9 May 2013

சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 2


அத்தியாயம் 1



இந்த இடம், இங்கு நிலவும் சூழ்நிலை, மனிதர்கள் எல்லோரையும் எனக்குப் பிடித்துள்ளது. இத்தனை நாளாய் நான் தேடி அலைந்து கொண்டிருந்த மன அமைதி இங்கு கிடைக்கும் என்பதை பரிபூரணமாய் நம்புகிறேன். எங்கெங்கோ அலைந்தேன், எதையோ தேடினேன், எத்தனையோ சிக்கல்களில் மாட்டியுள்ளேன், காரணம் ஒன்று தான், உங்கள் ரகசியங்களை அறிந்து கொள்வதில் எனக்கிருக்கும் அலாதி ஆர்வம்.  நீங்கள் வாயைத் திறந்து உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டும் என்று அவசியம் இல்லை உங்களை என் வலையில் விழவைத்து எளிதில் உங்கள் ரகசியங்களைக் கண்டுபிடித்து விடுவேன். 

என்னையோ என் உருவத்தையோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள். பேரிளம் கன்னிகளுக்கு எளிதில் என்னை பிடித்துப் போகும், நான் தான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். ஆனால் சமீப காலமாய் ரம்யா என்னுள் சலனங்களை ஏற்படுத்துகிறாள்.    

முகத்தில் தாடி வைத்துக் கொள்வது பிடிக்கும். முரட்டு மீசை வளர்த்து முறுக்கி விடுவது அதைவிடப் பிடிக்கும். காதல் பிடிக்கும், காமம் பிடிக்கும், இந்த வயதில் எத்தனையோ பிடிக்கும், இன்னொன்றும் பிடிக்கும் . அது உங்கள் ரகசியம். இதைக் காரணம் காட்டியே என்னோடு பழகுவதற்கு எல்லாருமே பயபடுகிறார்கள். 'ரகசியம் தின்பவன்' என்று அடைமொழி வைத்து அழைக்கிறார்கள். அந்த அடைமொழி எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஆனால் அவர்களுக்கு, உங்களுக்குப் பிடிக்காது. காரணம் நான் தின்பது உங்களுடைய ரகசியங்களை. 

எந்நேரம் வேண்டுமானாலும் வழிதவறி சென்று விடக் கூடிய காட்டாறாக என்னை நினைக்கிறேன். சில சமயங்களில் என்னுடைய திறமைகளைக் கண்டால் எனக்கே கர்வம் ஏற்படுகிறது. எனக்கான கடிவாளம் எங்குமே இல்லை என்கிற மனபிரமை ஏற்படுகிறது. அதை நினைத்து பயபடுகிறேன். நல்லவேளை இறைவன் அந்தக் கடிவாளத்தை வினோத்தின் கையில் கொடுத்துள்ளான். 

நான் ஒரு ஹேக்கர், உங்கள் பாசையில், நீங்கள் எனக்கு வைத்த அடைமொழி பாசையில் சொல்ல வேண்டுமென்றால் ரகசியம் தின்பவன், பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் ரகசியம் திருடுபவன். 

என்னுடைய மிகப்பெரிய குறை, நான் கண்டுபிடித்த ரகசியங்களை அச்சுபிசகாமல் உங்களிடமே ஒப்பித்து விடுவேன், அதனால் தான் நீங்கள் என்னை கண்டு பயப்படுகிறீர்கள். அவர்கள் என்னை வேலையில் சேர்த்துக் கொள்ள பயபடுகிறார்கள். கொஞ்சம் ஆர்வக் கோளாறு அதிகம் என்று வினோத் சொல்வார். பாலாஜியோ எனக்கு மெச்யுரிட்டி போதாது என்பான். அவனுக்கு என்ன மரியாதை ஆமாம் 'என்பான்'.

அண்ணா நகரில் 'ஈகிள் ஐ' டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை உள்ளது என்று தெரிந்ததுமே அப்ளை செய்துவிட்டேன். இதுநாள் வரை மிகப் பெரிய கம்பெனிகளில் வேலை செய்து பழகிய எனக்கு இது போன்ற டிடெக்டிவ் ஏஜென்சி வேலை சொற்ப வருமானம் தான் தரும் என்றாலும் இதில் இருக்கும் சுவாரசியம் மனித ரகசியங்களைப் படிப்பதில் இருக்கும் சுதந்திரம் வேறு எதிலும் இல்லை என்பது எண் கணிப்பு. 

வினோத்தும் பாலாஜியும் தான் முதலில் என்னை இண்டர்வ்யு செய்தார்கள், முதல் கணிப்பிலேயே கண்டுபிடித்துவிட்டேன் பாலாஜி கொஞ்சம் பயந்த சுபாவம் ஆனால் மிகப் பெரிய புத்திசாலி. காரணம் அவன் என்னைக் கேட்ட கேள்விகள் அப்படி. டிடெக்டிவ் சம்மந்தமாக ஒரு கேள்விகூட கேட்கவில்லை, எல்லாமே தொழிநுட்பம் சம்மந்தமான, பொதுஅறிவு, வாழ்வியல் சம்மந்தமான கேள்விகள்.   

என் ரெஸ்யுமில் வெறும் ஹேக்கர் என்று மட்டும் போட்டிருந்தேன். வினோத் அதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டு, 'அப்படி என்றால் என்ன?' என்றார். சொன்னேன், அதைக் கேட்டதும் மற்றொரு முறை ஏளனமாக சிரித்தார். 

ஒருவன் ஹேக்கராக மாற எவ்வளவு புத்திசாலித்தனம் தேவை, எவ்வளவு வேகமாக சிந்திக்க வேண்டும், லேட்டரல் திங்கிங் எந்த அளவிற்கு வேண்டும்  என்பதெல்லாம் இன்னொரு ஹேக்கருக்கு மட்டுமே தெரியும், மற்றவனைப் பொறுத்தவரையில் நான் ரகசியம் தின்பவன்.  ஹேக்கிங் பற்றி அதில் இருக்கும் சவால் பற்றி வினோதிற்கு எங்கே தெரியப் போகிறது என்பது தான் என்னுடைய கணிப்பு, அப்படியே தெரிந்திருந்தாலும் என்னைப் போன்ற ஹேக்கர் எவனுமே இருக்க முடியாது என்ற கர்வம் எனக்குப் பெருமையே. 

ஏனோ தெரியவில்லை வினோத் சிரித்த அந்த சிரிப்பு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது, எல்லாருக்கும் பிடித்துப் போகும் முகம், பார்த்த நொடியில் நட்பாக வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடிய ஒரு முகம். அதில் ஒரு அன்யோன்யம் இருப்பதை உணர்ந்தேன். இவன் உன்னை வழிநடத்தக் கூடியவன், விட்டுவிடாதே என்று மனம் துடித்துக் கொண்டே இருப்பது போல் உணர்ந்தேன். அவர் ஏன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் என்பதை வினோத் பற்றி முழுவதுமாக அறிந்த போது தான் உணர்ந்தேன்.வினோத் பற்றி எழுதும் பொழுது அந்த சிரிப்பின் காரணம் பற்றி சொல்கிறேன்.

இண்டர்வ்யு முடிந்ததும், பெரிய பாஸ் வரதராஜனிடம் என்னை கூட்டிச் சென்றார்கள், அவர் தான் படியளக்கும் முதலாளியும் கூட. அவரிடம் கூட்டிச் செல்வதற்கு முன்பே என்னைப் பற்றி  அவரிடம் பேசியிருக்கிறார்கள். பாலாஜி கூற்றுப்படி நான் மெச்யுரிடி இல்லாத சின்னப் பையன், வினோத் என்னை வேலைக்கு எடுப்பதில் தவறெதுவும் இல்லை என்று சொல்லி இருக்கிறார் என்பது இரண்டு நாள் முன் வினோத் என்னிடம் சொல்லிய உபதகவல் இது.        

வரதராஜன் பார்பதற்கு கொஞ்சம் முரட்டு ஆசாமி போல் தெரிந்தாலும், வாழ்க்கை கற்றுக் கொடுத்த அனுபவ ரேகைகள் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்த மிகச் சரியான ஆள் என்று காட்டியது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையில்  இருந்து விருப்ப ஓய்வு பெற்று தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். துப்பறிவது விருப்பத் தொழில். வினோத், பாலாஜியின் மீது அதிக நம்பிக்கை உண்டு.      

பாலாஜிக்கு டிடெக்டிவ் வேலையில் முழு ஈடுபாடு இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் வரதராஜன் சாருடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டால் கனகச்சிதமாக இருக்கும். அளவுக்கு அதிகமான புத்திசாலித்தனம் முகத்தில் தெரியும். எனக்கு ஏன் இவனைப் பிடிக்காமல் போனது, பிடிக்காது என்றில்லை ஈகோ என்று சொல்லிக் கொள்ளலாம், என்னை விட புத்திசாலியாக இருப்பதாலா, வினோத், பாலாஜி மீது காட்டும் அதிகமான அக்கரையாலா? இல்லை ரம்யாவுக்கு பாலாஜி மீது ஒரு கண் என்பதாலா? எது எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் கலெக்டர் உத்தியகமோ இல்லை எங்காவது ஒரு உயரதிகாரி பதவியோ கிடைத்து இடத்தைக் காலி செய்துவிடுவான். அவன் லட்சியமே கலெக்டர் ஆவது தானாம். பாக்கெட் மணிக்காத் தான் இங்கு வேலை செய்கிறான்.       

ரம்யா, ஆண்களை தன் வலையில் விழவைப்பது போல் விழவைத்து சாட்சியங்களை சேகரிக்கும் நவநாகரீக டிடெக்டிவ் மங்கை. எவ்வளவு பெரிய அனுமார் பக்தனாக இருந்தாலும் அவனுள் ஒளிந்து இருக்கும் மன்மதனை பேசியே எழுப்பி விடுவாள். எப்போதும் கையில் மூன்று மொபைல் இருக்கும். ஏனோ  இவளது ரகசியங்களைத் தின்று பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. "கொஞ்சம் பெர்ப்யும் ஸ்மெல் அண்ட் மேக்கப் கம்மி பண்ணுனா பாக்றதுக்கு லட்சணமா இருப்பா" என்று வினோத் சொல்வது ரொம்ப சரி.      

நான் வேலையில் சேர்ந்த முதல் நாளே வினோத்தை ஹேக் செய்ய முயன்று தோற்றுப் போனேன். எனக்குத் தெரிந்த எவ்வளவோ வழிமுறைகளக் கையாண்டும் என்னால் ஹேக் செய்ய முடியவில்லை, அந்நேரம் எனக்கு வந்த ஒரு மெயில் தான் என் கர்வம் அழியக் காரணமான முதல் நொடி. "ஹே டுயுட், டோன்ட் பூல் யுவர்செல்ப். பை வினோத்" என்ற வாசகத்துடன் வினோத் எனக்கு ஒரு மெயில் அனுப்பிருந்தார். 

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா, என் மெயில் ஐடியை ஹாக் செய்து அதில் இருந்தே எனக்கு மெயில் அனுப்பிருந்தார் வினோத். உலகத்திலேயே மிகவும் செக்யுர்ட் மெயில் ஐடி என்னுடையது தான் என்பதில் இருந்த என் கர்வமும் அன்றே அழிந்தது. 

வினோத் ஒரு எத்திகல் ஹாக்கர், அப்படி சொல்வது தான் அவருக்கு பிடிக்கும். காரணம் ஹாக்கிங் என்பது ஒரு பாவச்செயல், அதுவே எத்திகல் ஹாக்கிங் என்று சொன்னால் அது புனிதமான செயல். தீவிரவாதிக்கும் ராணுவத்திற்கும் உயிர்க் கொலையில் என்ன வித்தியாசமோ அதே வித்தியாசம் தான் ஹாக்கருக்கும், எத்திகல் ஹாக்கருக்குமான வித்தியாசம்.  

"ஒருத்தனோட ரகசியம் ரொம்ப அவசியமானதா இருந்தா தான் ஆராயப்படணும். பொழுதுபோக்குக்காக முயற்சிகூட பண்ணிப் பார்க்கக் கூடாது" என்பது வினோத்திடம் இருந்து நான் கற்றுக் கொண்ட முதல் பாடம். அதனால்தான் ஹாக்கர் என்று எழுதியிருந்த என் ரெஸ்யும் பார்த்த பொழுது வினோத் அப்படி ஏளனமாகச் சிரித்தார். வினோத் என்னைவிட பல மடங்கு புத்திசாலியான ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாத எத்திகல் ஹாக்கர். 

இங்கு இருக்கும் எல்லோரை விடவும் எனக்கு மிக முக்கியமானவர் வினோத் மட்டுமே. இவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் மிக அதிகம். 

பிடித்த வேலை கிடைத்து விட்டது. வினோத் பாலாஜி அறையிலேயே எனக்கொரு இடமும் கிடைத்துவிட்டது. இந்த இடம், இங்கு நிலவும் சூழ்நிலை, மனிதர்கள் எல்லோரையும் எனக்குப் பிடித்துள்ளது. இத்தனை நாளாய் நான் தேடி அலைந்து கொண்டிருந்த மன அமைதி இங்கு கிடைக்கும் என்பதில் பரிபூரண நம்பிக்கை உள்ளது.

விக்ரம் வேலையில் சேர்ந்த புதிதில் அவன் டைரியில் எழுதி வைத்திருந்த வாக்கியங்களை பின்னொரு நாள் வினோத் திருட்டுத்தனமாக படிக்க நேரிட்ட பொழுது "இதத் தான் பாஸ் எதிர்பார்த்தேன், நீங்க படிக்கணும்ன்னு தான் உங்க கண்ணுல படுற இடத்துலயே அந்த டைரிய வச்சேன், திருட்டு முழிமுழிக்காம தைரியமா படிங்க" என்று சிரித்துக் கொண்டே விக்ரம் சொன்ன பொழுது வினோதிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.     

எப்போதெல்லாம் மனதை திசை திருப்ப வேண்டும் அல்லது அமைதிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம்  அந்த வரிகளை நினைத்துப் பார்ப்பது வினோத்தின் பழக்கம். வாழ்க்கையில் அவனுக்கு மிக மிக பிடித்த வரிகள். ஒரு எழுத்து கூட மறக்காமல் மனதில் பதிய வைத்திருந்தான். 


வரதராஜன் சார் ஏற்பாட்டில் காலையில் எக்மோரில் இருந்து நெல்லை நோக்கி கிளம்பும் குருவாயூர் எக்ஸ்ப்ரசில் அவசர அவசரமாக கிளம்பிவிட்டான். 

பாலாஜி உயிருக்கு போராடிக் கொண்டுள்ளான் என்ற தகவல் அறிந்ததில் இருந்தே அவன் மனம் ஒரு நிலையில் இல்லை, நல்லவேளையாக விக்ரம் இந்நேரம் நெல்லையில் இருக்கிறான். அதை நினைத்து மனதை கொஞ்சம் சமாதானப்படுத்திக் கொண்டாலும் நிலைமையின் தீவிரம், பாலாஜியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை நிம்மதியாய் பயணிக்க விடவில்லை. புத்தகம் படித்துப் பார்த்தான், பாலாஜியுடனான பழைய நினைவுகளை கல்லூரி வாழ்கையை நினைத்துப் பார்த்தான். பாலாஜியை விக்ரம் நட்புடன் பார்க்கத் தொடங்கிய சம்பவங்கள் என்று எது எதையோ சிந்தித்துக் கொண்டே பயணித்துக் கொண்டிருந்தான். எதுவுமே அவனுக்கு நிம்மதியைத் தரவில்லை. 

மனதில் சூழ்ந்து இருந்த இருள், ரயிலையும் சூழத் தொடங்கியிருந்த மாலை நேரம், குருவாயூர் மெதுமெதுவாக நெல்லையை நெருங்கிக் கொண்டிருந்த வேளை.    

முன்பின் அறிமுகமில்லாத ஒரு நம்பரில் இருந்து வந்த அழைப்பு நெடுநேரமாய் அவனது கவனத்தை கலைக்க முற்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அழைப்பு நிற்கப் போகும் கடைசி நொடியில்

" எஸ் வினோத் ஹியர்"

"ஹலோ வினோத், திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பேசுறேன்" அவருடைய குரலே அவர் இன்ஸ்பெக்டராக இருப்பதற்கு தகுதியானவர் என்று சொல்லியது. இருந்தும் அவர் குரலில் இருந்த படபடப்பு வினோத்தை இன்னும் கவலை கொள்ளச் செய்தது.

" சொல்லுங்க கார்த்திக், பாலாஜி உங்கள பத்தி நிறைய சொல்லிருகாறு, இப்போ பாலாஜி எப்படி இருக்காரு , நத்திங் சீரியஸ் ரைட்"

" சம்திங் சீரியஸ் வினோத்... ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருந்த பாலாஜிய காணோம், ஹாஸ்பிடல புல் அலர்ட்ல தான் வச்சிருந்தோம், இருந்தாலும் எப்டி அவர கடத்தினாங்கன்னு தெரியல. விக்ரம்க்கு ட்ரை பண்ணினா அவரு போன் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது, அவருக்கும் என்னாச்சுன்னு தெரியல. சம்திங் ராங்.. வீ ஆர் வெரி ஸ்கார்ட்"




உன்னைத் தொடர்கிறேன்         

26 comments:

  1. hacking ஒரு skill இல்லையோ? எதற்குப் பயன்படுத்துகிறோமோ அந்த எண்ணத்தில் வேண்டுமானால் பாவம் புனிதம் இருக்கலாம் - skillல் பாவம் ஏது புனிதம் ஏது? தீபமும் ஏற்றலாம், ஊரையும் எரிக்கலாம் - தீயில் பாவமுமில்லை, புனிதமும் இல்லை. என்ன சொல்றீங்க?

    கதை நல்லாப் போகுது. சரியான இடத்துல நிறுத்தியிருக்கீங்க.






    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் ஹாக்கிங் ஒரு ஸ்கில் தான் ஸார், இருந்தாலும் எத்திகல் ஹாக்கிங் என்பதை முறைபடுத்தப்பட்ட ஸ்கில் என்று சொல்வாரில்லையா அதனை மனதில் வைத்து ராணுவம் மற்றும் தீவிரவாதத்துடன் ஒப்பிட்டேன். தீயுடன் ஒப்பிடும் பொழுது தீ புனிதமானது ஆனால் அது எரியும் இடத்தைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது இல்லையா அதைத் தான் கருத்தில் கொண்டேன்

      மிக்க நன்றி சார் உங்கள் உற்சாகமான கருத்துரைக்கு

      Delete
  2. டாக்டர் ராஜசேகர் பாணியில் சொல்வதெனின் - இதாண்டா தொடர்கதை.

    மற்றபடி அந்த ரகசியம் தின்பவன் என்கிற சொல்பிரவாகம் - அட்டகாசம்.

    எப்படி ஏற்கனவே எழுதிவைத்து விட்டு இப்போது தொடராக வெளியிடுகிறீர்களா அல்லது தொடராகவே (சென்ற வாரம் ஒரு எபிசொட், இந்த வாரம் ஒரு எபிசொட் என்று) எழுதுகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. //இதாண்டா தொடர்கதை.// மிக உற்சாகமான கருத்துரைக்கு மிக்க நன்றி

      //எப்படி ஏற்கனவே எழுதிவைத்து விட்டு இப்போது தொடராக வெளியிடுகிறீர்களா //

      இன்னும் மொத்தமாக எழுதி வைக்கவில்லை, அவ்வவ்போது எழுதுவதை வெளியிடுகிறேன், ஆனால் மொத்தமாக ஒரு மூன்று அத்யாயங்கள் எழுதிவைத்து எப்போதும் மூன்றை ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம் என்றும்முடிவு செய்துள்ளேன்.. என்றாவது நேரம் கிடைப்பதில் சிக்கல் வந்தால் எழுதிய பாகத்தை தடையில்லாமல் வெளியிடலாம் இல்லையா அதனால் தான்

      Delete
  3. மிகச் சரளமான நடை. ‘ரகசியம் தின்பவன்’ என்கிற வார்த்தைப் பிரயோகம் பிரமாதம்! (இதையே டைட்டிலாக வைத்திருக்கலாமே நீ!) போன வாரம் அடிபட்ட நபர் இந்த வாரம் காணாமப் போயிட்டாருன்னு சுவாரஸ்யத்தக் கூட்டியிருக்கப்பா. இப்டியே கன்டின்யூ பண்ணு. அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வாத்தியாரே

      சுவாரசியம் குறையாமல் கூடியிருக்கிறது என்று அறிந்ததில் மகிழ்ச்சி

      //ரகசியம் தின்பவன்// இனி தலைப்பை மாற்றினால் நன்றாகவா இருக்கும்.

      Delete
  4. ஒரு புதிய பாணியில் எழுதுகிறீர்கள். நிறைய வார்த்தைப் பிரயோகங்கள் கவர்கின்றன.

    ஏளனமாகச் சிரிப்பவர்களைப் பிடிக்குமா? என்ன காரணம்?

    வினோத்தின் பதில் மெயில் : வினோத், பாலாஜி கணேஷ் வசந்த் இன்ஸ்பிரேஷன்?!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டங்களை படிக்கும் பொழுது பொறுப்பு கூடுவது போல் உணர்கிறேன்... இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுத வேண்டும்... உற்சாகமான வாழ்த்துரைக்கு மிக்க நன்றி ஸார்...

      //ஏளனமாகச் சிரிப்பவர்களைப் பிடிக்குமா? என்ன காரணம்?// ஹா ஹா ஹா சில நேரங்களில் சில மனிதர்கள் என்னைப் பார்த்து சிரித்த பொழுது பிடித்துள்ளது... காரணம்... சரியாக சொல்லத் தெரியவில்லை.. :-)

      //கணேஷ் வசந்த் இன்ஸ்பிரேஷன்// நிச்சயமாக சார்.. ஆனால் அவர்களின் பிம்பம் இவர்கள் மேல் விழுந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன்...

      Delete
  5. /// மனித ரகசியங்களைப் படிப்பதில் /// சுதந்திரம் இல்லையென்றாலும் சுவாரஸ்யம் இருக்கும்...

    வினோத் படு கில்லாடி...

    ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. //சுதந்திரம் இல்லையென்றாலும் சுவாரஸ்யம் இருக்கும்... // ஹா ஹா ஹா நிச்சயம் சார்
      ஆவலுடன் நானும்
      நீங்கள் அனைவரும் தொடர்ந்து வர வேண்டும் என்ற ஆவலுடன்....

      Delete
  6. . தீவிரவாதிக்கும் ராணுவத்திற்கும் உயிர்க் கொலையில் என்ன வித்தியாசமோ அதே வித்தியாசம் தான் ஹாக்கருக்கும், எத்திகல் ஹாக்கருக்குமான வித்தியாசம்.

    உற்சாகமான தடையில்லாத நடை....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்மா

      Delete
  7. முதல் அத்தியாயம் இப்போ தான் படித்தேன்.,தொடருக்கான வர்ணனைகள் உறுத்தாமல், படிக்கும் ஆர்வத்தை குறைக்காமல் இருப்பது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோகுல்... தொடர்ந்து தொடருங்கள் :-)

      Delete
  8. சுவாரஸ்யமான எழுத்து நடை.... ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படிக்கும் உணர்வு... இருந்தாலும் பெண் டிடெக்டிவ்வை ஜெய்சங்கர் பட பாணியில் அறிமுகப் படுத்தியது உறுத்தல்.... தொடரவும்.....

    ReplyDelete
  9. "இதத் தான் பாஸ் எதிர்பார்த்தேன், நீங்க படிக்கணும்ன்னு தான் உங்க கண்ணுல படுற இடத்துலயே அந்த டைரிய வச்சேன், திருட்டு முழிமுழிக்காம தைரியமா படிங்க" // சபாஷ். சற்றும் எதிர் பாராமல் வந்தது.

    ரம்யாவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் .

    வாசகர் விருப்பம் : யாரையும் உங்க ஆசான் பாலா மாதிரி கஷ்ட படுத்திடாதிங்க.

    ReplyDelete
  10. இரண்டு தொடரையும் படித்தேன் சீனு....
    சுவாரசியம் எங்கும் குறையவில்லை , என்ன பத்தி பத்தியாக எழுதுவதை தவிர்த்து
    உரையாடல் போலவே இடைவெளி விட்டால் சிறப்பாக இருக்கும் .. முதல் தொடரில் அப்படி இல்லை , இந்த தொடரில் தான் அப்படி இருக்கிறது ... முடிந்தால் மாற்றவும் ...

    ReplyDelete
  11. ரகசியம் தின்பவன் சொல் super seenu

    ReplyDelete
  12. சாரியா.... இப்போதான் வாசிச்சேன்...

    நல்லா போகுது திரில்லர்...

    அப்புறம் ஹேக்கிங் பத்தி நிறைய வார்த்தை சொல்லியிருக்க.. அதனால ஹேக்கிங் பத்தி ஒரு பதிவு போடேன்... ஏதாச்சும் எக்சாம்பிள் வச்சு....ஹி..ஹி..

    ReplyDelete
  13. ஸ்வாரசியமாக இருக்கிறது சீனு...... இப்போது தான் இரண்டு பகுதிகளையும் ஒரு சேரப் படித்தேன்.....

    ஒவ்வொரு பகுதியும் முடிக்கும்போது ஒரு அதிர்ச்சி, சஸ்பென்ஸ் என இண்ட்ரெஸ்டிங் ஆக இருக்கிறது.... தொடர்கிறேன்.

    ReplyDelete
  14. நான் சொல்ல நினைத்ததை ஸ்ரீராம் சொல்லிவிட்டார். முதல் பகுதியிலேயே 'சுஜாதா'வின் சாயல். எனக்கு பொதுவாகவே துப்பறியும் நாவல்கள் பிடிக்காது - குற்றம் புரிய வழிவகைகளை சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று.
    அதனால் இந்தப் பகுதியுடன் நான் எஸ்கேப்!
    மன்னிக்கவும் எனது வெளிப்படையான விமரிசனத்திற்கு.
    பலர் பாராட்டி இருக்கிறார்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. டாப் கியர் ல போகுது வண்டி ....! அடுத்து என்ன திருப்பமோ ..?

    ReplyDelete
  16. nalla poyittu irukku nanba vazhthukkal..eppo ragasiyathai solla poringa..

    ReplyDelete
  17. சுவாரஸ்யமான திருப்பத்துடன் அருமையாக செல்கிறது தொடர்கதை! வார்த்தை பிரயோகங்கள் அருமை! தொடர்கிறேன்!

    ReplyDelete
  18. ஆஹா எப்படி கடத்தி இருப்பார்கள்§ம்ம்ம் தொடரட்டும் .

    ReplyDelete