கூழாங்கற்கள் ஒன்றிரண்டை எடுத்து வீசி எறிந்தாள். 

நான் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் என் கற்பனையையும் தாண்டி அற்புதமாக விரிந்துள்ளது இந்தக் கானகம். எனக்கே என்னை நினைத்தால் பெருமையாக இருந்தது. அம்முவை வாரியணைத்து ஒரு சுற்று சுற்றினேன். என்னை இப்படியெல்லாம் அவள் பார்த்ததே இல்லை. அதிசியமாகப் பாத்தாள்

ரீங்கரிக்கும் வண்டுகளின் ஓசைகள் ஊடே தொடர்ந்து நடக்கையில், உடம்பெல்லாம் ரோமங்கள் நிறைந்து லேசாக கூன் விழுந்த முதுகினை உடைய அந்த முதல் மனிதனை அங்கே சந்தித்தோம். ஏறத்தாழ மனிதக் குரங்கு போலவே இருந்தான். நிலத்தினுள் மறைந்திருந்த கிழங்குகளை தோண்டிக் கொண்டிருந்தவன் எங்களைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொண்டான். அவனைத் துரத்திச் செல்ல நினைத்த அம்மு அவன் முகத்தில் இருந்த கொடூரத்தைப் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக் கொண்டாள். மிக உயரமாயிருந்தான். தடித்து வளர்ந்திருந்த ரோமங்களே அவனுடைய நிர்வாணத்தை மறைக்க போதுமாயிருந்தது. இன்னும் சற்றுத் தள்ளி வேறொரு பெண் கிழங்கை தேடிக் கொண்டிருந்தாள். ரோமங்கள் முழுவதும் ஜடை சடையாய் திரிந்து இறுகிப் போயிருந்தன. முதுமைப் பருவத்தில் இருப்பதற்கான அத்தனை அடையாளங்களையும் பட்டியலிட்டது அவளுடைய அங்கங்கள். அந்த சூனியக் கிழவியின் வெறித்த தீர்க்கமான பார்வையை தாங்க மாட்டாது அம்மு மீண்டும் என் பின்னால் மறைந்து கொண்டாள். 

முயலும் மானும் கூடவே நானும் அம்முவுடன் வருவது அவளுக்கு பெரிய நிம்மதியாயிருந்தது. 'ப்பா அது என்ன' என்று அவள் கை காட்டிய இடத்தில் ஒரு சிறிய குகை இருந்தது. சத்தம் எழுப்பாமல் மெல்ல உள்ளே நுழைந்தோம். மெல்லிய கதகதப்பு குகை முழுவதும் நிரம்பி இருந்தது. வெளிப்புறம் இருந்த குளிர் உள்ளே அவ்வளவாகத் தெரியவில்லை. குகை முழுவதும் பரவிக் கிடந்த சருகுகள் எங்கள் பாதம் பட்டதும் நொறுங்கும் ஒலி கேட்டது. சப்தம் கேட்டதும் உள்ளிருந்து எட்டிப்பார்த்த சில உருவங்கள் எங்களைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொண்டன. அதுவரை தைரியமாக சென்று கொண்டிருந்த அம்மு என்னை முன்னால் விட்டு பின் தொடர்ந்தாள். எனக்குள்ளும் லேசான திக்திக். இதயம் வேகமாக துடித்தது. அங்கிருந்த இருளுக்கு நாங்கள் பழகி இருக்கவில்லை. எங்கள் உலகத்தில் இருள் என்பதே விளக்கை அணைத்தால் ஏற்படுவது மட்டுமே. எங்களுடன் வந்த முயல் மற்றும் மானின் கண்கள் நீல நிறத்தில் ஜொலித்தன. அம்மு கண்களை இருக்க மூடிக்கொண்டு கூடவே நடந்தாள். அவள் இதயம் துடிப்பை என் கைகளில் உணர்ந்தேன். 

குகையின் ஓரிடத்தில் இருந்த மெல்லிய துளை வழியாக சூரிய வெளிச்சம் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அதை நோக்கி வேகமாக நகர்ந்தோம். அந்த இடம் முழுவதுமே பரவி இருந்த வெளிச்சம் திடீர் நிம்மதியைக் கொடுத்தது. 

'ப்பா' என்று என்னை சொறிந்தாள் அம்மு. 

அவள் பார்வை பட்ட குகையின் மேற்புறச் சுவர் முழுவதுமே ஓவியங்கள். எங்கள் அருகில் நின்று கொண்டிருந்த மானும் முயலும் தங்கள் உருவம் அங்கே வரையபட்டிருப்பதை அப்போது தான் கவனித்திருக்க வேண்டும். ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன. கூடவே பாம்பு, நரி, சிங்கம் புலி மனிதன் என்று விதவிதமான ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியங்களுக்குப் பின்னும் ஏதோ ஒரு அர்த்தம் இருந்தது. புலி மான் மீது பாய்ந்து கொண்டிருந்தது. மனிதன் கன்னத்தில் கைவைத்தபடி அந்த வேட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தான். மரங்களுக்குப் பின்னிருந்த நரிகளும் புலியின் வேட்டையை எதிர்நோக்கிக் காத்திருந்தன. இப்படி ஒவ்வொரு ஓவியத்திலும் ஏதோ ஒரு தொடர்ச்சியும் அர்த்தமும் இருந்ததன. அம்முவைத் தூக்கினேன் அந்த ஓவியங்களுக்கு வலிக்காத வண்ணம் தொட்டுப் பார்த்தாள். 

திடிரென ஒரு உள்ளுணர்வு எங்களின் முதுக்குப் பின்னால் யாரோ எங்களை கவனிப்பது போன்ற உணர்வு. அவசரமாகத் திரும்பினேன். ஆங்காங்கு சில ஜோடி கண்கள் எங்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் கைகளில் ஏதேனும் ஆயுதம் இருக்கிறதா என்று கூடத்தெரியாது. ஆனால் நிச்சயம் அவர்கள் பயந்திருக்க வேண்டும். ஆம் ஆதிமனிதனுக்கு பய உணர்ச்சி அதிகம். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே அவன் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. தூங்கும் போதும் விழிப்போடு இருப்பதற்கே தன் மொத்த ஆற்றலையும் செலவழிக்க வேண்டி இருந்தது அவனுக்கு. 

குகையை விட்டு வெளியேறிய தருணத்தில் ஒரு யானைக் கூட்டம் தூரத்தில் கிளைகளை ஒடித்து பசியாறிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டாள் அம்மு. யானைகளும் எங்களை கவனித்துவிட்டன. அம்முவைப் பார்த்ததும் உற்சாகமாக ஓடி வந்த குட்டியானை அவளை முகர்ந்து பார்த்தது. முதலில் பயந்த அம்மு பின் அந்தக் குட்டியானையை வருட ஆரம்பித்தாள் அதுவும் அவளைத் தூக்கி அம்பாரி மீது வைத்துக் கொண்டது. வீட்டினுள் இருக்கும் போது அம்முவின் முகத்தில் எப்போதுமே எதையோ பறிகொடுத்த உணர்வு இருக்கும். ஒவ்வொரு இயற்பியலாளர்களுக்கும் இயல்பாகவே இருக்கக் கூடிய முகவெட்டு அவளுடையது. இப்போது அவள் முகத்தில் இருந்து சுத்தமாக அந்தக் களை மறைந்து பிரகாசமாக இருந்தாள். மற்ற யானைகளும் தங்கள் துதிக்கையால் எங்களை வருடிக் கொடுத்தன. 

அப்போது தான் சற்றும் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நிகழ்ந்தது. எங்கோ மறைந்திருந்த புலி ஒன்று நொடிப் பொழுதில் அம்முவை நோக்கிப் பாய்ந்தது. சடுதியில் மற்றொரு யானை தன் துதிக்கை கொண்டு அம்முவை தூக்க அம்மு பிழைத்தாள். 

இரையாதலுக்கும் பிழைத்தலுக்கும் இடைப்பட்ட நொடியில் பத்திரமாகக் காப்பாற்றபட்டாள் அம்மு. இப்போது புலியின் வெறி கூடியிருந்தது. அம்முவின் மீதிருந்த வெறித்த பார்வையை அது எடுக்கவே இல்லை. அழத் தொடங்கினாள். எனக்கும் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. ஒரு புலி இப்போது இரண்டு மூன்று புலிகளாக அதிகரித்தன. அத்தனையும் சுற்றி இருந்த புதரினுள் ஒளிந்து இருந்திருக்க வேண்டும். சமயம் பார்த்து சுற்றி வளைத்துவிட்டன. புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே யானைக் கூட்டம் மிரண்டு கலைந்து ஓடத் தொடங்கியது. அம்முவும் நானும் மட்டும் தனித்து விடப்பட்டிருந்தோம். சுற்றி நின்ற புலிகளுக்கு மத்தியில் வசமாக சிக்கிக் கொண்டோம். 

இத்தனை நாள் ஆதி மனிதர்களை மட்டுமே புசித்து வாழ்ந்து கொண்டிருந்த புலிகளுக்கு நாகரீக மனிதர்களை ஆடும் வேட்டை வித்தியாசமான விருந்தாகத்தான் இருக்க வேண்டும். அதேநேரம் தப்பித்தல் என்பது உடனடித் தேவை, உயிர்வாழ அவசியாமானதும் கூட. அம்முவைக் கட்டிபிடித்த படி அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டேன். அடர்ந்த வளர்ந்த செடிகளின் மீது உருளுவது பஞ்சணையில் உருளுவதைப் போன்ற சுகத்தைக் கொடுத்த போதிலும் உயிர்வாழும் ஆசை எங்களை விரட்டிக் கொண்டிருந்தது. 

என்னுடைய இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத புலிகள் முன்னை விட இன்னும் ஆக்ரோசமாகத் துரத்தத் தொடங்கின. ஓடி ஒடி களைத்திருந்தோம். எங்களுடைய நாட்டில் தேவைக்கு அதிகமாக எங்களுடைய சக்தியை இழக்கக் கூடாது. அவ்வாறு இழக்கும் ஒவ்வொரு கிராம் சக்தியும் மீட்க முடியாதது. இப்போது வேறு வழியில்லை அம்முவை தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினேன், முதல்முறையாக வேர்க்கத் தொடங்கியது. அம்மு பலமாக அலறத் தொடங்கினாள். புலிகள் வெகுவாக நெருங்கிவிட்டன. அவற்றின் மூச்சுக்காற்று அனலாக தகித்தது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் ஓடவே முடியாது என்ற நிலை வந்த போது என் கையில் இருந்த பொத்தானை அமுக்கினேன்.

எங்களைச் சுற்றிலும் பதிக்கப்பட்டிருந்த எல்.ஈ.டி விளக்குகள் அணைந்து நொடி இருளுக்குப் பின் மீண்டும் வெளிச்சம் பாய்ந்தது. அம்மு பிரம்மிப்பின் உச்சத்தில் என்னை இறுக்கமாகக் கட்டி ஒரு முத்தம் கொடுத்தாள். நிச்சயம் இந்த ஜென்மத்திற்குப் போதுமான முத்தம் தான் அது. அவளைக் கூட்டிக் கொண்டு வெளியில் வந்தேன். விளையாட்டு மைதானம் போல் பெருத்து இருந்த அந்த அரங்கின் வெளியில் இருக்கும் பெயர்ப் பலகையில் எழுதி இருந்தது. ஆதிவனம்.  

ஓவியம் - நன்றி  வெண்முரசு

18 comments:

  1. கொஞ்சம் பொறுமையாக நகர்வது போன்ற உணர்வை தந்தாலும், தாங்கள் இன்னொரு பரிமாணத்திற்கு சென்றிருக்கிறீர்கள் என்று எழுத்து நடை சொல்கிறது தல .... கொஞ்சம் விவரணைகளை குறைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது சீனு .... சிலதுகளை நேரில் சொல்கிறேன் ....

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சமே கொஞ்சம் மாற்றம் செய்திருக்கிறேன் தோழர். அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் இருந்ததால் கொஞ்சம் பட்டி பார்க்கத் தவறிவிட்டேன். இப்போது பார்த்தாயிற்று :-) மேலும் உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன :-)

      Delete
  2. அருமை அருமை நண்பரே
    நண்பர் அரசன் சொல்வது போல்
    நீளத்தை சிறிது குறைத்திருந்தால்
    இன்னும் அருமையாய் இருந்திருக்கும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆதிகானகத்துள் நுழைந்து பத்திரமாக வெளியேறிய உணர்வு..

    ReplyDelete
  4. உங்களின் இயல்பான நடையில் இருந்து கொஞ்சம் மாறுதலான நடை! அசத்தலான நடை! க்ளைமேக்ஸ் ஓரளவு ஊகிக்க முடிந்தது! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ரசித்தேன்.
    Bradbury இது போல கதை எழுதி இருக்கிறார்.

    ReplyDelete
  6. எழுத்துநடை மெருகேறியிருக்கிறது சீனு.

    நல்ல கதை!!!!!

    ReplyDelete
  7. அருமையான புனைவு சீனு. உங்கள் திறமை கண்டு மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. வாவ்! அருமை சீனு! அழகான ஒரு புனைவு! உங்களிடம் அசாத்தியமான எழுத்துத் திறமை இருக்கின்றது சீனு!

    ReplyDelete
  9. புனைவாகத் தெரியவில்லை. இயல்பாக இருந்தது.

    ReplyDelete

  10. வித்தியாசமான முயற்சி . நன்றாகத்தான் வந்திருக்கிறது

    ReplyDelete
  11. இந்த கதையை பற்றி பின்னூட்டமிட ஒரு கட்டுரையே தேவை...

    " காட்டிற்கு ராஜா சிங்கம் என அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கானகத்தின் வேட்டையன் புலியும் தந்திரக்கார நரியும் வெறும் புலியும் நரியுமாகத்தான் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும்.

    தெய்வத்தின் தேவைக்கான காரணம் புலப்படாத வரைக்கும் மனிதன் வனத்தை, வனத்தின் இயற்கையை தொந்தரவு செய்திருக்கவில்லை. "

    இதற்கு மேல் நான் என்ன சொல்ல ?!

    அறிவியல் புனைவுகளைப்பற்றி சொல்லும்போது அதீதமான கற்பனையாக இருந்தாலும் எதிர்கால சாத்தியத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பார்கள்... உதாரணம் ஜீலியஸ் வெர்னே மற்றும் ஐசக் அசிமோவின் கதைகள்...

    கற்பனை கதை என்றாலும் நம் வாழ்விலேயே இந்த நிலையை எட்டிவிடுவோம் என்ற ஐயப்பாடு...

    மிக சிறப்பான, நாம் விழிக்கவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் புனைவு !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
    http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

    ReplyDelete
  12. அறிவியல் கதை பற்றி பக்கங்களை தேடிக்கொண்டிருக்கும் போதுதான் உங்கள் பக்கத்திற்கான அறிமுகம் கிடைத்தது வாட்ஸ்அப் மூலம்.
    மிக அற்புதமாக வந்திருக்கிறது கதை
    தொடர்ந்து பயணிக்கிறேன் உங்களோடு. ஆதிவனத்தை நுழை வாயிலாய் கொண்டு.

    ReplyDelete