30 Aug 2015

ரக்ஷா பந்தன்

இரண்டு கதவுகளில் ஒன்றைத் தள்ளிக்கொண்டு நுழையும் போதே கவனித்துவிட்டேன் அவள் வருகையை. உடன் நடந்து கொண்டிருந்த தன் தோழியிடம் எதையோ கதைத்தபடி, இதற்கு முன் வந்திராத அந்த இடத்தை மிரட்சியாக பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். என்றைக்குமே அவளிடம் இருந்து பறிக்க முடியாத சிறுகுழந்தை ஒன்றின் புன்னகை அந்த இதழ்களில் இருந்தது. ரோஜாப்பூக்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு அப்போதுதான் முளைத்த தன் பல்தெரிய சிரிக்கும் குழந்தையின் முகத்தை நியாபகப்படுத்தக் கூடியது அவளுடைய சிரிப்பு. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். அங்கும் மனதினுள்ளும். கணம் கணமாக அவள் நுழைந்து கொண்டிருந்த அந்தக்கணம் அத்தனைக் கவித்துவமானது. அது கொடுத்த அழுத்தத்திலேயே முடிவு செய்து விட்டேன் அவளைக் காதலித்தாக வேண்டும்.

இந்த முடிவை எடுக்க அதிகநேரம் தேவைபட்டிருக்கவில்லை. எங்களுக்கு நடுவில் இருந்த முப்பது அடி இடைவெளியில், இடைவெளிக்கு நடுவில் நின்று கொண்டிருந்த சில நந்திகளைக் கடந்து அவளைப் பார்ப்பதற்கு எவ்வளவு நேரம் உதவி செய்திருக்குமோ அவ்வளவு நேரம்தான் தேவைப்பட்டது அவளைக் காதலிக்கிறேன் என்பதை உறுதி செய்வதற்கு. 

இன்னமும் அந்தப்பார்வையில் இருந்த மிரட்சி விலகியிருக்கவில்லை. மெல்ல நடந்து நடந்து எங்களுக்கு இடையில் இருந்த வெளியை குறைத்துக் கொண்டிருந்தாள். வெள்ளை நிற டிஷர்ட், கொஞ்சம் பெரிய வெள்ளை நிற ஸ்கர்ட். அந்த இடத்தில் இருந்த அத்தனை பேரிடம் இருந்தும் தன்னை வித்தியாசப்படுத்திக் கொண்டிருந்தாள். அதற்கு மிக முக்கிய காரணம் அவள் கொண்டிருந்த நிறம், அவள் பேசிய மொழி, அவளுக்குச் சொந்தமான நாடு. 

இன்ன நாட்டைச் சேர்ந்தவள் என்பதை அவ்வளவு உறுதியாகக் கணிக்க முடியவில்லை. காதல் மொழி கடந்தது. காதல் இனம் கடந்தது .காதல் தேசமும் கடந்தது. ஆஸ்திரேலியர்களிடம் இவ்வளவு மென்மை இருக்குமா தெரியவில்லை. ரஷ்யர்களின் நிறம் மிரட்டலானது. பிரித்தானியம் ம்ம் இருக்காது. சாதாரணமாகவே அவர்களின் உயரம் ஆறடி என்று படித்த நியாபகம். இவள் அவ்வளவு உயரம் இல்லை. நான் ஐந்தரை அடி என்றால் அவளும் ஐந்தரை அடிதான் இருக்கக் கூடும். அமெரிக்காவாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இருக்கலாம். தேவதையவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை.  

சென்னையின் வெயில் அவளை அதிகமாக வாட்டுகிறது. இந்த இரவில், பௌர்ணமி போத்திய நிலவொளியிலும் கூட லேசாக வியர்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு. எப்படி இந்த வெம்மையத் தாங்கிக் கொள்கிறாள் என்று தெரியவில்லை. அதற்குள் அவளுக்காக கவலைப்பட ஆரம்பித்திருக்கிறேன். காதல் என்றால் எல்லாமும் தானே. தவறில்லை. எப்படி இந்த வெக்கையை தாங்கிக் கொள்கிறாள் என்பதை என் காதலை வெளிபடுத்திய அடுத்த நொடி கேட்க வேண்டும். வா நாம் உன் கூட்டிற்கே பறந்து விடலாம் என்று கூறவேண்டும். கையில் ஒன்றிரண்டு ராக்கி கட்டியிருந்தாள். அந்த கயிறு கூட அவளுக்காகவே தேர்ந்தெடுத்துக் கட்டியதைப் போல் அவ்வளவு அழகாக இருந்தது. அவள் தேசத்தில் இந்தக் கயிறுகள் வெறும் கயிறுகள் மட்டுமே. நல்ல வழித்து வகிடெடுக்காமல் தலை வாரியிருந்தாள். வழித்து சீவும் பெண்களின் முகத்தில் ஒருவித அமைதி குடிகொண்டிருக்கும். வெளியே எட்டிப்பார்த்தேன். மேகங்களுக்கு மத்தியில் நிலவு தன்னையே ஒரு கவிதையாக எழுதிக் கொண்டிருந்தது. இங்கு என் எதிரில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கவிதையை ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். கவிதை இன்னும் என்னைப் பார்க்கவில்லை. 

எந்தக் கணத்தில் காதலை வெளிபடுத்தலாம் என்பது காதலுக்கும் காதலனுக்கும் இடையில் நடைபெறும் ஒரு யுத்தம். இந்த யுத்தத்தில் முட்டிமோதி ரத்தம் கசிய சண்டையிட்டுக் கொள்வது காதலும் காதலும் மட்டுமே. யார் ஜெயித்தாலும் காதல் ஜெயிக்கும். யார் தோற்றாலும் காதல் தோற்கும் விநோதக்களம் இது. அந்த இடத்தில் இருந்த ஒட்டு மொத்த ஜனமும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. நான் மட்டும் காதலித்துக் கொண்டிருந்தேன். காதல் இன்னும் என்னைப் பார்க்கவில்லை.  

நொடிநேர மௌனம் கூட மணிக்கணக்கில் நீளும் காதலில் காதல் என்கிற சொல்லை, காதல் என்கிற அவளை, காதல் என்கிற காதலை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் படர்ந்திருந்த மௌனத்தில் ஏற்பட்ட சிறு சலனம் அவள். அந்த சலனத்தில் ஏற்பட்ட பெரிய அலை அவள். பெரிய அலையில் அல்லாடும் சிறைபட்ட ஓடம் நான். மெல்ல அந்த இடத்தில் இருந்து எழுந்து அவள் அருகில் சென்று கரம் பற்றி அவளுக்கு என் மொழி தெரியாது, காதலுக்கு மொழி தேவையில்லை, மெல்ல அவள் கரம் பற்றி, பற்றி எரியும் அக்காட்டில், நிழலுக்குப் போராடும் வனபட்சியாய் வார்த்தை கிடைக்காமல் அங்குமிங்கும் அல்லாடுகிறேன். தெளிந்த அந்த நீரோடையில் தெளியாத சுழியாய் ஓடிக்கொண்டிருக்கும் சலசலப்பில் கரைந்து போகும் காதலை இருக்கப் பிடித்து இழுக்க பார்க்கிறேன். காதல் என்னை இழுத்துச் செல்கிறது. என்னை மட்டும் இழுத்துச் செல்கிறது. பற்றிய கரம் தேடுகிறேன். கைகளில் அகப்பட்ட கிளை ஒடிந்து காதல் பெருவெள்ளம் சுழித்தாட்டுகிறது. திசையறியவில்லை. தேசம் தெரியவில்லை. கடைசி வரை அவள் என்னைப் பார்க்கவில்லை. ஒருவேளை அவள் என்பக்கம் திரும்பி என்னைப் பார்த்திருந்தால் கூட போதும் இந்தியாவை இந்நேரம் என்னுடைய சகோதரிகளின் நாடாக அறிவித்திருப்பேன். 

29 Aug 2015

தனி ஒருவன் - திரையனுபம்

எப்படியும் அடுத்த தீபாவளிக்கோ இல்லை பொங்கலுக்கோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிடுவர்கள். இல்லை கேவலமானதொரு பிரின்ட் கூடிய சீக்கிரம் உங்கள் ஸ்மார்ட்போனில் வந்து குந்திக்கொள்ளும். பாதி டயலாக் புரிந்து, பாதி பேர் அங்குமிங்கும் நடக்கும் காட்சிகளுக்கு மத்தியில் இந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டயாத்தில் இப்படத்தைப் பார்க்கும் பரிதாப நிலைக்கு உங்கள் நீங்களே தள்ளிக்கொல்வீர்கள். அது தேவையா உங்களுக்குன்னு உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமிது.   

அந்த மொக்க பிரிண்டில நயன்தாரா நடித்திருகிறாரா இல்லை நாட்டியப்பேரொளி நக்மா நடித்திருக்கிறா என்பது கூடத் தெரியாமா ஒழுங்கா போய் தியேட்டர்ல பார்த்திருக்க வேண்டிய படம்ன்னு பெருமூச்சு விடுவீங்க. நடக்குதா இல்லையான்னு பாருங்க.



120+30+30 ஓவா கொடுத்து படம் பார்த்து வேலைமெனக்கெட்டு எங்க பேர்ல ஒரு டாக்கிஸ் ஆரம்பிச்சு அதுல ஹிட்ஸ் கிடைக்குதோ இல்லையோ விமர்சனம்ன்ற பேர்ல படம் நல்லா இருக்கு, கேமெரா ஆங்கிள் டாப்பு ம்யுசிக் ராக்கு, ஸ்டோரி சோக்குன்னு மாஞ்சி மாஞ்சி விமர்சனம் எழுதினா 'ரீமேக் ராஜா எடுத்த படம் சுமாரால்லா இருக்கும்னு நினைச்சே'ன்னு இழுப்பீங்க. 'யோவ் நெசமாலுமே அவர் நல்லா இயக்கி இருக்காரு'ன்னு சொன்னப்போ நம்பாமா, சவுன்ட் ஒழுங்கா கேட்காத அந்த ஸ்மார்ட் போன்ல தீமை தான் வெல்லும்ன்னு வாரப்போ பார்வேர்ட் பட்டன் அமுக்கிட்டு போயிட்டே இருக்கபோறீங்க. இருந்தாலும் சொல்றேன் இதெல்லாம் நல்லதுக்கில்ல.

'எழுத்தாளர் சுபா நல்லா வசனம் எழுதி இருக்காங்க. ஒரு லேடிக்குள்ள இவ்வளவு திறமையா'ன்னு தமிழ் சினிமாவப் பார்த்து ஆச்சரியபடுவீங்க. உங்களைப் பார்த்து சுபா வைய்யாம இருந்தா சரி. ஏன்னா சுஜாதாவுக்கு அப்புறம் ஒட்டுமொத்த தமிழ்நாடும் - தமிழ்நாடு நம்பிச்சோ இல்லையோ நீங்களும் நானும் லேடின்னு நம்பின சுபா பெண் இல்லை. சுரேஷ் பாலான்ற இரண்டு ஆண் அப்டின்ற அரிய தகவல் உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா வாழ்த்துக்கள். 

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கக்கூடிய நல்ல திர்ல்லர்ன்னு பக்கத்து சீட்டில பேசிக்கிட்டாங்க. லவ்வர்ஸா தியேட்டர்க்கு வந்துட்டு படம் பார்த்துட்டு, அந்த படமும் நல்லா இருக்குன்னு பேசிக்கிறாங்கன்னா படம் நல்லா இருக்குதுன்னு தானே அர்த்தம். இது எப்படிடா தம்பி உனக்கு தெரியும்னு சிரிக்காதீங்க. என் காதில விழற மாதிரிதான் பேசிகிட்டாங்க.  

ஜெயம் ரவி பேசினா எதோ கொழந்த பஞ்ச் டயலாக் பேசுற மாதிரியே இருக்கும்னு அப்பப்போ ஹஸ்கி வாய்ஸ்ல என் காதுக்குள்ள கேட்கும். ஆனா பாருங்க அவரு கூட கொஞ்ச கெத்தா பேசிருக்காரு. பேராண்மைக்கு அப்புறம் போலீஸ்க்கு உண்டான ஆண்மையோட நடிச்சு நல்ல பேரு வாங்கிட்டாரு நம்ம ஜெயம் ரவின்னு ஜில்மோர்ல சிவா பேசுவாருன்னு நினைச்சேன். ஏன் பேசலைன்னு இனிதான் போன் பண்ணி கேட்கனும். 

ஜெயர் ரவி ஹீரோ, அரவிந்த் சாமி ஹீரோவுக்கு எல்லாம் ஹீரோன்னு ஆவி எழுதிட்டாரா தெரியல. ஆனா தன்னோட திரையுலக வாழ்க்கையில இது அவருக்கு ஒரு முக்கியமான படம்னு எழுதி இருக்காரு. ஆவி மாதிரி ஜீனியஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும். வில்லன் அவதாரத்தில அவரப் பார்த்துட்டு சரவணா சொன்னான் 'கடல்ல வந்த மொக்கசாமியா இப்படி இருக்காருன்னு'. அடேய் மணி சார திட்டாதாடான்னு அவன திட்டிட்டு 'ஆமா சரவணா ஆளு செமையா இருக்காரு'ன்னு சொன்னேன். ஹீரோயினுக்கு இந்தப் படத்தில நல்ல வேல்யு. சம்பளம் இரண்டு கோடின்னு நினைக்கிறன். வாங்கின சம்பளத்துக்கு கொஞ்சமும் வஞ்சம் இல்லாம நடிச்சு கொடுத்துட்டுப் போயிருக்காங்க. ராஜாராணிக்கு அப்புறமா வயசான அக்கா வேஷம் போட்டு இருந்த நயன்தாரா நவ் பேக் டூ தேவதை மோட்.  

எந்தவிதத்திலும் சோர்வடைய வைக்காத திரைக்கதை. விறுவிறுப்பு கூட்டும் அடுத்தடுத்த காட்சி நகர்வுகள்ன்னு எழுதினா தான் இந்த எழுத்துக்கே ஒரு கிளாமர் வருது. இல்லாட்டா எப்படி நம்மையும் அறிவுஜீவின்னு காமிச்சிகிறது. நாலு எழுத்து எழுதினா நாமலும் எழுத்தாளன் தான். நாலு சினிமா விமர்சனம் படிச்சிட்டு அஞ்சாவதா எழுதினா நாமளும் விமர்சகன் தான். எது எப்படியோ இட் இஸ் எ மெடிக்கல் மிராக்கிள் மூவி தான். டிவிலையோ இல்லாட்டா மொக்க தியேட்டர் பிரின்ட்லையோ படம் பார்க்காம ஒழுங்கா தியேட்டர்க்கு போய் ஒரிஜினல் தியேட்டர் பிரிண்ட்ல படம் பாருங்க. தமிழ் சினிமாவுக்கு அப்போப்போ ஆக்ஸிஜன் கொடுக்ககூடிய படங்கள வால வையுங்க. 


இது எதுவுமே செய்யாம இன்னும் நாலு மாசம் கழிச்சு 'அரங்கில் சென்று பார்த்திருக்க வேண்டிய படம். தவறவிட்டு விட்டேன் அது இதுன்னு கொஞ்சமும் உப்புச்சப்பில்லாம ஒரு ஸ்டேடஸ் போடுவீங்க பாருங்க அப்போதான் கான்ட் ஆகும். உங்கள நண்பராக்கிக் கொண்ட பாவத்துக்கு அதையும் படித்தாக வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுவோம். இப்படியொரு நிலை வரமால் இருக்க இந்தப்படத்தை அரங்கில் சென்றுபர்த்துவிடுங்கள். நல்லதொரு திரையனுபவத்தை தவறவிட்ட சாபாம் உங்களை அண்டாது இருக்கட்டும். ஸ்தோத்திரம்.   

26 Aug 2015

தலைவாரிப் பூச்சூடி உன்னை - குறும்படம்

ஆவி இயக்கி தயாரித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது குறும்படம் தலைவாரிப் பூச்சூடி உன்னை. 

ஒரு சிறிய கருவைக் கொண்டு இந்தக் குறும்படத்தை  உருவாக்கிய ஆவியின் வடிவில் பட்ஜெட் பத்மநாபனைக் காண்கிறேன். படம் பார்த்தால் உங்களுக்கும் புரியும். நேரத்தையும் சில நண்பர்களின் துணையையும் கொஞ்சம் திறமையையும் தன்னிடம் இல்லாத சில திறமைகளையும் வளர்த்துகொண்டு (எடிட்டிங், ஸ்பெஷல் எபெக்ட்ஸ்) அதையும் முயன்று பார்த்திருக்கிறார். 

பள்ளிக் கூடம் செல்லும் குழந்தையை பாடாய்ப்படுத்தும் இன்றைய தலைமுறை குழந்தைகளின் அம்மாவின் ஒருநாள் தான் இந்தக் குறும்படம். தான் கூற வந்ததை கிட்டத்தட்ட கூறிவிட்டார் என்று தான் கூறவேண்டும். 



'தனியொருவன் முயன்று விட்டால்' விளம்பரம் நொடிக்கு நொடி டிவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்தக் குறும்படம் பற்றி கூறுவதென்றால் மொத்தமாக சுத்தமாக தனியொருவனின் முயற்சிதானிது. கொஞ்சம் ஆத்மார்த்தமான முயற்சியும் கூட.   

மேலும் இது தன்னுள் இருக்கும் ஒரு சினிமா கலைஞனுக்கு அவர் அளிக்க முயன்ற தீனி. யானைப் பசிக்கு சோளப்பொறி. 'இந்தப் படத்தை நான் இயக்கி இருந்தால்? இந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதி இருந்தால்' என்று அனைவராலும் ஆயிரம் ஆல் கூறமுடியும் என்பது தெரிந்தபோதிலும் ஒற்றை ஆளாக களமிறங்கி என்ன விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை என்று தான் கொண்ட முயற்சியில் மனம் தளராமல் செய்து முடித்த  ஆவியின் மனவலிமைக்கு பாராட்டுக்கள். ஆனாலும் ஆவியிடம் விமர்சனம் வைக்காமல் இல்லை. விமர்சனங்கள் கண்ணாடியைப் போன்றவை. அவை நமது பிம்பத்தை, நாம் இருக்கும் அழகைக் காட்டுபவை. அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்தவர்களுக்குத் தான் அதன் அவசியம் தெரியும். ஏற்றுகொள்வதும் மறுப்பதும் கலைஞனின் உரிமை.   

குறும்படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் மனதில் தோன்றுவதைக் கூறுங்கள் அவையாவும் ஆவி என்னும் கலைஞனை அடுத்தபடியை நோக்கி செதுக்கும் உளியின் சப்தமாக அமையட்டும். 

21 Aug 2015

ஆர்.ஏ.சி - கோவை டூ சென்னை

'சீனு சத்தியமா சொல்றேன் உங்களுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகாது, ஆர்.ஏ.சி தான் கிடைக்கும்' கடுந்தவம் புரிந்த முனிவர் ஒருவர்  சாபம் கொடுப்பது போல் கூறினார் ஆவி. ஒரு காவி வஸ்திரமும், கையில் கமண்டலமும் கொடுத்தால் ஆவியை இன்றைய தலைமுறை சாமியார்களுக்கு போட்டியாக உருவாக்கிவிடலாம் அவ்வளவு பொருத்தமாக இருக்கும் அந்த அவதாரம் அவருக்கு.    
Aavee - Poet the great - Part 1 Part

'அப்டில்லா இல்ல பாஸ், கண்டிப்பா பெர்த் கிடைக்கும்' என்றேன். 'நம்பிக்க அதானே எல்லாம்' என்று நொடிக்கு நொடி கூறும் 'கல்யாண்' பிரபுவின் தொனி இருந்தது என்னிடம்.   

'யோவ் நான் தான் சொல்றேனுல்ல கிடைக்காதுன்னு' என்றார் அழுத்தமாக. என்ன நினைத்து அப்படிக் கூறினாரோ தெரியவில்லை. அதுபோலத்தான் நடந்தது.  பத்து நாற்பதுக்கு சென்னையை நோக்கிக் கிளம்பும் சேரன் விரைவு வண்டியைப் பிடிக்க பத்து மணிகெல்லாம் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டேன். ஆவிக்கு சிலபல குடும்ப கட்டாயங்கள் இருந்ததால் அவர் வாயிலில் இருந்தபடியே டாட்டா காட்டிவிட்டு கிளம்பிவிட்டார். 

கோவை ரயில் நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் ஆர்.ஏ.சி கிடைத்த வருத்ததில் சோகமாக நடந்து கொண்டிருந்தேன். கூடவே இரண்டு நாள் அலுப்பு வேறு. இரண்டு நாள் கோவை பயணத்தில் இரண்டு நாளும் சுற்றிக்கொண்டே இருந்தேன். சரியான ஓய்வும் இல்லை. இரவு எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் காலை ஒன்பது மணி வரைக்குமாவது உறங்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டு. நேற்றோ காலை ஆறுமணிக்கே எழுந்திருக்கச் செய்துவிட்டார்கள். அந்த அசதி வேறு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. தோளில் ஒரு சுமையையும் கண்ணின் இமைகளில் கும்பகர்ணனையும் சுமந்து கொண்டு தள்ளாடிக் கொண்டிருந்தேன். கடைசிவரைக்கும் s1 வந்தபாடில்லை. இறைவன் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு பொத்தானை அமுக்க வேறொரு மூலையில் இருந்து 'போகும்பாதை தூரம் இல்லை' பாடல் எசப்பாட்டு பாடியது. 

பின்னால் திரும்பிப் பார்த்தேன் 'கொஞ்சம் வழிவிட்டுப் போகோணும், அங்கயும் இங்கயும் அல்லாடிட்டே போவக்கூடாது' என்றபடி முறைத்துவிட்டு நகர்ந்தார் ஒரு பெரியம்மா. என்னைக் கடக்கும் போது 'பாப்பா பாப்பா இந்த பைய கொஞ்சம் வாங்கு' என்றார். சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியப்பா வந்து அந்தப் பையை வாங்கிகொள்ள 'பாப்பா மெல்ல நட, வேகமா நடக்க முடியல' என்றார் பெரியம்மா. இப்போது பாப்பா மெல்ல நடக்கத் தொடங்கினார். பாப்பாவின் முகத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். 

ரயிலின் எந்தப் பெட்டியிலுமே பெயர்ப்பட்டியல் ஒட்டப்படவில்லை. ஆர்.ஏ.சி என்பதால் என் அருகில் அமரப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆணா பெண்ணா, முதியவரா என ஓராயிரம் கேள்விகள். அருகில் அமரப்போகிறவரைப் பொறுத்துதான் தூங்கப்போவது பெர்த்திலா இல்லை தரையிலா என்பதை முடிவு செய்யமுடியும். தரையில் சயனத்தை விரிப்பதும் அவ்வளவு எளிது இல்லை. அதற்கும் ஓராயிரம் தடைகளை உண்டு. மழைக்காலம் என்றால் தரை முழுவதும் சகதி அப்ப்யிருக்கும். லோயர் பெர்த்தில் இரண்டு பக்கமும் பெண்கள் என்றால் ஒன்றும் செய்யமுடியாது உட்கார்ந்தத நிலையில் தவம் செய்ய வேண்டியது தான். 

ரயில் கிளம்பும் வரையிலும் என் இருக்கைக்கு வந்திருக்க வேண்டிய பங்காளி வந்திருக்கவில்லை. ஒருவேளை வரவேயில்லை என்றால் எவ்வளவு சந்தோசமாயிருக்கும். அசதி கண்ணுக்கு வெளியேயும் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்க உறங்கிவிட்டேன். அருகில் ஒரு நபர் அவர் வீட்டில் பேயைப் பார்த்த கதையை தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. தூக்கம் மெல்ல என்ன ஆரோகணிக்க யாரோ என்னை உதைப்பது போலவும், பந்தாடுவதைப் போலவும் இருந்தது. கனவெல்லாம் இல்லை, என்னோடு இத்தனை நேரமும் என்னோடு போராடிக் கொண்டிருந்தது டிடிஆர் தான். ஐடியை எடுத்து நிட்டினேன். பார்த்துவிட்டு 'பெர்த் கிடைச்சா தாரேன்' என்றார். எப்போது ஆர்.ஏ.சி  கிடைத்தாலும் டிடிஆர் நகரும் முன்னே அவரிடம் சார் பெர்த் என்று கெஞ்சாத குறையாக கேட்பது வழக்கம். அவரும் வழக்கம் போல ' என்ன கேக்காதீங்க, ஆண்டவனக் கேளுங்க' தொனியில் ஒருபார்வை பார்ப்பார். 

அன்றைக்கு ஒருவர் டிடிஆரிடம் பெர்த் கேட்கப் போய் செமத்தியாக வாங்கிக்கொண்டார். 'எங்க வேலைய செய்ய விடுங்க சார். பெர்த் இருந்தா அத பேஸஞ்சர்ஸ்க்கு அலர்ட் பண்ண வேண்டியது எங்க கடம' என்று தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டார். ஏண்டா கேட்டோம் என்ற விரக்தியில் அந்த நபர் வழிந்துகொண்டே தன் இருக்கையில் அமர, அந்த டிடிஆரின் பின்னால் வேறொரு கூட்டம் தொங்கிக் கொண்டிருந்தது. 

இப்போது என் நிலைமையைப் பார்த்த டிடிஆர் அவராகவே பெர்த் கிடைத்தால் தருகிறேன் என்று கூறிவிட்டார் போலும். தூக்குத் தண்டனைக் கைதியிடம் உங்க கடைசி ஆச என்ன என்பார்களே அதைப்போல டிடிஆரிடம் 'என் சீட்ல வேற யாரு சார் வாராங்க, வருவாங்களா?' என்றேன். சார்ட்டைப் பார்த்தவர் திருப்பூர்ல வருவார்ப்பா என்றார். அதுவரைக்கும் தான் தெரியும் அடுத்த சில நிமிடங்களில் உடல் மீண்டும் பயங்கரமாகக் குலுங்கியது. எழுந்து பார்த்தால் திருப்பூரில் பங்காளி நின்று கொண்டிருந்தார். எழுந்து அவருக்கு இடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்து கொண்டேன். 

சீட்டில் செட்டிலாகியவர் மெல்ல தன் திருவிளையாடலை ஆரம்பித்தார். சுற்றும் முற்றும் பார்த்தவர் கைகால்களை நீட்டி படுத்துவிட்டார். என் மடியில் கால்களைப் போடாத குறை. சரி நல்ல விசயம் தானென்று நானும் கிடைத்த இடத்தில் கால்களை நீட்டி படுத்துவிட்டேன். நான் படுத்த அடுத்த நிமிடத்திலேயே எழுந்தவர் என்னை எழுப்பி படுக்கக் கூடாது என்றார். ஆசாமி இந்தி. அரைகுறை ஆங்கிலத்தில் பேசினார். 'நீ படுத்தா நானும் படுப்பேன்' என்றேன். நான் வயசானவன் நான் தான் படுப்பேன் என்றார். ஆளைப் பார்த்தால் ஆவிக்கு அண்ணனைப் போல் இருந்தார். வயது முப்பதைந்திற்குள் இருக்கும். 'நீ படுக்கக் கூடாது' என்றார். முறைத்தேன். மீறி பேசினால் 'போலிசக் கூப்புடுவேன்' என்று கத்தியிருக்கலாம். உட்கார்ந்த்தபடியே பயணிக்க ஆரம்பித்தார். 

எனக்கும் தூக்கம் கண்ணைக் கட்டியது. ஜன்னலில் தலையை சாய்த்தேன். அந்தக் கண்ணுக்குள் ஈரம் கசிந்திருக்க வேண்டும். மெல்ல ஒரு ஓரமாக சாய்ந்து படுத்து, எனக்கும் படுப்பதற்கு இடம் விட்டார். மனுஷன் நல்ல உல்லாசமாக வளர்ந்தவன் போல. ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒருமுறையும் என்னை எழுப்பிவிட்டு உருண்டு கொண்டார். அவர் உருண்டதும் கிடைக்கும் இடத்தில் படுத்துக் கொண்டேன். 

திடிரென்று இரவில் எழுப்பினார். மணி ஒன்றைக் கடந்திருந்தது. என்ன என்றேன். தூக்கம் வரல என்றார். சரி என்றபடி நான் படுத்துக் கொண்டேன். எழுப்பிவிட்டார். என்ன என்றேன். படுக்கக் கூடாது என்றார். நான் படுத்துவிடாதபடி மொத்த இடத்திலும் தன் கால்களைப் பரப்பிக் கொண்டார். 'யோவ் உன்னோட பெறுத்த இம்சயாப் போச்சு' என்றபடி ஜன்னலில் தலைசாய்த்து உறங்கத் தொடங்கினேன். கொஞ்ச நேரத்தில் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. தன் கால்களை நீட்டி கடையை விரித்தார். நானும் நீட்டினேன். உருளும் போதெல்லாம் உறக்கத்தைக் கலைத்தார். உறக்கம் கலைந்து மீண்டும் உறங்கினேன். நல்ல தூக்கத்தில் என்னைக் கொலையே செய்தாலும் உங்களை மன்னித்து விடுவேன். (உபயம் சாரு :-) அதனால் அவரோடு அவரோடு சண்டை இடும் மனநிலையில் இல்லை. எனக்குத் தேவை தூக்கம்.


மணி நான்கரையை கடந்திருக்கும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். தூங்க வேண்டும் என்றேன். 'எனக்கு முதுகுவலி இருக்கு பையா, தூக்கம் வரல' என்றார். 'எனக்கு தூக்கம் வருது' என்றேன். சரி படுத்துக்கோ, ஆனா என் சீட்ட தாண்டி வரக்கூடாது என்று எல்லையைக் காண்பித்தார். என்னுடலை நான்காக மடித்து வளைத்து உடலைக் குறுக்கினேன். அந்த இடத்தில் சரியாக செட்டானது. இம்மி அளவும் உடல் வெளியே செல்லவில்லை. 'சீனு நீ ரொம்ப சின்ன பையனா இருக்க என்பார்கள்'. டிசைன் அப்படி என்பேன். இப்போது இடம் கொடுத்தது அந்த டிசைன் தான். கையை தலைக்கு வைத்து நிம்மதியாக உறங்கத் தொடங்கினேன். 

சற்றுநேரத்தில் பங்காளியின் கால் என் மீது பட்டது. எழுந்து பார்த்தால் என்னைப் போல் படுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். முடியவில்லை. தூக்கிய தலையை அப்படியே கையில் வைத்து 'வதனமே சந்திர பிம்பமோ' என மீண்டும் ஆரம்பிக்க 'பையா பையா' என்றார் பங்காளி. கண்களை லேசாகக் குறுக்கி பார்த்தேன் முகத்திற்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தார். மூடிக்கொண்டேன். எழுந்தால் தான் பிரச்சனை. ஏதாவது கிறுக்குத்தனம் செய்வார் என்று கண்களைத் திறக்கவேயில்லை. ஒருவழியாக இந்த ஜெனமத்து ஆர்.ஏ.சி பிரச்சனை தீர்ந்தது.

'யோவ் யார்யா அது லைட்டப் போட்டது' என்று ஒரு குரல் எங்கிருந்தோ வர பங்காளி லைட்டை அனைத்துவிட்டார். ஒருவேளை இப்போது அவர் முகத்தைப் பார்த்திருந்தால் மந்தையில் இருந்து தொலைந்து போன ஆட்டைப் போல் முழித்துக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த பத்து நிமிடத்திற்கு சப்தத்தையே காணோம். என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்காக கண்களைத் திறந்தால் பெட்டியை இழுத்துக்கொண்டு எங்கோ சென்று கொண்டிருந்தார். வேறெங்கேனும் பெர்த் கிடைத்திருக்கக் கூடும் என்று நினைக்கிறன். எப்படியோ எனக்கு பெர்த் கிடைத்துவிட்டது. கிடைத்திருக்காவிட்டாலும் இனி தொல்லை இல்லை, ஏன்னா டிசைன் அப்படி. வதனமே சந்திர பிம்பமோ.

6 Aug 2015

காமரூப கதைகள்

டிஸ்கவரியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஜீரோ டிகிரியைக் கையில் எடுத்த ஆவி 'சீனு இத வாங்கிருங்க என்றார்', ஜீரோ டிகிரிக்கு பக்கத்திலேயே காமரூப கதைகளும் ஒளிந்து கொண்டிருந்தது. 'பாஸ் இதை ஏன் விட்டுடீங்க, இதையும் வாங்கிரலாமே' என்றேன். மொதல்ல இதப் படிச்சிப் பார்ப்போம் நல்லா இருந்தா அதை வாங்குவோம் என்றார். ' இல்ல பரவாயில்ல ரெண்டையும் வாங்கிருவோம். மனசு மாறிட்டா கடைசி வரைக்கும் வாங்கவே மாட்டோம்' என்றேன். 

சாருவின் பத்தி எழுத்துக்களை மட்டுமே வாசித்து வந்த எனக்கு அவருடைய நாவல்களை வாசிக்க வேண்டும் என்பது நெடுநாள் அவா. அவருடைய புதிய எக்சைலைக் கூட முன்வெளியீட்டுத் திட்டத்தின் போதே வாங்கி பத்திரமாக பூட்டி வைத்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் மிகப்பெரிய புத்தகமும் அதுதான். புதிய எக்சைலை படிக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த போதே மயிலன் ஒரு தகவல் அனுப்பி இருந்தார் 'ராசலீலா படிக்காமல் புதிய எக்சைலை படிக்க வேண்டாம்' என்று. 

டிஸ்கவரியில் முதலில் கேட்டது ராசலீலாவைத் தான், அன்றைக்கு பார்த்து ஸ்டாக் இல்லை. அதனால் காமரூப கதைகளை நானும் ஜீரோ டிகிரியை ஆவியும் வாங்கிக் கொண்டோம். 

**

ஐந்து வருடங்கள் இருக்கும். அண்ணா நகரில் புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். சாருவின் ஜீரோ டிகிரியை அண்ணன் வாங்கி வந்திருந்தான். அப்போது நான் சாருவை அறிந்திராத பிள்ளைப் பருவத்தில் இருந்தேன். அண்ணனோ விகடன் காலத்தில் இருந்தே சாருவின் வாசகன் என்பதால் அவரின் எழுத்துக்களில் மயங்கி ஜீரோ டிகிரியை வாங்கி இருந்தான். 

'யாரு இது புது ரைட்டரோ' 

'போடா லூஸு, இவர் எவ்ளோ பெரிய ரைட்டர் தெரியுமா. அதான் விகடன்ல கூட நிறைய எழுதி இருக்காரே'

'இல்ல நான் படிச்சது இல்லை'

'நீ எல்லாம் என்னத்த விகடன் படிச்சு கிழிச்சியோ' 

'கத, ஜோக்ஸ், ஹாய் மதன் அப்புறம் எதாவது எனக்கு புடிச்சது இருந்தா படிப்பேன், இவரோடது படிச்சது இல்ல' 

அதற்கு பின் சாருவைக் குறித்து என்ன என்னவோ கூறினான். சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர். அடுத்த சுஜாதா அது இது என்று. சரி இவ்ளோ விஷயம் பேசுறான், படிச்சுதான் பார்ப்போம் என்று ஜீரோ டிகிரியைக் கையில் எடுத்தேன். முதல் பக்கத்தைக் கூடத் தாண்ட முடியவில்லை. என்ன எழுதி இருக்கிறார். என்ன கூற வருகிறார் எதுவும் புரியவில்லை. 

'ஏ என்னடே புக்கு இது' 

'ஏன் என்னாச்சு'

'இத நீ தான் படிக்கணும், ஒண்ணும் வெளங்கல' 

அப்படியே நாட்கள் நகர நகர, அந்தப் புத்தகம் மேஜையிலேயே கிடக்கும். அதைப் பார்க்கும் போதெல்லாம் படிச்சியா படிச்சியா என்று கேட்பேன் 'ம்கும்' என்று தலையசைப்பான். 

ஒருநாள் என்னிடம் வந்து 'ஒருவழியா முடிச்சிட்டேன்' என்று கூறியவனை ஆச்சரியமாகப் பார்த்தேன். 

'புரிஞ்சதா'

'ம்ம் புரிஞ்சது, அது ஒரு வித்தியாசமான புக்கு. ஆனா இப்போதைக்கு அதப் படிக்காத' என்று மட்டும்  கூறினான். 

அன்றைக்கு மேஜையில் இருந்து காணாமல் போன புத்தகம் இன்றைக்கு வரைக்கும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கே ஒளித்து வைத்துள்ளான் என்பது அவனுக்குத்தான் வெளிச்சம் .      

**

காமரூப கதைகளை முதல் இணைய நாவல் என்று குறிப்பிடுகிறார் சாரு. சாரு ஆன்லைனில் அவர் எழுதிய 108 குட்டிக் கதைகளை தொகுத்து நாவல் என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. 

குட்டி என்றால் சிறிய என்றும் வல்லிய பெண்குட்டி என்று பொருள்படும். புத்தகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பது பெண்குட்டிகள் தான். சாருவின் வாசகனாக படித்தால் கொண்டாட்டம், கலாச்சாரக் காவலராகப் படித்தால் அத்தனையும் ஆபாசம் ;-). 

சாரு ஆன்லைனை தொடர்ந்து வாசித்து வருவதால் அவருடைய எழுத்தின் ரசிகனாவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. இதில் இன்னொரு ப்யூட்டி என்னவென்றால் சாரு ஆன்லைன் வாசகன் ஆவதற்கு முன்னரே சாரு விமர்சகர் வட்டத்தின் வாசகன் ஆகிவிட்டேன். அது எவ்வளவு நல்ல விஷயமென்பது காமரூப கதைகளை  படிக்கும் போதுதான் புரிந்தது. 

கண்ணாயிரம் பெருமாள், மீரா, விஷால், நிக்கி, அலெக்ஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன், மதனா, ஷாலினி, அர்பனா, நந்தினி, ஜெஸ்சி என்ற பல பாத்திரங்களால் நிறைந்தது தான் இந்தக் குட்டிக் கதைகள். இதில் வரும் பெரும்பாலான குட்டிகளை பெருமாள் & கோ சுவைத்துள்ளார்கள் அல்லது குறைந்தபட்சம் ஓரல் செக்சாவது உண்டு. 

பெருமாள் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியாக பதிவு செய்திருக்கிறார். இதில் எந்த அளவு நிஜம் என்பது பற்றி தெரிந்துகொள்ள பெருமாளின் ரூபமான சாருவைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். முழுக்க முழுக்க குறிகளாலும் குறியீடுகளாலும் நிறைந்த புத்தகம். இந்தப் புத்தகம் எழுதிய காலகட்டத்தில் உத்தம தமிழ் எழுத்தாளன் மீது அப்படி ஒரு கோவத்தில் இருந்திருக்கிறார் போலும். இப்போது அப்படி இல்லை சக உதிரனாகி விட்டார்கள். 

பெருமாளின் வாழ்க்கை கொண்டாட்டமானது என்ற ஒற்றை வரியைத் தவிர பெருமாளைப் பற்றி தொடர்ந்து எழுவது என்னால் இயலாத காரியமாக உள்ளது. இதுதான் பெருமாள் என்று அவருடைய பிம்பத்தை என்னால் ஒரு வரையறைக்குள் கட்டமைக்க முடியவில்லை. அவருக்கு தோன்றியது அத்தனையும் நியாயம். அவர் எதிர்ப்பது அத்தனையும் அநியாயம் என்பதால் இங்கே எனக்குத் தோன்றுவது அவருக்கு எதிராகத் தோன்றிவிட்டால்!

பெருமாள் தன் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் மட்டும் அல்லாமல் தன்னை பாதித்த அயல் தேசத்து மனிதர்களையும் குறித்து எழுதியுள்ளார், அதில் பெரும்பாலனவர்கள் இசை சார்ந்தவர்கள். இது ஒரு இணைய நாவலாக இருவம் பெற்றது என்பதால் ஆங்காங்கு யுட்யுப் சுட்டியும் கொடுத்துள்ளார். பின்னொருநாள் அதனை சாவகாசமாக கேட்டு உய்ய வேண்டும். 

மேலும் காமரூபக் கதைகளை படிக்கும் முன் ஜீரோ டிகிரி - ராசலீலா படித்துவிடுவது உத்தமம். அவையிரண்டின் தொடர்ச்சியாகத்தான் இதப் பார்க்கமுடிகிறது. சீக்கிரம் அவற்றையும் படிக்க வேண்டும்.  

ஒவ்வொரு நாவலும் எதாவது ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தரும். அதில் ஒரு கதை இருக்கும். அந்தக் கதை நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் என்ன கிடைத்து என்று யோசித்தால் தாக்கம் எல்லாம் எதுவும் இல்லை. ஒரு நல்லவாசிப்பு அனுபவம். என்ன இந்த நாவலை வாசிப்பதற்கு முன் சாரு விமர்சகர் வட்டத்தை ஒரு எட்டு படித்துவிடுவது நல்லது. பெருமாள் வைக்கும் குறியீடுகள் விளங்க அதை விடச் சிறந்ததொரு இடம் வேறு இல்லை :-)

இதனை நாவலாக ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது. சாரு நினைத்ததைப் போல 108 குட்டி கதைகள் என்றே பெயர் வைத்திருக்கலாம். நாவல் என்ற அடைமொழி நெருடுகிறது. அல்லது இதனை நாவலாக ஏற்றுகொள்ள நான் இன்னும் வளர வேண்டும் போலும். 


16.05.2008 இல் இருந்து 21.12.2008 வரைக்கும் பெருமாளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், அதில் அவர் வைக்கும் குறியீடுகளின், அவர் திட்டிய விதத்தையும், அவர் அனுபவித்த குட்டிகளையும் அது போக அவர் ரசித்த இசையையும் குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் துணிந்து வாசிக்கலாம். அலுப்பு தட்டாத ஒரு புத்தகம். ஒருவேளை இந்த வகையறா எழுத்து உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதையும் கேட்டுக்கொள்ள பெருமாள் இருக்கிறார். காரணம் இந்த உலகத்தில் இருக்கும் மொத்த அன்பையும் சேர்த்து தன்னை உருவாக்கிக் கொண்டதாக அவரே ஆங்காங்கு கூறியுள்ளார். ம்யு.  

5 Aug 2015

ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்

விகே.புரத்தையும் அகஸ்தியர் பட்டியையும் சிறுவயதில் இருந்து பார்த்தே வளர்ந்ததால் கதைகளம் சுத்தமாக மனதில் ஒட்டவில்லை. கொஞ்சம் மனது வைத்தால் விகே புரத்தில் இருந்து அகஸ்தியர் பட்டிக்கு நடந்தே போய்விடலாம், ஆனால் இங்கோ அதை ஏதோ தொலைதூரப் பயணம் போல் காட்டியிருக்கிறார்கள். 

எனக்குத்தெரிந்து அந்த சுற்று வட்டாரத்திலேயே நல்ல ரோடு வந்த இடம் அகஸ்தியர்பட்டி தான். காரணம் அகஸ்தியர்பட்டி அம்பைக்கும் விகேபுரத்திற்கும் இடையே புதிதாக கட்டமைக்கப்பட்ட (மெஜிரா கோட்ஸ் ஊழியர்களுக்காக) ஒரு பகுதி. அங்கே சிறிய விமான ஓடுதளம் கூட உண்டு. இப்போ அந்த ஓடுதளம் நாஸ்தியாகிவிட்டது என நினைக்கிறன். 

ஆரஞ்சுமிட்டாயில் காண்பிக்கப்படும் அதே போன்ற செம்மண் நிலப்பரப்பு அங்கும் உண்டு. அம்பை வீகேபுரம் செல்லாமல் தென்காசி சாலையில் இருந்து பிரிந்து ஊருக்குள் செல்லும். சிவா மாமா ஒருமுறை அழைத்துச் சென்றார். அந்தப் பாதையில் தான் முதல்முறையாக ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங் பார்த்தேன். இப்போது அங்கே கேட் வந்துவிட்டதா தெரியவில்லை. ஆனால் அப்போவே சாலை உண்டு. 

கதையின் சுவாரசியத்திற்காக கைலாசத்தை தேடி வாகனம் கூட செல்ல முடியாத ஒரு பாதையில் நடையோ நடையாய் நடப்பதாகக் காட்டியிருக்கலாம். அது சுவாரசியமாகவும் இருக்கிறது, என்ன அந்தப்பகுதி மக்களுக்கு தங்களை அந்தப் பகுதியில் இருந்து அந்நியபடுத்திக் கொண்டு பார்த்தால் மட்டுமே கதைகளனோடு ஒன்ற முடிகிறது. அல்லது அகஸ்தியர்பட்டியையும் அம்பையையும் வேறோ எங்கோ இருக்கிறது என கற்பனை செய்துகொள்ள வேண்டியது தான்.  

அரை மணி நேரத்தில் இண்டர்வல் வருவதை தமிழ் சினிமா ரசிகனால் தங்கிக் கொள்ள முடியவில்லை. 'த்தா இன்னா டா இது', 'யேய் இது படமா, சீரியல் மாதிரி இல்ல போவுது' போன்ற பேச்சுகளை உணர முடிந்தது. 

**

மேற்சொன்ன விசயமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எத்தனையோ மொக்கைப் படங்களை அரங்கில் சென்று பார்த்திருக்கிறேன். நமக்கு பிடிக்காத காட்சியோ அல்லது நம்மை நெளிய வைக்கும் காட்சியோ திரையில் வந்தால் கத்தி கூப்பாடு போட்டு கேலி செய்வதில் வல்லவன் நம்மூர் ரசிகன். எப்போ அரங்கம் அமைதியாகும் எப்போ கவுண்டர் கொடுக்கலாம் என்று காத்திருக்கும் நொடிகள் உண்டு. ஆனால் ஆரஞ்சு மிட்டாயில் பெரும்பாலான காட்சிகள் மென்மையான இசையின் பின்னணியில் தான் நகர்கிறது. யார் என்ன செய்தாலும் கவுண்டர் கொடுக்க ஏகப்பட்ட வாய்ப்பும் இருந்தது . இருந்தாலும் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ் சினிமா ரசிகன். அதற்காக அவன் தூங்கிவிட்டான் என நினைக்க வேண்டாம் அவ்வபோது சிரித்து தன் இருப்பையும் உறுதி செய்துகொண்டு தான் இருந்தான். இது போன்ற வழக்கத்திற்கு மாறான கதையம்சம் புதிது என்பதால் அதனோடு ஒன்றுவதற்கு தயங்குகிறானா எனத் தெரியவில்லை. 


படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது 'யாரு மச்சி ம்யுசிக் டைரக்டர்' என்று. ஒரு இசையமைப்பாளருக்கு இதை விட என்ன பெரிய கிரெடிட் கிடைத்து விட முடியும். எங்கிருந்தும் வழுவிச் செல்லாத இசை ஜஸ்டின்​ அண்ணா :-) பயணங்கள் தொடருதே அட்டகாசம். 

வசனம் விஜய் சேதுபதியும் இயக்குநர் பிஜுவும் எழுதி இருக்கிறார்கள். 'சாவுற வரைக்கும் ஆஸ்பத்திரில இருக்கணும்னு சொல்றான். அது என்ன மாதிரியான ட்ரீட்மென்ட்', 'என்ன காதலிச்சிட்டோமேன்னு கல்யாணம் பண்ணிக்காத, நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு' எனக்கு மிகவும் பிடித்த வசனங்கள். 

அம்பாசமுத்திரம் சிவன் கோவில் அருகில் நள்ளிரவில் கைலாசம் ஒரு ஆட்டம் போடுவார். அட்டகாசம். யாரோ ஒருவர் கூறியிருந்தார் முதியவர் வேடம் விஜய் சேதுபதிக்கு கொஞ்சம் பொருந்தவில்லை என. அந்த ஆட்டத்தில் கண்முன் கைலாசம் என்னும் முதியவர் தான் ஆடிகொண்டிருந்தார். விஜய் சேதுபதி இல்லை.   

நடிப்பில் விஜய் சேதுபதியை விடவும் சத்யா (ரமேஷ் திலக்) கவர்கிறார். படு இயல்பான நடிப்பு. தன்னுடைய படத்தில் இன்னொருவருக்கும் சமமான வாய்ப்பு கொடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆறுமுகமும் அசத்தி இருக்கிறார். என்ன ஆறுமுகம் பேசும் 'யோவ் கொஞ்சமாச்சு கூறு இருக்கா' மட்டும் தான் படத்தில் வரும் ஒற்றைவரி நெல்லை பாஷை. மற்றவை எல்லாமே சாதா பாஷை தான்.   

ஜில்மோர் (மெட்ராஸ் பவன்) சிவா தன்னுடைய விமர்சனத்தில் எழுதியது 'இது ஒரு ஷார்ட் குட் பிலிம் மட்டுமல்ல. குட் ஷார்ட் பிலிமும் கூட'  என்று. படம் பார்க்கும் போது அவ்வபோது குறும்படம் பார்க்கும் உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

புளிக்கிறதா இனிக்கிறதா என்று கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியாத சுவை உடையது ஆரஞ்சு மிட்டாய். அதைப் போலத்தான் இந்தப் படம் மக்களுக்குப் பிடித்துள்ளதா, பிடிக்கவில்லையா என்பதை கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

படம் எனக்குப் பிடித்துப் போக முதல் காரணம் ஜஸ்டின் என்றாலும் இரண்டாவது காரணம் மொத்தப் படமும் பயணங்களிலேயே கழிவதுதான். பயணமே எல்லை.