எனக்குத் தெரியும் நான் இங்கு எழுதும் எதையுமே படிக்காமல் நேராக உங்கள் கண்கள் பரிசுப்பட்டியலைத் தான் தேடி ஓடும்என்று... இருந்தாலும் எழுதுவது என்று முடிவெடுத்த பின் சொல்ல வந்ததை எழுதுவதற்கு தயக்கம்ஏன்...
நன்றிகள் :
காதல் கடிதம் பரிசுப் போட்டியில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றிகள். இந்தப் போட்டியின் மூலம் பலருக்கும் பல பதிவர்களது அறிமுகம் கிடைத்துள்ளது என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
புரட்சி F.M நடத்தி வரும் நிரூபன் அவர்கள் தனது பண்பலையில் நமது கடிதப் போட்டியில் இடம்பெற்ற கடிதங்களை தனது நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் தனது நிகழ்ச்சியில் பங்குகொண்ட கடிதங்களின் ஒலி வடிவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுவும் நமக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம். மேலும் தானாக முன்வந்து பதிவர்களின் படைப்புக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கும் நிருபன் அவர்களுக்கும் அவர் நடத்தும் புரட்சி F.M -மிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
காதல் கடிதம் பரிசுப் போட்டி குறித்த விளம்பரத்தை பகிர்ந்த மற்றும் தங்கள் தளங்களில் பதிவு செய்த அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் தளங்களில் பதிவு செய்த விளம்பரம் மூலம் இந்தப் போட்டியில் பங்கு கொண்டவர்கள் ஏராளம். அதனால் நீங்கள் செய்த உதவி அளப்பரியது. மிக்க நன்றி.
காதல் கடிதம் விளம்பரதிற்கான படக்கலவை மற்றும் பரிசுக்கான போஸ்டர் செய்து கொடுத்த நண்பர் மற்றும் சாவி குறும்பட கதாநாயகன் சுரேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நடுவர்கள் :
இவர்கள் இல்லை என்றால் இந்தப் போட்டி எந்தத் திசையில் எந்தப் பாதையில் பயணித்து இருக்கும் என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
போட்டிக்கான விதிமுறைகள் நிர்ணயிப்பதில் ஆரம்பித்து சிறந்த கடிதங்கள் தேர்ந்தெடுப்பது வரை கூடவே பயணித்து போட்டியை வழிநடத்தியவர்கள் இவர்கள். இவர்களின் அனுபவங்கள் மூலம் நான் கற்றுக்கொண்ட அனுபவங்கள் ஏராளம்.
பூகோளரீதியாக நால்வரும் வேறுவேறு இடங்களில் இருந்தாலும், கடிதங்களை நால்வருமே தனித்தனியாக திறனாய்வு செய்தாலும் நால்வரின் மதிப்பெண்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியானதாக இருக்கும், தங்கள் விவாதங்களிலும் அதையே பகிர்ந்து கொண்டிருப்பதை எண்ணி வியந்துள்ளேன்.
நால்வரும் வேறு வேறு இடங்களில் இருந்து வடம் பிடித்தாலும் தேரை இழுத்த திசை என்னவோ தேர் பயணிக்க வேண்டிய திசையில் தான்.
தங்கள் கடுமையான பணிச்சுமை, பயணச்சுமைகளுக்கு மத்தியிலும் சிறப்பாக நடுவர் பணியாற்றிய வாத்தியார் பாலகணேஷ் மூன்றாம்சுழி அப்பா சார், எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் மற்றும் ரஞ்சனி அம்மா இவர்களுக்கெல்லாம் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. நன்றி நன்றி நன்றி...!
பரிசுத் தொகை :
சமீபத்தில் சாருநிவேதிதா விமர்சகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியின் முதல் பரிசுத் தொகை ரூபாய் 13,000/- காதல் கடிதம் பரிசுப் போட்டியின் முதல் பரிசுத் தொகை 500/- :-) . ஏணி இல்லை ஏரோபிளேன் வைத்தாலும் எட்டாது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து நடத்துவதால் இது சாத்தியமாயிற்று, நானும் பதிவுலக நண்பர்களுடன் இணைந்து நடத்துவது குறித்து கேட்டிருக்கலாம், ஆனால் பணம் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் கேட்பதற்கு ஒரு சிறிய தயக்கம்.
இது முதல் முயற்சி தானே அதனால் முயன்று பாப்போம் என்ற நம்பிக்கையில் களம் இறங்கினேன், இத்தனை பெரிய வெற்றி கிடைத்திருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் இன்னும் பல முன்னேற்பாடுகளோடு களமிறங்கி இருக்கலாம். இருந்தும் பரிசுத்தொகையில் தங்கள் பங்களிப்பை பகிர்ந்து கொள்ள சில நண்பர்கள் விரும்பியதால் பரிசுகளின் எண்ணிக்கை அதிகபடுத்தப்பட்டுள்ளது. தங்கள் பெயர் வெளியிடவேண்டாம் என்று கண்டிப்பாக கேட்டுக் கொண்டதால் மட்டுமே அவர்கள் பெயர்கள் வெளியிடவில்லை. அவர்களுக்கும் எனது நன்றிகள்.
முதல் மூன்று பரிசுகள் மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகள் என்றளவில் தான் முதலில் திட்டமிட்டிருந்தோம். ஒரு கட்டத்தில் பல கடிதங்கள் சிறப்பாக அமையப்பெறவே எதை சேர்ப்பது எதை விடுப்பது என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பரிசுகளின் எண்ணிகையில் மேலும் மூன்று அதிகரித்துள்ளது என்பது சந்தோசமான விஷயம்.
பரிசு:
பரிசை பணமாகக் கொடுப்பதைவிட புத்தகமாக கொடுக்கலாம் என்று நினைத்துள்ளோம். இது குறித்து டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனிடம் பேசியபொழுது பரிசுக்கூப்பன்களாக கொடுக்கலாம், வெற்றி பெற்றவர்கள் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிக் கொள்ளட்டும் என்று கூறினார். இது சிறப்பான வழி, ஆனால் சென்னையில் இருப்பவர்களால் மட்டுமே டிஸ்கவரி சென்று புத்தகம் வாங்க சாத்தியப்படும் என்பதால், சென்னையைத் தவிர பிற பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள் தங்களது வீட்டு முகவரியையும், பரிசுத்தொகைக்குள் அடங்கும் புத்தக பெயரையும் குறிப்பிட்டால் அவர்களுக்கு கொரியர் மூலமாக புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
செப்டம்பர் 1 அன்று நடைபெறும் பதிவர் சந்திப்பு மண்டபத்திலும் டிஸ்கவரி புக்பேலசின் விற்பனை நிலையம் இருக்கும், பதிவர் சந்திப்பிற்கு வரும்பொழுது கூட தங்கள் பரிசுக் கூப்பனை உபயோகப்படுத்தி புத்தகம் வாங்கிக் கொள்ளலாம்.
காதல் கடிதம் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் :
திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்..
எனக்குச்
சொர்க்கம் என்பதே
நம் திருமணத்தில் தான்
நிச்சயிக்கப்படுகிறது!
"என்னை தொட்டு விடுவாயோ
என தூரம் செல்ல கட்டளையிடுகிறது மூளை
என்னை தொடமாட்டாயா ?
என நெருங்கி வருகிறது மனம்"
இரண்டிற்கு மத்தியில் நான்
"யார் பேச்சை நான் கேட்பது
கடைசியில் பட்டிமன்ற நடுவரை போல நான்
இருதரப்பையும் ஏற்றுக்கொண்டேன்"
நான் வண்ணத்திரையின் நடுப்பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கின்றேன்,
நீயோ வண்ணதாசனை (சு)வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நான் சத்தம் போட்டு பேசுவது எனக்கே கேட்கவில்லை ,
நீ ரகசியம் பேசுவது ஊருக்கே கேட்கிறது .
நான் அடங்கிக்கொண்டிருகின்றேன் ,
நீ வெடித்துக்கொண்டிருக்கின்றாய் .
நான் பேசாத வார்த்தைகள் தான் அழகென்கின்றேன் ,
நீயோ பேசும் வார்த்தைகள் தான் அழகென்கின்றாய் .
இப்படி அனைத்திலுமே நீயும் நானும் முரண்பட்டுத்தான் இருக்கின்றோம் ,
அதனாலென்ன ...? அனைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!
காதல் தானே பண்ணப்போகின்றோம் ...!
காதலில் முரண் தானே அழகு ...!
மற்றும்
காலையில் எழும் போது, நீ எனக்கு நெற்றியில் முத்தம் வைத்து எழுப்புவதாய்த் தொடங்கும் என் கற்பனை, மதியம் நாம் ஒன்றாகச் சாப்பிடுவதாய் நீண்டு, மாலை நீயும் நானும் ஒன்றாய் கை கோர்த்து நடப்பதாக விரிந்து, இரவு நீ என் வயிற்றின் அருகே வந்து, மெதுவாய்க் கை வைத்து, முத்தமிட்டு, ராகுலுக்குக் கதை சொல்வதாய் முடிகிறது! பிறகு பெரும்பாலான நேரம், ராகுலுக்கு உன்னைப் பற்றி, ரானுவத்தைப் பற்றிக் கதை சொல்லியே செலவாகிறது. ஒவ்வொரு நாள் முடியும் போதும், ஒரு ஆனந்தம், உன்னைக் காணப் போகும் நாள் நெருங்குவதால்!
ஆறுதல் பரிசு
அப்புறம் உன்மேல எனக்கு ஒரு இதுன்னு என்கூட சுத்திகினி இருப்பானுங்களே அந்த பசங்களுக்கு தெரிஞ்சிபோச்சா!..என்னாடா உன் ஆளு சரோஜானு பழய பேர் வச்சுக்குனு கீதுன்னு கடுப்பேத்துனானுங்க! எனக்கு வந்துச்சே கோவம். கழுத்தாமுட்லயே ஒன்னு உட்டு, "சரோஜாலதான் ரோஜா இருக்குடா பேமானிங்களா" ன்னு கத்துனனா? பசங்க மெர்சல் ஆயிட்டானுங்க.
நீ சாலையில் வருவதற்கு முன் உன் நிற ஆடையைக் கண்டு என் நிற ஆடையாக மாற்றிக்கொள்ளும் மறைமுக காதலை விரும்புகிறேன்
ஒவ்வொரு அழைப்பிலும் உன் குரல் கேட்காதா என ஏங்கும் தவிப்பை தேடுகிறேன்
கடைதனிலே குவிந்திருக்கும் பூக்களை கண்டால் உனக்காக தவமிருப்பதாக கற்பனை செய்கிறேன்
என் விழிகள் பொய் சொல்லாது. அது வெளிப்படுத்தும் காதலை நான் மறைத்துவிட முடியாது. என்னால் உனக்கு நட்பாக வரமுடியாது. என் காதல் கருவாய் இருந்திருந்தால் கலைக்கப்படும் வலி குறைவாக இருக்கும். என்னுள் கருவாகி உருவான காதல் இப்போது வாலிபத்தில் நிற்கிறது. நான் கல்லறைக்குள் போனால் ஒழிய அதனால் இறந்துவிட முடியாது. நானும் என் காதலும் வேறு வேறா?.
நாட்களுக்கு மௌனத்தோடு
மல்யுத்தம் செய்யப்போகிறாய் ?
காதலை சொல்ல
நீ தவிப்பதையும்
பார்க்க மறுத்த பயம் ...
பார்க்க வைத்த தைரியம் ...
இரண்டுக்கும் நடுவில் இருந்த
காதல் தான் நீ!!
மொத்த காதலும் நிறைகிறது
முதல் முத்தத்தில் ....
உனது ஒவ்வொரு முத்தமும்
எனக்கு
முதல் முத்தமே !!
பரிசு பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. போட்டியில் உடன் பயணித்த அத்தனை சக பயணிகளுக்கும் நிறைவான நன்றிகள். வேறொரு தளத்தில் வேறொரு களத்தில் சந்திப்போம்...
என்றும் நட்புடன்
சீனு