Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts

11 Apr 2013

நாடோடி எக்ஸ்பிரஸ் - நாகல்லபுரம் - பைக்லு ஆந்த்ராலு ஒக ட்ரவலு


எங்கும் பச்சை போர்வை போர்த்தியது போன்ற மலை. அடர்ந்த காடுகள். மிக உயரமான இடத்தில் இருந்து விழும் அருவி, சிலுசிலுவென நில்லாது வீசிக் கொண்டிருக்கும் தென்றல். தெளிந்த நீரோடை. பறவைகளின் ஆனந்தக் களியாட்டங்கள்.

ஆந்திராவில் நாகல்லபுரம் என்ற இடத்தில் உள்ள மலையை நோக்கி பயணிக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன், அந்த மலையைப் பற்றிய எனது எதிர்பார்ப்பு மற்றும் கற்பனை  இப்படித்தான் இருந்தது. குற்றாலம் மலையடிவாரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு மலையும் மலை சார்ந்த இடங்களைப் பற்றிய கற்பனையும் இப்படியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது சரித்திரப் பிழை அல்லவே.



"நம்ம ப்ராஜெக்ட்ல இருந்து ஒரு சின்ன(!) ரோட் ட்ரிப் பிளான் பண்ணிருக்காங்க, இங்க இருந்து ஆந்திரா வரைக்கும் பைக்லையே போயிட்டு வர்ர மாதிரி பிளான். இன்னும் உங்க எல்லாரையும் சேத்துக்கது பத்தி முடிவுபன்னல, ஒருவேள உன்ன கூப்டா வருவியா" பயணத்தைப் பற்றிய விஷயத்தை இப்படித் தான் ஆரம்பித்தார் எனது டி.எல் கார்த்திக்.         

நாம் தான் நாடோடி ஆயிற்றே, "நிச்சயமா வாறேன் கார்த்திக், ஆனா கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி ஏமாத்திரக் கூடாது" எங்கே கழட்டி விட்டு விடுவாரோ என்ற எண்ணத்தில் நம்பிக்கையில்லாமல் சொன்னேன். நான் இப்படி சொன்னதன் முதல் காரணம், நெடுந்தூரப் பயணத்தின் மீது இருக்கும் காதல், அடுத்தது பயண  தூரம் மொத்தத்தையும் பைக்கிலேயே கடக்க வேண்டும். இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் யாரால் தான் மறுக்க முடியும். 

பயணத் திட்டத்தை எங்கள் ப்ரொஜெக்டில் இருக்கும் இரண்டு 'அருண்'களும் தயாரிக்க, பதினைந்து பேர் கொண்ட பயணக் குழு பயணத்தைப் அனுபவிக்க தயாராகியது. கேளம்பாக்கத்தில் இருந்து தொடங்கும் பயணக் குழுவுடன், சோளிங்கநல்லூரில் சிலரும், தாம்பரம் கேம்ப்ரோடில் மற்றவர்களும் இணைந்து கொள்வது என்று முடிவானது. முதல் உதவி உபகரணங்கள் உட்பட,பயணத்திற்கு தேவையான பொருட்களும் பட்டியலிடப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டும் அனைவருக்கும் தேவையான மதிய உணவு எடுத்துவரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.  

சனிக்கிழமை அதிகாலை 5 மணி, கேம்ப்ரோடில் இருந்து பத்து பைக்குகளுடன் எங்கள் பயணமும் தொடங்கியது. கிட்டத்தட்ட 125 + 125 கி.மீ பயணிக்கப் போவதால், பாதுகாப்பு மிக முக்கியம்.பயணத்தின் பொழுது எங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், 

1. பயணக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் மட்டுமே முதலில் செல்ல வேண்டும். அந்த இருவரையும் யாரும் முந்திச் செல்லக் கூடாது.  

2. 60.கி.மீ வேகத்திற்கு மேல் செல்லகூடாது. 



சென்னை தூங்கி வழிந்து கொண்டிருந்த சனிக்கிழமை அதிகாலை.  தாம்பரத்தில் இருந்து புழல் வழியாக கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை அடையும் சென்னை பைபாஸ் ரோடில் வாகனப் போக்குவரத்து அதிகரிதிருக்கவில்லை. ரெட்ஹில்ஸை தொட்டிருந்த பொழுது மெதுவாக சூரியனும் எங்களைத் தொட ஆரம்பித்திருந்தான். ரெட்ஹில்ஸில் இருந்து திருப்பதி நெடுஞ்சாலையில் பெரியபாளையம், ஊத்துக்கோட்டையைக் கடந்தால் ஒன்றாவது கி.மீ ஆந்திராவும், 14வது கி.மீ நாகல்லபுரமும் நம்மை வரவேற்க தயாராகக் காத்திருக்கும். 

ஊத்துக்கோட்டையில் சதீஷ் மெஸ் என்னும் அந்த ஊரின் உயர்ரக நட்சத்திர ஹோட்டலில் காலை டிபன். பொங்கல் பூரி வடகறி எல்லாமே அருமை (முக்கியமான விஷயம் எல்லாருமே கொலப் பசியில் இருந்தோம் ), இருந்தாலும் 'ராசா'க்கள் மலையேறப் போவதால் அதிகம் சாப்பிடவில்லை ஒரு சிலரைத் தவிர. 

எட்டரை மணிக்கு நாகல்லபுரத்தை அடைந்திருந்த பொழுது நாகல்லபுரத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் தமிழகப் பேருந்து எங்களைக் கடந்து கொண்டிருந்தது. மிகவும் சிறிய ஊர். பெரியவர் ஒருவர் ஏர் பூட்டிய காளைகளைக் கொண்டு வயலை உழுது கொண்டிருந்தார். பொக்கை வாய் பாட்டி வாய் நிறைய சாம்பலை வைத்திருந்தாள். வயல் வழியே கண்ணுக்கெட்டிய தொலைவில் மலை தெரிந்தாலும் செல்லும் வழி தெரியவில்லை. 

சேட்டிலைட், ஜி.பி.எஸ், ஆண்ட்ராயிட் என்று எவ்வளவோ வந்துவிட்டாலும் "அந்தா அப்பிடிகூடி போயி, வலது பக்கம் திரும்பி, இடது பக்கம் பார்த்துட்டே போனா ஒரு வாட்டர் டான்க் வரும், அதுல திரும்பி நேரா போனா மல தான்" என்று வழி சொல்லும் ஊர்ப் பெரியவரின் துணை இல்லமால் இந்தியாவில் ஒரு அடி நகர்ந்து விட முடியாது என்பது மட்டுமே உண்மை.   

இந்த ஊரில் அனைவருக்குமே தமிழ் தெரிகிறது. தெலுங்கில் கஷ்டப்பட்டு வழிகேட்டாலும், நம்மை அடையாளம் கண்டுகொண்டு எளிய தமிழில் பதில் கூறுகிறார்கள். விஜய் நற்பணி மன்றம் கூட இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  

தார் சாலையில் இருந்து நழுவி மண்சாலையில் வண்டி உருளத் தொடங்கிய பொழுது தான் வித்தியாசமான அந்த பயணத்தின் முதல் நொடி ஆரம்பமாகியது. சிறிது தூரம் கடந்ததும் இரண்டு மூன்று கி.மீ க்கு கரடுமுரடான கற்கள் நிறைந்த, வழித்தடமே இல்லதா பாதை வழியே வண்டியை செலுத்த வேண்டும். மேடு பள்ளம், கரடு முரடு என்று இதுவரை நம் வண்டி பழக்கப்படாத அத்தனை இன்னல்களையும் அந்த சில கி.மீக்களில் அனுபவிக்கும். நல்ல வேளையாக யாருடைய பைக்கும் பஞ்சராக வில்லை. அப்படி யாருடைய வண்டியாவது பஞ்சர் ஆகியிருந்தால் எங்கள் நிலைமை ? தான்.  

இது போன்ற சாலையில் பைக்  ஓட்டினால் 'வண்டி வம்பாப் போயிரும்'ன்னு பயபடுபவர்கள் எங்காவது ஓரிடத்தில் நிழல் கண்டுபிடித்து நிறுருத்திவிட்டுச் செல்லலாம், ஏனென்றால் கடைசி ஒரு கி.மீ நாங்கள் அப்படித் தான் சென்றோம். நாங்கள் நடக்க ஆரம்பித்த இடத்தில் இருந்து மிருதுவான பட்டு போன்ற பாதை தொடங்க வேண்டும் என்பது யார் விட்ட சாபம் என்று தெரியவில்லை.   


வண்டியை ஓரிடத்தில் விட்டுவிட்டு நடக்கத் தொடங்கிய பொழுது வெயில் மண்டையைப் பிளக்கத் தொடங்கியிருந்தது. நன்றாக நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள், நாம் பயணித்துக் கொண்டிருப்பது பாலையும் பாலை சார்ந்த இடமும் இல்லை. மலையும் மலை சார்ந்ததும் என நம்பப்படும் நாகல்லபுரம்.    

முதலில் ஒரு சிறு ஓடையைக் கடந்து, தென்பட்ட ஒற்றையடிப் பாதை வழியே நடந்து சென்றதும் நாங்கள் அடைந்த இடம், இருபது அடி உயரத்தில் இருந்து விழும் ஒரு அருவியும், இருபது பேர் நின்று குளிக்க இடம் இருக்கும் அருவி சார்ந்த குட்டையும். அதில் ஒரு ஐவர் குழு ஆனந்த நீராடிக் கொண்டிருந்தனர். விசாரித்ததில் கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு வார இறுதியிலும் இங்கு வந்து ஜலக்ரீடை நிகழ்த்திச் செல்வதாக கூறினர். அக்குழுவில் மூவர் அருகில் இருந்த இருபது அடி பாறையில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.   



இவ்வளவு தூரம் பயணித்து வந்து இத்தனை சிறிய அருவியில் குளித்துவிட்டு திரும்பிச் செல்வதா "நோ, நெவர்". இந்த மலைப் பிரதேசத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும் இரண்டு அருவிகள் இருப்பதாக நம்மை போன்ற ஏதோ ஒரு நல்ல உள்ளம் இணையத்தில் குறிப்பெழுதி வைத்திருந்ததால், அந்த அருவியைத் தேடி பயணிக்கத் தொடங்கினோம்.

அதற்கு முன் அங்கு குளித்துக் கொண்டிருந்த வானர நண்பர்களிடம் எப்படிச் செல்வது என்று வழிகேட்டோம். ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதே ஒரு குழு அவர்கள் நின்று கொண்டிருந்த அந்த அபாயகரமான பாறை வழியாக ஏறி, சில பல பாறைகளைக் கடந்தால்  மற்ற அருவிகளுக்குச் செல்ல முடியும் என்றும் இப்போது தான் ஒரு வெள்ளைக்காரக் கும்பல் அவ்வழியாக அசால்ட்டாக ஏறிச் சென்றதாகவும் கூறினார்கள்.

அந்த குட்டையில் இறங்கி, அருகில் இருக்கும் பாறையில் தொங்கிக் கொண்டிருக்கும் விழுதைப் பிடித்து, பாறையில் கால்களை அண்டை கொடுத்து சில பல கஷ்டங்களை அனுபவித்து, ராணுவப் பயிற்சியிலோ அல்லது தீவிரவாதப் பயிற்சியிலோ கயிறைப் பிடித்து ஏறச் சொல்வார்களே அப்படி ஏறினால் ஒருவேளை இதை விட அருமையான அருவி தென்பட்டிருக்கலாம். 

இருந்தும் உயிருக்கு உத்திரவாதம் வேண்டும் என்பதால் அந்த அருவிக்கு செல்ல இதை விட வேறு ஏதேனும் எளிய வழி இருக்கிறதா என்று கண்டு பிடிக்கத் தொடங்கினோம். 

மணி பத்தை நெருங்கியிருந்தது. சூரிய பகவான் மிக சுறுசுறுப்பாகவும், வாயு பகவான் மந்தமாகவும் தங்களது பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள். 



இதுநாள் வரை பொதிகை மலையில் மட்டுமே ஏறிப் பழக்கப் பட்டிருந்த எனக்கு நாகல்லபுரத்து மலை சற்றே வித்தியாசமானதாய் இருந்தது. அடர்ந்த மரங்கள் இல்லாமல் வெறும் செடி கொடிகளால் நிறைந்த மலை. அதனால் குளிர்ச்சி கொஞ்சம் கூட இல்லை. பெயரளவிலேனும் காற்றில்லாததால் மலை முழுவதையும் வெக்கை சூழ்ந்திருந்தது. வெயில் வருத்து எடுத்தது. 

மலையின் மேல்தளம் முழுவதும் கூழாங்கற்கள் போன்ற கற்களால் நிரம்பியிருந்தது. பாலன்ஸ் செய்து நடப்பதற்கே பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. சில பெரிய பாறைகளில் குரங்கு நடை போட்டும், இலை தளை, மரம் செடி கொடிகளில் எல்லாம் உரசிச் செல்லும் போது பாதி காட்டுவாசியாகவும் மாறி இருந்தோம்.

 மலை ஏற ஆரம்பித்த  சிறிது நேரத்தில் சிலர் சோர்ந்து விட, இன்னும் சிலர் விடபிடியாய் மேலே ஏறினோம். சிறிது தொலைவில் நாங்களும் நின்றுவிட, இரண்டு பேர் மட்டும் அருவியைத் தேடி மேலே மேலே மேலே சென்றனர்.  நாங்கள் கீழே இறங்கிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் வெற்றி எங்களுக்கே, எங்கயும் சொட்டு நீர் கூட தென்படாததால் மேலே சென்ற இருவரும் எங்களுடன் சேர வந்த வழியே இறங்கத் தொடங்கினோம்.

மலை ஏறுவதற்கென்று ட்ரக்கிங் ஷூ உள்ளது. நான் வெறும் செருப்பு தான் அணிந்திருந்தேன், அந்த ஷூ இல்லாததால் சிறிது கஷ்டப்பட்டுப் போனேன். இது போன்ற மலைகளில் செருப்பணிந்து ஏறுவது சற்றே ஆபத்தான விஷயம். ஏறும் பொழுது கூட எளிதாய் ஏறிவிட்டோம். இறங்குவது தான் மிகவும் சிரமமாய் இருந்தது. கற்கள் சறுக்கி சிலர் சிலபல சிராய்ப்புகலுடன் தான் கீழ் இறங்கினர்.                  

125 கி.மீ பயணித்து வந்த எங்கள் அனைவர் மனதிலும், எதையோ பெரிதாக  எதிர்பார்த்து வந்து ஏமாந்தது போல் ஒரு உணர்வு. வரும் வழியில் வயல்வெளிகளில் பார்த்த பம்பு செட்டிலாவது தலையை நனைத்துச் விட்டு செல்லலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.


நாகல்லபுரத்தில் நடந்தது என்ன? - பார்ட் டூ விரைவில்