5 Nov 2014

ஒரு கலைஞனின் தரிசனம்

கடந்த ஞாயிறு இரவு. மேற்கு மாம்பலத்தில் வாத்தியாரின் வீட்டின் அருகில் அவரை இறக்கிவிட்டு விட்டு மேடவாக்கத்தை நோக்கி வண்டியைத் திருப்பும் போதுதான் கவனித்தேன் வித்தியாசமானதொரு கனத்த குரலில் ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பாடலை. அது ஒரு கூத்துப் பாடல், கூர்ந்து கவனித்தப் போது தெரிந்தது கர்ணன் குறித்த கூத்துப் பாடல் என்று.  

இரவு எட்டு மணி, லேசான தூறலுக்கும் குளிர்ந்த காற்றுக்கும் மத்தியில் கேட்ட அந்த குரலில் ஒரு வசீகரம் இருந்தது.  


ஷட்டர் இழுத்து மூடப்பட்ட கடையின் திண்ணையில் அமர்ந்து இருந்த பெரியவர் ஒருவர், பெரியவர் என்றால் வயது தொண்ணூறு ஆகிறது அவருக்கு. உச்சஸ்தாயில் பாடிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் வேறொரு பெரியவரும், ஒரு அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அவர் பாடப்பாட அருகில் இருந்த அந்த இன்னொரு பெரியவர் அந்த கூத்துக்கு ஸ்ருதி சேர்த்து ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார். ஆர்வம் தாளவில்லை. வண்டியை அவர்களை நோக்கி நிறுத்திவிட்டு அந்த இன்ஸ்டன்ட் கூத்தை கவனிக்கத் தொடங்கிவிட்டேன். 

வெகு அற்புதமாகப் பாடிக் கொண்டிருந்தார். நம்மூரின் நாட்டுப்புற இசையில், நாட்டார் பாடலில் இருக்கும் வசீகரம் இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் இழுத்துப் இழுத்து சற்றே ராகம் சேர்த்து பாடிக்கொண்டிருந்தார். பரபரப்பான அந்த சாலையில் அந்தப் பெரியவரை கவனிக்க மனமில்லாமல்/நேரமில்லாமல் அனைவரும் ஓடிக் கொண்டிருக்க, அந்தப் பெரியவரையும், அந்தப் பெரியவரை ரசித்துக் கொண்டிருக்கும் என்னையும் வித்தியாசமாகப் பார்த்தபடி நகர்ந்து கொண்டிருந்தது பொதுஜனம். 

எனக்கும் அவருக்கும் இடையே மூன்று அடி இடைவெளி இருந்தது. அவர்களின் அருகில் சென்று நின்றுகொண்டு அவர் பாடுவதைக் கேட்க ஆசை தான் என்றாலும் ஒருவேளை நான் நெருங்கிச் சென்றால் பாடுவதை நிறுத்திவிடுவாரோ என்ற பயத்தில் விலகியே நின்று கொண்டிருந்தேன். அவ்வபோது ஒலிக்கும் ஹார்ன் ஓசையில், வாகனங்களின் பேரிரைச்சலில் அவர் குரல் கேட்காமல் போனாலும் தொடர்ந்து என்னுடைய கவனம் முழுவதும் அவர் மீதே இருந்தது. பொக்கை விழுந்த வாய், பிய்ந்து போன பொம்மையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டிக் கொண்டிருக்குமே அது போல் ஒட்டிக் கொண்டிருந்த தலைமயிர். பல வாரங்கள் துவைக்கப்படாமல் அழுக்கு ஏறிப் போயிருந்த சட்டை என பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருந்தார். அவரிடம் இருக்கும் அந்தக் கலையும் தமிழகத்தில் தற்போது அதே நிலையில் தான் உள்ளது.  

இந்நேரத்தில் மழை பெரிதாகத் தொடங்க இதுதான் சாக்கு என்று வண்டியை விட்டு இறங்கி அவர்கள் அருகில் சென்று நின்று கொண்டேன், இந்நேரம் அந்தப் பெரியவர் கூத்து பாடுவதை நிறுத்தி தன சொந்தக் கதையை பேசிக் கொண்டிருந்தார், அதவாது அந்தக் காலங்களில் வயலில் நாத்து நாடும் போது ஆரம்பித்து ஒவ்வொரு சமயங்களிலும் என்ன மாதிரியான பாடல்களைப் பாடுவார்கள் என்பதை விவரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நடுப்புறமாக அமர்ந்திருந்த பெரியவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். சரளமாக தங்கள் கதையை கூறத் தொடங்கினார்.  

'இவரு பெரிய கூத்து நடிகன், சொந்த ஊரு விழுப்புரம், பாட ஆரம்பிச்சாருன்னா கேட்டுட்டே இருக்கலாம், அதான் கேட்டுகிட்டே அவரோட வம்பிளுத்துட்டு இருக்கேன், என் தாய் மாமன்' என்றபடி அவரிடம் 'மாமா உன் பொண்ண என் கண்ணுல காமியேன் மாமா' என்று வம்பிழுத்தார்.

அதற்கு அவரோ 'ஓத்தா கிழவா, கட்டையில ஏறப்போற உனக்கு என் பொண்ணு கேக்குதோ' என்றபடி ஏதேதோ பேச ஆரம்பித்தார். அவருடைய வாயைத் திறந்தால் சரளமாக வந்துவிழுந்த வார்த்தைகளில் ஒன்று ஓத்தா. பொதுவாகவே கூத்தில் பொதுஜனங்களின் கவனம் திசை திருப்பாமால் இருக்க கொஞ்சம் கவர்ச்சியையும் கொஞ்சம் கவிச்சையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்  என்பது நாட்டார் கலைஞர்களின் விதி. 

'காஞ்சிபுரம் மாவட்டத்துல ஆக்கூர்ன்னு ஒரு ஊர் இருக்கு, அந்த காலத்தில, இப்பவும் நடக்குது, அந்த காலத்தில வருசா வருஷம் பெருசா கூத்து நடக்கும், ஜனங்க இவரோட கூத்து பார்கிறதுக்கு வண்டி கட்டி வருவாங்க, அந்த காலத்திலயே கூத்து கட்டி ஐம்பாதாயிரம் பரிசு ஜெயிச்சவரு, பச்சையப்பா காலேஜ் பட்டதாரி. என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ஒரு சைரன் சத்தம் எங்களைக் கடக்க

அந்தப் பெரியவர் கூறினார் 'ஒத்தா பாடி போவுது பாரு' என்று.

'செவிட்டு மாமா அது பாடி இல்ல போலிசு, உன் மவள தராட்டா உன்ன புடிச்சு கொடுக்கிறேன் பாரு' என்றபடி மீண்டும் வம்பிழுத்தார்.

அதற்கு அவரோ நீ எனக்கு காசு பணம் சொத்து எதுவும் தர வேணாம், கூத்துல நான் பாடுற ஒரு வரிய நீ பாடுறா பொட்ட, அப்புறம் என் மகளை கட்டலாம்.' என்றபடி நீளமாக மூன்று நிமிடத்திற்கு மூச்சு விடாமல் ஒரு பாடலைப் பாடினார், ஒருமுறை அல்ல இருமுறை அல்ல கிட்டத்தட்ட நான்கு முறை அதே வரியை திரும்பத் திரும்ப பாடினார், அவருடைய மருமகனால் அதைப் பாட முடியவில்லை. 'மாமா மாமா நீ பெரிய ஆளு மாமா, என்றபடி பதிலுக்கு அவரைக் கொஞ்ச ஆரம்பித்தார். எனக்கும் சற்றும் சம்மந்தமே இல்லாத உலகம் தான் அது என்றாலும், யாரோ மூவர், சாலையின் ஓரத்தில் தங்கள் இரவுப் பொழுதைக் கழிக்க ஒதுங்கியவர்கள் தான் என்றபோதிலும் தமிழகத்தின் அழிந்து வரும் கலைகளில் ஒன்றின் உயிர்நாடி அவரிகளிடம் ஜீவனோடு ஓடிக் கொண்டுள்ளது என்பதால் நடப்பது அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சில தருணங்களை நாமாக தேடினாலும் அமைத்துக்கொள்ள முடியாது. ஆனால் சில தருணங்கள் தாமாக அமையும். இது எனக்காகவே, என்னுடைய வரவுக்காகவே காத்திருந்த தருணம் போலத் தோன்றியது.    

நான் வெகு அருகில் நின்று வேடிக்கைப் பார்ப்பதைப் பார்த்ததும் ஒரு கூட்டம் எங்களை சூழ்ந்து கொண்டது, அவர்களும் அந்தப் பெரியவருடன் பேசி சிரிக்க ஆரம்பிக்க, எங்களுக்காக ஒரு பதினைந்து நிமிடம் கர்ணன் போருக்கு செல்லும் பாடலை நடித்துக் காண்பித்தார். 

ஏனோ தெரியவில்லை அவர் நடிக்கத் தொடங்கவும் நம் மக்கள் மெல்ல ஒவ்வொருவராக கழன்று கொண்டனர். அந்த மாபெரும் கலைஞனுக்கு கலைக்கு நம்மாட்கள் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான், அவ்வளவு அற்புதமாக நிகழ்ந்து கொண்டிருந்த கூத்தினை ரசிக்காமல் கலைந்து செல்வதைப் பார்த்தபோது என்னவோ போல் இருந்தது. யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு கலைஞனின் தரிசனம். தேடிவருவதை வேண்டாம் என்று நகரும் இவர்களைக் கையைப் பிடித்தா இழுக்க முடியும். 

அதற்குப் பின் மீண்டும் அந்த இரு பெரியவர்களும் சண்டை போட்டுக் கொள்ள, இவர் அவர் மகளைக் கேட்பதும், அவர் தரமாட்டேன் என்று கூறுவதும், இப்படியாக சண்டை நடந்து கொண்டிருக்க திடிரென அவருடைய மருமகன் ஒரு டயலாக் விட்டார், 'டேய் மாமா நான் உன் மகளை பார்க்கப் போறேன் தூக்கிட்டு அமெரிக்க போறேன், இருக்க சொத்து எல்லாத்தையும் வித்துட்டு அவள அமெரிக்கா தூக்கிட்டுப் போகப் போறேண்டா' என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார். 

அவரும் விடாமல் கட்டையில் போறவனுக்கு **** கேக்குதோ என்று மேலும் ஆபாசமாக பேசத் தொடங்கினார். டேய் எனக்குக் கொடுக்க வேண்டிய ஆயிரந்த்தி சொச்சம் பணத்த கொடுடா மொதல, நீயே நடுத்தெருவில நிக்குற நாய் என்று தன மருமகனை திட்டத்தொடங்க, 'மாமா பணம் என்ன மாமா பணம், துட்டு என்ன பொறுத்தவரைக்கும் மாநகராட்சி கொசுக்கு சமம் மாமா' என்றார். அவர்களிடம் பணம் சுத்தமாக இல்லை என்றாலும், பணத்திற்கு அவர் கூறிய ஒப்புமை அத்தனை எளிதில் நம்மால் கூற முடியாதது. அவருடைய வார்த்தைகளில் விரக்தியும் இருந்தது என்பது வேறுவிசயம். 

'டேய் மாமா உன்ட்ட ஒரே ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லுடா பார்க்கலாம்' என்றார், 'டேய் பாடு நீ என்ன கேள்வி கேப்பன்னு எனக்கு தெரியாதா என்ன? சரி கேளுடா' என்றார் அந்தப் பெரியவர். அதற்கு பதிலாக அவர் மருமகனிடம் இருந்து வெளிப்பட்ட அந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாயிருந்தது. அதிர்ச்சியாயிருந்தது என்பதை விட ஆச்சரியமாய் இருந்தது என்பது தான் உண்மை. 

அவர் கேட்ட கேள்வி, 'டேய் மாமா பிகினிணா என்னன்னு தெரியுமாடா' என்று கேட்க, 'எனக்கு பிகிடியும் தெரியாது பீடியும் தெரியாது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க செஞ்சோஓஓஓஓஓஓற்றுக் கடன் தீர்க்கஅஅஅஅஅ' என்று மீண்டும் அவர் உச்சதாயில் பாடத் தொடங்க மேலும் ஒரு பத்து நிமிடம் அவர்களோடு இருந்துவிட்டு நடையைக் கட்டினேன். அவர்கள் உலகம் திரும்பவும் அவர்களுக்காக சுழலத் தொடங்கியது. சுழலட்டும்.

இதற்கு முன் மேடவாக்கத்தில் தற்செயலாய் கண்டு ரசித்த ஒரு தெருக்கூத்தைப் பற்றிய பதிவு 

சென்னை - நடுநிசியில் ஒருகூத்து

19 comments:

  1. .ஹா...ஹா...

    உங்கள் கண்ணில் வந்து சிக்குகிறார்கள் பாருங்கள். :))))

    ReplyDelete
  2. ஹஹஹா நல்ல அனுபவம்

    ReplyDelete
  3. அட!பார்ப்பதெல்லாம் அழகான பதிவுகளாக வந்து விழுகின்றன.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இது எனக்காகவே, என்னுடைய வரவுக்காகவே காத்திருந்த தருணம் போலத் தோன்றியது. //

    நிச்சய்மாகச் சீனு! உங்களுக்கு இது போன்ற அனுபவங்கள் கிடைப்பதில் சற்று ஏக்கத்துடன் கூடிய மகிழ்வான பொறாமைதான் (அதுவும் கீதாவுக்கு கொஞ்சம் ஓவராக!!!!ஹஹஹ..ஏனென்றால் தெருக்கூத்து கல்லூரிக் காலத்தில் செய்த அனுபவம் உண்டே!!)

    நம் தமிழக்த்தின் இது போன்ற ஜீவ நாடிகளே தெரு ஓரத்தில் சீந்துவாரின்றி, சீக்குப் பிடித்து பாடை ஏறத் தயாராகத்தான் இருக்கின்றன சீனு! இவை எல்லாம் சென்னை சங்கமம் என்று ஒவ்வொரு பூங்காக்களிலும் வருடத்திற்கு ஒரு முறை 3, 4 வருடங்கள் மட்டுமே நடந்ததாய் நினைவு......

    ராத்திரி சுத்தினாத்தான் இது போல அனுபவங்கள் கிடைக்குமோ?!!!சீனு?! அழகான முத்தானப் பதிவு!

    ReplyDelete
  5. கண்ணால் கண்டதையும், காதால் கேட்டதையும் வைத்து மிகவும் அழகாக ஒரு பதிவு.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சொக்கன் சார் செம செம ...

      Delete
  6. //'ஓத்தா கிழவா, கட்டையில ஏறப்போற உனக்கு என் பொண்ணு கேக்குதோ' என்றபடி ஏதேதோ பேச ஆரம்பித்தார். அவருடைய வாயைத் திறந்தால் சரளமாக வந்துவிழுந்த வார்த்தைகளில் ஒன்று ஓத்தா.//

    ஒருவேளை இந்த பக்கம் போறப்ப ஜாக்கி அண்ணனோட காத்து கருப்பு அடிச்சிருக்கும் போல...

    ReplyDelete
  7. //ஏனோ தெரியவில்லை அவர் நடிக்கத் தொடங்கவும் நம் மக்கள் மெல்ல ஒவ்வொருவராக கழன்று கொண்டனர். அந்த மாபெரும் கலைஞனுக்கு கலைக்கு நம்மாட்கள் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான்//

    ஆமா..இவரு பாரி வேந்தர். தங்கத்தேரை அவரு பக்கத்துல இருந்த கம்பத்துல கட்டிட்டு பை நிறைய 1,000 பொற்காசு தந்துட்டு வந்தாரு. பதிவு எழுததானய்யா அங்க பம்முன. படுவா!!

    ReplyDelete
  8. தங்கள் இரவுப் பொழுதைக் கழிக்க ஒதுங்கியவர்கள் தான் என்றபோதிலும் தமிழகத்தின் அழிந்து வரும் கலைகளில் ஒன்றின் உயிர்நாடி அவரிகளிடம் ஜீவனோடு ஓடிக் கொண்டுள்ளது// இந்த உள்வாங்களுக்காகவே உன்னை வாழ்த்துகிறேன் தோழர் ...

    ReplyDelete
  9. அவர்களைப் பேட்டி எடுக்க முயற்சிக்கவில்லையா?

    ReplyDelete
  10. அனுபவம் ... புதுமை...
    த.ம ஏழு

    ReplyDelete
  11. நாத்து நாட்டு- நட்டு

    ReplyDelete
  12. அழிந்து வரும் கலைஞர்களின் ஓர் இரவை அழகாக கூறியுள்ளீர்.

    சில வருடங்களுக்கு முன் எங்க ஊர்ல கூத்து கட்டுனா பக்கத்து ஊர்லேருந்த்லாம் பார்க்க வருவாங்க... எங்க ஊர்லேருந்தும் வண்டி கட்டிடடு போவாங்க.

    இப்போலாம் நாடகம் பாக்குறதுக்கே எல்லாருக்கும் நேரம் போதல...

    தொலைக்காட்சி மற்றும் சினிமா வந்து எல்லா நாட்டுப்புற கலைகளையும் அழிச்சிடுச்சி. அழிந்து போன கலைகளின் எச்சமாகத்தான் சிலர் எஞ்சி வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்....

    ReplyDelete
  13. நெருக்கடியான நகர வாழ்க்கையில் பலவற்றையும் நெருங்கிப் பார்க்கும் உங்கள் பார்வைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  15. நல்ல அனுபவம்...

    சிவகுமார் - ”பதிவு எழுததானய்யா அங்க பம்முன.” :)))))

    ReplyDelete
  16. //சில தருணங்களை நாமாக தேடினாலும் அமைத்துக்கொள்ள முடியாது. ஆனால் சில தருணங்கள் தாமாக அமையும். இது எனக்காகவே, என்னுடைய வரவுக்காகவே காத்திருந்த தருணம் போலத் தோன்றியது.//

    அருமை!

    உங்களுடைய அனுபவமும் அதைத்தொடர்ந்த எழுத்தும் அப்படியே வசீகரித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்!


    ReplyDelete
  17. அனுபவத்தை அருமை வரிகளாக்கியுள்ளீர்கள் போல உள்ளது

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    WWW.mathisutha.COM

    ReplyDelete