27 May 2013

ஜம்மு - பாகிஸ்தான் எல்லையை நோக்கிய எனது 'பய'ண அனுபவம்


ம்மு ரயில் நிலையத்தை நெருங்க நெருங்க இந்தியாவின் மிக முக்கியமானதொரு பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பே மனதினுள் விவரிக்க இயலா ஒரு உணர்வாய், வார்த்தைகளுக்குள் கொண்டுவர இயலா ஒரு கற்பனையாய் மனதினுள் விரிந்து கொண்டிருந்தது.




புரட்சிப் பதிவரும் எல்லைப் பாதுகாப்புப் படையில் பயிற்சியாலருமாய் பணி புரிந்து கொண்டிருக்கும் நமது சதீஷ் செல்லதுரையிடம் "எனக்கு பார்டர சுத்தி காமிக்க முடியுமா" என்று பேஸ்புக் சாட்டில் விளையாட்டாய் கேட்ட பொழுது மிக சீரியசாய் நிச்சயமாய் சுற்றலாம் என்று கூறி அதற்கான அனுமதிகளையும் விரைந்து பெற்று என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

சென்னையில் இருந்து எப்படி ஜம்மு சென்றேன் என்பதையே தனியொரு பதிவாக எழுதலாம் என்பதால் இப்பொழுது பார்டர் அனுபவங்களை மட்டும் பகிர்கின்றேன்.  

வெள்ளைப் பனி போர்த்திய மலை, மெய்சிலிர்க்க வைக்கும் மிகக் குளிர்ந்த காற்று, சிகப்பு ஸ்வெட்டர் அணிந்து திரியும் வெள்ளை ரோஜாக்கள் ஜம்மு பற்றிய எதிர்பார்ப்பு இப்படியாகத்தான் என் மனதில் பரவி இருந்தது. ஆனால் ஸ்டேசனில் இறங்கிய அடுத்த நொடியே என் அத்தனை கற்பனையும் பணால் ஆகும் என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. 

காரணம் சென்னை ஆவடியைப் போன்ற ரயில் நிலையம், ஏழுமணிக்கே ஆதவன் தனது பணியை செவ்வனே ஆரம்பித்திருந்தான். சூரிய கதிர்களால் அந்த இடமே சற்று மஞ்சள் கலந்த வெளிச்சமாய் தோன்றியது. அவ்வபோது வீசும் லேசானா குளிர்ந்த காற்று மட்டும் சற்றே இதமளித்தது, என்னை அழைத்துச் செல்வதாய் கூறியிருந்த சதீஷ் அண்ணாவிற்காக காத்துக் கொண்டிருந்தேன். 

ஹிந்தி கற்றுக்கொள்ளதது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை இந்தப் பயணம் முழுவதும் உணர்ந்து கொண்டிருந்தேன் இருந்தாலும் மத்யமா, ராஷ்டிரபாசா போன்ற மேற்படிப்புகளில் புலமை பெற்றிருந்ததால் ஜம்மு என்பதை அழகாக எழுத்துக்கூட்டி வாசித்துவிட்டேன்.மேலும் யாரிடமும் வழிகேட்க முடியவில்லை, எங்கு செல்வது அப்படி செல்வது என்றும் தெரியாது காரணம் மேம் இந்தி நகி மாலும் ஹை என்ற அளவில் மட்டுமே மாலும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 

மற்றொரு முக்கியமான விஷயம், ஜம்முவில் வெளிமாநிலத்து சிம் எதுவும்  வேலை செய்யாது. பாதுகாப்பு காரணங்கள் கருதி ஜம்மு எல்லைக்குள் நுழையும் பொழுது சிம்மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். அதனால் சதீஷ் அண்ணனால் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவர் கூறியபடி அங்கிருக்கும் போலீஸ் பூத் அருகில் காத்திருந்தேன், சரியாக ஐந்து நிமிடங்களுக்குள் என்னை அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.

"என்ன தம்பி சவுக்கியமா", சொல்ல மறந்துவிட்டேன் அண்ணன் சதீஷ் அவர்களுக்கும் நெல்லை தான், பார்டரில் இருந்தாலும் நெல்லைத் தமிழ் அப்படியே அவரிடம் இருக்கிறது. என்னை அழைத்து செல்வதற்காக மிலிட்டரி ஜீப் எடுத்து வந்திருதார். 

சதீஷ் அண்ணன் தற்போது காவல் காக்கும் சாம்பா எல்லையை நோக்கி எங்களது பயணம் தொடங்கியது. 

ஜம்முவில் இருந்து சாம்பா சரியாக நாற்பது கி.மீ. இங்கு அதிகமான சுற்றுல்லாவாசிகளைக் காண முடிந்தது. சற்றே வித்தியாசமான கலாச்சாரம். ஜம்மு மாநிலம் வளர்ச்சி அடைவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பது புரிந்தது. தாவி நதி மாவட்டம் முழுவதும் பரவி உள்ளது, தண்ணீர் மிகக் குறைவாக ஓடிக் கொண்டிருக்கும் சற்றே அகலமான நதி. அந்நதி வழியாக பயணித்த சமயம் தாமிரபரணியை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. 

சாம்பா எல்லையானது பஞ்சாப் மாநிலத்திற்கு மிக அருகில் இருக்கும் இந்திய எல்லை. இமாலய மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதி என்று சொல்லலாம், கண்ணுக்கெட்டிய தொலைவில் இருந்து நீளும் இமாலயத்தைக் வெகு அருகில் காண முடிகிறது. சாம்பா செல்லும் சாலையின் இருபுறங்களிலும் கோதுமை பரவிய வயல்வெளிகளும் அவ்வபோது வந்து செல்லும் கிராமங்களும் நம்மூர் வயல்வெளிகளை நினைவுபடுத்தத் தவறவில்லை.  

"மலை, பனி, ஐஸ் காத்து இதெல்லாம் கிடையாதா, அப்போ இதுக்கு பேரு பார்டரே கிடையாது, என்ன ஏமாத்தீட்டீங்க தான" என்றவுடன் என்னை நோக்கி அவர் பார்த்த அந்த பார்வை 'உன்னையெல்லாம் மதிச்சி கூட்டிப் போறேன்பாரு என்ன சொல்லனும்டா' என்ற வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

சாம்பாவில் இருக்கும் எல்லைப் பாதுகாப்பு படை ஹெட்குவாட்டர்ஸ்க்கு முதலில் சென்றோம். மிலிட்டரி பேன்ட் சகிதம் ஆஜானுபாகுவான பல வீரர்களை ஒரே இடத்தில் காண கண் கோடி வேண்டும். அங்கிருந்த இடங்களில் பலரும் ட்ரைனிங் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

" இங்க இருக்க ஒவ்வொரு வீரர் கூட்டத்தையும் கம்பெனின்னு சொல்லுவாங்க, ஒவ்வொரு கம்பெனியும் வருசத்துல ஒன்னரை மாசம் கட்டாயமா டிரெயினிங் எடுத்துக்கணும்.." என்று அவர் காண்பித்த ஒவ்வொரு கம்பெனியையும் வாயைப் பிளந்தவாறு பார்த்துக்கொண்டே நகர்ந்து கொண்டிருந்தேன்.

"தமிழ்நாட்டுல இருந்து எல்லா மாவட்டக்காரங்களும் இங்க இருக்காங்க, நெல்லையில இருந்தே மூணு பேரு இங்க இருக்கோம்" என்று கூறியபடி அவரது நபர்கள் சிலரை அறிமுகம் செய்து வைத்தார். நம்மூறுப் பையன் என்றதும் அவர்களும் உற்சாகமாகி சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.  

சதீஸ் அண்ணன் அவரது ஹெட்குவாட்டர்ஸை சுற்றிக் காட்டிக் கொண்டே அவ்வப்போது பதிவுலகைப் பற்றியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.

"அடுத்த பதிவர் சந்திப்பு எப்போ?, நடத்தினா ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தகவல் சொல்லுங்க, நானும் கலந்துக்க முயற்சி பண்றேன்" 

"இங்க செல்போன் ரேஞ் இருக்கது இல்ல, அதனால பதிவுகளே படிக்க முடியல, இந்நேரம் நம்மாளுங்க எல்லாரும் என்ன மறந்து இருப்பாங்க தானே" என்றபடி பதிவுலகம் பற்றி ஏதாவது பேசிக் கொண்டே வந்தார்.

காலை சாப்பாடு ரொட்டி அல்லது பூரி அதுவும் லிமிடெட், மதிய மற்றும் இரவு சாப்பாடு அன்லிமிடட். காலை உணவை முடித்துவிட்டு அங்கிருந்து ஜீரோ லைன் நோக்கி புறப்பட்டோம்.



ஜீரோ லைன் என்னும் மாயக்கோடு தான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் மிகசரியாக பிரிக்கும் எல்லைக் கோடு. சாம்பா ஹெட்குவாட்டர்சில் இருந்து மிக சரியாக இருபது கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு செல்லும் வழி முழுவதுமே வயல்வெளிகள் தான் என்றாலும் இந்த வயல்வெளிகளுக்கு நடுநடுவே பங்கர் என்று சொல்லப்படும் பதுங்கு குழிகள் காணப்படுகின்றன. சாதாரணமாக பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண ஜன்னல் அல்லது ஒரு அடி உயர மேடு போல் தோன்றும் அந்த இடம் தான் போர்க்கால தாக்குதலின் போதும், வேவுபார்க்கவும்  பயன்படுத்துகிறார்கள் சொல்லிக் கொண்டே ஒரு பங்கரின் அருகில் ஜீப்பை நிறுத்தி என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.   

(இந்திய எல்லைப் பாதுகாப்பு விதிகளின் படி சில மேலதிக தகவல்களை குறிப்பிட வேண்டாம் என்று அண்ணன் கேட்டுக் கொண்டதால் சில தகவல்கள் முழுமையடையாமல் இருக்கும்.)

வயல்வெளிகளில் அறுவடை நடைபெறும் பொழுது விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தாக்குதல்களில் ஈடுபட மாட்டார்களாம், இவை மனிதநேய எல்லை விதிமுறைகளில் ஒன்று.

பின் அங்கிருந்து வாட்சிங் டவர் நோக்கி பயணித்தோம். இந்திய எல்லையில் இருந்து பாகிஸ்தான் எல்லையை வேவுபார்க்க அமைக்கப்பட்ட சற்றே உயரமான டவர். வாட்சிங் டவருக்கும் ஜீரோ லைனுக்கும் இடையில் குறைந்தது 20மீ இடைவெளி இருக்கலாம். சில மீட்டர் இடைவெளியில் பார்டர் முழுவதுமே பல வாட்சிங் டவர் உள்ளன. இங்கிருந்து பாகிஸ்தான் எல்லையை தீவிரமாக கண்காணித்துக் கொண்டே இருப்பது தான் இவர்களது முக்கியமான வேலை.

பாகிஸ்தான் எல்லைப் பாதுகாவலர்களை ரேஞ்சர் என்று அழைகிறார்கள். ரேஞ்சர்கள் ஜீரோ லைன் பக்கம் எவ்வளவு முறை வருகிறார்கள், வந்து என்ன செய்கிறார்கள்,ரேஞ்சரை தவிர வேறு யாரும் வருகிறார்களா, வந்தால் எத்தனை பேர் வருகிறார்கள், வந்து என்ன செய்தார்கள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தகவல் மையத்துக்கு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜீரோலைனை இருக்கும் கல் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதோ, ஏதேனும் ஆக்கிரமிக்கப்படுகிறதா என்பது பற்றிய தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். கண்காணிப்பில் இருக்கும் பொழுது எப்போதும் பன்னிரண்டு கிலோ எடையிலான கவச உடையை அணிந்துகொண்டே இருக்க வேண்டும். அந்தக் கவச உடையை என்னால் தூக்கக் கூட முடியவில்லை. எப்படித்தான் அதை அணிந்து கொண்டு நடக்கிறார்களோ!

"அரசியல்வாதி, தலைவர்களுக்கு எல்லாம் பைபரால செஞ்ச வெயிட்லெஸ் புல்லட்ப்ருப் கொடுத்ருக்காங்க, நாங்க இதத் தான் தூக்கி சுமக்க வேண்டியதா இருக்கு" என்றவரிடம்,

" உங்களுக்கு அத கொடுக்க வேண்டியது தான, உங்களுக்கு தான அது ரொம்ப முக்கியம்" என்று அப்பாவியைக் கேட்டவனிடம்,

" அட போப்பா நீ வேற, இதுலையே பயங்கர ஊழல் பண்றாங்க, புல்லட் எல்லாம் இத ஓட்ட போடுது" என்றார் பயங்கர எரிச்சலுடன். 'என்ன அரசாங்கமோ' என்ற கோபம் மட்டுமே எங்கள் மனதில் மிஞ்சியது. 



இம்பரோவைஸ்ட் எக்ஸ்ப்ளோசிவ் டிவைஸ் எனப்படும் கண்ணிவெடி போன்ற வெடியை ஜீரோ லைன் நடைபாதையில் தீவிரவாதிகள் பாகிஸ்தான் ரேஞ்சர் உதவியுடன் வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள், அது வெடித்து இறந்தவர்களும் ஊனமானவர்களும் பலர் என்ற தகவல் என்னுள் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதை கண்டுபிடிக்க நவீன சாதனங்கள் வந்துவிட்டதாக கூறினார். மேலும் ஒவ்வொரு கம்பெனியிலும் அவ்வகை பாமை வெடித்து செயல் இழக்க வைக்கும் நிபுணர்கள் உண்டு என்ற தகவலையும் சேர்த்துக் கொண்டார்.      

ஆர்மி எனப்படுபவர்கள் போர்க்காலங்களில் மட்டுமே எல்லைப் பக்கம் வருவார்களாம், ஒருவேளை போர் அல்லது திடீர் தாக்குதல் நடப்பின் அந்த முதல் கட்ட தாக்குதலை சமாளிக்க வேண்டியது எல்லைப் பாதுகாப்பு படையினரின் மிக முக்கிய பணியாகும்.

இதற்காக இவர்களிடம் மெசின் கன், AGL எனப்படும் ஆட்டோமேட்டிக் கிரானைட் லாஞ்சர், ராக்கெட் லாஞ்சர் போன்ற ஆயுதங்கள் எப்போதுமே தயார் நிலையில் இருக்கும். 

சில சமயங்களில் ஜீரோ லைன் அருகில் சென்று ரேஞ்சர்களுடன் பேசுவார்களாம், அவர்களும் " யோவ் அண்ணாச்சி எங்கள பார்த்து பயபடாதீரும்யா, எதுக்கு புல்லட் ப்ரூப்ல்லாம் போடுறீங்க, சும்மா எங்கள மாதிரி சாதரணமா வாங்க" என்று கூறும் அளவிற்கு நட்பாய் மிக சகஜமாய்ப் பேசுவார்கள் என்று கூறினார், மேலும் அவர்கள் ஜீரோ லைன் அருகில் வரும்பொழுது பெரும்பாலும் BP அணிந்திருக்க மாட்டார்களாம்.  

ஜீரோலைனை சுற்றி மிக உயரமான புற்கள் அதிகமாய் வளருவது உண்டு, அந்த புற்களையும் இவர்கள் தான் வெட்ட வேண்டுமாம்,"கடைசி மூணு நாளா    புல்லு தான் வெட்டிட்டு இருக்கேன் கையப் பாரு எப்படி காச்சுப் போயி இருக்குன்னு" என்று காட்டியவரின் கை மிக உறுதியாய் இருந்தது.   

இண்டெலிஜெண்ட் பிரிவில் இருந்து தீவிரவாதி உள்நுழையப் போவது  பற்றிய தகவல்வரின் கண்காணிப்பு இன்னும் அதிதீவிரமாய் இருக்கும். அதில் பெரும்பாலும் பால்ஸ் தகவலாகக் கூட இருக்கலாம். மேலும் இரவு நேரத்தில் எல்லையை கவனிக்க NVD எனப்படும் நைட் வீடியோ டிவைஸ் வைத்துள்ளர்கள். எல்லையில் இரவு நேரம் எரியும் விளக்குகள் பகலை விட மிக வெளிச்சயமாய் இருக்கும் என்று அங்கிருந்த விளக்குகளைக் காட்டி கூறினார். 

சாம்பா எல்லையில் சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகள் பூமிக்கடியில் துளை அமைத்து உள்ளே புக முயன்ற இடத்தை சுற்றிக் காட்டினார். அந்த பாதாள வழியை கண்டுபிடித்த விவசாயியைப் பற்றியும் கூறினார்.

அவ்வபோது எங்கிருந்தாவது தோட்டாக்கள் வந்து கொண்டே இருக்கும். எந்த மரத்தில் எந்த புதரில் இருந்து வருகிறது என்றெல்லாம் யோசிக்க கூட நேரம் இருக்காது. திடீர் தாக்குதல்கள் எங்களுக்கு தீபாவளி போன்றது, சில இறப்புகள் தான் எம்முள் அதிக வலியை ஏற்படுத்திவிடும் என்று மிக சாதரணமாய் அவர் கூறிய அந்த நிமிடம் என்னுடலும் ஒரு நிமிடம் அதிர்ந்தது.

ஜீரோ லைனில் இருந்து திரும்பும் பொழுது எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் இருக்கும் அந்த இடத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

இந்த நிமிடம் கமல் எழுதிய விஸ்வரூபம் பட பாடலில் வரும் அந்த வரிகள் தான் நினைவில் வந்தது. 

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான் 
நம்மில் யார் இறந்தாலும் 
ஒரு தாய் அழுவாள் - பாரடா 

முக்கிய குறிப்பு : லேபிளைக் கவனமாய்ப் பாருங்கள். சூட்சுமம் அங்கு தான் ஒளிந்துள்ளது.  

23 comments:

  1. பய ங்கரமான பயணக்கட்டுரை..
    நம் மகிழ்ச்சிக்காக அவர்கள் மகிழ்ச்சியை இழப்பவர்கள்.

    ReplyDelete
  2. 'பய'ண அனுபவம் - பயம் கொள்ளவைத்தது ..!

    ReplyDelete
  3. கண்முன்னே பார்பதுபோல எழுதி உள்ளீர்கள் ... தீவிரவாதி ஊருக்குள்ள வந்துடார்ரே ....

    ReplyDelete
  4. நாங்களும் உங்களுடனே பயணப்பட்டோம்... பகல் இரவு பார்க்காமல் நம்மை பாதுகாப்பவர்களுக்கு சல்யூட்...!

    (லேபில்...?) நன்றியை தொட்டால் புரட்சிப் பதிவரின் தளத்திற்கு செல்கிறது... சதீஷ் செல்லதுரை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    ReplyDelete
  5. ஊழல் இல்லாத துறையே இந்தியாவில் இல்லை என்பது வருந்த வைக்கிறது.

    ReplyDelete
  6. மனசுல கேப்டன் விஜயகாந்த்-ன்னு நெனப்பா..ராஸ்கோல்.

    Great post Seenu.

    ReplyDelete
  7. என்னடா.... முன் அறிவிப்பையே காணோமேன்னு பார்த்தேன்... கேட்ட தகவல்களை வைத்தே சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்! சபாஷ்.

    ReplyDelete
  8. நண்பா சூப்பர்.. உங்கள் லேபிலில் அதை நீக்கி விடலாம்.. இன்றைய பல நடுநிலை நாளேடுகள், பத்திரிகைகள் எல்லாம் இப்படி செவி வழிச்செய்திகளை தான் கட்டுரைகளாக, எக்ஸ்க்ளூசிவாக போடுகின்றன.. மிக மிக நல்ல பதிவு... வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  9. பய( ண) அனுபவம் படித்தோம்.

    ReplyDelete
  10. பயபுள்ள,விட்டா பாகிஸ்தான்ல ரேஞ்சர் வீட்டு பொண்ணை பெண்ணு கேட்டேன்னு அளப்பான் போல...படு பாவி கேட்டத வைச்சே இப்படி அளப்புரானே...உண்மையிலேயே வந்திருந்தா?
    பாதி படிக்கும்போதே ஏன் மனைவி சீனு வந்ததை என்ட்ட ஏன் சொல்லன்னு வேற உள் வீட்டு கலவரம்......நீல்லாம் நல்லா வருவேடா தம்பி......

    உண்மையிலேயே இப்படித்தான் பத்திரிகைகளில் எழுதுறாங்க போல....

    சீனு இன்னும் காலம் இருக்கு இதுக்கு மேலேயும் காஷ்மீர்,சட்டிஷ்கர் என்று பய ணிப்போம்.....

    ReplyDelete
  11. அட பாவி ...! நா ஒன்ன அப்பாவிண்ணுல நெனச்சேன் ....!

    நீ ஏன் அர்ஜூன் சாருக்கு இத பார்வேர்டு பண்ணப்பூடாது ....!

    ReplyDelete
    Replies
    1. பச்ச தண்ணிய குடிச்சுட்டு பால்பாயாசம் குடிச்ச மாதிரி எபெக்ட் குடுக்குரத பாத்துருக்கேன் . ஆனா , பச்சத்தண்ணிய கூட கண்ல பாக்கமா பால் பாயாசம் குடிச்ச எபெக்ட் இப்பத்தான்யா பாக்குறேன் ....!

      நீயெல்லாம் நல்லா வருவ... ரைட்டராவோ , இல்ல டைரக்டராவோ... நல்லா வருவ..!

      Delete
  12. நல்ல கட்டுரை..... கட்டுரை மூலம் நீங்கள் மட்டுமல்ல நாங்களும் கற்பனையாக பயணித்தோம்!

    என்னடா நமக்குத் தெரியாம தில்லியைத் தாண்டி ஜம்மு எப்ப போனார்னு நெனச்சுக்கிட்டே படிச்சேன்! :)

    ReplyDelete
  13. வைச்சான் பாருய்யா ட்விஸ்ட் லேபில்ல.,

    ReplyDelete

  14. ஹா..ஹா... நெனச்சேன் போட்டோ எல்லாம் ஒரிஜினலா இல்லாமல் இருக்கும்போதே....ஆனால் சுவாரஸ்ய நடையால் அப்படியே நானும் பயணித்தேன்

    ReplyDelete
  15. உண்மையிலேயே பார்டருக்கு போய் வந்தது மாதிரி ஒரு உணர்வு! அருமையானா பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  16. உங்கள் கூடவே அழைச்சிட்டு போனது போன்று இருந்துச்சு உங்க எழுத்து பார்டரை தொட்டுட்டு வந்துட்டீங்க சீனு

    ReplyDelete
  17. எங்கள் ப்ளாக் வலையில் எனது பின்னூட்டத்திற்கு ஒரு விளக்கமாக கொடுத்தது
    உங்கள் வலைக்கு என்னைத் தள்ளிச்சென்றது என்றாலது மிகையல்ல.

    சீனு யார் நாம் இதுவரை சந்தித்திருக்கிறோமா இல்லயா என்ற ஐயத்தில் வந்தால் இங்கே
    நண்பேண்டா என்று போர்டு போட்டு வரவேற்கிறீர்கள். ஜில் அப்படின்னு இருந்தது
    ஜிகர்தண்டா குடித்தது போல்.

    அடுத்தாப்போல

    இந்தியா பாகிஸ்தான் எல்லையிலே என்று நீங்கள் கூட்டிச்செல்லுகையிலே ஹார்ட்
    திக் திக் திக் அப்படின்னு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

    சும்மா பயப்படாம வாங்க... அதான் கோட் போட்டு இருக்கீங்கள்லே என்று சொன்னபோதே
    பக் பக் என்று இத்யம் ஒரு செகன்டு நின்னு திரும்பவும்,

    எல்லாம் சரியாத்தானே இருக்கிறது என்று ச்யூர் செய்து கொண்டு

    லப் டப் லப் டப் என்று துடிக்கத் துவங்கிற்று.

    படித்து முடித்தபின்னும் படபடப்பு போகவில்லை.

    அங்கு போனாலுமே பதிவர் கூட்டமா ?

    வேணாம் சாரே.... முதல்லே பத்திரமா திரும்பி வாங்க தம்பி.

    சுப்பு தாத்தா..

    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  18. அருமையாக இருந்தது, நானும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்த அனுபவம் கிடைத்தது.

    ReplyDelete
  19. சேர்ந்தே பயணித்தது போல ஒரு உணர்வு!!!

    ReplyDelete