26 Dec 2014

2014 - வாசித்ததும் நேசித்ததும்

எழுத்தும் எழுத்து சார்ந்த விசயங்களின் மீதான ஈர்ப்பும் அவ்வளவு எளிதில் அலுப்பை ஏற்படுத்தி விடுவதில்லை. அவ்வகையில் இந்த வருடம் கொஞ்சம் சுவாரசியமான வருடமே. இப்போதெல்லாம் பலவிதமான புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். இந்த வருடத்திலாவது ஆரம்பித்தேனே என்று கொஞ்சம் சந்தோசமாக உள்ளது. கிட்டத்தட்ட கடந்துபோன இருப்பத்தி ஐந்து வருடங்களை உருப்படியான வாசிப்பு இல்லாமலேயே கழித்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் கடந்து போன வருடங்களில் சுஜாதாவின் கணேஷ் வசந்த்தை மட்டுமாவது தேடித்தேடி வாசித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. 



வாசிப்புப் பழக்கம் எப்போது எப்படி ஆரம்பித்தது என்றெல்லாம் உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நான்காம் வகுப்பிலேயே கதைகள் படிக்க ஆரம்பித்துவிட்டேன். படித்த முதல் சிறுகதைத் தொகுதி அண்ணனுடைய ஆறாம் வகுப்பு துணைப்பாடப் பகுதி. 

அப்போதெல்லாம் அம்மாவைப் பொறுத்தவரை நானும் அண்ணனும் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியில் எங்கும் விளையாடச் செல்லக் கூடாது. போதாகுறைக்கு வீட்டில் தொலைகாட்சிப் பெட்டியும் கிடையாது. வேறுவழி. அம்மா பீடி ஒட்டிக் கொண்டிருக்க நானும் அண்ணனும் அவர் அருகில் அமர்ந்தபடி புத்தகத்தைப் பார்க்க வேண்டியது தான். அவன் படிக்கிற புள்ள. பேசாமல் படித்துக் கொண்டே இருப்பான். நமக்கு. ம்கூம் ஐந்தாவது நிமிடத்தில் தூங்க ஆரம்பித்தது விடுவேன். தொடையில் நுள்ளி விடுவார். கண்ணைக் கசக்கிக் கொண்டே அடுத்த ஐந்து நிமிடம் புத்தகத்தைப் பார்ப்பேன். மீண்டும் தூக்கம். மீண்டும் அடி. தற்செயலாக ஒருநாள் அண்ணனுடைய பாடப் புத்தகங்களை நோண்டிக் கொண்டிருந்த போது துணைப்பாட நூல் என்ற ஒன்று கையில் சிக்கியது. திறந்து பார்த்தால் அத்தனையும் சிறுகதைகள். படிக்க சுவாரசியமாக இருந்ததா என்றால் ஐந்தாம் வாய்ப்பாடை விட சுவாரசியமாக இருந்தது என்றுதான் கூறுவேன். 

அதில் இருந்து மெல்ல சிறுவர் மலர், அம்புலி மாமா, தென்காசிப் பேருந்து நிலையத்திற்கு செல்லும் போதெல்லாம் ராணிமுத்து காமிக்ஸ், அப்பா ஊருக்கு வரும் போதெல்லாம் வாங்கிவரும் தெனாலி ராமன் கதைகள் பீர்பால் பரமார்த்தகுரு கதைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வாரமலர் விகடன் படிக்குமளவுக்கு ப்ரோமாசன் கிடைத்த போது ஒன்பதாம் வகுப்பை வந்து சேர்ந்திருந்தேன். அப்போதெல்லாம் வாரமலரில் அன்புடன் அந்தரங்கம் கிடையாது, குடும்பமலரில் அந்தரங்கம் இது அந்தரங்கம் உண்டு. அதுவே ஏதொ கிளுகிளுப்பு நிறைந்த பத்திகளாகத்தான் தெரியும். இப்போது இருப்பதை விட பலமடங்கு சுவாரசியம் நிறைந்தது. அப்போதும் இப்போது வருவது போன்ற அதே கதைகளே கூட இருந்திருக்கலாம் ஆனால் அப்போதைய வயதில் அதுதான் படு சுவாரசியம். 

ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்

ராஜீவ்காந்தி சாலை என்ற புத்தகத்தில் இருந்து தான் இந்த வருடமே ஆரம்பித்தது. விநாயக முருகன் என்ற ஐடி ஊழியர் கம் பேஸ்புக் பிரபலம் எழுதிய புத்தகம் என்றளவில் மட்டுமே அறிமுகம். 'உங்க லைப் ஸ்டைல் பத்திதான் எழுதியிருக்காரு, நீ படிக்கணும்' என்று அண்ணன் கூற கார்த்திக் சரவணன் @ ஸ்கூல் பையன் புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகத்தை அவரிடம் இருந்து அபேஸ் செய்திருந்தேன். 

வலுவான கதைக்களம். கரு. ஆனால் சோர்வளிக்கும் எழுத்து நடையில் 'எப்பா சாமீ படிச்சு முடிச்சா போதும் என்ற நிலைக்கு வந்திருந்தேன். அந்த சுகானுபவத்தை சிலாகித்து வாசகர் கூடத்தில் விநாயக முருகனுக்கே கடிதம் எழுதி இருக்கிறேன். படிக்கவில்லை என்றால் படித்துப் பாருங்கள். உங்களுக்கு அந்தரங்கம் இது அந்தரங்கம் பிடிக்கும் என்றால் அதன் மேம்பட்ட வடிவத்தில் ரா.கா.சாலையும் பிடித்துப் போகலாம். அதையும் மீறி பல தருணங்களில் ராஜீவ் காந்தி சாலையில் பயணிக்கும் போது அப்புத்தகத்தின் சில நொடிகள் கண்முன் வந்து போகும். அப்போது ஏற்படும் உணர்வு அலாதியானது. ஒரு புத்தகத்தினால் மட்டுமே கிடைக்கக் கூடியது. மேலும் எங்களுடைய லைப் ஸ்டைல் சார்ந்த புத்தகம் கூட. தினமும் நான் பயணிக்கும் சாலையைச் சார்ந்த புத்தகம். நன்றாக வந்திருக்க வந்திருக்க வேண்டிய ஒன்று என்ற எண்ணம் மட்டும் இருந்துகொண்டே இருக்கிறது.


6174 சுதாகர் கஸ்தூரி

கப்ரேகர் எண் என்ற கணித எண்ணை மையமாக வைத்து புணையப்பட்ட திகில் நாவல். சுதாகர் கஸ்தூரியை தற்செயலாக டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் அவ்வளவு பெரிய எழுத்தாளர், குறிப்பிடத்தகுந்த நாவல் ஒன்றை எழுதியுள்ளார் என்பதெல்லாம் தெரியாது. இருந்தும் அவரைப் பார்த்ததும் ஒரு மரியாதை ஏற்பட்டது. அடுத்த நொடி அரசன் கையில் 6174. அரசனை வித்தியாசமாகப் பார்த்தேன். அதற்கு அடுத்த நாட்களில் இணைய வாசகர்களால் இவ்வாண்டு முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்ட நாவல் இது. லெமூரிய கண்டம், கணிதம் அறிவியல்-தமிழ் என்று பரபரப்பாக நாவலை வளர்த்திருப்பார். அவசியம் படிக்க வேண்டிய நாவல்.


குற்றப் பரம்பரை - வேல ராமமூர்த்தி

குற்றப்பரம்பரை குறித்து கூறும் முன் அரசனின் புத்தகத் தேடல் குறித்து கூறியே ஆக வேண்டும். அரசனின் அலமாரி ஒரே எழுத்தாளர்களால் நிறைந்தது அல்ல. தனித்துவம் வாய்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்களால் நிறைந்தது. அத்தனையும் எளிய மனிதர்களின் கதை கூறும் புனைவுகள். இலக்கியங்கள். எப்படி யாரிடம் இருந்து இந்தப் புத்தகளைப் பற்றி எல்லாம் அறிந்து கொண்டார் என்று தெரியவில்லை, ஆனால் அவருடைய கலெக்சன் என்னுடைய டாப் பேவரைட். இந்தப் புத்தகத்தைப் படி என்று அவர் கொடுத்தால் அடுத்த வாரம் முழுவதும் அதைத் தான் படித்துக் கொண்டிருப்பேன்.  

குற்றப்பரப்பரையும் அரசனின் புத்தக அலமாரியில் இருந்து உருவியது தான். முதலில் இந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்வதற்கு பெரிதும் தயக்கம் காட்டினேன், காரணம் வேலராமமூர்த்தி. ஏற்கனவே அரசன் என்னிடம் வேலராமமூர்த்தி கதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை கொடுத்து படி படி என்று உயிரை வாங்கிக் கொண்டிருந்தார். என்னால் அவற்றை தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை. நான் எதிர்பார்த்தது போன்று அவை இல்லை. அல்லது அந்த எழுத்தை உள்வாங்கிக் கொள்ளும் அளவிற்கு நான் இன்னும் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆகா அவருடைய நாவலும் அப்படித்தான் இருக்கும் என்ற முன் முடிவிற்கு வந்திருந்தேன். அரசனின் தொடர்ந்த வற்புறுத்தலால் குற்றப்பரம்பரையை எடுத்து வந்து, வெகுகாலம் படிக்காமலேயே வைத்திருந்து பின்னர் ஒருநாள் மனது கேட்காமல் படிக்கத் தொடங்கினேன். 

வேலராமமூர்த்தி அட்டகாசமான கதை சொல்லி. எந்தப் பத்தியை எந்த இடத்தில் வைத்தால் சுவாரசியமாக இருக்கும் என்பதை நன்றாக அறிந்திருக்கிறார். பிரிடிஷ் இந்தியாவில் தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்த கள்ளர்களின் வாழ்வியல் சார்ந்த கதை. ஒரு சமூகம் அந்த சமூகத்தோடு தொடர்புடைய பிற சமூகங்கள் என்று அருமையாக காட்சிப்படுத்தி இருப்பார். என்னைக் கேட்டால் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் என்றே கூறுவேன்


அவரவர்பாடு - கநாசு

நவீன எழுத்தாளர்களின் முன்னோடியான சார்ந்தவர் என்ற வகையில் இவருடைய புத்தகத்தை வாங்கினேன். அவரவர்பாடு என்பது இலக்கியத்தில் கிரைம். பாண்டிச்சேரி கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடும் கொலை கொள்ளைகள், கிராமத்து பஞ்சாயத்துகள் நிறைந்த கதை. இவரது எழுத்துகளின் மூலம் சுதந்திர இந்தியாவின் ஒரு சில இடங்களை சுற்றிப்பார்த்து வரலாம். மற்றபடி குறிப்பிடும்படியான நாவல் எல்லாம் இல்லை. இருந்தும் இவரது மற்றைய படைப்புகளையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பாப்போம்.

சோளகர் தொட்டி - பால முருகன் @ உபயம் அரசன்

தொட்டி என்பது மலையில் வாழும் மனிதர்களின் இடத்தை குறிக்கும் சொல். மலை ஜாதியினரில் முக்கியமானவர்களான சோளகர்களின் தொட்டியில் நடைபெறும் சம்பவங்கள் சார்ந்த கதை. உண்மைக் கதை என்றும் கூறலாம். நவீனத்தின் வருகையால் கொஞ்சம் கொஞ்சமாக தனது தொன்மையை இலக்கத் தொடங்கும் வனம் சந்தனக் கடத்தல் வீரப்பனின் ஆளுமைக்குப் பின் என்னவாகிறது, அவனைத் தேடி வரும் போலீசாரால் அங்கும் வாழும் சோளகர்கள் என்ன விதமான கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பது குறித்து பேசும் நாவல். இது குறித்து வாசகர் கூடத்தில் நூல் விமர்சனம் எழுத இருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நடைபெற்றவை அனைத்தும் உண்மைச் சம்பவங்கள் என்பதாலோ என்னவோ புத்தகத்தை ஒரு டாக்குமென்ட்ரியைப் போலவே எழுதியுள்ளது பெரிய குறை. புனைவுக்கான பீல் எங்குமே வரவில்லை. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கதை என்றளவில் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. 

கானகன் லக்ஷ்மி - சரவணகுமார்

உப்புநாய்கள் நாவலின் மூலம் அறிமுகமானவர். கானகன் இவருடைய இரண்டாவது நாவல். சாரு மற்றும் சாரு விமர்சகர் வட்டத்தின் மூலம் கானகன் நாவல் அறிமுக விழா அகநாழிகையில் நடைபெறுவது கேள்விப்பட்டு நான் வாத்தியார் மற்று ஸ்பை மூவரும் சென்றிருந்தோம். காடும் காடு சார்ந்த எழுத்தும் என்றால் இயல்பாகவே அதீத ஆர்வம் ஏற்பட்டுவிடுகிறது. புலி வேட்டையில் ஈடுபடும் தந்தை, கட்டிய கணவனை விடுத்து இன்னொருவனோடு ஓடிவந்த அம்மா, தாயைக் கொன்றவனை கொள்ளத் துடிக்கும் இளைய புலி என்றபடி நாவல் முழுக்க காடுகளோடும் வேட்டையாடுதலோடும் புலிகளோடும் பயணித்துக் கொண்டே இருக்கலாம். காடு புலி வேட்டையாடுதல் சார்ந்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும். தவறவிடக்கூடாத நாவல் என்றெல்லாம் கூறமாட்டேன். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படித்துவிடுங்கள் என்றே கூறுவேன். இப்புத்தகத்திற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சந்தர்ப்பம் அமையவில்லை. 

7.83hz - சுதாகர் கஸ்தூரி

6174 எழுதிய சுதாகர் கஸ்தூரி அவர்களின் இரண்டாவது நாவல் 7.83hz. இதுவும் அறிவியல் புனைவே. புக்பாயிண்டில் வைத்து நடைபெற்ற புத்தக வெளியீட்டிற்கு நானும் வாத்தியாரும் சென்றிருந்தோம். அந்த விழாவில் இரா.முருகன் கூறினார் 'அறிவியல் புனைவு என்றாலே அனைவரும் ரோபோவுக்கு உயிர் வருவதாகத்தான் எழுதுகிறார்கள், அவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உயிரியல், இயற்பியல் சமாச்சாரங்களை சுதாகர் கையிலெடுக்கிறார். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று' என்று குறிப்பிட்டார். முற்றிலும் உண்மை. 6174ஐ விட கொஞ்சம் வேகமாக நகரும் கதை. மனிதன் எவ்வித உணர்வெழுச்சியும் இல்லாத, மனம் சமநிலையில் இருக்கும் போது அடையக்கூடிய என்ன அலைவரிசை 7.83hz என்றும் அந்த நொடியில் அவனை தங்களுடைய கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவர இயலும் என்றும் ஒரு மையைக்கருவை எடுத்துக் கொண்டு அதனை ஹாலிவுட் ரேஞ்சிற்கு எழுதியிருப்பார். பலவிதமான அறிவியல்/இயற்பியல் விவாதங்கள் நடைபெற்றாலும் எங்குமே தொய்வடையாத எழுத்து நடை. என்ன அதிகமான கதாபாத்திரங்களை அறிமுகபடுத்திக் கொண்டே இருப்பார். அவர்களை நியாபகம் வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். இன்னொன்று அதே தான் இப்புத்தகத்திற்கு வா.கூடத்தில் விமர்சனம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சந்தர்ப்பம் அமையவில்லை.  

காலச்சக்கரம் - நரசிம்மா

புத்தகத்தின் கதை சொல்லும் சுவாரசியத்திற்காக வாத்தியார் அவ்வபோது சில புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொல்லுவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும். அவ்வகையில் சில இந்திய அரசியல் பின்னணியைச் சார்ந்தவர்களை வைத்து நரசிம்மா அவர்கள் எழுதிய புத்தகம் முக்கியமான ஒன்று. 

பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர் 

ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த ஜூலியஸ் லுமும்பா என்னும் நாடோடி, இரண்டாம் உலகப் போரில் இருந்து தப்பி வந்த ஹான்ஸ் வெயிஸ்முல்லர் என்னும் அகதி, கிருஷ் என்னும் இந்திய மேஜர் மற்றும் சோமிட்ஷியா என்னும் கற்பனை தேசம் இவைகளைக் கொண்டு தன் புனைவை எழுதி இருக்கிறார் யுவன்சந்திர சேகர். கதையும் கதைக்களமும் கூட பகடையாட்டம் போலத்தான். மிக மிக மெதுவாக நகரும். சிறிது பிசிறு தட்டினாலும், சில பக்கங்களை முறையாக உள்வாங்காவிட்டாலும் முக்கியமான விசயங்களை தவற விட்டுவிடும் வாய்ப்பு உண்டு. நாவலை முழுவதுமாக முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் தான் இந்த விசயமே எனக்குப் புரிந்தது.  

கர்ணனின் கவசம் - கே.என்.சிவராமன் 

தினகரன் இதழின் இணைப்பிதழ்களுக்கு ஆசிரியராக இருக்கும் கே.என்.சிவராமன் அவர்கள் எழுதிய கர்ணனின் கவசம் இவ்வாண்டின் குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் ஒன்று. குங்குமம் இதழில் தொடர்கதையாக வெளிவந்து பின் புத்தகமாகவும் உருவெடுத்தது. சூப்பர் மேன் ஸ்பைடர் மேன் பேட் மேன்களுக்குப் பதிலாக நம்முடைய காவிய காப்பிய நாயகர்களே களத்தில் இறங்கினால் அதுதான் கர்ணனின் கவசம். அட்டகாசமான பொழுதுபோக்கு நாவல். அதிகப்படியான கதாப்பாத்திரங்களை நினைவில் வைத்துகொள்ள வேண்டிய அவசியத்ததைத் தவிர துளியும் அலுப்பு தட்டாத நாவல். 


வாடிவாசல் - சிசு செல்லப்பா

இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தப் புத்தகத்தை வாங்கிவிட்டேன் என்றாலும் இந்த வருடம் தான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. குறுநாவல் அல்லது சற்றே நீண்ட சிறுகதை என்று கொள்ளலாம். வெறும் எழுபது பக்கங்களில் பண்டைய சமூகம் ஒன்றின் வீர விளையாட்டை வெகு அழகாக செதுக்கி இருப்பார் சிசு செல்லப்பா. வாடியில் இருந்து வெளிவரும் காளைகளுக்கும் வாடிக்கு வெளியில் காத்துக் கிடக்கும் காளைகளுக்கும் இடையே நடைபெறும் த்வந்த யுத்தமே வாடிவாசல். ஒரு சில மணி நேரங்களுக்கு நம்மையும் வாடிவாசலின் வெகு அருகில் நிறுத்தி அழகு பார்த்திருப்பார் இதன் ஆசிரியர். அட்டகாசமான புத்தகம். கண்டிப்பாக படியுங்கள் என்றெல்லாம் கூறமாட்டேன். இதனைப் படிக்கும் வாய்ப்பை கண்டிப்பாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று வேண்டுமானால் கூறுவேன். 


ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

சுஜாதாவின் படைப்புகளில் என்றென்றும் பேசப்படக்கூடிய படைப்புகள் என்றால் இந்திய சிப்பாய் கலகத்தினை மையமாக வைத்து அவர் எழுதிய ரத்தம் ஒரே நிறம் படைப்பிற்கு நிச்சயம் முதல் இடம் கொடுக்கலாம். வாரணாசி நோக்கி படகு செலுத்தப்படும் பொழுது, கங்கை நதிக்கரையில் ஆஷ்லி காண நேரிடும் உடன்கட்டை ஏறுதல் நிகழ்வு ஒன்றே சுஜாதாவின் எழுத்தாளுமைக்கு உச்சகட்ட சான்று. பிண்டத்தின் மண்டை ஓடு வெடித்துச் சிதறும் நேரத்தில் நம் மண்டைக்குள்ளும் ஒருவித குறுகுறுப்பு நேறுமே, என்னைக்கேட்டால் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகமாக பரிந்துரைப்பேன். 


வரும் ஆண்டு படிக்க நினைத்திருக்கும் புத்தகங்கள்

புயலிலே ஒரு தோணி - ப சிங்காரம்
கடலுக்கு அப்பால் - ப சிங்காரம்
காடு - ஜெயமோகன்
இரவு - ஜெயமோகன்
எழாம் உலகம் - ஜெயமோகன் 
எக்ஸைல் 2- சாருநிவேதிதா
கடல் புறா - சாண்டில்யன்
தமிழ்நாடு - ஏகே செட்டியார்

16 comments:

  1. இந்த புத்தகங்களில் வாடிவாசல் மட்டுமே படித்துள்ளேன் . குற்றப்பத்திரிக்கையும் , ரத்தம் ஒரே நிறமும் படிக்கவேண்டும் என்ற ஆசை ! நீங்கள் அறிமுகப்படுத்தும் புத்தகங்கள் என்பதால் தாராளமாக மற்ற புத்தகங்களையும் படிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் ! நன்றி ப்ரோ !!!

    ReplyDelete
  2. கடல் புறா - முதல்ல படிங்க...
    அப்புறம் எல்லா சாண்டில்யன் புத்தகங்களையும் தேடி படிக்க ஆரம்பிச்சுடுவீங்க என்பது மட்டும் நிச்சயம்..

    ReplyDelete
  3. படிக்கப்போகின்ற புத்தகங்களில் கடல்புறா மட்டும் படித்துள்ளேன் . சாண்டில்யனின் மாஸ்டர்பீஸ் என அதைக்கூறலாம் . தமிழின் ஆகச்சிறந்தத் தற்கால இலக்கியவாதி சீனு இன்னும் கடல்புறாவைக் கொஞ்சவில்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது .

    ReplyDelete
  4. அய்யா வணக்கம்.
    புத்தகம் படிக்கும் பேரனுபவம் பால்யத்தின் எனது நினைவுகளையும் தொட்டெழுப்பி விட்டது.
    இரவினை போவதறியாது நகர்த்தி புலரச்செய்த சாண்டில்யனின் நாவல்கள்..,
    நீங்கள் படித்ததாய்ப் பதிவு செய்ததில் வாடிவாசல், குற்றப்பரம்பரை, சோளகர் தொட்டி தவிர பிற நூல்களை நான் படிக்க வில்லை.
    படித்துவிடுவேன்.
    புயலிலே ஒரு தோணியும், கடலுக்கு அப்பாலும் ஒரே தொகுப்பாகப் படிக்கக் கிடைத்தன.
    கடல்புறா என் ஆறாம் வகுப்பில் படித்தது.
    ஜெமோ வையும், சாருவையும் தொடர்கிறேன்.ஜெமோ வின் ரப்பர், சாருவின் எக்ஸ்டென்சியலிசம் ஆரம்பத்தில் அதிர்வை ஏற்படுத்திய நாவல்கள்.
    இப்பட்டியலில் எஸ் ரா வும் இடம் பெறலாம் என்று நினைக்கிறேன்.
    ஏ கே செட்டியார் பயண இலக்கியங்களைத் தமிழில் எழுதியவர் என்பதாய்த் தோன்றுகிறது. தவறிருக்கலாம்.
    அவரின் தமிழ்நாடு பார்த்ததில்லை.
    நூல்கள் ஒவ்வொன்றும் அவை படித்த சூழலுடன் நினைவிருக்கின்றன.
    தங்களது தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன்.
    தங்களைத் தொடர்கிறேன் அய்யா!
    நன்றி

    ReplyDelete
  5. பதிவு நன்று....

    // ம்கூம் ஐந்தாவது நிமிடத்தில் தூங்க ஆரம்பித்தது விடுவேன். ...

    ஐ... என்னை மாதிரியே...!!!!!!

    ReplyDelete
  6. நல்ல லிஸ்ட். இன்னும் ஏராளமாகப் படிக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. // படிக்கும் வாய்ப்பை கண்டிப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்... // வாழ்த்துக்கள் சீனு... தொடர்க...

    ReplyDelete
  8. இதில் ஒன்றுகூட நான் படிக்கவில்லை! வருத்தமாக இருக்கிறது! இனியாவது படிக்க வேண்டும்! சிறப்பான நூல்கள் அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  9. புத்தகங்களோடு இந்த புத்தாண்டும் இனிதே தொடங்கட்டும் சகா ...வாழ்த்துகள்...இந்த ஆண்டில் படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலில் இந்த பட்டியலும் இணைந்திருக்கிறது..தெளிவான பரிந்துரைக்கு நன்றி:)

    ReplyDelete
  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    சீனு தங்களின் வாசிப்பும் நேசிப்பும் இந்த வருடமும் தொடர வாழ்த்துக்கள்! நல்ல ஒரு விஷயம் சீனு! அரிதாகிப் போன ஒன்று பொதுவாக....நீங்கள் வாசிக்க வாசிக்க எங்களுக்கும் பல நல்ல பதிவுகள் கிடைக்குமே! ஹ்ஹஹ...

    ReplyDelete
  11. நண்பனுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Very Good. Keep it up.. படித்தவுடனே விமர்சனம் எழுதிவிடுங்கள்.. அது அதிகத் தாக்கத்தோடு இருக்கும் :) New Year Wishes to U and Ur Family

    ReplyDelete
  14. தங்களுக்கும் , தங்களின் குடும்பத்தார் , சுற்றத்தார் , உறவினர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் அண்ணா

    ReplyDelete