புதுமையான வாய்ப்புகளை வழங்குவதில் சென்னைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை (இது தான் உண்மை நிலை என்பதால் மறுப்பதற்கு எதுவும் இல்லை). தற்போது மிகவும் பிரபலமாக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை குறும்படத் துறை. யார் வேண்டுமானாலும் இனி சினிமாக் கனவுகளுடன் பிறக்கலாம், கோடம்பாக்கத்தின் கதவைத் தட்டலாம் என்று நம்பிக்கைத் தர வைத்ததுறை. பிரபல நடிகரின், இயக்குனரின் மகன் என்ற விசிடிங் கார்டுகள் இனி செல்லுபடியாகாது. நினைத்த இடத்தில நினைத்த நேரத்தில் படம் பண்ணலாம். பிரபலம் என்றில்லை யாரை வேண்டுமானாலும் திரையில் காட்டலாம். இவர்கள் மனது வைத்தால் இன்னும் சில நாட்களில் பிரபலம் என்ற வார்த்தையைக் கூட பிரபலம் இல்லாமல் ஆக்கலாம் அல்லது யார் வேண்டுமானாலும் பிரபலம் ஆகலாம். இவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சவால் பட்ஜெட்.
இளம் இயக்குனர் இளனின் வார்த்தைகள் |
சொல்ல நினைப்பதை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சொல்ல வேண்டும் என்பதே இதில் விடப் பட்டிருக்கும் சவால். இந்தக் கலையில் தேறிவிட்டால் போதும் காதலையும் பிட்சாவையும் சொதப்பாமல் சொல்லிவிடலாம். சென்ற வருடம் சிறந்த சின்னத்திரை நிகழ்ச்சியாக விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சி நாளைய இயக்குனர்.கேப்டன் டிவி கூட குறும்படம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்கள், தற்பொழுது நடக்கிறதா என்று தெரியவில்லை. பதினைந்து நிமிடங்களில் எடுக்கப்படும் குறும்படங்கள் எந்த ஒரு மனிதனின் நேரத்தையும் வீணடிப்பதில்லை என்பதால் குறும்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது என்பதை யுட்யுப் மீது ஆணையிட்டுச் சொல்லலாம். ஒவ்வொரு படமும் குறைந்தது ஆயிரம் பக்கபார்வைகளைக் கடந்து ஓடிக் கொண்டிருகிறது.
வெட்டி வேலையில் நண்பன் மணிகுமார் |
யுட்யுப்! குறும்பட உலகின் வெள்ளித்திரை, கனவுகளை அரங்கேற்றும் இலவச மேடை எல்லாமே யுட்யுப் தான். தமிழ் குறும்படங்களுக்கு என்று பல சேனல்கள் உள்ளன. பலரும் பல படங்களை இங்கு பகிருகின்றனர். அந்தப் படத்தைப் பற்றி தங்களுக்குத் தோன்றும் கருத்துகளை பகிருகின்றனர். குறும்படங்களின் மேல் ஈர்ப்பு வந்த தருணங்களில் வாரத்திற்கு பத்து படங்களாவது பார்ப்பேன், தற்போது வரையறைக்கு உட்பட்ட இணைய சேவையைப் பெற்று வருதால் (லிமிட்டெட் இன்டர்நெட் பிளான்) அதிகமான குறும்படங்களை தரவிறக்கம் செய்ய முடியவில்லை. குறும்படங்களின் விமர்சனகளைப் பொருத்து தரவிறக்கம் செய்து பார்த்து வருகிறேன்.
அனந்தரா மற்றும் ஜூனியர் பிலிம் மேக்கர் பெஸ்டிவல் 2012:
எனது நண்பன் மணிகுமார் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு எடிட்டிங் செய்து உள்ளான், தற்பொழுது செய்தும் வருகிறான். அவன் வெட்டிய ஒரு படம் அனந்தரா மற்றும் ஜூனியர் பிலிம் மேக்கர் பெஸ்டிவல் 2012லில் பங்கு கொள்கிறது என்று என்னை அழைத்துச் சென்றான். ஸ்கை வாக்கில் இருக்கும் பி.வி.ஆர் சினிமாஸில் வைத்து நடைபெறுகிறது இந்த மூன்று நாள் திருவிழா. நான் சென்றது முதல் நாள் துவக்க விழா அன்று, சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் தரணி மற்றும் சித்ரா லக்ஷ்மணன் ( நமது பாஸ் மங்குஸ் ஹெட் தான், ஒழுங்கா சொல்லாட்ட புடிச்சு உள்ள போட்ட்ருவாயிங்க சார் ) உட்பட ஐந்து பேர் வந்திருந்தனர், மீத மூன்று பேர்களின் பெயர் அறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ( எங்கு சென்றாலும் ஒரு குறை : விழா நடத்துபவர்களும் விருந்தினர்களும் ஏன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகிறார்கள் என்று I can't understand why these people are behaving like this ha ha ha ).
காலை எட்டு மணிக்கு விழா தொடங்கியது. முதலில் தரணி பேசினார். குறும்படம் பற்றியும் அதன் மூலம் வெள்ளித் திரையில் தடம் பதித்த பாலாஜி (காதலில் சொதப்புவது எப்படி) கார்த்திக் சுப்புராஜ் (பிட்சா) பற்றியும் கூறிவிட்டு தத்துவம் ஒன்று சொன்னார். படம் பண்றதுக்கு ரூல்ஸ் எதுவும் கிடையாது ஆனால் ரூல்ஸ் தெரியமா ரூல்ஸ்ல மாட்டிட்டு முழிக்காதீங்க. ( பழமொழி சொன்ன ஆராயக் கூடாதுன்னு சொல்லுவாங்க சத்தியமா சொல்றேன் அந்த பழமொழி எனக்குப் புரியவே இல்ல, ஒருவேள படம் பண்றவங்களுக்குப் புரியும் போல).
--மணி பதினொன்ட்ரையத் தாண்டியும் குறும்படங்கள் தொடர்ந்தன, இருந்தும் சத்யமில் பிட்சா இரண்டாம் முறை அழைத்ததால் அங்கு சென்று விட்டேன்--
ஒன் மார்க் : நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் அப்பாவுக்கும், பிள்ளைக்கு செல்லம் கொடுக்கும் அம்மாவிற்கும் ஏற்படும் அவமானத்திற்கு இடையில் அவர்கள் மகனினுள் ஏற்படும் மற்றம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை சொன்ன விதம் அருமை.
அகடனம் கிளிக் டெலிட் : ( அகடனம் - இதன் அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்கள், என் தமிழ் மோசமாகி விட்டதோ என்று எண்ணி கூகுளிடம் மொழி பெயர்க்கச் சொன்னேன், நல்ல வேலை அதற்கும் தெரியவில்லை ), கையில் சிக்கும் ஒரு காமெர, யாரைப் படம் எடுக்கிறார்களோ அவர்கள் அந்த காமிராவின் உள் வந்து விடுவார்கள், டெலிட் செய்தால் மீண்டும் தொலைந்த இடத்திற்கே வந்து விடுவார்கள், இந்த காமிராவைக் கொண்டு நாட்டைத் திருந்தும் புதிய உத்தி(!). படம் எடுத்தது அனைத்துமே பதின்ம வயது சிறுவர்கள் போல் இருந்தார்கள், சரியாக தெரியவில்லை, அனால் இளையவர்களின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
பத்ம வியுகம் : அடிதடி ரவுடிகளுக்குள் நடைபெறும் மோதல், நடக்கும் கொலைகள் அனைத்தின் பின்னும் வேறு ஒரு வியுகம் பின் தொடர்கிறது. சிறந்த சிந்தனை, நல்ல கதை, இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம், இருந்தும் நல்ல முயற்சி, எனக்கு பிடித்திருந்தது.
புலப்பாடு : வாய் பேச முடியாத ஒருவனின் கதையைத் திருடி படம் எடுக்கிறார்கள், ரொம்பவே சிறிய படம், வித்தியாசமான முயற்சி.
ஜீவன் : லியோ டால்ஸ்டாய் எழுதிய கதையை பின்பற்றி என்று தொடர்கிறார்கள். மிகச் சாதரணமாக எடுக்கப்பட்ட படம், இருந்தும் சொன்ன கருத்துக்கள் ஆழம் மிக்கவை, அந்த மூன்று கருத்துக்கள்.
1. மனிதனிடம் கொடுக்கப்பட்டது : கருணை
2 மனிதனிடம் கொடுக்கப்படாதது: எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி
3. மனிதன் எதனால் வாழ்கிறான் : அன்பினால்
இந்தக் கருத்துகளை அவர்கள் சொல்ல தேர்ந்தெடுத்த விதம் கவிதை.
ஒரு கோப்பை தேநீர் : ஒரு பெண் கைதிக்கும் பெண் காவலருக்குமான வாழ்கையை ஒரு சில நிமிடங்களில் படமாகியிருக்கும் விதம் அற்புதம். பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும், பின்பு தன அறிந்து கொண்டேன் இப்படத்தின் வசனம் எஸ்.ரா என்று...
லௌட் ட்ருத் : இது தமிழ் படமா, மலையாளப் படமா என்று சந்தேகமாக உள்ளது, ஹீரோவைத் தவிர அனைவரும் தமிழ் பேசுகிறார்கள், படத்தில் தமிழ் பேசியவர்கள் தவிர படத்திற்கு உழைத்தவர்கள் அனைவருமே மலையாளிகள். அதனால் இதனை மலையாள குறும் படம் என்றே சொல்லாம். மூட நம்பிக்கையால் குழந்தையைப் பலி கொடுக்கும் கூட்டத்தை வெளி உலகுக்கு கொண்டு வந்த ஒரு பத்திரிக்கையாளனின் உண்மைக் கதை. எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. மிகத் தெளிவான ஒளிப்பதிவு, காட்சிகளில் பணம் விளையாடி உள்ளது, நல்ல குறும் படத்திற்காக மெனக்கெட்டு இருப்பதால் பணம் செலவானது குறித்து கவலைப் பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன். எனக்கு மிகவும் பிடித்த படம்.
மல்லிப்பூ : பாலு மகேந்த்ராவின் சினிமாப் பட்டறையைச் சேர்ந்தவர்கள் எடுத்த குறும்படம். கஷ்டப் படும் விதவைத் தாய் பிறந்த நாள் டிரஸ் கேட்க்கும் மகனுக்கு இடையில் நடக்கும் பாசப் போராட்டம் கதை. எதார்த்தமாக சொன்ன விதம் அருமை. ஏழ்மை பாசத்தின் வலியை கண்முன் காட்டி இருக்கிறார் இயக்குனர்.
தமில் : 1950' இல் காரைக்குடியில் நடப்பது போன்ற கதை, ஒரு வேலைக்காரச் சிறுமிக்கும் வீட்டு எசமானிக்கும் இடையில் நடக்கும் காட்சி நகர்வுகள் சொல்லிய விதம், அருமை.
அன்புடன் ஜீவா : எனது நண்பன் மணிகுமார் வெட்டி ஒட்டிய குறும்படம், மிக நேர்த்தியான ஒளிபதிவு, கவிதையை மட்டுமே வசனமாகக் கொண்ட குறும்படம். பிட்சா படத்தில் இரண்டாவது பேயாக நடித்த பாபி தான் இப்படத்தின் ஹீரோ. இப்படத்திற்கு வசனம் எழுதிய இயக்குனர் இன்னும் கல்லூரி தான் படித்துக் கொண்டுள்ளார் என்று சொன்னால் நம்புவது கடினமே, இருந்தாலும் நேரில் பார்த்தால் நம்பினேன். மேலும் இந்தப் படத்தின் இசை ஜஸ்டின் (நாளைய இயகுனரில் இருமுறை விருது பெற்றுள்ளார். இவர் என் நண்பன் ஆண்டோவின் அறைத்தோழன் என்பதால் நண்பனின் நண்பன். கவிதையால் நகரும் காட்சிகள் தான் என்றாலும் காதலை விரும்பும் அனைவருக்கும் பிடிக்கும் படியான படம். அதில் எனக்குப் பிடித்த ஒரு வசனம் (அ) கவிதை
என்னை அடித்த கை வலித்ததா... என்ன ?
நீ அழுது ...
என் கண்களையும் அழ வைத்தாய்...
என் நண்பனின் பெயரை பெரிய திரையில் பார்த்த சந்தோசம், இனி எப்போதும் அவன் பெயரை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது தான் இப்பதிவு.வருமானம் இல்லாத துறை, ஆனால் அதனை நம்பியும் கால் பதித்த நண்பர்கள் அதில் இருப்பதால் எனக்கும் அதில் ஆர்வம் அதிகம், அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாக அன்புடன் ஜீவா டீமின் அடுத்த படம் விசித்திரம் பற்றி ஒரு பதிவு எழுத விருப்பம், அந்த டீம் ஒத்துழைத்தால் விரைவில் வி-சித்திரம் பற்றிய பதிவை எதிர்பார்க்கலாம்.
விளம்பரம் :
குறும்படங்களைப் பற்றிய பதிவானதால் விளம்பரமும் குறும்படம் சார்ந்தே அமையும் என்று நான் நினைக்கவில்லை. உணவு சார்ந்த விழிப்புணர்வைத் தரும் டாக்குமெண்டரி படம் பற்றி ஹாலிவுட் ரசிகன் எழுதிய பதிவு, அவசியம் படியுங்கள், நிச்சயமாக ஒரு விழிப்புணர்வு பதிவு.
பதிவு பற்றிய விமர்சனம் பகிர்ந்து செல்லுங்களேன்.
பெரும்பாலான படங்களின் சுட்டி கிடைக்கவில்லை, உங்களிடம் இருந்தால் கமன்ட்டிவிட்டு செல்லுங்கள் :-)