உள்ளூர் மக்கள் எல்லோரும் உறங்கப்போய்விட வெயிலும் வெயில் சார்ந்த இடங்களில் இருந்தும் வந்தவர்களுக்காக விழித்துக் கொண்டிருத்தது அந்த இரவு. கிட்டதட்ட சாம்பலும் கருநீலமும் கலந்த மலைப்பிரதேசத்து இரவது.
இந்தியாவை அளந்து எல்லைகள் குறிக்கும் பணி பிரிடிஷ் இந்தியக் காலத்தில் ஆரம்பமாகிய போது, நில அளவையை மதராசப்பட்டிணத்தில் இருந்தே ஆரம்பித்திருந்தனர். ஒவ்வொரு இடமாக ஆய்வு செய்து அளந்து அளந்து மெல்ல மலையேறிய லெப்டினன்ட் வார்ட் கொடைக்கானலை அடைந்ததும் வெறும் நில அளவையோடு தனது பணியை முடித்துக் கொள்ளவில்லை.
கொடைக்கானலின் சீதோஷ்ண நிலை அவரை உசுப்பிவிட்டது, இந்த மலைபிரதேசத்துக் குளுமை மற்றும் பசுமை அவருக்கும் அவரது வெள்ளை இனத்தவருக்கும் தேவையாய் இருப்பதை உணர்ந்த அவர், உடனடியாய் தனது எண்ணத்தைப் பிரிட்டீஷார் கவனத்திற்குக் கொண்டு சென்றார். மதராசப்பட்டிண வெயிலில் கொள்ளைநோய் தாக்கிச் செத்துக்கொண்டிருந்த வெள்ளையர்களுக்கு கொடைக்கானலின் அவசியம் புரிந்தது. நொடியும் தாமதிக்காத பிரிடிஷ் அரசாங்கம் தனது பங்களாக்களை அங்கு கட்டி குடியேறிவிட்டது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஆதி மரங்களை அகற்றிவிட்டு பைன் மரங்களையும் இன்னும் பல்வேறு தாவர இனங்களையும் இறக்குமதி செய்தது. இன்றும் பல பிரிடிஷ் அரசு பங்களாக்களை கொடைக்கானலில் பார்க்கலாம்.
மேலும் கொடைக்கானலின் வரலாறு சங்க இலக்கயங்களில் இருந்தே ஆரம்பிப்பதாக கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். சங்ககாலத்தில் கோடைமலை என்று அழைக்கப்பட்ட கொடைக்கானல், கோடை யின் கொடையாகி இன்று கொடைக்கானலாக மருவியுள்ளது.
கொடைக்கானலை அடைந்திருந்த போது மணி ஐந்து. சூரியன் மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தான். ஆளை உறைய வைக்கும் குளிர் இல்லை என்றாலும் ஒரு மலைப்பிரதேசத்திற்கு உண்டான அத்தனை அறிகுறிகளும் நீக்கமற நிறைந்திருந்தன. உடனடியாக இறங்கும் சரிவுகள், தகரம்போட்ட வீடுகள், ஸ்வெட்டர் அணிந்த மக்கள், காரெட் கொறிக்கும் காதலர்கள், போட்டோ எடுக்கும் யுவயுவதிகள். சந்தேகமே இல்லை. மிக உற்சாகமாய் இருந்தது கொடைக்கானல். பசி வயிற்றைக் கிள்ள, தங்குவதாய் இருந்த ரிசாட்டிற்குக் கூடச்செல்லாமல் நேரே சென்று வயிற்றை நிரப்பினோம். மலைப்பிரதே சத்து மாலை சீக்கிரம் இருட்டத் தொடங்கிவிடும் என்பதால் 'ரிசாட் டுக்கு போறோம் அரமணி நேரம் ரெஸ்ட் எடுக்குறோம் உடனே முருகன் கோவிலுக்குக் கிளம்பறோம்'. உத்தரவு வந்தது.
'என்னது கோவிலுக்குப் போறோமோ' அலறினான் விக்ரம். 'ஏண்டா அதுல என்ன பிரச்சன', என்றேன். 'தல நாம இன்னும் குளிக்கவே இல்ல, போறபோக்க பார்த்தா குளிச்சே ஆகணும் போலையே' என்றான். கும்பக்கரையில் இருந்து கிளம்பும் போதே முடிவு செய்ததுதான் 'ரிசாட்டுக்குப் போறோம் குளிக்கிறோம்' என்று. ஆனால் கொடைக்கானலின் குளுமை ' குளிச்சே ஆகணுமா' என்று யோசிக்கவைத்த நேரத்தில்' இருட்டுறதுக்குள்ள கோவிலுக்குப் போறோம்' என்ற உத்தரவு குளித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு எங்களை தள்ளியது. 'விடு இவ்ளோ பெரிய ரிசாட்டா இருக்கு ஒரு ஹீட்டர் கூடவா இருக்காது. குளிக்கிறோம்'. என்றேன். விதி பின்னால் நடத்த இருக்கும் விளையாட்டை அப்போது அறிந்திருக்கவில்லை நாங்கள்.
கிரீன் ரூக்ஸ் ரிசார்ட். கொடைக்கானலில் இருந்து சுமார் பன்னிரண்டு கிமீ தொலைவில் அமைந்துள்ள சற்றே பெரிய ரிஸார்ட். மலைச்சரிவினில் கட்டப்பட்ட கட்டிடம் என்றாலும் பார்ப்பதற்கு ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் போலவே இருந்தது. ஒவ்வொன்றிலும் இரண்டு படுக்கைகள் கொண்ட இரண்டு படுக்கையறைகள். மிகப்பெரிய ஹால். இரண்டு பாத்ரூம். கிட்டத்தட்ட சிறிய வீடுபோல் இருந்தது. இவ்வளவு பெரிய ரிஸார்ட்டில் தங்குவது இதுவே முதல்முறை. கொடைக்கானலிலும் இதுதான் என் முதல் இரவு. முந்தைய வாக்கியம் கொஞ்சம் கொச்சையாக இருக்கிறதோ. பரவாயில்லை ஒரு புன்சிரிப்புடன் கடந்துவிடுங்கள்.
மாலை மங்கமங்க குளிரும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. மலைப்பிரதேசம் கொடுத்த மகிழ்ச்சியோ என்னவோ பகல் முழுவதும் இருந்த அலுப்பு குறைந்திருந்து கொஞ்சம் தெம்பு கூடியிருந்தது. பொதுவாகவே மலைப்பிரதேசங்களில் நேரம் மெதுவாக நகரும் என்று கூறுவார்கள். அது தவறு. காலத்தின் காலில் யாரோ சக்கரம் கட்டிவிட்டது போல வேகவேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.
'பாஸ் இன்னும் குளிக்கலியா. எல்லாரும் ரெடி உங்களுக்காகத்தான் வெயிட்டிங்' என்ற குரல் கேட்டபோது பாத்ரூமினுள் இருந்து வெளிவந்தான் விக்ரம். நடுங்கிக் கொண்டிருந்தான். 'தல ஹீட்டர் வொர்க் ஆகல, தண்ணி செம ஜில்லு. பாத்து குளிங்க. ஜன்னி கிண்ணி வந்த்ராம' என்றான். 'என்ன ஹீட்டர் வொர்க் ஆகலையா' மனதினுள் இந்த வார்த்தைகள் எதிரொலிக்கத் தொடங்கியபோது லேசான பயமும் சேர்ந்து கொண்டது. பேசாம கும்பகரையிலையே குளிச்சிருக்கலாம். மெல்ல தண்ணீரைத் தொட்டுப் பார்த்தேன். தண்ணீரும் அதையே உறுதி செய்தது. மாலை ஆறு மணிக்கு கொடைக்கானலின் குளிர்ந்த நீர் தான் என்று எழுதப்பட்டபின் யாரால் மாற்ற முடியும்.
வாளியில் நிரம்பியிருந்தது தண்ணீரா கண்ணாடியா எனத்தெரியாத அளவிற்குத் தெள்ளியநீர். பிஸ்தா படத்தில் நவரச நாயகனுக்கு நக்மா கொடுத்தாளே ஒரு தண்டனை. அது இவ்வளவு கொடூரமானதா என்ன. இதற்குக் கும்பிபாகமே தேவலைபோல. தண்ணீரைத் தொடவே பயமாய் இருந்தது. எப்போதுமே முதல்முறை ஊற்றத்தான் தயங்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டேன். சாமியே சரணம் ஐயப்பா. அய்யய்யோப்பா என்னா குளிரு. நடுங்கிக்கொண்டே வெளியில் வந்தேன். 'என்ன தல செமயா' என்றான் விக்ரம். என்ன ஒரு வித்தியாசமான அனுபவம். கும்பக்கரைக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். ஒரு சாயா குடித்தால் நன்றாய் இருக்குமெனத் தோன்றியது. பக்கத்தில் ஆயாகடை இருந்ததே தவிர சாயாகடை இல்லை. சனி நீராடல் சளி நீராடலாக மாறிவிடக் கூடாது என்பதால் அந்த ஆயாவிடம் மாத்திரை ஏதும் இருக்கிறதா கேட்டேன். மெடிக்கல் ஸ்டோர் போகணும்னா நாயுடுபுரம் போகணும் என்றார். மாத்திரை வேண்டாம்.
குறிஞ்சியாண்டவர் ஆண்டியாக நின்று கொண்டிருந்தார். பழனியிலும் ஆண்டிதானே. கோவிலில் சுத்தமாகக் கூட்டமில்லை. ஏதோ பக்கத்துத்தெரு கோவில் போல இருந்தது. மிகச்சிறிய கோவில். பாலபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ஜெகன் மெய்மறந்து மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருந்தார். முருகனைப் பார்ப்பதை விட்டுவிட்டு சிறிது நேரம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தோழரும் சசியும் நாத்திகமென்பதால் வரவில்லை. முதலில் வரமறுத்த விக்ரம் குறிஞ்சியாண்டவரிடம் ஏதோ டீல் பேசிக் கொண்டிருந்தான். நான் வந்திருக்கிறேன், என்னையும் கொஞ்சம் கவனி என்பதைக் கூறிவட்டு குறிஞ்சி மரத்தைத் தேடினேன். மரம் இல்லை செடி. சன்னதிக்கு வலப்புறம் ஒரு ஓரமாய் இருந்தது. கோவிலின் தலவரலாறு 1936-ல் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஆனால் இந்தச் செடியின் வரலாறு தெரியவில்லை. தெரிந்திருக்கும் என நினைத்து ஒருவரிடம் கேட்டேன். முறைத்தார். ரைட்டுவிடு. 2006-ம் ஆண்டில் பூத்துக்குலுங்கிய குறிஞ்சி மலர்கள் 2018-ம் ஆண்டை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இனவிருத்தி செய்துகொண்டால் போதுமென நினைத்துவிட்டது. எவ்வளவு பொறுமை.
டீக்கடைகளைத் தேடினோம். மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்ததால் பெரும்பாலான கடைகளை அடைத்திருந்தனர். ச்சாயா எவ்வளவு மோசம் என்றாலும் குடித்துவிடலாம். ஆனால் குளம்பி அப்படியில்லை. வாந்திவரச் செய்துவிடும். 'தல better go with coffee' என்றான் விக்ரம். சற்றே சூடு குறைவான வெந்நீர் என்றாலும் தேநீரின் சுவையைக் கொடுத்தது.
கோவிலின் வலப்புறம் ஒரு view point உள்ளது. பகலில் பார்த்தால் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. இரவில் மிக ரம்மியமாய் இருந்தது. சுற்றிலும் பள்ளத்தாக்கு, இருள் சூழ்ந்த பசுமை. தூரத்தில் சமவெளி. ஆளாளுக்கு ஒரு ஊரின் பெயரைச் சொன்னார்கள். விவாதித்தார்கள். முருகனிடம் டாட்டா காட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பியது டாட்டா குடும்பம்.
பழைய உற்சாகம் என்னுள் வந்திருந்தது. இப்போது எல்லாருமே தெளிவாகத் தெரிந்தார்கள். இதுவரை பேசாது இருந்தவர்கள், நான் பேச நினைத்தும் பேசாது போனவர்கள் என ஒவ்வொருவராய் சென்று பேசத் தொடங்கினேன். ராஜேஷ். சாரு பற்றி பேசுகிறார், கருந்தேள் பற்றி பேசுகிறார். பொன்னியின் செல்வன் பற்றி சிலாகிக்கிறார். சுஜாதா ரசிகன் என்கிறார். எங்கள் புத்தகக் கூட்டணியில் மேலும் ஒருவர். இரவு உணவு க்ரீன்ரூக்சில். டின்னரின் சுவை பற்றியெல்லாம் கவலையில்லை. நல்லபசி. கிடைத்த சிக்கனையும் சப்பாத்தியையும் உள்ளே தள்ளினோம்.
மலைப்பிரதேசத்து இரவு கும்மென்று இருந்தது. எல்லாருமே ஸ்வெட்டருக்குள் நுழைந்திருந்தார்கள். விக்ரம் உறங்கச் சென்றுவிட்டான். அவனுடன் ஒரு நைட்வாக் போகலாமென்று இருந்தேன். ஆனால் அந்த இருளைப் பார்த்தாலே மிரட்ச்சியாய் இருந்தது. வெளிச்சம் ஊடுருவமுடியா இருள் அது. சாலையோரத்தில் விளக்குகள் என்று எதுவுமே இல்லை. அந்த இருளில் சிங்கம்புலி குறித்தெல்லாம் எனக்குப் பயமில்லை.ஒருவேளை என்னைப் பார்த்துப் புலி பயந்துவிட்டால். நமக்கேன் வம்பு. campfire நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது கிரீன் ரூக்ஸ். சத்தமில்லாமல் அவர்களோடு இணைந்து கொண்டேன். புலி பிழைத்துப் போகட்டும்.
உள்ளூர் மக்கள் எல்லோரும் உறங்கப் போய்விட எங்களுக்காக விழித்துக் கொண்டிருத்தது அந்த இரவு. கிட்டதட்ட சாம்பலும் கருநீலமும் கலந்த மலைப்பிரதேசத்து இரவது. குவிக்கப்பட்ட மரக்கட்டைகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க எரிய மறுத்தபோது எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். சுற்றிலும் நாங்கள். ஊருக்கே ஏசி போட்டது போல் இருந்த அந்த இரவில் அந்தக் குளுரில் காற்றில் கலந்து வந்து முகத்தை வருடிய அந்த வெப்பம் இதமாய் இருந்தது. தேவையாய் இருந்தது.
சாம்பல் மேகங்களுக்கு மேலே நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்க மெல்லத்தேய்ந்து கொண்டிருந்தான் சந்திரன். பென்சிலால் வரையப்பட்ட கோடுகளாக உயர்ந்து வளர்ந்து நீண்டு நெளிந்து கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்து எட்டா தூரம் வரை பரவிக் கிடந்தது மேற்குமலைத்தொடர். தூரத்தில் ஆங்காங்கே வெளிச்சப்புள்ளிகளாய் மனிதன் ஏற்படுத்திய கரும்புள்ளிகள் மின்சாரத்தைக் கசிய விட்டுக்கொண்டிருந்தன. குளிர் கொஞ்சம் அதிகரித்திருந்தது. முந்தையநாளின் இதேநேரத்தில் வியர்வை வழியும் சென்னையின் பரபரப்பான இரவில் பேருந்தைப் பிடிப்பதற்காக ஓடிக் கொண்டிருந்தபோது இருந்த மனநிலைக்கும், இந்த மலைப்பிரதேசத்து இரவின் குளுமையில் நனைந்து கொண்டிருக்கும் தற்போதைய மனநிலைக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை, சம்மந்தப்பட்டவன் நான் என்பதைத்தவிர.
ஒருவரை ஒருவர் பற்றிய முறையான அறிமுகம் இங்குதான் நடந்தது. கொஞ்சம் தாமதம் என்றாலும் தாமதமில்லை. அறிமுகம் செய்துகொண்டோம். ஆடினார்கள். பாடினோம்.சந்தோசமான இரண்டு மணி நேரங்கள். தூக்கம் கண்ணைச் சுழற்றியது. இரண்டு நாள் அலுப்பு. அவசரத்தேவை ஒரு தூக்கம். மெத்தையில் வந்து விழுந்தேன். ப்பா எவ்வளவு மிருதுவான மெத்தை. சுஜாதாவின் சொர்கத்தீவு படித்துள்ளீர்களா? கடத்தப்பட்ட நாயகன் அய்ங்காரை ஆடம்பரமான அறையில் அடைத்து வைத்திருப்பார்கள். களைத்துப்போன அய்ங்கார் மெல்ல அந்தக்கட்டிலின் மெத்தையைத் தொடுவான். தொட்ட அடுத்தநொடி, அந்த மெத்தை எவ்வளவு மிருதுவானது என்பதற்கு ஒரு உவமையும் கொடுப்பான். கிட்டத்தட்ட இந்த மெத்தைக்கும் அந்த உவமை சாலப்பொருத்தம். (அது என்ன உவமை என்பதை நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்). மெல்ல என்னை அரவணைத்தது அந்த பஞ்சு மெத்தை. அருகில் விக்ரம் என்பதைத் தவிர எந்தவொரு கவலையும் இல்லாத மலைப்பிரதேசத்து இரவது:-) மெல்லத் தூங்கிவிட்டேன்.