பத்மனாதபுரம் அரண்மனையை விட்டு வெளியே வந்தபோது ஆதவன் தலைக்கு ஏறியிருந்தான். முத்துவையும் குமாரையும் பார்த்தேன் அவசரமாய் மயங்கிவிழத் தயாராய் இருந்தார்கள். நாகர்கோவிலில் இருந்து பேருந்து ஏறிய அடுத்த நிமிடம் குமரியில் இறங்கிவிட்டது போன்ற பிரமை, மூவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறோம் என்பது குமரி வந்தபோதுதான் புரிந்தது. அரைமணிநேர ஆழ்ந்த உறக்கம் கொஞ்சம் உற்சாகத்தை கொடுத்திருந்த போதும் பசி வயிற்றைக் கிள்ளியது.
குமரி இன்னும் மாறவில்லை அல்லது பெரிதாக எவ்வித மாற்றமும் கண்டிருக்கவில்லை. பத்து வருடங்களுக்குப் முன் பார்த்தபோது எப்படியிருந்ததோ அப்படியே இருக்கிறது. கடற்கரைக்கு அழைத்துச் செல்லும் அதே அகலமான அதே சிமிண்ட் ரோடு, அதே போன்ற கடைகள், அதே கடல் வாசம்... பழைய நியாபகங்கள் என்னை வழிநடத்திக் கொண்டிருக்க, திடிரென்று ஒரு இடத்தில் முத்துவும் குமாரும் பெருங்கூட்டத்தை கண்டுபிடித்திருந்தார்கள்.
'சீனு வா என்னன்னு போய் பார்த்துட்டு வருவோம்' முத்து கையைப் பிடித்து இழுத்தான்.
அருகில் நெருங்கியதும் புரிந்தது அது கூட்டம் இல்லை, விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காண பயணச்சீட்டு வாங்கும் நீள் வரிசை என்று, நாங்கள் நின்று கொண்டிருந்த மேடான சாலையில் இருந்து அவ்வரிசையை அளந்தேன், கண்ணுக்கு எட்டிய தூரத்தைத் தாண்டியும் நெளிந்து கொண்டிருந்தது. 'இது ஆவுற காரியம் இல்ல, எவ்ளோ... பெரிய க்யு' பெருமூச்சு விட்டான் குமார். அவர்கள் இருவர் கண்களிலும் அகோரப் பசி. இரண்டரை மணி குமரி வெயில் சென்னைக்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தது.
'நீங்க போய் சாப்ட்டு, எனக்கு குடிக்கிறதுக் கு மட்டும் எதவாது வாங்கிட்டு வாங்க' என்றபடி அவர்களை அனுப்பிவிட்டு க்யூவில் நிற்கத் தொடங்கினேன். தென்இந்திய முகங்களைக் காண்பதே அரிதாக இருந்தநிலையில் க்யூவில் பெரும்பாலனவர்கள் வடஇந்தியர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக வெளிநாட்டவர்கள். அரைமணி நேரத்திற்கும் மேல் நின்றுவிட்டேன் க்யு நகர்ந்த பாடில்லை. சாப்பிட சென்றவர்களும் வந்தபாடில்லை. க்யு இன்னும் ஒரு கிமீ தூரத்திற்கு நீண்டிருந்தது. க்யூவில் சங்கு சிப்பி போன்ற கடல் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தவரிடம் மெல்ல பேச்சு குடுத்தேன்.
"எப்போதுமே இவ்ளோ கூட்டம் இருக்குமான்னே"
"இல்ல தம்பி, டிசம்பர்ல எல்லா பக்கமும் லீவு இல்ல, அதனால் கூட்டமா இருக்கு, அப்புறம் சனி ஞாயிறு கொஞ்சம் கூட்டம் அதிகமா இருக்கும், மத்த நாள் ப்ரீயா தான் கெடக்கும்"
"இன்னிக்கு காலைல கூட்டம் இருந்தததான்னே"
"காலைல சரியான கூட்டம் தம்பி, எப்போதுமே சூர்யோதயம் பார்த்துட்டு நேரா க்யுல வந்து நின்றுவாங்க"
எங்கள் பயண திட்டப்படி குமரிதான் முதலில் இருந்தது. ஒருவேளை இங்கு வந்திருந்ததால் குமரியை தவிர வேறு எங்குமே சென்றிருக்க முடியாது! எங்கள் பயண திட்டம் மாறி இருந்ததில் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தேன். குமரிக்கு வருவதாய் இருந்தால் மாலை மூன்று மணியளவில் வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை குமரியிலே யே ஒருநாள் முழுவதும் செலவழிப்பதாய் உத்தேசம் என்றால் கவலையில்லை. நிதானமாக சுற்றிப் பார்க்கலாம். குமரியம்மன் கோவில், காந்தி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் கடற்கரை, கலங்கரை விளக்கம் இன்னும் பல என்று எவ்வளவோ உள்ளன.
நாங்கள் மூவரும் இவற்றை எல்லாம் கல்வி சுற்றுல்லாவிலேயே பார்த்தவர்கள் தாம். இருந்தும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல வேண்டும், சிலநிமிட பயணம் என்றாலும் கடலில் பயணிக்க வேண்டும்.
ஒருவழியாக வந்து சேர்ந்த என் சகாக்கள் 'எலேய் கடக்காரன் ஏமாத்றான்ல, எல்லாத்துலையும் MRPய விட பத்து ரூபா அதிகமா வச்சி விக்கரானுங்க', என்றபடி புலம்பினான் குமார். இந்தியா முழுவதும் இருக்கும் எல்லா சுற்றுல்லாத் தளங்களிலும் இருக்கும் தேசியப் பிரச்சனை. என்ன செய்வது இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் என்பதைத் தவிர.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் க்யூவில் நின்ற நாங்கள் அதன்பின்னும் அரைமணி நேரம் காத்திருந்தே படகில் ஏறினோம். கட்டுகடங்காத கூட்டம். வெறும் மூன்றே மூன்று படகுகள் மட்டுமே இங்கும் அங்குமாக சேவை புரிந்து கொண்டிருந்தன. தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் படகு சேவையை செவ்வனே செய்து கொண்டுள்ளது. படகுக் கட்டணம் + பாறைக் கட்டணம் சேர்த்து 55/- என்று நினைக்கிறேன், மேலும் இங்கும் வி.ஐ.பி நுழைவாயில் உள்ளது அதற்கு தலா 400/- என்று நினைக்கிறன்.
'சீனு சின்ன வயசுல இந்த போட்ல நாம போனப்ப, நீ 20 பைசாவ கடல்ல தூக்கி போட்ட, அத பாத்து ஏகப்பட்ட பேரு காச தூக்கி போட்டாங்க நியாபகம் இருக்கா' என்றான் முத்து. மறக்கவே முடியாத நினைவலைகள் அவை. எனக்கு விபரம் தெரிந்த முதல் கடல் பயணம். அப்போதும் இந்த இருவரும் உடன் இருந்தார்கள். இப்போதும்!
லைப் ஜாக்கெட் என்ற பெயரில் ஒரு வஸ்துவை அணியச் சொன்னார்கள். அதனை அணியாதிருந்தால் தத்தளித்தாவது கரை சேர்ந்துவிடுவீர்கள். காரணம் அவையெல்லாம் விவேகானந்தர், பாறைக்கு நீந்திச் சென்ற காலத்தில் வாங்கிய லைப் ஜாக்கெட்டுகள் இவை. ஒரு கவர்ச்சி நடிகையின் ஜாக்கெட்டில் கூட அவ்வளவு கிழிசல்களும் ஓட்டைகளும் இருக்காது. இதில் ஓராயிரம் ஓட்டைகள் கிழிசல்கள்.
வசதியாக ஆளுக்கொரு கடல் ஓர இருக்கையைப் பிடித்துக் கொண்டு ஆழியினை ரசிக்கத் தொடங்கினோம். அப்போதுதான் ரசிக்கத் தொடங்கினோம், அந்தோ பரிதாபம்! அதற்குள் பாறை வந்துவிட்டது.
விவேகானந்தர் பாறையைப் பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் தேவைப்படாது என்று நினைக்கிறன், இருந்தும் சில முக்கிய தகவல்கள் மட்டும்.
விவேகானந்தர் குமரி முனையில் இருந்து இந்த பாறைக்கு நீந்தியே வந்துள்ளார், அவர் வந்து சென்றதை சில மீனவர்கள் உறுதி செய்துள்ளார்கள்.
விவேகானந்தர் பாறையும், குமரி அம்மன் ஆலயமும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் இந்த பாறையை விவேகானந்தர் தேர்ந்தெடுத்ததாகவும், மேலும் இங்கு அம்மனின் பாதம் இருப்பதாகவும், அது அம்மன் சிவனை நோக்கி தவம் செய்த போது படிந்த பாதம் என்றும் கூறுகிறார்கள்.
மூன்று நாட்கள் இங்கிருந்து தவம் புரிந்துள்ளார். குமரி அம்மனின் அருள் பெற்று இங்கிருந்து அவர் நேராக பயணப்பட்டது சிக்காகோவை நோக்கி.
இந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ஏக்நாத் ரானடே மிக அதிகமான எதிர்ப்புகளையும் ஏளனங்களையும் சந்தித்துள்ளார். மேலும் இதுபோன்ற எதிர்ப்புகள் அத்தனையையும் மீறி ஒரு தேசியமே ஒன்றிணைந்து, ஒரு நபருக்கு ஒரு ரூபாய் என்றளவில் நன்கொடை வழங்கியது விவேகானந்தர் நினைவுச் சின்னம் காட்டுவதற்காகத் தான் இருக்கும்.
விவேகானந்தர் வங்கத்தை சேர்ந்தவர் என்பதால், வங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகமான அளவில் வந்து செல்கிறார்கள்.
சுகமான கடல் காற்றால் சூழ்ந்திருந்தது விவேகானந்தர் பாறை. இவற்றைக் கடந்து நல்ல விசாலமான மண்டபத்தினுள் கம்பீரமாக நின்று கொண்டிருந்த விவேகானந்தரை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம், என் அருகில் இருந்த சிறுவனிடம் அவன் அம்மா கூறினார் 'தம்பி விவேகானந்தர் இங்க வந்து தவம் பண்ணும் போது தாண்டா இறந்து போயிட்டாரு, அதான் அவருக்கு இங்க செல வச்சிருக்காக' என்றார். ஊம் கொட்டி கேட்டுக் கொண்டான் அச்சிறுவன், விவேகானந்தரின் ஆன்மாவும் ஊம் கொட்டி கொண்டே சிரித்திருக்குமென நினைக்கிறன். பின்னே அவருக்கும் டைம் பாஸ் வேணாமா!
விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபத்தில் தியானம் செய்வதற்கு அனுமதி இல்லை. அதற்கென்றே கீழ் தளத்தில் ஒரு தியான மண்டபம் இருகின்றது. தவறாது சென்று வாருங்கள். ரம்யமான இடம். மேலும் இங்கே ஒரு புத்தக நிலையம் உள்ளது, கையடக்க சிறிய சிறிய புத்தகங்கள் உங்களுக்குப் பயன்தரலாம்
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சுற்றிலும் பரந்து ஓய்வில்லாமல் ஓடிவிளையாடிக் கொண்டிருந்த கடலை அங்கும் இங்கும் அலைந்து கொண்டே ரசித்துக் கொண்டிருந்தோம். இங்கிருந்தே சூர்யாஸ்தமணத்தை ரசித்தோம். அதே கல்வி சுற்றுலாவில் கடல் காற்று என்னை தூக்கிச் செல்லப் பார்த்ததை நினைவுபடுத்தி சிலாகித்தான் முத்து. அந்த சூழ்நிலைக்கு அடிமையாகிருந்த மனது மீண்டும் கரைக்குச் செல்ல விரும்பவேயில்லை. மீண்டும் படகு. மீண்டும் குதுகலம். மீண்டும் கரை. மீண்டும் ஏக்கம். இருள் பரவத் தொடங்கியிருந்தது. இருந்தும் நெடுநாள் ஆசை நிறைவேறியதில் மனம் பிரகாசமாக இருந்தது.
தாழ்நிலை நீர்மட்டம் காரணமாக அய்யன் வள்ளுவன் சிலைக்கான படகுப் போக்குவரத்தை தடை செய்திருந்தார்கள். அங்கு செல்ல முடியாதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மேலும் அதிக காற்று, கடல் கொந்தளிப்புகள் இருந்தால் எந்நேரமும் விவேகானந்தர் பாறைக்கான படகுப் போக்குவரத்தும் நிறுத்தபடலாமாம். அதனால் மழைகாலத்தில் குமரிப் பயணத்தை ஒத்தி வைத்துவிடுவது நலம்.
இந்தப் பதிவோடு குமரி பயணத்தை முடித்து விடலாம் என்று நினைத்தேன்... ஆனால்.. மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் தொடரும்... :-)))
படங்கள் : இணையம்