18 Jun 2013

சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 5


முன்கதை சுருக்கம் 

வினோத் விக்ரம் பாலாஜி மூவரும் ஒரே துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்தவர்கள். தற்போது பாலாஜி நெல்லை கலெக்டர். கலெக்டர் பங்களா புகுந்து பாலாஜி மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. கார்த்திக் நெல்லை இன்ஸ்பெக்டர். இந்த கேஸை ஆராய்பவர். ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்ட பாலாஜி காணாமல் போய் பின்பு விக்ரம் மூலம் பாதுகாப்பாக மறைக்கப்பட்ட விஷயம் தெரிகிறது. இந்த இடைப்பட்ட வேளையில் பாலாஜி மீது தாக்குதல் நடத்த ஆஸ்பத்ரியினுள் நுழைந்த மர்ம நபரை போலீசார் தப்ப விட்டுவிட்டனர். அவனது கைரேகை மட்டும் கிடைத்துள்ளது.   

இனி 



"விக்ரம், நம்ம எம்.டி வரதராஜன் சொன்னத பத்தி நீ என்ன நினைக்கிற"  வினோத் கையில் வைத்திருந்த கண்ணாடி டம்ளரில் சூடான காபியும், நெல்லை ரயில் நிலைய வாசலில் இருந்த அந்த டீ கடையும் நிரம்பியிருந்தது. 

" அப்போ எம்.டி சொன்னத நீங்க நம்பப் போறதில்லையா, அவரோட ட்வெண்டி பைவ் இயர்ஸ் பாரன்சிக் சர்வீஸ சந்தேகப்படுறீங்களா"

"சந்தேகப்படல விக்ரம், நம்ப முடியல"

"நம்ப முடியாத ஒரு விஷயத்த சந்தேகம்ன்னு சொல்லாம நம்ப முடியலன்னு  சொன்னாலும் அது பேரு சந்தேகம் தான பாஸ்" சிரித்துக் கொண்டே அன்றைய தினசரியைப் புரட்ட ஆரம்பித்தான் விக்ரம்.  

வினோத் கையில் வைத்திருந்த காப்பி டம்ளரை உறிஞ்சிக் கொண்டே சிறிது நேரத்திற்கு முன் அவனது எம்.டி   வரதராஜனுடன் பேசிய தொலைபேசி உரையாடலை அசைப் போட்டுக் கொண்டு இருந்தான்.    

'வினோத் அந்த ஆளோட கைரேகைய அனலைஸ் பண்ணினதுல அவன் திருவள்ளூர் ரவுடி ஆதினு தெரியவந்தது. ஏரியா பஸ்ஸ்டான்ட் பக்கம் சின்ன லெவல்ல வட்டிக்கு விட்டு பஞ்சாயத்து பண்ண ஆரம்பிச்சவன் கொஞ்சம் கொஞ்சமா கொலை முயற்சி கொலைன்னு இறங்கி போலீஸ் கிட்ட பிடிபட்டவன். அவன் பண்ணினதுல ஒரு கொலை  அரசியல் கொலை, ஜாமீன்ல வெளிய வந்தப்போ பழிவாங்கல் முயற்சியா லாரி ஏத்தி கொன்னுடாங்க, ஆக்சிடெண்ட்ன்னு பதிவாகியிருக்கு'

"என்ன சார் சொல்றீங்க, ஆதி இப்ப உயிரோட இல்லன்னு சொல்றீங்களா..? உயிரோட இல்லாதவன் கை ரேகை... எப்டி பாசிபிள் சார். நோ வே ஐ கான்ட் பிலீவ் திஸ்"

"என்னால கூட நம்ப முடியல வினோத், பாரன்சிக் ஆபீஸ்ல இருந்து வந்த தகவல் தான் இது, நானே நேரா போய் விசாரிக்கணும், ஐ வில் கால் யு பேக்"  

"பாஆஆஆஸ்.." வினோத்தை ஒரு உலுக்கு உலுக்கினான் விக்ரம் "கையில இருக்ற காபியவும் கொஞ்சம் குடிங்க...சூடு ஆறிடுச்சுன்னா இந்தக் கடைக்கு திரும்பவும் காபி குடிக்க வரமாட்டீங்க... தி ரியல் டேஸ்ட்.."

ஒரு உறிஞ்சலுக்குப் பின் "அது எப்படி..." என்று ஆரம்பித்த வினோத்தை நிறுத்தி " செத்து போனவன் ஹாஸ்பிடலுக்கு வர முடியும், இது தானே உங்க கேள்வி"

எதுவும் பேசாமல் விக்ரமையே முறைத்துக் கொண்டிருந்தான் வினோத் 

"நாம இதுவரைக்கும் ஆவிங்கள பாலோ பண்ணினது இல்லையே பாஸ், அந்த குறைய தீர்க்க தான் இந்த ஆதி ஆவியா வந்து மிரட்டுரானோ என்னவோ.."

"லூசுத்தனமா பேசாதடா, ஆவிக்கு கைரேகை எல்லாம் கிடையாது.. மொதல்ல ஆவியே கிடையாது... "

"ஒருவேள ஆவி இருந்தா..." 

"ஒருவேள ஆவி இல்லாட்டா, இந்தக் கேள்விக்கு ஆன்சர் கண்டுபிடிக்கறது ரொம்ப ஈசி.. ஒக்கே கார ஸ்டார்ட் பண்ணு.. கலெக்ட்டர் பங்களாவுல பிரிண்ட்ஸ் எடுக்றதுக்கு ஆளுங்க வாறதா கார்த்திக் சொன்னாரு .. அங்க எந்த ஆவியோட பிரிண்ட் கிடைக்குதுன்னு பார்க்கலாம்" என்று கூறிக் கொண்டே பியஸ்டாவினுள் ஏறி அமர்ந்தான் வினோத். 

"பாஸ் பியஸ்டா உபயம் நண்பேன்டான்னு எழுதிப்போமா, யாரு பெத்த புள்ளையோ நம்மள  நம்பி வீடு கொடுத்ருகான், சொகுசா போய் வரதுக்கு கார் கொடுத்ருக்கான்" என்று கூறிக் கொண்டே வண்டியை ஒரு அடி முன்னால் நகர்த்தும் போது வண்டியின் முன்பக்கம் தொம் என்ற சத்தத்துடன் பலமாய் அதிர்ந்தது.

கையில் பிளேடை வைத்துக் கொண்டு ஒருவன் தள்ளாடிக் கொண்டிருந்தான். அவனது சைகை காரை முன் நகர்த்தினால் கீறிவிடுவேன் என்பது போல் இருந்தது.

" பாஸ் எவனோ காமெடி பீஸ், காலங்காத்தால தண்ணிய அடிச்சிட்டு... " என்று கூறிக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினான்.

"த்தா ன்னா அவ்ளோ பெரிய புடுங்கியா நீயி... வண்டிய நவுத்து பாப்போம்...கைல பாத்தேல்ல கீறிட்டுவன் கீறி"... பிளேடை விக்ரம் முகத்தின் அருகில் காற்றில் கீறிக் கொண்டிருந்தவன் சட்டையைப் பிடித்து அப்புறப் படுத்த முயன்ற போது விக்ரமின் கையில் வேகமாய் ஒரு கீறு கீறவே ரத்தம் சீறிக் கொண்டு வெளிவந்தது. 

புது ரத்தத்தின் வலி பொறுக்க முடியாத விக்ரம் தன் கையை உதறிய பொழுது அந்த குடிகாரனின் சட்டையும் கிழிந்து காற்றில் பறக்கத் தொடங்கியது

" அடிங்.. ன்னான்டையே கை வச்சினியா.. பாடு வூடு போய் சேர மாட்டடா.." என்று கத்திக் கொண்டே தள்ளாடிய நிலையில் விக்ரமை நோக்கி மீண்டும் பிளேடு வீசியவனின் கையைப் பிடித்து அவனது முகத்திலேயே மிக அழுத்தமாக ஒரு கீறல் கீறினான் விக்ரம், அவன் முகத்தில் இருந்து வெளிப்பட்ட ரத்தம் விக்ரமின் சட்டையையும் சிவப்பாக்கியது

"டேய் நீயெல்லாம் சவுண்டு வுடும்போதே நாங்கல்லாம் சங்க அறுக்றவங்க..." என்று கூறிக் கொண்டே அவனது முகத்தில் மற்றொரு கீறல் போட இருந்த விக்ரமின் கையைப் பிடித்து நிறுத்தினான் வினோத்.

"என்ன பாஸ் அப்படியே விட்டு வர சொல்றீங்களா... காலங்காத்தாலையே உசுர எடுக்க வந்துட்டானுங்க" என்றபடி மறுபடியும் கையை ஓங்கியபோது கூட்டமாக வந்த நாலு தடியர்கள் " சார்... சார்... சார் .. புல் மப்பு சார்.. சாரி சார், நீங்க போங்க நாங்க பாத்துக்குறோம்" என்றபடி அவனை ஒரு காரில் அடக்கி அங்கிருந்து சீறிக் கிளம்பினர். 

" யாரு பாஸ் இவனுங்க, வந்தானுங்க அடிவாங்குனானுங்க, இப்போ ஓட்றானுங்க..." அந்த கார் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம். அவனது கையில் இன்னும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடனடியாக முதலுதவிப் பெட்டியைக் கொண்டு கையில் கட்டு போட்டான் வினோத்.

"பாஸ் இங்க பாருங்க..." கார் டயர் அருகில் நைந்த நிலையில் கிடந்த ஒரு பாக்கெட் டயரியை எடுத்தான். "அந்த தடிப்பய சட்டையில இருந்து தான் விழுந்து இருக்கும், எதுக்கு வச்சிகோங்க... அவன் ஜாதகம் என்னான்னு கண்டுபிடிக்க முடியுமா பாப்போம்." என்றபடி வினோத்திடம் கொடுத்தான். 

கையில் துண்டுச் சீட்டு கிடைத்தாலே பலமுறை படிக்கும் வினோத் அந்த டயரி கைக்கு வந்ததுமே ஆராய்ச்சி பண்ணத் தொடங்கினான். பெரிதாக எழுதுவுமே எழுதி இருக்கவில்லை. சிலபக்ககங்களில் ஒன்றிரண்டு போன் நம்பர் எழுதி இருந்தது. ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டியவனுக்கு இறுதிப் பக்கத்தைப் பார்த்ததும் ஆச்சரியம்

" இங்க பாருடா, எதோ ஒரு மெயில் ஐடியும் அதோட பாஸ்வோர்டும் எழுதி இருக்கு. போயும் போயும் நம்மகிட்ட போய் தொலைசிருக்கான் பாரு...  என்னே ஆச்சரியம்...!" என்றபடி சிரிக்கும் போது செல்போன் ஒலித்தது.

"எம்.டி" என்றபடி ஆன்சர் கீயைத் தொட்டான் வினோத். இருநிமிட உரையாடலுக்குப் பின் 

"மைலாப்பூர் பாரன்சிக் ஆபீஸ்ல இருந்து பேசினாரு.. எல்லா ரெகார்ட்ஸும் சரியா இருக்காம், ஆதி டெத் சர்டிபிகேட் மொதக்கொண்டு சரியா இருக்குதாம்... அவன் போட்டோ அனுப்பி விட்றதா சொல்லி இருகாரு"

" போட்டோவா... ஹா ஹா ஹா..." பெரிதாக சிரித்து விட்டு தொடர்ந்தான் விக்ரம் "பாஸ் நம்ம ஆபீஸ்ல ஒரு வாசகம் எழுதி இருக்குமே நீங்க கவனிச்சது இல்லையா... முகம் ஏமாற்றலாம், கைரேகை மாற்றாதுன்னு.. அப்படிப்பட்ட நம்ம எம்.டியா இப்படி சொன்னது"

"எல்லாமே ஒரு ரெபரன்ஸ்க்கு தான் விக்ரம், அவரு உன்ன விட புத்திசாலி"

"என்ன மட்டும் புத்திசாலியா ஏத்துக்காதீங்க..." சலித்துக் கொண்டே வண்டியை கலெக்டர் பங்களா நோக்கி விரட்டினான் விக்ரம்.  

பாரன்சிக் ஆட்களுடன் வேலையில் மும்மரமாக இருந்த கார்த்திக் வினோத்தை பார்த்ததும் அவர்களை நோக்கி வேகமாய் வந்தார். வந்தவரிடம் ஒருவித பதற்றம் இருந்தது. 

"வினோத் ஒன் அன்பிலீவபில் திங்", கார்த்திக். 

"இறந்து போன ஆதியோட பிரிண்ட்ஸ் சிக்கிருச்சு அது தானே... வீ அல்ரெடி நோ சார்" சிரித்துக் கொண்டே கிண்டலாய் சொன்ன விக்ரமின் இந்த பதிலை இருவருமே எதிர்பார்க்கவில்லை.     

"விக்ரம் கண்ட்ரோல் யுவர் வோர்ட்ஸ், நீங்க சொல்லுங்க கார்த்திக்"

"அதான் அவரே சொல்லிட்டாரே, நான் சொல்ல வந்ததும் அதத்தான் வினோத்.." கூறிக்கொண்டே விக்ரமை முறைத்தான் கார்த்திக்.

" க்கே.. க்கே கூல் கார்த்திக்... இந்த பங்களால பிரிண்ட்ஸ் எடுத்து முடிச்சிட்டாங்களா.. " டாப்பிக்கை மாற்றினான் வினோத்...

"நாங்க அந்த பிரிண்ட்ஸ பார்க்க முடியுமா கார்த்திக்"

" பார்க்கலாம் வினோத், பட் அத லேப்க்கு அனுப்பி தான் வெரிபை பண்ண முடியும், இப்ப அதப் பார்த்தாலும் ஒன்னும் புரியாது "

"ஸ்யுர்... கார்த்திக் லேப்க்கு அனுப்பி டெஸ்ட் பண்ணிக்கலாம், பட் இங்க கிடைச்ச கை ரேகைகள இமேஜ் பிராசஸிங் மூலமா நமக்கு அல்ரெடி கிடைச்ச ரேகைங்க கூட மேட்ச் பண்ணி பார்க்கலாம். ஹாஸ்பிடல்ல கிடைச்ச ரேகையும் இங்க கிடைச்சதும் மேட்ச் ஆகுதானு உடனே வெரிபை பண்ணும் அதான்..."

"ஓ இப்படி எல்லாம் கூட வழி இருக்குதா... அது என்ன இமேஜ் பிராசஸிங்..?" ஒரு கேள்விக் குறியுடன் புருவத்தை உயர்த்தினான் கார்த்திக்.

"இது கொஞ்சம் பழைய டெக்னாலஜி தான், பட் இப்ப நிறைய டெவலப் ஆகி இருக்கு. இத ப்ரோசஸ் பண்றதுக்கு நிறைய அல்காரிதம் வேணும், அல்காரிதம் தெரிஞ்சிருக்கணும், சிக்கலான கணக்குகள் அதுல நிறைய இருக்கும். விக்ரம் சொந்தமாவே இமேஜ் பிராசஸிங் அல்காரிதம் எழுதுவான், இன்னொரு நாள் புரியிற மாதிரி சொல்றேனே"

முதல் முறை கார்த்திக் விக்ரமை கொஞ்சம் மரியாதையுடன் பார்த்தான். "உண்மையா விக்ரம்..." என்ற கார்த்திக்கை நோக்கி " பாஸ் கொஞ்சம் ஓவரா சொல்றாரு.. எங்க பேர்ல ஒரு இமேஜ் பிராசஸிங் அல்காரிதம்க்கான பேட்டன்ட் இருக்கு.. பட் விக்கறதா இல்ல" என்று கூறிக் கொண்டே பாரன்சிக் ஆளுங்களிடம் இருந்து வாங்கிய கைரேகை பிரிண்ட்சை லேப்டாப்பிற்கு மாற்றி இமேஜ் பிராசஸிங் செய்யத் தொடங்கினான் விக்ரம்.

கார்த்திக்கும் வினோத்தும் எதாவது தடயம் சிக்குமா என்றபடி பங்களாவை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அந்நேரம்...

"பாஆஆஸ்..." இன்னதென்று இனங்காண முடியாத குரலில் விக்ரம் அழைக்க அந்த குரலை நோக்கி வினோத்தும் கார்த்திக்கும் நகர்ந்த பொழுது 

"பாஸ் அந்த ஆவி இங்கையும் வந்துட்டுப் போயிருக்கிறதா சிட்டி சொல்லுது பாஸ்" என்றான் விக்ரம் தனது லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டே...




                                                                                                   உன்னைத் தொடர்கிறேன்... 

10 comments:

  1. தொழில் நுட்பம் கலந்த திகில் கதை படிப்பது எப்பவுமே சுவாரசியம் தான். ரசித்தேன்.

    ReplyDelete
  2. தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சீனு! கதை கலக்கலா இருக்கு. அடுத்தது என்னன்னு ஆவலை தூண்டுகிறது சிறந்த கிரைம் கதை எழுத்தாளராக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //மொதல்ல ஆவியே கிடையாது.//
    அப்படியெல்லாம் பொதுவா சொல்லப்படாது.. ;-)

    கதையில் தலைவர் சுஜாதா அவர்களின் டச் தெரிகிறது.. தொடர்ந்து வருகிறேன்..

    ReplyDelete
  5. சுவாரஸ்யத்துடன் செல்கிறது... ஆவி பறக்க வைக்கிறதே... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. நல்லா கதையும் சொல்லுறீங்க தம்பி.தொடருங்கள் எனது வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  7. அப்பாதுரை கருத்தையே ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  8. வெகு சுவாரஸ்யமாக செல்கிறது. தொடருங்கள்....

    ReplyDelete
  9. ஆஹா சுவாரசியம் பேய்தானோ தொடரட்டும் தொடர்கின்றேன் சீனு!

    ReplyDelete
  10. கொஞ்ச நாளா தொடர் காணலையேன்னு பார்த்தேன்! முன்கதையோடு தொடர்ந்து பிரமாதப் படுத்திட்டீங்க! நன்றி!

    ReplyDelete