'மின்சார ரயிலில் பாய்ந்து மென்பொருள் இஞ்சினியர் தற்கொலை - தன்னுடைய இந்த முடிவுக்கு தானே காரணம் என்று அவர் எழுதிய வாக்குமூலம் சிக்கியது.' நாளைய தினசரியில் இப்படியொரு செய்தி தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருக்கா விட்டாலும் குறைந்தபட்சம் ஒரு தற்கொலைச் செய்தியாகவாவது இடம் பெற்றிருக்கக்கூடும். யாரோ நால்வர் இறந்தவனுக்காக வருத்தப்பட்டிருப்பார்கள், எதோ ஒரு டீக்கடையின் மரபெஞ்சில் அமர்ந்திருக்கும் சிலருக்கு இது விவாதப் பொருளாயிருக்கக்கூடும். மென்பொருள் துறை என்பதால் விவாதம் மேலும் சில இடங்களில் சூடு பிடிக்கலாம். இரண்டுமணி நேரங்களுக்கு முன்பாகவே தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டியவன், ரயிலில் பாய்வதற்கான கடைசி நொடியில் யுகங்களை மென்று கொண்டிருந்தான் செல்வா. மரணம் அவன் காதுகளினுள் ரீங்கரித்துக் கொண்டிருந்தது. 'டடக்டடக் டடக்டடக் டடக்டடக்'.
சட்டைப் பையில் இருந்த தற்கொலைக் கடிதத்தைத் ஒருமுறை தொட்டுப்பார்த்தான். மடிப்பு கலையாமல் வைத்தது வைத்தபடி இருந்தது. மனதில் ஆழமாக உருவேறி இருந்த விரக்தியும் வெறுப்பும் வலியும் கூட அப்படியே இருந்தது. அவமானம் அவ்வளவு எளிதில் ஜீரணிக்கக் கூடிய விஷயம் அல்ல. இருபத்தி நான்கு வயத்தில் தற்கொலை என்பது யோசிக்கக் கூடிய விசயமா என்ன? அதிலும் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனத்தில், வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காத நிலையில்?. மெல்லிய தூறல் உடலை நனைக்க, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான்.
ரம்யாவின் முகத்தை, அவளால் ஏற்பட்ட அவமானங்களை தன் வாழ்நாளில் இருந்து அழிக்க வேண்டுமானால் தன்னை அழித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
'ஜானி ஜானி எஸ் பாப்பா தெரியுமா'
'சப்பி சீக்ஸ்' டேன்ஸ் ஆடிட்டே சொல்லு பார்க்கலாம்'
'அட்லீஸ்ட் ஏ.பி.சி.டியாவது தெரியுமா உனக்கு'.
காலையில் இருந்து தொடர்ச்சியாக ரம்யா அவனை அவமானப்படுத்திய நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வந்து போய்க் கொண்டிருந்தன. விபரம் தெரிந்ததில் இருந்து எத்தனையோ வலிகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டவன் என்றபோதிலும் இன்றைக்கு அத்தனை பேர் முன்னிலையிலும் அவள் தன்னை அசிங்கபடுத்தியதையும், தான் அவமானப்படுவதை மற்றவர்கள் ரசித்துக் கொண்டிருந்ததையும் செல்வாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 'அட்லீஸ்ட் ஏ.பி.சி.டியாவது தெரியுமா உனக்கு' என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. அவனையும் அறியாமல் அழுது கொண்டிருந்தான்.
'ஜஸ்ட் ஓபன் யுவர் லிப்ஸ் மேன், யு ஆர் நாட் எ லிவ்விங் ஸ்டேட்யு' ரம்யாவின் குரலில் கொஞ்சம் கடுமை கொஞ்சம் கூடியிருந்தது. முதலில் அவள் கூறியது அவனுக்குப் புரியவில்லை என்றாலும் தன்னை ஒரு கல்லுடன் ஒப்பிடுகிறாள் என்பது புரிந்தபோது இதயம் முன்னிலும் வேகமாகத் துடித்தது. சுற்றி அமர்ந்திருக்கும் மொத்த கண்களும் கூர்மையான ஆயுதத்தில் தாக்குவதைப் போல் உணர்ந்தான்.
விழுப்புரம் வழியாக திருச்சி மதுரை செல்லும் ரயில்கள் தமக்கான பாதையில் ஓடிக் கொண்டிருந்தன. விழுப்புரத்திற்கும் திருச்சிக்கும் இடையே இருக்கும் சிறுகிராமம் தான் செல்வாவிற்கு. கூடபிறந்தவர்கள் இரண்டு பேர். ஒரு அண்ணன். ஒரு அக்கா. தூங்கும் போதே போய்ச் சேர்ந்துவிட்ட பாக்கியசாலி அவனுடைய அக்கா. அண்ணன் அப்போவோடு சேர்ந்து கொத்தனார் வேலைக்குச் செல்கிறான்.
கடைசிப் பையனையாவது கல்லூரிக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற முனைப்பில்தான் செல்வாவை எம்.சி.ஏ வரைக்கும் படிக்க வைத்தார் வீரன் செல்லமுத்து. அவர் பெயர் செல்லமுத்து மட்டும்தான். தன்னுடைய குலச்சாமி பெயரான எல்லைவீரனில் இருக்கும் வீரனை தன்னோடு சேர்த்துக் கொண்டார். யாராவது அவரை 'வீரா' என்று விளித்துவிட்டால் போதும் அப்படியே பூரித்துவிடுவார். 'வீரன் வீரன் வீரன்' என்று மனதிற்குள் கூறிக்கொண்டே இருக்கவேண்டும். அப்படிக் கூறுகையில் தன்னையே அறியாமல் தன்னுள் ஒருவித மாற்றம் நிகழ்வதை கவனித்திருக்கிறார். இக்கட்டான சூழ்நிலைகளில் அவரை வழி நடத்துவதே அவருக்குள் இருக்கும் அந்த வீரன்தான்.
வீரனுக்கு இதுதான் வேலை என்று கிடையாது. மேஸ்திரி, டீ மாஸ்டர், சுண்ணாம்பு அடிக்க, மரம் வெட்ட, தேங்காய் பறிக்க, வீடு காலி செய்ய என்று என்ன வேலை கிடைத்தாலும் அசராமல் செய்யக்கூடிய ஆள். வீரனுக்கு என்று சில கனவுகள் இருக்கின்றன. பெரியவனுக்கு ஒரு வீடு, சின்னவனுக்கு கல்லூரிப் படிப்பு மெட்ராஸில் வேலை. இதற்காக எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் தன்னை வருத்திக் கொள்ள தயாராய் இருந்தார்.
'தம்பி எங்கப்பன்தான் என்ன படிக்க வைக்காம அல்லாட வைச்சிட்டான், நீயாவது படிச்சு நல்லா இருக்கணும்டா, மெட்ராசு போகணும், கண்ணாடி வச்ச பில்டிங்கல சூட்டு போட்டு வேல செய்யனும். எப்போதும் சந்தோசமா இருக்கனும்டா, வீரன் நம்ம கூட இருக்க வரைக்கும் நமக்கு நல்லதுதாண்டா நடக்கும்' கூறிக்கொண்டே இருப்பார். செல்வாவின் பெரும்பான்மையான பொழுதுகள் வீரனின் கனவுகளாலேயே நிறைந்திருக்கும்.
அரசுப்பள்ளி, அரசுக் கலைக்கல்லூரியில் இளநிலை கணிதம், மாநகர் சென்னையில் ஓர் பொறியியல் கல்லூரியில் எம்.சி.யே என்று எதுவுமே சவாலாக இல்லை. ஆங்கிலம் என்ற ஒற்றை சொல்லைத் தவிர. என்னென்னவோ செய்தும் ஆங்கிலம் மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. டுடோரியலில் ஆங்கில பயிற்சி வகுப்பு, பிரிலியன்ட், லிப்கோ, ரெபிடெக்ஸ் என்று விதவிதமான ஆங்கில வழிகாட்டிகள், ஹிந்து, எக்ஸ்பிரஸ், டெக்கன் கிரானிக்கிள் என்று கண்ணில்படும் தினசரிகளை எல்லாம் வாசிக்க முயன்றது என்று எதுவுமே ஆங்கிலத்தை அண்டவிடவில்லை.
மேலும் எந்த ஒரு முயற்சியயையும் ஒரு வாரத்திற்கு மேல் தொடர முடிந்ததில்லை. ஆங்கிலத்திற்கும் அவனுக்கும் இடையில் இருந்த மாயத்திரை விலக மறுத்தது. ஆங்கிலம் மட்டும் தான் தெரியாதே தவிர சி.சி++, ஜாவா என்று ஆங்கிலம் தவிர்த்த மற்ற எல்லா மொழிகளிலும் புகுந்து விளையாடுவான். அவனுடைய கணிதமூளை எப்போதும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும். எவ்வளவோ யோசித்துவிட்டான் ஆங்கிலம் எந்த விதத்தில் மிகபெரிய சவால் என்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையெல்லாம் நினைத்து வருத்தபடுவானே தவிர மனதில் பாரமாய் எற்றிக்கொண்டது கிடையாது. அவனுக்குத் தெரியும் அவன் பயணிக்க வேண்டிய பாதை மிகவும் தூரமானது, உயரமானது.
இந்தப் பாதையில் ரம்யா இப்படி ஒரு வில்லியாக குறுக்கிடுவாள் என்பது சற்றும் எதிர்பாராத ஒன்று. ரம்யா, கம்யுனிகேசன் ஸ்கில் ட்ரையினர்.
'ஹே ஷேல் வீ நோ, வாட் ஆர் யு திங்கிங் நவ்' தன்னுடைய ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு நக்கலாக முறைத்தாள். அவளுடைய தோற்றம் இவள் தன்னைப் புரிந்துகொள்ளக் கூடியவள் இல்லை என்பதை பட்டவர்த்தனப்படுத்தியது. அத்தனை பேர் முன்னிலையில் தனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை அத்தனை சீக்கிரம் அவளும் தன்னை விட்டுவிடுவாள் என்ற நம்பிக்கையும் இல்லை.
கேம்பஸ் இண்டர்வியு மூலமாக இந்தியாவின் முன்னணி நிறுவனத்தில் செல்வாவிற்கு வேலை கிடைத்த சேதியை அறிந்த வீரன், அந்த நாளை கொண்டாடித் தீர்த்துவிட்டார். தன் மகன் மெட்ராசில் பணிபுரிய வேண்டும் என்கிற எண்ணம், கனவு, லட்சியம் நிறைவேறிய நாள் அது. ஆனால் செல்வாவோ பயத்தில் குழப்பத்தில் இருந்தான். அலுவலக பயிற்சியின் போது தனக்கு முன் இருக்கையில் அமர்ந்தவர்களிடம் ஆங்கிலம் விளையாடிக் கொண்டிருந்தது. பேசினால் ஆங்கிலத்தில் பேசு என்கிற விதி அவனது வாயைக் கட்டிப்போட்டிருந்தது.
போதாக்குறைக்கு யாருமே அவனோடு பேசுவதில்லை. தனித்து விடபட்டவனைப் போல் உணர்ந்தான். அங்கு நிலவிய பேரமைதி அவனுக்குள் ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. தன்னைச் சுற்றிலும் வேட்டை மிருங்கங்கள் சூழ்ந்திருக்க தான் மட்டும் இரையாக்கப்பட இருக்கும் மானைப்போல் உணர்ந்தான். முதல் இரண்டு நாட்கள் எந்தப்பிரச்சனையும் இல்லை, மூன்றாவது நாளில் இருந்து தான் ரம்யா அவனை வேட்டையாடத் தொடங்கியிருந்தாள்.
பிளாட்ப்பாரத்தில் அமர்ந்து கடந்து கொண்டிருக்கும் ரயில்கலையே கவனித்துக் கொண்டிருந்தான். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அதன்முன் பாய்ந்து விடும் உறுதி அவனுக்குள் ஊறிக் கொண்டிருந்தது. மறந்தும்கூட வீட்டையும் வீரனையும் நினைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். டடக் டடக் டடக், டடக் டடக் டடக்.
ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு தலைப்பில் பதினைந்து நிமிடம் தங்களுக்குப் பிடித்த விசயங்களைப் பற்றிப் பேச வேண்டும். ஒவ்வொருவராக வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சில பெண்களின் கை அசைவுகள், பாவனைகள் செல்வாவுடைய தாழ்வு மனப்பான்மையை மேலும் கிளறிவிட்டுக் கொண்டிருந்தன.
மூன்றாவது வரிசையில் தன்னை யாரும் கவனித்து விடக்கூடாத கட்டாயத்தில் தலைமறைவாக அமர்ந்திருந்தான் செல்வா. ஒவ்வொருவராக முன்னே சென்று வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள், காதலித்து வீட்டில் சிக்கியது, நண்பர்களுடன் தண்ணியடித்து மாட்டியது என்று ஒவ்வொன்றையும் பிரதானப்படுத்திக் கொண்டிருக்க, ரம்யாவும் அதைப் போன்ற சம்பாஷனைகளைத் தான் எதிர்பார்த்திருக்க வேண்டும், அனைவரையும் ஏதாவது பேசும்படி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள். நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. அவனுடைய இருக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் எழுந்து சென்றான். குளிரூட்டப்பட்ட அறையிலும் வியர்த்து ஒழுகத் தொடங்கியது. கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன. வயிற்றைக் கலக்கியது.
வெகுநேரமாக தன்னைக் கடந்து தடதடத்துக் கொண்டிருக்கும் புறநகர் ரயில்களையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. அவனுக்குள் நிகழ்வது மொத்தமும் தேவையற்ற குழப்பங்கள் தான் என்ற போதிலும் அவற்றில் இருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
இத்தனை நாட்கள் தன்னைப் புரிந்த கொண்ட ஒரு சமுயாத்தில், தன்னுடைய பிழைகள் பொறுத்துக் கொள்ளப்பட்ட இடத்தில் இருந்து வந்தவனுக்கு தன் முன் நடப்பவை அனைத்தும் செயற்கையாக இருந்தன. இங்கு யாரும் யாரையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஏற்றுகொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இது ஒரு பந்தயம், ஓடித்தான் ஆகவேண்டும். வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு இங்கு இடம் இல்லை.
'செல்வா, மிஸ்டர் செல்வா', எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவன், தான் அழைக்கப்படுவதை உணர்ந்ததும் இயல்புநிலைக்குத் திரும்பினான். பெரும் தயக்கத்திற்குப் பின் அத்தனை பேரின் முன்னிலையிலும் நின்று கொண்டிருந்தான். ரம்யாவின் உடலில் பூசியிருந்த இருந்த வாசனைத் திரவியம் அவனுள் மயக்கத்தை உண்டு பண்ணுவது போல் இருந்தது. ஏற்கனவே பயந்திருந்தான். நிலைகொள்ளாமையின் மொத்த உருவமாக தன்னம்பிக்கை நிறைந்த ஒரு கூட்டத்தின் முன் தற்கொலைக்குத் தயரானவனாக நின்று கொண்டிருந்தான்.
'எஸ் ப்ளீஸ், திஸ் இஸ் யுவர் டர்ன், சே சம்திங் இன்ட்ரெஸ்டிங் பிரேம் யுவர் லைப் சார்'
என்ன பேசுவது, எதைப் பேசுவது, எங்கிருந்து ஆரம்பிப்பது. குழப்பம். வார்த்தைகள் அற்ற உலகத்தில் சஞ்சரிப்பது போல் இருந்தது அவனுக்கு. இந்த வேலை கிடைத்ததை விட மிகப்பெரிய இன்ட்ரெஸ்டிங் திங் வேறு எதுவும் இல்லை, பிறந்ததில் இருந்தே கஷ்டங்களுடனும், ஏமாற்றங்களுடனும் வளர்ந்தவன். அவனுடைய மொத்த நம்பிக்கையும் குடும்பம்தான். குடும்பத்தைக் கூறலாம் என்றால் அவர்களின் மத்தியில் பரிதாபத்திற்காக அலைவதைப்போல் இருக்கும், தன்னைப் பார்த்து யாரும் பரிதாபப்படத் தேவையில்லை.
'ஓகே லிசன், டூ யு நோ இங்க்லீஸ்'
ஆம் என்பது போல் தலையாட்டினான். ஆங்கிலம் தெரியாதவனுக்கு இங்கு இடம் இல்லை, ஆங்கிலம் தெரியும் புரியும் ஆனால் கோர்வையாய் பேசுவதில் தயக்கம். அந்த தயக்கத்தை உடைத்தெறிய உதவ வேண்டிய பயிற்சியாளர் அவனுடைய தாழ்வு மனப்பான்மையை மேலும் நிரடி விட்டுக்கொண்டிருந்தார். 'சரி நீ எதுவும் பேச வேண்டாம் ரெண்டு ரைம்ஸ் சொல்லு உன்ன விட்டுர்றேன்', விதி இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. மெளனமாக தரையையே பார்த்துக் கொண்டிருந்தான். உடல் ஒருமாதிரி கூனிக்குறுகிப் போய் இருந்தது. அறை முழுவதும் மௌனம். வெடித்துச் சிதற இருக்கும் அணுகுண்டின் பேராற்றல் பொருந்திய மௌனம்.
'ஜானி ஜானி எஸ் பாப்பா தெரியுமா'
'சப்பி சீக்ஸ்' டேன்ஸ் ஆடிட்டே சொல்லு பார்க்கலாம்'
'அட்லீஸ்ட் ஏ.பி.சி.டியாவது தெரியுமா உனக்கு'.
ரம்யா கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் வெற்றுப் பார்வைகளையே பதிலாக கொடுத்துக் கொண்டிருந்தான். அவனால் அங்கு நிற்க முடியவில்லை. ஒரு அறிவுஜீவி சமுகத்தின் முன் 'தான் எதற்கும் லாயக்கற்றவன்' என்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குத் தெரியும் அவன் எந்தளவிற்குத் திறமையானவன் என்று, இருந்தும் அவனுக்கு மட்டுமே தெரிந்து என்ன புண்ணியம். அவன் எதிர்பார்த்த அன்யோன்யமான தன்னை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை தன்னை அந்நியபடுத்திவிட்டதைப் எண்ணி நொந்து கொண்டான்.
'ஹலோ சார், இப் யு கேன் ஸ்பீக் இங்க்லீஷ் பீ ஹியர், அதர்வைஸ் ஹெட் அவுட்'. இதை கேட்டதும் அறையில் முணுக்கென்று சிரிப்பொலி. இதற்கு மேலும் தான் இரையாக்கப்படுவதை அவன் விரும்பவில்லை. கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது. அவசரமாக அந்த அறையைவிட்டுக் கிளம்பிவிட்டான். இனியும் இந்த காட்டினுள் அவனால் தப்பிப் பிழைக்கமுடியுமா என்பதே மிகப்பெரிய கேள்வியாய் இருந்தது. எப்போதுமே தன்னை மிகவும் பலம் பொருந்தியவனாய் உணர்பவன் பலமற்றுக் கிடந்தான். இந்தக் காட்டில் தான் எதிர்கொள்ள இருக்கும் மனிதர்களை நினைக்கும் போதே பயமாய் இருந்தது. அடிமட்டத்தில் இருந்து மேல ஏறிவரத் துடிக்கும் ஒரு இளைஞன், அவனை வைத்து பகடி செய்யும் கூட்டம். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது தன் மீதான கழிவிரக்கம் விரக்தியாக மாறி வெறுப்பாக உருவெடுத்து தற்கொலைக்குத் தூண்டியிருந்தது.
ரயிலின் முன் குதிக்க நினைக்கும் நொடியை வீரன் தடுத்துக் கொண்டே இருந்தார். 'அப்பா இந்த வேலை வேண்டாம்பா, இங்க இருக்க ரொம்ப பயமா இருக்குப்பா'. அவர் தோள்களில் சாய்ந்து கதறி அழ வேண்டும் போல் இருந்தது. இதற்காகவா இத்தனைக் கஷ்டப்பட்டார். எம்.சி.யே படிக்க வாங்கிய கடன். வீடு கட்ட வாங்கிய கடன், அண்ணினின் திருமணதிற்கு வாங்கிய கடன் இப்படி வெவ்வேறான கடன்கள் வீரனின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்ததன. ரயில்கள் கடந்து கொண்டிருந்தன. டடக்டடக் டடக்டடக் டடக்டடக்.
ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் செல்வா உயிரோடு வேண்டும். ஆனால் அவனுக்கோ தன்னைப் புரிந்துகொள்ளக் கூடிய சூழல் வேண்டும். 'அப்பா வேற வேலைக்குப் போறேன்ப்பா, இந்த வேலை வேணாம்ப்பா', அவரைப் புரிய வைத்துகொள்ளலாம் என்று மனதைத் தேற்றியவன் வீட்டை நோக்கிக் கிளம்பினான். விதவிதமான எண்ணங்கள் குழப்பங்கள் சிந்தனைகள் அவனை மேலும் வதைத்துக் கொண்டிருந்தன. ஆறுதலாக முழு நிலவும், கொஞ்சம் மழையும்.
நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க செல்வா பயணித்த பேருந்து கிராமத்தைச் சென்று சேருவதற்கும் தூறல் நிற்பதற்கும் சரியாக இருந்தது. நள்ளிரவில் யாருமற்ற இருளில் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். அடையாளம் கண்டுகொண்ட தெருநாய்கள் வாலை ஆட்டிக்கொண்டே தொடர புதிதாக வந்து சேர்ந்த நாய்கள் தூரத்தில் இருந்தே குலைக்கத் தொடங்கின. 'ஏன் வந்த' என்று கேட்டால் என்ன பேசுவது, அவனிடம் பதில் இல்லை. 'வேலைய விடப்போறேன்' என்றால் அவரால் அதைப் புரிந்துகொள்வார். புரிந்துகொள்ள வேண்டும். ஒரு முடிவுக்கு வர முடியாமல் யாரும் தன்னைப் பார்த்துவிடாதபடி வீட்டின் ஓரமாய் நின்று கொண்டு நிலவைப் பார்த்தான். தன்னைப் போலே யாருமற்று தனித்துத் தொங்கிக் கொண்டிருந்தது முழு நிலவு.
அண்ணனின் ஆறுமாதக் குழந்தை அனைவரையும் எழுப்பி விட்டிருக்க வேண்டும். வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீரன் தன் பேரனின் அழுகையை நிறுத்த சமாதானம் செய்து கொண்டிருந்தார். 'யே வீரா' தன் பேரனையும் அப்படித்தான் கூப்பிடுவார்.
'யே வீரா ஏண்டா கண்ணு அழுவுற, உன் தாத்தா வீரன் இருக்கன்டா உன்கூட. உங்கப்பன படிக்க வைக்காம இருந்தமாரி உன்னையும் விட்ற மாட்டேன், உன் சித்தப்பன் பாரு மெட்ராஸ்ல பெரிய உத்தியோகத்துல இருக்கான், அவன் பாத்துபாண்டா உன்ன ராசா மாதிரி. உன் தாத்தன் வீரன்னா உன் அப்பங்க ரெண்டு பேரும் மாவீரங்கடா. உன்ன அழ விடமாட்டன்னுங்க வீரா. மெட்ராசுல உன் சித்தப்பன் பார்த்து பயப்படாத பூதத்தையாடா இந்த ராத்திரியில நீ பார்த்து பயந்துட்ட, அவன மாதிரி தைரியமா இருக்கனும்டா வீரா. அவனும் உன்ன மாதிரி அழுதுட்டு கிடந்தான்னு வையி இந்த கிராமத்திலையே நம்மகூட அடஞ்சுகிடக்க வேண்டியது தான். உன் அப்பன் தைரியமா இல்லன்னு வையி பஞ்சாயத்து காண்ட்ராக்ட் நமக்கு வந்த்ருக்காது. வாழ்க்கைய நினைச்சு பயந்தன்னு வையி எங்கப்பன நாயா அலைய வச்ச காசு நம்மையும் அலைய விட்ரும்டா. அழாதடா, வீரன்ன்னா எதையும் பார்த்து பயப்படாம எதிர்த்து நிக்கனும்டா. எல்லை வீரன் துணைக்கு இருக்க வரைக்கும் நாம எதுக்கும் அழ கூடாது பயப்படக் கூடாதுடா'. தோளில் கிடந்த குழந்தையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அங்குமிங்கும் உலாத்திக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் ஒருவித பெருமிதம் குடிகொண்டிருந்தது. சவரம் செய்யப்படாத நான்கு நாள் தாடியும் முறுக்கிவிட்ட மீசையும் அவரை இன்னும் கம்பீரமாக்கி இருந்தது.
அப்பா தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த தோளில் தானே சாய்ந்து கிடப்பதைப் போல் உணர்ந்தான் செல்வா, அவன் தேடி வந்ததும் இதைத்தான். தேடியது கிடைத்துவிட்ட திருப்தியில் மீண்டும் நடையைக் கட்டினான். இழந்த பலம் மீண்டு வந்ததைப் போல் இருந்தது. ரம்யா நடந்துகொண்ட விதம் தவறுதான் ஆனாலும் அவள் இடத்தில் யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கக்கூடும். தைரியமற்றவர்களை படுகுழியில் தள்ளிவிடும் இந்த உலகத்தில் வீரனாய் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
நாம் நினைப்பது அல்ல உலகம். அவளை எதிர்கொள்ள வேண்டும். மதங்கொண்ட யானையே வந்தாலும் அடிபணிய வைத்த வீரர்கள் பிறந்தமண் இது. மனிதர்களைச் சமாளிக்க முடியாதா என்ன! தனக்கான மறுஜென்மத்தில் தன்னை ஓர் மாவீரனாக உணர்ந்து கொண்டிருந்தான் செல்வா. ஊரின் எல்லையில் இருக்கும் பேருந்து நிறுத்தம் நிலவொளியில் அலம்பிவிட்டது போல் இருந்தது. ஊரைக் காவல் காக்கும் பொருட்டு குதிரையில் கிளம்பத் தயாராய் இருந்தான் எல்லைவீரன், அந்தக் குதிரையின் பின்புறம் தன்னை மறைத்துக் கொண்டு செல்வாவையே பார்த்துக் கொண்டிருந்தார் வீரன். கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எல்லைவீரன் காவல்காக்க கிளம்பி விட்டிருந்தான்.
படங்கள் - நன்றி இணையம்