16 Jan 2016

போலி புத்தகக் கண்காட்சி - 2016

புத்தகக் கண்காட்சியை போலி என்று கூற ஏழு காரணங்கள்

1. இடப்பற்றாக்குறை. காற்று புகக்கூட வசதியில்லாத ஒரு மைதானத்தில் மந்தையில் அடைத்தது போல் கடைகளை அமைத்து மக்களையும் மந்தையாக்கி சிரமித்திற்குள்ளாக்கி இருப்பது முதல் குறை. பெருங்குறை. அந்தப் பக்கம் நகர்ந்தால் ஒரு பெரியவர் முறைக்கிறார், இந்தபக்கம் நகர்ந்தால் ஒரு பெரியம்மா முறைக்கிறார். எந்தப்பக்கம் திரும்பினாலும் யாராவது ஒருத்தர் இடிக்கிறார்கள். இல்லை முறைக்கிறார்கள். முறைப்புக்கு மத்தியில் புத்தகங்களை தேடவேண்டி இருக்கிறது. 

2. இடப்பற்றாக்குறையின் காரணமாக ஸ்டால்களையும் சின்னதாகவே அமைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்தால் வெளியே வர முடியவில்லை. வெளியே நின்றால் அடுத்த ஸ்டாலின் உள்ளே நுழைய முடியவில்லை. இதன் காரணமாகவே பல ஸ்டால்களின் உள்ளே நுழைவதை தவிர்த்துவிட்டேன். மீறி நுழைந்தாலும் ஒவ்வொரு அலமாரியின் முன்னும் யாராவது ஒருவர் நின்றுகொண்டு அங்கே இங்கே நகர மறுக்கிறார்கள். நகர இடமும் இல்லை என்பது வேறுவிஷயம். 

3. ஸ்டாலின் அளவு மிகவும் சிறியது என்பதால் ஒப்புக்கு நான்கு புத்தகங்களை அடுக்கி இருக்கிறார்கள். மேடவாக்கத்தில் இருந்து ராயப்பேட்டை வரை 20+20 கிமீ பயணித்து சென்றவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். பெரும்பாலான கடைகளில் ஒரே ஆசரியர் எழுதிய அதே புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். கணையாழி, உயிர்மை, விகடன், கிழக்கு எல்லாம் வெறும் பெயர்ப்பலகையை மட்டும் தொங்கவிட்டு விட்டு சிவனே என உட்கார்ந்து இருக்கிறார்கள். 

4. ஸ்டால் சிறியது, அடுக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் ஒரு கடையிலும் Card Payment வசதி இல்லை. கணையாழியில் மட்டும் புண்ணியத்திற்கு Card Payment வசதி செய்து கொடுத்துள்ளார்கள். இதனாலேயே பெரும்பாலான ஸ்டால்களில் எடுத்த புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். வாழ்க வளமுடன். அன்பர் ஒருவர் மூவாயிரம் ரூபாய்க்கு புத்தகத்தை எடுத்துவிட்டு என்ன செய்வதன தெரியாமல் பேந்தபேந்த விழித்துக் கொண்டிருந்தார்,  கூடவே அவர் கையில் இருந்த ஜெமோவும், சாருவும், யுவன் சந்திரசேகரும்.     

5. வெறும் ஸ்டால்கள் என்பதால் எந்த கடைகள் எந்த வரிசையில் இருக்கிறது என்ற வழக்கமான கையேடை அச்சடிக்காமல் விட்டிருக்கிரார்கள். பெரும்பாலான நபர்கள் எந்த கடை எங்கிருக்கிறது என செக்யுரிடியை கேட்டு டார்ச்சர் செய்ய 'தோ அந்த பக்கம் போனா, எழுதி ஒட்டி இருக்காங்க. போய் பாரு' என்று கூறிவிட்டு அருகில் நின்ற என்னை நோக்கியவர், 'ஜனம் மொத்தமும் எங்கிட்டயே வந்து கேட்டா இன்னா சார் செய்வேன்' என்றார். முறையான வழிகாட்டுதல் இல்லை என்பது ஒரு மாபெரும் குறை. 

6. இடப்பற்றாக்குறை காரணமாக முறையான பார்க்கிங் வசதி இல்லை. சகட்டுமேனிக்கு வாகனங்கள் வந்து செல்வதால் அரங்கம் மொத்தமும் தூசி/புழுதி. அரங்கை விட்டு வெளியில் வந்தால் தூசி அபிஷேகம் நிச்சயம். 

7. முறையான பார்க்கிங் வசதி இல்லை என்பதை விட, பார்க்கிங் வசதியே இல்லை என்று கூறலாம். அனைவரும் சகட்டுமேனிக்கு வண்டியை நிறுத்தி, அருகில் நிறுத்தப்பட்ட வண்டிகளை காயப்படுத்தி ரணகளப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஏண்டா வண்டியில் வந்தோம் என்று ஆகும் அளவுக்கு இருக்கிறது வாகன நெரிசல்.

சென்னையில் வசிப்பதால் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியமே புத்தகக் கண்காட்சி தான். அதை எதோ ஒரு அமைப்பு ஏனாதானோவென நடத்துவது என்போன்ற/ நம்போன்ற வாசகர்களை ஏமாற்றுவது போல் தான் இருக்கிறது. இதில் விடுமுறை தினத்தன்று அவ்வளவு தூரம் பயணித்து ஏமாந்தது இன்னும் கடுப்பாய் இருக்கிறது. ஒரே நல்ல காரியம் சென்னையில் இன்றைக்கு வாகன நெரிசல் இல்லை என்பதுதான். 


மேலும் பபாசியை விட வேறு யாராலும் புத்தகக் கண்காட்சியை சிறப்பாக நடத்த முடியாது என்று சத்தியம் செய்து கூறுகிறார்கள் இப்போது புத்தகக் கண்காட்சி நடத்தும் இந்த அமைப்பினர். எல்லாம் சரி சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக, புத்தக உலகின் தொய்வை சரிசெய்வதற்காக என்றெல்லாம் கூறும் சால்ஜாப்புகள் தான் மேலும் கடுப்பைக் கிளப்புகின்றன. ஓய்வான ஒரு மாலை வேளையில் டிஸ்கவரிக்கோ, அகநாழிகைக்கோ, பனுவலோக்கோ சென்றால் இதைவிட அதிக கலெக்சன் கிடைக்கும், இதைவிட நிம்மதியான புத்தகத் தேடல் கிடைக்கும் என்பதே இன்றைக்கு யாம் பெற்ற இன்பம். 

அது என்ன ஏழு காரணம் என்று கேட்கிறீர்களா? புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை எழு. 

புதுமைப்பித்தன் கதைகள் - முழு தொகுதி - கணையாழி
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை
ஒற்றன் - அசோகமித்திரன்
சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான்
கன்னி நிலம் - ஜெமோ
தேகம் - சாரு
பறவை உலகம் - சலீம் அலி

இந்திய அரசாங்கத்தின் நேஷனல் புக் டிரெஸ்ட் பதிப்பகத்தை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன். குறைவான விலையில் புத்தகம் விற்கிறார்கள். பெரும்பாலும் மொழிபெயர்ப்புக் கதைகளாகவும், தெரியாத ஆசிரியர்களாகவும் இருந்ததால் பறவை உலகம் தவிர்த்து வேறு எந்த புத்தகமும் வாங்கவில்லை. நாளைக்கும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றே நினைகிறேன். திங்கட்கிழமை ஓய்வாக இருந்தால் ஒரு எட்டு சென்று வாருங்கள். யார் புத்தகக் கண்காட்சி நடத்தினால் என்ன இந்தப் புத்தகக் கண்காட்சியிலும் ஹீரோ வாத்தியார் சுஜாதா தான். 

15 Jan 2016

பொங்கல்

சபரிமலைக்கு வந்து சேர்ந்திருந்த போது மணி அதிகாலை ஐந்து. வருடம் 2007. நல்ல குளிர். சுற்றிலும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்த மஞ்சள் நிற விளக்குகள், கேரள தேசத்தின் குளிரை படம்பிடித்துக் கொண்டிருக்க, தூக்கம் அகலாத கண்களின் வழியாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தது குளிர். தேக பலம் தா, பாத பலம் தா என ஒரு பக்கத்தில் இருந்து வீரமணி பாட, இருமுடி தாங்கி ஒரு மனதோடு குருவெனவே வந்தோம் என்று வேறொரு வரியில் வேறொரு இடத்தில் இருந்து பாடத்தொடங்கி இருந்தார் அதே வீரமணி

தென்காசியில் இருந்து சபரிமலை பக்கம் என்பதால் நள்ளிரவு ஒரு மணிக்குத் தான் ஊரிலிருந்தே கிளம்பினோம். இரண்டு வேன் நிறைய முப்பது பேர் கொண்ட பக்தர்கள் குழு. இதுதான் என்னுடைய முதல் சபரிமலைப் பயணம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் கிளம்பினேன். எங்கள் குழுவில் யாரும் மாலை போட்டிருக்கவில்லை என்பதால், பெரிதாக திட்டமிடாத பயணம். அய்யப்பனைப் பார்த்துவிட்டு அங்கிருக்கும் சாமிகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று மட்டும் முடிவாகியிருந்தது. அதனால் கூடவே ஒரு தவசுப்பிள்ளையையும் அழைத்துச் சென்றிருந்தோம். 

வேனில் இருந்து இறங்கியதும் மாமா அருகில் வந்தார். 'ஏல சும்மா நிக்காத, நிறைய வேல இருக்கு. ஜாமா எல்லாம் எடுத்துவை. சமையல் செய்ய இடம் பார்க்கணும்' என ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் விரட்டிக் கொண்டிருந்தார்கள். அன்னதான பொருட்களை வேனில் இருந்து இறக்கி, அருகில் இருந்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வதற்குள் உடம்பு சிலிர்த்து பயங்கரமாக நடுங்கத் தொடங்கிவிட்டது. 'மாமா காபி' என்றேன். 'அதுக்கு தானல தவுசுப்பிள்ளைய கூப்டு வந்திருக்கோம். பொறு போட்டு தருவாரு' என்றபடி அடுத்த வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார். குளிர் அடங்குவதாய்த் தெரியவில்லை. கொஞ்சநேரத்தில் அருகில் வந்தவர். கையில் ஒரு பாக்கெட் சங்குமார்க் பல்பொடியையும் துண்டையும் கொடுத்து 'பம்பையில போய் குளிச்சிட்டு வா' என்றார். 

'மாமா' என்றேன்

'என்னடே' 

'குளிருது' 

'நா வேணா வெண்ணி போட்டு தரவா' என்றார்

'ஊம்' என்றேன். 'ஊமா, போல போய் ஆத்துல குளி' என்று அவர் திட்டிக் கொண்டிருக்கும் போதே, நான்கு வயது சிறுவன் ஒருவன் பம்பையில் குளித்துவிட்டு நடுநடுங்க 'ஐயப்பா, ஐயப்பா' என்று கூறியபடி வந்து கொண்டிருந்தான். மாலை வேறு அணிந்திருந்தான். மாமா பார்த்துவிட்டார். அடுத்து என்ன கூறுவார் என்று தெரியும் என்பதால் துண்டை வாங்கிக்கொண்டு பம்பையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கூடவே கௌதமும் இன்னொரு நண்பனும். 

மார்கழி மாதம் என்பதால் பம்பையில் அவ்வளவாக தண்ணி இல்லை. இரண்டடிக்கு தான் நீர் ஓடிக்கொண்டிருந்தது. பம்பையை நெருங்க நெருங்க உள்ளுக்குள் ஒரு உதறல். பனிப்படலமாக, வெண்புகையாக காற்று நடமாடிக் கொண்டிருந்தது. ஆற்றினுள் இருந்தவர்கள் 'ஐயப்பா, ஐயப்பா' என்றபடி முங்கி முங்கி எழுந்து கொண்டிருக்க. மெல்ல பசிக்க ஆரம்பித்தது. தண்ணீரையே வெகுநேரம் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். எப்படியாவது இறங்கித்தான் ஆக வேண்டும். முதல் துளி நீர் உடலெங்கும் பரவும் வரைக்கும் தான் குளிர் எல்லாம். அதன்பின் குளிப்பதில் சிரமம் இருக்கப் போவதில்லை. அனால் அந்த முதல்துளி நீர் தான் பிரச்சனையே. கண்களை மூடிக்கொண்டு பம்பையில் இறங்கினேன். குளிரும் பசியும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி, குளிர் அணைந்து பசி பரவத்தொடங்கியது. குளித்து முடித்து வெளியில் வரும்போது பயங்கர பசி. 

வீரமணி பாடிகொண்டிருந்த டீக்கடையில் இருந்து உன்னிமேனனும் கூடவே பஜ்ஜிவாசமும் வரத் தொடங்கி இருந்தது. நல்ல மொறுகளான பஜ்ஜி என்பதைப் பார்த்தாலே தெரிந்தது. அருகில் இருந்த பாய்லரில் ஆவி வேறு பறந்து பசியைக் கிளறிக் கொண்டிருந்தது. நேரே மாவிடம் சென்று 'காபி' என்றேன். 'கொஞ்சம் பொறு சாப்பாடே தயாராகிரும். அங்க இருக்க பிள்ளையார் கோவிலுக்குப் போய்ட்டு வா' என்றார். வேறவழி. விநாயகனை தேடி தரிசித்து முடிப்பதற்குள் மேலும் ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. நல்ல விடிந்து பனி கொஞ்சம் குறைந்திருந்தது. மணியைப் பார்த்தேன். ஏழைக் கடந்திருந்தது. சமையல் நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றால் 'கொஞ்சம் மலைய சுத்தி பாருங்க, அதுக்குள்ள தயாராகிரும்' என்றபடி விரட்டினார்கள். கொஞ்சநேரம் மலையை சுற்றிவிட்டு மீண்டும் அதே இடத்தை நெருங்கும் போது மணி எட்டு. 


'சரி வாங்க வாங்க எல்லாரும் வாங்க சாப்பாடு ரெடி' என்ற அழைப்பு கேட்டபோதுதான் ஐயப்பன் தெரிந்தான். அழைப்பு கேட்ட அடுத்தநொடி வரிசையில் இடம்பிடித்து சுடச்சுட பரிமாறப்பட்ட பொங்கலையும் சாம்பாரையும் கலந்து வாயில் வைத்தபோது ஐயப்பன் இன்னும் தெளிவாகத் தெரிந்தான்.  தேவாமிர்தம் என்பார்களே அப்படியொரு சுவை. தேவாமிர்தத்தின் சுவை இப்படித்தான் இருக்கும் என்று நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களின் தலையில் சூடமடித்துச் சத்தியம் செய்யலாம் அப்படியொரு சுவை. அந்த குளிரில் அந்தப் பசியில் அந்த சூட்டில் பரிமாறப்பட்ட பொங்கலின் சுவையை இதற்கு முன்னும் ருசித்தது இல்லை. அதன் பின்னும் உண்டது இல்லை. பொங்கல் என்றால் அதுதான் பொங்கல் என்று கூறிக்கொண்டு உங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன். வாய்ப்புக்கு நன்றி. வணக்கம். 

6 Jan 2016

இன்லேண்ட் லெட்டர் - மீட்டெடுத்தலின் சுவாரசியங்கள்

அன்புள்ள வெற்றி வணக்கம்,

நலமா என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின் பொதிந்து கிடக்கும் அர்த்தம் எவ்வளவு ஆழமானது என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? சோர்ந்து போய் இனி ஆவதற்கு ஒன்றுமே இல்லை என தளர்வாகக் விழுந்து கிடக்கும் போது யாரோ ஒருவரிடம் இருந்து வரக்கூடிய அந்த நலமா என்ற ஒற்றை வார்த்தை தரக்கூடிய பலம் அதிகம். அதை உணர்ந்து பார்ப்பதற்கு ஒரேயொரு தோல்வியேனும் அவசியம் வெற்றி. இப்போ ஏன் இதை எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? சும்மா வெறுமனே நலமா என்று எழுதினால் அதில் ஏதேனும் கிக் இருக்கிறதா கூறுங்கள். இப்படியெல்லாம் ஜல்லியடித்துவிட்டு நிதானமாக மேட்டருக்கு வந்தால் 'எதோ சொல்ல வராருப்பா' என்று கொஞ்சமேனும் நிமிர்ந்து உட்காருவீர்கள். எல்லாமே ஒரு அரசியல் தானே! சரி விசயத்திற்கு வருகிறேன்.   

பொழுதுபோகாமல் மாய்ந்து மாய்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்த என்னையும் மதித்து எனக்கும் கடிதம் எழுத ஒரு ஆள் இருக்கிறார் என்று முன்னால் வந்து நின்றீர்கள் பாருங்கள். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. நீங்கள் எழுதிய இரண்டு கடிதங்களையும் படித்தேன். உடனே பதில் எழுத முடியாமைக்கு மன்னிப்பு கேட்டால் உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும். அதனால் என்னிடம் இருக்கும் பல மன்னிப்புகளில் ஒன்றை வீணாக்க விரும்பவில்லை. நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். உங்களுடைய முதல் கடிதத்தில் பெங்களூரு டூ மகாரஷ்டிடம் பேருந்துப் பயணத்தையும், மற்றொரு கடிதத்தில் கர்நாடக, மகாராஷ்டிர எல்லையில் அமைந்திருக்கும் பாகல்கோட்டை என்ற கிராமத்தைப் பற்றியும் எழுதியிருந்தீர்கள். பாகல்கோட்டை கிராமம் பற்றிய வர்ணிப்பை அருமையானதொரு பயணப் பதிவாகப் பார்க்கிறேன். உங்களின் விழிகள் வழியாக அந்தக் கிராமத்தையும் அதே கிராமத்தில் நீங்கள் சைட் அடித்த பெண்ணையும் பார்த்த உணர்வு/திருப்தி. 

நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும்/எழுதிய சரித்திர நாவலான வானவல்லி தற்போது அச்சுக்கு சென்றுள்ளது எனக் கேள்விபட்டேன். வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் எழுத்துக்களை புத்தகமாகப் படிப்பதற்கு காத்திருக்கிறேன். ஒரு புத்தகம் எழுதுவதற்கெல்லாம் அசாத்திய திறமையும் பொறுமையும் உழைப்பும் தேவை. அதிலும் நீங்கள் நான்கு பாகங்கள் அடங்கிய சரித்திர நாவலை ஓவர் நைட்டில் முடித்துள்ளீர்கள். நிஜமாகவே பிரம்மிப்பாகவும், வியப்பாகவும் இருக்கிறது. அசாத்தியமான திறமை தான். மேரா ஒன் ஸ்டெப் பேக் ஹை. உங்களுடைய நனவோட்டம் முழுவதுமே சரித்திர நாவலில் வீழ்ந்ததாலோ என்னவோ தங்களுடைய உவமைகளிலும் எண்ண ஓட்டங்களிலும் சரித்திர சொற்களை அதிகமாகக் காணமுடிகிறது. பாதி புரிகிறது. மீதியைப் புரிந்துகொள்ள முடிகிறது - எனக்குப் புரியவில்லை என! 

நான் ஒரு ஊர் சுற்றி, நாடோடி என்பதில் எப்போதுமே எனக்குப் பெருமை உண்டு. என்னுடைய கருத்துக்களையேஉங்களுடைய என்னைப் பற்றிய கருத்துக்களாக நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களைப் பார்க்கும் போது என்னுடைய ஊர்சுற்றல் வெகு சாதாரணமே. உண்மையைச் சொல்வதென்றால் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டியது கோவா செல்வதற்காக மட்டும்தான். ஆனால் நீங்களோ அப்படியில்லை பயணங்களிலேயே வாழ்கிறீர்கள். என் மேல் கொண்ட பெருமையை உங்கள் பயணங்களின் மீதான பொறாமையாக மாற்றுகிறேன் வெற்றி. நிஜாமாகவே பொறாமையாக இருக்கிறது. அதிலும் பெங்களூருவில் இருந்து மகராஷ்டிரம் வரைக்கும் பேருந்துப் பயணமென்றால் என்னுடைய பொறாமை கொழுந்துவிட்டு எரிகிறது. உங்களுடைய ஒரு சிறுகதையில் பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு வரைக்கும் லாரியில் செய்த பயணத்தைப் பற்றிக் கூறியிருந்தீர்கள். அவையெல்லாம் வெறும் பயணமில்லை வெற்றி. அனுபவம். ஓட்டுனர்களிடம் இல்லாத கதை இன்றைக்கு வேறு யாரிடமும் இல்லை. அதிலும் லாரி ஓட்டுனர்களை எல்லாம் சுவாரசியம் நிறைந்த ஊர்வனவாகப் பார்கிறேன். அவர்களை மூலம் கிடக்கும் அனுபவங்களை வேறு எவர் மூலமும் பெற்றுவிட முடியாது. தென்காசியில் இருந்து சென்னைக்கு வீடு மாற்றி வரும்போது நீண்ட தூரப்பயணமாக லாரியில் சென்னை வரை வந்தேன். அதுவொரு மறக்க முடியாத பயணம். அதை எழுதுவதற்கு இது இடம் இல்லை என்பதால் இங்கே எழுதவில்லை. அந்த அனுபத்தை விசாரித்து வேறொரு கடிதம் எழுதுங்கள் வெற்றி. நிச்சயம் பகிர்கிறேன். உறுதியாக நீங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

பேருந்துப் பயணத்தில் ஒரு காதல் ஜோடி செய்த சேட்டைகளையும் அதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட அங்கலாய்புகளையும் பற்றி எழுதி இருந்தீர்கள். அங்கலாய்ப்பு என்ற வார்த்தை சரியா அல்லது பொறாமை என்று எடுத்துக்கொள்ளட்டுமா? அப்படியொரு அனுபவம் எனக்கு ஏற்பட்டுள்ளதா என்றும் கேட்டிருந்தீர்கள். சென்னை போன்ற பெருநகரத்தில் வசிக்கும் ஒவ்வொரு பேச்சிலர்ஸ்க்கும் பெருநரகம் என்று ஒன்று இருக்கிறது அவை தான் இது போன்ற காட்சிகள். அவற்றைப் பார்த்து ஒரு பெருமூச்சுவிட்டு கடந்து விட வேண்டியது தான். இன்றைக்கு காதலர்கள் இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்ட நிலையில் நகரம் முழுக்கவே இது போல் ஆயிரமாயிரம் சம்பவங்கள் நிகழும். இவற்றை எல்லாம் வரலாற்றில் எழுதினால் வரலாறு மொத்தமும் பெருமூச்சாகவே நிறைந்து கிடக்கும். நம்முடைய வரலாறு கொஞ்சமேனும் கௌரதையாக இருக்க வேண்டும் என்றால் இது போன்ற கட்டங்களை எல்லாம் கடந்தால் மட்டுமே முடியும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரி(ளி)ய வேண்டிய அவசியம் இல்லை வெற்றி. அதனால் அவற்றை ஒரு துர்கனவாகவோ அல்லது வேறு எதாகவோ கடந்து விடுங்கள். 

சரி முக்கியமான விசயத்திற்கு வருகிறேன். உங்கள் கடித்ததில் நான் பெரிதும் வியந்த பகுதி ஒன்று இருக்கிறது. அவை உங்கள் அப்பா உங்களுக்கு எழுதிய கடிதங்கள். உலக உருண்டையை மாய எண்களால் இணைத்துவிட்ட இன்றை சூழ்நிலையில் நீங்கள் எழுதியிருந்த கடிதம் சார்ந்த நினைவுகள் என்னுள் பதுக்கி வைக்கபட்டிருந்த பல நினைவுகளை மீட்டெடுத்துவிட்டது. 

என்னுடைய அப்பாவும் சென்னையில் தான் இருந்தார். லேண்ட் லைனே பரவலாகி இருக்காத தொண்ணூருகளின் ஆரம்பகாலம் அது. ஒவ்வொரு மாதத்திலும் அப்பாவிடம் இருந்து ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ கடிதம் வரும். இரண்டு முறைக்கு மேல் கடிதம் வந்து பார்த்ததில்லை. அப்பாவிடம் இருந்து வந்த பல கடிந்தங்க்களை அம்மா சேமித்து வைத்திருந்தார். இப்போ அவை இல்லை. காலம் அழித்திருக்க வேண்டும் இல்லை அம்மா! அந்தக் கடிதங்களில் எழுதப்பட்டிருக்கும் அப்பா அம்மாவின் கையெழுத்து நன்றாக நினைவில் இருக்கிறது. அப்பாவின் கையெழுத்து ஒழுங்கற்று கோழி கிறுக்கியது போல் இருக்கும். அவசர அவசரமாக எழுதப்பட்ட கடிதங்கள் அவை. அவசரமில்லாமல் எழுதியிருந்தாலும் அவர் கையெழுத்து அப்படித்தான் இருக்கும் என்பது வேறு விஷயம். அன்புள்ள என்று அம்மாவின் பெயரைப் போட்டு ஆரம்பித்த கடிதங்கள் அவை. அந்தக் கடிதம் எனக்கு முக்கியமே இல்லை. அந்தக் கடிதத்தை என்னைப் பற்றி எங்கே என்ன கேட்டிருக்கிறார் என்பதைத்தான் முதலில் தேடுவேன். கார்த்திக் சீனு நலம். அவர்களை கேட்டதாகக் கூறவும் என்று எழுதி இருப்பார். அதைப் படித்தவுடன் வரும் மகிழ்ச்சியை அவ்வளவு எளிதில் எல்லாம் பகிர்ந்துகொள்ள முடியாது. அது ஒரு மானசீகமான தந்தை மகன் உறவு. 


அம்மாவின் கையெழுத்து அப்படியே எதிர்மறை. கொஞ்சம் அழகாக நிதானமாக தெளிவாக எழுதப்பட்ட ஒன்று. நீட்ட நீட்டமான எழுத்துக்கள். அம்மா போல் எழுத முயன்று அப்பா போல் மாறிய கையெழுத்து என்னுடையது. தன்னுடைய சுகதுக்கங்களை எல்லாம் எழுதி முடித்த பின் நானும் அண்ணனும் எழுதுவதற்கென்று அம்மா கொஞ்சம் இடம் ஒதுக்கியிருப்பார். என்னுடைய முதல் கடிதத்தை பென்சிலில் தான் எழுதினேன். சமயங்களில் கடிதம் முழுவதையும் அம்மாவே எழுதி நான் எழுத இடம் வைக்காமல் விட்டிருந்தால் எனக்குக் கெட்ட கோவம் வரும். அடுத்த நிமிடமே அம்மாவிடம் காசு வாங்கி போன்னையாக் கடையில் ஒரு இன்லேன்ட் (வெகுகாலமாக inlandஐ, இங்கிலாந்து என்று தான் நினைத்திருந்தேன். வெள்ளையன் ஆட்சி பெயர்க் காரணம்) லெட்டர் வாங்கி, அந்த லெட்டர் முழுவதும் என்ன என்னவோ கிறுக்கி பின் எழுதிய வரையிலும் எழுதி அவருக்கு அனுப்பி விடுவேன். என்னுடைய கடிதம் கிடைத்தது என அம்மாவுக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பார். எவ்வளவு சந்தோசமான நினைவுகள் அவை. 

தெருவில் போஸ்ட்மேனைப் பார்த்தாலே 'அப்பா இன்னிக்கு எதுவும் அனுப்பலடே' என்று கூறும் அளவுக்கு எனக்கு போஸ்ட்மேனுக்கும் அவ்வளவு பரிட்சியம். அப்பா அம்மாவுக்கு எழுதும் கடிதங்கள் அத்தனையும் மிகவும் அந்தரங்கமானவை அவற்றை நானோ அண்ணாவோ தவிர வேறு யாரும் படிக்க அனுமதிக்கமாட்டார். அப்போ எல்லாம் அம்மா பீடி ஓட்டுவார். ஒட்டுமொத்த காம்பவுண்டும் எங்கள் வீட்டில் அமர்ந்துதான் பீடி ஓட்டும். வீடு முழுவதும் பீடி வாசம் பரவியிருக்கும். அப்படி அனைவரும் அமர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும் போது கடிதம் வந்து நான் வாசித்துத் தொலைத்தால் அவ்வளவு தான், அன்றைக்கு அம்மா ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார். ஏன் என்று காரணம் புரியும் வயது வந்த போது கடிதம் என்னும் சகாப்தத்தையே நாம் கடந்து இருந்தோம்.  

பல அனுபவங்கள் யாருக்கும் தெரியாமல், யாரிடமும் சொல்ல முடியாமல் அல்லது நேரமில்லாமல் அமிழ்ந்து கிடக்கின்றன. அவற்றை எழுதும்போது கிடைக்கும் ஆறுதல் தொலைபேசி வழியாக பேசும்போது கிடைப்பதில்லை. அவசரமான உலகில் அவசர அவசரமாக வெளிப்படும் சொற்களைக் காட்டிலும் நிதானமாக வரும் எழுத்துகளுக்கு வலிமை அதிகம். அதனால் தானோ என்னவோ அந்த வலிமையான ஆயுதத்தை இவ்வளவு எளிதாக அழித்துவிட்டோம். ஆனாலும் அந்த ஆயுதம் கொடுத்த நினைவுகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியவில்லை. விபரம் தெரிவதற்கு முன்னிருந்தே நெஞ்சில் பதிந்து போன நினைவுகள் அவை. மீட்டெடுத்த உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி

என்றும் அன்புடன்
சீனு   

3 Jan 2016

பசங்க - 2 - யாருக்கான படம்?

ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கடினமான சவாலான காரியம் குழந்தைகளை வைத்துப் படம் எடுப்பது. மூன்றாவது முறையாக அதை சாத்தியபடுத்தி சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். முதல்முறை கிராமத்துக் குழந்தைகளையும், இரண்டாவது முறை சென்னை மாநகரத்து விளிம்புநிலைக் குழந்தைகளையும் திரையில் காட்டியவர் இம்முறை கொஞ்சம் உயர்ந்து வேறுபக்கம் திரும்பி ஹைகிளாஸ் குழந்தைகளைக் காட்டியிருக்கிறார். மேலும் மற்ற திரைப்படங்களில் (ஓரளவுக்கு) விபரம் தெரிந்த குழந்தைகளை வைத்து படம் இயக்கியவர் இம்முறை இப்போதுதான் விவரம் தெரிய ஆரம்பித்திருக்கும் குழந்தைகளை வைத்து படம் எடுத்திருக்கிறார். அதன்பின் ஒளிந்திருக்கும் சவால்களை தைரியமாகக் கடந்ததற்காகவே அதற்காகவே அவரைப் பாராட்டலாம். 


குழந்தையாக இருந்தபோது என்னுடைய சமகாலத்து 'ஹைகிளாஸ்' குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் எனத்தெரியாது. அப்படியிருக்க இந்தத் தலைமுறை குழந்தைகளின் உலகமும் வாழ்வியலும் ம்ம்ம்ம் சுத்தம். அதை பாண்டிராஜ் காட்சிப்படுத்தி இருப்பதற்காக இன்னொரு பூங்கொத்து. மேலும் குழந்தைகளின் உடல்மொழி, அவர்களின் தேவைகள், உணர்வுகள், எப்போது உடைந்து அழுவார்கள், எப்போது அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள், எப்போது கொஞ்சுவார்கள் எப்போ மிஞ்சுவார்கள் என ஒவ்வொரு விஷயத்திலும் மிக நுணுக்கமாக அவர் செய்திருக்கும் தேடல் அதன்பின் இருக்கும் உழைப்பு அற்புதம். 

சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். 2015-ல் நான் பார்த்த கடைசி மொக்கைப் படம் என்றும் சொல்லலாம். இன்றைய மீடியாக்கள் டீ.ஆர்.பீக்காக என்னவெல்லாம் செய்வார்கள். அதிலும் பாக்சிங் போன்ற ஒரு ஸ்போர்ட்ஸ் கிடைத்தால் அதை வைத்து எப்படியெல்லாம் வியாபாரமாக்கப் பார்ப்பார்கள் என்பது தான் கதை. அல்லது கதையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இயக்குநரோ அந்தக் கதைகளத்தை குத்திக்குதறி தொம்சம் செய்திருப்பார். கூடவே பார்வையாளர்களையும். 

சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்வது என்று முடிவு செய்துவிட்டால் கிடைத்த கேப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்க வேண்டும். குறைந்தபட்சம் தனக்கு வரும் வாய்ப்புகளை வீணாக்காமலாவது இருக்க வேண்டும். அப்படி தன்னை நோக்கி வந்த வாய்ப்புகளை லாவகமாக பயன்படுத்தி இருக்கிறார் பாண்டிராஜ். கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தின் முதல் slide-ஆகத் தோன்றும்

     குழந்தைகளின் சிறந்த
     வகுப்பறை
     தாயின் கருவறை

என்ற எழுத்துக்களின் மூலமாகவே இன்றைய தினத்தில் இந்தப் படத்தின் தேவையைக் கூறிவிட்டார். அதற்காக அடுத்தடுத்து வைக்கபட்டிருக்கும் காட்சிகள் அற்புதம். எந்நேரமும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணின் குழந்தை அதிகமாக சினிமா பஞ்ச் டயலாக் பேசுவதும், எப்போதும் சண்டையிடும் பெற்றோரின் குழந்தை எல்லோருடனும் மல்லுக்கு நிற்பதையும் புரிந்துகொள்ள தாயின் கருவறையினுள் அந்தக் குழந்தைகள் இருக்கும் போது நடைபெறும் சம்பவங்கள் போதுமானதாக இருக்கிறது. 'குழந்தைங்க எப்போதுமே கெட்டத பேசுறது இல்ல. கேட்டதைத் தான் பேசுறாங்க' என்பதுகூட அதன் நீட்சி தான். 

அவசர உலகில் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு குறைந்துகொண்டே செல்கிறது. பெற்றோர்களின் கவனிப்பும் அரவணைப்பும் எவ்வளவு அவசியம் என்ற கேள்விக்கான பதில் அதன் முக்கியத்துவத்தை இழந்து கொண்டே வருகிறது. குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றால் அது மன ரீதியான பிரச்சனையா அல்லது உடல் ரீதியான பிரச்சனையா என்பதைத் தெரிந்துகொள்ளக்கூட ஒரு மருத்துவரின் உதவியைத் தான் நாட வேண்டி இருக்கிறது என்பதை பல காட்சிகளில் தொடர்ந்து பதிவு செய்திருப்பது, எல்லாவற்றிற்கும் மருந்து மாத்திரை ஒன்றே தீர்வு என நம்பும் கூட்டத்திற்கு தேவையான ஒரு மெசேஜ் - பசங்க 2.  

சமுத்திரக்கனி வந்துசெல்லும் அந்த ஒரேயொரு காட்சியில் அரசுப் பள்ளியின் அவசியத்தையும், அரசு ஊழியர்கள் ஏன் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கவைக்க வேண்டும் என்பதன் காரணத்தையும் அழுத்தமாக கூறியிருப்பார். நிதர்சனம் என்னவென்றால் அரசுப் பள்ளி வாத்தியார் தன் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்க்கத் துடிப்பதுதான். 

சூர்யா, பெரிதாக ஸ்கோப் இல்லையென்றாலும், நல்லவேளை ஓவர் ஆக்டிங் செய்யவில்லை என்பதே பெரிய ஆறுதல். குழந்தைகளின் உலகைப் புரிந்துகொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை சூர்யா மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தில் வந்துசெல்லும் அத்தனை பேரின் நடிப்பும் அட்டகாசம். குறிப்பாக குழந்தைகளின் நடிப்பு. இசை, கேமரா உறுத்தவில்லை. வசனம் உறுத்துகிறது - அவ்வளவு ஷார்ப். 

குழந்தைகளின் முதல் குருவான தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உளவியல் ரீதியான பயிற்சி குறித்து இன்னும் தெளிவாகப் பேசியிருக்கலாம் என்பதைத் தவிர படத்தில் பெரிதாகக் குறை என்று எதுவுமில்லை.   

குழந்தைகளின் உலகம் ரகசியமானது. அவ்வளவு சீக்கிரமாக யாராலும் அதனுள் நுழைந்துவிட முடியாது புரிந்துகொள்ள முடியாது. அவரவர்களுடைய பெற்றோர்களைத் தவிர. அப்படியிருக்க பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பிணைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பாண்டிராஜ் என்னும் இயக்குனர் படம் எடுத்து 'அட ஆமாப்பா, நாம இப்படி இல்லையே' என புரிய வைக்கவேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் இப்படம் அவசியமானதா இல்லையா? பார்க்க வேண்டுமா கூடாதா என்று.