படமும் படம் சார்ந்த கதையும் :
" தாண்டவம் படத்துக்கு போலாமா " இதை நண்பன் என்னிடம் கேட்ட அடுத்த நொடி, நான் சொல்லிய பதில் " தெரியாத மொக்க படத்துக்குலாம் நான் வார மாட்டேன். நல்ல படமா வந்தா சொல்லுங்க போகலாம்"
" எலேய் அது விக்ரம் படம்ல, விஜய் டைரெக்சன், வா நாம போகலாம்".
விக்ரமிற்காக இல்லாவிட்டாலும் விஜய்க்காகவாவது செல்லலாம் என்று முடிவெடுத்துவிட்டோம். தேவி சினிமாஸ். சென்னையின் மிகப் பிரபலமான மிகப் பெரிய தியேட்டர். தேவியில் படம் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். பெரிய ஸ்க்ரீன், அதில் படம் பார்பதற்கே அவ்வளவு அருமையை இருக்கும். சிங்கம் படம் நண்பன் மணிகுமாருடன் தேவியில் தான் பார்த்தேன், பத்து ருபாய் டிக்கெட், இரண்டாவது வரிசை.. சூர்யா வண்டியில் இருந்து இறங்கினால் எங்கள் தலையில் தான் கால் வைப்பார். சண்டைக் காட்சிகளில் வில்லன்கள் அனைவரும் எங்கள் மீது தான் வந்து விழுந்தார்கள், அப்படி ஒரு அருமையான உணர்வைக் கொடுக்கக் கூடிய திரையரங்கு. தேவியும் தேவி பாரடைசும் அருமையான அரங்கங்கள். சென்னையில் படம் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் ஒருமுறையாவது இங்கு சென்று படம் பாருங்கள்.
தாண்டவம்
விக்ரம் மற்றும் விஜய் படம், அனுஷ்கா, சந்தானம், ஜீ.வி, நீரவ்ஷா, அன்டோனி என்று பழைய கூட்டணி ( இந்த விஷயங்கள் அனைத்தும் பட டைட்டில் போடும் பொழுது தான் எனக்குத் தெரியும்). படம் பற்றிய சிறு விஷயம் கூட தெரிந்து வைத்திருக்கவில்லை மேலும் படம் மீது எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. சொல்லப்போனால் சுந்தரபாண்டியன் படம் மீது இருந்த எதிர்பார்ப்பு கூட இதில் இல்லை, எங்கே எப்படி இந்த தவறு நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கணகாலமாய் நானும் சிந்தித்துப் பார்கிறேன், சடுதியில் விடையும் சிக்கமாட்டேன் என்கிறது. ( படம் பார்த்த பாதிப்பில் இது ஒன்று தான் மிச்சம் என்று நினைக்கிறன்).
காட்சிகள் லண்டனில் விரிகிறது, ஹாலிவூட் தரத்திற்கு முயற்சித்து இருகிறார்கள், படத்தின் ஆரம்பக் காட்சிகள் மணிரத்னத்தை நினைவு கூர்கின்றன, ஆனால் மணி சார் பட வசனம் போல எதுவும் சுவாரசியம் இல்லை. சந்தானம் ஆள் மேருகேறியிருகிறார், படத்தில் காமெடி செய்வதற்கான வாய்ப்பில் வாய்ப்பூட்டு போடப்பட்டு விட்டதால், கொடுத்த காசுக்கு "அழகாக" நடித்துச் சென்றிருக்கிறார். தெய்வத்திருமகள் சந்தானத்தை தாண்டவமாட விடாமல் செய்துள்ளார் இயக்குனர் விஜய். இருந்தும் புதுமையாய் சில காமெடிக் காட்சிகளை முயற்சி செய்து பார்த்திருப்பது குஸ்காவில் கிடைத்த தக்குனூன்டு சிக்கன் பீஸ்.
படம் சீரியசான படம் என்பதாலோ அல்லது சீரியசான படமாக காண்பிக்க முயல்வதாலோ, காட்சி நகர்வுகளில் வரும் அனைவருமே தங்கள முகத்தை சீரியசாய் வைத்துள்ளனர். விஜய் சார் "இயக்கம் விஜய்" என்று போட்டாலே நாங்கள் கண்டுபிடித்து விடுவோம், படம் சீரியசான படம் என்று. இதற்காக நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நாசர், அவரை அவ்வளவு புத்திசாலியாக அறிமுகம் செய்ததைப் பார்த்த பொழுது தான் நிமிர்ந்து உட்கார்ந்தேன், கொஞ்சம் ஓவராக நிமிர்ந்து விட்டேன் போல முதுகு வலிக்கிறது. நாசர் அறிமுகப்படுத்திய tab என்ன விலை சார், அழகாய் இருந்தது, பின்னாட்களில் வாங்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். அதையும் அவர் மூலமாகவே கூறி இருந்தால் உபயோகமாய் இருந்திருக்கும். அடுத்த படத்தில் இது போன்ற சிறு பிழை கூட நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எமி ஜாக்ஸன், ஒரு பாடலில் நடந்தார், சிறிது ஆடினார், சிறிது டமில் பேசினார், சிறிது நேரத்தில் காணாமல் போய்விட்டார். அழகான பாத்திரப் படைப்பு. லக்ஸ்மி ராய் தாம்தூம் ரஷ்ய பயணத்தை முடித்த கையோடு அதே உடையுடன் லண்டனுக்கு பறந்து வந்துவிட்டார். வந்த வேகத்தில் கதையில் இருந்தும் பறந்து போய்விட்டார் ( கடைசி வரை உயிரோடு தான் இருப்பார் என்பதை சொல்லிக் கொள்கிறேன்). அனுஷ்கா, இவரைப் பார்த்தால் எனக்கு ஹீரோயின் என்ற பிரமை கூட ஏற்படவில்லை, ஆண்டி ஹீரோயின் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். இவருக்கும் ஏன் இவ்வளவு சீரியசான முகபாவம் பாத்திரப்படைப்பு என்பது அனுஷ்காவிற்கே வெளிச்சம். ஆனால் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக முதலிரவு காட்சி. ஹி ஹி ஹி படத்த பாருங்க பாஸ் என்ன நடக்கும்னு தெரியும்.
இன்னும் பல கதாபாத்திரங்கள் திரையில் உலவும். அவை அனைத்தும் நம்மைக் குழப்ப வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டு பின்னர் கதையையே குழப்பிய பாத்திரங்கள், அவை எல்லாவற்றையும் கூறி உங்களைக் குழப்ப நான் விரும்பவில்லை.ஒளிப்பதிவைப் பொறுத்தவரை நீரவ்ஷா எனக்கு மிகவும் பிடித்த ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவில் எந்த குறையும் வைத்திருக்கவில்லை, சில சமயங்களில் சாதாரண காட்சி அமைப்புகளைத் தவிர. இசை ஜீவி, ஜீவித்திருக்கலாம், வசனம் சில இடங்களில் ஈர்க்கிறது.
விக்ரதாண்டவம்
படத்தின் ஹீரோ, தோன்றிய முதல் காட்சியிலிருந்து இறுதி வரை இறுக்கமாகவே வருகிறார், அளவெடுத்துத் தைத்த சட்டையை விட, அளவெடுத்து வைத்திருக்கும் அந்த மீசை மிக அழகாய் இருக்கிறது, சீயானுக்கு பொருந்திப் போகிறது. பார்வை அற்றவனாய் வரும் பொழுது செய்யும் அவரின் மானரிசன்கள் மட்டுமே படத்தின் பலம். விக்ரமின் உடற்கட்டு அசரவைக்கிறது. அனுஸ்காவை இம்ப்ரெஸ் பண்ண முயலும் காட்சிகள் கவிதை, கணவனின் தொழில் என்னவென்றே அறியாமல் இருக்கும் ஹீரோயினின் காட்சிகள் கண்கட்டு வித்தை. விக்ரம் யார் என்று அனுஷ்காவிற்கு தெரியவரும் காட்சி பற்றி என்னவெல்லாமோ கற்பனை செய்திருந்தேன், அவ்ளோ பெரிய ஆபிசரை அறிமுகம் செய்து வைக்கும் பொழுது ஏற்படும் அதிர்வுகள் என்னுள்ளேயே ஏற்படவில்லை, பாவம் அனுஷ்கா என்ன செய்வார். அந்தக் காட்சி விவரிப்பில் இன்னும் மிடுக்கு ஏற்றி இருக்கலாம். நீங்கள் குறைந்தது ஒரு ஹரி படமாவது பார்த்திருந்தால் இது போன்ற விசயங்களில் கோட்டை விட்டிருக்க மாட்டீர்கள்.
விக்ரம் என்ற நடிகன் உங்களுடன் இருந்ததால் தப்பித்தீர்கள், விக்ரம் வரும் காட்சிகளை வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை பார்க்கலாம். உங்கள் அடுத்த படத்திற்கு விமர்சனம் படிக்காமல் செல்வது இல்லை என்று முடிவெடுத்துவிட்டேன். என்னை போன்ற தமிழ் சினிமா ரசிகர்கள் உங்கள் படங்களையும் நம்பிப் பார்க்க ஆரம்பித்திருகிறார்கள். நீங்கள் தாண்டவமாடாவிட்டாலும் பரவாயில்லை ருத்திர தாண்டவம் ஆடாமல் இருந்தால் சரி.
விளம்பரம் :
பின்குறிப்பு : தாண்டவம் படத்தில் ஹீரோவின் பெயரும், விளம்பரத்தில் இருக்கும் ஹீரோவின் பெயரும் சிவகுமார் தான் என்பது தற்செயலாக நடந்த விசயமே அன்றி யாம் ஒன்று அறியோம் பராபரமே
தாண்டவம் விக்ரதாண்டவம்
நீங்கள் வந்து சென்ற எஸ் டி டி மிக முக்கியம் அமைச்சரே (வசனஉதவி : அண்ணன் எஸ்-டி-டி சுவடுகள்)