26 Feb 2018

தோட்டி மகன் - வஞ்சிக்கப்படுதலின் உயிர்வலி

தீபாவளி முடிந்த அடுத்தநாள் காலை. வீட்டில் இருக்கும் அத்தனை பலகாரங்களையும் வரிசையாக ஆறேழு பாத்திரங்களில் அடுக்கி, கையில் பத்து இரண்டுரூபாய் நாணயங்களையும் வைத்துக்கொண்டு கதவின் அருகில் அமர்ந்துவிடுவாள் பாட்டி. எதற்கென்று கேட்டால் 'தோட்டி வருவாம். போட வேணாமா' என்பாள். கேள்விகள் கேட்டு உலகை அறிந்துகொள்ள முயன்ற பருவம் அது. பாட்டி அருகில் அமர்ந்துகொண்டால் போதும் கதை சொல்வதை அவள் பார்த்துக்கொள்வாள். 

'ஏன் பலகாரம் போடணும். அவங்க வீட்ல சுட மாட்டாங்களா?' ; 'அதான் நாம சுடுறோம்லா' என்பாள்

'அவங்களே சுட்டு சாப்ட்டா என்ன?' ; 'சுட்டுதிங்க காசு கிடையாது. அதான் வாராங்க' 

'எல்லார் வீட்லையும் கொடுப்பாங்களா?' ; 'இருந்தா கொடுப்பாங்க' 

'நாம எப்பயுமே கொடுப்பமா' ; 'எங்க தாத்தா காலத்தில இருந்தே கொடுப்போம்' 

'ஏன்?'; 'ஏன்னா தோட்டிக்கு நாமதான் இருக்கோம்'

இப்படித்தான் தோட்டி என்ற வார்த்தையும் தோட்டி என்றால் யார் என்பதன் அர்த்தமும் புரிய ஆரம்பித்தது. தென்காசியின் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில்தான் அவர்கள் குடியிருப்பு இருந்தது. அங்கிருந்து பாத்திரத்தைக் எடுத்துக்கொண்டு வருவார்கள் என்று பாட்டி சொன்னாள். வந்தவர்களில் பாதிபேர் எனக்கு நன்கு அறிமுகமான முகம். பெரும்பாலும் பெண்களும் அவர்கள் இடுப்பில் இருக்கும் குழந்தைகளுமாகவே வந்து போவார்கள். பாட்டி சிலருக்கு பலகாரம் கொடுப்பாள். சிலருக்கு பலகாரத்தோடு இரண்டு ரூபாய் பணம். சிலரிடம் மட்டும் 'எதுவும் இல்லை' என்று கூறிவிடுவாள். எதற்கென்று கேட்டால், 'அவங்க வேற தெரு தோட்டி. அங்கயும் வாங்கிட்டு இங்கயும் வாறாங்க. நம்ம தெரு தோட்டிக்கு கொடுக்க மட்டும் தான நம்மகிட்ட இருக்கு' என்பாள். புரிந்தது போல் இருக்கும். 

சிலரை விரட்டாத குறையாக அனுப்பிவிடுவாள். 'ரெண்டு கொடுங்களேன்' என்பேன். 'சட்டி நிறைய வாங்கி இருப்பாங்க' என்பாள். 'இல்லம்மா ஒரு வீட்லையும் கொடுக்கல. புள்ள பலகாரத்துக்கு ஆசபடுது. இங்க பாரு தாயி' என்று வெளியில் இருந்து குரல் கேட்கும். தெரு தோட்டிகள் எல்லாம் வந்து சென்றிருந்தால் வெளியில் நிற்கும் பெண்களுக்கு ஏதாவது கிடைக்கும். இல்லையென்றால் பாட்டி மனது வைக்க வேண்டும். அவர்கள் முகத்தைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். சமயங்களில் பாட்டியிடம் கேட்காமலேயே எடுத்துக்கொண்டு போய் கொடுப்பேன். அவர்களோடு வரும் குழந்தைகளில் சிலர் வெடி கேட்பார்கள். வெடியைக் கொடுக்க மனசு வராது. அடுத்தடுத்த தீபாவளிகளில் அவர்களுக்கென வெடியையும் எடுத்து வைக்க பழகியிருந்தேன். காரணம் அந்தத் தாத்தா.  

எப்போதும் முகம் நிறைய மலர்ச்சியோடு இருப்பார். காக்கி நிக்கர், காக்கி சட்டை இதுதான் எப்போதைக்குமான அவர் உடை. சிரித்துக்கொண்டே இருப்பார். அத்தனை பேரின் பார்வைக்காகவும் ஏங்கும் கண்கள். வெத்தலை மென்று மென்று சிவந்த வாய். சுண்ணாம்பின் வெம்மையில் வெந்து போய் வெள்ளையாகிப்போன உதட்டோரங்கள். தலையில் குற்றால சீசன் துண்டு கட்டியிருப்பார். கையில் மம்மெட்டியும் அருகில் அவர் இடுப்பு உயரத்திற்குமான குப்பை வண்டியும் இருக்கும். அதில் இருக்கும் ஓட்டைகளை அழுக்கு சாக்கு கொண்டு அடைத்திருப்பார்.

அவரிடம் முகம் கொடுத்துப் பேசும் பலரையும் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு வீட்டு எஜமானன் தோரணை இருக்கும் என்றால் இவரிடம் அடிமையின் பாவனை. 'என்னடே வேல ஒழுங்கா நடக்கா' என்றால் 'ஆமா சாமி' என்று குழைவார். எல்லோரிடமும் ஒரேபோல் இருப்பார். சிறுவர்களைக் கூட அவர் எஜமானாகவேப் பார்த்தார்.

ஞாபங்களின் அடுக்கில் அவர் முகம் இன்னமும் மறையாமல் இருப்பது அதிசியம் தான். ஏனென்றால் என் அன்றாடங்களில் இருந்து எப்போதோ மறைந்து போயிருந்தார். அவருக்குப் பின் தெருவுக்கு வந்த சுகாதாரத்துறை ஆட்கள் எவரையுமே என் தெருவாசிகள் தோட்டி என்று அழைத்துப் பார்த்ததில்லை. காலமாற்றத்தில் அந்த தீபாவளிப் பலகாரங்கள் வாங்க வருவது கூட குறைந்துபோய் ஒரு கட்டத்தில் நின்று போயிருந்தது. 'எங்க தெருல இருந்து இனிமே யாரும் அப்டி வாங்க போக்கூடாதுன்னு உத்தரவு போட்டுஇருக்காங்க' என்று அசோக் சொன்னது ஞாபகம் இருக்கிறது.   

நான் கூறிய இந்த விஷயங்கள் அனைத்துமே எனது பதினைந்து வயதுக்குள் நடந்து முடிந்த சம்பவங்கள். அதிலிருந்து காலம் உருண்டோடி இன்றைக்கு எங்கோ வந்துவிட்டோம். அவர்களைப் பற்றி பெரிதாக சிந்தித்துப் பார்த்தது இல்லையோ என்று இப்போது தோன்றுகிறது. இரவுகளில் தள்ளுவண்டிகளின் ஓரத்தில் பாய்களைக் கொண்டு அடைத்து மலம் அள்ளிப்போகும்போது கை தானாக மூக்கின் அருகில் போகும். ஆனாலும் அவர்கள் கதை பேசிக்கொண்டே தள்ளிக்கொண்டு போவார்கள். அது அவர்கள் வாழ்வில் அன்றாடம் என்று புரிந்த மனதிற்கு, ஏன் அன்றாடம் ஆனது என்பது பற்றி கேள்வி எழுப்பத் தோன்றியதேயில்லை.

வரலாற்றில் அவர்கள் பக்கம் மட்டும் மிக மெதுவாகவே நவீனத்துவம் அடைந்திருக்கிறது என்பதை உற்றுநோக்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. 

தோட்டி மகன் வாசித்து முடித்த நிமிடத்தில் இருந்து அவர்கள் குறித்த சிந்தனைதாம்.

இதுவரைக்கும் நான் சந்தித்த பேசிய, எப்போதும் கையில் மம்மட்டியுடன் திரியும் மனிதர்களே வந்து போகிறார்கள். தங்களுக்கு எதிராக நிகழும் சமூக வன்முறையை எதிர்த்து தோட்டிகள் கேள்வி கேட்கலாமா கூடாதா என்ற முடிவையே தயங்கித் தயங்கி எடுக்கும் காலத்தில் நிகழ்ந்த கதையை பேசுகிறது தோட்டிமகன் நாவல். கதை நிகழும் காலத்தை என்னால் கணிக்க முடியவில்லை எனினும், நிச்சயம் இருபதாம் நூற்றாண்டுக் கதையாகத்தான் இருக்க வேண்டும். அதனால் சரித்திரத்தின் பக்கத்தை ரொம்பவெல்லாம் புரட்டவேண்டிய தேவை இல்லை. இந்நாவலில் நிகழும் பல சம்பவங்கள் அவர்கள் வாழ்வில் இன்றும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பது பெரும்சோகம்.



இசக்கிமுத்து எனும் தோட்டி தன் மகன் சுடலைமுத்துவை வலுக்கட்டாயமாக தோட்டி வேலைக்கு அனுப்பவதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. இசக்கிமுத்து என்பவர், நான் மேலே கூறினேன் இல்லையா எங்கள் தெரு தோட்டி அச்சுஅசலாக அவரைப்போல்தான் இருந்திருக்க வேண்டும். சுடலைமுத்து காலத்தின் கட்டாயத்தில் வேறு வழியே இல்லாமல் அப்பன் தூக்கிய அதே மம்மெட்டியைத் தூக்கிக்கொண்டு வேலைக்குச் செல்கிறான். அவனுக்கென சில தன்மானங்கள், சில நியாயங்கள் இருக்கின்றன. அதன்படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறான். தன்மானம் என்ற ஒன்று நினைப்பில் கூட இருக்ககூடாது எனும்படியான சம்பவங்கள் வரிசையாக நடந்தேறுகின்றன. 

மனிதக்கழிவு அள்ளும் நாம்தான் இப்படியிருக்கிறோம், சந்ததியாவது தோட்டி என்ற அவசொல்லில் இருந்து தப்பிப்பிழைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான். தோட்டிகளிலேயே மிகவும் சிந்திக்கத் தெரிந்த தோட்டியாக தன்னை உருமாற்றுகிறான். அதனால்தானோ என்னவோ அவன் சிந்திக்க ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து தன் சக நண்பர்கள், தொழிலாளர்கள் என தன் வர்கத்தின் உள்ளேயே வஞ்சகம் செய்ய ஆரம்பிக்கிறான். சுடலைமுத்து என்ன ஆனான், அவன் சார்ந்த கூட்டம், உரிமைக்காக குரல் எழுப்ப துணிந்ததா? செய்யும் வேலைக்கு ஏற்ற ஊதியமும், சங்கமும் கிடைத்ததா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுடன் அவர்கள் வாழ்க்கை நகர்கிறது. கூடவே வைசூரி, காலரா போன்ற நோய்களுக்கு பலியாகும் ஒரு இனத்தையும் கவலையோடு காண வேண்டியிருக்கிறது. தொற்று வியாதிக் காலங்களை எளியவர்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதையும், வலியவர்கள் எளியவர்களை எப்படியெல்லாம் வஞ்சித்தார்கள் என்பதையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் தகழி சிவசங்கரன் பிள்ளை.     

கதை சுடலைமுத்துவில் ஆரம்பித்து சுடலைமுத்துவிலேயே முடிகிறது. எப்பாடுபட்டாவது தன் மகனை வேறுவேலைக்கு அனுப்பிவிடத் துடிக்கும் அவன் தன் மகனுக்கு மோகன் என்கிற நாகரீகமான பெயர் சூட்டுகிறான். அதற்கே ஊரெல்லாம் அவனை கேலி பேசுகிறார்கள். தன் அப்பன் ஒரு தோட்டி என்பதும், தோட்டி என்றால் என்னவென்றே தன் மகனுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகப் முடிந்தவரை போராடுகிறான். தன் இழி நிலையை மாற்ற வாழ்க்கை முழுவதும் போராடிக் கொண்டே இருக்கிறான் என்பதுதான் மொத்த கதையும். இந்நாவல் வெளியான காலகட்டத்தில் எவ்விதமான தாக்கத்தை உண்டுபண்ணியிருக்க முடியும் என்பதை இப்போதும் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் இசக்கிமுத்துவையும், மோகனையும் காலம் இன்னமும் விரட்டிக்கொண்டே இருக்கிறது. நாம் மூக்கில் கை வைத்துக் கடக்கும் நம் மலத்தை ஏதேனும் ஒரு ஓரத்தில் நின்றபடி சுத்தம் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.   

மலையாளத்தில் தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய நூலை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் சுந்தர ராமசாமி. மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல் என்பதே தெரியாத அளவுக்கு அற்புதமான மொழியாக்கமாக வந்திருக்கிறது. தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.   

நன்றி
நாடோடி சீனு

18 Feb 2018

கொமோரா - லஷ்மி சரவணகுமார்

வெறுப்புகளின் பலவீனங்களின் வழியே அன்பைத் தேடி அலையும் ஒருவனின் கதை கொமோரா. தான் தேடுவது அன்புதான் என்பதை அறியாமலேயே வெறுப்பின் கோரதாண்டவத்திற்கு பலியாகும் ஒருவன் தன் வாழ்நாள் முழுமைக்குமாக சந்திக்கும் வலியும் அவமானங்களும் அதன் மூலம் கிடைக்கும் வெறுப்புகளும் வெறுப்பின் உச்சத்தில் நிகழும் தடம்மாறுதல்களும் அதன் மூலம் அடையும் ஞானங்களும் என ஒரு நூறு வருடத்திற்குத் தேவையான படைப்பாக உருமாற்றம் பெற்றிருக்கிறது கொமோரா. 

ஒவ்வொரு நாவலும் அவை தரும் அனுபவங்களும் அலாதியானவை. நம்மை வேறோர் உலகிற்கு அழைத்துச் செல்லும் பேருன்னதம் பெற்றவை. இதுவரை நாம் சந்தித்திராத மனிதர்களை அவர்களின் அந்தரங்கங்களை நம்மோடு அறிமுகம் செய்பவை. தமக்கான கதைகளின் மூலம் நமக்கான ஞானத்தைத் தந்துவிட்டுப் போகும் அற்புதம் பெற்றவை. அப்படித்தான் கதிரும் நம்மோடு அறிமுகம் ஆகிறான். கதிரை நாம் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு இடங்களில் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். உணவகங்களில் எச்சித்தட்டு எடுப்பவனாக, திருவிழாக்களின் பலூன் விற்பவனாக, வீடுவீடாக வந்து ஆடைகள் விற்கும் துணி வியாபாரியாக, பரோட்டா மாஸ்டராக, கஞ்சா விற்பவனாக, மாமா வேலை பார்ப்பவனாக என வெவ்வேறு இடங்களில் நன்கு அறிமுகமானவனாக இருக்கலாம். அவனுக்கோர் கதை இருக்கிறது அவனுக்கான வாழ்க்கை மாற்றம் இருக்கிறது கூடவே அவனுக்கான அவமானங்களும் வெறுப்புகளின் நியாயங்களும் இருக்கின்றன. அவை முக்கியமானது. ஏதோ ஓர் தருணத்தில் அந்த வெறுப்பு நம் மூலம் உருவானதாகக் கூட இருக்க முடியும். டேய் எச்சித்தட்டு என்று அவனை பொடனியில் அடிப்பதில் இருந்து மாமாப்பையா என கழுவேற்றுவது வரைக்கும் நாமும் நமக்கான நியாயங்களின் மூலமே இவ்வுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறோம். நாமிருவரும் சந்தித்துக் கொள்ளும் இடங்களில் எல்லாம் கதிர் வெறுப்பின் ஆழத்தினுள் மீண்டும் மீண்டும் அழுத்தபடுகிறான். அவன் வெறுப்பின் மொத்த வடிவம். நம்மாலான வெறுப்பின் மொத்த வடிவம்.  

எவ்விதங்களிலும் அழிக்க முடியாது, மிக ஆழமாக வேரூன்றப்பட்ட வெறுப்பானது, கதிர் பிறப்பதற்கு முன்பே அவன் மனதில் விதைக்கபட்ட ஒன்று. கதிரின் வாழ்க்கை மாற்றம் அவன் தந்தை அழகரின் வித்து வழியாக வந்த ஊழ்வினை. மனிதர்கள் மீது இருக்கும் வெறுப்பும், பெண்களின் மேல் கொள்ளும் அடக்கமுடியாத காமமும் அப்பன் தானாகத் தந்த வரம். கதிரின் அப்பா அழகரின் சிறுவயதும் அத்தனை சுகமான ஒன்றாக இல்லை. கதிரை விடவும் வெறுப்பின் கோரநாவுகளினால் மிக அதிகமாக சூறையாடப்பட்டவன் அழகர். கதிர் தன் சொந்த மண்ணைச் சேர்ந்த  மக்களினால் வேட்டையாடப்பட்டவன் என்றால் அழகர் கம்போடிய அரசியல் சூழ்ச்சிகளால் காயடிக்கப்பட்டவன். சிறுவயதில் ஒருவன் அடையும் மனஅழுத்தங்களும் மனமாற்றங்களுமே அவனின் மொத்த வாழ்நாளையும் தீர்மானிக்கிறது என்ற ஒற்றைச் வரியின் அழுத்தமான வடிவமாக அழகரும் கதிரும் நிற்கிறார்கள். 

கதிரைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன் அழகரை அறியவேண்டியது அவசியமானது. கம்போடியாவில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகளுக்கு மத்தியில் தப்பிப்பிழைக்கும் அழகரின் நாட்களை இதைவிட வேறெப்படியும் அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கூற முடியாதென்று நினைக்கிறன். வதைமுகாம்களில் இன்னதென்று சொல்லமுடியாத பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு குடும்பத்தை இழந்து உடல் நலிந்து மனமொடிந்துபோன சிறுவன் அழகர், ஒருவாய் சோறுக்காக நாள் முழுவதும் அலைந்து திரியும் அந்தத் தருணங்கள் அத்தனை கனமானவை. உண்பதற்கு ஒருவாய் சோறு கிடைத்து, அது பசியை மேலும் தூண்டிவிட எப்படியேனும் எதையேனும் உண்டுவிட வேண்டும் என்ற வெறியோடு அலைபனின் கண்களில் சிக்குகிறது அந்தப்பூனை. உலகின் ஒவ்வொரு மூலையிலும் பசியால் அல்லாடும், பசிக்கு மடிந்து போகும் ஒரு சிறுவனின் பசி கொண்டு எழுதபட்ட வரிகள் அவை. பூனையைக் கொன்று அதனை வேக வைக்க நெருப்பு தேடி அலைந்து, அத்தனையும் கைவிட்ட நிலையில் பூனையின் பச்சைக் கறியை அழகர் தின்ன ஆரம்பிக்கும் போது என்னைச் சுற்றிலும் அந்தப் பூனையின் பச்சைவாடை. ஒருமாதிரி குமட்டிக்கொண்டு வந்தது. நிதர்சனத்தின் வெகு அருகில் நின்றுகொண்டு அழகரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரக்கமற்ற உலகின் அத்தனை தெய்வங்களையும் சபித்தபடி அந்த பூனையை மென்று தின்று கொண்டிருந்தான் அழகர். நாவலானது இந்த இடத்திலேயே பரிபூரணம் அடைந்துவிட்டதைப் போல் ஓர் உணர்வு.

பசி, பிரிவு, நிலையின்மை, ஏக்கம், வெறுப்பு என அத்தனையும் கம்போடியாவில் இருந்து நாடு கடத்தபட்டவை. அழகர் அடைந்த அத்தனை வேதனைகளையும் அவன் மகன் கதிரும் அடைகிறான். அதிலும் பெரும்பாலான வன்முறைகளை தன் தந்தை அழகரின் மூலமே அடைகிறான். அவசூழலில் வளர்ந்த ஒருவன் தன் மகனையும் அதே போன்றதொரு சூழலில் வளர நிர்பந்திக்கிறான் என்பது பெருங்கொடுமை. தன் தந்தையின் இறந்தகாலம் குறித்தோ அல்லது அவர்பட்ட இன்னல்கள் குறித்தோ கதிருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை என்றாலும் கதிரின் வருங்காலம் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் அவனை வஞ்சிக்கிறான் அழகர். தான் பெற்ற வலிகளைக் கொண்டு எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் அவனை வேட்டையாடுகிறான். அதுவும் மிகக் குரூரமாக. உலகின் மீதான வெறுப்பை உலகிடம் இருந்து கற்றுக்கொண்டவன் அழகர். அதனைத் தன் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டவன் கதிர்.

இந்நாவலின் மையநீரோட்டமாக நழுவிச்செல்லும் கதிர் மூலமாகவே ஒரு சமுதாயத்தின் பேசப்படாத பெரும்பான்மை குறித்து பேசப்பட்டிருக்கிறது. அப்பாவிடம் இருந்து கிடைத்த வெறுப்பு அம்மாவின் மீதும் சூழ்கிறது. வாழ்க்கை எனும் பேரிருள் அவனுக்குள் எவ்வித உதயத்தையும் ஏற்படுத்தத் தயாராயில்லை. செல்லுமிடங்களில் எல்லாம் பிரிவைச்சந்திக்கிறான். விடுதியில், வாழச்சென்ற கிராமத்தில், பள்ளிக்கூடத்தில் என நிரந்தர அன்பைத் தர யாருமே இல்லை. அப்படியாரேனும் அன்பின் உரு கொண்டாலும் அடுத்தநொடியே அழிந்து போகிறார்கள். பிரிவின் வலி மேலும் மேலும் அவனை நிராயுதபாணி ஆக்குகிறது. இதன் மூலம் தனக்கென சில குணங்களை வளர்த்துக்கொள்கிறான்.   

எல்லாத் தருணங்களிலும் அசாத்தியமானதொரு துணிச்சல்காரனாகவே வலம் வருகிறான் கதிர். அந்தத் துணிச்சலின் பின் பெண்கள் மீதான அன்பும் காதலும் காமமும் பெருகித் தவிப்பது அன்பை அடைய அவன் எடுக்கும் முயற்சிகள். 'சுண்ணாம்பு கொதிக்கும் தொட்டியினுள் குதித்தால் தன்னைக் கட்டிக்கொள்ளலாம்' என்ற ஒரு சொல்லுக்காக தொட்டியினுள் குதித்து சாகசம் செய்யத் துணிகிறான் கதிர் எனும் அச்சிறுவன். கால்கள் வெந்துபோய் அழுகிப் போகும் நிலையிலும் கூட அவள் தன்னை கட்டிகொள்வாளா என்ற ஏக்கம் தொடர்கிறது. எதையும் யோசித்து முடிவெடுக்க திராணியில்லாத கதிரை பாலர் விடுதியில் சேர்க்கிறாள் கதிரின் அம்மா. எல்லாமும் ஒழுங்காகச் செல்ல, சபிக்கப்பட்டவனின் வாழ்வில் பின்தொடரும் பிரச்சனையாக உரு கொள்கிறது காமம். விடுதியில் வசிக்கும் காமுகர்களால் சூரையாடப்படுகிறான். சமயங்களில் அப்பனின் காமமும் கதிரின் பின்புறத்தை சீரழிக்காமல் இல்லை. அப்பனின் முரட்டு உருவத்திற்கும் அடிக்கும் பயந்து, தனக்கு நேரும் அத்தனை கொடுமைகளையும் தனக்குள்ளேயே சேகரிக்கிறான். அடிபட்டவன் நெஞ்சில் வளரும் வன்மமாக அப்பனை வீழ்த்த அதன் காரணங்களை ஒன்றுதிரட்ட ஆரம்பிக்கிறான். அதற்கு வலுசேர்க்கும் விதமாக, பின்னொருநாள் அப்பன் செய்த கொலையொன்று குடும்பத்தையே சிறையில் வைக்கிறது. அப்பாவின் மீதும் வாழ்வின் மீதுமான ஆழமான வெறுப்பை ஏற்படுத்துகிறது அந்தச்சிறை. தனக்கான நியாயங்களை தானே தேடிக்கொள்ளத் தொடங்குகிறான். 



அப்பாவைத் துரத்திய அதே பசி கதிரையும் துரத்துகிறது. பசியைப் போக்க கோழி திருடுவதில் ஆரம்பித்து வேறுவேறு தொழில்களைக் கற்கிறான். அப்படிப் பழக்கம் கிடைத்த துணி யாவாரி மூலம் வாழ்வில் ஒரு திருப்பம் நேரும் என அனைவரும் நினைக்க, கதிரின் ஊழ்வினை வேறொன்றை நினைக்கிறது.  

துணி விற்கப்போகும் இடத்தில் மலைவாழ்ப் பெண் ஒருத்தியைச் சீண்டிப் பார்க்கிறான் கதிர். பின் கற்பழிக்கவும் முயல்கிறான். அவனுடைய முதல் சீண்டலுக்கு ஒத்துழைக்காத அந்தப்பெண்ணை மூர்க்க மனம்கொண்டவள் என நினைக்கிறான். தன் காமத்திற்கு இடம் கொடுக்காத அவளை மனிதப்பிறவியா என்கிறான். பெண் என்றாலே படுக்க மட்டுமே என நினைக்கும், பெண்களின் மீதான கதிரின் பார்வை நாவலின் ஆரம்பத்தில் இருந்தே முழுமை பெற ஆரம்பிக்கிறது. மதுரை மத்திய சிறைச்சாலைக்கு தன் கணவனைப் பார்க்க வரும் பெண்ணான சுதா கதிரை சகோதரன் என்றழைக்க, "நான் சந்திக்கிற சரிபாதி பெண்களுக்கும் மேல நான் தொடனும்னுதான் நெனைக்கிறேன். தற்காலிகமாகவோ இல்ல வாழ்க்கை முழுக்கவோ ஒருத்தர சகோதரியா நினைக்கிற அளவுக்கெல்லாம் நான் யோக்கியன் இல்ல. அபூர்வமா சிலர மட்டுந்தான் என்னால சகோதரப் பாசத்தோட பாக்க முடியும். எனக்கு உன்னய பாக்கறப்போ எல்லாம் உங்கூட படுக்கனும்னுதான் தோணுது. நீ கோவிச்சுக்கிட்டாலும் பரவா இல்ல. மனசுல பட்டத சொல்லிடனும்னு நினைக்கிறேன்." இதுதான் கதிர். 

எல்லாவிதங்களிலும் முழுமைபெற்ற ஒரு பாத்திரம் கதிர். எங்குமே முன்னுக்குப் பின்னாகப் புனையப்படவில்லை. இதுதான் தன் சுயம் என்பது அவனுக்கே நன்றாகத் தெரியும். தான் இப்படியானதற்கான காரணமும் யார் என்று அவனுக்குத் தெரியும். வாழ்க்கை சீரழியக் காரணமானவனை வதம் செய்வதற்காகக் கொலைவாளினைத் தூக்கவும் அந்தக் கொலையை நிகழ்த்தவும் அர்த்தப்பூர்வமான காரணங்கள் அவனிடம் இருக்கின்றன. கொல்லப்பட வேண்டிய ஆள் கதிரின் அப்பா அழகர். கொல்வதற்கான வேட்கை நீண்டகாலமாக உருபெற்று வலுபெற்று அவர் சிறையில் இருந்து விடுதலையாகி வரும் நாளுக்காகக் காத்திருக்கிறான். அதற்கு உதவும்படி முருகனின் துணையைக் கேட்கிறான். 

மிகச்சிக்கலான பாத்திரப்படைப்புகளை மிக எளிதாகப் படைப்பதற்கு லஷ்மியால் முடிகிறது. அப்படியொரு சிக்கலான பாத்திரப்படைப்புதான் முருகன். கதிரின் மேல் மையல் கொள்ளும் ஒரு ஆணின் காதல் முருகனுடையது. இந்தக்காதலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் அதன் தவிப்பில் பின்னொருநாள் இவர்கள் இருவரும் கலவி கொள்ளும் போது முருகனுக்கும் சக்திக்கும் திருமணமாகி இருக்கிறது. இதுவோர் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நிகழ்வு. முருகன் கதிரின் அந்தரங்கம் ஒரு பெண்ணின் முன் அம்பலமாகும் இடம். ஒருவிசயத்தை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டே போவதின் மூலம் படைப்பின் வேரினை மேலும் மேலும் ஆழமாக்குகிறார் லஷ்மி. 

வாழ்க்கை எப்படி எல்லாத் தருணங்களிலும் தன்னை உபயோகித்துக்கொண்டதோ அப்படியே ஒருகட்டத்திற்குப் பின் கதிரும் தன்னைச் சார்ந்த அத்தனைப் பேரையும் உபயோகித்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். முருகனை, சத்யாவை, மலரை, சந்திரனை என வாழ்வின் மிகமுக்கியமானவர்களையும் ஏதோ ஒருவிதத்தில் தன் சுயதேவைக்காக அவர்களுக்கே தெரியாமல் உபயோகிக்கிறான். 

கதிரின் மீது இருக்கும் காதலால் கதிரின் தந்தையைக் கொல்வதற்கு முருகன் சம்மதிக்கிறான். கொன்றழித்தபின் தன்னோடு வெளிநாட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று அழைக்கும் முருகனுக்கு அப்போதும் கதிரின் மேல் காதல் இருக்கிறது. கூடவே முருகனுக்கும் சக்திக்கும் ஒருவயதில் பிள்ளையும் இருக்கிறது. சக்தியைப் பார்க்கும் போதெல்லாம் என்றாவது ஒருநாள் அவளை அடைய வேண்டும் என்று கதிர் நினைக்க, தன்னோடு கலவி கொள்வது போலவே தான் சக்தி மற்றும் கதிர் மூவரும் கூட்டாக கலவிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறான் முருகன். இவற்றிற்கு மத்தியில் சக்தி கதிர் குறித்து என்ன நினைக்கிறாள் என்பது வங்கக்கடல் ஆழம். இப்படியாக நாவல் முழுக்கவே பல்வேறு வகையான மனிதர்கள் வந்துசெல்கிறார்கள் அவர்களின் தேவையும் இருப்பும் மிகமுக்கியமான ஒன்றாக நிகழ்கிறது

காமம் நிறைந்த மனதினுள் காதலையும் ஊன்றிச்சென்றவள் சத்யா. சத்யா வந்துபோவது மிகசில அத்தியாயங்கள் என்றாலும் அவள் கடந்து போகும் அந்த சில நாட்களில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திச் செல்கிறாள். ஒரு கவுரவக் கொலையில் தோற்றுப்போன காதலின் நீட்சியாகிப் போகிறாள் சத்யா. சத்யாவை இழந்த துக்கத்தில் இருக்கும் கதிரை அம்மணமாக்குகிறது மேல்சாதி வெறுப்பு. அவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறான். ஓட ஓட விரட்டுகிறது ஏதேனும் ஒன்று. வெறுப்பின் எச்சங்களால் நிறைந்த ஒருவனுக்கு அவனைத் துரத்தியடிப்பதைத் தவிர, ஓடவைத்துக் கொண்டே இருப்பதைத் தவிர காலம் வேறெப்படியான வெகுமதியைக் கொடுத்துவிட முடியும். கதிரைப் போலவே கால ஓட்டத்தில் சிக்கிக்கொண்ட மற்றொரு மனிதர் விஜி அண்ணா. கதிர் அப்பா அழகரின் சிறைச்ச்சாலை நண்பன். விஜி வந்து செல்லும் பகுதிகள் சிறைச்சாலையின் குற்றச்சரித்திரங்கள். சிறைச்சாலையின் உள்ளிருக்கும் பகை அரசியல் மற்றும் கைதிகளின் குடும்பகளில் நிகழும் இன்னபிற போராட்டங்கள் என சிறைச்சாலையின் உள்ளும் வெளியுமாக நாவலின் தளம் வேறோர் களத்திற்குச் செல்கிறது. விஜிஅண்ணாவும் அவன் அப்பாவும் கொமோராவின் மிக முக்கிய சித்திரங்கள்.

பொதுவாகவே லஷ்மியின் நாவல்களில் அவரும் துரத்திக்கொண்டு தெரிவார். நாவலில் கதாப்பாத்திரங்கள் பேசவேண்டுமே ஒழிய நாவலாசிரியன் அல்ல நாவலின். தேவையிருப்பின் ஆசிரியர் தன் மூக்கை நுழைக்கலாம். உப்பு நாய்களில் சில பகுதிகளிலும், கானகனின் பெரும்பாலான பகுதிகளிலும் லஷ்மி தான் தெரிவார். அது ஓர் உறுத்தலாகவே இருக்கும். கானகன் வெளியீட்டு விழாவில் லஷ்மி கூறிய வாசகம் இன்னும் ஞாபகம் இருக்கிறது. 'என் அப்பாவக் கொல்லனும்ன்னு நிறையவாட்டி யோசிச்சிருக்கிறேன்'. கானகன் நாவலின் மையம் கூட அதுதான். 

ஆனால் கொமோராவில் அப்படியில்லை. எல்லாத் தருணங்களிலும் நாம் கதாப்பாதிரங்களோடு மட்டுமே உலவுகிறோம். ஒரே ஒரு இடத்தில் மட்டும் லேசாகே லஷ்மி தனது மூக்கை நுழைக்கிறார். 'தன் தந்தையைக் கொலை செய்ய ஏதோவொரு தருணத்தில் நினைக்காத மனிதர் நம்மில் அபூர்வம்.' இந்த இடம்தான் அது. அதுவும் பெரிதாக உறுத்தவில்லை.      

இந்தப் படைப்பின் உச்சம் என்றால் அது அழகரைக் கொல்லவும் முடியாமல் வெல்லவும் முடியாமல் தவிக்கும் கதிரின் நாட்கள். இவங்கொல்லுவானா மாட்டானா என நமக்குள் இருக்கும் தவிப்பு முருகனுக்குள்ளும் இருக்கும். அதனை கடைசிவரை படபடப்போடு நிகழ்த்தியிருப்பது நாவல் பெறும் உச்சம். 

லஷ்மி இதுவரைக்குமாக எழுதிய அத்தனை நாவல்களையும் படித்துவிட்டவன் என்கிற முறையில் சொல்கிறேன், லஷ்மி தன் படைப்பில் அடைந்திருக்கும் உச்சம் இந்நாவல். எவ்விதங்களிலும் குறையில்லாமல் படைக்கப்பட்ட நாவல். வாசகர்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றும் கூட. நாவலின் சில முக்கிய பகுதிகளை சாத்தானின் மனவெளிக் குறிப்புகளாக எழுதியவிதம் அருமை. அந்தக் குறிப்புகள் நீண்ட அத்தியாயங்களாக இடம் பெற்றிருந்தாலும் அலுக்காமலேயே இருக்கும். ஏனென்றால் தான் ஒரு சிறந்த கதை சொல்லி என்று நிருபித்திருக்கிறார் லஷ்மி சரவணகுமார். உங்களின் வாசகன் என்பதில் மெல்லியதோர் பெருமை எனக்கு. 

இந்த நாவலை  கார்கி தவிர வேறு யாருக்கு சமர்பித்திருந்தாலும் அந்தப் பாவம் உங்களை சும்மா விட்டிருக்காது. 

என்வாழ்நாளில் இதுவரைக்கும் படித்த நாவல்களில் மிகச்சிறந்த பத்தாக சிலவற்றைக் கூற முடியுமென்றால் அதில் நிச்சயமாக கொமோராவிற்கும் இடமுண்டு. ஏனென்றால் கொமோரா - என் தலைமுறை எழுத்தாளன் எழுதிய மிகச்சிறந்த நாவல். தவிர்க்கக்கூடாத நாவலும் கூட.    

16 Feb 2018

ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்

வாழ்க்கையின் உயர்மட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெரும்புள்ளிகளுடன் தொடர்பில் இருக்கும் ஒரு சாதாரணன், தான் சந்தித்த மனிதர்கள் மூலமாக, வாழ்க்கையின் அந்தரங்கத்தை அல்லது இதுவரையில் நாம் அறிந்திராத ஒரு சமூகத்தின் பக்கம் பற்றி கூறும் கதை. இதுவரை நாம் அறிந்திராத சமூகம் என்று கூறினேன் இல்லையா அதில் எனக்கு உடன்பாடில்லை. அதை மட்டும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். ஏன் என்ற காரணத்தை பிறகு சொல்கிறேன். 

மிகவும் கஷ்டப்பட்ட பின்னணியில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒருவனுக்கு அவனுடைய காலேஜ் சீனியரான சந்திரனின் பழக்கம் கிடைக்கிறது. சந்திரன் மூலம் வேறோர் உலகின் அறிமுகம் கிடைக்கிறது. அவ்வுலகின் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கும் தனக்குமான உறவைத் தக்க வைத்துக்கொள்வதற்காக எவ்வாறெல்லாம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் மூலம் கிடைக்கும் லாப நஷ்டங்கள் என்ன என்பதை தன்னிலை விளக்கமாக அளிக்கும் ஓர் கதை ரோலக்ஸ் வாட்ச். உயர்மட்டத்தில் இருக்கும் பல்வேறுபட்ட மனிதர்கள் சார்ந்த கதை என்பதால் நாவல் முழுக்க மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அந்தத் தம்பியாக, அந்தத் தம்பியின் நண்பனாக, அந்த நடிகனாக, அந்த நடிகனின் காதலியாக, எனக்குத் தெரிந்த நண்பராக, எங்கள் உள்வட்டக் குழுவில் இருப்பவராக, எங்கள் உள்வட்டக் குழுவில் இல்லாவிட்டாலும் எங்கள் நண்பராக இருப்பவராக என கதை முழுவதும் 'யாரோ ஒருவராக' மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரே ஒற்றுமை இவர்கள் அனைவரும் சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு குற்றப்பின்னணி இருக்கிறது. 

இப்படியாக நாவல் முழுக்க வரும் மனிதர்கள் 'யாரோ ஒருவராக' தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதால் நாவல் எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதே பெரும்புதிராக இருக்கிறது. அந்தப் புதிர் இறுதிவரையிலும் அவிழ்க்கப்படவில்லை என்பதுதான் பெருஞ்சோகம். சரவணன் சந்திரனிடம் சரளமான வாக்கியக் கோர்ப்பு இருக்கிறது. சலிக்காமல் அலுக்காமல் கதை சொல்கிறார். அதுதான் அவருடைய பலம். அதற்காக அதனைக் கொண்டு மட்டுமே வாசகனை ஏமாற்றிவிட முடியாது என நினைக்கிறன். கதையின் மைய நீரோட்டத்தில் ஆங்காங்கு சில சிறுகதை மனிதர்கள் வந்து போகிறார்கள்; அந்த குடிகார மாமாவாக, திவ்யாவாக, திவ்யா போல் இருக்கும் பிலிப்பைன்ஸ் பெண்ணாக என சிலரை மட்டுமே கவனித்து உற்றுநோக்க முடிகிறது. சந்திரனும் மாதங்கியும் கூட எக்ஸ்பிரஸ் மனிதர்களாகவே வந்து போகிறார்கள். குறுநாவல் மற்றும் அதிகமான மனிதர்கள் என்பதனால் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்க வேண்டும். இத்தனை மனிதர்கள் இருந்தும் கதைக்களத்தில் ஒரு சுவாரசியம் இல்லை. வருகிறார்கள் போகிறார்கள் என்பதையெல்லாம் பெட்டிச்செய்தியாக கடந்து போகலாமே தவிர, கதாபாத்திரமாக கடந்து போதல்  இயலாத காரியம். 



தமிழ்ப்பிரபாவின் பேட்டையிலும் சிறுகதைகளாக சில மனிதர்கள் வருவார்கள். சிறுகதை அளவிற்கு அதன் நிறைவையும் கொடுத்திருப்பார்கள். அதேநேரம் அந்தக்கதைகள் இல்லாவிட்டாலும் நாவலில் எவ்வித குறைபாடும் இருக்காது. இங்கு நாவல் முழுக்க மனிதர்கள் வருகிறார்கள். இருந்தும் ஒருவர் கூட சிறுகதை அளவுக்குக் கூட தாக்கம் ஏற்படுத்தவில்லை. பெரும்பாலான மனிதர்கள் ஏதேனும் ஒன்றிற்கான உவமைகளாக வந்து போகிறார்கள். விநாயக முருகனின் உத்தி கூட இதுவே. ஒரு உவமையைச் சொல்ல வேண்டுமென்றால் அந்த உவமையை உருவாக்க மிகப்பெரிய சம்பவம் ஒன்றை உருவாக்குவார் பின் அதில் இருந்து உவமையை எடுத்து இதைப்போல் என கொண்டு வருவர். சில சமயங்களில் அவை சுவாரசியமாக இருக்கும், சில சமயங்களில் ஷப்பா என பெருமூச்செறியச் செய்யும். சரவணன் சந்திரன் கூறும் மனிதர்களும் பெரும்பாலும் அவ்வாறாகத்தான் வந்து போகிறார்கள். 

இந்த நாவலில் அலுப்பை ஏற்படுத்திய மற்றுமோர் விஷயம் வாக்கியக் கட்டமைப்பு. ஒரு பேஸ்புக் பதிவை எழுதும் வேகத்தில் நாவல் எழுதியதைப் போல் இருக்கிறது. என், எனக்கு, நான் போன்ற வார்த்தைகளை தேவையற்ற இடங்களில் இருந்து எடுத்தாலே இரண்டு பக்கங்கள் குறைந்துவிடும். சில வாக்கியங்களை இன்னும் சிரத்தையெடுத்து மாற்றியிருக்கலாமோ என்று தோன்றியது. ரோலக்ஸ் வாட்ச், சரவணன் சந்திரன் எழுதிய முதல் நாவல் என்பது என் ஞாபகம். அதற்குப் பின்னும் சில நாவல்கள் எழுதிவிட்டார். அவற்றைப் படித்துப் பார்க்க வேண்டும். அவற்றில் இக்குறைகளை களைந்திருந்தால் மகிழ்ச்சி. மற்றபடி நேரமிருந்தால் ஒருமுறை வாசிக்கலாம். 


நன்றி         
நாடோடி சீனு

14 Feb 2018

பூனை சொன்ன கதை - பா ராகவன்

அன்பின் பா.ரா,

வணக்கம். இந்தக் கடிதம் எதற்கென இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். நிச்சயமாக இதனை ஒரு வாசகர் கடிதம் என்றோ இல்லை வாசகர் விமர்சனக்கடிதம் என்றோ கூட எடுத்துக்கொள்ளலாம். அதற்கான மொத்த உரிமையும் உங்களுக்கு இருக்கிறது.

இன்றைக்குத்தான் பூனைக்கதை படித்து முடித்தேன். படித்து முடித்தபின் எழும் நினைவுகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து அதனை வார்த்தைகளாக்கிக் கொண்டிருக்கிறேன்.

இத்தருணத்தில் என்னருகிலும் அந்தக் கரிய பூனை அமர்ந்திருப்பதைப் போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. அதன் திரண்ட விழிகள் பலநூறு வருடத்துக் கதை கூறுகின்றன. அப்படியே அள்ளி எடுத்து அதன் முதுகை லேசாகத் தடவிக் கொடுக்கலாமா இல்லை நமக்கேன் வம்பு என கண்டுகொள்ளாது விட்டுவிடலாமா என்ற இருவேறு உணர்ச்சிகளுக்கு நடுவே என் எழுத்துக்களுக்கு கருப்பு மை தீட்டிக் கொண்டிருக்கிறேன். பாருங்கள் நான் வேண்டாம் என்று நினைத்தாலும் அந்தப் பூனையின் கரிய நிறம் தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது. சற்றே புன்முறுவல் புரிகிறீர்கள் இல்லையா. அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு அடுத்ததாக நான் சொல்லப்போகும் வரிகள் சற்றே அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ அளிக்கலாம். அல்லது உங்கள் சமநிலையை குலைக்காமலும் போகலாம். ஒருவேளை அதிர்ச்சியோ வருத்தமோ அடைவீர்கள் என்றால் முன்னதாகவே மன்னிப்பு ஒன்றை சமர்பித்து விடுகிறேன்.

சரி இப்போது கேள்விக்கு வருகிறேன். 'பாரா நீங்கள் நாவல் எழுதுவீர்களா' என்று கேட்டால் எப்படி உணர்வீர்கள். பூனைக்கதையின் அட்டை படத்தைப் பார்த்தபோது அப்படித்தான் உணர்ந்தேன். உங்களை 'பத்தி எழுத்தாளன்' என்றே இதுநாள் வரையிலும் நினைத்திருந்தேன். கதைகள் எழுதுவீர்கள் என்றாலும் அது சின்னத்திரைக்காக மட்டுமே என்று நினைத்தது என் தவறுதான். ஆனால் பாருங்கள் சமயங்களில் நம்தவறு பிறரையும் வருத்தப்படச் செய்துவிடுகிறது. நான் செய்த தவறைப்போல.

நீங்கள் எழுதி நான் படித்த அத்தனை புத்தகங்களிலும் சரி அல்லது புத்தகக் கண்காட்சியில் கண்ட உங்களுக்கான விளம்பரங்களிலும் சரி நீங்கள் எழுதிய சிறுகதைகளோ அல்லது நாவலோ பிரதானமாகத் தெரியாதது என் குற்றம் மட்டும் அல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும். பூனைக்கதையை நான் தேர்வு செய்ததன் அடிபடைகூட பா.ரா வின் எழுத்துக்களை பாரா தாண்டி படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். படித்தும் முடிதுவிட்டேன். ஒரு நாவலின் முடிவு இன்னோர் நாவலில் சென்று சேர்க்குமா என்றால்? நிச்சயம் ஆம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. உங்கள் அத்தனை நாவல்களையும், சிறுகதைகளையும் ஒருமுறையேனும் படித்துப்பார்க்க வேண்டும். அதற்கான வித்து என்னுள் விழுந்தது நிச்சயமாக பூனைக்கதையின் மூலமாகத்தான்.

உங்கள் வாசகர்களிடம் சொல்வதற்கென சில தகவல்கள் என்னிடம் இருக்கின்றன அதை முடித்துவிட்டு மீண்டும் உங்களிடம் வருகிறேன்..

*****

அன்புள்ள பா.ரா வாசகர்களுக்கு,

பூனைக்கதை படித்துவிட்டீர்களா? படித்திருந்தால் மகிழ்ச்சி.

படிக்கவில்லை என்றால் பா.ரா வருத்தப்படுவாரோ இல்லையோ நிச்சயமாக நான் வருத்தப்படுவேன். ஏனென்றால் இது பா.ரா தன் வாசகர்களுக்கென்றே தனிச்சிரத்தை எடுத்து எழுதிய நாவல். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் அவர் தன் வாசகர்களின் மனம் பிடித்து ஏதேனும் ஒன்றை விதைத்துக் கொண்டே வருகிறார். அந்த விதைகள் பெரும் விருட்சமென வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் கணம் கூடக்கூட மனம் இலகுவாகும் விந்தை நிகழ்ந்தேறுகிறது. அதனால் தான் கூறுகிறேன் இது வெறும் பூனைக்கதை மட்டுமல்ல. உங்களுக்கான கதையும் கூட.   

பூனைக்கதை, ஹரன் பிரசன்னாவுக்கு எனத்தொடங்கும் அந்தப் பக்கங்களில் இருந்தே நாவலின் கணம் கூடிவிடுகிறது என நினைக்கிறன். எங்கெனத் தெரியாத ஓர் இடத்தில் இருந்து எட்டிப்பார்க்கும் சினேகம் ஹரன் பிரசன்னா. பூனைக்கதை தன்னை அறியாமலேயே சுவாரசியம் அடைந்ததற்கு ஹரன் பிரசன்னா என்ற பெயர்கூட காரணமாக இருக்குமோ என்று நினைத்தேன். ஒப்பிட்டுப் பார்த்தால் ஹரன் பிரசன்னா வேறு பூனை வேறு இல்லை என இப்போது தோன்றுகிறது. ஒரேயொரு வித்தியாசம் அது பூனை இவர் ஹரன் பிரசன்னா.

பூனைக்கதை, இவ்வுலகில் இருந்து ஒட்டுமொத்தமாக அழிந்துபோக இருக்கும் ஆறு கலைகளைக் காப்பாற்ற அழகியநாயகி புரத்து ஜமீந்தாரும் அவர் கூடவே இருக்கும் பூனை ஒன்றும் பிரயத்தனப்படுகின்றனர். அதற்காக அக்கலைகளின் சூத்திரம் தெரிந்த ஆறு கலைஞர்களை, உலகமே அழிந்தாலும் கலை அழியக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர்களை மறைத்துவைத்து கலை வளர ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு அந்தக் கலைஞர்கள் ஒத்துழைத்தார்களா, ஜமீனும் ஜமீன் உடன் இருக்கும் பூனையும் ஔரங்கஜேப்பிடம் இருந்து அந்தக்கலைகளைக் காப்பாற்றினார்களா இல்லையா என்பது பாகம் ஒன்று.

இந்த ஆறு கலைஞர்களும் ஒரு பாதாள அறையினுள் பத்திரமாக அடைக்கப்பட்டு, வெறிகொண்டு வரும் ஔரங்கஜேப்பிடம் இருந்து தலைமறைவாக தங்கவைக்கப்படுகிறார்கள். பாதாள அறையினுள் இருக்கும் ஆறு திண்ணைகளைப் போல ஆறு கலைஞர்களுக்கும் பின் கதை இருக்கின்றன. எழுத்து, நடனம், கூத்து, இசை, ஓவியம், கவிதை என ஆறு வெவ்வேறு கலைஞர்கள் என்றாலும் இவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம். அனைவருமே தங்களை சுயம்புவாக உருவாக்கிக் கொண்டவர்கள். ஒரு கலைப்பட்டறையில் சேர்ந்து உருக்கி வார்த்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் தங்களைத் தாங்களே செதுக்கியவர்கள். செதுக்கபடுகிறோம் என்பதை அறியாமலேயே செதுக்கபட்டவர்கள். இவர்களுக்கான பின்கதைகளும், இவர்களுடைய தத்துவார்த்த தேடல்களும் சூத்திரங்களுமே இவர்கள்.

இந்த ஆறு கலைஞர்களுக்கு மத்தியில் வந்து குதிக்கும் பூனை தன்னாலான சாகசங்களைச் செய்கிறது.

சமயங்களில் அது பூனையா என்பதே சந்தேகமாயிருக்கிறது. பூனைதான். காரணம் பூனை வடிவில் இருக்கிறது. பூனை வடிவில் இருக்கிறது என்பதற்காக அதனை பூனை என்று கூறிவிடமுடியுமா என்ன? ஒருசமயம் தன்னை பூனை என்கிறது. இன்னொரு சமயம் பூனை வடிவில் இருக்கிறேன் என்று புதிர் போடுகிறது. எதை நம்ப? இருந்தும் அதனை பூனை என்றுதான் நம்பியாக வேண்டும். ஏனென்றால் அதன் மூளையின் ஒரு பகுதியில் தான் ஒரு பூனை என்று எப்போதோ பதிவாகிவிட்ட சொல்லை நம்மிடம் ஏற்கனவே கூறியிருக்கிறது. அதனால் அது பூனைதான்.



இந்தப் பூனைகென ஒரு குணம் இருக்கிறது. அது இவ்வுலகில் இருக்கும் அத்தனை குணாதிசியங்களும் திறமைகளும் தத்துவார்த்தங்களும் தன்னிடம் இருப்பதாக நம்மை நம்ப வைப்பது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தப் பூனை கூறும் எல்லாவற்றையும் நாமும் நம்புவோம். பூனையால் முடியாதது என்று எதுவும் இல்லை. இந்தக் கணத்தில் உங்கள் மூளையின் ஏதோ ஓர் நரம்பில் ஒரு சின்ன குறுகுறுப்பு ஏற்படுகிறதா? சர்வ நிச்சயமாக அந்தப் பூனையின் வேலை தான். உங்கள் அந்தரங்கத்தைத் தரம்வாரியாகப் பிரித்தாராய்வதில் அதற்கொரு அலாதி சுகமுண்டு. அந்த சுகம் ஜமீன்தாரை இயக்கி, அவர் மூலம் கலைஞர்களை இயக்கி பின் அக்கலைஞர்களை பித்துநிலைக்குத் தள்ளும் வரைக்கும் ஓயாது பணியாற்றுகிறது. ஒரு பூனையால் இப்படியெல்லாம் செயலாற்ற முடியுமா என்றால் 'யார் சொன்னா நான் பூனை என்று' நம்மை நோக்கி எள்ளி நகையாடுகிறது. பூனையின் திறமைகளை எண்ணி அதனைப் பாராட்டாலாம் என 'இறைவனின் அற்புதமான ஸ்ருஷ்டி நீ' என்றால் 'அப்படியா சொன்னான் அந்த ஆண்டவன்' என கேலி பேசுகிறது. இனி ஆவதற்கெதுவும் இல்லை என்றால் எதற்கும் துணிந்த கட்டை நான் என்கிறது இந்தப்பூனை.     

ஜமீன்தாரிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட பூனை எழுத்தாளார் பாராவைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் வைக்கிறது. "பா.ரா பா.ரா நீ பாரா பாராவா எழுதினது போதும். உன்கிட்ட சொல்ல ஒரு கதை இருக்கு. அத எனக்காக நீ எழுதித் தருவியா" என்று கேட்கிறது பூனை. பூனைக்கு சம்மதம் சொன்ன பாரா, பின் பாராமுகமாகி, மயிலைத் தேடி போய்விடுகிறார். இதனால் கடுப்பான பூனை ஆறு கலைஞர்களின் மீது பிரயோகித்த வன்முறையை பாராவின் மீதும் பிரயோகித்துப் பார்க்கிறது. இது பாகம் ரெண்டு.

அதே பூனை கலை விரக்தியில் கலியுகத்தின் நல்லதொரு வெயில் நாளில் மாபெரும் சம்ஹாரத்தில் ஈடுபடுகிறது. இது பாகம் மூன்று. இதில் மூன்றாவது பாகத்தின் கடைசி வரியில் மட்டும் சற்றே அதீத வன்முறை தெறிக்கிறது.

*****

மீண்டும் அன்பின் பா.ரா,

முதலில் உங்களுக்கோர் அழுத்தமான கை குலுக்கல். இப்படியொரு அசத்தலான புனைவை எழுதியமைக்கு.

இக்கதையின் முதல் பாகத்தை மாய-எதார்த்தவாதம் என்று கூறலாமா? அப்படித்தான் தோன்றுகிறது. இப்புனைவின் வழி ஊடாடும் உங்கள் எழுத்தினை ஒரு மாயச்சுரங்கம் எனலாம். அத்தனை தத்துவார்த்த கோட்பாடுகளின் ஊடாகவும் பவனி வருகிறது உங்கள் எழுத்து. எல்லாமும் மிகச்சரியான விதத்தில் கலந்து செய்யப்பட்ட பண்டம் போல. உங்கள் வார்த்தையில் கூற வேண்டும் என்றால் 'ஒரு சாகசத்தின் உச்சத்தில் திளைக்கிற தருணத்தில் தன்னையறியாமல் நிகழ்வது. எதுவாகவும் இருக்கலாம். எப்படியும் இருக்கலாம்'. அதுதான் பூனைக்கதை என்று நினைக்கிறன்.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், "மறுபிறப்பெடுத்துவிடும். ஒளியின் மையப்புள்ளியைக் கண்டெடுத்துக் குளிப்பாட்டி வைக்கிற வேலை இது. அழுக்கு போகக் குளித்தபின் அதன் உள்ளார்ந்த இருள் மையத்தை நோக்கி எங்கள் கவனம் நகரும். ஒளியில் இருந்து இருளும், அதிலிருந்து மீண்டும் ஒளியும் மாறி மாறி வெளிப்பட்டுக்கொண்டே இருப்பதைத் துலக்கிக் காட்டுகிற பெரும் பணி. சொற்கள் மட்டுமே எங்களுடைய ஆயுதங்களாக இருந்தன" என்று கூறும் ஆறு கலைஞர்களைப் போல. அவர்களை உருவாக்கியவரே நீங்கள் தானே. இந்த நாவலின் பெரும்பலமே உங்களின் எழுத்துக்கள் வழியாக பாய்ந்து வரும் அந்தக் கவித்துவம் தான். நாம் நம் வாழ்வில் அனுபவித்துணர்ந்த பல்வேறு கவித்துவங்களை ஒரு புள்ளியில் கோர்ப்பது போல். 'எதிர்பாராத தருணங்களில் ஒரு கவித்துவம் உள்ளது. நான் அதைக் கவனமாக எடுத்து சேமித்து வைப்பேன்'. நீங்கள் சிந்திய முத்துக்களை வைத்தே உங்களுக்கோர் மாலை தொடுக்க முயல்வதுகூட சுவாரசியமாகத்தான் இருக்கிறது. அதேநேரம் இதில் கரும்புள்ளி ஒன்று இல்லாமலும் இல்லை.

ஒரு மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய முதல் பாகத்திலிருந்து வெளிவந்து அதைவிட மிகப்பெரிய ஒன்றை எதிர்பார்த்துச் செல்லும் வாசகனுக்கு ஒரு சின்ன ஏமாற்றம் என்றால் அது இரண்டாம் பாகத்தின் சில தருணங்களை கஷ்டப்பட்டு கடக்கவேண்டி வரும் நிலைதான். அதையும் நீங்கள் மென்பகடி ஆக்காமல் இல்லை. 'பாரா எழுதிய மயில்சாமி கதைகள் அல்லது மலச்சிக்கலில் இருந்து விடுதலை' என்று. மிக மிக அற்புதமான களம் ஒன்றினை அமைத்துவிட்டு அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத அல்லது நேரடித்தொடர்பில்லாத இரண்டாம் பாகத்தினை உள்வாங்கிக் கொள்ள சற்றே கடினமாக இருந்தது.

நீண்ட நாட்களாகவே உங்களுக்குள் நீங்கள் பணிபுரிந்து வரும் இந்த சின்னத்திரைத் தொழிற்சாலையைப் பற்றி ஒரு புனைவு எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்திருக்கும் என நினைக்கிறன். அந்த ஆசைக்குத் தீனி போடும் களம் பூனைக்கதையாக அல்லது பூனைக்கதையின் இரண்டாம் பாகமாக இருந்திருக்கவேண்டும். அங்கும் கலைதான். இங்கும் கலைதான். அங்கு கலை ஜமீனின் மூலம் வளர்க்க நினைக்கபட்டு ஒரு பூனையின் மூலம் திசைமாறிச்செல்கிறது. இங்கு அதே கலை பல கலைஞர்களின் மூலம் வளர்க்க பிரயத்தனப்பட்டு புண்டரீகாட்சன் போன்ற தயாரிப்பாளர்கள் மற்றும் சில நடிகர்களின் மூலமாக சூறையாடப்படுகிறது. இதற்கு பலிகடா, அதே துறையில் இருக்கும் வேறு சில கலைஞர்கள். இரண்டாம் பாகத்தில் எனக்குக் கிடைத்த ஏமாற்றம் மொத்தமும் முதல் சில பக்கங்களுக்குத் தான். அதன் பின் தானாக உள்விழுந்துவிட்டேன். காரணம் உங்களின் எழுத்தில் இருக்கும் வசியம். முதல் பாகத்து பூனை வெங்கியாக இங்கே தலைகாட்டும் போது மீண்டும் சுவாரசியம் ஒட்டிக்கொள்கிறது.

சின்னத்திரையில் ஒரு மெகாசீரியல் எடுப்பதில் இருக்கும் கஷ்டங்களை இதுவரையிலும் வேறு யாரேனும் இத்தனை தீவிரமாக, இத்தனை அழுத்தமாக ஆழமாக பேசியிருக்கிறார்களா என்றால் எனக்குத் தெரிந்து இல்லை என்றே கூறுவேன். அதன்பொருட்டும் இந்நாவல் முக்கியத்துவம் அடைகிறது. மயில் சந்திக்கும் ஒவ்வொரு தடைகளும் உடன் இருந்து அனுபவிப்பதைப் போல் என்னுள் கடத்தப்படுகிறது. மெகா சீரியலினுள் கவனிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதன் பின் மயில்சாமி போன்றோரின் உறக்கம் தொலைத்த இரவுகள் பல இருக்க வேண்டும்.  இதனை எழுதி முடிக்க நீங்கள் மேற்கொண்ட சிரத்தையை எண்ணி வியக்கிறேன். கொஞ்சம் தவறி இருந்தாலும் இது ஓர் ஆவணமாகியிருக்கும். இப்போது இலக்கியமாகிவிட்டது.

மேலும் அந்த சம்காரம், அந்த இறுதி வரியில் நிகழ்ந்த வன்முறையைத் தவிர வேறு எப்படி நிகழ்ந்திருந்தாலும் பூனை தோற்றுப்போயிருக்கும். பூனைக்கதையும் தோற்றுப்போயிருக்கும். நல்லவேளை அப்படியெல்லாம் நடந்துவிடவில்லை.

மனதிற்கு நிறைவளித்த நாவல். என்ன, பாகம் ஒன்றின் தொடர்ச்சி வேறொரு களத்திலும் தொடர வேண்டும் என்ற ஒரு நப்பாசையை மட்டும் அடக்க முடியவில்லை பா.ரா.

நன்றி
நாடோடி சீனு

13 Feb 2018

காடு - ஜெயமோகன்

காடு ஒரு பெருங்கனவின் முடிவில்லாக் கற்பனையின் நீட்சி. 

எழுபத்தியொரு வயது கொண்ட முதியவர், தன்னுடைய பதினெட்டு வயதில் தான் கண்ட மிளா ஒன்றையும், அழியாமல் பதிந்து போன அதன் கால்த்தடம் கொண்டு தன் மனதின் அடியாழத்தில் பெருகிக் கொண்டிருக்கும் இளம்பிராயத்தையும் நினைவுகூறத் தொடங்குகிறார். கிரிதரன் எனும் முதியவரிடம் இருந்து ஆரம்பமாகிறது காடென்னும் பேரனுபவம். தன் வாழ்வின் மிகமுக்கிய தருணங்களைக் கொடுத்த, இளமையின் தேடல் தொடங்கிய பேச்சிமலைப் பகுதிகளுக்கு பயணிப்பதன் மூலம் தன்னுள் எழும் நினைவுகளாக நகர்கிறது கதை. தன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமான மனிதர்களை எதிர்கொள்ள நேரும் ஒருவன், அதன் மூலம் என்ன மாதிரியான மனப்பிறழ்வுகளுக்கு உள்ளாகிறான் அதன்பின்னான தருணங்களை எவ்வாறு எதிர்கொள்கிறான்? என்பதை காடு மற்றும் மனிதர்களின் துணைகொண்டு எவ்வளவு அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் கூற முடியுமோ அத்தனை சுவாரசியமாக எழுதி இருக்கிறார் ஜெயமோகன். காடு எனும் பெரும்களம் நம்முன் விரிய ஆரம்பிப்பதும் இங்கிருந்துதான்.

காடு நாவலில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய ஓர் அம்சம் அதன் வடிவம். பகடையின் உத்தரவிற்கு ஏற்ப முன்னும் பின்னும் நகரும் சோழியைப்போல கதையானது கிரியின் வெவ்வேறு காலகட்டங்களை நோக்கிப் பாய்கிறது. கிரி என்றில்லை கிரியுடன் தொடர்ந்து வரும் பல்வேறு கிளைக் கதாப்பாத்திரங்களும் இதேபோல் தங்கள் பின்புலத்தை ஏதேனும் ஒரு புள்ளியில் தொடங்குகிறார்கள். ஒருபுள்ளியில் தொடங்கி வளரும் கதை ஏதோ ஓரிடத்தில் தன்னிறைவு அடைகிறது. இந்நிகழ்வு ஏதேனும் ஒரு கதாப்பாத்திரத்திற்கு நிகழ்கிறது என்றால் பரவாயில்லை. நாவலில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருபுள்ளியில் தன்னிறைவு அடைகிறார்கள் என்பதுதான் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய அம்சம். அவர்களுக்கான முக்கியத்துவமும் அதன் தேவையும் கதை முழுக்கவே இருக்கிறது. இதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். 

காஞ்சிரம் மரத்தில் அரையப்பட்ட வனநீலியின் பச்சைநிறக் கண்கள் கிரிதரனின் வாழ்க்கை முழுவதும் வருவதைப் போல, தன் நிலத்தை அபகரிக்க நினைத்தவனின் மாட்டிற்கு கந்தகம் வைத்த கிரியின் அம்மாவை 'அவ கந்தகம்லா' எனக் கேலிபேசும் கிசுகிசுக்களைப் போல, ரெசாலத்தின் தேவாங்கைப் போல, தேவாங்கு ஏற்படுத்திய திருப்பத்தைப் போல, எப்போதும் ஒரே பாதையில், எடுத்து வைக்கும் காலடி கூட மாறாமல் நீர் அருந்த வரும் மிளா போல, அய்யரின் சிவஞான சிவபோதம் போல, மேனனின் மனைவியைப் போல நாவல் முழுக்க பல கிளைக்கதைகளின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. இந்த அத்தனைக் கிளைகளும் சேர்ந்து கிரி எனும் ஒரு பெரிய மரத்தை உருவாக்குகின்றன. அந்த மரமே தன்னுள் பல்கிப்பெருகி காடாகி வளர்கிறது. காட்டின் நீலியான மலயனின் மகளை கரம் பிடிக்க ஆவேசம் கொள்கிறது. குட்டப்பனின் ஆறுதல் தேடி நித்தமும் அலைகிறது. ஒரு காட்டாறு போல கிடைத்த வழிகளில் எல்லாம் கிளைபரப்பி மீண்டும் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைந்து மாபெரும் அருவியாக நிலம் நோக்கிப் பாய்வதைப் போல கிரியும் அவனுடைய கதையும் அவனுக்கான கதைகளுமாக நிறைகிறது நாவல்.    



*****

தன் அக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் மருமகனும் தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால், தான் எடுத்தும் நடத்தும் சிவில் காண்ட்ராக்ட் தொழிலை கவனித்துக் கொள்வதற்காக கிரிதரனை தன்னுடன் காட்டிற்குள் அழைத்துவருகிறார் அவன் மாமா சதாசிவம். அம்மாவையும் மாமாவையும் மீறி எதுவும் செய்ய இயலாது என்ற காரணத்தால் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் காட்டிற்குள் நுழைகிறான் கிரி. காடும் காடு சார்ந்த சூழலும் அவனுக்குள் ஒருவித தனிமையை ஏற்படுத்துகிறது. தனிமையில் இருந்து விடுதலை அடைவதற்காகத் தன் தேடலை காடு நோக்கி செலுத்துகிறான் கிரி. காடு அவனுக்குள் நிகழ்த்தும் உணர்வெழுச்சிகள் அவன் எதிர்பார்க்காத விதத்தில் நகர்கின்றன. இருந்தும் காடு குறித்தான அவன் தேடலும் ஆர்வமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கான காரணமும் அவனிடம் இல்லாமல் இல்லை.  

தனக்கு முன் அடர்ந்து பரவி நீளும் காட்டினுள் நுழைந்து வழிதவறி, கிடைத்ததை உண்டு, பாம்பு, காட்டுப்பன்றிகளுக்குப் பயந்து பின் எங்குமே உணவு கிடைக்காமல் பித்துநிலைக்குச் சென்று என காடு கொடுக்கும் அந்த முதல் அனுபவமே கிரிக்கு அத்தனை மிரட்டலாக அமைகிறது. காட்டில் திசை தப்பிப்போனவனின் அந்த ஒருநாள் எப்படி இருக்கும் என்பதற்கான மிகச்சிறந்த காட்சி அது. வழிதவறி தப்பிப்பிழைக்க வழியில்லாமல் அலைபவன், மிளாவின் துணைகொண்டு தன் குடிசையை கண்டடைந்த அந்த தருணத்தில், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் அந்த நேரத்தில்தான் தெரியவருகிறது இத்தனை நேரமும் பசியிலும் பயத்திலும் தலைதெறிக்க ஓடிவந்த காட்டு வழியில், தன் காலுக்குக் கீழ் இருந்தவை மொத்தமும் மரவள்ளிக் கிழங்கு என. கிட்டத்தட்ட கிரியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. தன் அனுமதி இல்லாமலேயே ஏதேனும் ஒன்றில் அகப்பட்டுப் பின் தப்பிக்க வழி தேடி பித்துப்பிடித்து, பித்துநிலையில் இருந்து மீள நினைக்கும் போது தவறு எங்கே என புரியும். இதுதான் கிரி. 

தன் வாழ்க்கை முழுக்க கிரிக்கென இருந்த இரண்டே இரண்டு ஆறுதல்கள் ஒன்று குட்டப்பன் இன்னொன்று தன் மூத்த மகன். அதுவும் தன் மூத்தமகன் தன் மனைவி வேணியைப் போல் இல்லாமல் தன்னைப் போல இருக்கிறான் என்ற மன நிம்மதியாகக் கூட இருக்கலாம். 

ஒருவேளை இந்த நாவலை வடம் பிடித்தாற்போல ஒரே நேர்கோட்டில் எழுதி இருந்தால் நாவல் மொத்தமும் அபத்தமாகி இருக்கக் கூடும். அல்லது கிரியின் கழிவிரக்கம் மொத்தமும் நம்மீது சுமத்தபட்டிருக்கும். நீலியின் அழகையும் வேணியின் அவசியத்தையும் மெருகூட்டிச்சொல்வதே, முன்னும் பின்னும் நகர்ந்தபடி இருக்கும் இந்தக் கதையின் கதைகூறும் முறைதான். நீலி எதனுடனும் ஒப்பிட முடியாத சந்தனக்காட்டு மலைத்தேன் என்றால் வேணி அத்தனை துன்பங்களையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து 'தேவடியாளப் போறதுக்குக் கூட வழியில்லையே' எனப் புலம்பும் ஒரு பாவாத்மா. 

கிரியின் வாழ்க்கையில் நீலிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் ஒரு கதாப்பாத்திரம் என்றால் அது குட்டப்பன். கதை ஒருமாதிரி அழுத்தமாகச் செல்லும்போதெல்லாம் ஆபத்பாந்தனாக வருவது குட்டப்பனே. நமக்கும்கூட சரிந்து விழும்போதெல்லாம் கைகொடுத்து தூக்கிவிடவும், தோளில் தட்டிக்கொடுக்கவும் குட்டப்பன் என்ற ஒருவனின் தேவை இருக்கத்தான் செய்கிறது.

குட்டப்பன் செய்நேர்த்தி மன்னன். அவன் எது செய்தாலும் அது அத்தனை நேர்த்தியாக அமைகிறது. சமையல் செய்தாலும், பீடி பற்ற வைத்தாலும், வெறிகொண்ட மிருகத்தை மனிதர்களை பணிய வைத்தாலும், ஏன் காலில் இருக்கும் நகத்தைச் சுத்தம் செய்தாலும் கூட அதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அதுதான் குட்டப்பன். நீலியைக் காணாது தவிக்கும் போது குட்டப்பன் கூறும் ஆறுதலும், படியளக்கும் முதலாளி என்றபோதிலும் கிரியின் மீது கைவைப்பது பிடிக்காது திருப்பி அடிக்கும் போதிலும் சரி, சினேகம்மையைப் புணரும் நிர்வாணத்திலும் சரி குட்டப்பன் ஒரு தெளிந்த நீரோடையாகவே இருக்கிறான். குட்டபனுக்கும் குரிசுவிற்கும் இடையே வரும் வாய்த்தகறாறுகளை ஜெயமோகன் மிகவும் ரசித்து எழுதியிருப்பார் என நினைக்கிறன். குட்டப்பனே ரசனையின் உச்சம் தான். அதன்பின்தான் நீலியும் மற்றவர்களும்.   

கதையில் சற்றே எரிச்சலூட்டும் கதாப்பாத்திரம் என்றால் அது எஞ்சினியர் அய்யர் ஒருவரே. நீலியைக் கண்டு மயங்கி அவள் மென்னுடல் பற்றி விவரிக்கும் போது 'எய்யா சாமி நீ வாய மூடுறியா இல்ல உன் வாயிலக் குத்தவா' எனக் கேட்கத் தோன்றும் தருணத்தில் ஒன்று நாம் கிரியாக மாறியிருப்போம் இல்லை நமக்கே தெரியாமல் நீலியைக் காதலிக்க ஆரம்பித்திருப்போம்.  

ஆதியில் மனிதன் படைக்கப்படாத காலத்தில் பெருங்காடு ஒன்று இருந்தது. அங்கே மனிதனைத் தவிர சகல ஜீவராசிகளும் ஜீவித்திருக்க யாதொரு தடையும் இல்லாத காலம் அது. இயற்கையே தன்னை அழித்துக்கொள்ள நினைத்தால் மட்டுமே பேரழிவு ஏற்பட்ட காலம். அதுவரையிலும் காடு தன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது. என்றைக்கு மனிதன் தன் எல்லைகளை, தன் தேவைகளைப் பெருக்க ஆரம்பித்தானோ அந்தக் கனத்தில் இருந்து சேர்ந்தே உருவான ஒன்றுதான் காடழிப்பு. இந்த நாவலில் காடழிப்பு பற்றி மிகத்தீவிரமாக பதிவு செய்யப்படவில்லை என்றாலும் தன்னால் இயன்ற இடங்களில் எல்லாம் அதனை பதிவு செய்யவும் தவறவில்லை ஜெயமோகன். 

காடு, உணர்ச்சிக் கொந்தளிப்பில் கிளர்ந்தெழும் தருணம் என்றால் அந்த ஆனி மாசத்து மழையின் போதுதான். கீரக்காதனில் இருந்து ஒட்டுமொத்த மலைவாழ் ஜீவராசிகளும் வஞ்சிக்கப்படும் ஓர் இடம். இயற்கையின் கொந்தளிப்பிற்கு முன் நீ ஒன்றுமே இல்லை என மீண்டும் மீண்டும் கூறும் ஒரு இடம். மழையில் மலையில் படரும் அந்த விஷக்காய்ச்ச்சலும், அதன் மூலம் பாதிக்கப்படும் ஒட்டுமொத்த மலையும் என நாம் அறிந்துகொள்ள ஒரு பேரனுபவமே அதில் இருக்கிறது. குட்டப்பன், ரெசாலம், தேவாங்கு, சினேகம்மை, எடத்துவா மேரி, குரிசு என காட்டிற்குள் கிரி சந்திக்கும் மனிதர்களும் மிக முக்கியமானவர்கள்.

காடு என்றில்லை, நிலத்தின் மீதும் கிரி எதிர்கொள்ளும் மனிதர்கள் மிக முக்கியமானவர்கள். மனிதத்துக்கம் என கம்பராமாயணம் குறித்துக் குறிப்பிடும் ஜெயமோகன் இந்த நாவல் முழுவதும் படம் பிடித்திருப்பது கிரி எனும் மனிதனின் மனிதத்துக்கத்தைத் தான். நாவல் முழுக்க எளிய மனிதர்களும் அவர்தம் செயல்களுமே நிரம்பி இருக்கின்றன. குன்றேறிய பெருமாள் தன் மாமாவிடம் வாங்காமல் போன அந்தப்பணமும், தனக்கு வாழ்க்கை காட்டிய தன் மாமாவின் பாவமும் தான் கிரி.  

ஒருபெரும் படைப்பை விமர்சனம் என்ற கட்டுக்குள் அடைக்கவே முடியாது. ஒரு பேரனுபவத்தை வார்த்தையாக்குதல் என்பது அதைச் சிதைப்பதற்குச் சமானமானது. காடென்பது எப்படி அனுபவித்துத் திளைக்க வேண்டிய ஒரு விஷயமோ அதேபோலத்தான் இந்நாவலும். இங்கே கூறியிருப்பது ஒரு துளி. ஒரு தளிர். தளிரின் ஒரு சிறு பகுதி. காடென்னும் பேரனுபவம் புத்தகத்தில் இருக்கிறது. தவறாமல் வாசிக்க வேண்டிய ஒரு நாவல். 

நன்றி
நாடோடி சீனு

11 Feb 2018

விசா-ஸித்தி ஹனுமான்

விசா-ஸித்தி ஹனுமான்

வீட்டில் இருந்து சரியாக பத்து மைல் தொலைவில் இருக்கிறது காரியஸித்தி ஹனுமான் கோவில். நகர்புறங்களில் கட்டபடும் புதிய கோவில்களைப் போன்ற தோற்றம்கொண்ட கோவில்.

அமெரிக்காவில் கோவில் என்பது தற்சமயத்திற்கு ஆச்சரியமான தகவல் இல்லை என்றாலும் இந்த ஊரில் இவ்வளவு பெரிய கோவில் என்பது ஆச்சரியமே. கோவிலின் முன்புறம் இந்தியக்கலை அம்சத்துடன் கோபுரம் கட்டத்தொடங்கி இருக்கிறார்கள். சனிக்கிழமையானால் அன்னதானம் உண்டு என்பது இங்குவாழும் அத்தனை அகில இந்திய பேச்சிலர் பக்தர்களும் அறிந்த உண்மை. ஆனால் அன்னதானக் கூடத்தை நிறைப்பது என்னவோ குடும்பஸ்தர்கள்தான். சொல்லவந்த காரியம் அன்னதானம் பற்றியது இல்லை. அன்னதானக்கூடம் பற்றியதும் இல்லை. ஹனுமானைப் பற்றியதுதான். நாம் கோவிலுக்குள் போவோம்.

பிளானோ வந்த இரண்டு வருடங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இந்தக் கோவிலுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு நெருக்கமான கோவில் என்றாலும் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் என்னளவில் குறைந்திருக்கிறது. என் நாட்டம் முழுவதும் பழங்காலக் கோவில்களில் மட்டுமே. அதற்கிருக்கும் மணமும் குணமும் தனி.

நேற்றைக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன்பே வர்ஷனாவிடம் இருந்து தகவல் வந்திருந்தது 'நாளை ஹனுமான் கோவிலுக்குப் போகணும்'. உடனே சரி சொல்லிவிட்டேன்.

'புரட்டாசி சனிக்காது கோவிலுக்குப் போயிட்டுவா' என அம்மா கூறியிருந்ததால் நான்காம் சனிக்கு வந்திருந்தோம். அதன் பின் இன்றைக்குத்தான் வருகிறேன்.

கோவிலுக்கு அருகாமை பார்க்கிங் நிரம்பி வழிந்ததால் கோவிலில் இருந்து சற்றுதள்ளி இருக்கும் வெட்டவெளியில் கார்களை நிறுத்திக் கொண்டிருந்தார்கள். நாளுக்குநாள் கோவிலில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒருவேளை டிரம்ப் இந்தக்கோவில் வழியாக நகர்வலம் வருவாரே என்றால் இந்தியர்களின் நிலை கவலைக்கிடம்தான். டிரம்ப் இந்தக் கோவிலுக்கெல்லாம் வரவேண்டாம். ஒரேயொருமுறை பிளானோ வந்தால் கூட போதும். கதை கந்தல். இன்றைக்கு வரைக்கும் எங்களுக்குள் அமெரிக்க மனநிலை வராது இருப்பதற்கான காரணத்தை நீங்கள் பிளானோவிற்கு வந்தால் அறிந்துகொள்வீர்கள். இதைபற்றி பின்னொரு நாள் விலாவரியாகக் கூறுகிறேன்.

இன்றைக்குக் குளிர் கொடூரத்திற்கு இருந்தது. பார்க்கிங்கில் இருந்து கோவிலுக்குள் செல்வதற்குள் உடல் நடுநடுங்கிவிட்டது. நேற்று வரைக்கும் நன்றாக இருந்த வானிலை இன்றைக்கு ஜீரோ டிகிரிக்குக் கீழே போனது கொஞ்சமும் எதிர்பார்க்காதது. காற்று வேறு பலமாக அடித்துக் கொண்டிருந்தது. காற்று இல்லை என்றால் கூட குளிரை சமாளித்துவிடலாம். காற்றுதான் பிரச்சனை. அடித்த குளிரில் கைகால்கள் விரைத்து கண் மற்றும் மூக்கில் இருந்து நீர் வர ஆரம்பித்திருந்தது. கோவிலுக்குள் நுழையும் வரையிலும் ஒட்டுமொத்த கூட்டமும் நடுங்கிக்கொண்டிருந்தது.

எதிர்பார்த்ததை விட மிக அதிகமான கூட்டம். கூட்டத்தில் அந்தப்பெரிய மண்டபமே நிரம்பி வழிந்தது. ஒரு பெருங்கூட்டம் வரிசையில் காத்திருந்தது. அகில இந்திய பக்தர்கள் கூட்டம் என்பதுதான் சரியான சொல். கூட்டத்தினுள் நீந்தி நடு மண்டபத்தை அடைந்தபோது புரிந்துவிட்டது. ஏதோ ஓர் காரணத்திற்காக தரிசன பாதைகளை அடைத்து வைத்திருந்தார்கள். பாதைகள் என்று சொல்வதற்கான காரணத்தை முறையே பொது மற்றும் சிறப்பு தரிசனம் என்று பிரித்துக்கொள்ளுங்கள். கோவில் என்னில் இருந்து விலகிப் போவதற்கான முக்கிய காரணம் இந்த தரிசனமுறைகள். இதை மாற்றவாது அந்தக் கடவுள் கல்லைக் கடந்து வர வேண்டும்.

மண்டபத்தின் நடுவில் எனக்கும் ஹனுமனுக்குமான புரிந்துணர்வு தூரத்தில் நின்றுகொண்டு கோவிலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தேன். சாமி கும்பிடுவதில் ஆரம்பித்தித்து, விழுந்து கும்பிடுவது, கற்பூர ஆரத்தியை வணங்குவது வரைக்கும் கலாச்சாரம் மாநிலத்திற்கு மாநிலம் வேற்படுவதை இங்கேதான் முதன்முறை கண்டேன்.

ஒரே தெய்வத்தை நோக்கிய ஒவ்வொருவரின் வழிபாடும் வெவ்வேறுவிதங்களில் இருப்பதும் அதனைக் அறிவதுமே தனி கலை தான். இந்தியாவில் இருந்து வெளிவந்து இந்தியாவை நோக்கும் போது அது வேறுமாதிரியாக இருக்கிறது. குறிப்பாக கலாச்சார விஷயத்தில். நான் தமிழகத்தைத் தாண்டியிராதவன் என்பதும் முக்கிய காரணம். ஒவ்வொரு விதமான வழிபாடுகளையும் நோக்கிக்கொண்டே ஹனுமனை நோக்கி பார்வையை செலுத்திய போதுதான் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்ததை கவனித்தேன்.

கோவில் குருக்கள் ஒரு பெண்ணிடம் பச்சை நிறத்திலான கயிறு ஒன்றைக்கொடுத்து தூணில் கட்டச்சொன்னார். அந்த தூண் பச்சைநிறக் கயிறுகளால் நிரம்பி வழிந்தது. கூடவே பிராத்தனைகளை நிறைவேற்றும் தூண் என்பது எவ்வித விளக்கமும் இல்லாமல் புரிந்தது. தூணை இன்னும் கூர்ந்து நோக்கினேன், அது தூண் இல்லை. ஹனுமானின் ஆயுதமான கதையை தலைகீழாக நிறுத்தி இருந்தார்கள். என்னவிதமான பிராத்தனையாக இருக்கும் என்று ஆராய்ந்த போது அதன் மேல் விளக்கம் இருந்தது. விளக்கத்திற்கு பின் வருகிறேன். கோவிலை இன்னும் தீவிரமாக ஆராய்ந்தேன்.

வழிபாட்டுப்பாதை இன்னும் திறந்திருக்கவில்லை. கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. வழக்கமான இடங்களில் இருந்து சற்றே தள்ளி நின்று பார்க்கும் போதுதான் நாம் இதுவரைக்கும் கவனிக்காத பல விஷயங்கள் கண்ணில் படுகின்றன என்ற வரியை என்னுள் எழுதிக்கொண்டேன். கோவிலை மொத்தமாக ஆராய்ந்தபோது மொத்தமாக நான்கு கதையை கவிழ்த்து வைத்திருந்தார்கள். நான்கில் ஒன்று மட்டுமே நிறைந்து வழிந்தது. மற்ற மூன்றும் கடனே என நின்று கொண்டிருந்தன. மூன்றின் காரணமும் அந்த ஒன்றில் இருந்து வேறுபட்டதுதான் காரணம்.

நான்கில் இரண்டு கதை நல்ல அறிவைகொடு என்று கேட்கும் வழிபாடு. இரண்டிலும் இருந்த கயிறுகளின் எண்ணிக்கையை பத்து நிமிடத்தில் எண்ணிவிடலாம். இன்னொன்று வெல்த்-தைக் கொடு (வெல்த் என்பதை புரிய வைப்பதில் தமிழ்ச்சிக்கல் எனக்கு). அதில் ஓரளவிற்கு கணிசமான கயிறுகள். மற்றொன்று தான் முக்கியமான கதை. அதுதான் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

நல்ல உடல் ஆரோக்கியம் (வெல்த்), குடும்ப பிரச்சனைகள் தீர என்று எழுதி இருந்தது. அதான பார்த்தேன். ஆனா வெல்த் இருந்தாலே ஹெல்த் தானா வந்தரும் தான அப்புறம் ஏன் மக்கள் நேரா அந்தத்தூணுக்குப் போறாங்க என்ற என் தர்க்கத்தை வர்ஷனாவிடம் கூறினேன். கோவிலுக்கு வந்தா வந்த வேலைய மட்டும் பாருங்க என பதில் வந்தது. சரி பரவாயில்லை. என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.
ஆராய்ச்சி மொத்தமும் அந்தத் தூணை சுற்றியே.

நல்ல உடல் ஆரோக்கியம் (ஹெல்த்), குடும்ப பிரச்சனைகள் என்பதோடு சேர்த்து விசா பிரச்சனைகளுக்கும் சேர்த்து என ஒரு வாசகம் இருந்தது. என்ன ஒரு அற்புதமான பிராத்தனை. அதைப்பார்த்து சிறிதுநேரம் சிரித்துக்கொண்டே இருந்தன். மனம் இன்னமும் அந்த பிராத்தனைக்கான வார்த்தையைச் சுற்றியே வருகிறது. விசாவில் இருக்கும் பிரச்சனைகள் தீர என்ற வார்த்தைகளைப் படிக்கும்போது அனுமான் எப்படி உணர்ந்திருப்பார். ஒருவேளை டிரம்ப் எனும் ஒருவரைப் பற்றி அனுமாருக்கு முன்பே தெரிந்திருக்கக்கூடுமோ என்றெல்லாம் நினைத்துக் கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்து அந்தக் கயிறுகள் மொத்தமும் டிரம்ப் பதவி ஏற்றதற்குப் பின் கட்டபட்டதாகத்தான் இருக்கவேண்டும். பார்க்கலாம். அடுத்தமுறை போகும் போது எனக்கொரு கயிறு வாங்க வேண்டுமாவென யோசிக்க வேண்டும்.

ஜெய் ஹனுமான்.

7 Feb 2018

ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குருஸ்

ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குருஸ்

வாசகமனதைப் பிடிக்க முடிந்தவர்களின் பெரும்பான்மையான எழுத்துக்களில் கருத்தாழமோ இல்லை உருப்படியானோ களமோ இருக்காது. இவ்விரண்டும் இருந்தால் சுவாரசியம் இருக்காது. ஆக களத்திற்கும் மொழிக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் ஆகச்சிறந்த படைப்புக்கள் தோற்றுப்போயிருக்கும் அல்லது போலியாக உருமாறியிருக்கும். முதல்முறையாக நாவல் எழுதும் ஒருவரால் இவ்விரண்டையுமே சாத்தியமாக்க முடியுமா என்றால் எவ்வித மறுப்பும் இல்லாமல் ஆழி சூழ் உலகைக் கைகளில் கொடுக்கிறார் ஜோ.டி.குருஸ். 

எழுத்தாளர் ஜோ.டி க்ரூஸிற்கு இது முதல் நாவலாம். நம்பவே முடியாத அற்புதமான எழுத்தாக்கம். அப்படியொரு மொழிநடை.

ஒருநாவலுக்கான எவ்வித யோசனையும், முன் தயாரிப்பும் இல்லாமல் தமிழினி வசந்தகுமார் கேட்டு கொண்டதன் பேரில் தன் நாவலை எழுத ஆரம்பித்ததாக ஜோ.டி.குருஸ் குறித்து ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆழி சூழ் உலகின் மீதான் ஆகப்பெரிய ஆச்சரியம் இதுவே. ஒருநாவல் எழுதுவதென்பது சாதாரண விஷயமில்லை. அசாதாரணமான காரியம். சொல்வந்த விஷயத்தை செய்நேர்த்தியோடு, சுவாரசியத்தோடு, தொடர்புடைய விஷயங்களை எவ்விதத்திலும் குழப்பாமல், எவ்விதமான உணர்வுச் சிக்கலுக்கும் பிற உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் கதை சொல்வதென்பது மிகப்பெரிய விஷயம். பெரும்பாலான எழுத்தாளர்கள் தோற்றுப்போவது இவ்விஷயங்களில் தான். கூடவே முதல்முறையாக நாவல் எழுதுபவர்களுக்கு 'எண்ணத்த எழுதி எண்ணத்த கிழிச்சு' என்ற மனநிலை வந்துவிட்டால் அவ்வளவுதான் எத்தனை அதிமுக்கியமான படைப்பு என்றாலும் உருவாவதற்கு முன்பே அழிந்து போயிருக்கும். அப்படியில்லையென்றால் கடமைக்கு எழுதிமுடிக்கபட்டு வாசகனை வந்தடையும். பல்வேறு படிநிலைகளைக் கடந்தே ஒரு எழுத்தாளன் படைப்பாளி ஆகின்றான். அந்தக் கணம் மிக முக்கியமானது. அழகானது. கவித்துவமானது.

*****

ஆழி சூழ் உலகு, முழுக்க முழுக்க வட்டார மொழியிலேயே எழுதபட்ட நாவல் என்பதால் முதல் மூன்று பக்கங்களைப் படித்து முன்னேறுவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது அதையும் மீறி முன்னேறிச் செல்வீர்களேயானால் அற்புதமான உலகம் ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது.

வட்டாரச் சொல்லுக்கான அர்த்தங்களை புத்தகத்தின் இறுதிப்பக்கங்களில் கொடுத்திருக்கிறார்கள் - மிகப்பெரிய உபகாரம். அவை புரியவில்லை என்றால் கதையில் பாதி பக்கங்களை வேற்றுமொழியை தமிழில் வாசிப்பது போல் கடந்திருக்க வேண்டிவரும். அதேநேரம், மீனவ மக்களோடு மக்களாக கலந்து போன குறிப்பிட்ட அந்த சொற்கள் மீண்டும் மீண்டும் வருவதால் வட்டார மொழி என்பது பெரும்தடையல்ல.

1930 - களில் ஆரம்பிக்கும் கதை 1985 வரைக்குமாக நிகழ்ந்து நிறைவடைகிறது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களை உள்ளடக்கிய கதை என்பதால் அதிகமான மனிதர்கள் வந்து போகிறார்கள். வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஏதோ ஒருவிதத்தில் முக்கியத்துவம் அடைகிறார்கள் அல்லது கதைக்கான முக்கியத்துவத்தைக் கொடுத்துவிட்டே செல்கிறார்கள். மிக அதிகமான கதாபாத்திரங்களை உலவவிட்ட போதிலும் கதை சொல்லுவதில் எவ்விதமான குழப்பத்தையும் உண்டு பண்ணாமல் தெளிந்த நீரோட்டமாக நகர்கிறது களம். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆமந்துரை மீனவ கிராமம்தான் கதைக்களம். சிராப்பாறு எனப்படும் சுறாமீன் வேட்டையாடலுக்காகச் செல்லும் தொம்மந்திரை எனும் கடலாடியில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. அவரோடு இணைந்து கடலுக்குள் செல்லும், தொம்மந்திரையை தனது குருவாக ஏற்றுக்கொண்ட கோத்ராபிள்ளை கதையின் அடுத்த முக்கிய கதாப்பாத்திரம். ஆரம்பம் முதல் முடிவு வரைக்குமாக நம்மோடு பயணிக்கப் போகிறவர். 

நாவலின் முதல் வார்த்தையில் இருந்தே நம்மோடு பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது கடல். எந்நேரமும் அலையடித்துக் கொண்டிருக்கும், எப்போதும் ஆறுதலாக இருக்கும், சாவகாசமாக காற்றுப் வாங்கப்போகும், நமக்கான மாலை நேரத்துக் கடற்கரைக்கும், எந்நேரமும் சாவை எதிர்கொள்ளலாம் எனும் சவாலோடு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் பரதவ மக்களின் வாழக்கைப் போராட்டத்திற்கும் இடையில் உயிரோட்டமாக பயணிக்கிறது கடல்.

கடற்கரையில் இருந்து கடலைப் பார்த்த நமக்கு, கடலோடிகளின் வழியாக விரியும் கடலாக, அம்மக்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்த குடும்ப உறவாக, இன்பதுன்பங்களில் மடிகொடுக்கும் அன்னையாக கடலைக் காட்ச்சிப்படுத்தி அதனை கற்பனையின் பிரவாகத்தில் வேறோர்தளத்தில் நிகழ வைத்திருப்பதுதான் ஆசிரியரின் சாமர்த்தியம்.



கதை முழுக்கவே பல்வேறு விதமான மனிதர்கள் வந்து செல்கிறார்கள். ஒரு சாதாரண கடற்கரை கிராமத்தில் எவ்வித கல்வியறிவும் கிடைக்காத நிலையில் இருக்கும் தொம்மந்திரையிடம் இருந்து பிறக்கும் தத்துவங்கள் வாழ்க்கையை முழுமையாக உணர்ந்த ஒருவனிடம் இருந்து கிடைக்கும் தரிசனங்கள். அந்தப்பிராந்தியத்திலேயே தொம்மந்திரையை மிஞ்ச ஒரு கடலோடியும் இல்லை, ஓடோவியும் (கட்டுமரம் தயாரிப்பவர்) இல்லை. ஆளுமை என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம்.

கோவில்பட்டியில் இருந்து வாழ்க்கையைத் தேடி கிட்டதட்ட பிச்சைக்காரனாக வரும் ஒருவனை கோடீஸ்வரன் ஆக்கும் திறமையும் அதற்கான பக்குவமும் தொம்மந்திரையிடம் இருக்கிறது.

ரத்னசாமி நாடாருக்கு அன்றைய தினம் எவ்வித யோசனையும் இல்லாமல், சல்லிக்காசு வாங்காமல் காகு சாமியார் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக ரெண்டுபெட்டி கருவாடு கொடுத்தனுப்பும் பக்குவம்தான் தொம்மந்திரை. காகு சாமியார் கூறியிராவிட்டாலும் தொம்மந்திரை, கருவாட்டினை ரத்னசாமிக்குக் கடனாகக் கொடுத்திருப்பார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒருவேளை தொம்மந்திரையை ரத்னசாமி சந்திக்காது போயிருந்தால் அவரால் பென்ஸ் கார் வரை வாங்கும் வாழ்க்கையை நினைத்துப் பார்த்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதேநேரம் தொம்மந்திரையோ கடைசி வரைக்கும் அதே ஓலைக்குடிசையில் வாழ்ந்து பலவித சிந்தனைகளோடு மாண்டு போயிருப்பார். அவரது சிந்தனை முழுக்கவே கடலும் அவரது மகளும் எஸ்கலினும் மட்டுமே. மகள் விருப்பப்பட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக தன் மகள் எஸ்கலினை தனக்கு சற்றும் விருப்பமில்லாத, எவ்விதத்திலும் நல்ல குணங்கள் கொண்டிராத கில்பர்ட்டுக்குக் கட்டிகொடுத்துவிட்டு வாழ்நாள் முழுவதும் அதனை நினைத்து துயரப்பட்டுக்கொண்டிருக்கும், மகளுக்காகவே வாழ்ந்து மறையும் அப்பனாகத்தான் வந்து போகிறார். 

அடுத்ததாக கோத்ராப்பிள்ளை. தொம்மந்திரைக்கு இணையான ஒரு கதாபாத்திரம். தங்கையின் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனக்கொரு பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் வாழ்ந்து முடித்த தம்பதிகள் கோத்ராவும் - தோக்களத்தாவும். அத்தனை விஷயங்களையும் மிகச்சிறப்பாக கையாளும் கோத்ரா தோற்றுப்போவதுகூட பாசத்தின் முன்னிலையில் தான். சிங்களம் கைவிட்ட தன் தம்பி சில்வேராவை லட்சாதிபதி ஆக்குவதும், அதே தம்பி கைகொடுத்த அண்ணனை கைவிடுவதும் நடந்தேறுகிறது. கோத்ரா நினைத்திருந்தால் அன்றைய தினம் கிடைத்திருக்கக்கூடிய றால் வியாபாரத்தைத் தான் எடுத்து நடத்தியிருக்க முடியும். மிகப்பெரும் பணக்காரன் ஆகியிருக்க முடியும். தம்பிக்கு ஒரு வழிபிறக்க வேண்டும் என்று வாழ்க்கையைக் காட்டியவரின் வாழ்க்கை கடலுக்குள் ஆரம்பித்து கடலோடவே முடிகிறது. பாசத்தின் முன்தானே தோற்றுப் போனேன் பரவாயில்லை என்கிறார். காகு சாமியார் கற்றுகொடுத்த தியாகம் பண்பை உயிர்மூச்சை கடைசியாக சுவாசிக்கும் தருணம் வரையிலும் உயிர்நாடியாகக் கொண்டிருக்கிறார்.     

தொம்மந்திரையும் கோத்ராவும் முதல் பாகம் என்றால் அடுத்து வருபவர்கள் சூசையாரும் ஜஸ்டினும். இவ்விருவரும் சீரழிந்து போவது காமத்தால். சூசையின் காமம் இலைமறை காய்மறையாக நிகழ்வது என்றால் ஜஸ்டின் அவனுக்கு நேரெதிர்.

சூசை யாருடனெல்லாம் தொடர்பில் இருக்கிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். சுந்தரி டீச்சருடனான உறவுக்கு மத்தியில் அந்தக்கள்ள உறவை எப்படி கள்ள உறவாகவே நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்று விவரிக்கும் சூசை காமத்தின் முழுமுதல் சாட்சி. அவ்வபோது தன் வீட்டிற்கு வந்துபோகும் செலினையும் விட்டுவைக்கவில்லை சூசை.

தன் காம விளையாட்டுகள் எதுவும், தன் மனைவி மேரிக்குத் தெரிந்திருக்காது என்று நம்பும் சூசைக்கு எப்போதுமே தெரியாது மேரி காதலின் அன்பின் வடிவம் என்று. அன்பு அனைத்தையும் கண்டுபிடித்துவிடும் வல்லமை வாய்ந்தது. அத்தனை இன்னல்களுக்கும், வறுமைக்கும் மத்தியில் சூசையின் காம விளையாட்டுகள் தெரிந்தும் எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்ளும் மேரியின் வடிவம் அன்பின் ஊற்று. ஊமையன் இறந்துபோகும் அன்றே சிலுவையை தன் மகனாகப் பாவிக்கும் வல்லமை அவளிடம் மட்டுமே இருந்தது. தன் பிள்ளையை யாரோ அநாதை எனக்கூறிவிட்டதை ஜீரணிக்க மறுக்கும் மனம் அவளுடையது. சொலுவை குறித்தான மேரியின் மனவோட்டங்கள் நமக்கும் கூட போகிற போக்கில் தெரிந்துவிடுவதில்லை. மிகக்கூர்ந்து கவனித்தால் மட்டுமே அவளுடைய உள்ளுணர்வை அவள் அழுகையின் ரகசியத்தைக் கண்டறிய முடியும். 

ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே அளவிற்குப் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் உயிர்கொடுத்திருக்கிறார் ஜோ.டி.குருஸ். தோக்களத்தா மேரிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் பெண் வசந்தா.

ஜஸ்டினின் மார்பு பிளந்து குடல் வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் போது அதில் கடல் மண்ணை அள்ளிப்போட்டு மார்பில் மிதித்து தன் ஆத்திரம் போக்கிக்கொள்ளும் வசந்தா அதற்குமுன் வேறெங்குமே அப்படியொரு அழுகையை வெளிப்படுத்தி இருக்கமாட்டாள். வாலிபத்தின் மிடுக்கில் சுற்றிக் கொண்டிருந்த ஜஸ்டினையும் காலம் திருத்திய ஜஸ்டினையும் வசந்தா அறிவாள். ஜஸ்டினின்பால் காமத்தில் வீழ்ந்து, ஜஸ்டினால் சீரழிந்து, தகப்பனை இழந்து, இதற்கு இடைப்பட்ட காலத்தில்,  காலத்தால் கைவிடப்பட்டு கோத்ராவினால் தூக்கிவிடப்பட்ட பெண்ணாகத்தான் தன் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறாள் வசந்தா. காமத்தின் பேரன்பையும் பேரழிவையும் ஒருசேர அனுபவித்தவள்.

காமத்தின் உன்மத்தம் தலைக்கேறிய நிலையில் வசந்தாவின் அப்பாவைக் குத்திக் கொன்றுவிட்டு ஜெயில் செல்லும் ஜஸ்டின் திரும்பி வந்ததும் தன் நிலைகுறித்து வருந்தி வசந்தாவின் மனமாற்றத்திற்காகக் காத்திருந்தாலும் என்றைக்குமே அதனைத் தர தயாராயில்லை வசந்தா. வசந்தாவின் கோபம், இழப்பு என்றைக்குமே ஜஸ்டினை மன்னிப்பதில்லை. வசந்தாவின் மன்னிப்பு தன்னை ஒருபோதும் நெருங்காது என்பதை அறிந்திருந்த போதிலும் என்றைக்காவது ஒருநாள் அது கிடைக்காத என ஏங்கித் தவிக்கும் ஜஸ்டின் வெறுப்பின் வடிவாமாகத் தோன்றி ஞானத்தின் வடிவமாக மாறி மறையும் ஓர் உயிர். 

இவர்களுக்கு அடுத்த தலைமுறை சிலுவையும், வருவேலும் சேகரும் லூர்தும். 

மிக்கேல் பர்னாந்து ஆமந்துரையில் இருந்து சிங்களம் சென்று மிகப்பெரும் வணிகராகி நடுத்தெருவில் அடையாளம் தெரியா ஒருவனால் குத்துபட்டுச் சாகும் ஜீவன். தவமிருந்து பெற்ற மகனுக்கு வாய் பேச வராது. ஊமையானாக வரும் செலஸ்டின் செல்வச் சீமானின் மகனாகப் பிறந்திருந்தாலும் வாழ்க்கை முழுவதும் சொல்லமுடியாத அத்தனை துன்பங்களையும் வாழ்ந்து அனுபவித்தவராகத்தான் மறைகிறார். சிங்களத்தில் ஏற்பட்ட ஈழப்பிரச்சனையின் காரணமாக மனைவி மற்றும் குழந்தையோடு ஆமந்துரை கரையொதுங்கும் ஊமையன் கோத்ராவினால் அடையாளங்காணப்பட்டு சூசையாரால் வார்த்தெடுக்கபடுகிறார். சூசையாரைத் துரத்தும் பேய்க்கண்களுக்குப் பின்னால் இருக்கும் ஊமையனின் விதியும் சூசையாரின் காமமும் மோதிப் பார்க்கும் தருணங்கள் விசித்திரமான விநோதக்களம். 

ஆமந்துரை தேவாலயத்தில் கட்டப்பட்டிருக்கும் பேய்பிடித்த பெண் ஒருத்தியின் வார்த்தைகளுக்கு அடுத்தநாள் ஊமையான கடலுக்குள் பலியாகிறான். இக்கதையில் வரும் முக்கியமான கதாபாத்திரங்கள் கடலில் பலியாவது சற்றே வேதனைக்குரிய விஷயம். கடலை வாழ்க்கையாக நம்பியவர்ககளின் அடுத்த கணம் கடலுக்குள் மறைவது வேதனையான உண்மை. ஊமையனின் மறைவுக்குப் பின் சூசையாரால் வளர்க்கப்படுகிறான் சிலுவை. சிலுவையின் வழியாக கடலோர கிராமப்பள்ளியும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் காமப்பார்வையும் பதியப்பட்டிருக்கிறது. நஸ்ருதீன் வாத்தியாரின் காமவிளையாட்டால் சிலுவையின் படிப்பு பறிபோய் அவனுடைய விதியும் கடலுக்காக எழுதப்படுகிறது.

சிலுவையின் நண்பனாக வரும் வருவேலின் வாழ்க்கை வித்தியாசமான கோணத்தில் நிகழ்கிறது. அதுவும் அவனுடைய சித்தி ரோசம்மாவால் நிகழ்த்திப் பார்க்கப்படுகிறது. தோக்களத்தா மேரி போன்ற பெண்களுக்கு மத்தியில் வந்து போகும் ரோசம்மா பிறரின் விதியை சமைப்பதற்காவே அனுப்பபட்ட ஜீவராசிகள். தன் சித்தி ரோசம்மாவின் மூலம் வருவேலுக்கு ஏற்படும் மனப்போராட்டங்களை ஒரேயொரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் சுருக்கி விட முடியாது. வருவேலைப் போல சூழ்நிலைக் கைதிகள் சமுதாயத்தின் அத்தனை புறங்களிலும் இருக்கிறார்கள். 

இவர்கள் அத்தனை பேருக்கும் மத்தியில் முக்கியமான கதாப்பாத்திரமாக வந்து செல்கிறார் காகு சாமியார். தங்கள் பங்குக் கோவிலுக்கு வரும் பிற மோசமான சாமியார்களைக் காணும் போதெல்லாம் மக்கள் ஆமந்துரை மக்கள் காகு சாமியாரையும் தவறாது நினைத்துப் பார்க்கிறார்கள். 

மனிதர்களின் வழியாகப் பல்வேறு பிரச்சனைகள் பேசப்பட்டிருந்தாலும் அவர்கள் வாழ்ந்த காலத்தின் மிகமுக்கியமான வரலாறும் பதிவுசெய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

1. காந்தி நிகழ்த்திய உப்பு சத்தியாகிரகம்
2. கப்பலோட்டிய வ.வு.சி
3. தி.க வின் பெரியார் மாநாடு
4. இந்தி எதிர்ப்புப் போராட்டம்
5. தனுஷ்கோடியில் நிகழ்ந்த பேரழிவு - தத்ருபமான காட்சியமைப்பு
6. கொழுப்பில் நிகழ்ந்த இனப்படுகொலை
7. கிராமங்களுக்கான மின்இணைப்பு
8. அண்ணா மறைவு

மீன்பிடிக்கப் போகும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு மத்தியில் சகமீனவர்களுக்கு இடையே நிகழும் தொழில்ப் பிரச்சனையயும் மிகஆழமாகவே பதிவு செய்யபட்டுள்ளது. 

ஆழி சூழ் உலகைப்பற்றி சற்றே எளிமையாகச் சொல்வதென்றால் மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு கடலை மட்டுமே நம்பி வாழும் பரதவ மக்களின் வாழ்க்கையைப் பற்றிய கதை. இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால் - இது வரைக்கும் நாம் அறிந்திராத கதை அல்லது சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டவர்களின் கதை.

அழுத்தமாகச் சொல்வதென்றால் தமிழ் இலக்கியத்தில் தவறவிடக் கூடாத ஒரு நாவல் ஆழி சூழ் உலகு.

3 Feb 2018

தூத்துக்குடி - ஆழி சூழ் உலகு

தூத்துக்குடி

தூத்துக்குடியைப் பற்றிய ஞாபகங்கள் என்னிடம் வெகு குறைவாகவே இருக்கின்றன. நன்றாக சுத்த வேண்டும் என நினைத்த ஓர் ஊர், ஞாபகத்தின் அடுக்குகளில் கூட தங்காமல் போனதை நினைத்தால் சற்றே வருத்தமாக இருக்கிறது. நினைவு தெரிந்த நாளை ஆதியாகக்கொண்டு யோசித்தால் மங்கா மாமா மறுவீட்டிற்காகச் சென்ற தூத்துக்குடிதான் முதலில் நிற்கிறது. மறுவீடு முடிந்து கண்காட்சி ஒன்றிற்குக் கூட்டிச்சென்றார்கள். அதுவொரு மிகப்பெரிய அறை. அந்த அறையின் மத்தியில் தூத்துக்குடியின் மாதிரியா இல்லை தூத்துக்குடியின் துறைமுக மாதிரியா எனத் தெரியவில்லை. ஒரு மிகப்பெரிய நிலத்தின் மாதிரியை முப்பரிமாணத்தில் வைத்திருந்தார்கள். கண்ணாடிக்குள் இருந்த அந்த கடலுக்குள் ஒரு சிறிய கப்பல் ஓடிக்கொண்டிருந்தது. எனக்குப் பின்னால் வரிசையில் இரண்டு கன்னியாஸ்திரிகள் நின்று கொண்டிருந்தார்கள். 'நடங்கடே நடங்கடே'. எங்கிருந்தோ எழும்பிய குரல் அந்த அறையில் இருந்து எங்களை நகர்த்தியது. அவ்வளவு தான் அதற்கு மேல் ஞாபகம் இல்லை. மறுவீட்டில் ஓடியாடித் திரிந்த கணப்பொழுதுகளை எவ்வளவு யோசித்தும் மீட்டெடுக்க முடியவில்லை. 

அடுத்ததாக நான்காம் வகுப்பு இன்பச்சுற்றுல்லா - தூத்துக்குடி. படித்தது கிறிஸ்தவப் பள்ளி என்பதால் முதல் இடமே ஒரு தேவாலயம் தான். ஆனால் அதன் ஆரம்ப சுவடுகள் எதுவும் மீண்டு வருவதாயில்லை. ஒன்று மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. அது ஒரு நல்ல வெயில் நாள். ஆதவன் வாட்டி வதக்கிக் கொண்டிருந்தான். பேருந்தின் அத்தனை சன்னல்களும் திறந்து விடப்பட்டிருந்த போதிலும் உள்ளே புழுங்கிக் கொண்டிருந்தது. தண்ணீர் ஏகத்திற்கும் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது. வெயிலின் வெம்மை தாங்காமல் பலரும் சுருண்டிருந்தார்கள். எனக்கு அப்படியில்லை. பயணம் வேடிக்கை நிறைந்ததாக இருக்க வேண்டும். அதுவும் சன்னலோர இருக்கையாக வேண்டும். இன்பச் சுற்றுல்லா என்றால் பெரும்பாலும் பிரபாகரன் சன்னலோர இருக்கையை எனக்கு தந்துவிடுவான். இல்லை கேட்டு வாங்கிவிடுவேன். இல்லை எவ்வித மறுப்பு கூறமாட்டான் என்பதால் என்னுடனேயே வைத்துக்கொள்வேன். 'மக்கா எனக்கு வாந்தி வந்தா மட்டும் ஜன்னல் சீட் கொடுடே' என்பான். 'உனக்கு வாந்தியே வராது. வாரமாறி இருந்தா சொல்லு எழுமிச்ச இருக்கு. மூக்குலவக்கேன்'. 

என்னதான் சன்னலோர சீட் என்றாலும் பெரும்பாலான பொழுதுகளில் பேருந்து முழுவதையும் அளந்துகொண்டே தான் இருப்பேன். 'ஏல சீனு வால பாட்டு பாடுவோம் என்று முன்னால் இருந்து குரல் வரும்'. 'டானஸ் ஆடுவோம் வாடே' பின்னால் இருந்து குரல் வரும். ;இந்த பாட்டுக்கு இன்னும் சவுண்ட் வச்சா இன்னும் நல்லா இருக்கும்லாடே' என்று எவனாது கூறினால். 'நம்ம டிரைவர்தான். இப்போ பாரு எவ்ளோ சவுண்டு வரும்ன்னு' என்று கூறிவிட்டு டிரைவரின் அருகில் நிற்பேன். 

'மக்கா சவுண்ட் போதுமா கேளு' டிரைவர் என்னிடம் கேட்க நான் உள்ளே பார்ப்பேன். 'சூப்பர்ல' என்று பின்புறம் இருந்து சவுண்ட் வரும். இப்படியொரு வாய்ப்பு கிடைத்து டிரைவர் சீட் பக்கம் வந்துவிட்டேன் என்றால் மீண்டும் உள்ளே போக மனமிருக்காது. கண்முன்னே பரந்து விரியும் ஒரு பெரும்சாலை. அதன் ரம்மியத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சன்னலோரமாகத் தெரியும் காட்சிக்கும், டிரைவருக்கு அருகே விரியும் காட்சிக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள். டிரைவர் அண்ணாச்சி சக்கரத்தை வளைத்து ஒடித்து ஓட்டுவதும் லாரிகளையும் கார்களையும் முந்துவதையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். வியர்க்கும் போதெல்லாம் கழுத்தில் கிடக்கும் துண்டை எடுத்து அவர் துடைக்கும் அழகை ஒரு கதாநாயகத் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன். 'எம்மா எனக்கு டிரைவர் ஆகணும்' என்று சொல்லியதற்கு பரிகாரமாக அம்மா அடித்த அடி இப்போதும் ஞாபகம் இருக்கிறது. 

'ஏலே மக்கா பின்னால வாடே. எம்புட்டு நேரம்தான் அங்கேயே நிப்ப' பேருந்தின் பின்னாலிருந்து குரல் வரும். 'நான் இங்க வந்தம்ன்னா டிரைவர் சத்தத்த கொறைச்சிருவாறு. அதாம்டே அங்கனயே நிக்கேன்' என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் முன்னோக்கி நகருவேன். உறங்கிக் கொண்டிருக்கும் வாத்தி யாராவது கெட்ட சொப்பனத்தில் திடுக்கிட்டு எழுந்து, டிரைவர் அருகில் வந்தால் தோளில்தட்டி உள்ளே போகச்சொல்லுவார். ஆரோக்கிய சார் என்றால் எதுவும் சொல்லமாட்டார். அதற்காக எல்லா பயணங்களிலும் ஆரோக்கிய சாரே வரமுடியுமா என்ன?

தூத்துக்குடி தேவாலயத்தில் இருந்து பேருந்து ஹார்பரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது பேருந்து. பேருந்தே மயான அமைதி. அடித்த வெயிலில் எல்லாவனும் சரக்கடித்ததைப் போல உறங்கிக் கொண்டிருந்தான். ஹார்பர் எப்படி இருக்கும். கப்பல் எப்படி இருக்கும். அம்பிகாக்கா சொன்ன கப்பல் போல் இருக்குமா இல்லை கன்னியாகுமரி பாறைக்குப் போகும் படகைப்போல் ஒன்றைக்காட்டி ஏமாற்றிவிடுவார்களா? கப்பலினுள் போகமுடியுமா. போனால் தொலைந்து போகாமல் இதே பேருந்தினுள் ஏற முடியுமா என்ற எண்ணங்களும் வெளியே தூத்துக்குடியும் நகர்ந்து கொண்டிருந்தன. 

'ஏல ஹார்பரு வரப்போவுது ஹார்பரு வரப்போவுது எந்திரிங்கல' டீச்சர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். 

'ஏல சீனிவாசன் எல்லாரையும் எழுப்புல'. முழித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்தார். பக்கத்தில் பிரபாகரனும் அவனுக்கு அருகில் முத்துச்சண்முகமும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். 

'ஏல அந்தா வாயப்பொழந்து இருக்காம் பாரு அவன் வாயில தண்ணிய ஊத்துல. கூவ எந்திக்கானா பாப்போம்' 

தண்ணிரை ஊற்றினேன் எவனும் எழுந்திருக்கும் அறிகுறியே இல்லை. இந்நேரம் பேருந்து ஹார்பரினுள் நுழைய ஆரம்பித்திருந்தது. இவனுகள எழுப்புறத விட ஹார்பர் முக்கியம். சன்னலினுள் முகத்தைப் புதைத்தேன். பெரிய பேருந்து நிலையம் ஒன்றினுள் நுழைந்ததைப் போல் இருந்தது. கழுத்தை எப்படியெல்லாமோ திருப்பிப் பார்த்தேன். கப்பல் தெரியவில்லை. சிமின்ட் மட்டும் பூசி வெள்ளை அடிக்காமல்விட்ட கட்டிடங்கள் கப்பலை மறைத்துக்கொண்டிருக்க வேண்டும். இரண்டு மூன்று தலை என் சன்னலுக்கு சண்டை போட்டன. 

'இன்னும் கப்ப வரலடே. வந்தா காமிக்கன்'. ஒரு கப்பலின் உரிமையாளனைப் போல் கூறினேன். பேருந்து ஓரிடத்தில் போய் நின்றது'

'எறங்கு எறங்கு எறங்கு ஹார்பர் வந்தாச்சு' வாத்தி சத்தம் கொடுக்கும் முன் எலியை போல கிடைத்த இடைவெளிகளில் நுழைந்து முதல் ஆளாக கீழே இறங்கி இருந்தேன். இந்த இடத்தில் என் அம்மை இருந்திருந்தால் 'பறக்காதல நில்லுல' என முதுகில் ஒன்று விழுந்திருக்கும். 

ஒருத்தன் சீனிவாசன் பின்னாடி நில்லு. இன்னொருத்தன் இங்க வா'. ரெண்டு வரிசையா நில்லு. 

கப்பல் இன்னும் கண்ணுக்குத் தெரியவில்லை. தூரத்தில் ஒரு இரும்பு கேட் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. வாத்தியார் தன்னிடம் இருந்த தாள்களை எடுத்துக்கொண்டு கேட்டை நோக்கி நடந்தார். வாத்தியாருக்கு பதில் கூறுவதற்கேன்றே கேட்டின் அருகில் நின்றவரிடம் சென்று என்னவோ பேசிக்கொண்டிருந்தார். பொறுமையிழந்த இன்னொரு வாத்தியார் அவரை நோக்கி நடந்தார். ரெண்டு பேரும் அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வெயில் தன் வேலையை இன்னும் மும்மரப்படுத்தி இருந்தது. 'ஹார்பர்ல ஏதோ யூனியன் பிரச்சனையாம்' என்பது மட்டும் அப்போதைய அறிவுக்கு எட்டியிருந்தது. 

இரும்புக்கதவில் இருந்து தூரத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 'என்ன பண்ணுவோம் சார். உள்ள போவ முடியாதாம். சும்மா இங்கன ஒரு நட போவோமா. பயலுவள வர சொல்லட்டுமா' என்று கேட்டுக் கொண்டிருந்தார். 'சேரி சார் அப்டியே செய்வோம்'. என்று வாத்தியார் பேசிகொண்டிருக்கும் போது நான் வாத்தியாருக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். இரும்புக் கதவில் இருந்து தூரத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 

கதவின் இடுக்கு வழியாக கப்பல் தெரிகிறதாவென எட்டிப்பார்த்தேன். ஒரு பெரிய கட்டிடத்தின் உச்சி தெரிந்தது. கதவு திறந்து உள்ளே நுழைந்த சிறிது நேரத்திலெல்லாம் பெரிய பெரிய கருப்பு யானைகளைப் போல் வரிசையாக நின்று கொண்டிருந்த கப்பல்கள் கண்ணில்பட்டன. கப்பலின் பிரம்மாண்டம் அதைத் தாங்கி நிற்கும் கடலின் பிரம்மாண்டம் என தூத்துக்குடி ஒரு மிகப்பெரிய நங்கூரத்தை என்னுள் பாய்ச்சியது அன்றைக்குத்தான். 

'ஏல எவனும் கடல்ல சாடிறாதையள. இவனுவள மேய்க்கிறது பெரும்பாடு சார்' கர்சீப்பில் தன் தலையைத் துடைத்துக் கொண்டே எங்களைப் பார்த்தார் வாத்தி. துடைக்க துடைக்க வியர்வை அவர் முகத்தில் தோன்றிக்கொண்டே இருந்தது.  

அங்கிருந்து அடுத்ததாகப் புறப்பட்ட இடம் முயல் தீவு. 'நா இன்னிக்கு தான் மொதவாட்டி முயல் பாக்க போறேன்', பிரபாகரனிடம் சொன்னேன். தலையாட்டிக் கொண்டான். ரோஜாக்கூட்டம் போல அங்கே துள்ளி விளையாடும் முயல்களைப் பார்க்கப்போவதில் அப்படியொரு அலாதி. ஹார்பரில் இருந்து கிளம்பி வெகுநேரம் ஆகியும் முயல்தீவு வந்தபாடில்லை. பேருந்து ஒரு முள்ளுக்காடு வழியாக இறங்கி பீக்காட்டின் வழியாகச் சென்று ஒத்தயடிப்பாதை ஒன்றில் நின்றது. 

'அண்ணாச்சி இது முயல் தீவு போற பாத இல்லியே. அது தெக்கால போவனும்' என்று டிரைவரிடம் யாரோ கூறியதை வாத்தியாரும் கேட்டுக்கொண்டிருந்தார்.

'ஏல முயல் தீவு போவ முடியாது போல. டைம் ஆயிருச்சு. அடுத்து கப்ப கோயிலுக்கு போவோம்டே. வந்ததும் எழுப்பிவிடுறேன்' என்று கூறிவிட்டு வாத்தி தலைசாய்த்துவிட்டார். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் மயான அமைதி. கூட்டம் கூட்டமாக நகரும் மரங்களை தனியொருவனாக வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தேன். 

சென்றுசேர்ந்த இடத்தின் பெயர் உவரி. தரைதட்டி நின்ற ஒரு கப்பல் ஒன்றை நடுத்தெருவில் விட்டதைப் போல் இருந்தது அந்த இடம். பின்பு தான் தெரிந்தது நாங்கள் வந்து சேர்ந்த இடம் ஒரு தேவாலயம் என்று. அந்தக் கப்பலைச் சுற்றி பல சிறுவர்கள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். கப்பலின் மேல் தளத்தில் இருந்து தரைக்குக் குதித்தால் அடிபடவில்லை. சுற்றிலும் கடல் மணல். தூரத்தில் கடல் தெரிந்தது. நேரமாகிவிட்டதால் கடற்கரைக்குக் கூட்டிச்செல்லவில்லை. 

அதன்பின் எப்போதுமே தூத்துக்குடி சென்றதில்லை. பலமுறை திருச்செந்தூர் சென்றிருந்தாலும், திருச்செந்தூர் ஏதோ திருநெல்வேலிக்கும் பாளயங்கோட்டைக்கும் இடையில் இருப்பதைப் போன்ற நினைப்பு. மரமெடுப்பதற்காக தூத்துக்குடி செல்லும்போதெல்லாம் மாமா உடன்போக வேண்டுமென்று தோன்றும். ஆனால் போனதில்லை.. அம்பிகாக்கா ஊருக்கு வரும்போதெல்லாம் சாக்கடையை 'டிச்' என்று தான் சொல்வாள். தூத்துக்குடியில் சாக்கடைக்கு டிச்சாம். அவளிடமும் தூத்துக்குடி கதைகள் நிறைய இருந்தன. சத்யாவுக்குக் கூட தூத்துக்குடிதான். கல்லூரிக்காக தூத்துக்குடியில் சேர்ந்த குமார் கடலோரக் கதைகள் கூறுவான். 'கூட்டுப்போல' என்பேன். 'நீ வாடே, நீ தான் வர மாட்டக்க' என்பான். அதுவும் உண்மைதான். தூத்துக்குடி இன்னமும் எட்டாத தூரத்திலேயே இருக்கிறது.     

*****

ஆழி சூழ் உலகு வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆமந்துறையில் ஆரம்பிக்கும் கதை தூத்துக்குடி கடலோரக் கிராமங்களின் வழியாக வேறோர் உலகிற்கு என்னை அழைத்துச் செல்கிறது. மீண்டும் தூத்துக்குடி செல்ல வேண்டும். ஆமந்துறைக்கு செல்ல வேண்டும். ஆமந்துறை என்று புனையப்பட்ட உவரியில் இருந்து என் தூத்துக்குடிப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற தவிப்பு, ஆர்வம் உள்ளுக்குள் ஒரு காட்டுதீயாய்ப் பரவுகிறது. வாசிப்பு என்ன செய்துவிடக்கூடும் என்று கேட்பவர்களுக்கு அந்தப்பயணத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

நன்றி
நாடோடி சீனு