15 May 2017

நாடோடி எக்ஸ்பிரஸ் - ந்யூயார்க் (எனும்) டாலர் நகரம்

ஒருவேளை முதல் பாகம் இன்னமும் படிக்கவில்லை என்றால் படித்து விடுங்கள். இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை. இதுவொரு தொடர்கதை அல்ல. :-) 

ந்யூயார்க் (எனும்) கனவுதேசம்


***

ந்யூயார்க் டைம்-ஸ்கொயர் அருகில் இருக்கும் போர்ட் அத்தாரிட்டி பேருந்து நிலையம் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பரபரப்பான பேருந்து நிலையம். கிட்டத்தட்ட நம்மூர் சென்ட்ரல் மற்றும் எக்மோர் கலந்த கலவை. இப்படியொரு பரபரப்பான பேருந்து நிலையத்தினுள் இன்னும் சில நிமிடங்களில் தலை தெறிக்க ஓடப்போகிறோம் அதனை ஒட்டுமொத்த பேருந்து நிலையமும் வேடிக்கைப் பார்க்க இருக்கிறது என்பதெல்லாம் நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று. காரணம் எங்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் ஒரேபோல் இருக்கும் இந்தப் பேருந்து நிலையமும் அதன் அமைப்புதான். இன்னும் சில நிமிடங்களில் ந்யூஜெர்சி செல்ல வேண்டிய கடைசிப் பேருந்தைப் பிடித்துவிட வேண்டும் என்கிற பரபரப்பு வேறு. 

முதல்தடவை இந்தப் பேருந்து நிலையத்தினுள் வந்து இறங்கியபோது வழக்கம் போல் தரைத்தளத்தில் இருக்கிறோம் என்றுதான் நினைத்தேன். அடுத்த ரயிலைப் பிடிப்பதற்காக இரண்டு தளங்கள் இறங்கி சாலையை அடைந்த போதுதான் நாங்கள் இருப்பது இரண்டடுக்கு கட்டிடத்தில் அமைந்திருக்கும் பேருந்துநிலையம் என்பதும் நாங்கள் இறங்கியது இரண்டாவது தளத்தில் என்பதும் புரிந்தது. மற்றுமோர் ஆச்சரியமான விஷயம் தரைத்தளத்தில் இருந்து இன்னும் இரண்டு தளங்கள் கீழிறங்கிக் கொண்டிருந்தன என்பது தான். முதல்முறையாக அமெரிக்காவின் பிரம்மாண்டம் மிரட்டியது. அதுவும் பேருந்து நிலையத்தில் இருந்தே. அதற்காக அமெரிக்காவிலும் ந்யூயார்க்கிலும் கருப்புப் பக்கங்கள் இல்லாமல் இல்லை. அதனைப் பின்னொரு சமயம் சொல்கிறேன். 



ந்யூயார்க் ஊர் சுற்றலுக்கான திட்டமிடலில் 'பேருந்து' என எங்குமே நாங்கள் குறித்திருக்கவில்லை. அதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று ந்யூயார்க் மிகவும் பரபரப்பான நகரம் என்பதால் சாலைப்போக்குவரத்து மிகவும் நெரிசல் மிக்க ஒன்றாக இருக்கும் அதனால் தேவையில்லாத நேர விரயமாகும். இரண்டு ந்யூயார்க் முழுமையுமே சப்வே (SUBWAY) எனப்படும் பாதாள ரயில்ப்பாதை வழியாக இணைக்கபட்டிருப்பதால் அதனை உபயோகித்துக் கொள்ளலாம். ரயில் கிடைக்காத இடங்களில் கால் டேக்சி என முடிவு செய்திருந்தோம். ஆனால் விதி வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தது. எந்த பேருந்தை உபயோகிக்கவே போவதில்லை என முடிவு செய்திருந்தோமோ அதே பேருந்தில் தான் எங்கள் நாட்கள் தொடங்கி முடிவடைந்து கொண்டிருந்தன என்பது இப்போது வரைக்கும் எங்கள் திட்டத்தில் இல்லாத ஒன்று. 

***

இந்தியாவாகட்டும் இல்லை அமெரிக்காவாகட்டும் எந்த இடம் என்றாலும் ஊர் சுற்றலுக்கான செலவை விட தங்கும் செலவுதான் மிக அதிகமானதாக இருக்கும். அதனைக் கருத்தில் கொண்டுதான் ந்யூயார்க்கில் விடுதி எடுக்காமல் அதன் பக்கத்து மாநிலமான ந்யுஜெர்சியில் அறை எடுத்திருந்தோம். பக்கத்து மாநிலம் என்றாலும் இருபது மைல் தொலைவு தான் என்பதால் பெரியதூரம் இல்லை. இதற்கு முன் ந்யூயார்க் பயணம் மேற்கொண்டிருந்த அனுபவசாலிகளும் இதையேதான் கூறியிருந்தார்கள். ஆனால் அவர்கள் சொல்லாமல் விட்ட விஷயம் ஒன்றிருக்கிறது. அதைத்தான் விதி என்கிறார்கள் அனுபவித்துப் பார்த்தவர்கள். 

ந்யூயார்க் விமான நிலையம் வந்திறங்கிய போது மணி நண்பகல் பன்னிரண்டு. பயங்கர பசி வேறு. விடுதிக்குச் சென்று எங்கள் வருகையை உறுதிசெய்த பின் ஊர்சுற்றலை ஆரம்பிக்கலாம் என்பதுதான் திட்டம். விமான நிலையத்தின் வெளியே ஒரு பெரிய கூட்டமே கால் டேக்சி பிடிப்பதற்காக வரிசை கட்டி நின்று கொண்டிருந்தது. எங்களுக்கான வாய்ப்பு வந்தபோது நாங்கள் மொத்தம் ஒன்பது பேர் என்பதால் மூன்று கால்டேக்சியாத் தான் தரமுடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள். லாஸ்வேகஸில் அப்படியில்லை. பதினோரு பேருக்குச் சேர்த்து ஒரு பெரிய வேன் கிடைத்தது. ஆனால் ந்யூயார்க் லாஸ்வேகஸ் இல்லையே. இங்கே கால் டேக்ஸி மொத்தமும் மஞ்சள் வண்ணத்தில் உலா வருவதால் எல்லோ டேக்ஸி (yellow taxi) என்கிறார்கள். 

டாக்சியின் உள் ஏறி அமர்ந்த அடுத்தநொடி டாக்சி ஓட்டுநர் எங்களிடம் ஹிந்தியில் பேச ஆரம்பித்தார். இந்தியர்கள் என்றாலே அவர்கள் இந்திக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும் என்கிற சிந்தனை உலகம் எங்கும் ஒரே போல் தான் இருக்கிறது. அது சிறிது எரிச்சலைக் கொடுத்தாலும் வேறுவழியில்லை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டியிருக்கிறது. அவருக்கு வயது அறுபதிற்கு மேல் இருக்க வேண்டும். எப்போதுமே சிரித்திராத உர்ர்ர்ர் இந்திய முகம். இந்தி பேசுபர்கள் என்றாலே இந்தியர்களாகத் தான் இருக்க வேண்டும் என்கிற சிந்தனையும் உலகம் முழுக்க ஒரே போல் தான் இருக்கிறது. ந்யூயார்கில் இருந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட எட்டுமுறை கால் டேக்ஸியில் சென்றோம். அதில் ஒரேயொரு முறை தான் இந்தியர் ஓட்டுனராக வந்தார் மற்ற முறைகள் ஓட்டுனர்களாக வந்த அத்தனை பேருமே பங்களாதேஷிகள். அந்த அனுபவத்தின் மூலம் பார்க்கும் போது இப்போது எங்கள் வாகனத்தை செலுத்துபவர் இந்தியே பேசினாலும் நிச்சயம் பங்களாதேஷியாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவரிடம் பயண கட்டண விபரம் தவிர்த்து மேற்கொண்டு ஒருவார்த்தை கூட பேசமுடியவில்லை என்பதால் உறுதியாக எந்த நாட்டுக்காரர் என்று சொல்லத் தெரியவில்லை. இந்த ஒரு ஓட்டுநரைத் தவிர மற்ற அத்தனைபேரும் அட்டகாசமான அனுபவத்தைக் கொடுத்தார்கள் என்பதால் அதனைப் பின்னொருமுறை கூறுகிறேன். இப்போது இந்த ஓட்டுநர் கொடுத்த அதிர்ச்சியை உங்களிடம் கூறிவிடுகிறேன். 

'எங்க போகணும்' என்று கேட்டவரிடம் எங்கள் விடுதி இருக்கும் முகவரியைக் காட்டிய போது 'என்னது ந்யூஜெர்சியா என ஒரு நிமிடம் மிரண்டு வேக வேகமாக யாரையோத் தொடர்பு கொண்டார். அந்த யாரையோவிடம் பேசி முடித்ததும் ந்யூஜெர்சி பக்கத்து ஸ்டேட். வழில ரெண்டு டோல் வேற இருக்கு அதனால நூத்திப்பத்து டாலர் ஆகும் என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். அதிகபட்சம் நாற்பது டாலர் ஆகலாம் என்று நினைத்திருந்தேன். அவசர அவசரமாக ரகுவிற்கு அழைத்தால் 'ஆமா ஜீ எங்களுக்கும் அதான் சொல்றார். வேற வழியில்ல. பார்த்துக்கலாம்' என்றார். அப்படியென்றால் மூன்று கால்டாக்சிக்கு சேர்த்து முன்னூறு டாலர். டாலசில் இருந்து ந்யூயார்க் சென்று திரும்புவதற்கான விமானக் கட்டணமே நூற்றைம்பது டாலர் தான். 

இது முதல் OMG என்றால் அடுத்தது ந்யூயார்க் சாலைகளின் போக்குவரத்து நெரிசல். சென்னைப் பெருவெள்ளத்தின் போது ஏற்பட்டதே ஒரு சாலை நெரிசல் அதே போல் ஊர்ந்து ஊர்ந்து தவழ்ந்து கொண்டிருந்தன வாகனங்கள். இத்தனைக்கும் எவ்வித குறைபாடுகளும் இல்லாத மிகப்பெரிய சாலைகள். அவற்றால் கூட இப்படி ஒரு நெரிசலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியான உண்மை. இப்படியே ஊர்ந்து ஊர்ந்து விடுதி வந்து சேர்ந்த போது ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. அப்போது எடுத்த முடிவு தான் இனி எக்காரணத்தைக் கொண்டும் கால்டாக்ஸி பிடிக்கப் போவதில்லை எங்கு செல்வதென்றாலும் பஸ் அல்லது ரயில் மட்டும் தான் என்று. அப்புறம் எப்படி எட்டு முறை டாக்சி பயணம் என்ற கேள்விக்கு விடை அனுபவமே மிகச்சிறந்த ஆசான் என்பதே.  

லிங்கன் டனல் 

இங்கே ந்யூயார்க் மற்றும் ந்யூஜெர்சியின் பூகோள அமைப்பைச் சொல்வது அவசியமாகிறது. பொதுவாகவே அமெரிக்காவில் என்ன இருக்கிறதோ இல்லையோ தேவைக்கு அதிகமான நதிகள் இருக்கின்றன. அந்த நதிகளை அவர்கள் முறையாக பராமரிக்கவும் செய்கிறார்கள். ந்யூயார்க் மற்றும் ந்யூஜெர்சி இரண்டையும் ஹட்சன் எனும் மிகப்பெரிய நதி பிரிக்கிறது. 



ஹட்சன் நதிக்கரையில் இருக்கும் இந்த இரண்டு ஊர்களையும் இணைக்கும் விதமாக சுமார் இரண்டரை கி.மீ நீளத்தில் நீருக்கடியில் மூன்று சுரங்கவழிச் சாலைகளைக் கட்டியிருக்கிறார்கள் அதுவும் 193௦-களில். பெயர் லிங்கன் டனல். இதன் வழியாக ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன என்பது மிக முக்கியமான விஷயம். இந்த பாதையை உபயோகிக்க சுங்க வரியாக பதினைந்து டாலர் வசூலிக்கபடுகிறது. இந்த எல்லோ டாக்சிக்காரர்கள் இதன் வழியாக செல்வதற்கான கட்டணமாக முப்பது டாலர்கள் வசூலிக்கிறார்கள். இதுவே பேருந்து என்றால் வெறும் ஐந்து டாலரில் நாங்கள் தங்கியிருக்கும் அறையில் இருந்து போர்ட் அத்தாரிட்டி பேருந்து நிலையம் வரைக்கும் வந்துவிடலாம். ஒன்பது பேருக்கு வெறும் நாற்பத்தைந்து டாலர்கள். நாற்பத்தைந்து எங்கிருக்கிறது இருநூறு முன்னூறு எங்கிருக்கிறது. 

***

அன்றைய தினம் உலக வர்த்தக மைய கட்டிடத்திற்குச் சென்றுவிட்டு அங்கிருந்து 'The Grand Central Station' சென்றிருந்தோம். ந்யூயார்க் நகர மையத்தில் அமைந்திருக்கும் GCT ரயில்நிலையம் உலகிலேயே மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ரயில் நிலையம் என்றாலும் இங்கு நாங்கள் சென்றதற்கான மிக முக்கியமான காரணம் எங்கள் கையில் இருந்த பிரியாணி பொட்டலமே. ந்யூயார்க் வந்துசேர்ந்த முதல்நாள் இரவே 'துளசி' என்கிற இந்திய உணவகத்திற்குச் சென்றிருந்தோம். எத்தனை எதிர்பார்த்தோமோ அவ்வளவு கேவலமாக இருந்தது அந்த உணவகத்தின் சுவை. சிக்கன் பிரியாணி கேட்டால் சிக்கன் பிரியாணி மசாலாவை குழம்பு போல் செய்து உண்டக்கட்டி செய்து வைத்திருந்தார்கள். எங்களுக்காவது பரவாயில்லை ஜெகதீஷ் தட்டில் இருந்த தக்காளி சாதம் தான் பரிதாமாக இருந்தது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இருக்க ரசீதில் இருந்த தொகை மட்டும் தாறுமாறாக எகிறியிருந்தது. 'ஜீ இந்த இந்திக்காரங்க ஹோட்டல்ல சாப்டவே கூடாது' என்றார் பிரகாஷ்.  

அன்றைய மாலை 9/11 நினைவிடம் அருகில் தான் இந்தியன் பிரியாணி பாயின்ட் என்ற கடையைப் பார்த்தோம். நம்மூர்க் கையேந்திபவனைப் போன்ற ரோட்டுக்கடை. பெயர் தான் இந்தியன் பிரியாணி பாயிண்டே தவிர வைத்து நடத்துபவர் பங்களாதேஷி. ஏற்கனவே துளசியை நம்பி ஏமாந்தது போதும் என்று சாம்பிளுக்கு ஒரே ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கி சுவை பார்த்தோம். ஆறு டாலருக்கு மோசமில்லை. நம்பி வாங்கலாம் என்று எங்கள் அனைவருக்கும் மொத்தமாக சொல்ல அவ்வளவு இல்லை என்றும் சிக்கன் ரைஸ் செய்து தருகிறேன் என்றும் கூறினார். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அத்தனை பேருக்கும் பயங்கர பசி. நல்ல குளிர் வேறு. அன்றைய தினம் முழுவதும் நடந்து நடந்து கடுமையான கால்வலி. அருகில் இருந்த இடங்கள் அனைத்தும் திறந்தவெளிகளாக இருக்க அத்தனை குளிரில், கால்வலியில் நடுங்கிக் கொண்டே சாப்பிட யாருக்கும் விருப்பம் இல்லை. அதனால்தான் அங்கிருந்து கிளம்பி Grand Central Station-க்கு சென்றோம். ஆனால் அங்கேயும் விதி வேறுமாதிரி விளையாடியது. பிரியாணியில் இருந்த சூடு கொஞ்சம் கொஞ்சமாக ஆறிக் கொண்டிருந்தது.     

***

ந்யூயார்க் பயணம் குறித்து எழுத ஆரம்பித்தால் அனுமார் வால் போல் நீண்டுகொண்டே செல்கிறது. பயணக் கட்டுரையைப் பொறுத்தவரையில் இதிதை நிச்சயமாக கத்தரித்துத் தூர எறிந்து விடலாம் என்கிற மனநிலைத் தோன்றும். ஆனால் ந்யூயார்க் பயணத்தில் ஒவ்வொரு நிமிடமுமே ஒரு புதிய அனுபவமாகத் தான் இருந்தது. அமெரிக்காவின் பிரம்மாண்டத்தை அனுபவித்ததாகட்டும் இல்லை அதன் பிரம்மாண்டத்தில் சிக்கித் திணறியதாகட்டும் அத்தனையும் அவ்வளவு சுவாரசிய அனுபவங்கள். இத்தனைக்கும் மத்தியில் இப்போ எதை எழுத எதை நிராகரிக்க என்பதுதான்

#கையறுநிலை

- ஊர் சுற்றுவோம்

10 comments:

  1. இங்கே கால் டேக்ஸி மொத்தமும் மஞ்சள் வண்ணத்தில் உலா வருவதால் எல்லோ டேக்ஸி (yellow taxi) என்கிறார்கள். // எல்லோ டேக்ஸி மன்ஹாட்டன் நகரத்திற்குள் பயணிப்பதற்கு. மன்ஹாட்டனுக்கு வெளியே, நியுயார்க்கில் எங்கு செல்வதென்றாலும் ஆப்பிள் க்ரீன் டாக்ஸி கிடைக்கும். குறைந்த தூர சொகுசுப் பயணத்திற்கென 'லிமோஸின்'களும் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ஆவி வேணுங்கறது....

      Delete
  2. ஊர் சுற்றுவோம்

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான தொடக்கம்.

    ReplyDelete
  4. சுவாரஸ்யமா அழைத்து செல்கிறீர்கள் நியூயார்க் நகருள் அனைவரையும் ..
    ஹிந்தி !! இங்க 40 ஆண்டுகளாக வசிக்கும் பல குஜராத்தியருக்கு இன்னும் ஆங்கிலம் எட்டா மொழி ஆனால் பாகிஸ்தானியர் விரைவில் ஆங்கிலம் கற்று விடுவார்கள் ..

    நான் ஒரு குஜராத்தி பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து வந்தோம் என்றேன் அவருக்கு சென்னை தெரில பிறகு வீட்டில் பேசும் மொழி தமிழ் என்றதற்கு ஓ யூ ஆர் from ஸ்ரீலங்கா என்றார் :(
    இங்கேயம் இந்தியன் தாஜ்மஹால் மஹாராஜ்னு பேர் வைத்த உணவகம் இருக்கு எல்லாம் பங்களாதேசியர் நடத்தறது ..
    ஒன் டே ட்ரிப்னா நான் கட்டுசாதம் தான் :)ஆரம்பத்தில் கிண்டலடித்த கணவரும் மகளும் இப்போ பழகிட்டாங்க :)

    நல்லாயிருக்கு அப்படியே எதையும் விடாமல் நிராகரிக்காமல்முழுவதையும் எழுதுங்க சீனு

    ReplyDelete
  5. பயணம் சுவாரஸ்யமாத்தான் போயிட்டிருக்கு. கன்டின்யூ...கன்டின்யூ....

    ReplyDelete
  6. அடடா...துளசி இப்படி பேரைக் கெடுத்துருச்சே......

    நியூஸியில் க்றைஸ்ட்சர்ச் நகரத்துக்கு வாங்க. இங்குள்ள துளசிவிலாஸில் சாப்பாடு நல்லா இருக்கும்!

    நாங்க நுவார்க் விமானநிலையம் போய் இறங்கிட்டு, அங்கே தங்கல். தினமும் ரயில்பிடிச்சு நியூயார்க் வந்து சுத்திட்டுப்போனோம்.

    ReplyDelete
  7. // அனுபவமே மிகச்சிறந்த ஆசான்... // தொடர்கிறேன்...

    ReplyDelete

  8. நீயூஜெர்ஸியில் ஒரு தமிழ் பதிவர் இருப்பதை மறந்துவிட்டீர்களோ? நேரில் பார்க்க முடியுமோ அல்லது முடியாதோ போனிலாவது பேசி இருந்தால் எனக்கு தெரிந்த விபரங்களை கூறி இருப்பேன் அல்லது யாரிடமாவது கேட்டு சொல்லி இருப்பேன் அல்லவா?

    நீயூயார்க்கிலும் மிக சிறந்த நல்ல மனதுடைய ஆல்பிரட் என்ற தமிழ் பதிவர் இருக்கிறாரே அவரையாவது தொடர்பு கொண்டிருக்காலாமே?

    ReplyDelete
  9. சீனு பேக் டு ப்ளாக்! வாங்க வாங்க!அதுவும் நியூயார்க் சுற்றலோடு எங்களையும் கூட்டிட்டுப் போயிட்டீங்க. நாங்களும் உங்களுடன் சுற்றுகிறோம்.

    நாங்க கேட்க நினைத்ததை மதுரைத் தமிழன் கேட்டுபுட்டார்...சீனு..என்னதான் ஹிந்தினாலும்.. ஈஸ்ட் அண்ட் வெஸ்ட் தமிழ்!!! நம்ம நண்பர்கள்தான்.....யெஸ் சொல்ல நினைத்தது மதுரைத் தமிழன் சகோவையும், அல்ஃப்ரெட் சகோவையும்தான்...ஈஸ்ட்

    கலிஃபோர்னியா பக்கம் போனீங்கனா அதாவது மேற்குப் பக்கம் போனீங்கனா...நம்ம விசு இருக்கிறார். சித்ரா இருக்காங்க.

    கீதா

    ReplyDelete