29 Jun 2013

காதல் கடிதம் பரிசுப் போட்டி - மூன்றாம் வார தகவல்கள்



திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டிக்கு சற்றும் எதிர்பாராத வகையில் நீங்கள் அளித்த உற்சாகம் மிக சந்தோசமாய் உள்ளது. அவ்வபோது உங்களுக்கு நியாபகப் படுத்தவும் உற்சாகப்படுத்தவும் வாரம் ஒருமுறை போட்டி குறித்த தகவல் அடங்கிய இந்த பதிவு வெளியாகும்.

ஒவ்வொரு வாரமும் இந்தப் பதிவு புதுப்பதிவாக வெளிவராது, புதுப்பிக்கப்பட்ட பதிவாக வெளிவரும்.

இப்பதிவில் போட்டியில் கலந்து கொள்வோர்களின் விபரம், அவர்கள் எழுதிய பதிவுகளின் லிங்குகள் போன்றவை புதுபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

போட்டி குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி. 

போட்டியில் கலந்துகொள்ள சம்மதித்தவர்களின் பெயர் பட்டியல்.

பதிவர்களின் பெயர்களின் மீது கிளிக்கினால் அவர்களது தளம் திறக்கும்...

போட்டியில் பங்கு கொள்வோர் அனைவருக்கும் உற்சாகமான வாழ்த்துக்கள். 

***********************

முதல் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள் 

நண்பர்கள் கே.எஸ்.எஸ்.ராஜ் - நான் எழுத நினைத்த காதல் கடிதம் 





இரண்டாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள் 

வெற்றிவேல் - காதல் கடிதம் திடங்கொண்டு போராடு பரிசுப் போட்டி 

ஜே தா - காதல் கடிதம் 

சிவநேசன் - காதல் கடிதம் பரிசுப் போட்டி - திடம்கொண்டு போராடு 

அகில் குமார் - திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி 

மாலதி - திடங்கொண்டு போராடு காதல் கடிதம் 

மூன்றாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள் 

தென்றல் சசிகலா - எழுத நினைத்த காதல் கடிதம் 

ஜீவன் சுப்பு - கலவரகாரனின் காதல் கடிதம் 

கிரேஸ் -  எழுத மறந்த காதல் கடிதம் 

கோவை ஆவி - உறக்கம் பறித்த சிநேகிதியே 
***********************

இப்போட்டியில் பங்கு கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். உற்சாகத்துடன் பங்கு கொள்ளுங்கள். பதிவுலகம் மறக்க முடியாத ஒரு காதல் கடிதம் படைப்போம்.

பின்வரும் படத்தினை உங்களது தளத்தில் இப்போட்டி பலரையும் சென்று சேர உதவுங்கள்.



Layout -> ADD Gadjet -> HTML/JAVA Script  

<a href="http://www.seenuguru.com/2013/06/love-letter-contest.html" target="_blank"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHNI_9cw1ZSEuPR2Fszy5-VWKDUnsu1yiuWkL20u2BJ7H4T9InBnji41HknXys6BiqK0R4dzRcXXvs5oloUkWM5o2XNPPkATxQVKmt0HPkMk8W1D26uFxygwo27XVIoQoqaJDBBXl5TwA/s1600/seenuguru.gif"/></a>



நன்றி 
சீனு  

24 Jun 2013

எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் - எனக்கு கொடுத்த மொக்கை

அலுவலகத்தில் புதிதாக தமிழ் வலைபூக்கள் என்று ஒரு வலைபூ ஆரம்பித்துள்ளார்கள்.  சமூக வலைத்தளம் போன்றது, சுருங்கச் சொன்னால் பேஸ்புக் பாதி பிளாக் மீதி என்று கலந்து செய்த கலவை அது, அந்த வலைப்பூவின் மேல் ஒரு வாசகம் எழுதியுள்ளார்கள் அந்த வாசகமே அந்த வலைபூ மேல் ஈர்ப்பு வர மிக முக்கிய காரணம், அந்த வாசகம். 

"நம் கருத்துக்களை தீந்தமிழில் பதியவும் பகிரவும் ஒரு இடம் (தயவு கூர்ந்து தமிழ் மொழியில் மட்டும் பகிரவும்)"  .    

இங்கு தமிழில் எழுதுவோரும், தமிழிலேயே கருத்துக்களைப் பரிமாறுபவர்களும் மிக அதிகம். அக்குழுவின் மூலம் கடந்த வாரம் திருவான்மியூர் கடற்கரையில் சந்திக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள், நானும் சென்றிருந்தேன், பதினைந்து பேர் வந்திருந்தனர், தங்கள் அலுவலக விசயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள், மெல்ல தமிழ், தமிழ் வலைபூ பற்றியும் பேசத் தொடங்கினர், அங்கிருந்தவர்களில் நான்கு பேர் பிளாக் எழுதுபவர்கள்.


அதில் ஒருவர் என்னிடம் வந்தார், "தம்பி நான் 'எங்கள் பிளாக்'கோட வாசகன், கே.ஜி கௌதமன் உங்களுக்கு தெரியுமா?" என்றார். 

"ஓ தெரியுமே, அலெக் அனுபவங்கள் எழுதுறாரே", என்பதோடு நான் விட்டிருக்கலாம் தான், விடவில்லையே.

அவர் தொடர்ந்தார் "ஆமாப்பா, நானும் அவரும் அசோக் லைலான்ட்ல ஒண்ணா வொர்க் பண்ணினோம், கௌதமன் உங்களுக்கு கூட தெரியுமா என்றார்" என்னிடம்.

"என்ன சார் இப்டி கேட்டுடீங்க, நா கௌதமன் சார், ஸ்ரீ ராம் சார் எல்லாரும் நல்ல பிரண்ட்ஸ்", இப்போது தான் ஒரு விஷயம் மனதில் எட்டி மிதித்தது. இது வரை நான் ஸ்ரீராம் சாரை பார்த்ததே இல்லை. போனில் பேசுவது உண்டு, கௌதமன் சார் அவர் ப்ளாக் ப்ரொபைலில் ஒரு படம் வைத்திருக்கார், அதை வைத்ததற்கு வைக்காமலேயே இருக்கலாம்,ஜூம் பண்ணினால் அவரது முகத்தைத் தவிர மற்றெல்லாம் தெரிகிறது.


மூளைக்குள் திடிரென்று ஒரு கேள்வி, 'ஒருவேள நம்மட்ட பேசிட்டு இருக்கவர் தான் ஸ்ரீராம் சாரோ' என்று. அப்போது தான் கவனித்தேன் என்னிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்பவரின் பெயர் கேட்கவில்லை என்பதை. சிறிது நேரத்தில்  பின்னால் இருந்து மற்றொரு நண்பர் அவரை 'பாலா' என்று பெயர் சொல்லி அழைத்தார், அடுத்த சந்தேகம் ஸ்ரீராம் சார் பேஸ்புக் நேம் 'ஸ்ரீராம் பாலசுப்பிரமணியம்' , ரைட்டு டா பகவான் கட்டம் கட்டிட்டார், இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ என்றவாறே அவரை கவனித்தேன்.

அவர் சாதரணமாய்த் தான் என்னைப் பார்த்தார்,சிரித்தார். எனக்கோ அவர் என்னை நக்கலாக பார்ப்பது போலவே தோன்றியது. அப்புறம் அவரிடம் பேச்சு கொடுத்தேன், ஸ்ரீராம் ஸார் டோன் எனக்குத் தெரியும், இவருக்கும் அவருக்கும் ஆறில்லை அறுபது வித்தியாசம், இருந்தாலும் நம்பிக்கை வரவில்லை. எங்கே என்னை வைத்து காமெடி செய்கிறாரோ என்பது போலவே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன், "என்னோட வாய வச்சிட்டு சும்மா இருந்தா தான".

மீண்டும் என்னிடம் கேட்டார் "தம்பி எவ்ளோ நாளா பிளாக் எழுதுறீங்க"

'இவர் தெரிஞ்சு கேட்காரா, தெரிஞ்சுக்க கேட்காரா' ஒன்றுமே புரியவில்லை, சரி மொபைலை எடுத்து ஸ்ரீராம் சாருக்கு போன் பண்ணினால் நடந்து கொண்டிருக்கும் தில்லுமுல்லுவை கண்டுபிடித்து விடலாம், விடலாம் தான் என்றாலும் எதோ ஒன்று என்னைத் தடுத்து.      

பிளாக் பற்றி அவர் என்னிடம் கேட்கும் போதெல்லாம் எனக்கு அப்போதே  அங்கிருந்து எழுந்து ஓடிவிடலாம் போல் இருந்தது. சரி ஆனது ஆச்சு போற வரைக்கும் போட்டும் என்று விட்டுவிட்டேன். அவர் வேறு அவ்வபோது என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார், "ஏண்டா டேய் நீ என்ன பார்த்தது கூட கிடையாது, ஆனா நல்ல பிரண்ட்ஸா " என்று கிண்டலடிப்பது போலவே இருந்தது அந்த சிரிப்பு.

ஒரு மணி நேரத்திற்குப் பின் சபை கலையும் நேரம், "சீனு" என்று ஒரு குரல், யார் என்று பார்த்தால், அவர் தான், அவரே தான் "சொல்லுங்க சார்" என்றேன்.

"உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா, முருகன் பிடிக்குமா" என்றார்.

"நிறையவே உண்டு சார், எம்பெருமான் முருகப் பெருமானை பிடிக்காமல் போய்விடுமா" என்று சொல்ல நினைத்தாலும் சொல்ல வில்லை, அவரே தொடர்ந்தார்.

" வடபழனி முருகன் பற்றி ஒரு இசைத் தொகுப்பு, பாடல்கள் எழுதினது நான்" என்றார்.

மிக சந்தோசமாய் அந்த இசைத் தட்டை வாங்கினால் கௌதமன் இசையகம் என்று இருந்தது, மீண்டும் ஒருமுறை அவர் முகத்தை உற்று நோக்கினேன், சிரித்தார், சிரிக்க மட்டுமே செய்தார். நானும் சிரித்தேன்,  சிரிக்க மட்டுமே முடிந்தது, எங்காவது ஸ்ரீராம் என்ற பெயர் அத்தட்டில் தட்டுப் படுகிறதா என்று பார்த்தேன்,

காரணம் கௌதமன் சார் ஒரு இசைப் பிரியர், அவர் இசை, இவர் பாடல்களோ என்று வேகமாய் ஆராய்ச்சி செய்தேன், எங்கும் அவர் பெயர் தட்டுப் படவில்லை, பின்பு தான் கொட்டை எழுத்தில் எழுதியிருந்த அந்த எழுத்துக்களைப் பார்த்தேன், 'மோகன சிவ பாலன்' என்று எழுதி இருந்தது.                          

ஆமாம் அவர் பெயர் 'மோகன சிவ பாலன்' அவரது வலைபூ பெயர் மோ.சி.பாலன்.

இதைப் படித்து முடிக்கும் போது நிச்சயம் ஸ்ரீராம் ஸார் நக்கலாய் ஒரு சிரிப்பு சிரிப்பார் என்று தெரியும், என்ன பண்றது கலி காலம்.

கதை சொல்லும் நீதி : கதையில தான் நீதி கிடைக்கும், நிஜத்துல மொக்கை தான் கிடைக்கும் யுவர் ஆனர்...   

20 Jun 2013

யாராவது சொல்லுங்களேன் பிரபலம் ஆவது எப்படின்னு...!


அதிகாலை பத்து மணி, நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது தான் அரசனிடம் இருந்து அந்த விபரீத போன் கால் வந்து என்னை எழுப்பியது

" யோவ் தலைவரே, எந்தியா", அரசன் குரலில் ஆகசிறந்த படபடப்பு தெரிந்தது.

இது சற்றே இலக்கிய நயம் கமழப் போகும் பதிவென்பதால் சில பல ஆகச் சிறந்தக்களையும், அவதானிப்புகளையும், பாடாவதிகளையும் இலக்கிய மொன்னைகளையும் நீங்கள் கடக்க வேண்டியிருக்கும் என்பதால் சற்றே பொருத்தருள்க.

"சொல்லுங்க தலைவரே, இப்ப என்ன பிரச்சன உங்களுக்கு" 

"யோவ் பிரச்சன நமக்கு தான்யா, எத்தன நாளைக்கு தான் வெறும் பதிவு மட்டுமே எழுதிட்டு இருக்கது, நாமளும் பிரபலம் ஆகணும்யா" 

"இப்ப அதுக்கு என்னன்றீங்க"

"நம்ம பால கணேஷ் சார், ஸ்கூல் பையன், ஜீவன் சுப்பு எல்லாரும் என் ரூமுக்கு வாராங்க, ரூம்ல லைட்டு போட்டு யோசிக்கிறோம், பிரபலம் ஆகுறோம், உடனே கிளம்பி வா"

"லைட்டா போட்டு யோசிச்சா தான் தப்பு, லைட்டு போட்டு யோசிச்சா தப்பில்லைதானே"  

அரசன் சொல்வது சரிதான் எத்தனை நாளைக்கு தான் வீட்டில் மட்டுமே திட்டு வாங்கிக் கொண்டு இருப்பது, நாலு பேர் நம்மை காய்ச்சி எடுத்தால் தானே பிரபலம் ஆக முடியும், சமுதாயத்திற்காகவே வாழ்ந்தான் என்று பெயர் எடுக்க முடியும். 

எனக்கு முன்பே முன்னவர்கள் குழுமி இருந்தார்கள், வரவேற்பும் சற்றே ஆகசிறந்ததாய் அமைந்தது.

வாத்தியார் தான் முதலில் ஆரம்பித்தார், "எலேய் நாந்தான் சீனியர், அதுனால நான்தான் மொதப் பிரபலம் ஆகணும், அப்புறம் நானே உங்கள பிரபலம் ஆக்கிருதேன்"

"அதுவும் சரிதான் தம்பி, சாருக்கு தான் கொஞ்சம் அமானுஷ்யமான முகம் கூடவே அம்சமான முகம், அப்டியே செட் ஆகும்" என்று அப்பாவியாய் ஐடியா கொடுக்க ஆரம்பித்தார் ஸ்கூல் பையன்.

"தலைவரே, இம்புட்டு அப்பாவியான முகத்த நான் பார்த்ததே இல்ல, நம்ம ஸ்கூல் பையன் கிட்ட தான் அத்தனை சாமுத்ரிகா லட்சணமும் பொருந்திப் போய் இருக்கு, இவர அமானுஷ் ஆக்குறோம், வாத்தியார தீவிர இலக்கியவாதி ஆக்குறோம், கூடவே நாமும் பிரபலம் ஆகுறோம், எப்புடி ஐடியா", எனது பாடாவதி ஐடியாவிற்கு கூட்டம் செவி சாய்ப்பது போல் தோன்றியது.

" சீனு, எனக்கு ஆபீஸ்ல பேஸ்புக் கட், நான் என்ன பண்றது?" என்று பூனை போல் பம்மிக் கொண்டே ஒரு குரல் ஓரமாய் இருந்து வந்தது, யார் என்று பார்த்தால் நம் ஜீவன் சுப்பு.

" மிஸ்டர் ஜீவன், உங்களுக்கு பிரபலம் ஆகணுமா வேணாமா", இது ஆகசிறந்த நான்.

" ஆவணும் ஆவணும்", ஜீவன் 

"ஆமா இதுக்கு மட்டும் வேகமா தலைய ஆட்டுங்க, ஆனா பேஸ்புக் இல்ல ஆபீஸ் தொல்லன்னு சொல்லுங்க, சமீப கால உங்க கமெண்ட், பதிவு எல்லாத்தையும் பார்க்கும் போது நீங்க ஆகசிறந்த பதிவுலக இமிட்டரி ஜீவநோஸ்க்கியா வர வாய்புகள் பிரகாசமா இருக்கு. நாளையில இருந்து நீங்க பேஸ்புக்ல குதிக்கிறீங்க, லைக்குகள அல்லுறோம், படிகிறவன் பூரா பேரையும் கொல்லுரோம் அப்டியே பிரபலம் ஆகுறோம்"

" அட அட அட பிரபலம் பிரபலம் ன்னு சொல்லும்போதே எம்புட்டு சுகமா இருக்கு", ஸ்கூல் பையன்.  

" யோவ் அண்ணாச்சி பிரபலம் ஆகுற வரைக்கும் தான்யா சுகமா இருக்கும், அப்புறம் பாருங்க ஒரே ரணம் தான்", அரசன்.

இந்நேரத்தில் வாத்தியார் பால கணேஷ் "சரிப்பா இலக்கியத்துக்கு நான் தயார், அமானுஷ் ரெடி, இமிட்டரி ரெடி, நீயும் அரசனும் என்ன பண்ண போறீங்க"

" வாரேவா, இப்ப தான் பாயிண்ட புடுச்சீங்க, நீங்களும் ஸ்கூலும் போகப் போற பாத பூப்  பாத, நானும்  அரசனும் போகப் போற பாத உங்கள உரண்ட இழுக்கப் போற சிங்கப் பாத, ஜீவன் பாத என்னதுங்கறது தான் ட்விஸ்ட், இதுல முக்கியமான விஷயம் நாம போறப் பாத ஒரே பாதங்கறது யாருக்கும் தெரியக் கூடாது, முக்கியமா இந்த உலகத்துக்கு", சீனு  

"தலைவரே நமக்குள்ள இப்ப சண்ட வரணும், அதுக்கு என்ன பண்ணப் போறோம்", அரசன்   

வாத்தியார் ஆரம்பித்தார் "அடேய் கணேசா, அப்படின்னு யாராது என்ன திட்டி பதிவு போடுங்க, சீக்கிரம் சீக்கிரம் நாம பிரபலம் ஆயிறலாம்"  

"வாத்தியாரே அவசரப்படாதீங்க, மொதல்ல நாம வேளச்சேரி போறோம், அங்க ஒரு இலக்கியவாதிய உங்க கூட பேச சொல்லுவோம், அவரு என்ன பேசினாலும் நீங்க சிரிக்க கூடாது, 'சார் டீ சாப்டீங்களான்னு கேட்டா கூட' நான் எவ்ளோ பெரிய பிரபலம் தெரியுமா என்ன பாத்து நீ எப்படி அந்தக் கேள்விய கேக்கலாம்ன்னு பொங்க ஆரம்பிக்கீங்க, ரொம்ப முக்கியமான கட்டம் வாத்தியாரே, கோட்ட விட்டா நம்மால ஒன்னும் பண்ண முடியாது."

"சரிப்பா அடுத்து என்ன பண்ணும்"

"பொறுங்க வாத்தியாரே ஒன்னு ஒன்னா சொல்றோம், அந்த ஆள மீட் பண்ணினதும், 'அப்டியும் இருக்கிறார்கள்', 'வேளச்சேரியும் சிங்கிள் டீயும்'ன்னு பதிவு போடுறீங்க", இடையிடையே மொன்னைகள் நொன்னைகள் என்பன போன்ற சில பதிவுகளை வாத்தியார் எழுதி திட்டு வாங்கிட்டே இருக்கனும்.  

இனி தான் நம்ம ஸ்கூல் பையன் என்ட்ரி.

அது எப்படி டா ஆகசிறந்த என் தலைவனப் பாத்து அப்படிக் கேக்கலாம்ன்னு கவிதை எழுத ஆரம்பிக்கிறாரு நம்ம ஸ்கூல், 'நாலும் நாலும் எட்டு, என் இலக்கியம் தான் பெஸ்ட்டு'ன்னு முத கவித, லைக் அள்ளுது. 


இப்ப நம்ம இமிட்ரி "பிரபலங்களுடன் வாழ்வதை விட பிரபலமாய் வாழ்வதையே மனம் விரும்புகிறது"ன்னு ஸ்டேடஸ் போட நானும் அரசனும் உள்ள நுழையிறோம்...

சிங்கிள் டீ பிரச்சனைய தேசியப் பிரச்சனையா மாத்துறோம், ஒரே வெட்டு குத்து, ஒருத்தனுக்கும் ரத்தம் வராது, ஆனா படிகிறவன் மொத்த பேருக்கும் கண்ணுல ரத்தம் இல்ல கருவிழியே வெளியில வார மாதிரி சட்டைய கிழிச்சிட்டு சண்ட போடப் போறோம்.

இந்த நேரத்துல ஊரே 25 ரூபா கேன் வாட்டர் வாங்கி குடிக்கும் போது நீங்களும் ஸ்கூல் பையனும் பிஸ்லெரி வாட்டர் வாங்கி குடிக்கிறீங்க, இத நாங்க போட்டோ எடுக்குறோம்.  அப்புறம் மிரட்டுறோம், நீங்களோ தண்ணி குடிச்சே பல நாள் ஆகுது இதுல எங்க பிஸ்லேரி குடிகிறதுன்னு இலைமறை காய்மறைவா பதில் சொல்றீங்க"            

ஆதாரத்த வெளியிட்டறுவோம்னு மிரட்டுவோம், ஆனா வெளியிட மாட்டோம், நம்ம ஊரு லோக்கல் சேனல் அத்தனயிலையும் ஏற்பாடு பண்ணிட்டோம், டெயிலி ஒரு ப்ரோக்ராம், மக்கள் பிரச்சனைய பேச வாங்கன்னு கூப்பிடுவாங்க நீங்களும் போகனும் ஆனா மக்கள் பிரச்சனைய பேசுற மாதிரியே உங்க பிரச்சனையைப் பத்தி மட்டும் பேசிட்டு வரணும். 

பதிவுலக பிரபல கவிஞர்கள் இருபது பேர வச்சி 20-20 நடத்துவோம், அதுல உங்களுக்கு ஒரு வாய்ப்பு, பக்கத்துக்கு கிரகமான புளூட்டோ அதிபர பத்தி புளுகுறீங்க கூடவே புகழுறீங்க, நாங்க கடுப்பாகுறோம். இங்க தான் உச்ச கட்டப் போர்.   

"பிரபலம் ஆவது எப்படி என்னிடம் ஆயிரம் டிப்ஸ், சொன்னால் நீங்களும் பிரபலம் ஆக வாய்ப்பு இருப்பதால் பிம்பிளிக்கி பிளாப்பி" என்பது போன்ற சம்மந்தமில்லாத ஸ்டேடஸ்களை போட்டு ஜீவன் சுப்பு ஆயிரம் லைக்குகளுக்கு மேல் அள்ளுவாரு.    

இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு பத்தாம் தரமான இலக்கிய இதழ்ல எழுத வாய்ப்பு வாங்கி தருவோம், அங்கையும் உங்க பிரச்சனைய எழுதிட்டு, அப்படியே அதுல எங்க பேரையும் நாங்க பண்ற அக்கப்போரையும் ஸ்க்ரீன் ஷாட்டோட எழுதணும், பக்கத்துக்கு தெரு ஆயாக்கு நியாயம் கிடைச்சது எனக்கு கிடைக்கலன்னு கண்ணீர் விடனும்.  

அடுத்த நாள் காலையில ஆள் கும்மி பாய்ஸ் உங்களைப் பத்தி தான் எழுதி இருக்கேன், உடனே நாதஸ்வரம் கெட்டிமேளத்துடன் போய் வாங்குங்கன்னு ஸ்டேடஸ் போடணும்.  

ஊரே நம்மள பத்தி தான் பேசும். நமக்கு பேக்ரவுண்ட் சாங் எல்லாம் உண்டு.  

லைக்கு கமெண்ட்டு ஷேரு... பலம் பலம்     
லைக்கு கமெண்ட்டு ஷேரு... பலம் பலம் 

ஆகுறண்டா உலகத்துல பேமஸ் ஆளு 

லைக்கு கமெண்ட்டு ஷேரு... பலம் பலம்     
லைக்கு கமெண்ட்டு ஷேரு... பலம் பலம் 

கமெண்ட்டு ஷேரு ஷேரு....கமெண்ட்டு ஷேரு ஷேரு...
கமெண்ட்டு ஷேரு ஷேரு...கமெண்ட்டு ஷேரு ஷேரு...

ஆகுறண்டா உலகத்துல பேமஸ் ஆளு

"ஆனாலும் சீனு எனக்கொரு டவுட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு நாதாரித்தனம் பண்ணியும் நாம பிரபலம் ஆகாட்டா என்ன பண்றது?" ஸ்கூல் பையன் முகத்தில் எங்கே பிரபலம் ஆகாமல் போய் விடுவோமோ என்பதற்கான பய ரேகைகள் தெரிந்தது.

"கவலைப் படாதீங்க மிஸ்டர் ஸ்கூல் பையன், 'என் அருமையான தயிர் சாதங்களே தயிர் சாதத்தை சாப்பிடு, ஊறுகாயை எதிர்பார்க்கதேன்னு' சாது சாத்தப்பன் பவர் டிவியில நமக்காகவே சொல்லி இருக்காரு. சோ தயிர் சாதம் தான் முக்கியம் ஊறுகாய் இல்லன்னு ஜீவன் சுப்புவ ஸ்டேடஸ் போட சொல்லுவோம், அதுக்கு விழுற லைக்குல நாம ஆகுறோம் பிரபலம்"

அரசன் மண்டையை சொரிந்து கொண்டே, "யோவ் இப்ப என்னய்யா சொன்ன, ஒண்ணுமே புரியலையே" 

"இப்டி புரியாத மாதிரி ஸ்டேட்டசும் சண்டையும் போட்டாலே போதும், கண்டிப்பா நாம பேமஸ் தான்"

அந்நேரம் எங்கள் அண்ணன் மெட்ராசிடம் இருந்து போன் " சீனு பவர் டிவியில உங்களில் யார் அடுத்த பிரபல தாதா காண்டஸ்ட் நடக்குது சீக்கிரம் வாங்க, அப்ப்ளிகேசன் பார்ம் காலியாகப் போகுது என்ற தகவல் வந்ததும் எங்கள் மொத்த கூட்டமும் அலறி அடித்துக் கொண்டு பவர் டிவியை நோக்கி ஓடியது

சம்பவ இடத்தில மெட்ராஸ் அருகில் நின்று கொண்டிருந்த பட்டிக்ஸ் பவர் டிவியை மொய்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து பார்ரா மொத்த டேஸ்போர்டும் இங்க தான் வந்து நிக்குது என்று பேஸ்புக்கில்  ஸ்டேடஸ் போட அதைப் படித்து மொத்த கூட்டமும் பட்டிக்ஸ் மீது கொந்தளிக்க யாருமே எதிர்பாரா வண்ணம் பட்டிக்ஸ் ஒரே ஸ்டேடஸ் ஓகோன்னு பிரபலம் என்று பிரபலமாகி விடுகிறார்.

"யாராவது சொல்லுங்களேன் பிரபலம் ஆவது எப்படின்னு" என்று ஸ்கூல் பையன் அங்கலாய்க்க பிரபலம் ஆக முடியா வருத்தத்தில் 'என்னவோ போடா மாதவா' என்று சொல்லிக் கொண்டே எங்கள் கூட்டம் கலைந்தது.  

நாடோடி எக்ஸ்பிரஸ் - குற்றாலம் சுத்தலாம் வாங்க

காலை சரியாக ஒன்பது மணிக்கு என் நண்பர்கள் அனைவரும் ஏறியதும் அந்த பேருந்து குற்றாலம் நோக்கி புறப்பட தயாரானது. ஜன்னலோர சீட்டுக்கான சண்டைகள், டீச்சரின் மிரட்டல்களுடன் தூங்குமூஞ்சி டிரைவர் தாத்தா வண்டியை மெதுவாக நகர்த்தத் தொடங்கினார். அப்போது எனது வயது ஐந்ததைத் தொட்டு ஆறை நோக்கி வளர்ந்து கொண்டிருந்தது. எனது முதல் கல்விச் சுற்றுல்லா மற்றும் குற்றாலம் என் நினைவில் பதிந்த முதல் சுற்றுல்லா.

வாழ்வில் முதன்முதலில் பார்த்ததாய் நினைவில் இருக்கும் அன்றைய பழைய குற்றாலம் வெறிச்சோடிக் கிடந்த போதும் முழுமையாய் நினைவில் இருக்கும் அதன் குளுமை. வெள்ளை சட்டை, ப்ளு ட்ரவுசர். "டீச்சர் சேட்ட பயங்கரமா பண்ணுவான், உங்கள நம்பி தான் அனுப்புறேன்" என்று அம்மா சொன்னதற்காகவே எனது கையை விடாமல் பிடித்திருந்த டீச்சர், அதையும் மீறி அருவியைப் பார்த்த சந்தோஷத்தில் ஆர்ப்பறித்து ஓடி அடிவாங்கியதன் வலி. 


கையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை என்னையும் மீறி பறித்து உடனடியாய் மரத்தில் ஏறிக் கொண்ட குரங்கு, பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு ரூபாய், கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில். அதில் இருந்த மொத்த வெந்நீரையும் தூர ஊற்றி குளுமையான நீரை நிரப்பி திரும்பும் வழியெல்லாம் குடித்துக் கொண்டே வந்த பேருந்துப் பயணம். எதுவும் மறக்கவில்லை. இதற்கு முன்பே என்னை குற்றாலம் அழைத்து சென்றிருப்பார்கள் இருந்தாலும் அந்த இன்பச் சுற்றுல்லாமூலம் சென்ற குற்றாலம் தான் என் நினைவில் வரும் முதல் பயணம்.

அப்போதெல்லாம் சீசன் சமயத்தில் மட்டுமே குற்றாலம் செல்வது வழக்கம். சிறுவயதில் குற்றாலத்திற்கு குளிக்கச் செல்வதே ஒருநாள் இன்ப சுற்றுல்லா தான், கூட்டாஞ் சோறு, லெமன் சாதம் ஊறுகாய் என்று எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு சொந்தபந்தகள் புடை சூழ கிளம்பிவிடுவார்கள். தென்காசியில் எங்கள் வீடு இருக்கும் வாய்க்காப் பாலத்தில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் யானப்பாலம் வரை நடந்தே செல்ல வேண்டும். கையில் சுமையாக துணிப்பை அல்லது சாப்பாட்டுப் பை. 

ஊர்கதை உலகக்கதை பேசிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள் என்றால் ஒருநாள் பூராவும் நடப்பார்கள். வழித்துணையாக வருவது பரதன் தியேட்டர் போஸ்டர்களும் திடிரென்று அண்ணன் தம்பிகளான எங்களுக்குள் வரும் சண்டைகளும். ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொருவர் பையை தூக்க வேண்டும் என்று எங்களுக்குள் ஒரு சமாதான துணியோ-சாப்பாட்டு பை ஒப்பந்தம் இருக்கும். அதன் எல்லை மீறப்படும் பொழுது சண்டைகளும் திடீர்த் தாக்குதல்களும் நடைபெறும்.

மெயின் பால்ஸ், புதுக் குத்தாலம் பெரிய அருவி என்றெல்லாம் அழைக்கப்படும் அருவி, குற்றாலத்தின் மிக  முக்கியமான அருவி என்றாலும் சிறுவயதில் அதிகமாய் வெறுத்த அருவியும் இது தான். 

ஆண்கள் அருவி பக்கம் தண்ணீர் அதிகம் விழும் என்று குளிக்க விடமாட்டார்கள். பெண்கள் பக்கமும் நாட் அலவுட். சிமிண்ட் கொண்டு கட்டப்பட்ட ஒரு செயற்கை நீரோட்டப் பாதை அக்காலங்களில் உண்டு, இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை, அதில் இருந்து வேகமாய் வரும் அருவி போன்ற அருவியில் தான் எம் போன்ற சிறுவர் வகையறாக்கள் கும்மாளம் இட வேண்டும். அத்தனை பெரிய அருவி இருந்தும் குளிக்க முடியவில்லையே என்பதால் அந்த அருவியே எங்களுக்கு பிடிக்காது.

ஒருநாள் வலுகட்டயாமாக மெயின்பால்ஸ்க்கு அழைத்துச் சென்றும் குளிக்க மாட்டோம் என்று அடம் பிடித்ததால் புதிதாய் ஒரு அருவிக்கு அழைத்துச் சென்றார்கள். குற்றாலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இரண்டு கி.மீ நடக்க வேண்டும், நடக்கத் தான் வேண்டும் என்றாலும் நாங்கள் பெரிதும் விரும்புவது அந்த அருவியைத் தான். காரணம் அதன் பெயரிலேயே இருக்கும்.

புலி அருவி. "இந்த அருவிக்கு போனா புலியப் பாக்கலாம்" என்று தான் அழைத்து சென்றார்கள். புலி வருமோ இல்லையோ சிறுவர்கள் குளிப்பதற்கு மிகச் சிறந்த அருவி குற்றாலத்தில் இதைவிட்டால் வேறு கிடையாது. இப்போது கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது. முன்பெல்லாம் இன்னும் அருமையாக இருக்கும். புலி அருவியினுள்  பொழுதே ஒரு குகை போன்ற அமைப்பு இருக்கும், இங்கு தான் புலி வந்து ஓய்வு எடுக்கும் என்றெல்லாம் கப்சா விடுவார்கள். புலி அருவி என்ற பெயருக்கு ஏற்றவாறு இருக்க வேண்டுமே என்று கட்டிய அமைப்பு அது. 

மெயின் பால்ஸ் - டாப் வியு 

புலி அருவி வெறும் எட்டடி உயரத்தில் இருந்து நீர் விழும் அமைப்பு கொண்டது. அருவியில் இருந்து தண்ணீர் விழும் இடத்தில் ஒரு பெரிய கிடங்கு உண்டு, அதில் நீர் நிரம்பி பின் வெளியேறும், அதில் குளித்தால் ஒரு ஸ்விம்மிங் பூலில் குளிப்பது போன்ற உணர்வு, அதற்காகவே அங்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிபோம். சீசன் இல்லாத சமயங்களில் வெறும் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் நீரில் குளித்த நாட்கள் உண்டு. 

புலி அருவி செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவி, கலைவாணருக்காக என்று நினைக்கிறேன். மிக மிக ரம்மியமான அமைதியான இடம். குற்றாலங்களில் எனக்கு மிகவும் பிடித்த இடம். குளித்த முடித்தவுடன் பட்டாணி வாங்கி சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான். பட்டாணி வாங்கிக் கொண்டு வழி நெடுக கொறித்துக் கொண்டு வருவோம்.

பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மிகபெரிய பூங்கா ஒன்று உண்டு. குற்றாலம் செல்கிறோமோ இல்லையோ இங்கு சென்றே ஆகவேண்டும். ஊஞ்சல் தொடங்கி சகலவிதமான விளையாட்டுகளையும் குரங்குகளோடு குரங்குகளாக சேர்ந்து விளையாடலாம். ஊரே இங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும், வனத்தில் இருக்கும் மொத்த குரங்குகளும் இங்கு சுற்றித் திரியும். இப்போது இந்தப் பூங்கா பராமரிப்பு இன்றி அலங்கோலமாக கிடக்கிறது. பூங்காவினுள்ளே சென்று சில வருடங்களுக்கு மேலாகிறது. 

இந்தப் பூங்காவின் அருகில் பாம்புப் பண்ணை ஒன்று இருந்தது அதில் சில முதலைகளைக் கூட வளர்த்தார்கள், பராமரிக்க முடியவில்லை என்று இழுத்து மூடிவிட்டார்கள்.

உயர்நிலைப் பள்ளிக்கு சென்றதும் நண்பர்களுடன் சேர்ந்து மட்டுமே குற்றாலம் செல்வது வாடிக்கையாகிவிட்டது. கிரிக்கெட் விளையாடி விட்டு அப்படியே சைக்கிளை மெதுவாக அழுத்த ஆரம்பித்தால் எனது வீட்டில் இருந்து நான்காவது கி.மீட்டரில் பழைய குற்றாலம். பழைய குற்றாலம் செல்லும் வழி ஏதோ மலைப் பிரதேசத்துக்குள் நுழைவது போன்றே இருக்கும். சில நிமிட உணர்வு தான் என்றாலும், அந்த வளைவுகளில் சைக்கிளையோ பைக்கையோ செலுத்தும் பொழுது ஏற்படும் உணர்வு அலாதியானது.


பொதுப்பணித் துறையினரால் விவசாயத்திற்காக ஏற்படுத்தப்பட அருவி பழையக் குற்றாலம், நீரின் வேகம் மிக அதிகமாய் இருக்கும், மக்களால் குளிக்க முடியாது. பின்னர் மக்கள் குளிக்க வேண்டும் என்பதற்காக, குளிப்பதற்கு ஏதுவாக வெடிவைத்து தகர்க்கப்பட்டு உருவாக்கியது தான் பழைய குற்றாலம்.எண்ணை தேய்த்து சுகமாய் நெடுநேரத்திற்கு குளித்து வரவேண்டும் என்றால் தென்காசி ஓடுவது பழைய குற்றாலம் நோக்கி தான்.   

கடந்த முறை நண்பர்களுடன் பழைய குற்றாலம் சென்றிருந்த பொழுது அருவியின் அருகில் இருக்கும் காடுகளினுள் நுழைந்து அருவிக்கு மேல் சென்று குளித்து வந்தோம். அங்கெல்லாம் செல்ல வனத்துறை அனுமதி இல்லை, துணிவே துணையென்றானபின் அனுமதி எதற்கு! அது ஒரு வித்தியாசமான அனுபவம். மேலே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. ஸ்ரீ அண்ணிடம் அது பற்றி விசாரித்தேன் அந்த சிவனாரின் பெயர் ஆதி குற்றாலநாதர் என்றும் அங்கு சென்று வழிபட அனுமதி உண்டு என்றும் கூறினார்.

குற்றாலநாதர் கோவிலின் வடிவமைப்பு மிக அருமையாக இருக்கும்,சம்மந்தரால் பாடபெற்ற தளம். அம்மன் சன்னதியை தேக்கு மரத்தாலான வேலைப்பாடுகளால் வடிவமைத்துள்ளனர். இன்னும் அதிகமாய் தெரிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.  

குற்றாலத்தில்(மெயின் பால்ஸ்) குளித்துவிட்டு சூடாக மிளகா பஜ்ஜி, பாதம் பால், நேர்த்தங்கா சிப்ஸ், வெங்கடேஸ்வரா நெய் அல்வா என்று அனைத்தையும் ருசித்தால் பசி பறந்துவிடும்.

ஐந்தருவி, சிறுவயதில் இங்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லை என்பதால் அடிக்கடி செல்வது கிடையாது, இப்போதெல்லாம் முதலில் செல்ல நினைப்பது ஐந்தருவி தான், மிக சுகமான குளியிலைப் பெற வேண்டுமென்றால் ஐந்தருவி தான் எனது சாய்ஸ். ஐந்தருவியில் மூலிகைகளும், விதவிதமான பொதிகை மலைப் பழங்களும் கிடைக்கும். அதற்காக பல பழக் கடைகள் உண்டு.         


பழத்தோட்ட அருவி, செல்லும் வழி முழுவதுமே வனத்துறைக்கு சொந்தமான பழத்தோட்டங்கள் தான், குரங்குகளை விட நம்மாளுங்க சேட்டைகள் அதிகமானதால் பல காலம் அடைத்து வைத்திருந்தார்கள், உறவினர் ஒருவர் செல்வாக்குடன் சென்றதுண்டு, குட்டி அருவி தான், இப்போது அனைவரும் செல்ல அனுமதி உண்டு என்று கேள்விபட்டேன். தேனருவியும் மிக சின்ன அருவியே, வழி தெரியாமல் செல்ல முடியாது என்பதால் ஊர்காரர்கள் துணையுடன் செல்லலாம்.


செண்பகா தேவி அருவி. மிக முக்கியமான அருவி, குற்றாலத்தின் ஆதியான அருவி. இங்கு செண்பகாதேவி அம்மன் கோவில் ஒன்று உண்டு. தென்காசி பகுதி முழுவதுமே செண்பக வனத்தால் ஆனது என்பதால் தென்காசிக்கு செண்பகவனம் என்றும் ஒரு பெயர் உண்டு. இக்கோவிலில் அவ்வையார் பூஜை பெண்களாலும், மற்றபடி ஒவ்வொரு பௌர்ணமி அன்று பௌர்ணமி பூஜையும் நடைபெறுகிறது. உள்ளூர் சிவபக்தர்கள் அதிகமான அளவில் பங்கு கொள்வார்கள். சித்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்று கூறுவார்கள். 

செண்பகாதேவி 


செண்பகாதேவி அருவியை சுற்றி இருக்கும் கிடங்கு மிகவும் ஆபத்தானது. பல உயிர்களை பலி வாங்கியுள்ளது என்பதால் தற்போது வலைகட்டியுள்ளனர். செண்பகாதேவி அருவிக்கு செல்வதற்கு தற்போது தடைவிதிக்கப் பட்டுள்ளது. மேலும் சரக்கு எடுத்துவிட்டோ அடித்துவிட்டோ சென்றால் தர்ம அடி கிடைக்கும். 

அடர்ந்த காடுகள் வழியே தான் செல்ல வேண்டும், மேலும் மெயின் அருவிக்கு செல்லும் ஒரு நீரோட்டத்தைக் கடந்து செல்ல வேண்டும் என்பதால் அதிகமாக மழை பொழியும் பொழுது செண்பகாதேவிக்கு செல்ல முடியாது. இந்த மலைமேல் இருந்து மெயின் பால்சின் பொங்குமா கடலை பார்க்க முடியும், அப்படிப்ப் பார்க்க வேண்டும் என்றால் பாறை வறண்டு தண்ணீரின்றி இருக்க வேண்டும். ஒரே ஒருமுறை பார்த்ததுண்டு.   

  

பெரும்பாலும் சீசன் சமயங்களில் ஊர்காரர்கள் குற்றாலம் பக்கம் செல்வதில்லை, எங்களுக்கென்று மழை பெய்து புதுவெள்ளம் வரும் போது கூட்டமில்லாத அருவிகளில் ஆனந்தமாய் குளிப்பதுண்டு, கடந்த வருடம் அடைமழை பெய்து கொண்டிருந்த சமயம் தனி ஒருவனாய் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு தவமின்றி கிடைத்த வரம். பெரும்பாலும் ஆண்கள் இரவுகளில் குளிக்க செல்வதே வழக்கம். இரவு நேரம் குளித்துவிட்டு அப்படியே செங்கோட்டை பார்டர் சென்று ரஹ்மத்திலோ பிலாலிலோ பாராட்டோ சாப்பிட்டால் தான் குளித்தற்கான திருப்தி கிடைக்கும்.

எப்போதும் வீசும் தென்றல்,  விடாது தூறும் தூறல், அருவியின் அருகில் சென்றாலே கிடைக்கும் குளுமையும் சாரலும், மெயின்பால்சின் வேகத்திற்கு பயந்து அனைவரும் முன்னால் நின்று தலைகாட்ட அருவியின் உள்ளே புகுந்து யாருமற்ற குளுமையான அருவியின் மற்றொரு முகத்தில் நுழைந்து குளிக்கும் பொழுது கிடைக்கும் ஏகாந்தம்... 

மதியம் சரியாக ஒன்பது மணி வண்டியை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினேன். சோளிங்கநல்லூர் சிக்னல், சிக்னலுக்காக காத்திருந்த ஐந்து நிமிடத்தில் வியர்வையில் குளித்து, ஹெல்மட்டில் இருந்து ஒழுகும் வியர்வை கண்ணாடியை பாழாக்கி விட உடனடியாய் ரோட்டோரம் ஒதுங்கி கைகுட்டையால் தலைதுடைத்து மீண்டும் அவசர அவசரமாய் அலுவலகம் நோக்கி கிளம்பினேன்.

இன்று பேஸ்புக் முழுவதும் என் நண்பர்களின் குற்றால சீசன் குளியல் படங்கள். அத்தனை ஏகாந்தகங்களும் ஏக்கங்களாய் மாறிவிட்டது. ஊர்ல இருக்குற பசங்கல்லாம் கடுப்பேத்துறாங்க மைலார்ட்!   

பின் குறிப்பு : பதிவெழுத ஆரம்பித்த புதிதில் அண்ணன் சதீஷ் என்னிடம் வெகுநாளாய் கேட்ட பதிவு. ஒருவருடம் கழித்து இன்று தான் அத்தனை நியாபகங்களும் என்னுள் முழுதாய் நிறைந்துள்ளது. சற்றே பெரிய பதிவாய் ஆனதற்குப் பொருத்தருள்க. சொல்லாமல் விட்டவை ஏராளம், முடிந்தால் பின்னொரு பதிவில் பகிர்கிறேன்.    

18 Jun 2013

சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 5


முன்கதை சுருக்கம் 

வினோத் விக்ரம் பாலாஜி மூவரும் ஒரே துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்தவர்கள். தற்போது பாலாஜி நெல்லை கலெக்டர். கலெக்டர் பங்களா புகுந்து பாலாஜி மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. கார்த்திக் நெல்லை இன்ஸ்பெக்டர். இந்த கேஸை ஆராய்பவர். ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்ட பாலாஜி காணாமல் போய் பின்பு விக்ரம் மூலம் பாதுகாப்பாக மறைக்கப்பட்ட விஷயம் தெரிகிறது. இந்த இடைப்பட்ட வேளையில் பாலாஜி மீது தாக்குதல் நடத்த ஆஸ்பத்ரியினுள் நுழைந்த மர்ம நபரை போலீசார் தப்ப விட்டுவிட்டனர். அவனது கைரேகை மட்டும் கிடைத்துள்ளது.   

இனி 



"விக்ரம், நம்ம எம்.டி வரதராஜன் சொன்னத பத்தி நீ என்ன நினைக்கிற"  வினோத் கையில் வைத்திருந்த கண்ணாடி டம்ளரில் சூடான காபியும், நெல்லை ரயில் நிலைய வாசலில் இருந்த அந்த டீ கடையும் நிரம்பியிருந்தது. 

" அப்போ எம்.டி சொன்னத நீங்க நம்பப் போறதில்லையா, அவரோட ட்வெண்டி பைவ் இயர்ஸ் பாரன்சிக் சர்வீஸ சந்தேகப்படுறீங்களா"

"சந்தேகப்படல விக்ரம், நம்ப முடியல"

"நம்ப முடியாத ஒரு விஷயத்த சந்தேகம்ன்னு சொல்லாம நம்ப முடியலன்னு  சொன்னாலும் அது பேரு சந்தேகம் தான பாஸ்" சிரித்துக் கொண்டே அன்றைய தினசரியைப் புரட்ட ஆரம்பித்தான் விக்ரம்.  

வினோத் கையில் வைத்திருந்த காப்பி டம்ளரை உறிஞ்சிக் கொண்டே சிறிது நேரத்திற்கு முன் அவனது எம்.டி   வரதராஜனுடன் பேசிய தொலைபேசி உரையாடலை அசைப் போட்டுக் கொண்டு இருந்தான்.    

'வினோத் அந்த ஆளோட கைரேகைய அனலைஸ் பண்ணினதுல அவன் திருவள்ளூர் ரவுடி ஆதினு தெரியவந்தது. ஏரியா பஸ்ஸ்டான்ட் பக்கம் சின்ன லெவல்ல வட்டிக்கு விட்டு பஞ்சாயத்து பண்ண ஆரம்பிச்சவன் கொஞ்சம் கொஞ்சமா கொலை முயற்சி கொலைன்னு இறங்கி போலீஸ் கிட்ட பிடிபட்டவன். அவன் பண்ணினதுல ஒரு கொலை  அரசியல் கொலை, ஜாமீன்ல வெளிய வந்தப்போ பழிவாங்கல் முயற்சியா லாரி ஏத்தி கொன்னுடாங்க, ஆக்சிடெண்ட்ன்னு பதிவாகியிருக்கு'

"என்ன சார் சொல்றீங்க, ஆதி இப்ப உயிரோட இல்லன்னு சொல்றீங்களா..? உயிரோட இல்லாதவன் கை ரேகை... எப்டி பாசிபிள் சார். நோ வே ஐ கான்ட் பிலீவ் திஸ்"

"என்னால கூட நம்ப முடியல வினோத், பாரன்சிக் ஆபீஸ்ல இருந்து வந்த தகவல் தான் இது, நானே நேரா போய் விசாரிக்கணும், ஐ வில் கால் யு பேக்"  

"பாஆஆஆஸ்.." வினோத்தை ஒரு உலுக்கு உலுக்கினான் விக்ரம் "கையில இருக்ற காபியவும் கொஞ்சம் குடிங்க...சூடு ஆறிடுச்சுன்னா இந்தக் கடைக்கு திரும்பவும் காபி குடிக்க வரமாட்டீங்க... தி ரியல் டேஸ்ட்.."

ஒரு உறிஞ்சலுக்குப் பின் "அது எப்படி..." என்று ஆரம்பித்த வினோத்தை நிறுத்தி " செத்து போனவன் ஹாஸ்பிடலுக்கு வர முடியும், இது தானே உங்க கேள்வி"

எதுவும் பேசாமல் விக்ரமையே முறைத்துக் கொண்டிருந்தான் வினோத் 

"நாம இதுவரைக்கும் ஆவிங்கள பாலோ பண்ணினது இல்லையே பாஸ், அந்த குறைய தீர்க்க தான் இந்த ஆதி ஆவியா வந்து மிரட்டுரானோ என்னவோ.."

"லூசுத்தனமா பேசாதடா, ஆவிக்கு கைரேகை எல்லாம் கிடையாது.. மொதல்ல ஆவியே கிடையாது... "

"ஒருவேள ஆவி இருந்தா..." 

"ஒருவேள ஆவி இல்லாட்டா, இந்தக் கேள்விக்கு ஆன்சர் கண்டுபிடிக்கறது ரொம்ப ஈசி.. ஒக்கே கார ஸ்டார்ட் பண்ணு.. கலெக்ட்டர் பங்களாவுல பிரிண்ட்ஸ் எடுக்றதுக்கு ஆளுங்க வாறதா கார்த்திக் சொன்னாரு .. அங்க எந்த ஆவியோட பிரிண்ட் கிடைக்குதுன்னு பார்க்கலாம்" என்று கூறிக் கொண்டே பியஸ்டாவினுள் ஏறி அமர்ந்தான் வினோத். 

"பாஸ் பியஸ்டா உபயம் நண்பேன்டான்னு எழுதிப்போமா, யாரு பெத்த புள்ளையோ நம்மள  நம்பி வீடு கொடுத்ருகான், சொகுசா போய் வரதுக்கு கார் கொடுத்ருக்கான்" என்று கூறிக் கொண்டே வண்டியை ஒரு அடி முன்னால் நகர்த்தும் போது வண்டியின் முன்பக்கம் தொம் என்ற சத்தத்துடன் பலமாய் அதிர்ந்தது.

கையில் பிளேடை வைத்துக் கொண்டு ஒருவன் தள்ளாடிக் கொண்டிருந்தான். அவனது சைகை காரை முன் நகர்த்தினால் கீறிவிடுவேன் என்பது போல் இருந்தது.

" பாஸ் எவனோ காமெடி பீஸ், காலங்காத்தால தண்ணிய அடிச்சிட்டு... " என்று கூறிக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினான்.

"த்தா ன்னா அவ்ளோ பெரிய புடுங்கியா நீயி... வண்டிய நவுத்து பாப்போம்...கைல பாத்தேல்ல கீறிட்டுவன் கீறி"... பிளேடை விக்ரம் முகத்தின் அருகில் காற்றில் கீறிக் கொண்டிருந்தவன் சட்டையைப் பிடித்து அப்புறப் படுத்த முயன்ற போது விக்ரமின் கையில் வேகமாய் ஒரு கீறு கீறவே ரத்தம் சீறிக் கொண்டு வெளிவந்தது. 

புது ரத்தத்தின் வலி பொறுக்க முடியாத விக்ரம் தன் கையை உதறிய பொழுது அந்த குடிகாரனின் சட்டையும் கிழிந்து காற்றில் பறக்கத் தொடங்கியது

" அடிங்.. ன்னான்டையே கை வச்சினியா.. பாடு வூடு போய் சேர மாட்டடா.." என்று கத்திக் கொண்டே தள்ளாடிய நிலையில் விக்ரமை நோக்கி மீண்டும் பிளேடு வீசியவனின் கையைப் பிடித்து அவனது முகத்திலேயே மிக அழுத்தமாக ஒரு கீறல் கீறினான் விக்ரம், அவன் முகத்தில் இருந்து வெளிப்பட்ட ரத்தம் விக்ரமின் சட்டையையும் சிவப்பாக்கியது

"டேய் நீயெல்லாம் சவுண்டு வுடும்போதே நாங்கல்லாம் சங்க அறுக்றவங்க..." என்று கூறிக் கொண்டே அவனது முகத்தில் மற்றொரு கீறல் போட இருந்த விக்ரமின் கையைப் பிடித்து நிறுத்தினான் வினோத்.

"என்ன பாஸ் அப்படியே விட்டு வர சொல்றீங்களா... காலங்காத்தாலையே உசுர எடுக்க வந்துட்டானுங்க" என்றபடி மறுபடியும் கையை ஓங்கியபோது கூட்டமாக வந்த நாலு தடியர்கள் " சார்... சார்... சார் .. புல் மப்பு சார்.. சாரி சார், நீங்க போங்க நாங்க பாத்துக்குறோம்" என்றபடி அவனை ஒரு காரில் அடக்கி அங்கிருந்து சீறிக் கிளம்பினர். 

" யாரு பாஸ் இவனுங்க, வந்தானுங்க அடிவாங்குனானுங்க, இப்போ ஓட்றானுங்க..." அந்த கார் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம். அவனது கையில் இன்னும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடனடியாக முதலுதவிப் பெட்டியைக் கொண்டு கையில் கட்டு போட்டான் வினோத்.

"பாஸ் இங்க பாருங்க..." கார் டயர் அருகில் நைந்த நிலையில் கிடந்த ஒரு பாக்கெட் டயரியை எடுத்தான். "அந்த தடிப்பய சட்டையில இருந்து தான் விழுந்து இருக்கும், எதுக்கு வச்சிகோங்க... அவன் ஜாதகம் என்னான்னு கண்டுபிடிக்க முடியுமா பாப்போம்." என்றபடி வினோத்திடம் கொடுத்தான். 

கையில் துண்டுச் சீட்டு கிடைத்தாலே பலமுறை படிக்கும் வினோத் அந்த டயரி கைக்கு வந்ததுமே ஆராய்ச்சி பண்ணத் தொடங்கினான். பெரிதாக எழுதுவுமே எழுதி இருக்கவில்லை. சிலபக்ககங்களில் ஒன்றிரண்டு போன் நம்பர் எழுதி இருந்தது. ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டியவனுக்கு இறுதிப் பக்கத்தைப் பார்த்ததும் ஆச்சரியம்

" இங்க பாருடா, எதோ ஒரு மெயில் ஐடியும் அதோட பாஸ்வோர்டும் எழுதி இருக்கு. போயும் போயும் நம்மகிட்ட போய் தொலைசிருக்கான் பாரு...  என்னே ஆச்சரியம்...!" என்றபடி சிரிக்கும் போது செல்போன் ஒலித்தது.

"எம்.டி" என்றபடி ஆன்சர் கீயைத் தொட்டான் வினோத். இருநிமிட உரையாடலுக்குப் பின் 

"மைலாப்பூர் பாரன்சிக் ஆபீஸ்ல இருந்து பேசினாரு.. எல்லா ரெகார்ட்ஸும் சரியா இருக்காம், ஆதி டெத் சர்டிபிகேட் மொதக்கொண்டு சரியா இருக்குதாம்... அவன் போட்டோ அனுப்பி விட்றதா சொல்லி இருகாரு"

" போட்டோவா... ஹா ஹா ஹா..." பெரிதாக சிரித்து விட்டு தொடர்ந்தான் விக்ரம் "பாஸ் நம்ம ஆபீஸ்ல ஒரு வாசகம் எழுதி இருக்குமே நீங்க கவனிச்சது இல்லையா... முகம் ஏமாற்றலாம், கைரேகை மாற்றாதுன்னு.. அப்படிப்பட்ட நம்ம எம்.டியா இப்படி சொன்னது"

"எல்லாமே ஒரு ரெபரன்ஸ்க்கு தான் விக்ரம், அவரு உன்ன விட புத்திசாலி"

"என்ன மட்டும் புத்திசாலியா ஏத்துக்காதீங்க..." சலித்துக் கொண்டே வண்டியை கலெக்டர் பங்களா நோக்கி விரட்டினான் விக்ரம்.  

பாரன்சிக் ஆட்களுடன் வேலையில் மும்மரமாக இருந்த கார்த்திக் வினோத்தை பார்த்ததும் அவர்களை நோக்கி வேகமாய் வந்தார். வந்தவரிடம் ஒருவித பதற்றம் இருந்தது. 

"வினோத் ஒன் அன்பிலீவபில் திங்", கார்த்திக். 

"இறந்து போன ஆதியோட பிரிண்ட்ஸ் சிக்கிருச்சு அது தானே... வீ அல்ரெடி நோ சார்" சிரித்துக் கொண்டே கிண்டலாய் சொன்ன விக்ரமின் இந்த பதிலை இருவருமே எதிர்பார்க்கவில்லை.     

"விக்ரம் கண்ட்ரோல் யுவர் வோர்ட்ஸ், நீங்க சொல்லுங்க கார்த்திக்"

"அதான் அவரே சொல்லிட்டாரே, நான் சொல்ல வந்ததும் அதத்தான் வினோத்.." கூறிக்கொண்டே விக்ரமை முறைத்தான் கார்த்திக்.

" க்கே.. க்கே கூல் கார்த்திக்... இந்த பங்களால பிரிண்ட்ஸ் எடுத்து முடிச்சிட்டாங்களா.. " டாப்பிக்கை மாற்றினான் வினோத்...

"நாங்க அந்த பிரிண்ட்ஸ பார்க்க முடியுமா கார்த்திக்"

" பார்க்கலாம் வினோத், பட் அத லேப்க்கு அனுப்பி தான் வெரிபை பண்ண முடியும், இப்ப அதப் பார்த்தாலும் ஒன்னும் புரியாது "

"ஸ்யுர்... கார்த்திக் லேப்க்கு அனுப்பி டெஸ்ட் பண்ணிக்கலாம், பட் இங்க கிடைச்ச கை ரேகைகள இமேஜ் பிராசஸிங் மூலமா நமக்கு அல்ரெடி கிடைச்ச ரேகைங்க கூட மேட்ச் பண்ணி பார்க்கலாம். ஹாஸ்பிடல்ல கிடைச்ச ரேகையும் இங்க கிடைச்சதும் மேட்ச் ஆகுதானு உடனே வெரிபை பண்ணும் அதான்..."

"ஓ இப்படி எல்லாம் கூட வழி இருக்குதா... அது என்ன இமேஜ் பிராசஸிங்..?" ஒரு கேள்விக் குறியுடன் புருவத்தை உயர்த்தினான் கார்த்திக்.

"இது கொஞ்சம் பழைய டெக்னாலஜி தான், பட் இப்ப நிறைய டெவலப் ஆகி இருக்கு. இத ப்ரோசஸ் பண்றதுக்கு நிறைய அல்காரிதம் வேணும், அல்காரிதம் தெரிஞ்சிருக்கணும், சிக்கலான கணக்குகள் அதுல நிறைய இருக்கும். விக்ரம் சொந்தமாவே இமேஜ் பிராசஸிங் அல்காரிதம் எழுதுவான், இன்னொரு நாள் புரியிற மாதிரி சொல்றேனே"

முதல் முறை கார்த்திக் விக்ரமை கொஞ்சம் மரியாதையுடன் பார்த்தான். "உண்மையா விக்ரம்..." என்ற கார்த்திக்கை நோக்கி " பாஸ் கொஞ்சம் ஓவரா சொல்றாரு.. எங்க பேர்ல ஒரு இமேஜ் பிராசஸிங் அல்காரிதம்க்கான பேட்டன்ட் இருக்கு.. பட் விக்கறதா இல்ல" என்று கூறிக் கொண்டே பாரன்சிக் ஆளுங்களிடம் இருந்து வாங்கிய கைரேகை பிரிண்ட்சை லேப்டாப்பிற்கு மாற்றி இமேஜ் பிராசஸிங் செய்யத் தொடங்கினான் விக்ரம்.

கார்த்திக்கும் வினோத்தும் எதாவது தடயம் சிக்குமா என்றபடி பங்களாவை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அந்நேரம்...

"பாஆஆஸ்..." இன்னதென்று இனங்காண முடியாத குரலில் விக்ரம் அழைக்க அந்த குரலை நோக்கி வினோத்தும் கார்த்திக்கும் நகர்ந்த பொழுது 

"பாஸ் அந்த ஆவி இங்கையும் வந்துட்டுப் போயிருக்கிறதா சிட்டி சொல்லுது பாஸ்" என்றான் விக்ரம் தனது லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டே...




                                                                                                   உன்னைத் தொடர்கிறேன்...