16 May 2017

எழுத்தெனும் நிம்மதி

அன்புள்ள சீனு (Srinivasan Balakrishnan),

வணக்கம்! நலமா?

நாம் சந்தித்துப் பேசி பல நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக நீங்களும் உங்கள் மனைவியும் அமெரிக்கா செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில் அந்த நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தீர்கள். அப்போது பேசினோம்.

தொலைபேசியில் பேசலாம் என்றால்...

எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. நண்பர்களிடம் பேசுவதென்றால், நான் நேரம் காலம் பார்த்துத்தான் பேசுவேன். இரவு எட்டு மணிக்கு மேல், யாரையும் தொலைபேசியில் அழைக்கமாட்டேன், ஒன்பது மணிக்குள் வீட்டில் அடைந்துவிடுவேன். எப்போது தொற்றிக்கொண்ட பழக்கம் என்று தெரியவில்லை.

ஷிப்டில் வேலை செய்யும் நண்பர்கள் நான் அழைக்கும் நேரம் பேசுவதற்கு உகந்த நேரமாக இருக்குமா என்று தெரியாது. அதனால், பெரும்பாலும் பேசுவதைத் தவிர்த்துவிடுவேன். உங்களுக்கே தெரியும், எத்தனை முறை நான் சொல்லியிருக்கிறேன். இப்போது அமெரிக்காவில் வேறு இருக்கிறீர்கள். அதனால், எந்த நேரத்தில் பேசமுடியும் என்று எனக்குத் தெரியாது என்பதால் நான் அழைப்பதில்லை.

நிற்க. இந்தப் பதிவு உங்களுடைய நியூயார்க் பயணத்தைப் பற்றியது. காலையில் நீங்கள் எழுதிய “எதை எழுத, எதை நிராகரிக்க” என்ற வாசகத்தைப் பார்த்ததும், ஏன் இதை ஒரு தொடராக எழுதவேண்டும், ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாகப் படித்தாலும் புரியக்கூடிய வகையில் எழுதலாமே என்று தோன்றியது. அது எனக்கு வகுப்பிற்கான நேரம் என்பதால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. இப்போதுதான் இரண்டாவது பதிவைப் படித்தேன். நான் சொல்ல நினைத்ததுபோலவே இரண்டாம் பாகம் தனியாகப் படித்தாலும் புரியும் வகையில் இருந்தது.

முதல் பதிவு மிக மிக சுவாரசியம். காரணம், தொடங்கிய புள்ளி மிகச் சரியாக அமைந்துவிட்டது. இரட்டை கோபுரத்தைத் தகர்த்த நாளை யாரும் அத்தனை எளிதில் மறக்கமாட்டார்கள். நாம் விரும்பிப் படிக்கும் ஒரு பதிவர், அதிலும் நமக்கு நெருக்கமானவர் அதை எப்படி அணுகியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதில் ஒரு ஆர்வம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் எழுதிய நாடோடிப் பதிவு என்பதாலும் வெகுவாக ஈர்த்தது. அந்தக் கட்டடத்திற்குள் நுழைய முடியாமல் போய்விடுமோ என்ற பதற்றத்தையும் வாசிப்பவர் தலையில் வைத்துவிட்டீர்கள். அதிலும், அந்த நூற்று இருபதாவது மாடிக்குச் சென்றதைக் கூறும் பத்தியும், அதனைத் தொடர்ந்த படமும் உண்மையிலேயே அங்கு அழைத்துச் சென்றது.

இரண்டாம் பதிவு சுவாரஸ்யம்தான் என்றாலும், ஏதோ அவசரம் அவசரமாக எழுதியது போன்ற உணர்வு. அப்படித்தானா? இந்தியர்கள் என்றாலே ‘இந்தி’யர்கள் என்று நினைக்கிறார்களே, அங்குள்ளவர்கள்? பங்களாதேஷிகள் இந்திய உணவகம் என்ற பெயரில் நம்மை ஈர்க்க முயல்கிறார்கள். பல விஷயங்களுக்கு விளக்கங்கள் கொடுத்திருந்தாலும், இதுவரை கடல் கடந்திராத எனக்கு அது அந்நியமாகவே படுகிறது. சரியான திட்டமிடலுடன்தானே சென்றிருப்பீர்கள், இருந்தாலும் ஏன் டாக்சி, பேருந்து போன்ற குழப்பங்கள்? எனினும், அடுத்தடுத்த பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

இன்னும் பேசுவோம்.

***

அன்புள்ள ஸ்கூல் பையன் (அதுதானே உங்கள் பெயர் :-) )

வணக்கம். நன்றாக இருக்கிறீர்களா? அத்தனையும் நேற்று நடந்தது போல் இருக்கிறது. அந்தக் குறைந்த ஒளியில் நடேசன் பார்க் அருகில் நீங்களும் ரக்ஷித்தும் காத்திருந்தீர்கள். நானும் வாத்தியாரும் வந்து சேர்ந்தோம். அதுதான் நம் முதல் சந்திப்பு. ஆனால் பாருங்கள் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்து ஐந்து வருடங்கள் பறந்து விட்டன. இடையில் எத்தனயோ சந்திப்புகள் பயணங்கள் - இவ்வளவு ஏன் - சுருக்கமாகச் சொல்வதென்றால் பெரும்பாலான வார இறுதிகளை ஒன்றாகக் கழித்திருக்கிறோம். அப்படி இருந்த இவனுக்கு என்ன ஆயிற்று? 'ஏன் ஒரு போன் கூட பண்ணல? அமெரிக்கா போனதும் கொம்பு மொளைச்சிருச்சா?' என்று நீங்கள் யோசித்திருக்கலாம். கலாம் தான் :-) கலாமலும் இருக்கலாம் :-) 

உங்களுக்கு மட்டும் இல்லை யாரையுமே நான் தொடர்பு கொள்ளவில்லை. மிஞ்சிப்போனால் ஒரு இரண்டுமுறை உங்களை அழைத்திருப்பேன். ஒன்று எனக்கு கல்யாணம் என்று சொல்வதற்கு. இன்னொன்று கல்யாண விடுப்பு முடிந்து அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டேன் என்று சொல்ல. உங்கள் பிறந்த நாள் தொடங்கி யாருடைய பிறந்த நாளுக்கும் அழைத்து வாழ்த்து கூடச் சொல்லவில்லை. இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது. 

***

2007. அப்போதிருந்துதான் கைபேசி உபயோகிக்க ஆரம்பித்தேன். அம்மாவைப் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் என்னைப் பற்றி குறை கூறுவார்கள். 'என்ன இது உம்புள்ள எப்போ பார்த்தாலும் செல்லும் கையுமா இருக்கான். அதுல அப்டி என்ன தான் பண்ணுவான்' என்று என் காதுபட ஏற்றிவிடுவார்கள். அம்மா எவ்வளவோ கூறிப்பார்த்தும் நான் விடுவதாக இல்லை. கார்த்தியாமாவிடம் இருந்து வாங்கியிருந்த அந்த 1600   - வை நோண்டிக் கொண்டே இருப்பேன். என்னிடம் இருந்து செல்லகூடிய forward message -க்கு என்று ஒரு தனி ரசிகக் கூட்டம் இருந்தது. அண்ணன் வேலைக்குப் போய் booster pack - போட ஆரம்பித்ததில் இருந்து யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பேன். conference call அறிமுகமான புதிது. பெரும்பாலும் நான்கைந்து பேர் சேர்ந்து மொபைலை மொபைல் குட்டிச்சுவர் ஆக்கியிருந்தோம். 'அப்படி அதில என்னதான் இருக்கோ' என்று அம்மா புலம்பாத நாள் இல்லை. வேலைக்குச் செல்லும் வரையில் பேசிக்கொண்டு இருந்தேன் என்றால் வேலைக்குப் போன நேரமும் பேஸ்புக்கும் ஒன்றாக சூடுபிடிக்க 'அந்த விரலும் கண்ணும் என்னத்துக்கு ஆகப்போகதுன்னு தெரியலல' என்பது தான் அதன்பின்னான அம்மாவின் புலம்பலாக இருந்தது. 

இணையமும் வலைப்பூவும் அறிமுகமானதில் இருந்து கணினி ஒன்றே கதி. எந்நேரமும் அதில் தான் இருப்பேன். எதையாவது வாசித்துக் கொண்டோ இல்லை எழுதிகொண்டோ இருப்பேன். பேசுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. நடுவீட்டில் அப்பாவும் அம்மாவும் அண்ணனும் - ஊரில் இருந்து வந்திருக்கும் உறவினர்கள் என யார் பேசிக் கொண்டிருந்தாலும் கவலைப்பட மாட்டேன். என் கதி கணினியே என்று கிடப்பேன். வலைப்பூ ஆரம்பித்த புதிது. எதைப்பார்த்தாலும் எழுத வேண்டும் என்கிற கிறுக்கு. அந்தக் காலகட்டம் தான் என் பேச்சு குறைந்து எழுத்து அதிகமான காலகட்டம். யார் அழைத்தாலும் இரண்டு மூன்று முறைக்குப் பின் தான் அழைத்துப் பேசுவேன். உடனே துண்டித்தும் விடுவேன். இல்லை பேசுபவர்கள் பேச கேட்டுக்கொண்டு மட்டும் இருப்பேன். உங்களுக்கே கூட அந்த அனுபவம் இருக்ககூடும். நான் கணினி அருகில் இருப்பேன். மொபைல் எங்காவது கிடக்கும் பெரும்பாலும் சைலண்டில். எப்போதும் அம்மா திட்டிக்கொண்டே இருப்பார் - உறவினார்களுக்கு போன் பண்ணி பேசு, அட்லீஸ்ட் நான் பேசும் போதாது பேசு. நீ பேசவே மாட்டன்றன்னு எல்லாரும் வருத்தப்படுறாங்க' என்று. 

எப்போது ஆன்சைட் வந்தேனோ அப்போதிருந்து சுத்தம். இருபத்தி நான்கு மணி நேரத்தில் இருபத்து ஐந்து மணி நேரங்களும் வேலையைப் பற்றியே சிந்தித்தாக வேண்டிய கட்டாயம். எழுதுவது சுத்தமாகக் குறைந்து பேசுவது அடியோடு ஒழிந்துவிட்டது. இன்று வரைக்கும் அம்மாவிடம் பேசினால் ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்து இவங்ககிட்ட எல்லாம் பேசியாகணும் என்று உத்தரவிடுகிறார். ஆனால் நான் திருந்துவதாயில்லை. இரண்டு பக்கமும் கடிவாளம் கட்டிய குதிரையாய் / மாடாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலும் அந்த ஓய்விலும் அலுவலக பணியை யோசிக்கத்தான் மனது சொல்கிறது. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆவிக்குத் தெரியும். கிட்டத்தட்ட பத்து கிலோவிற்கு புத்தகங்களை அள்ளி வந்திருக்கிறேன். அதில் ஒன்றைக் கூட முழுதாக முடிக்கவில்லை. ஒரு புத்தகத்தையாவது முடித்துவிட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றும் தோற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்காக என் மீது கழிவிரக்கம் எல்லாம் வேண்டாம். எவ்வளவு சீக்கிரம் இந்த சுழலில் இருந்து வெளிவர முடியுமோ வந்துவிடுவேன் :-) 

நான் பேச ஆரம்பித்தால் எவ்வளவு பேசுவேன் என்று உங்களுக்கே தெரியும். எனக்கு சமமாக வர்ஷனா பேசுவதால் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. எனக்கும் அவளுக்கும் இடையில் ஆரம்பிக்கும் வாக்குவாதம் எங்கோ தொடங்கி எங்கெங்கோ சென்று பல சண்டைகளின் வழியாக புதிதான ஒன்றில் வந்து நிற்கும். அருகில் இருக்கும் மிகப்பெரிய ஆறுதல் :-) 

ந்யூயார்க் பயணக் கட்டுரையைப் பற்றி கேட்டிருந்தீர்கள் இல்லையா? முதலில் உங்களுக்கும் ஆவிக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். ஒரு பதிவை எழுதி முடித்தபின் திருப்தி ஏற்படும் அல்லது ஒருவித ஒவ்வாமை ஏற்படும். முதல் பதிவில் திருப்தியும் இரண்டாவது பதிவில் நான்கூறிய அந்த ஒவ்வாமையும் ஏற்பட்டது உண்மை. ஏதோ ஒன்று குறைவது எனக்கே தெரிந்தது. ஆனாலும் அதில் அதற்கு மேல் நேரம் ஒதுக்க முடியவில்லை. நேரமும் இல்லை. பதிவிட்டு தூங்கியெழும்போதே ஆவி மெசெஜ் செய்திருந்தார். பதிவில் இருந்த குறைகளைக் கூறியிருந்தார். முதல் விமர்சனம். முதல் நிம்மதி. அவர் அந்த நிம்மதியைக் கொடுத்திருக்காவிட்டால் அந்த நாள் முழுக்க குழப்பத்திலேயே கழிந்திருக்கும். 

அடுத்த ஆறுதல் நீங்களும் கூறியிருந்தது. ஆவி என்ன கேட்டாரோ அதையேத்தான் நீங்களும் கேட்டிருக்கிறீர்கள். அவசரவசரமாக எழுதிய பதிவு என்பதை விட கொஞ்சம் அலுப்பில் எழுதிய பதிவு என்பது தான் உண்மை. அலுப்பாக இருந்தால் எழுதாதே உன் அலுப்பு வாசகனையும் ஒட்டிக்கொள்ளும் என்பது தெரிந்தது தான் என்றாலும் எப்படியாவது என்னை என் எழுத்தின் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்கிற வேகத்தில் எழுதிய பதிவு அது. அதனால் கூட கொஞ்சம் வேகவேகமாக இருந்திருக்கக் கூடும் :-) 

இந்த இடைப்பட்ட நாட்களில் எத்தனையோ பதிவுகளை எழுதி எழுதி அழித்திருக்கிறேன். அத்தனையும் அவ்வளவு மொக்கையாக மொண்ணையாக வந்த பதிவுகள். இன்னும் இரண்டு பதிவுகள் அழிக்கவும் மனமில்லாமல் பதிவேற்றவும் மனமில்லாமல் உறங்கின்றன. பட்டி டிங்கரிங் பார்க்க ஒரு சோம்பல். இருந்தும் வெகுநாட்களுக்குப் பின் எப்படியேனும் எழுதிவிட வேண்டும் என்ற உந்துதலில் எழுதுவதால் எழுதியதால் வந்த வினை அந்த இரண்டாம் பதிவு. :-) கொஞ்சம் நேரம் கொடுங்கள் அதையும் திருத்திக் கொள்கிறேன் :-) 

அப்புறம் விரைவில் அழைக்கிறேன். விரைவில் அழைக்கிறேன் என்ற வார்த்தையை வாத்தியாரிடம் கூறி ஒருவாரத்திற்கும் மேல் ஆகிறது என்பது கூடுதல் தகவல். ஆனால் பார்த்தீர்களா எழுதச் சொன்னால் எப்படி எழுதுகிறேன் என்று. ஒருவேளை நான் அழைக்காவிட்டால் அடுத்தமுறையும் கடிதமே எழுதிவிடுங்கள். எழுதப் பிடித்திருக்கிறது. :-)   

எழுதுவோம்...
  

15 May 2017

நாடோடி எக்ஸ்பிரஸ் - ந்யூயார்க் (எனும்) டாலர் நகரம்

ஒருவேளை முதல் பாகம் இன்னமும் படிக்கவில்லை என்றால் படித்து விடுங்கள். இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை. இதுவொரு தொடர்கதை அல்ல. :-) 

ந்யூயார்க் (எனும்) கனவுதேசம்


***

ந்யூயார்க் டைம்-ஸ்கொயர் அருகில் இருக்கும் போர்ட் அத்தாரிட்டி பேருந்து நிலையம் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பரபரப்பான பேருந்து நிலையம். கிட்டத்தட்ட நம்மூர் சென்ட்ரல் மற்றும் எக்மோர் கலந்த கலவை. இப்படியொரு பரபரப்பான பேருந்து நிலையத்தினுள் இன்னும் சில நிமிடங்களில் தலை தெறிக்க ஓடப்போகிறோம் அதனை ஒட்டுமொத்த பேருந்து நிலையமும் வேடிக்கைப் பார்க்க இருக்கிறது என்பதெல்லாம் நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று. காரணம் எங்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் ஒரேபோல் இருக்கும் இந்தப் பேருந்து நிலையமும் அதன் அமைப்புதான். இன்னும் சில நிமிடங்களில் ந்யூஜெர்சி செல்ல வேண்டிய கடைசிப் பேருந்தைப் பிடித்துவிட வேண்டும் என்கிற பரபரப்பு வேறு. 

முதல்தடவை இந்தப் பேருந்து நிலையத்தினுள் வந்து இறங்கியபோது வழக்கம் போல் தரைத்தளத்தில் இருக்கிறோம் என்றுதான் நினைத்தேன். அடுத்த ரயிலைப் பிடிப்பதற்காக இரண்டு தளங்கள் இறங்கி சாலையை அடைந்த போதுதான் நாங்கள் இருப்பது இரண்டடுக்கு கட்டிடத்தில் அமைந்திருக்கும் பேருந்துநிலையம் என்பதும் நாங்கள் இறங்கியது இரண்டாவது தளத்தில் என்பதும் புரிந்தது. மற்றுமோர் ஆச்சரியமான விஷயம் தரைத்தளத்தில் இருந்து இன்னும் இரண்டு தளங்கள் கீழிறங்கிக் கொண்டிருந்தன என்பது தான். முதல்முறையாக அமெரிக்காவின் பிரம்மாண்டம் மிரட்டியது. அதுவும் பேருந்து நிலையத்தில் இருந்தே. அதற்காக அமெரிக்காவிலும் ந்யூயார்க்கிலும் கருப்புப் பக்கங்கள் இல்லாமல் இல்லை. அதனைப் பின்னொரு சமயம் சொல்கிறேன். 



ந்யூயார்க் ஊர் சுற்றலுக்கான திட்டமிடலில் 'பேருந்து' என எங்குமே நாங்கள் குறித்திருக்கவில்லை. அதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று ந்யூயார்க் மிகவும் பரபரப்பான நகரம் என்பதால் சாலைப்போக்குவரத்து மிகவும் நெரிசல் மிக்க ஒன்றாக இருக்கும் அதனால் தேவையில்லாத நேர விரயமாகும். இரண்டு ந்யூயார்க் முழுமையுமே சப்வே (SUBWAY) எனப்படும் பாதாள ரயில்ப்பாதை வழியாக இணைக்கபட்டிருப்பதால் அதனை உபயோகித்துக் கொள்ளலாம். ரயில் கிடைக்காத இடங்களில் கால் டேக்சி என முடிவு செய்திருந்தோம். ஆனால் விதி வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தது. எந்த பேருந்தை உபயோகிக்கவே போவதில்லை என முடிவு செய்திருந்தோமோ அதே பேருந்தில் தான் எங்கள் நாட்கள் தொடங்கி முடிவடைந்து கொண்டிருந்தன என்பது இப்போது வரைக்கும் எங்கள் திட்டத்தில் இல்லாத ஒன்று. 

***

இந்தியாவாகட்டும் இல்லை அமெரிக்காவாகட்டும் எந்த இடம் என்றாலும் ஊர் சுற்றலுக்கான செலவை விட தங்கும் செலவுதான் மிக அதிகமானதாக இருக்கும். அதனைக் கருத்தில் கொண்டுதான் ந்யூயார்க்கில் விடுதி எடுக்காமல் அதன் பக்கத்து மாநிலமான ந்யுஜெர்சியில் அறை எடுத்திருந்தோம். பக்கத்து மாநிலம் என்றாலும் இருபது மைல் தொலைவு தான் என்பதால் பெரியதூரம் இல்லை. இதற்கு முன் ந்யூயார்க் பயணம் மேற்கொண்டிருந்த அனுபவசாலிகளும் இதையேதான் கூறியிருந்தார்கள். ஆனால் அவர்கள் சொல்லாமல் விட்ட விஷயம் ஒன்றிருக்கிறது. அதைத்தான் விதி என்கிறார்கள் அனுபவித்துப் பார்த்தவர்கள். 

ந்யூயார்க் விமான நிலையம் வந்திறங்கிய போது மணி நண்பகல் பன்னிரண்டு. பயங்கர பசி வேறு. விடுதிக்குச் சென்று எங்கள் வருகையை உறுதிசெய்த பின் ஊர்சுற்றலை ஆரம்பிக்கலாம் என்பதுதான் திட்டம். விமான நிலையத்தின் வெளியே ஒரு பெரிய கூட்டமே கால் டேக்சி பிடிப்பதற்காக வரிசை கட்டி நின்று கொண்டிருந்தது. எங்களுக்கான வாய்ப்பு வந்தபோது நாங்கள் மொத்தம் ஒன்பது பேர் என்பதால் மூன்று கால்டேக்சியாத் தான் தரமுடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள். லாஸ்வேகஸில் அப்படியில்லை. பதினோரு பேருக்குச் சேர்த்து ஒரு பெரிய வேன் கிடைத்தது. ஆனால் ந்யூயார்க் லாஸ்வேகஸ் இல்லையே. இங்கே கால் டேக்ஸி மொத்தமும் மஞ்சள் வண்ணத்தில் உலா வருவதால் எல்லோ டேக்ஸி (yellow taxi) என்கிறார்கள். 

டாக்சியின் உள் ஏறி அமர்ந்த அடுத்தநொடி டாக்சி ஓட்டுநர் எங்களிடம் ஹிந்தியில் பேச ஆரம்பித்தார். இந்தியர்கள் என்றாலே அவர்கள் இந்திக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும் என்கிற சிந்தனை உலகம் எங்கும் ஒரே போல் தான் இருக்கிறது. அது சிறிது எரிச்சலைக் கொடுத்தாலும் வேறுவழியில்லை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டியிருக்கிறது. அவருக்கு வயது அறுபதிற்கு மேல் இருக்க வேண்டும். எப்போதுமே சிரித்திராத உர்ர்ர்ர் இந்திய முகம். இந்தி பேசுபர்கள் என்றாலே இந்தியர்களாகத் தான் இருக்க வேண்டும் என்கிற சிந்தனையும் உலகம் முழுக்க ஒரே போல் தான் இருக்கிறது. ந்யூயார்கில் இருந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட எட்டுமுறை கால் டேக்ஸியில் சென்றோம். அதில் ஒரேயொரு முறை தான் இந்தியர் ஓட்டுனராக வந்தார் மற்ற முறைகள் ஓட்டுனர்களாக வந்த அத்தனை பேருமே பங்களாதேஷிகள். அந்த அனுபவத்தின் மூலம் பார்க்கும் போது இப்போது எங்கள் வாகனத்தை செலுத்துபவர் இந்தியே பேசினாலும் நிச்சயம் பங்களாதேஷியாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவரிடம் பயண கட்டண விபரம் தவிர்த்து மேற்கொண்டு ஒருவார்த்தை கூட பேசமுடியவில்லை என்பதால் உறுதியாக எந்த நாட்டுக்காரர் என்று சொல்லத் தெரியவில்லை. இந்த ஒரு ஓட்டுநரைத் தவிர மற்ற அத்தனைபேரும் அட்டகாசமான அனுபவத்தைக் கொடுத்தார்கள் என்பதால் அதனைப் பின்னொருமுறை கூறுகிறேன். இப்போது இந்த ஓட்டுநர் கொடுத்த அதிர்ச்சியை உங்களிடம் கூறிவிடுகிறேன். 

'எங்க போகணும்' என்று கேட்டவரிடம் எங்கள் விடுதி இருக்கும் முகவரியைக் காட்டிய போது 'என்னது ந்யூஜெர்சியா என ஒரு நிமிடம் மிரண்டு வேக வேகமாக யாரையோத் தொடர்பு கொண்டார். அந்த யாரையோவிடம் பேசி முடித்ததும் ந்யூஜெர்சி பக்கத்து ஸ்டேட். வழில ரெண்டு டோல் வேற இருக்கு அதனால நூத்திப்பத்து டாலர் ஆகும் என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். அதிகபட்சம் நாற்பது டாலர் ஆகலாம் என்று நினைத்திருந்தேன். அவசர அவசரமாக ரகுவிற்கு அழைத்தால் 'ஆமா ஜீ எங்களுக்கும் அதான் சொல்றார். வேற வழியில்ல. பார்த்துக்கலாம்' என்றார். அப்படியென்றால் மூன்று கால்டாக்சிக்கு சேர்த்து முன்னூறு டாலர். டாலசில் இருந்து ந்யூயார்க் சென்று திரும்புவதற்கான விமானக் கட்டணமே நூற்றைம்பது டாலர் தான். 

இது முதல் OMG என்றால் அடுத்தது ந்யூயார்க் சாலைகளின் போக்குவரத்து நெரிசல். சென்னைப் பெருவெள்ளத்தின் போது ஏற்பட்டதே ஒரு சாலை நெரிசல் அதே போல் ஊர்ந்து ஊர்ந்து தவழ்ந்து கொண்டிருந்தன வாகனங்கள். இத்தனைக்கும் எவ்வித குறைபாடுகளும் இல்லாத மிகப்பெரிய சாலைகள். அவற்றால் கூட இப்படி ஒரு நெரிசலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியான உண்மை. இப்படியே ஊர்ந்து ஊர்ந்து விடுதி வந்து சேர்ந்த போது ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. அப்போது எடுத்த முடிவு தான் இனி எக்காரணத்தைக் கொண்டும் கால்டாக்ஸி பிடிக்கப் போவதில்லை எங்கு செல்வதென்றாலும் பஸ் அல்லது ரயில் மட்டும் தான் என்று. அப்புறம் எப்படி எட்டு முறை டாக்சி பயணம் என்ற கேள்விக்கு விடை அனுபவமே மிகச்சிறந்த ஆசான் என்பதே.  

லிங்கன் டனல் 

இங்கே ந்யூயார்க் மற்றும் ந்யூஜெர்சியின் பூகோள அமைப்பைச் சொல்வது அவசியமாகிறது. பொதுவாகவே அமெரிக்காவில் என்ன இருக்கிறதோ இல்லையோ தேவைக்கு அதிகமான நதிகள் இருக்கின்றன. அந்த நதிகளை அவர்கள் முறையாக பராமரிக்கவும் செய்கிறார்கள். ந்யூயார்க் மற்றும் ந்யூஜெர்சி இரண்டையும் ஹட்சன் எனும் மிகப்பெரிய நதி பிரிக்கிறது. 



ஹட்சன் நதிக்கரையில் இருக்கும் இந்த இரண்டு ஊர்களையும் இணைக்கும் விதமாக சுமார் இரண்டரை கி.மீ நீளத்தில் நீருக்கடியில் மூன்று சுரங்கவழிச் சாலைகளைக் கட்டியிருக்கிறார்கள் அதுவும் 193௦-களில். பெயர் லிங்கன் டனல். இதன் வழியாக ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன என்பது மிக முக்கியமான விஷயம். இந்த பாதையை உபயோகிக்க சுங்க வரியாக பதினைந்து டாலர் வசூலிக்கபடுகிறது. இந்த எல்லோ டாக்சிக்காரர்கள் இதன் வழியாக செல்வதற்கான கட்டணமாக முப்பது டாலர்கள் வசூலிக்கிறார்கள். இதுவே பேருந்து என்றால் வெறும் ஐந்து டாலரில் நாங்கள் தங்கியிருக்கும் அறையில் இருந்து போர்ட் அத்தாரிட்டி பேருந்து நிலையம் வரைக்கும் வந்துவிடலாம். ஒன்பது பேருக்கு வெறும் நாற்பத்தைந்து டாலர்கள். நாற்பத்தைந்து எங்கிருக்கிறது இருநூறு முன்னூறு எங்கிருக்கிறது. 

***

அன்றைய தினம் உலக வர்த்தக மைய கட்டிடத்திற்குச் சென்றுவிட்டு அங்கிருந்து 'The Grand Central Station' சென்றிருந்தோம். ந்யூயார்க் நகர மையத்தில் அமைந்திருக்கும் GCT ரயில்நிலையம் உலகிலேயே மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ரயில் நிலையம் என்றாலும் இங்கு நாங்கள் சென்றதற்கான மிக முக்கியமான காரணம் எங்கள் கையில் இருந்த பிரியாணி பொட்டலமே. ந்யூயார்க் வந்துசேர்ந்த முதல்நாள் இரவே 'துளசி' என்கிற இந்திய உணவகத்திற்குச் சென்றிருந்தோம். எத்தனை எதிர்பார்த்தோமோ அவ்வளவு கேவலமாக இருந்தது அந்த உணவகத்தின் சுவை. சிக்கன் பிரியாணி கேட்டால் சிக்கன் பிரியாணி மசாலாவை குழம்பு போல் செய்து உண்டக்கட்டி செய்து வைத்திருந்தார்கள். எங்களுக்காவது பரவாயில்லை ஜெகதீஷ் தட்டில் இருந்த தக்காளி சாதம் தான் பரிதாமாக இருந்தது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இருக்க ரசீதில் இருந்த தொகை மட்டும் தாறுமாறாக எகிறியிருந்தது. 'ஜீ இந்த இந்திக்காரங்க ஹோட்டல்ல சாப்டவே கூடாது' என்றார் பிரகாஷ்.  

அன்றைய மாலை 9/11 நினைவிடம் அருகில் தான் இந்தியன் பிரியாணி பாயின்ட் என்ற கடையைப் பார்த்தோம். நம்மூர்க் கையேந்திபவனைப் போன்ற ரோட்டுக்கடை. பெயர் தான் இந்தியன் பிரியாணி பாயிண்டே தவிர வைத்து நடத்துபவர் பங்களாதேஷி. ஏற்கனவே துளசியை நம்பி ஏமாந்தது போதும் என்று சாம்பிளுக்கு ஒரே ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கி சுவை பார்த்தோம். ஆறு டாலருக்கு மோசமில்லை. நம்பி வாங்கலாம் என்று எங்கள் அனைவருக்கும் மொத்தமாக சொல்ல அவ்வளவு இல்லை என்றும் சிக்கன் ரைஸ் செய்து தருகிறேன் என்றும் கூறினார். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அத்தனை பேருக்கும் பயங்கர பசி. நல்ல குளிர் வேறு. அன்றைய தினம் முழுவதும் நடந்து நடந்து கடுமையான கால்வலி. அருகில் இருந்த இடங்கள் அனைத்தும் திறந்தவெளிகளாக இருக்க அத்தனை குளிரில், கால்வலியில் நடுங்கிக் கொண்டே சாப்பிட யாருக்கும் விருப்பம் இல்லை. அதனால்தான் அங்கிருந்து கிளம்பி Grand Central Station-க்கு சென்றோம். ஆனால் அங்கேயும் விதி வேறுமாதிரி விளையாடியது. பிரியாணியில் இருந்த சூடு கொஞ்சம் கொஞ்சமாக ஆறிக் கொண்டிருந்தது.     

***

ந்யூயார்க் பயணம் குறித்து எழுத ஆரம்பித்தால் அனுமார் வால் போல் நீண்டுகொண்டே செல்கிறது. பயணக் கட்டுரையைப் பொறுத்தவரையில் இதிதை நிச்சயமாக கத்தரித்துத் தூர எறிந்து விடலாம் என்கிற மனநிலைத் தோன்றும். ஆனால் ந்யூயார்க் பயணத்தில் ஒவ்வொரு நிமிடமுமே ஒரு புதிய அனுபவமாகத் தான் இருந்தது. அமெரிக்காவின் பிரம்மாண்டத்தை அனுபவித்ததாகட்டும் இல்லை அதன் பிரம்மாண்டத்தில் சிக்கித் திணறியதாகட்டும் அத்தனையும் அவ்வளவு சுவாரசிய அனுபவங்கள். இத்தனைக்கும் மத்தியில் இப்போ எதை எழுத எதை நிராகரிக்க என்பதுதான்

#கையறுநிலை

- ஊர் சுற்றுவோம்

13 May 2017

நாடோடி எக்ஸ்பிரஸ் - ந்யூயார்க் (எனும்) கனவுதேசம்

'இப்போ போக முடியாது. பயங்கர பனிமூட்டம். ஒருவேள மேல போனாலும் ஒண்ணும் தெரியாது. எதையும் பார்க்க முடியாது. நீங்க போறதே வேஸ்ட். இன்னொரு நாளைக்கு வேணும்ன்னாலும் அனுமதிய மாத்தித்தாறோம். ஆனா பணத்த திரும்பக் கொடுக்க மாட்டோம். யோசிச்சிச் சொல்லுங்க'. 

அந்தக் கட்டிடத்தில் பணிபுரியும் ஊழியரிடம் இருந்து வந்த இந்த மிரட்டலான தகவலை சற்றும் எதிர்பார்க்கவில்லை நாங்கள். மணி மாலை ஐந்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என மிரட்டிக் கொண்டிருந்த மேகங்கள். பயங்கரமான குளிர்வேறு. இணையம் வழியாக முன்பே முன் அனுமதிச்சீட்டு வாங்கியிருந்ததாலும், எங்கள் பயணத்திட்டத்தின் படி இன்றைக்கு இந்த இடத்தைப் பார்த்தே தீர வேண்டும் என்பதாலும் என்ன செய்வதெனத் தெரியாத குழப்பம். பெரிய பெரிய பயணங்களில் இதுபோன்ற குழப்பங்களும் இடையூறுகளும் வருவது சகஜம் தான். ஆனால் ந்யூயார்க் பயணம் ஆரம்பத்தில் இருந்தே குழப்பமான ஒன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. திட்டமிடலில் ஆரம்பித்த குழப்பம் அதனை நிறைவேற்றுவது வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருந்தது என்பது தான் ஆகப்பெரும் சோகம். 

சனிக்கிழமை காலை டேலசில் விமானம். அங்கிருந்து மூன்றரை மணி நேரப்பயணம். நண்பகலில் ந்யூயார்க் விமானநிலையம் என நான்கு நாட்களுக்கான பயணத் திட்டத்துடன் ஆரம்பித்திருந்தோம் இந்தப் பயணத்தை. இந்தியாவைப் பொறுத்தவரை பயணத்திட்டங்களுக்கென பெரிதும் மெனக்கெட வேண்டியதில்லை. ஒரு பயணம் இப்படித்தான் இருக்குமென முன்பே வரையறுத்துவிட முடியும். குறைந்தபட்சம் அதிகபட்ச சிக்கல்களை முன்பே அனுமானித்து அதற்கான ஆயத்தங்ககளைச் செய்துவிட முடியும். அதையும் மீறி ஏதேனும் பிரச்சனை வந்தாலும் 'சரி அடுத்ததடவ பார்த்துக்கலாம்' என மனதை சமாதானம் செய்து கொள்வதற்காவது வாய்ப்பிருக்கிறது. காரணம் இந்தியா நம் தாய்நாடு. 

ஆனால் அமெரிக்கா அப்படியில்லை. ஒரு பயணத்திற்கு முன் பல விஷயங்களைக் கருத்தில் கொள்வது அவசியமாகிறது. முதலில் விடுப்பு கிடைக்க வேண்டும். விமானப் பயணம் என்றால் விமானக் கட்டணம் கையைக் கடிக்கக்கூடாது. தங்கும் அறைகள் - விலைகுறைவாக, தரத்துடன் அதேநேரம் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். இவையனைத்தையும் விட முக்கியமான விஷயம் வானிலை மாற்றம். இரண்டு வாரங்களுக்கு முன்பே தோராயமான வானிலையை அறிவித்துவிடுவர்கள் என்றாலும் துல்லியமான வானிலையை இரண்டு நாட்களுக்கு முன் தான் அறிவிப்பார்கள். காரணம் இங்கே வானிலை மாற்றம் என்பது குழப்பமான ஒன்று. நம்மால் கணிக்கவே முடியாதது. எப்போது பலத்த காற்றடிக்கும், எப்போது பனி பொழியும், எப்போது கடுமையான மழை இருக்கும் என்பதெல்லாம் கேள்விக்குறியே. இந்தக் கேள்விக்குறிகளை மனதில் வைத்தே நம் பயணத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வருடத்தின் பாதிநாள் பனிபொழிவு இருக்குமென்பதால் கோடைக்காலங்களில் தான் தங்கள் பயணத்தை மேற்கொள்வர். ஆனால் அதையும் மீறி வரக்கூடிய வானிலை மாற்றத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. 

மே மாதம் கோடைக்காலம் என்பதால் தான் துணிந்து எங்கள் பயண நாளை மே என்று குறித்தோம். இருந்தும் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் தெரிந்தது எங்கள் பயண நாட்கள் முழுவதும் மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமென. அதிலும் சரியாக நயாகராவில் ஞாயிறு அன்று கடுமையான பனிப்பொழிவு என்று காட்டியது வானிலை அறிக்கை. நாங்கள் குறித்த தினமும் ஞாயிறுவாக இருக்க போட்ட திட்டம் மொத்தத்தையும் அழித்து ஞாயிறில் இருந்த நயாகராவைத் தூக்கிச் செவ்வாயில் போட்டோம். எது எது பார்த்தே தீர வேண்டிய இடங்கள். எது எதை தியாகம் செய்யலாம் என இரண்டடுக்கு திட்டம் ஒன்றைப் போட்டோம். அதே நேரம் இந்தத் திட்டங்களில் ஒரு ராணுவ ஒழுங்கைக் கடைபிடித்தாக வேண்டும். இல்லை என்றால் இத்தனை சவால்களுக்கிடையில் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்ததே வீணாகிவிடும். எத்தனை அலைச்சல் மேற்கொண்டாலும், எவ்வளவு சோர்வானாலும் தூக்கத்தைத் தூர எறிந்தே ஆகவேண்டும். 

கோடைக்காலம் என்றாலும் குளிர் இருந்து கொண்டே இருக்கும். இங்கே மிகப்பெரிய எதிரி காற்று தான். காற்றடிக்கும் போதெல்லாம் குளிரும். பயங்கரமாக நடுங்கும். எத்தனை கனமான ஆடை அணிந்திருந்தாலும் போதாது. நம்மை சோர்வடையச் செய்யும் முதல் எதிரி காற்றும் குளிரும் என்றால் அடுத்த எதிரி சாப்பாடு. வாய்க்கு ருசியாக நன்றாக சாப்பிட்டு வளர்ந்தவர்களுக்கு இங்கே கிடைக்கக்கூடிய பண்ணும் ரொட்டியும் வேகாத சிக்கனும் அடுத்த எதிரி. ஓரளவுக்கு தெம்பு வேண்டும் என்பதால் கிடைத்ததை உண்டே ஆக வேண்டும். இங்கே நிகழும் அத்தனை பயணங்களுக்கும் இதே விதிமுறைகள் தான் என்பதால் இந்த சவால்கள் பழகிவிட்டன. அதையும் மீறி புதிது புதிதாக தோன்றும் சவால்களை, நம் அனுமானத்திலேயே இல்லாத ஒன்றை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அப்படியொரு சவால் தான் இப்போது எங்களுக்கு முன் நின்று கொண்டிருந்தது தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர் என்ற வடிவில்.

தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர்




கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு அடி உயரம். உலகின் மூன்றாவது மிகப்பெரிய கட்டிடம். தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர். செப்டம்பர் பதினொன்று துயர சம்பவம் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட இரட்டைக் கோபுரங்களுக்குப் பதிலாக இந்த ஒற்றைக் கோபுரத்தை எழுப்பியுள்ளார்கள். இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடங்களில் இரண்டு நினைவிடங்களை எழுப்பியுள்ளார்கள். இரண்டும் மிகப்பெரிய மிக ஆழமான குளம் வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத் தாக்குதலின் மூலம் உயிரிழந்தவர்கள் அத்தனை பேரின் பெயரையும் பதித்திருக்கிறார்கள். 9/11 அருங்காட்சியம் புதுபித்தலுக்காக மூடப்பட்டிருப்பதால் அதனைப் பார்வையிட அனுமதியில்லை. யாரும் சொல்லாமலேயே மிகப்பெரிய அமைதியை அங்கிருந்த அத்தனை பேரும் கடைபிடிக்கிறார்கள். பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது தொலைக்காட்சி வழியாகப் பார்த்து மிரண்ட ஓர் இடத்தை இன்றைக்கு அதே இடத்தில் நின்று பார்க்கிறேன் என்பது எத்தனை வியப்பாய் இருக்கிறது. காலம் தன் பக்கங்களை வேகவேகமாக புரட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில் இன்னும் எத்தனை ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. 

புதிதாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டரின் பிரமாண்டத்தைப் பார்க்கும் போது தெரிகிறது இரட்டைக் கோபுரங்கள் இன்னும் எத்தனை பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்று. நகரின் முக்கியமான பகுதியில் இருக்கும் இந்த கட்டிடத்தின் நூற்றி இரண்டாவது தளத்தில் அதாவது ஆயிரத்து எழுநூறு அடி உயரத்தில் இருந்து பார்த்தால் ந்யூயார்க் நகரம் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். நகரின் மிக முக்கியமான சுற்றுல்லாத் தலம் என்பதால் எப்போதும் அதிக கூட்டம் இருக்கும். இணையம் மூலமாக முன்பே அனுமதி பெறுவது நலம் என அறிவுறுத்தப்பட்டிருந்ததால் ஞாயிறு மாலைக்கான அனுமதியைப் பெற்றிருந்தோம். எங்கள் நேரம். வானிலை சதி செய்ததால் ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் கடுமையான பனி மூட்டம் என்ற தகவல் தான் வந்து சேர்ந்தது. 

'ஜீ இப்போ என்ன பண்ணலாம்' கலவரமான முகத்துடன் ரகுதான் அடுத்தகட்ட நகர்வுக்கு ஆயத்தமானார். 

'நாளைக்கு எப்படி இருக்கும்ன்னு கேட்டு பாரு ரகு என்ன சொல்றாங்க பார்க்கலாம்' என்றார் பிரகாஷ். எங்கள் அத்தனை பேர் முகத்திலும் ஒருவித சோகம் பரவிக் கொண்டிருந்தது. அதே நேரம் இங்கு இது இல்லை என்றால் அடுத்து எங்கு எது என்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் உருமாறிக் கொண்டிருந்தன. 

'ஜீ நாளைக்கும் இப்படி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்ன்னு சொல்றாங்க. இப்போ நாம தான் முடிவெடுக்கணும்' என்றார் ரகு. எங்கள் பயணத்தின் தவறவிடக் கூடாத இடம் இது என்பதால் இங்கிருந்து நகர யாருக்கும் மனமில்லை. அதே நேரம் அத்தனை உயரமான இடத்திற்குச் சென்றபின் வெறும் வெள்ளை வெளேர் பனியை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்புவதில் யாருக்கும் உடன்பாடும் இல்லை. இப்போது இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றினால் ஆகும் இழப்பும் அதிகம்.    

'ஜீ மேல போவோம், தெரிஞ்சது தெரியட்டும். அதான் எப்படியும் நாளைக்கு எம்பயர் ஸ்டேட் போறோம் இல்ல, அங்கயும் ஆயிரம் அடிக்கு மேல போவோம். இங்க விட்டத அங்க பார்த்துக்கலாம்' என்றேன். 'ஆனா அங்கயும் இதே மாறி இருந்தா' என்ற கேள்வியும் வந்து விழுந்தது. இப்போ இங்க நாம கட்டிடத்தோட உச்சிக்குப் போறோம் - அத்தனை பெரும் ஒருமனதாக முடிவெடுத்தோம். செப்டம்பர் பதினொன்று என்ற கொடுமையான துயர சம்பவத்திற்குப் பிறகு ந்யூயார்க்கில் இருக்கும் ஒவ்வொரு இடங்களிலும் விமான நிலையங்களில் செய்வதைப் போன்ற கடுமையான பரிசோதனைகளுக்குப் பின்னே உள்ளே அனுமதிக்கின்றனர்.   

சோதனைகள் அனைத்தும் முடிந்து மின்தூக்கியின் அருகில் சென்றோம். அத்தனை பேரின் மனதினுள்ளும் ஒருவித எதிர்பார்ப்பு அதேநேரம் 'எங்க மொக்க வாங்கிருவோமோ' என்கிற கலவர மனநிலை. ஒருவரை ஒருவர் பார்த்து பார்வையிலேயே சமாதானம் செய்துகொண்டோம். நூறாவது தளத்திற்கு அழைத்துச் செல்வதற்கான கதவுகள் திறந்தன. உள்ளே நுழைந்து மின்தூக்கியின் கதவுகள் மூடிய அடுத்தநொடி வேறோர் உலகின் உள் நுழைந்திருந்தோம். மின்தூக்கியின் மூன்று புறங்களிலும் பொருத்தபட்டிருந்த மின் திரைகள் ஒளிர்ந்து காட்சிகள் விரிந்தன. சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்து இப்போது வரைக்கும் படிப்படியாக வளர்ந்த ந்யூயார்க் நகரின் வளர்ச்சிகள் மாற்றங்கள் அந்தத் திரையில் விரிந்து அதேநேரம் மின்தூக்கி ஒவ்வொரு தளமாக மேலே ஏறிக்கொண்டிருந்தது. வெறும் கட்டாந்தரையாக இருந்த பாலை பின்பு சோலையாக மாறி, உயிரனங்கள் தோன்றி நாகரிகம் வளர்ந்து இரண்டாயிரத்து ஒன்றில் இரட்டை கோபுரம் மறைந்து அதற்குப் பின்னான நாட்களில் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்படும் கட்டுமான பணிகளின் வழியாக மேல ஏறி இன்றைய தினத்திற்கு வந்து சேரும்போது நூறாவது தளத்தின் கதவுகள் திறக்கபடுகின்றன. 



அங்கிருந்து நம்மை அழைத்துச்சென்று ஒரு பிரம்மாண்டமான திரையின் முன்னே நிறுத்துகிறார்கள். ந்யூயார்க் நகரின் அழகான பக்கங்கள் காட்சியாக்கப்பட்டு அந்த நகரின் பெருமையை பறைசாற்றிக் காணொளி ஓடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் திரை மெள்ள மேலே எழும்புகிறது. திரை மெள்ள மேல எழும்ப எழும்ப ந்யூயார்க் நகரின் மிகப்பிரம்மாண்டக் காட்சி நம் கண்முன்னே காலடியில் விரிகிறது. அடுக்கடுக்கான உயரஉயரமான கட்டிடங்களும், நதிகளும் என அந்த நகரின் பிரம்மாண்டம் மிகத்துல்லியமாகத் ஒரு கனவு காட்சியாக கண்முன்னே விரிகிறது. அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் அந்த பிரம்மாண்டத்தின் பின் அலைந்து திரிகின்றன. கட்டிடத்தின் நூற்றி இரண்டாவது மாடியில் இருந்து நகரின் அழகை முன்னூத்தி அறுபது கோணத்திலும் பார்க்கும் வசதி செய்துதரப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் போது தான் அண்ணனுக்கு மகள் பிறந்திருப்பதாக அம்மா அழைத்துக் கூறியது மற்றோர் மறக்க முடியாத மகிழ்வான நிகழ்வு. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அங்கிருந்தபின் கீழிறங்கினோம். 

பசி வயிற்றை பிராண்டிக் கொண்டிருந்தது. கூடவே நல்ல குளிர். பரபரப்பான மற்றுமோர் இரவு. என்ன இருந்து என்ன வாய்க்கு ருசியாக சிக்கன் பிரியாணி கிடைத்தும் அதனைச் சாப்பிட முடியாமல் சுமார் மூன்று மணிநேரம் கைகளிலேயே வைத்துத் திரிந்த கதையை அடுத்த பாகத்தில் கூறுகிறேன். அதுவரைக்கும் அதே தான் ஸ்டே ட்யுண்ட்.


- ஊர் சுற்றுவோம்