பதிமூன்றாம் எண்ணைப் பற்றி நான் என்ன எழுத இருக்கிறேன் என்பது கிடக்கட்டும், பதிமூன்றாம் எண்ணை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அமானுஷ்யமாகவா அல்லது அதுவும் ஓர் எண்ணாகவா! அதுவும் ஓர் எண் என்றால் பரவாயில்லை, நல்லது. ஒருவேளை அமானுஷ்யமாக என்றால்? இந்த எண்ணைப் பார்த்த நொடியில் உங்களுக்குள் லேசான குறுகுறுப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அய்யய்யோ பதிமூன்றா? மேற்கொண்டு படிக்கலாமா? படித்து அதுகுறித்து ஏதேனும் பிரளயமாகக் கூறிவிட்டால் என்று எப்போதோ நினைக்கத் தொடங்கி இருப்பீர்கள்.
நீங்கள் மட்டும் இல்லை உலகின் ஒரு பெரும்பாதி பதிமூன்றை கொஞ்சம் எட்டி நின்றே கவனிக்கிறது. குறிப்பாக மேலைநாட்டு கிறிஸ்துவ உலகம். ஜீசஸின் கடைசி விருந்தில் பதிமூன்றாவதாக அழைக்கபட்ட யூதாசை பதிமூன்றின் குறியீடாகக் கவனிக்கிறது அவ்வுலகம். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பதிமூன்று என்ற எண்ணை நினைத்துப் பார்க்கவே பயப்படுகிறார்களாம். பெரும்பான்மையான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பதிமூன்றாவது தளம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே இருந்து வருகிறது. அப்படியில்லை எனில் பன்னிரெண்டைத் தொடர்ந்து 12A என குறிப்பிடுகிறார்களாம்.
பதிமூன்று குறித்து இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அதுதான் உலக வழக்கம் எனினும், பதிமூன்றை அமானுஷ்யத்தின் குறியீடாக, பேய்களின் எண்ணாக குறிப்பிடக் காரணம். இலுமினாட்டிகளின் சதி என்கிறது ஒரு கூட்டம்.
ஒன்றின் மீது எப்போது உங்களுக்கு ஆர்வம் வரும்? யாரேனும் ஒருவர் ஒன்றைச் செய்யாதே எனும்போது? பதிமூன்று குறித்த மர்மமான விதையை என்னுள் யார் ஊன்றியது எனத் தெரியவில்லை, 2012-இன் ஆரம்பித்தில் இருந்து பதிமூன்றின் மீது ஒருவித கடிகாரத்தனமான ஈர்ப்பு. எப்போது மணியைப் பார்த்தாலும் அதில் பதிமூன்று இருக்கும், அல்லது எங்கேனும் ஓர் இடத்தில் பதிமூன்று எழுதியிருக்கும், ஒருகால் மணியைப் பார்க்கும் போது பன்னிரண்டு எனக்காட்டினாலும், நேரம் பதிமூன்றைக் கடக்கும் வரை ஒருவித குறுகுறுப்புடன் அந்த நொடிகளை கவனமாகக் கடந்து கொண்டிருப்பேன். நிச்ச்யமாக இது பதிமூன்று பைத்தியம் தான், இதனைப் போக்க என்னவழி? ஒன்றை எப்போது ஆழமாக நம்ப ஆரம்பிக்கிறோமோ அப்போதே அதனுடன் ஆழமான தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. இப்போதிலிருந்து பதிமூன்று வேண்டாம் என்று நினையுங்கள், அடுத்த கணத்தில் இருந்து பதிமூன்று உங்களைத் துரத்த ஆரம்பித்துவிடும், பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் பார்த்த அந்த தேவதையின் கண்களைப் போல!
பதிமூன்று சரி, இலுமினாட்டிகள் எங்கிருந்து வந்தார்கள்? இலுமினாட்டிகளின் வேலையே உங்களை புனிதத்தின் எதிர்திசையில் ஓடவைத்து உங்களின் ஓட்டத்தின் வேகத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவது என்று கூறப்படுகிறது. அப்படித்தான் பதிமூன்றையும் இலுமினாட்டிகள் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் என்கிறது ஒரு கூட்டம். இருப்பதிலேயே சக்தி வாய்ந்த எண்ணாக இலுமினாட்டிகள் கருதுவது பதிமூன்றைத்தானாம், அதன் சக்தி மற்றவர்களுக்கு புரிந்து அவர்கள் அதனைக் கவர்ந்து விடக்கூடாது என்பதாலேயே அதன் மீது கொஞ்சம் அமானுஷ்யம் பூசி எட்ட நிற்க வைத்துவிட்டார்களாம்.
சரி பதிமூன்றாம் எண் குறித்து அதிகமாகக் கவலை கொள்ளும் நபரா நீங்கள், உங்களுக்காகவே ஒரு ஜென் கதை.
ஒரு ஜென்குரு தன் சீடனிடம் பதிமூன்றாம் எண்ணைக் கைதுசெய்து வா என்று கூறினாராம்
இந்த உலகில் யாராலாவது ஒரு எண்ணைக் கைது செய்ய முடியுமா? குரு என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று சீடன் அங்கேயே நின்று கொண்டிருந்தானாம், காலங்கள் உருண்டோடியது, குருகேட்டதைக் கொடுக்க முடியாத சீடன் என்ன செய்வதெனத் தெரியாமல் எங்கும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தானாம். பொறுமை இழக்கும் போது பதில் கொடுப்பதே ஜென் குருமார்களின் வேலை என்பதால், பொறுமையின் எல்லையில் நின்று கொண்டிருந்த சீடனை நோக்கி "பதிமூன்று உன்னைக் கைதுசெய்துவிட்டது பார்த்தாயா" என்று கூறி அங்கிருந்து நகர்ந்தாராம் அந்த ஜென்குரு.
மேலே கூறிய அந்த ஜென்கதை உங்களுக்குப் புரிந்ததா? இதுவரைக்கும் நான் வாசித்த எந்த ஜென்கதையும் எனக்குப் புரிந்ததில்லை என்பதால், நானே ஒரு ஜென் கதை எழுதிப் பார்த்தேன், அதான் கேட்டேன்.