"கூத்துப்பட்டறைல நாடகம் நடத்துறாங்க வாரியா சீனு" என்றான் முத்து. எனக்கும் வெகு நாட்களாக நாடகம் பார்க்க வேண்டும் என்று தீரா ஆர்வம் உண்டு, அவன் அழைத்ததும் வருகிறேன் என்று சொல்லிவிடலாம் ஆனாலும் மேடவாக்கம் டூ விருகம்பாக்கம் தூரம் இடம் கொடவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவ்வளவு தூரம் பயணித்து, ஒருவேளை நாடகம் மொக்கையாக இருந்துவிட்டால் அந்த இழப்பை என் மனம் எப்படித் தாங்கிக் கொள்ளும். பலவாறான சிந்தனை இருந்த போதிலும் கூத்துப்பட்டறையின் மீது பாரத்தை போட்டு கிளம்பிவிட்டேன்.
விருகம்பாக்கத்தில் இருக்கும் கூத்துப்பட்டறை அலுவலகத்தை கண்டுபிடித்துத் தர கூகிள் மாப் கூட சற்று குழம்பும் என்று நினைக்கிறன். கண்டுபிடிப்பதற்குள் பல சென்னைவாசிகளை திட்ட அல்லது அவர்களிடம் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது. அது ஏன் என்று தெரியவில்லை பல சமயம் வழி கேட்கும் போதெல்லாம் 'ஏதோ அவர்களது சொத்தையே எழுதி கேட்பது போல் முறைக்கிறார்கள், இல்லை முகம் பார்த்து பேச மறுக்கிறார்கள்". வழி சொல்லத் தெரியவில்லை என்பது வேறு விஷயம், தெரிந்தும் உதவும் மனநிலை இல்லை என்பது மோசமான விஷயம். சென்னை தன்னிடமிருந்து மாற்றிக் கொள்ள வேண்டிய அடையாளங்களில் மிக முக்கியமான அடையாளம் இது தான்.
ஒருவழியாய் ஒரு வழியை கண்டுபிடித்து சேருமிடம் அடைந்துவிட்டோம். கூத்துப்பட்டறையின் பயிற்சிப் பட்டறையிலேயே நாடக ஏற்பாடுகளை செய்திருந்தனர். பயிற்சிப் பட்டறை என்பதால் இருபது பேர் அமர வேண்டிய இடத்தில் நாற்பது பேர் அமர்ந்து இருந்திருந்தனர். எங்களுக்கு அங்கும் இடம் கிடைக்கவில்லை. மேலே லாப்டில் (பாக்ஸ்) அமர சொன்னார்கள். அங்கு அமர்ந்து நாடகத்தைப் பார்த்ததும் வித்தியாசமான ஒரு அனுபவம் தான். எழுத்தாளர் சி.சு செல்லப்பா அவர்களது நூற்றாண்டு விழாவாக அவர் எழுதிய முறைப்பெண் என்னும் நாடகத்தை கடந்த பத்து நாட்களாக அரங்கேற்றியிருகின்றனர், நாங்கள் சென்றது பத்தாவது நாள். பயிற்சிப் பட்டறையியில் சாதாரணமான மேடை வடிவமைப்பு என்றாலும் ரசிக்கும்படி இருந்தது. காட்சிகளுக்கு அவர்கள் வழங்கிய ஒளி அமைப்பு ரம்யம்.
சி.சு செல்லப்பா அவர்களைப் பற்றிய அறிமுக உரையில் இருந்து நாடகம் தொடங்கியது. ஐந்து காட்சிகளைக் கொண்ட நாடகம். அங்கம்மாவின் மகள் அழகு (பெயர் தான் அழகு), அவளை பஞ்சாயத்து தலைவர் மகனுக்கு கட்டிக் கொடுப்பதாக அங்கம்மா வாக்கு கொடுக்க, அங்கம்மாவின் அண்ணன் தன்னுடைய முறைபெண்ணை தனக்குத் தான் கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பிரச்சனை செய்கிறார். இது தான் நாடகத்தின் கரு. இதை நாடகமாய் வெளிபடுத்திய விதம் வெறும் வார்த்தைகளுக்காக சொல்லவில்லை உண்மையிலேயே அருமை.
அங்கம்மாவின் அண்ணன் தனது முறைப்பெண்ணை தனது பையனுக்குத் தான் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சண்டையிடுகிறார், அப்படிக் கொடுக்கவில்லை என்றால் எதுவும் செய்யத்தயார் என்று மிரட்டிவிட்டு செல்கிறார், பகுடித்தேவர் அந்த கிராமத்திலேயே யாருக்கும் அடங்காதவர், கட்டுப்படாதவர், அவரின் முரட்டுக் குணத்தைக் கண்டு கிராமமே நடுங்குகிறது. இப்படிப்பட்டவருக்கு தங்கையாகப் பிறந்தவர் மட்டும் சளைத்தவரா என்ன, எவ்வளவு பெரிய இடர் வந்தாலும் சந்திக்கத் தயார் என்று தனது அண்ணனுக்கு சற்றும் அசராமல் சவால் விடுகிறார்.
பகுடித்தேவர் தனது குடும்பத்துப் பெரியவரான பாட்டையாவிற்கு மட்டும் கட்டுப்பட்டவர், அவர் முன்னெடுத்து பிரச்சனையை சமாதானமாய் பேசித் தீர்த்து வைப்பதாக அங்கம்மாவிடம் சொல்கிறார், இவ்வேளையில் அங்கம்மாவின் வயல் பற்றி எரிகிறது, ஆடு மாடு வயல் அனைத்தும் கருகி விட்டதாக தகவல் வருகிறது. பாட்டையா சம்பவ இடத்திற்கு விரைகிறார், தகவல் அறிந்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் சம்மந்தக்காரரான பாலுத்தேவர் அங்கம்மாவின் வீட்டுக்கு ஆறுதல்படுத்த வருகிறார். இருவரும் பகுடித்தேவர் தான் இதற்குக் காரணம் என்று முடிவு செய்து அவரை போலீசில் பிடித்துக் கொடுக்க முடிவு செய்கின்றனர்.
இந்த விஷயம் பாட்டையாவுக்கு தெரியவரும் பொழுது கலவரமடைகிறார், பகுடி அந்த அளவிற்கு கீழ்த்தரமானவன் இல்லை என்று பெரிதும் நம்புகிறார். மேலும் இதுவரை போலீஸ் காலடி படாதகிராமம், எதுவாயிருந்தாலும் பஞ்சாயத்தில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம், பஞ்சாயத்திற்கு பகுடித்தேவன் கட்டுபடுவான் என்று பாட்டையா அங்கம்மாவையும், பாலுவையும் சமாதானப்படுத்துகிறார்.
பகுடித்தேவர் தனது தங்கையை மிரட்டி இருக்கிறான், அவரது மகனோ பாலுத்தேவரின் மகனை மிரட்டி இருக்கிறான். அதனால் காட்சிகள் சாட்சிகள் அனைத்தும் பகுடித்தேவருக்கும், அவரது மகனுக்கும் எதிராக அமைகிறது. இதற்கிடையில் பாட்டையா பகுடித்தேவரையும், பகுடித்தேவர் தனது மகனையும் சந்தேகப் படுகிறார்கள். அனைவரையும் சமாதானம் செய்துவிட்டு, அடுத்த நாள் நடக்க இருக்கும் பஞ்சாயத்து பற்றி தெரிவித்து, பஞ்சாயத்திற்கு கத்தி அருவா எதுவும் கொண்டு வரக்கூடாது என்று அறிவுறுத்திவிட்டு அங்கு இருந்து கிளம்புகிறார் பாட்டையா.
பஞ்சாயத்து கூடுகிறது, அந்தக் காலங்களில் பஞ்சாயத்து எப்படி நடந்து இருக்கும், எப்படியெல்லாம் சாட்சிகளை விசாரித்து இருப்பார்கள், என்பதையெல்லாம் வெகு அழகாக நாடகப்படுத்தி இருக்கிறார்கள், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யும் முறை அருமை. யார் குற்றவாளி என்பதை வேண்டுமானால் சொல்கிறேன், எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதையெல்லாம் முறைபெண் நாடகம் படித்தோ பார்த்தோ தெரிந்து கொள்ளுங்கள்.
சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து, இறுதியாக பாட்டையா அளிக்கும் சாட்சி மூலம் பாலுத்தேவரின் மகன் தான் நடந்த அசம்பாவிதங்களுக்குக் காரணமானவன் என்று கண்டுபிடிக்கிறார்கள், பகுடித்தேவன் குடும்பத்தை ஊரைவிட்டு துரத்த வேண்டும் என்பதற்காகவே அவன் அப்படிச் செய்தான் என்பதும் தெரிய வருகிறது. இறுதியில் சுபம்.
முறைப்பெண் நாடகத்தில் என்னைக் கவர்ந்த சில விஷயங்கள்
சி.சு.செல்லப்பா மதுரைக்கு அருகில் வத்தலகுண்டுவில் பிறந்து வளர்ந்தவர். தன்னை சுற்றி இருந்த தேவர் சமுதாயத்து மக்களை கதாப்பாத்திரங்களாகவும், அவர்களின் பேச்சு வழக்கை வசனங்களாகவும் கொண்டு முறைப்பெண் நாடகத்தை எழுதி இருக்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்தவர்கள், ஆடை வடிவமைப்பிலும், வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழியிலும் நம்மை அந்த கிராமத்திற்கே கொண்டு சென்று விட்டனர்.
அங்கம்மாவின் அண்ணனாக வரும் பகுடித் தேவரின் நடிப்பு பிரமாதம். மிக மிக அற்புதமாக நடித்திருந்தார். உடல் மொழி என்னை வெகுவாய்க் கவர்ந்தது, அடுத்ததாக குடும்பத்துப் பெரியவராக வரும் பாட்டையா, வயதானவரின் உடல் மொழி கச்சிதம். அங்கம்மாவாக நடித்தவருக்கு மதுரை பாசை வெகு இயல்பாக வருகிறது.
அந்தக் காலத்தில் பெரியவர்களை எப்படியெல்லாம் மதித்தார்கள், அவர்கள் சொல்லுக்கு எப்படிக் கட்டுபட்டார்கள் என்பதையெல்லாம் அற்புதமாக நடித்துக் காட்டினார்கள்.
அந்தக் காலங்களில் மக்களின் பொழுதுபோக்கே நாடகங்கள் தான், இயல் இசையைத் தொடரும் நாடகத்தை நாம் இழந்து விட்டோம். எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் கூட தென்காசி கோவில் திருவிழாக்களில் நாடகம் பார்த்துள்ளேன், இன்றெல்லாம் அரிதாகிவிட்டது.
மன்னர் காலத்து நாடகங்கள், தெனாலிராமன் நாடகங்கள் என்று நம்முடன் உலவிய ஒரு கலை இன்று இல்லாமல் போய்விட்டது என்று நினைக்கும் பொழுது சற்றே வருத்தமாய் உள்ளது. இது போன்ற பல நல்ல நல்ல நூல்களை நாடகம் போட்டுக் காண்பிக்க வேண்டும், நமது நாடகத் திறமையை இன்னும் இன்னும் வளர்க்க வேண்டும். ஆனாலும் இணையத்தில் நாடக டிக்கெட் விலை தான் சற்றே பயமுறுத்துகிறது
இது போன்று நல்ல பல நாடகங்களை நடத்தும் கூத்துப் பட்டறை குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
நாடகம் முடிந்து வெளியே வரும் பொழுது, பகுடித்தேவரின் மகனாக நடித்த இளைஞனிடம் ஒரு இளைஞி " அது எப்டி பாஸ், கிராமத்தான் மாதிரியே பேசுனீங்க, செம க்யுட் யூ நோ"
நம்மாளு " அது ஒன்னும் இல்லீங்க, ஜட்ஜ்மெண்ட் அப்படின்னு சொன்னா இங்கிலீஷ், அதையே ஜட்ஜு மெண்ட்டு அப்டீன்னு சொன்னா அது தமிழ்"
இதைக் கேட்கும் பொழுது "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது" என்று சொன்னனே என் பாரதி அவனது சில வரிகள் தான் நினைவுக்கு வந்தன...
தமிழுக்கும் அமுதென்றுப் பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...
எங்கள் அன்னையர் நாடென்னும்
போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே..