13 May 2017

நாடோடி எக்ஸ்பிரஸ் - ந்யூயார்க் (எனும்) கனவுதேசம்

'இப்போ போக முடியாது. பயங்கர பனிமூட்டம். ஒருவேள மேல போனாலும் ஒண்ணும் தெரியாது. எதையும் பார்க்க முடியாது. நீங்க போறதே வேஸ்ட். இன்னொரு நாளைக்கு வேணும்ன்னாலும் அனுமதிய மாத்தித்தாறோம். ஆனா பணத்த திரும்பக் கொடுக்க மாட்டோம். யோசிச்சிச் சொல்லுங்க'. 

அந்தக் கட்டிடத்தில் பணிபுரியும் ஊழியரிடம் இருந்து வந்த இந்த மிரட்டலான தகவலை சற்றும் எதிர்பார்க்கவில்லை நாங்கள். மணி மாலை ஐந்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என மிரட்டிக் கொண்டிருந்த மேகங்கள். பயங்கரமான குளிர்வேறு. இணையம் வழியாக முன்பே முன் அனுமதிச்சீட்டு வாங்கியிருந்ததாலும், எங்கள் பயணத்திட்டத்தின் படி இன்றைக்கு இந்த இடத்தைப் பார்த்தே தீர வேண்டும் என்பதாலும் என்ன செய்வதெனத் தெரியாத குழப்பம். பெரிய பெரிய பயணங்களில் இதுபோன்ற குழப்பங்களும் இடையூறுகளும் வருவது சகஜம் தான். ஆனால் ந்யூயார்க் பயணம் ஆரம்பத்தில் இருந்தே குழப்பமான ஒன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. திட்டமிடலில் ஆரம்பித்த குழப்பம் அதனை நிறைவேற்றுவது வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருந்தது என்பது தான் ஆகப்பெரும் சோகம். 

சனிக்கிழமை காலை டேலசில் விமானம். அங்கிருந்து மூன்றரை மணி நேரப்பயணம். நண்பகலில் ந்யூயார்க் விமானநிலையம் என நான்கு நாட்களுக்கான பயணத் திட்டத்துடன் ஆரம்பித்திருந்தோம் இந்தப் பயணத்தை. இந்தியாவைப் பொறுத்தவரை பயணத்திட்டங்களுக்கென பெரிதும் மெனக்கெட வேண்டியதில்லை. ஒரு பயணம் இப்படித்தான் இருக்குமென முன்பே வரையறுத்துவிட முடியும். குறைந்தபட்சம் அதிகபட்ச சிக்கல்களை முன்பே அனுமானித்து அதற்கான ஆயத்தங்ககளைச் செய்துவிட முடியும். அதையும் மீறி ஏதேனும் பிரச்சனை வந்தாலும் 'சரி அடுத்ததடவ பார்த்துக்கலாம்' என மனதை சமாதானம் செய்து கொள்வதற்காவது வாய்ப்பிருக்கிறது. காரணம் இந்தியா நம் தாய்நாடு. 

ஆனால் அமெரிக்கா அப்படியில்லை. ஒரு பயணத்திற்கு முன் பல விஷயங்களைக் கருத்தில் கொள்வது அவசியமாகிறது. முதலில் விடுப்பு கிடைக்க வேண்டும். விமானப் பயணம் என்றால் விமானக் கட்டணம் கையைக் கடிக்கக்கூடாது. தங்கும் அறைகள் - விலைகுறைவாக, தரத்துடன் அதேநேரம் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். இவையனைத்தையும் விட முக்கியமான விஷயம் வானிலை மாற்றம். இரண்டு வாரங்களுக்கு முன்பே தோராயமான வானிலையை அறிவித்துவிடுவர்கள் என்றாலும் துல்லியமான வானிலையை இரண்டு நாட்களுக்கு முன் தான் அறிவிப்பார்கள். காரணம் இங்கே வானிலை மாற்றம் என்பது குழப்பமான ஒன்று. நம்மால் கணிக்கவே முடியாதது. எப்போது பலத்த காற்றடிக்கும், எப்போது பனி பொழியும், எப்போது கடுமையான மழை இருக்கும் என்பதெல்லாம் கேள்விக்குறியே. இந்தக் கேள்விக்குறிகளை மனதில் வைத்தே நம் பயணத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வருடத்தின் பாதிநாள் பனிபொழிவு இருக்குமென்பதால் கோடைக்காலங்களில் தான் தங்கள் பயணத்தை மேற்கொள்வர். ஆனால் அதையும் மீறி வரக்கூடிய வானிலை மாற்றத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. 

மே மாதம் கோடைக்காலம் என்பதால் தான் துணிந்து எங்கள் பயண நாளை மே என்று குறித்தோம். இருந்தும் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் தெரிந்தது எங்கள் பயண நாட்கள் முழுவதும் மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமென. அதிலும் சரியாக நயாகராவில் ஞாயிறு அன்று கடுமையான பனிப்பொழிவு என்று காட்டியது வானிலை அறிக்கை. நாங்கள் குறித்த தினமும் ஞாயிறுவாக இருக்க போட்ட திட்டம் மொத்தத்தையும் அழித்து ஞாயிறில் இருந்த நயாகராவைத் தூக்கிச் செவ்வாயில் போட்டோம். எது எது பார்த்தே தீர வேண்டிய இடங்கள். எது எதை தியாகம் செய்யலாம் என இரண்டடுக்கு திட்டம் ஒன்றைப் போட்டோம். அதே நேரம் இந்தத் திட்டங்களில் ஒரு ராணுவ ஒழுங்கைக் கடைபிடித்தாக வேண்டும். இல்லை என்றால் இத்தனை சவால்களுக்கிடையில் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்ததே வீணாகிவிடும். எத்தனை அலைச்சல் மேற்கொண்டாலும், எவ்வளவு சோர்வானாலும் தூக்கத்தைத் தூர எறிந்தே ஆகவேண்டும். 

கோடைக்காலம் என்றாலும் குளிர் இருந்து கொண்டே இருக்கும். இங்கே மிகப்பெரிய எதிரி காற்று தான். காற்றடிக்கும் போதெல்லாம் குளிரும். பயங்கரமாக நடுங்கும். எத்தனை கனமான ஆடை அணிந்திருந்தாலும் போதாது. நம்மை சோர்வடையச் செய்யும் முதல் எதிரி காற்றும் குளிரும் என்றால் அடுத்த எதிரி சாப்பாடு. வாய்க்கு ருசியாக நன்றாக சாப்பிட்டு வளர்ந்தவர்களுக்கு இங்கே கிடைக்கக்கூடிய பண்ணும் ரொட்டியும் வேகாத சிக்கனும் அடுத்த எதிரி. ஓரளவுக்கு தெம்பு வேண்டும் என்பதால் கிடைத்ததை உண்டே ஆக வேண்டும். இங்கே நிகழும் அத்தனை பயணங்களுக்கும் இதே விதிமுறைகள் தான் என்பதால் இந்த சவால்கள் பழகிவிட்டன. அதையும் மீறி புதிது புதிதாக தோன்றும் சவால்களை, நம் அனுமானத்திலேயே இல்லாத ஒன்றை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அப்படியொரு சவால் தான் இப்போது எங்களுக்கு முன் நின்று கொண்டிருந்தது தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர் என்ற வடிவில்.

தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர்




கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு அடி உயரம். உலகின் மூன்றாவது மிகப்பெரிய கட்டிடம். தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர். செப்டம்பர் பதினொன்று துயர சம்பவம் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட இரட்டைக் கோபுரங்களுக்குப் பதிலாக இந்த ஒற்றைக் கோபுரத்தை எழுப்பியுள்ளார்கள். இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடங்களில் இரண்டு நினைவிடங்களை எழுப்பியுள்ளார்கள். இரண்டும் மிகப்பெரிய மிக ஆழமான குளம் வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத் தாக்குதலின் மூலம் உயிரிழந்தவர்கள் அத்தனை பேரின் பெயரையும் பதித்திருக்கிறார்கள். 9/11 அருங்காட்சியம் புதுபித்தலுக்காக மூடப்பட்டிருப்பதால் அதனைப் பார்வையிட அனுமதியில்லை. யாரும் சொல்லாமலேயே மிகப்பெரிய அமைதியை அங்கிருந்த அத்தனை பேரும் கடைபிடிக்கிறார்கள். பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது தொலைக்காட்சி வழியாகப் பார்த்து மிரண்ட ஓர் இடத்தை இன்றைக்கு அதே இடத்தில் நின்று பார்க்கிறேன் என்பது எத்தனை வியப்பாய் இருக்கிறது. காலம் தன் பக்கங்களை வேகவேகமாக புரட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில் இன்னும் எத்தனை ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. 

புதிதாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டரின் பிரமாண்டத்தைப் பார்க்கும் போது தெரிகிறது இரட்டைக் கோபுரங்கள் இன்னும் எத்தனை பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்று. நகரின் முக்கியமான பகுதியில் இருக்கும் இந்த கட்டிடத்தின் நூற்றி இரண்டாவது தளத்தில் அதாவது ஆயிரத்து எழுநூறு அடி உயரத்தில் இருந்து பார்த்தால் ந்யூயார்க் நகரம் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். நகரின் மிக முக்கியமான சுற்றுல்லாத் தலம் என்பதால் எப்போதும் அதிக கூட்டம் இருக்கும். இணையம் மூலமாக முன்பே அனுமதி பெறுவது நலம் என அறிவுறுத்தப்பட்டிருந்ததால் ஞாயிறு மாலைக்கான அனுமதியைப் பெற்றிருந்தோம். எங்கள் நேரம். வானிலை சதி செய்ததால் ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் கடுமையான பனி மூட்டம் என்ற தகவல் தான் வந்து சேர்ந்தது. 

'ஜீ இப்போ என்ன பண்ணலாம்' கலவரமான முகத்துடன் ரகுதான் அடுத்தகட்ட நகர்வுக்கு ஆயத்தமானார். 

'நாளைக்கு எப்படி இருக்கும்ன்னு கேட்டு பாரு ரகு என்ன சொல்றாங்க பார்க்கலாம்' என்றார் பிரகாஷ். எங்கள் அத்தனை பேர் முகத்திலும் ஒருவித சோகம் பரவிக் கொண்டிருந்தது. அதே நேரம் இங்கு இது இல்லை என்றால் அடுத்து எங்கு எது என்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் உருமாறிக் கொண்டிருந்தன. 

'ஜீ நாளைக்கும் இப்படி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்ன்னு சொல்றாங்க. இப்போ நாம தான் முடிவெடுக்கணும்' என்றார் ரகு. எங்கள் பயணத்தின் தவறவிடக் கூடாத இடம் இது என்பதால் இங்கிருந்து நகர யாருக்கும் மனமில்லை. அதே நேரம் அத்தனை உயரமான இடத்திற்குச் சென்றபின் வெறும் வெள்ளை வெளேர் பனியை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்புவதில் யாருக்கும் உடன்பாடும் இல்லை. இப்போது இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றினால் ஆகும் இழப்பும் அதிகம்.    

'ஜீ மேல போவோம், தெரிஞ்சது தெரியட்டும். அதான் எப்படியும் நாளைக்கு எம்பயர் ஸ்டேட் போறோம் இல்ல, அங்கயும் ஆயிரம் அடிக்கு மேல போவோம். இங்க விட்டத அங்க பார்த்துக்கலாம்' என்றேன். 'ஆனா அங்கயும் இதே மாறி இருந்தா' என்ற கேள்வியும் வந்து விழுந்தது. இப்போ இங்க நாம கட்டிடத்தோட உச்சிக்குப் போறோம் - அத்தனை பெரும் ஒருமனதாக முடிவெடுத்தோம். செப்டம்பர் பதினொன்று என்ற கொடுமையான துயர சம்பவத்திற்குப் பிறகு ந்யூயார்க்கில் இருக்கும் ஒவ்வொரு இடங்களிலும் விமான நிலையங்களில் செய்வதைப் போன்ற கடுமையான பரிசோதனைகளுக்குப் பின்னே உள்ளே அனுமதிக்கின்றனர்.   

சோதனைகள் அனைத்தும் முடிந்து மின்தூக்கியின் அருகில் சென்றோம். அத்தனை பேரின் மனதினுள்ளும் ஒருவித எதிர்பார்ப்பு அதேநேரம் 'எங்க மொக்க வாங்கிருவோமோ' என்கிற கலவர மனநிலை. ஒருவரை ஒருவர் பார்த்து பார்வையிலேயே சமாதானம் செய்துகொண்டோம். நூறாவது தளத்திற்கு அழைத்துச் செல்வதற்கான கதவுகள் திறந்தன. உள்ளே நுழைந்து மின்தூக்கியின் கதவுகள் மூடிய அடுத்தநொடி வேறோர் உலகின் உள் நுழைந்திருந்தோம். மின்தூக்கியின் மூன்று புறங்களிலும் பொருத்தபட்டிருந்த மின் திரைகள் ஒளிர்ந்து காட்சிகள் விரிந்தன. சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்து இப்போது வரைக்கும் படிப்படியாக வளர்ந்த ந்யூயார்க் நகரின் வளர்ச்சிகள் மாற்றங்கள் அந்தத் திரையில் விரிந்து அதேநேரம் மின்தூக்கி ஒவ்வொரு தளமாக மேலே ஏறிக்கொண்டிருந்தது. வெறும் கட்டாந்தரையாக இருந்த பாலை பின்பு சோலையாக மாறி, உயிரனங்கள் தோன்றி நாகரிகம் வளர்ந்து இரண்டாயிரத்து ஒன்றில் இரட்டை கோபுரம் மறைந்து அதற்குப் பின்னான நாட்களில் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்படும் கட்டுமான பணிகளின் வழியாக மேல ஏறி இன்றைய தினத்திற்கு வந்து சேரும்போது நூறாவது தளத்தின் கதவுகள் திறக்கபடுகின்றன. 



அங்கிருந்து நம்மை அழைத்துச்சென்று ஒரு பிரம்மாண்டமான திரையின் முன்னே நிறுத்துகிறார்கள். ந்யூயார்க் நகரின் அழகான பக்கங்கள் காட்சியாக்கப்பட்டு அந்த நகரின் பெருமையை பறைசாற்றிக் காணொளி ஓடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் திரை மெள்ள மேலே எழும்புகிறது. திரை மெள்ள மேல எழும்ப எழும்ப ந்யூயார்க் நகரின் மிகப்பிரம்மாண்டக் காட்சி நம் கண்முன்னே காலடியில் விரிகிறது. அடுக்கடுக்கான உயரஉயரமான கட்டிடங்களும், நதிகளும் என அந்த நகரின் பிரம்மாண்டம் மிகத்துல்லியமாகத் ஒரு கனவு காட்சியாக கண்முன்னே விரிகிறது. அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் அந்த பிரம்மாண்டத்தின் பின் அலைந்து திரிகின்றன. கட்டிடத்தின் நூற்றி இரண்டாவது மாடியில் இருந்து நகரின் அழகை முன்னூத்தி அறுபது கோணத்திலும் பார்க்கும் வசதி செய்துதரப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் போது தான் அண்ணனுக்கு மகள் பிறந்திருப்பதாக அம்மா அழைத்துக் கூறியது மற்றோர் மறக்க முடியாத மகிழ்வான நிகழ்வு. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அங்கிருந்தபின் கீழிறங்கினோம். 

பசி வயிற்றை பிராண்டிக் கொண்டிருந்தது. கூடவே நல்ல குளிர். பரபரப்பான மற்றுமோர் இரவு. என்ன இருந்து என்ன வாய்க்கு ருசியாக சிக்கன் பிரியாணி கிடைத்தும் அதனைச் சாப்பிட முடியாமல் சுமார் மூன்று மணிநேரம் கைகளிலேயே வைத்துத் திரிந்த கதையை அடுத்த பாகத்தில் கூறுகிறேன். அதுவரைக்கும் அதே தான் ஸ்டே ட்யுண்ட்.


- ஊர் சுற்றுவோம்

21 comments:

  1. அடுத்த பகுதி, விஸ்வரூபம் பார்ட் 3 உடன் வெளிவரும் என்று தெரிவித்துக்கொண்டு...

    ReplyDelete
  2. இந்த combo இருந்தா நல்லா இருக்கும்னு நான் பல விஷயங்களை யோசிச்சிருக்கேன். உதாரணத்திற்கு, செல்வராகவன் - கமல் combo போல பல வித்தியாசமான விஷயங்கள் இணைந்தால் அருமையாக இருக்கும்.
    .
    அப்படி நாம் விரும்பும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் ஒரே புள்ளியில் சந்தித்தால் என்ன ஒரு பரவசம் ஏற்படுமோ அந்த நிலைதான் எனக்கு இந்தப் பதிவைப் படிக்கும்போதும் உண்டானது.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கும் சினிமா தானாடே..? பயமோகனும், புஸ்.சோமகிருஷ்ணனும் சேர்ந்தா மாதிரி இருக்குன்னு சொல்ல மாட்டியாக்கும்.?

      Delete
    2. ஹாய் கணேஷ் அண்ணா ஹௌ ஆர் யூ :)

      Delete
    3. வாத்தியாரே நீங்க சொன்னீங்களே அதுவே போதும் :-)

      Delete
  3. அருமை சீனு..
    ரொம்ப செண்டிமெண்ட் வேறு சித்தப்பா என்று அழைக்க ஒரு மகள்..
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்... உங்கள் வாழ்த்துகளுக்கும் சேர்த்து :-)

      Delete
  4. மூணாவது மாடி ஏறினாவே மூ.... வந்திடும் இதுல நூறாவது மாடியா...?

    என்னலே எல்லாரும் மறுக்காவும் பிளாக் எழுத ஆரம்பிச்சுட்டேள்...! அடுத்த போஸ்ட்ல ஆகப்பெரிய ன்னு எதுன்னா வார்த்தையை விட்ட நல்லருக்காது பாத்துக்க...

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஹா... நீயும் ப்ளாக் ஜோதில ஐக்கியமாயிடு ஜீவன். அதுதான் ஆகப்பெரிய சந்தோஷமான விஷயம்.

      Delete
    2. வாசக நெஞ்சங்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி கடந்த ஒரு மாத காலமாக பிளாக்கில் ராவிக் கொண்டிருக்கின்றேன் என்று திமிருடன் சொல்லி ஓடுகிறேன்.

      Delete
    3. தலைவரே அந்த மலைகோட்டை கட்டுரை படிச்சேன்.. கமென்ட் போட்ட ஞாபகம்.. ஆனா அடுத்து ஏதும் எழுதி இருக்கீங்களா? இன்னும் பார்க்கல...

      Delete
  5. எனக்குல்லாம் மூணு மாடிக்கு மேல ஏறினாலே கீழ பாக்க தலை சுத்தும். நூஊஊஊறாவது மாடியா..? யாத்தீ... ரசனையா எழுதியிருக்க. அடுத்த பாகம் இந்த வருஷம் முடியறதுக்குள்ள வந்துரணும்னு பகவானை பிரார்த்திச்சுக்கறேன். ஹி.. ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சீக்கிரம் வரும்ன்னு நம்புவோமாக :-)

      Delete
  6. ஏனப்பா, ந் யூயார்க் - குறியீடோ...?!

    ReplyDelete
    Replies
    1. ந்யு ஆர் நியு ன்னு டாஸ் போட்டு பார்த்து ந்யு ச்சூஸ் பண்ணியாச்சு :-)

      Delete
  7. வெல்கம் வருக :) ரொம்ப நாள் கழிச்சி பிளாக் பக்கம் வந்திருக்கீங்க தொடர்ந்து எழுதுங்க சீனு

    ReplyDelete
  8. ஆமாம் சீனு வெளிநாடுகளை பொறுத்தவரை இந்த work weather இன்னொன்று இருக்கு w :)
    இந்த மூணையும் நம்ப கூடாதென்பார்கள் எந்த நேரமும் கைவிட்டுவிடும் ..நல்லவேளை நீங்க பயணித்த நேரம் காலைவாரவில்லை
    தொடருங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. அந்த மூணாவது என்னென்னு சொல்லவே இல்லையே :-)

      இனி தொடர்ந்து எழுத முடியுதான்னு பார்க்கலாம் :-)

      Delete
    2. ஹாஹா :) என் வாய்லருந்து வராது அதுமட்டும்

      Delete
  9. அருமை! நாங்க 1999 ஆம் ஆண்டு அமெரிக சுற்றுலாவில் ரெட்டை கோபுரத்தின்மேல் ஏறிப்போய் (!) பார்த்திருக்கோம். அடுத்த ரெண்டாம் வருசம் அது காணாமப்போயிருச்சு ...:-(

    ReplyDelete