3 Dec 2014

பிர்லா கோளரங்கம் - சென்னை

ஒவ்வொரு முறை பிர்லா கோளரங்கத்தைக் கடக்கும் போதும் ஒருவித குற்றவுணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். சென்னைக்கு குடிபெயர்ந்து ஆறு வருடங்களுக்கும் மேல் ஆகிறது இன்னும் இங்கு சென்ற பாடில்லையே என்று. இனி இருக்காது. நேற்று சாபம் தட் சாபம் நீங்கிய டே. நீங்கள் நீங்களாக சென்றால் வெறும் ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதுமானது, நீங்கள் குழந்தையாகவோ இல்லை உங்கள் குழந்தையுடனோ சென்றால் இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் ஒகே, அதற்கு மேல் அந்த குழந்தைக்கே போரடித்துவிடும். 


நுழைவுக் கட்டணம் 45 ரூபாய். கோளரங்கத் திரைப்படம், முப்பரிமான திரைப்படம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி அரங்கங்கள் அனைத்திற்கும் சேர்த்து மேற்கூறிய கட்டணம். நாள் முழுவதும் ஒவ்வொரு ஒரு மணி நேரமும் கோளரங்கத் காட்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் இங்கிலீஷ் எந்த மொழி வேண்டுமோ அந்த மொழியைக் கூறி டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டு மொழியிலும் பார்க்க வேண்டுமானால் கூடுதலாக இருப்பது ரூபாய் செலுத்தினால் போதும்.

நேராக கோளரங்க காட்சி அரங்கினுள் நுழைந்தேன். தலைக்கு மேல் ஒரு அரைக் கோளத்தைக் கவிழ்த்து வைத்தது போன்ற திரை. அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். பரதன் தியேட்டர் காலத்து இருக்கைகள். வெள்ளை நிற திரை பழுப்பேறியிருந்தது. இருநூறு பேர் அமரக் கூடிய அரங்கில் மொத்தமே இருப்பது பேர் தான் இருந்தோம். அரங்கின் நடுப்புறத்தில் வித்தியாசமான ப்ரொஜெக்டர் இருந்தது. அதில் இருந்து தான் படம் காட்டுவார்கள், அதனால் எண்டு அமர்ந்தாலும் காட்சிகள் ஒரே போன்று தான் இருக்கும் என்று நினைத்தது தவறாய்ப் போயிற்று. அந்த மெஷின் இரவு நேர  வானத்தை உருவாக்க மட்டுமே, மெயின் ப்ரொஜெக்டர் வேறு ஒரு இடத்தில் இருந்தது. எங்கு அமர்ந்தால் ஒழுங்காக படம் தெரியாதோ அங்கு போய் அமர்ந்துத் தொலைத்திருந்தேன். சரி பரவாயில்லை என அங்கிருந்தபடியே பார்க்கத் தொடங்கினேன். 

சுமார் அரை மணி நேரம் ஓடுகிறது. வானவியலைப் பற்றிய ஆராய்சிகள் அதிலும் நமது சூரிய குடும்பம் தோன்றியது முதல் அதில் இருக்கும் ஒவ்வொரு கோள்கள் குறித்தும் பல விஞ்ஞானிகள் நிகழ்த்திய ஆராய்ச்சிகள் என்று நீள்கிறது படம்.

முதல் பதினைத்து நிமிடத்திற்கு எதுவுமே தெரியவில்லை, அட்டகாசமாக இருந்தது. ஆ என்று வாயைப் பிளந்து ஆச்சரியபடத் தகுதியான தரவுகளை விளக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த பதினைந்து நிமிடங்கள் மிகக் கொடுமையானவை. வழமையான செலஸ்டின் டீச்சரின் அறிவியல் வகுப்பை நியாபகப்படுத்தத் தொடங்கிவிட்டது. அவர் வகுப்பு எப்போதுமே உணவு இடைவேளைக்குப் பின்னான முதல் அல்லது இரண்டாம் வகுப்பாகத்தான் இருக்கும். இப்போதும் நல்ல மூக்குப் பிடிக்க மதிய உணவு உண்டிருந்தேன். தூக்கம் கண்ணைச் சுழல இமைகளுக்கு நடுவே கடப்பாறையைச் சொருகிக் கொண்டு கஷ்டப்பட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். 

அந்த இடம் முழுவதுமே மயான அமைதி. அரங்கில் ஆடியோ இல்லை என்றால் பத்து சீட் தள்ளி அமர்ந்திருப்பவர் மூச்சு விடும் சப்தம் கூடக் கேட்கும் அளவில் அமைதி. தூக்கத்தை மேலும் தூண்ட அதுவே போதுமானதாயிருந்தது. அண்டம், பால்வெளிக் குடும்பம், அணுச் சிதைவு, நியாபங்கள் எல்லாம் நாஸ்டாலஜியா நினைவுகள் இல்லை நாங்கள் நாசமாய்ப் போன காலத்து நினைவுகள். இருந்தாலும் வொர்த்தான ஒரு காட்சிக் கோப்பு. அவசியம் பார்க்க வேண்டும். மனிதனின் வானியல் ஆராய்ச்சிகள் மொத்தமுமே தான் நாசமாக்கிவிட்ட பூமியில் இருந்து தப்பித்து வேறொரு இடத்தில் உயிர்ச் சூழலை ஏற்படுத்தி விடமாட்டாமோ என்று கண்டுபிடிப்பதிலேயே தான் இருக்கிறது. அதிலும் ஏனோ சோவியத் கூடுதல் முனைப்பைக் காட்டியிருக்கிறது. அட்டகாசமான வீடியோ என்றபோதிலும் புதிய தகவல்களுடன் அப்டேட் செய்யாமல் வைத்திருக்கிறார்கள் என்பது பெருங்குறை.    

இறுதியாக ஒருவழியாக படத்தை நிறைவு செய்யும் போது இப்படியான பால்வெளி அண்டத்தில் சூரியக் குடும்பத்தில் நமது பூமி மட்டுமே மனிதன் உயிவாழத் தகுதியான இடம் தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று ஆடியோ கூறிக் கொண்டிருக்கும் போதே என்னிடம் இருந்து தள்ளி நான்காவது இருக்கையில் ஒரு பெரிய குறட்டைச் சப்தம் கேட்டது. பூமியைக் காப்பாற்றச் சொன்னால் இப்படியே குறட்டை விட்டுக் கொண்டிருங்கள் என்று அந்த பூமியே கூறுவது போல் இருந்தது.  

இந்தக் காட்சி முடிந்தது முப்பரிமான காட்சிக்கு அனுப்பினார்கள். என் கையில் கிடைத்த அந்த முப்பரிமாணக் கண்ணாடியைப் பார்த்தேன் முன்னூறு ஒட்டுக்கள் போடப்பட்டிருந்தது. கேவலமான ஒரு அரங்கம். பத்து நிமிடம் ஓடும் இக்காட்சியில் டினோசர் பற்றி ஒரு அனிமேசன் கிளிப்பிங்கை ஓட்டுகிறார்கள். நன்றாய் இருந்தது. குழந்தைகள் வெகுவாய் ரசிக்கக் கூடும். 

அது முடித்து மீண்டும் கோளரங்கத் திரைப்படத்தை ஆங்கிலத்தில் பார்பதற்காக மீண்டும் நுழைந்தேன். இம்முறை கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. எந்த இருக்கையில் உட்கார்ந்ததால் படம் நன்றாக தெரியும் என்று கணித்திருந்ததால் சரியாக அங்கே சென்று உட்கார்ந்தேன். (அரங்கினுள் நுழைந்ததும் நுழைவாயிலுக்கு எதிர்புறம் சிறிய ப்ரோஜெக்டர் இருக்கிறது அதன் அருகில் உட்காருவது நலம்). ஏனோ தெரியவில்லை தமிழை விட ஆங்கிலம் கொஞ்சம் எளிதாய்ப் புரிந்தது போல் உணர்ந்தேன். அதற்கு என் தமிழ் அறிவு மழுங்கி விட்டதாய் நினைத்து விட வேண்டாம்,  ஆங்கில ஆடியோவில் இருந்த நிதானம் தமிழில் இல்லை, அரை மணிநேரத்தில் முடித்து விட வேண்டும் என்று வேகவேகமாகப் பேசியது போல் இருந்தது அந்த தமிழ் ஒலிக்கோப்பு. 

அரங்கில் அரங்கினுள் இருந்த சில ஆங்கிலச் சீமாட்டிகள் மீது இன்னும் தீராக் கோவம் இருக்கிறது எனக்கு. உள்ளே நுழைந்ததும் தங்கள் மொபைலை நோண்ட ஆரம்பித்தவர்கள் படம் முடியும் வரையிலும் நோண்டிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் நோண்டிக் கொண்டு இருந்தது பிரச்சனை இல்லை. அவர்கள் கைபேசியில் இருந்து வந்த வெளிச்சம் அரங்கத்தின் இருள் சூழ்ந்த அட்மாஸ்பியரை பாழ்படுத்திக் கொண்டிருந்தது என்பதுதான் பிரச்சனையே. எத்தனையோ முறை எத்தனையோ பேர் கூறியும் அவர்கள் அடங்கவில்லை. இன்னும் அதிகமாக அறச்சீற்றம் எழுகிறது, கூடுதலாக நான்கு வரி எழுதினால் பெண்ணுரிமை ஆணாதிக்கம் எனக்கூடும். பேசாமல் அடுத்தவரிக்கு நகர்கிறேன். 


கோளரங்கக் காட்சிகள் முப்பரிமான காட்சிகள் முடித்துவிட்டு நேராக மற்ற அறிவியற் கூடங்களைப் பார்க்கக் கிளம்பினேன். நான் அவற்றைப் பார்க்காமலேயே கிளம்பி இருக்க வேண்டும், பார்த்ததால் தான் மீண்டும் அறச்சீற்றம் எழுகிறது. அத்தனையும் பாழ்பட்டுக் கிடக்கிறது, இருபத்தி மூன்றாம் புலிகேசியில் ஒரு வசனம் வருமே 'கேட்டால் அரசாங்க வேலை என்று பீத்திக் கொள்வது' என்று, அப்படி பீத்திக்கொள்ள மட்டுமே இங்கிருப்பவர்கள் பணிபுரிகிறார்கள் போலும், ஒரு மெயிண்டனன்ஸ் கூட இல்லை. அரங்கம் முழுவதும் குப்பை, அத்தனையும் உடைந்து பாழ்பட்டுக் கிடக்கும் அறிவியல் குப்பைகள். அதிகாரிகளைக் கேட்டால் அரசாங்கத்தைக் கைநீட்டுவார்கள். எது எப்படியோ ஒரு கலைக் கூடம் கொலைக் கூடமாகத்தான் காட்சியளிக்கிறது. இருந்தாலும் கோளரங்கக் காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக வேண்டுமானால் அவசியம் ஒருமுறை சென்று வரலாம். 

17 comments:

  1. அனுபவப்பகிர்வு அருமை நண்பரே... அடுத்தமுறை வரும்போது காண முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  2. Reading this I think it is not worth visiting.

    ReplyDelete
  3. நான் கண்டிருக்கின்றேன் நண்பரே
    அனுபவித்தும் இருக்கின்றேன்
    நன்றி

    ReplyDelete
  4. நான் இதுவரை பார்த்ததில்லை!

    ReplyDelete
  5. பிர்லா கோளரங்கம் இதுவரை சென்றதில்லை! ஒரு முறை செல்ல வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. I think, it opened on 1990 or before that.. why I am saying that, that time I wanted to see this, but being a village guy I was not able to make it..

    After long long time ( 22 Years) I visited to this on 2012... and I had all of your experiences... :(:(:(

    Really pathetic...... this kind of institutes should be in good hands..

    Its our FATE.

    Raj.

    ReplyDelete
  7. நல்ல தோர் அனுபவப் பகிர்வு ...

    ReplyDelete
  8. அனைத்து தரப்பினரும் பார்க்கவேண்டிய இடம். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. இனித்தான் பார்க்க வேண்டும் உங்களின் அனுபவம் நினைத்துப்பார்க்கும் போது தேவையா எனத்தோன்றுது!

    ReplyDelete
  10. இதற்குப் பின் யாராவது அங்கு செல்ல யோசிப்பார்கள்....!

    ReplyDelete
  11. ஒழுங்காகப் பராமரிக்கப் படவில்லை என்பது உண்மை. போதுமான நிதி ஒதுக்கப் படுவதில்லை.ஆனால் அங்கு பள்ளி மாணவர்கள் பார்க்கவேண்டியவை நிறைய உள்ளன.இது தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் கீழ் இயங்குகிறது. இந்நிறுவனம் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மீது ஆர்வம் உண்டாக்க Inspire Award வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் செய்ய 5000 ரூபாய் வழங்கி வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளும் வெல்கிறார்கள்.இது மத்திய அரசின் உதவியுடன் நடைபெறுகிறது. பல்வேறு தரப்பினருக்கும் இந்நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது, இவை பற்றி பின்னர் எழுதுகிறேன்.
    ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் தான்

    ReplyDelete
  12. தில்லியிலும் இப்படி ஒரு கோளரங்கம் உண்டு - சென்னை போலவே இதன் நிலையும் பரிதாபம் தான்! :(((

    ReplyDelete
  13. எத்தனையோ பள்ளிக்கூடங்கள் கூரையே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் நம் நாட்டில் இதுபோன்ற ஒழுங்காக பராமரிக்க முடியாத அரங்கத்தை அரசாங்கம் எதற்காக கட்டி வைத்துள்ளது என்று புரியவில்லை. சும்மா கணக்கு காட்டவும் கட்டிய செலவில் இருந்து அரசியல்வாதிகள் கமிஷன் அடிக்கவும் மட்டும்தான் என நினைக்கிறேன்

    ReplyDelete
  14. அனுபவம் உண்டு. இங்கு கோளரங்கங்கள் பரிதாபம்தான். ஆனால், மூங்கில்காற்று சொல்லுவது சரியே. என்றாலும் இன்னும் நேலை நாடுகளைப் போல் பராமரித்தால் மாணவர்கள் பயன் மேலும் பெருகும்...

    ReplyDelete