Showing posts with label தமிழ் வலைபதிவர் திருவிழா. Show all posts
Showing posts with label தமிழ் வலைபதிவர் திருவிழா. Show all posts

3 Sept 2013

பதிவர் சந்திப்பு : நெகிழ்ச்சியான தருணங்கள்

சிவகாசிக்காரன் ராம்குமாருடன் பதிவர் சந்திப்பு அரங்கினுள் நுழையும் போதே அரங்கம் களைகட்டத் துவங்கியிருந்தது. 

"சீனு நான் உங்களோட தீவிர வாசகன்" என்றபடி என்னை வரவேற்றார் என் தீவிர வாசகர். நல்ல வேளை உங்களைக் காணத் தான் அவ்வளவு தூரம் பயணித்து வந்தேன் என்று என்னை மிரட்டாமல் தீவிர வாசகன் என்றளவோடு நின்று கொண்டார் இதுவரை நான் பார்த்திராத அந்த தீவிர வாசகர். அட நமக்குக் கூட வாசகன் இருப்பாரா என்ற வியப்புடன் அவரை நோக்கி வெறித்த பார்வையில் உள்மனது சொன்னது "ஏய் அவிங்க உன்ன ஓட்றாங்க டா" என்று.

சஸ்பென்ஸ் வைக்காமல் நான் எப்போது பதிவை வளர்த்துள்ளேன், என்னுடைய அந்த தீவிர வாசகர் யார் என்று பதிவின் இடையில் எங்காவது கூறுகிறேன்.

நம் கல்யாணவீட்டில் உற்றார் உறவினர்களை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்சியைப் போல பதிவர்களின் வருகையும் சந்திப்பும் களைகட்டத் தொடங்கியிருந்த காலை நேரம். இதுவரை பதிவுகளின் மூலமும் பின்னூட்டங்களின் மூலமும் மட்டுமே பழகியிருந்த நண்பர்களை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற உணர்வே அலாதியாய் இருந்தது. முதல் பதிவர் சந்திப்பில் 'சில' பதிவர்களின் அறிமுகம் கிடைத்திருந்த போதும் என்னைப் பொறுத்தவரை இந்தபதிவர் சந்திப்பு தான் மிக முக்கியமானது. காரணம் இம்முறை என்னைச் சில பதிவர்களுக்கு தெரிந்துள்ளது என்பதையும் தாண்டி எனக்குப் பல பதிவர்களைத் தெரிந்துள்ளது என்பது தான்.

முதல் பதிவர் சந்திப்பின் போது என்னுடன் அறிமுகமான பெரும்பாலனவர்கள் என்ன பதிவில் என்ன பெயரில் எழுதிக் கொண்டிருந்தார்கள் என்று கூட எனக்குத் தெரியவில்லை, கடந்த முறை இடைவெளியுடன் கூடிய ஒரு சம்பிரதாயமான அறிமுகமாகவே எங்கள் அறிமுகம் நிகழ்ந்து. ஆனால் இம்முறை என்னால் சக பதிவர்களுடன் சகஜமாக பழக முடிந்தது, அதிசயித்து ஆச்சரியப்பட்டு ஆர்வமுடன் நட்புடன் எளிதாக பழக முடிந்தது.

விபத்தில் இருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வரும் ஆவிபாஸ் உற்சாகமாக கலந்து கொண்டது தான் என் முதல் மகிழ்ச்சி, காரணம் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த ஆவியுடன் பேசியபோது "அடிபட்டதால பதிவர் சந்திப்புல கலந்துக்க முடியாம போயிருமோன்னு பயமா இருக்கு சீனு" என்றளவில் பதிவர் சந்திப்பை மிக ஆர்வமாக எதிர்பார்த்திருந்தார்,அவரை மிக பத்திரமாக அழைத்து வந்து அக்கறையாய் கவனித்துக் கொண்ட கோவைநேரம் ஜீவாவிற்கு நன்றி.


ஆவி தி பாஸ் 

பதிவர்களின் வருகையைப் பதிவு செய்யவும் மற்றும் அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உணவு டோக்கன் வழங்குவதற்காகவும் உதவி செய்ய எனது நண்பர்கள் இருவரை அழைத்து வந்திருந்தேன். காலை ஒன்பது மணியளவில் அதிகமான அளவில் பதிவர்கள் அணிவகுத்து வர, இவர்களை சமாளிப்பது என்று தெரியாமல் எனது நண்பர்களும் இவர்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த ரூபக்கும் ஸ்கூல்பையனும் கொஞ்சம் குழம்பிவிட்டார்கள்.
            
இந்நேரத்தில் இவர்களுக்கு உதவி செய்வதற்காக சட்டென்று களத்தில் குதித்தார்கள் சிவகாசிக்காரன் ராம்குமாரும், ஆவி பாஸும். ஆவிக்கு கையில் சர்ஜரி செய்திருந்த போதும் உற்சாகமாக எழுதத் தொடங்கிவிட்டார். எங்களுக்கு தான் முதலில்  கஷ்டமாக இருந்தது, வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் அவர் விடவில்லை, அடையாள அட்டையில் தன பொற்கரங்களால் எழுதத் தொடங்கிவிட்டார்.

சிறிது நேரத்தில் பெரும்பாலான பதிவர்கள் வருகைதரவே வருகைபதிவு பொறுப்பை என் நண்பர்களிடம் விட்டுவிட்டு அரங்கினுள் நுழைந்தோம். 

"வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது, அள்ளி வந்த வண்ணங்களை எந்தன் நெஞ்சில் நீ தூவு" அரங்கம் முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறியிருந்த பதிவர்களை தனது பாடலின் மூலம் ஒருங்கிணைத்தார் சுரேகா. சென்ற முறை போலவே இம்முறையும் மிக அற்புதமாக தொகுத்து வழங்கிய பெருமையும் சுரேகாவையேச் சாறும் .

புலவர் ராமானுசம் அய்யா தலைமை வகிக்க, சென்னைப்பித்தன் முன்னிலை வகிக்க பதிவர்கள் அறிமுகத்துடன் இனிதே ஆரம்பமானது பதிவர் சந்திப்பு.


வாமுகோமு, பாமரன, புலவர், பித்தன், கேபிள், பாட்டையா      

டேஷ்பொர்டிலும் தமிழ்மணத்திலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த பல பதிவர்களையும் ஒரே இடத்தில சந்திக்க முடிந்தது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம், டெல்லியில் இருந்து வந்திருந்த வெங்கட் நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், வெகுநாட்களாய் சந்திக் வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தளிர் சுரேஷ், சுற்றினால் இவரோடு அல்லது இவரைப் போல் ஊர் சுற்ற வேண்டும் என்று  வைக்கும் கடல்  பயணங்கள் சுரேஷ். வருகைப் பதிவு செய்யும் இடத்தில நெற்றியில் தீட்டியிருந்த பட்டையைப் பார்த்ததும் சட்டென்று சென்று அறிமுகம் செய்து கொள்ள வைத்த பழனி கந்தசாமி அய்யா என்று மிக உற்சாகமாக என்னை சுழலச் செய்து கொண்டிருந்தது பதிவர் சந்திப்பு.

எத்தனை எத்தனை பதிவர்கள், அனைவரிடமும் சென்று பேச வேண்டும், புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் மண்டபத்தில் ஏதாவதொரு வேலைகள் துரத்திக் கொண்டே இருந்ததால் பதிவர்களைத் துரத்த முடியவில்லை என்ற ஒரு கவலை என்னுள் இருந்து கொண்டே இருந்தது.

கருப்பு டீ.ஷர்ட் கையில் ஒரு சாப்பாட்டு பையுடன் ஒரு பெரியவர் வந்து அமர்ந்த போது அட சுப்பு தாத்தா என்றேன் ஆவியிடம், அப்போது பாமரன் உரையாற்றிக் கொண்டிருந்ததால் சட்டென்று சுப்பு தாத்தாவிடம் சென்று பேச முடியவில்லை, அதன்பின் அவரைக் காணவில்லை, அவரை சந்தித்து பேசாததும் வருத்தம்.
'எங்கள்' கௌதமன் சார் 

வாத்தியார் என்னை அழைத்து :டேய் சீனு, இவரு யாருன்னு உனக்கு தெரியுமா என்ற போது, தெரியாது என்று என் முழியும், அதை சொல்லத் தெரியாமல் முகமும் தவித்த போது "இவரு தான்டா எங்கள் கௌதமன் சார்: என்று வாத்தியார் கூறியதும் கௌதமன் சாரின் கைகளைப் சட்டெனப் பற்றிக் கொண்டேன், சந்திப்பு முடியும் போது கவுதமன் சாருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள நினைத்தேன் அவரும் கிளம்பிவிட்டார். ஸ்ரீராம் சார் நீங்களும் எஸ் ஆகிட்டீங்க (வராமலே).

சந்திப்பு முடிந்து அரங்கத்தின் வெளியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது "சீனு என்கூட மட்டும் போட்டோ புடிச்சிக்க மாட்டீங்கள்ள.. போங்க நீங்க " என்று பொய்க் கோபத்துடன் கூறியபடி நகர்ந்துவிட்டார் ஜோதிஜி. எவ்வளவு பெரிய மனிதர் அசால்ட்டாக சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார், அவரைக் கைபிடித்து அழைத்து (இழுத்து) வந்து அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டது எங்களுக்கு மிகபெரிய மகிழ்ச்சி.   


பிளாக்கர் நண்பன், கற்போம், மனக்குதிரை, ஜோதிஜி    

காலையில் எனது வாசகராக என்னிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த பிரபல பதிவர் பதிவர், சந்திப்பு முடியும் வரையிலும் எங்களுடனேயே இருந்தவர், "சீனு நான் உங்களோட தீவிர வாசகன்" என்று என்னை கலாய்த்து அவர் யார் என்பதை நான் கண்டுகொண்டதும் சட்டென தழுவிக் கொண்ட அந்த பதிவர் வேறு யாரும் இல்லை பிளாக்கர் நண்பன் அப்துல்பாசித் தான்.    

இருந்தும் பதிவர் சந்திப்பு முழுவதும் ஒரு பதிவரை மிஸ்பண்ணிக் கொண்டே இருந்தேன்...  

 (வேறு வழியேயில்லை, இந்தப் பதிவு தொடர வேண்டும், தொடரும் என்பது விதி...! )