சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காவி உடைக்குள் தன்னை புகுத்திக் கொண்டு சாமியாராக மாறிய ஒரு இளைஞனின் (சாமியாரின்) காதல் கதை. காதல் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னுடைய பதினெட்டு வயதில் காட்டிற்குள் சென்ற இளைஞன் பதினெட்டு வருடம் கழித்து மீண்டும் தன்னுடைய காதலியைத் தேடி, அவள் கரம் பிடிக்க தான் பிறந்த மண்ணைத் தேடி வருகிறான் சாமியாராக. காதலின் வலி பொறுக்காமல் மீண்டும் உலக வாழ்க்கைக்குள் வரும் ஒரு சாமியாரை இந்த உலகம் பார்க்கும் பார்வைகளில் இருந்தும் காவி உடையில் இருந்தாலும் தன் காதலியை மறக்க நினைக்கும் முயற்சியே அவளை நினைப்பதற்கான பயிற்சியும் ஆகிவிட்டது என்று புலம்பும் சாமியாரின் உணர்சிக் குவியல்களில் இருந்தும் ஆரம்பமாகிறது இந்தப் பயணம்.
கவிதை பாடும் கவிஞர் ஓருவர் தன் அழகான வசன நடையால் சாமியார் ஒருவருக்குள் காதலைப் புகுத்தி எதார்த்தமான சூழ்நிலைகளைக் கொண்டு கதை சொல்ல ஆரம்பிக்கிறார், அந்தக் காதலுக்கு அவர் கொடுத்த தலைப்பு காவி நிறத்தில் ஒரு காதல். அந்தக் கவிஞரின் பெயரோ கவிபேரரசு வைரமுத்து. கவி பேரரசு வைரமுத்து அவர்கள் பத்துவருடங்களுக்கு முன்பு எழுதிய இப்புத்தகத்தினைப் படிக்கும் வாய்ப்பு தற்போது தான் கிடைக்கப் பெற்றேன் அந்த அனுபவத்தை இங்கு பதிவாக எழுதுகிறேன்.
நான் படிக்காத சுஜாதா புத்தகங்களையும் படித்த பிற எழுத்தாளர்கள் புத்தகங்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒவ்வொருமுறையும் சுஜாதா அவர்களின் புத்தகத்தைப் படித்துவிட்டு புத்தகவிமர்சனம் எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் நினைப்பதோடு நின்றுவிடுவேன் காராணம் அப்போது என்னிடம் அப்போது வலைபூ இல்லை. என் முதல் புத்தக விமர்சனத்தை இந்தப் புத்தகத்திலிருந்து தொடங்குகிறேன்.
இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் இருந்து என்னுடைய அண்ணன் காவி நிறத்தில் ஒரு காதல் புத்தகத்தை வாங்கி வந்திருந்தான். தலைப்பைப் பார்த்ததுமே படிக்கத் தோன்றவில்லை. படிக்கத் தூண்டும் தலைப்பு தான் இருந்தும் காவி என்று வருவதால் மதக் கலவரம் அது இது என்று எரிச்சலூட்டுவர்கள் என்று புத்தகத்தை தொட்டுக் கூட பார்க்கவில்லை. வாங்கி வந்த என் அண்ணனும் புத்தகத்தைப் படிக்கவில்லை. படித்திருந்தால் கண்டிப்பாக என்னையும் படிக்கச் சொல்லியிருப்பான். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக படி படி என்று கூறும் விதமாக அடிகடி என் கண்களில் தட்டுப்பட்டுக் கொண்டே இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு படிப்பதற்கு வேறு புத்தகம் எதுவும் இல்லை என்ற காரணத்தால் இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு புதுமையான வாசிப்பு அனுபவத்தைப் பெற்றேன்.
ஒரு சாமியார் தான் கதாநாயகன். காதலியைத் தேடி காட்டிற்குள் இருந்து நாட்டிற்குள் வருகிறான். தொலைந்து போன காதலியைத் தேடிச் செல்லும் இடங்களில் எல்லாம் காதலி வாழ்ந்ததற்கான தடங்களும் தடயங்களும் மட்டுமே கிடைகின்றதே தவிர காதலி கிடைக்கவே இல்லை. இறுதியில் காதலியை சென்று சேர்ந்தாரா. பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் இருவரின் மன நிலையும் எப்படி இருந்தது என்பன போன்ற பல விசயங்களை சலிப்பு தட்டாமல் சொல்லிச் செல்கிறார்.
ஷங்கர் படம் போன்ற காஸ்ட்லி காதலோ, சசிகுமார் தரணி லிங்குசாமி படம் போன்ற அடிதடிக் காதலோ, இல்லை பாரதிராஜா படம் போன்ற முழுக்க முழுக்க மண்வாசம் வீசும் காதல் போன்றோ இல்லாமல் பாலா அமீர் மிஷ்கின் படம் போன்ற எதார்த்தமான கொஞ்சம் அழுத்தமான சம்பவங்களைக் கொண்டு காதல் பேசுகிறார் இந்தச் சாமியார். காதலியைத் தேடி செல்லும் இடங்களில் எல்லாம் பட்டாம்பூச்சி விளைவு என்று சொல்லப் படகூடிய (நடைபெறக் கூடிய சம்பவங்களுக்குள் தொடர்பு இருக்கும்) விளைவின் மூலம் கதாநாயகன் தான் தவறவிட்ட உறவுகளையும் அவர்கள் மூலம் காதலியின் இருப்பிடமும் அறிகிறான். நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்பத்தில் பட்டாம்பூச்சி விளைவுகளை சந்தித்துக் கொண்டு தான் உள்ளோம் என்ற கோணத்தில் கதையுடன் ஒன்றினோம் என்றால் கதை நமக்கு மிகவும் பிடித்து போகும். ( பட்டாம்பூச்சி விளைவை முழுவதுமாக தெரிந்து கொள்ள இந்தக் கதையோ இல்லை தசாவதாரம் படமோ எளிய உதாரணம். அது போதவில்லை என்றால் எண்ணிலடங்கா ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன தேடித் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்).
தவறான விசாரணையால் போலீசாரிடம் சிக்கி கொள்ளும் சாமியார்
"காட்டுக்குள் வாழ்ந்தேன், மிருகங்களிடம் எனக்குப் பாதுகாப்பு இருந்த்தது. நாட்டுக்குள் வந்தேன் மனிதர்களிடம் தான் எனக்குப் பாதுகாப்பில்லை" என்று புலம்பும் வரிகளில் இருந்து வைரமுத்துவின் சிந்தனை ஓட்டத்தை அறிந்து கொள்ளலாம்.
தனக்காக தன் காதலியும் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவரும் ஒவ்வொரு இடங்களிலும் காதலின் மேன்மை மிக மென்மையாக இருக்கும்.காதலியின் அக்கா கொடுத்த தகவல்களில் இருந்து தேடத் தொடங்கும் சாமியார் இடையில் பல சந்திபுகளுக்குப் பின் காவல்துறையில் டி.எஸ்.பி யாக பணிபுரியும் நண்பன் மூலம் அவள் 'கண்டதும் சுட' ப் பட வேண்டிய கொலைக் குற்றத்தில் இருக்கிறாள் என்பது வரை தெரிந்து அதிர்ந்து நொறுங்கும் வரை காதலின் ஒருபக்கமும், அதன் பின் நடக்கும் நிகழ்வின் மூலம் காதலின் மறுபக்கத்தையும் உணர்ச்சி பொங்கச் சொல்லிச் செல்கிறார்.
டி.எஸ்.பி நண்பன் அடர்ந்த வனபகுதிக்குள் இருக்கும் நக்சலைட்டுகளை கைது செய்ய செல்கிறார், செலும் இடத்தில இருவரும் நக்ஸல்களிடம் பணயக் கைதிகளாக சிக்கிக் கொள்கிறார்கள். அந்தக் நக்சல் குழுவில் சாமியாரின் காதலியும் இருப்பது அதிர்ச்சியின் உச்சம் என்றால் அவர்களுக்குள் நடைபெறும் சந்திப்பு உணர்சிகளின் உச்சம்.
நெடுநாளைக்குப் பின் தன் காதலியைப் பார்த்த நொடியில் சாமியார் நினைக்கிறார்
"சுவடுகள் மாறவில்லை. கொஞ்சம் சதை போட்டிருக்கிறாள். கண்களில் மட்டும் அதே பௌர்ணமிகள்".
தீவிரவாதியாக இருக்கும் தன் காதலியைச் சந்திக்கச் செல்லும் முன், தன் வாழ்க்கைப் பற்றி முடிவு செய்ய வேண்டிய கடைசி நொடியில் இருக்கும் சாமியாரின் சிந்தனைகள் இதோ
" லௌகீகம் சிக்கல் தான்: உலகம் ரணம் தான்; உறவு சுகம் தான்
எந்த வாழ்க்கை முறை சரி? தள்ளி வாழ்வதா? தழுவி வாழ்வதா?
சாமியாரின் உள்ளக் கடலில் இரண்டு புயல்கள் மையம் கொண்டன. இரண்டையும் முட்டவிட்டு முட்டவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார். தள்ளி வாழும் வாழ்கையில் அமைதி இருக்கலாம், அது மயான அமைதி.
தழுவி வாழும் வாழ்கையில் சப்தம் இருக்கலாம். அது உயிருள்ள சப்தம்.
இந்த சந்தர்பத்தில் நக்ஸல்களிடம் பணயக் கைதிகளாக மாட்டிக் கொண்டுவிட்ட சாமியாரை தப்பிச் செல்லாமல் பாதுகாக்கும் பொறுப்பு அவர் காதலிக்கே வழங்கப் பட்டிருக்கும்.இங்கேசாமியாரின் மனநிலை
சாமியார் கண்கொட்டாமல் அவளையே பார்த்தார். இப்போது பதினெட்டு வருடத் தேடல் பத்தடி தூரத்தில்
அதே முகம்! என் மடியில் புதைந்த அதே முகம்! என் உள்ளங்கைகளில் ஏந்திய அதே முகம்! நான் முத்தமிட்ட முகம்! என் பதினெட்டு வருடக் கனவில் பவனி வந்த முகம். என் இருப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட வாழ்க்கைக்கு ஆதாரமாய் இருக்கும் அதே முகம்! களத்தின் கனத்தாலும், வாழ்கையின் இனத்தாலும் கொஞ்சம் முற்றிப் போயிருந்தாலும் பழைய பசுமையின் சின்னங்கள் பறிபோய்விடாத அதே பழைய பால் முகம்.
இந்த நிலையில் தன் காதலியைச் சந்தித்த சாமியாரிடம் டி.எஸ்.பி நண்பனின் கிண்டலும் அதற்கு சாமியாரின் பதிலும்
" என்ன சாமியாரே சொர்கத்திற்கு வந்திருகீங்களா....நரகத்திற்கு வந்திருகீங்களா? " அந்த நேரத்திலும் டி எஸ் பி கிண்டலடித்தார்.
சந்தோசமோ துக்கமோ இல்லாத குரலில் சாமியார் சொன்னார்,
" நரகதிற்குள்ளே வந்து என் சொர்க்கத்தைப் பாத்திருக்கேன்"
இப்படிச் செல்லும் இந்தக் கதையின் முடிவில் நக்சல் காதலிக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லை கூண்டோடு ஒழிக்கப் பட்டார்களா, பதினெட்டு வருடங்களாக தன் காதலனுக்காக தேக்கி வைத்திருந்த காதலை அவள் என்ன செய்தால் தொழுதாளா இல்லை துடைத்தேரிந்தளா? சாமியார் காதலியால் கொல்லப்பட் டாரா இல்லை கொள்ளப்பட்டரா, இனிமையாக ஆரம்பித்த காதல் பயணம் சுமை கடந்து சுகம் வரப் போகிறது என்ற எண்ணிய நேரத்தில் ரணமாக மாறியதை கவிஞர் எப்படி முடிவுரையாக மாற்றினார்,
என்பதை எல்லாம் அறிந்து கொள்ள
வெளியீடு
சூர்யா இலக்கியம்
#22 நான்காம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை,
விற்பனையாளர்
திருமகள் நிலையம்
#55 வெங்கட்நாரயணா சாலை, தி,நகர், சென்னை.
#2324 2899
என்னும் முகவரிக்கு எழுதி கேட்டீர்கள் என்றால் புத்தகம் அனுப்புவார்கள் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
திடங்கொண்டு போராடு வலைப்பூ தலைப்பின் தாக்கம் கொண்டு கோவைக்கவி அவர்கள் எழுதிய கவிதை வரிகள். அவர்களுக்கு என் மனபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்,