சோளிங்கநல்லூர் வளைவில் திரும்பும் போது தான் அந்த விபத்து நடந்தது. வாகனங்கள் அனைத்தும் நிதானமாக அந்த திருப்பத்தில் திரும்பிக் கொண்டிருக்க, திடிரென ஏற்பட்ட அசாதாரண சூழலில் - எனக்கு முன் சென்று கொண்டிருந்த பைக் தனக்கு முன் சென்று கொண்டிருந்த காரின் பின்புறத்தில் மோதி, மோதிய வேகத்தில் பைக்கின் பின்சக்கரம் கிட்டத்தட்ட ஒரு அடி உயரத்திற்கு எழும்பி அமர்ந்தது.
சம்பவம் இங்கேயே நிற்கட்டும். அதற்குமுன் சோளிங்கநல்லூர் சிக்னலில் நடைபெறும் அட்ராசிட்டியை கூறிவிடுகிறேன்.
சோளிங்கநல்லூர் சிக்னலில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். அதனால் மேடவாக்கத்தில் இருந்து செல்கையில், வலப்பக்கம் திரும்பி மகாபலிபுரம் செல்லும் சாலையை அடையும் பாதையை அடைத்துவிட்டார்கள். அதற்குப் பதிலாக இடப்புறம் திரும்பி கிட்டத்தட்ட இரண்டு கிமீ சுற்றி மகாபலிபுரம் செல்லும் சாலையை அடைய வேண்டும். நிச்சயமாக இது வரவேற்கத்தக்க மாற்றம் தான். அதில் எந்தப் பிரச்சனையில்லை. பிரச்சனைகள் எல்லாம் விதிமுறைகளை மீறும் இந்த வாகன ஓட்டிகளால்தான்.
மிக அகலமான சாலையில் கொஞ்சம் தடுப்புகளை வைத்து வலப்புறம் திரும்பவிடாமல் இடப்புறம் வழியாக திருப்பிவிட்டதால், இரண்டு கிமீ சுற்ற வேண்டுமே என்ற வருத்தத்தில் - நான் பார்த்த அத்தனை ஆட்டோகாரர்களும், சில இருசக்கர வாகன ஓட்டிகளும் அந்த தட்டியில் ஒரு U அடித்து, ஒருவழிச் சாலையில் புகுந்து மகாபாலிபுரம் சாலையை அடைகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் அந்த பகுதியில் ஒருவித எதிர்பாராத அசாதாரண சூழலை உருவாக்குகிறார்கள்.
மிகக் குறுகிய சாலையில், நேராக மட்டுமே வாகனத்தை செலுத்த முடியும் என்ற நம்பிக்கையில் வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்கும் ஓட்டுனரின் கவனத்தை திடிரென குழப்பிவிட்டால் எப்படி இருக்கும்! அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த மாகானுபாவர்கள். எதைபற்றியும் அக்கறை இல்லாமல் சட்டென வாகனத்தை ஒடித்து, ஒரு U டர்ன் எடுத்து எதிர் பாதையில் நுழைந்து, எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்களையும் குழப்பி - ஓ.மை.காட்!
போக்குவரத்து அதிகாரிகள் இவர்களை கண்டிக்காமல் இல்லை. இவர்களின் தொல்லை தாங்கமால் தட்டியின் நீளத்தை அதிகரித்தும் பார்த்துவிட்டார்கள், அடங்குவதாய் இல்லை. அவர்களும் என்னதான் செய்வார்கள்? அவ்வளவு பெரிய சிக்னலை கவனித்துக் கொள்ளும் ஒரேயொரு காவலரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.
நேற்றும் அப்படித்தான். வரிசையாக ஆறு வாகனங்கள் சென்று கொண்டிருக்க, முன்னால் சென்ற ஆட்டோ யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு U டர்ன் எடுத்து எதிர்புறம் நுழைய, பின்னால் வந்த வாகனங்கள் வரிசையாக அடுத்தடுத்து அடித்த பிரேக்கில் எனக்கு முன் சென்று கொண்டிருந்த பைக் தனக்கு முன் சென்று கொண்டிருந்த காரின் புட்டத்தை பதம்பார்த்துவிட்டது. எப்போதுமே கொஞ்சம் நிதானமான இடைவெளியில் வண்டியோட்டுவது என் வழக்கம் என்பதால் நிலைமையை சமாளிப்பதற்கான இடைவெளியில் நான் சுதாகரித்துக் கொண்டேன். நல்லவேளையாக என்னைத் தொடர்ந்து எந்த வாகனமும் வந்திருக்கவில்லை.
ஒரு குலுங்கு குலுங்கி நின்றது கார். காரை ஓட்டிவந்தவர் சட்டென அதில் இருந்து இறங்க முனைந்து, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தன்னால் வாகன நெரிசல் எற்பட்டுவிடக்கூடாதென்ற அக்கறையில் காரை சாலை ஓரமாக நிறுத்த முனைய, காரினை இடித்தவன் வண்டியை நிறுத்தாமல் செலுத்தத் தொடங்கிவிட்டான். ஏற்கனவே காரின் பின்புறம் நாஸ்தியான அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்காத அந்த நபர் நிச்சயம் இந்த ட்விஸ்டினை எதிர்பார்த்திருக்க மாட்டார். நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்ட அவர் அந்த பைக்கைத் துரத்தமுயல, ம்கும் சென்னையின் நெரிசலில் இடித்துவிட்டு செல்பவனை தப்பிக்கவிட்டதே மடத்தனம் இதில் துரத்திப்பிடிக்கவா முடியும்!
அந்த பைக் இன்னும் எங்கள் கண்களில் இருந்து மறைந்திருக்கவில்லை என்பதால் கார் பைக்கைத் துரத்த, என்ன நடக்கிறது என்பதைக் காணும் ஆவலில் இவர்களை நான் துரத்த ஆரம்பித்தேன். அந்த இரவிலும் ஒருவித பரபரப்பு என்னுள் தொற்றிக்கொண்டது.
இடித்தவன் பிடிபட்டு விடக்கூடாது என்ற பதட்டத்தில் இருப்பான். இடிபட்டவன் அவனை குற்றம் தீர்க்கும் அவசரத்தில் இருப்பான். இவர்களுக்கு மத்தியில் அப்பாவியாய் மாட்டிக்கொண்டு முழிக்கும், நிலைமையின் தீவிரம் புரியாத சென்னையின் வாகன் நெரிசல். அவர்கள் இருவரும் சென்ற வேகத்தில் ஒன்று பைக் விபத்திற்குள்ளாகி இருக்கவேண்டும். இல்லை கார் மற்றொரு விபத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும். நல்லவேளை அப்படி நடக்கவில்லை.
இடிபட்டவனின் விதி மிக ,மோசமாக இருந்தது. மிக முக்கியமான சிக்னலில் சிகப்பு விழ, பைக்கை செலுத்தியவன் மற்ற வாகனங்கள் ஏற்படுத்திய இடைவெளியில் புகுந்து சிவப்பு வண்ணத்தை மதிக்காமல், ஒரு பேருந்து கொடுக்க விருந்த முத்தத்தில் இருந்து தப்பித்து மறைந்துவிட்டான். அவ்வளவுதான் இனி அவனை நான் பார்க்கப் போவதில்லை. அவனும் அந்த காரின் கண்களுக்கு தெரியப் போவதில்லை. மேலும் அந்த பைக்காரன் இடத்தில் யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பார்கள் என்பது எனக்குக் கிடைத்த முதல் பாடம்.
காரின் ஓட்டுனர்தான் பாவம். வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்க வேண்டும். ஆசையாசையாய் அந்தக் காரினை வாங்கியிருக்க வேண்டும். பின்புறம் பலமாக சேதமடைந்து விட்டது. சென்னையில் புட்டத்தில் முத்தம் வாங்காத கார்களைச் சந்திப்பது மிக அரிது. என்ன இவருக்குக் கிடைத்த முத்தம் கொஞ்சம் பலமானது. காரினை ஓரமாக நிறுத்திவிட்டு கண்ணாடியை கழட்டி கண்களை கசக்க ஆரம்பித்துவிட்டார். நல்ல ஆறடி உயரம். ஆஜானுபாகுவான உடல். நிச்சயம் அந்த பைக்கை சமாளிக்கும் திடம் அவரிடம் இருந்தது. அவர்செய்த ஒரேயொரு மடத்தனம் காரினை அங்கேயே அப்படியே நிறுத்திவிட்டு, இறங்கி தன்னை இடித்தவனின் வண்டி சாவியை பிடுங்காமல்விட்டது. நம் இந்திய வாகன சட்டப்படி அந்த இருசக்கர வாகனத்தை ஒன்று செய்ய முடியாது என்றாலும் குறைந்தபட்ச ஆதங்கத்தை வெளிபடுத்தவாவது வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த திருப்தியிலாவது அன்றைய இரவு உறக்கத்தினை நிறைத்திருக்கலாம். அதனால் இப்படி ஒரு சூழ்நிலையில் சிக்கிக் கொண்டால் வண்டியின் சாவியை பிடுங்கிவிட்டு வண்டியை ஓரம்கட்ட வேண்டும் என்பது மற்றொரு பாடம். அந்த வண்டியின் எண்ணினை என்னால் குறித்திருக்க முடியும், ஆனால் நான் குறிக்கவில்லை என்பது பின்புதான் உறைத்தது. இது மூன்றாவது பாடம். ம்ம்ம் என்ன பாடம் படித்து என்ன, இவை மொத்தத்திற்கும் காரணமான அந்த முறையற்ற ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு யார் கற்றுத் தரப்போகிறார்கள் பாடம்.
இனி அடிபட்ட காரினை அவரால் அப்படியே ஓட்ட முடியாது. வாகன பாதுகாப்பு உதவி கிடைக்குமா தெரியவில்லை. குறைந்தது முப்பதாயிரம் ருபாய் வரைக்கும் செலவு இழுத்து வைக்கும். பாவம் அந்த நபர். அவருக்காக வருத்தப்படவும், அவரிடம் இருந்து பாடம் கற்பித்துக் கொள்ளவும் மட்டுமே என்னால் முடிகிறது. ஆறுதலாக ஒரு இரண்டு நிமிடங்கள் அவர் அருகில் நின்றுவிட்டுச் சென்றிருக்கலாம். என்னசெய்ய! அசுர வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த இயந்திரத்தின் மூளையில் அதற்கான கட்டளை அப்போது கிடைக்கவில்லை என்பதை நினைத்தால் இப்போது வருத்தமாயிருக்கிறது.
Tweet |
சில சமயம் நம்மால் வருத்தப்பட மட்டுமே முடிகின்றது!
ReplyDeleteசெய்யாமல் விட்ட 3 செயல்களும் அனைவருக்கும் ஒரு பாடமே...
ReplyDeleteபதிவு போட்ட நீங்கள் பதிவெண்ணை பார்க்காமல் இருக்க வாய்ப்பு இல்லை...
ReplyDeleteதம +
ஞாபகம் இருக்கிறதா? நாம் ஒரு முறை மயிலாப்பூரில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஒரு புறம்போக்கு வேகமாகத் திரும்பி நம்மீது இடித்தானே....
ReplyDeleteவிதிகள் மீறுவதற்கே என்று சில ஆட்டோக்காரர்கள் நினைக்கிறார்கள் போலும்...
சில சமயம் மற்றவருக்காக வருத்தப்பட மட்டுமே முடிகின்றது! அனுபவம் புதுமை.
ReplyDelete