23 Nov 2014

மற்றுமோர் மென்பொருள் தினம்

நேற்றைய தினம் அலுவலகத்தில் family day. அலுவலகமே உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. இதற்கெனவே சிலபல பிரத்யோக ஏற்பாடுகளைத் தயார் செய்து மிகப் பெரிய கொண்டாடத்திற்கு தன்னை ஏற்பாடு செய்திருந்தது எங்கள் அலுவலகம். சும்மாவே எங்கள் அலுவலகம் asia's largest single campus building. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் அலுவலகத்தின் பரப்பை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. கிட்டத்தட்ட 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கட்டிடம். அந்த மொத்த பரப்பளவையும் சுற்றிவளைத்து கொண்டாட்டங்களுக்கான இத்யாதிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். முந்தின நாள் நள்ளிரவில் அலுவலகம் முடித்து கிளம்பும் போது எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். 

நேற்று சனிகிழமை மதியம் அலுவலகத்தில் நுழையும் போதே அதன் முகமே மாறியிருந்தது. இந்த அலுவலகத்தில் சேர்ந்த பின் இது மூன்றாவது family day. அதில் ஒன்றைக் கூட பார்த்ததில்லை. ஆகவே என்னைப் பொறுத்தவரையில் இதுதான் எனக்கு முதல் தடவை. சிறுசேரி மொத்தமும் வாகனங்களால் நிரம்பி வழிய, அலுவலக கட்டிடம் மொத்தமும் மனிதர்களால் (அலுவலக ஊழியர்களின் குடும்பங்களால்) நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மேளதாளம் பொய்க்கால் பொம்மை நடமாட்டத்துடன் வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க ஒரு திருவிழாக் களை வந்திருந்தது அலுவலகத்திற்கு. ஆனான்கு சீரியல் பல்பு, அம்மன் கட்வுட் இல்லை அவ்வளவு தான் ஒரு கோவில் திருவிழாவிற்கும் பேமிலி டேவுக்குமாக இருந்த வித்தியாசம். ஆனான்கு பம்பரம், கோலிகுண்டு, கேரம் இன்னும் இன்னும் வித்தியாசமான விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருக்க, பலரும் உற்சாகமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு உற்சாக அலை என்னை தள்ளிக் கொண்டு போவது போல் உணர்வு, அலுவலகத்தினுள் வண்டி ஓட்டிக் கொண்டே இவற்றை கவனித்துச் சென்றதால் என்னால் நெருங்கி சென்று எதையும் பார்க்க முடியவில்லை. 

என்னுடைய ப்ராஜெக்டில் சென்று ஒரு அட்டென்டென்சை போட்டுவிட்டு அப்புறம் இந்தக் கொண்டாட்டங்களைப் பார்க்க செல்லலாம் என்று அந்த கண்ணாடி சிறைக்குள் நுழைந்தேன். ஆம் எனக்கு வேலை தினம். அதிலும் production support வேறு. இருக்கையில் யாராவது இருந்து அந்த இயந்திரத்தைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் மொத்தமும் வெறிச்சோடிக் கிடக்க பிரபு மட்டும் கணினியில் முகம் புதைத்து தீவிர ஆலோசனையில் இருந்தார். உள்ளே நுழைந்ததும் நேரே அவர் அருகில் சென்றேன். சொல்ல மறந்துவிட்டேன் பிரபு என் டீம். எனக்கு முந்தைய ஷிப்ட். என்ன பிரபு 'பேமிலி டேக்கு போகாம இங்க இருக்கீங்க' எனக் கேட்க வந்ததை மனதிலேயே முழுங்கி அவர் நிலையைப் பார்த்ததும் கண்டுபிடித்து விட்டேன். 'ஸ்ரீனி காலையில இருந்து ஒரு இஸ்யு, சால்வ் ஆகல.  பார்த்துட்டு இருக்கேன்' என்றார். 

அவர் சொல்லி முடிக்கவில்லை. சரவனாவிடம் இருந்து ஒரு போன். 'டேய் EB3 (கட்டிடத்தின் பெயர்) வா, செமையா இருக்கு என்றான். அலுவலகத்தினுள் வரும் போதே திருவிழாக் கொண்டாட்டம் என்று கூறினேன் இல்லையா, அதன் காரணம் கலர் கலரான நிறைய கலர்களும் தான்! ஏ சீக்கிரம் கிளம்பி வா என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். இங்கே கணினியைப் பார்த்தால் பிரச்சனை முடியும் போல் தெரியவில்லை. 

நாங்கள் மட்டுமே தனித்து இயங்க முடியாது. சில கட்டளைகளை எழுத்து வடிவில் அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கிருக்கும் அவர்கள் அதை செயல்படுத்த வேண்டும். 

எங்கள் நேரமோ என்னவோ. அமெரிக்கர்கள் மொத்தமாக விடுமுறைக் கொண்டாட்டங்களுக்கு (கிறிஸ்மஸ் நெருங்குகிறது இல்லையா) கிளம்பிவிட்டார்கள் போலும். எங்களைப் போல சிக்கிக் கொண்ட ஓரிரு அமெரிக்கர்கள் அவர்களுடைய நள்ளிரவில் ஓடாய்த் தேய்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் கட்டளைகளைப் பிறப்பித்தால் அதைச் செயல்படுத்த நெடுநேரம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி பிரச்சினையுடனும் அமெரிக்கர்களுடனும் போராடி ஒருவழியாய் பிரச்னையை முடித்து அப்படா என்று நிமிரும் போது மணி ஆறு. ஒவ்வொரு பிரச்சனைகளை முடித்து தலைநிமிரும் போதும் இஸ்ரோவில் ராக்கெட் ஏவிய திருப்தி கிடைக்கும் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். காரணம் நாங்கள் பணிபுரிவது production support-ல். இந்நேரத்தில் சரவணாவும் டெஸ்கிற்கு வந்திருந்தான்.  


சரி வாங்க பிரபு பேமிலி டே எப்படி இருக்குன்னு பார்க்க போவோம் என்றபடி நான் பிரபு சரவணா மூவரும் கிளம்பி வெளியில் வந்தால் பேமிலி டே நடந்ததற்கான தடயங்கள் மொத்தமும் சுத்தமாக அழிக்கப்பட்டு வழக்கமான மயான அமைதி. எஞ்சி ஆங்காங்கு நின்று கொண்டிருந்த மக்களை செக்யுரிட்டிகள் விரட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கொண்டாட்டம் எங்கள் பார்வையில் பட்டு மனதில் பதியாமலேயே கடந்துவிட்டது. ஒரு திருவிழா நடந்தால் ஆங்காங்கு குப்பையாகக் கிடக்கும். அது கூட இல்லை. இது புயலுக்குப் பின்னான அமைதி இல்லை. புயலே இல்லாத அமைதி. மீண்டும் கண்ணாடிக்குள் நுழைந்தோம். மீண்டும் வேறு புதிய பிரச்சனைகள். முடித்துவிட்டுக் கிளம்பும் போது மணி நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடையிலான மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சில நாய்களைத் தவிர யாருமற்ற எங்களுக்கான பழைய மகாபலிபுரம் சாலையில் வண்டி உருளத் தொடங்கியது. என்ன செய்வது நாளையும் மற்றுமொரு நாளே. 

11 comments:

  1. கலர் கலரான நிறைய கலர்களும் இருந்துமா சப்பென்று ஆகி விட்டது....? ஹா... ஹா...

    ReplyDelete
  2. கலகலப்பான பதிவு. முடிவு மட்டும் ஏனோ அலுப்பு தட்டியதைப் போல?

    ReplyDelete
  3. அடடா... உங்க கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே. இந்த வருஷமும் வட போச்சா.....?

    ReplyDelete
  4. வீட்டிலேயே கொண்டாட்டங்கள் நடந்தாலும் நாம் பொறுப்பில் மாட்டிக்கொண்டால் என் ஜாய் பண்ண முடியாது! அப்படித்தான் போல உங்கள் நிலையும்!

    ReplyDelete
  5. ம்.... சில சமயங்களில் “இருக்கு ஆனா இல்லை” கதை தான்!

    ReplyDelete
  6. அடப் பாவமே! இதுவரைப் பார்க்காமல் இது முதல் தடவையாகச் சென்றும்...கண்ணாடிக்கூண்டுக்குள் மாட்டிக் கொண்டது....சட்டியில் இருந்தது அகப்பையில் கிடைக்காமல் போச்சே போல இருக்கு....வெளியில் கொண்டாட்டம்....உள்ளுக்கும் உங்களுக்குத் திண்டாட்டம்....

    ReplyDelete
  7. இஸ்ரோவில் ராக்கெட் விட்ட திருப்தி இந்த ஆண்டுக்கு போதும் அடுத்த குடும்ப தினத்தை அனுபவிக்கலாம் ...
    சரி சரி புயலே இல்லாத அமைதி என்றீரே உணர முடித்தது...
    சிறு சேரியில் ஒரு காஸ்மோ கொண்டாட்டம் ..

    ReplyDelete
  8. வேட்பாளரே
    தம ஐந்து

    ReplyDelete
  9. ஆகா
    புயலே இல்லாத அமைதியா

    ReplyDelete