3 Nov 2014

பெங்களூரு - டே 1 (சென்னை டூ பெங்களூர்)

பெங்களூரு. மதியம் இரண்டு மணி பரபரப்பிற்கு மத்தியிலும் எவ்வித அவசரமும் காட்டாமல் நிதானமாக இயங்கிக் கொண்டிருந்தது கெம்பெகவுடா சாலையின் ஏதோ ஒரு திருப்பத்தில் அமைந்திருந்த அந்த உணவகம். உணவகம் இருந்த அந்த கட்டிடமே வித்தியாசமாக கட்டபட்டிருந்தது. மாலை வேளையில் நிலா வெளிச்சம் விழும் வகையில் காதலர்களுக்காக, அல்லது காதலர்கள் தங்கள் காதலிகளை நினைத்து குறும்படம் எடுப்பதற்கு ஏதுவாக கட்டப்பட்ட ஒரு பெரிய தேநீர் விடுதி. அதைக்கடந்து முதல் மாடி ஏறினால் உணவகம் The Kingdom. உள்ளே இருந்த இருக்கைகள் மொத்தமும் பெங்களூரு குமரிகளால் நிறைந்திருந்தது. அவர்களைப் பார்த்தால் வேலைக்குச் செல்லும் பெண்களைப் போலத் தோன்றினாலும், கல்லூரி மாணவிகள் என்று கட்டியம் கூறியது அந்தப் பொன்நிறக் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஐடி கார்ட். 

சாதாரணமாகவே உயர்தர இடம் போல் தோன்றிய அந்த உணவகத்தின் மதிப்பை சூழலை மேலும் உயர்த்தி இருந்தார்கள் அந்தப் பெண்கள். எதையோ விவாதித்திக் கொண்டிருந்தார்கள். விவாதத்திற்கு மத்தியில் அவ்வபோது உணவருந்தவும் செய்தார்கள். கருப்பு நிற கோட்சூட் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது அவர்களுக்கு. உடன் ஆண்களும் இல்லாமல் இல்லை, ஆனால் அது ஏன் அசிங்கமாக அவர்களைக் குறிப்பிட்டுக்கொண்டு. 

சென்னையில் இருந்து பெங்களூரை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடங்கிய போது மணி காலை ஆறு. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் கிளம்பிவிட வேண்டும் என்று கூறியிருந்தார் ஆவி. நானோ ஐந்து மணிக்கு நிதானமாகக் கிளம்புவோம் என்று மறுத்தேன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 

சென்னை டூ பெங்களூர் செல்லும் ஒரு நீண்ட பயணத்தின் இரண்டு மணி நேரங்களை இருளில் கடப்பதில் விருப்பம் இல்லை எனக்கு, எப்படியும் காரில்தான் போகிறோம் என்று முடிவாகிவிட்டது, அதனால் சாலைகளை, அதில் எதிர்படும் மக்களை, ஊர்களை கவனித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்பது எண்ணம். 'இல்ல கொஞ்ச நேரத்தில உங்களுக்கு இந்த ட்ராவல் போர் அடிச்சிரும், சோ நாலு மணிக்கே கிளம்பலாம்' என்று கூறியிருந்தார் ஆவி. ரெண்டு பேருக்கும் வேணாம் ஐஞ்சு மணிக்கு கிளம்புவோம் என்று அவரை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டேன். அவரும் சம்மதித்துவிட்டார். ஆனாலும் விதி என்றொரு வஸ்து இருக்கிறதே. அது ஓகே சொல்ல வேண்டுமே. நாங்கள் கிளம்புவதற்கு முந்தைய தினம் பார்த்து அலுவலகத்தில் சிலபல வேலைகளில் மாட்டிக் கொண்டேன். வேலை முடித்து வீட்டிற்கு வரும் போது மணி நள்ளிரவு ஒன்றைக் கடந்திருந்தது. அதுவரைக்கும் ஆவியும் உறங்கி இருக்கவில்லை. அதன் பின் எங்கே ஐந்து மணிக்கு கிளம்புவது. விதி தனது கதவைத் திறந்த போது முழுவதுமாய் விடிந்திருந்தது.  

பொதுவாகவே தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி ரெட்ஹில்ஸ் சாலைகளை இணைக்கும் பைபாஸில் பயணம் செய்வதற்கு அருமையாக இருக்கும், அது ஒரு மழைக்கால காலை என்றால் கேட்கவா வேண்டும். பயணத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது. அட்டகாசம் என்பதைவிட ரம்யம் என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும். யாருமற்ற அகலமான சாலை. சாலையின் இருபுறமும் ராட்சஸ மலை போல பிரம்மாண்டமாக சூழ்ந்திருக்கும் கார் மேகங்கள், குளிர்ந்த காற்று, மெல்லிய தூறல், இளையராஜா பாடல். ஒரு பயணத்தை இனிமையாக்க இதைவிட வேறு ஏதேனும் அட்டகாசமான காரணிகள் வேண்டுமா என்ன. கல்கத்தா ஆயிரத்தி சொச்சம் கிமீ என்று எழுதியிருந்தது. 'கல்கத்தா போவோமா பாஸ்' என்று ஆவியிடம் கிண்டலாக கேட்க 'ஓ போவோமே' என்றார் சற்றும் யோசிக்காமல். இப்போது நாங்கள் பயணித்துக் கொண்டிருப்பது ஆவியுடைய காராக இருந்திருந்தால் எங்களுடைய பெங்களூரு பயணம் கல்கத்தா பயணமாக மாறியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். 



நிச்சயம் ஒருமுறை கல்கத்தா சென்றுவர வேண்டும் என்று கூறிக்கொண்டே பெங்களூரு ஹைவேக்காக திரும்பியிருக்க வேண்டிய இடத்தில் திரும்பாமல் ஒரு பத்து கிமீ சுற்றிவிட்டு நெற்குன்றம் சாலையில் சென்று இணைந்தோம். இந்நேரத்தில் சென்னையின் வாகனப் போக்குவரத்து கணிசமாக அதிகரித்து இருந்தது. அதிகாலையிலேயே கிளம்பி இருக்க வேண்டும் என்று ஆவி கூறியதன் அர்த்தம் அப்போதுதான் விளங்கியது எனக்கு. பூந்தமல்லி ஸ்ரீபெரும்புதூர் சாலையில் நகர்வதற்குக் கூட வழியின்றி நெரிசலில் சிக்கியிருந்தோம்.

ஒரு நீண்ட தூரப் பயணத்தில் நாம் பாட்டுக்கு பயணித்துக் கொண்டே இருந்தால் எதுவும் தெரியாது, கிளட்ச் பிரேக் ஆக்சிலேட்டர் என்று ஒவ்வொன்றாக கால்களை மாற்றும் போதுதான் அதன் வலி தெரியும். ஆவியின் புலம்பல் எனக்கே பாவமாய் இருந்தது. சென்னையின் புறநகரைக் கடந்து ஹோசூர் செல்லும் ஆறுவழிச் சாலையில் இணைந்திருந்த போது மணி எட்டு. ஒருமணி நேரத்தில் கடந்திருந்த வேண்டிய தொலைவை இரண்டு மணி நேரத்தில் கடந்திருக்கிறோம் என்பது மிகப்பெரிய இழப்பு தான். இருந்தாலும் இது ஒரு திட்டமிடப்படாத இலக்கில்லாப் பயணம் என்பதால் பெரிதாய் வருத்தப்படவில்லை.  

இளையராஜாவும் ரஹ்மானும் மாறி மாறி எங்களுக்கு சேவை செய்து கொண்டிருக்க சிக்கலில்லாத அந்த ஆறுவழிச் சாலையில் வழுக்கிக் கொண்டிருந்தது எங்களுடைய வாகனம். சொல்லப்போனால் இந்த சாலையில் செல்லும் பயணம் பெங்களூரு செல்வது போலவே இல்லை, ஏதோ செங்கல்பட்டு கடந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருப்பதைப் போல உணர்ந்தோம். இரண்டு திசையில் இருக்கும் சாலைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பயணிக்கும் திசையைத் தவிர. 

மணி எட்டரையைக் கடந்திருக்க எதிர்பட்ட முருகன் இட்லி கடையின் ஓரமாக ஒதுங்கியது எங்கள் வாகனம். சாதாரண கடைகளில் சாப்பிட்டால் தான் மோசமான உணவைக் கொடுக்கிறார்கள் என்று ஓரளவு நல்ல உணவகதிற்குச் சென்றால் அங்கும் சுவை மட்டமாகத்தான் இருக்கிறது. நெடுஞ்சாலைக் கடைகளில் இதற்கு மேல் சுவையை எதிர்பார்க்க முடியாது போலும். சென்னையில் இருக்கும் முருகன் இட்லி கடைக்கும் இந்த நெடுஞ்சாலையில் இருக்கும் கடையின் சுவைக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். நல்லவேளை காபி மட்டும் காபியைப் போல் இருந்ததில் மகிழ்ச்சி. 

கடந்த பேராவில் சிக்கலில்லாத சாலை என்று குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா அது எவ்வளவு அபத்தம் என்று இப்போதுதான் புரிந்தது, வேலூரைக் கடந்து நூறுகிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தான், அந்த அசம்பாவிதம் நடக்க இருந்தது. சாலையின் மறுபுறத்தில் இருந்து சென்டர் மீடியன் மீது ஏறி ஏதேனும் வாகனம் வருகிறதா என்பதைக் கூடக் கவனிக்கச் சொரனையற்று ஒரு இருசக்கர வாகனம் நொடிப்பொழுதில் எங்களைக் கடந்தது. அந்த பைக்கை ஓட்டிச் சென்றது பள்ளிக்கூடம் செல்லும் ஒரு சிறுவன், அவனுக்குப் பின்னால் மேலும் இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள். மிகச்சரியான நேரத்தில் ஆவி வேகத்தைக் கட்டுபடுத்தாமல் இருந்திருந்தார் என்றால் அந்த மூன்று சிறுவர்களும் இந்நேரம் சிவலோக பதவியை அடைந்திருப்பார்கள். 

சாலையில் விபரீதமாக எடுக்கும் முட்டாள்தனமான முடிவு எவ்வளவு பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை இங்கு யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை, நூறுகிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்த எங்கள் வாகனம் அந்த திடீர் வேகக்கட்டுப்பாட்டை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை, பிரேக்கை மிதித்த வேகத்தில் லேசாக அலும்பி குலுங்கிவிட்டு இயல்பு நிலைக்கு வர சில நொடிகள் தேவைப்பட்டது. ஆனால் நாங்கள் இயல்பு நிலைக்கு வரத்தான் மேலும் சில நிமிடங்கள் தேவைப்பட்டது. ஒருவேளை எங்களுக்குப் பின்புறம் வேறு ஏதேனும் வாகனம் அதே வேகத்தில் வந்து, அதனால் வேகத்தைக் கட்டுபடுத்த முடியாமல் போயிருந்தால் இன்னும் எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். எதைப்பற்றியும் அக்கறை இல்லாத அந்த சிறுவர்களைத் திட்டுவதா அல்லது முதிர்ச்சி அடையாத சிறுவர்களின் கையில் வாகனத்தைக் கொடுத்த அவர்களது பெற்றோர்களைப் பழிப்பதா. இனி எப்படி கூற முடியும் இந்திய சாலைகள் சிக்கலில்லாதவை என்று.

சாலையும் சாலையின் கூடவே தொடரும் இருப்புப் பாதையும், அதில் திடிரென வந்து செல்லும் ரயிலும் ஒரு சாலைப் பயணத்தை இன்னும் சுவாரசியமாக்கக் கூடியவை. ரயிலில் இருந்து சாலையில் நகரும் வாகனங்களைப் பார்ப்பதற்கும், சாலையில் பயணிக்கும் போது ரயிலைப் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. எதையோ தேடி ஓடும் ரயில் சிறுகுழந்தையைப் போன்றது. நம்மையும் குழந்தையாக்கக் கூடியது. (முன்னொருமுறை ரயில் பயணத்தைப் பற்றி சிலாகித்து எழுதியிருந்த அனுபவத்தைப் படிக்க - ரயிலோடும் பாதை

சும்மாவே ஆவி பேச ஆரம்பித்தார் என்றால் அவரைக் கட்டுபடுத்த முடியாது. இந்தப் பயணத்தின் போது நாங்கள் பேசுவதற்கு எங்களிடம் நிறைய விஷயங்கள் இருந்தன. ஸ்ரீப்பெரும்புதுரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தைக் கடந்த போது தொடங்கிய எங்கள் விவாதம் தமிழ், தமிழ் ஈழம், சுதந்திரப் போராட்டம், தற்கால இளைஞர்கள், இந்தியா, இந்திய சினிமா, உலக சினிமா அரசியல், புத்தகம் சுஜாதா ஜெமோ சாரு இலக்கியம் என்று ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குத் தாவிக் கொண்டே இருந்தது. அவ்வப்போது எங்களைக் கடந்து செல்லும் வித்தியாசமான கனரக வாகனங்களையும் முட்டாள்தனமாக வண்டியோட்டியபடி கடந்து செல்லும் சில வாகனங்களையும் கடந்தபடி சுமார் நான்கு மணிநேரம் பயணித்திருந்தோம். பயணக் களைப்பு லேசாக கண்ணில் தென்பட சாலையோர காபி கொடுத்த உற்சாகத்தில் தொடர்ந்து பயணிக்கத் தொடங்கினோம். 




ஹோசூரைக் கடந்து பெங்களூர் சாலையில் இணைந்த போது வாகனப் போக்குவரத்து கொஞ்சம் அதிகரித்திருந்தது. சூரியனும் உச்சந்தலைக்கு மேல் உயர்ந்திருந்தான். கர்நாடகா எல்லையினுள் நுழைந்ததும் ஆவி அந்தக் கேள்வியைக் கேட்டார். மைசூர் போவோமா இல்ல சரவணபெலகோலா போவோமா, எதுனாலும் உடனே சொல்லுங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில நாம மைசூர் போற ரோடுல நாம திரும்பனும் என்றார். 

மைசூர் நான் சென்றதே இல்லை, ஒருவேளை நாங்கள் மைசூர் சென்றாலும் அன்றைய இரவே பெங்களூரு திரும்பியாக வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு மேல் மைசூரில் இருக்க முடியாது என்பதையும் கூறினார் ஆவி. பெங்களூர் செல்கிறோம் என்று பேஸ்புக்கில் பதிந்திருந்த நிலைத்தகவலைப் பார்த்தது விட்டு ஒரு பிரபலம் எங்களை அழைத்து தானும் பணி நிமித்தம் பெங்களூர் வந்திருப்பதகாவும் மாலை சந்திக்கலாம் என்றும் கூறியிருந்தார். அவரை வேறு சந்திக்க வேண்டும். வேறுவழியில்லை மைசூர் திட்டத்தைக் கைவிட்டு பெங்களூரு சாலையில் திருப்பினோம் வண்டியை

பயணிப்போம்... 


தகவல்:

இத்தனை நாளாக என்னுடைய வலையில் இமெயில் subscription சரிவர வேலை செய்யாமல் இருந்தது. பிளாக்கர் நண்பன் பாசித் அவர்களின் உதவியுடன் அதனை சரி செய்தாயிற்று. ஒருவேளை எனது பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற விரும்பினால் subscribe செய்து கொள்ளுங்கள். சரிசெய்து கொடுத்த பிளாக்கர் நண்பனுக்கு நன்றிகள். 

20 comments:

  1. வழக்கம் போல.... பயணம் அல்லவா...ஸோ....நீண்ட பயணம்....ஆனாலும் அலுப்புத் தட்டாத, களைப்பு ஏற்படாத பயணம்! அதுவும் உங்களது நளிமான எழுத்து நடையில்! மிகவும் ரசித்தோம்! சீனு! தொடர்கின்றோம்....மெட்ராஸ் டொ பங்களூர் பயணம் பிடித்ததால்.....

    ReplyDelete
  2. யப்பா பயணம் நல்லாத்தான் இருக்கு....இப்படி உயிர் தப்பினோம்னு எழுதினீங்கனா...கிலி பிடிக்குதப்பா...ப்ளீஸ் பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக....ஏம்பா அப்பத்தானே இது போன்ற பதிவுகள் கிடைக்கும் எங்க்ளுக்கு.....உங்க ரெண்டுபேர்கிட்டருந்தும்....கிலி பிடிக்க வைக்காதீங்கப்பா...நம் மீது தவறு இல்லை என்றாலும்...

    ஆவி சூப்பர்! படம்!



    ReplyDelete
  3. நீண்ட பயணக்கட்டுரை போன்று தெரிந்தாலும் சுவாரஸ்யமாகச் சென்றது சீனு... அடுத்த பகுதியைப் படிக்கும் ஆவலுடன்....

    ReplyDelete
  4. பயண அனுபவங்கள் சுவாரஸ்யம். முருகன் இட்லிக் கடை எங்குமே திராபைதான்!

    ReplyDelete
  5. அருமை
    தொடர்ந்து பயணிக்கக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  6. வழக்கமாகவே சீனு பயனக்கட்டுரை அட்டகாசமாக எழுதுவார். இதில் கலக்கி இருக்கிறார். இது போல கட்டுரை படிக்கும் போது நாமும் எதையாவது எழுதுவோம் என்ற உத்வேகம் பிறக்கிறது. அருமை நண்பா.

    ReplyDelete
  7. அடடே, ஒரே நாள்ல நாடோடி எக்ஸ்பிரஸ் பெங்களூர் வந்துட்டுதே..! ;)

    ReplyDelete
  8. //இது ஒரு திட்டமிடப்படாத இலக்கில்லாப் பயணம் என்பதால் பெரிதாய் வருத்தப்படவில்லை. // ஏம்பா, காலைல நாலு மணிக்கு கிளம்பனும். அஞ்சரைக்குள்ள அவுட்டர் தாண்டிடனும் னெல்லாம் சொன்னது திட்டம் மாதிரி தெரியலையா? இல்ல பெங்களூர்ங்கறது ஒரு இலக்கா தெரியலையா? விம் ப்ளீஸ்.. ;)

    ReplyDelete
  9. // உடன் ஆண்களும் இல்லாமல் இல்லை, ஆனால் அது ஏன் அசிங்கமாக அவர்களைக் குறிப்பிட்டுக்கொண்டு. / அதானே!!

    ReplyDelete
  10. // இருக்கைகள் மொத்தமும் பெங்களூரு குமரிகளால் நிறைந்திருந்தது. // அழகிகள் ன்னு குரிப்பிடாம குமரிகள்ன்னு குறிப்பிட்ட உங்க சாதுர்யத்தை கண்டு நான் வியக்கேன்!

    ReplyDelete
  11. //சும்மாவே ஆவி பேச ஆரம்பித்தார் என்றால் அவரைக் கட்டுபடுத்த முடியாது///.ம்ம்ம்..ம்ம்ம்

    ReplyDelete
  12. சுவாரசியமாய் சொல்கிறீர்கள்...

    ReplyDelete
  13. வழக்கம் போல களை கட்டுது பயணம்! உடன் பயணிக்கிறேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. பெங்களூருவிலிருந்து சென்னைக்கு தீபாவளிக்கு காரில் பயணித்தது நினைவுக்கு வந்தது. நாங்கள் மதியம் 12-மணிக்குப் புறப்பட்டு சென்னை அவுட்டரில் மாலை நாலரை மணிக்கே சென்று விட்டோம். ஆனால் அங்கிருந்து வேளச்சேரி போய்ச் சேரும்போது மாலை ஏழுமணியைத் தாண்டி விட்டது. பெங்களூரு வந்ததே தெரிய வில்லையே. அட் லீஸ்ட் தொலை பேசியிலாவது பேசி இருக்கலாமே. தொடர்கிறேன் .

    ReplyDelete
  15. காரின் வேகம் போலவே கட்டுரையின் வேகமும் விறுவிறு

    ReplyDelete
  16. உன்னைதான்லே தேடிட்டிருந்தேன் இந்தனை நாளா
    எங்களே இருந்த நீ
    முதல் இரண்டு பாராக்களில் வழியும் குறும்பு அது எதற்கு அசிங்கமாக அவர்களை பற்றி ... கொய்யால குசும்பு ...

    ReplyDelete
  17. உங்கள் பயணக் கட்டுரையும் உங்கள் வாகனத்தின் வேகத்திலேயே செல்கின்றது. திடுமென "பயணிப்போம்" என்ற வார்த்தை குறுக்கால வந்து விட்டது.

    ReplyDelete
  18. நெடுஞ்சாலைப் பயணம் போலவே உங்கள் கட்டுரையும் சுகமான ஒன்றாக.

    இந்த நடுவில் வரும் வாகனங்கள் பெரும் தொல்லை தான்! வட இந்தியாவில் இது ரொம்பவே அதிகம். நெடுஞ்சாலைகளில் இருக்கும் Divider-ஐ மக்களாகவே உடைத்து வைத்திருப்பார்கள் - இப்படிக் கடப்பதற்கென்றே - இல்லையெனில் மூன்று நான்கு கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டுமே ! :(

    ReplyDelete
  19. பதிவைக் கண்டேன். நாங்களும் உடன் வருவதுபோலிருந்தது. வேகமாக சென்று கொண்டிருக்கும்போதே திடீரென நின்றுவிட்டதுபோல் தோன்றுகின்றது.

    ReplyDelete