23 Jun 2015

விடைகொடு என் ஏர்டெல் ஏகாதிபத்தியமே...

ஏர்டெல் மொபைல் மற்றும் இணைய சேவைக்கு என்னவாயிற்று எனத்தெரியவில்லை. கழுதை தேய்ந்த கட்டெறும்பாக தேய்ந்து தேய்ந்து இப்போ கட்டெறும்பு கூட இல்லை அதற்கும் கீழே எங்கோ சென்றுவிட்டது. அழைப்பு வந்தால் கைபேசியை தூக்கிக்கொண்டு அலைவரிசை இருக்கும் இடத்தை தேடி ஓடி ஒரு பிரளயத்தையே நடத்த வேண்டி இருக்கிறது. 

வம்சம் படம் நினைவிருக்கிறதா? படம்வந்து சில வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலும் அந்தப்படத்தில் கிராமத்து மனிதர்கள் சிக்னல் கிடைக்காத கைபேசியை வைத்துகொண்டு என்னபாடு படுகிறார்கள் என்பதை அட்டகாசமாக பகடி செய்திருப்பார்கள். கிட்டத்தட்ட எங்கள் நிலமையும் இப்போது அப்படித்தான் இருக்கிறது. நீங்கள் ஹலோ சொன்னால் ஒன்று ஹ கேட்கும் இல்லை லோ கேட்கும். அப்படியும் இல்லையா தேமே என இணைப்பைத் துண்டித்துவிடும்.  

'சீனு இப்போல்லாம் உன் போன் நாட் ரீச்சபிள்லையே இருக்கு' என யாரேனும் கூறினால் என்னுடைய பதில் ' வீட்டுகுள்ளயும் சிக்னல் கிடைக்காது, ஆபீஸ் உள்ளயும் சிக்னல் இருக்காது'. 'எப்போதும் கோமா நிலையில் இருக்கும் கைபேசியை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது'. 



எங்கிருந்தாலும் சிக்னல் தராத ஒரு நிறுவனத்துடன் தொடர்ந்து இயங்குவதில் சில லாபங்கள் இருக்கத்தான் செய்கிறது. அர்த்தராத்திரியில் வரும் அழைப்புகளுக்கு வழக்கம் போல 'நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்' என்று கூறிவிடும். உறக்கம் தடைபடாது.

கைபேசி சேவையையாவது பொறுத்துக் கொள்ளலாம். இந்த இணைய இணைப்பு இருக்கிறதே இணைய இணைப்பு. இப்போது நினைத்தாலும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. 7.1 MBPS வேகம். 6 ஜிபி டேட்டா, சேவை வரியுடன் சேர்த்து ஆயிரத்து நூறு ரூபாய். சிக்னல் ஒழுங்காக வருகிறதோ இல்லையோ ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து மாதாமாதம் கட்டண தொகைமட்டும் வந்துவிடும். 

ஆவடியில் இருக்கும் போது பிஎஸ்என்எல் உபயோகித்தோம். அரசு இயந்திரத்தில் சொல்லிக்கொள்ளும்படியான உருப்படியான சேவையை வழங்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. பிரச்சனை என்று சொன்னால் போதும் அடுத்த நிமிடம் வீடுதேடி வந்துவிடுவார்கள். எப்போதுமே மட்டுப்படாத வேகம் என ஆவடியில் இருக்கும் வரை இணைய இணைப்பு எவ்வித தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. எப்போது மேடவாக்கம் வந்தோமோ அப்போது தொடங்கியது பிரச்சனை. BSNL, AIRTEL என எல்லோருமே கம்பிவழி சேவைக்கு 'No feasibility' என்று கூறிவிட்டார்கள். 

நண்பர் ஒருவர் ரிலையன்ஸ் நன்றாக இருக்கிறது எனக்கூற அவர் பேச்சைக்கேட்டு ரிலையன்ஸ் டேட்டாகார்ட் வாங்கினால் கூகிள் பக்கத்தை திறப்பதற்குள்ளாகவே அந்த மாதம் பில் வந்துவிட்டது. தொடர்ந்து தெண்டமாக 700 + 700 ரூபாயை அழுதுத்தொலைக்க, இப்படியே போச்சுனா பைசா பெறாதுடா என உடனடியாக ஏர்டெல் சேவைக்கு மாற்றிவிட்டேன்.

ஆரம்பத்தில் கொஞ்சம் பராவாயில்லை. அல்லது ரிலையன்ஸ் ஏற்படுத்திய பாதிப்பா தெரியவில்லை - நன்றாக வேலை செய்வது போல் தோற்றமளித்த ஏர்டெல்லும் நாளாக ஆக பல்லிளிக்கத் தொடங்க மாயா மாயா எல்லாம் சாயா சாயா! கூகிள் என்று தட்டிவிட்டு உடகார்ந்தால் நாளை மாலைக்குள் திறந்துவிடும். இருந்தாலும் பரவாயில்லை பல சமயங்களில் தட்கல் புக் செய்யும் போது மட்டும் ஆபத்பாந்தவனாக காப்பாற்றி இருக்கிறது. அவ்வகையில் நன்றி என் தெய்வமே. 

இப்போதெல்லாம் ஏர்டெல் இணைய இணைப்பு சுத்தமாக வேலை செய்வதில்லை. வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் செய்து புகார் செய்து அலுத்துவிட்டது. பாவம் அவர்களும் என்ன செய்வார்கள். மூன்று நாளைக்கு முன் தற்செயலாக இந்த மாத உபயோகத்தில் எத்தனை MB உபயோகம் செய்திருக்கிறேன் என்று பார்த்தால் பெரிய அதிர்ச்சி. கடந்த இருபது நாட்களில் வெறும் 500 MB மட்டுமே உபயோகித்து இருக்கிறேன். என்ன அநியாயம். மீதம் இருக்கின்ற அடுத்த பத்து நாட்களில் மிஞ்சிப்போனால் 300MB வேண்டுமனால் உபயோகிக்கலாம். மீதி 5 GB கடலில் கரைத்த பெருங்காயமாக காற்றில் கரைய இருக்கிறது. இது இந்த மாதத்திற்கான நிலை. அப்படியென்றால் ஒவ்வொருமாதமும் நான் இழந்த டேட்டாக்களின் நிலை? 

இத்தனைக்கும் நான் அண்ணன் கௌதம் உட்பட மூன்று பேர் இணையத்தை உபயோகிக்கிறோம். வரவர இணைப்பு மிக மோசமாகிப் போனாதால் உபயோகிக்கவே கடுப்பாக இருக்கிறது. சமயங்களில் சுற்றிக் கொண்டே இருக்கும் இணையத்தை பார்த்தால் தலைசுற்றல் வாந்தி மயக்கம் எல்லாம் ஏற்படுகிறது. யார்யாரிடமெல்லாமோ கேட்டுபார்த்துவிட்டேன் மேடவாக்கத்தில் வேறொரு சேவை நிறுவனம் சிக்கவே இல்லை. பலரும் ஆரம்பித்துவிட்டு தலையில் துண்டை போட்டுகொண்டு ஓடிவிட்டதாகக் கேள்விபட்டேன். பதிவர் கார்த்திக் சரவணன் ஒருசமயம் MITS நன்றாக இருக்கிறது எனக்கூற அதனை வாங்கலாமா என யோசித்துக் கொண்டிருந்த அடுத்த மாதத்தில் இப்படி ஒரு பதிவு எழுதி பீதியைக் கிளப்பினார். ( டியர் எம்.டி.எஸ்)

அச்சச்சோ இதுக்கு ஒரு விடிவு காலமே இல்லையா? என்னைய காப்பாத்த யாருமே இல்லையா என அபலையாக, கதாநாயகனை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் அப்பாவியாக கூக்குரல் கொடுத்தபோது தான் ACT சேவை குறித்து தெரியவந்தது. கௌதமின் நண்பன் உபயோகிப்பதாக கூற அதைப்பற்றி விசாரித்தால் அடுத்த அதிர்ச்சி. நான் செலுத்தும் அதே ஆயிரத்து நூறுரூபாய்க்கு 40 GB கொடுக்கிறார்கள் அதுவும் 40MBPS வேகத்தில். கடவுளே. அதிர்ச்சியாயில்லை. அடுத்த நிமிடமே ACT நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு சேவைகுறித்து விசாரித்தால் அதற்கு அடுத்தநாளே இணைய சேவையுடன் வீடுதேடி வந்துவிட்டார்கள். விசாரித்ததில் பெங்களூர் ஹைதராபாத் மாநகரங்கள் மொத்தமும் ACT உபயோகிக்கிறார்களாம். 

மேலும் வாத்தியார் பாலகணேஷ், மெட்ராஸ்பவன் சிவக்குமாரும் கூட ACTக்கு மாறிவிட்டார்களாம். அட்டகாசமாய் இருக்கிறது. ஒருவழியாக weird கனக்சனில் இருந்து wired கனெக்சனுக்கு மாறியாயிற்று. கடவுளே இதுவாது தொடர்ந்து நன்றாக இருக்க வேண்டும். கூடிய விரைவில் ஏர்டெல் மொபைல் சேவையில் இருந்தும் என்னைத் துண்டித்துக் கொண்டு வேறு யாரையேனும் நாடலாம் என்று இருக்கிறேன். நான் மட்டும் இல்லை. எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் கூறப்போகிறோம் பை பை ஏர்டெல்.   

16 comments:

  1. நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர் செவ்வாய்க்கிரக டூர் போயிருக்கிறார் அப்படின்னு உன் மொபைல்ல இருந்து ரிப்ளை வந்தாலும் ஆச்சரியப்பட மாட்டோம். ஹா.. ஹா. ஹா.... ரிலையன்ஸ்ல இருந்து மாறினதால ஏர்டெல் ஸ்பீடா இருக்கற மாதிரி தோணிச்சா..? உண்மை என்னன்னா... எல்லா நிறுவனமுமே ஆரம்பத்துல நல்ல சர்வீஸ், ஸ்பீட் தராங்க... போகப் போகத்தான் தேய்ஞ்சு கட்டெறும்பாய்டுது. ஏசிடி நல்ல வேகமா இருக்குதுன்றால இப்போ நிம்மதி எனக்கு.

    ReplyDelete
  2. ஒரு நெட் சர்வீஸ மாத்தினதக் கூட இப்டி எழுதி பதிவா மாத்த முடியுங்கற டெக்னிக் இருக்குதே.... அசத்தறியே ராசா...

    ReplyDelete
  3. நண்பர் ஒருவருக்கும் இதே பிரச்சனை தான். ஆனால் அவருடையது வோடபோன் இணைப்பு. வீட்டுக்குள் சிக்னல் இருக்காது. வோடபோன் நிறுவனத்திடம் பேசி (கொஞ்சம் போராடித்தான்) வீட்டுக்குள் ஒரு ஆண்டனா வைக்கச் செய்துவிட்டார்.

    எனிவே, வெல்கம் ACT!!!

    ReplyDelete
  4. ஆக்ட் - ஒவர் ஆக்டிங்க் செய்யாமல் இருந்தால் சரி...

    ReplyDelete
  5. BSNL தொல்லை கொடுக்கும்போதெல்லாம் வேறு நிறுவனத்திற்கு மாற விருப்பம் கொள்வேன் .ஸ்கூல் பையன் எழுதிய பதிவைப் படித்ததும் அந்த எண்ணத்தை கைவிட்டேன்.
    Known Devil is better than Unknown God என்ற நம்பிக்கையில் பி.எஸ் என்.எல் உடன்தான் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். ACT நன்றாக இருப்பதாகத் தான் கூறுகிறார்கள்..வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்தபின் சுயரூபத்தை காட்டாமல் இருந்தால் சரி

    ReplyDelete
  6. அடடே... நல்லது. இலங்கையில் இது இன்னும் மோசம். ஒரு வழியாக டயலொக் இனை பாவிக்கிறேன்.

    http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  7. விடை கொடு ஏர் டெல் ஏகாதிபத்தியமே !!

    டவர் இல்லாத காரணத்தால் ஏர் டெல் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை.

    அதே சமயத்தில், நடுவில், ஏதோ ஒரு டவரின் மேல் உட்கார்ந்து இருக்கும் சிவபெருமான்,

    உங்கள் குரல் கேட்டு ,
    எனக்கு செல்லிட்டு சொன்னார்:
    ,

    அது என்ன உங்க பிரண்டு கோரிக்கை சரி இல்லையே என்றார்.

    அது என்ன அவர் கோரிக்கை உங்களால் தீர்கமுடியாதது என்று வினவினேன்.

    நான் அமர்ந்திருக்கும் ஒரே வாகனம் விடை.
    அதை கொடு என்றால் எப்படி ?

    நியாயம் தான் என்றேன்.

    அவரை ஒன்று செய்யச்சொல். என்றார்.

    சரி என்றேன்.

    அவர் ஆபீஸ் விட்டு வரும் வழியில் க்ரோம்பேட் இருக்கிறது.

    ஆம். ஆண்டவா.

    அதனருகே நங்க நல்லூர் என்றொரு புண்ணியதலம் இருக்கிறது.

    ஆம். அங்கே யாருனாச்சும் ஏர் டெல் ஜி.எம். இருக்காங்களா?

    நடுவே பேசாதே.
    சரி .

    அந்த தலத்தில் , ஆஞ்சனேயர் இருக்கிறார்.

    ஆமா.அங்கே சென்றால் ??

    வடையாவது கிடைக்கும்.

    என்று சொல்லி மறைந்தார்.


    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. //நான் அமர்ந்திருக்கும் ஒரே வாகனம் விடை.
      அதை கொடு என்றால் எப்படி ?//
      சுப்புத்தாத்தா! மகா குறும்புக்காரர் நீங்கள்.

      Delete
  8. எல்லா மொபைல் இணைய சேவைகளும் இப்படித்தான் இருக்கின்றன! நானும் இப்படி ரிலையன்ஸ், ஏர்டெல்லுக்கு நிறைய தண்டம் அழுதுகொண்டு இருக்கின்றேன்! பி.எஸ்.என்.எல் சேவை சுத்தமாக எங்களுக்கு கிடைப்பது இல்லை! அதனால் இப்படியே கழிகின்றது காலம்!

    ReplyDelete
  9. நம்ம ஊர்ல எத்தன ' G 'வந்தாலும் இந்த நிலைமைதான் போல..

    ReplyDelete
  10. பாஸ் எ.சி.டி யை கொஞ்சம் இங்கிட்டு அனுப்புங்க..

    ReplyDelete
  11. who are scrolled Ex-Minsiter Rajaa Sir.... will face the penalty.

    ReplyDelete
  12. what is A C T ? where it is available ?
    Please flash details.

    ReplyDelete
  13. தில்லியில் நான் பயன்படுத்துவது MTNL தான் [BSNL-ன் தம்பி இவர்! தில்லி மற்றும் மும்பையில் மட்டும் இருக்கும் அரசு நிறுவனம்!] திருச்சியிலும் ACT வந்தால் நல்லது. AIRTEL தொல்லை தாங்கவில்லை!

    ReplyDelete
  14. ஏர்டெல்லோடு மல்லுகட்டி ஒரு மெயில் அனுப்பிவிட்டால் கூட, மாபெரும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்

    ReplyDelete