28 Jun 2015

பெட்ரோல் பங்க் கொள்ளையர்கள்...

மீனம்பாக்கத்தைக் கடக்கும்போதுதான் வண்டி ரிசர்வில் ஓடிக் கொண்டிருப்பது ஞாபகத்திற்கு வர, ஜி.எஸ்.டி சாலையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த பங்கினுள் நுழைந்தேன். இரவுப் பயணத்திற்காக கார்கள் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. பைக்கிற்கான வரிசை காலியாகக் கிடந்தது.  

'இருநூறு ரூபா' என்றேன்

'டூ ஹன்ட்ரடா' என்றார். 'ஆமா' என்றபடி பங்கை நோட்டமிட ஆரம்பித்தேன். 

'ஜீரோ பாத்துக்கோ சார்' என்றார். அவர் சொல்லாவிட்டாலும் பார்த்தே ஆக வேண்டும் என்பது எனக்கான முன் அனுபவம். 

வண்டி வாங்கிய புதிதில் ஐநூறு ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பச் சொல்லிவிட்டு வேறு எங்கோ வேடிக்கை பார்க்க, அதற்குத் தண்டனையாக கிட்டத்தட்ட முன்னூறு ரூபாய் மதிப்புள்ள நாமத்தைச் சாற்றி அனுப்பினார்கள். எதிர்த்து கேட்காமல் இல்லை. இருந்தாலும் போனது போனதுதானே. இந்த விசயத்தில் இந்தியன் ஆயில் கொஞ்சம் பரவாயில்லை; பாரத் பெட்ரோல் பங்க்தான் படு மோசம். காசுக்கு பெட்ரோல் போடுகிறார்களா இல்லை காசடிப்பதற்காக  பெட்ரோல் போடுகிறார்களா என்றே தெரியவில்லை. 


அண்ணன் வண்டி வாங்கிய புதிதிலும் இப்படித்தான். அவனிடம், 'ன்னா பேக் வீல்ல ஏர் கம்மியா இருக்குன்னா' என்று நூல்விட்டு இருநூறு ரூபாய் அடித்தார்கள். அடித்தவர்கள் இரண்டு பேருமே சிறுவர்கள் என்பதுதான் பெருமைக்குரிய விஷயம். இப்போதெல்லாம் வண்டியின் பின் சக்கரம் பஞ்சர் ஆனால் கூட அவனாக இறங்கிப் பார்க்காமல் உறுதி செய்வதில்லை. 

நம்மிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே பெட்ரோல் அடிப்பது ஒரு கலை. அவர்களுக்குத் தேவை நம் கவனத்தைச் சிதைக்க வேண்டும். அப்படியே கொஞ்சம் காசும் அடிக்க வேண்டும். பெட்ரோல் போடச் செல்லும்போது இரண்டு நபராக சென்றால் பிரச்சனை இல்லை. என்னதான் பேச்சு கொடுத்தாலும் யாராவது ஒருவர் உசாராகவே இருப்போம். இருந்தாக வேண்டும். இன்றைக்கு தனியாகவே வந்திருக்கிறேன். பெட்ரோல் வண்டியினுள் இறங்கத் தொடங்கிய நேரத்தில் சைத்தான் தன்னுடைய வேலையைக் காட்டத் தொடங்கியது. எங்கிருந்து பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். 

'டேங்க்க சுத்தி இவ்ளோ மண்ணு இருக்கக் கூடாது தம்பி, மொதல்ல அதைத் தொடைங்க' என்றபடி தன்னுடைய சாட்டையை வீசினார். 'ரைட்டு தலைவரு ராங் ரூட்ல லிப்ட் கேக்ராறு' என மனம் எச்சரிக்க, இருந்தாலும் நடப்பதை வேடிக்கைப் பார்க்கும் குரூர ஆசையில் மனம் அடுத்த நொடியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.  

இப்போதெல்லாம் இவர்களிடம் ஏமாறுவது போல் ஏமாந்து அவர்களை 'கிக்கிக்கிக்கிக்கி' என வழியச் செய்வதில் அப்படி ஒரு ஆர்வம். அப்படியாவது 'அசிங்கபட்டுவிட்டோமே' என்ற எண்ணத்தில் தங்கள் தவறை உணரமாட்டார்களா என்றொரு நப்பாசைதான். 

'நான் தொடச்சிகிறேனா, என்றபடி டேங்க் கவரில் இருந்த துணியை எடுப்பதற்காக கையை உள்ளே விட சட்டென மீட்டரை மறைத்துக் கொண்டு மேட்டரை ஆரம்பித்தார். லேசாக எட்டிப்பார்த்தும் கூட மீட்டரில் ஓடும் எண் தெரியவில்லை. என் கணிப்பில் சிறிதும் பிசிறில்லை. எதிர்பார்த்தது, எதிர்பார்த்தது போலவே நடக்கத் தொடங்கியது. சரி நடப்பது நடக்கட்டும் என விட்டுவிட்டேன். செயல் மொத்தமும் பெட்ரோல் மூடியை சுற்றி இருக்கும் அழுக்கைத் தொடைப்பதில் இருந்தாலும் கவனம் மொத்தமும் உள்ளே சென்று கொண்டிருக்கும் பெட்ரோலின் மீதே இருந்தது. 

எல்லாம் முடிந்து விட்டதாக அவர் பைப்பை எடுக்க, கொஞ்சம் பிரயத்தனப்பட்டு எட்டிபார்த்ததில் நூற்றி நாற்பது ரூபாய், இரண்டு லிட்டர் என மீட்டர் பல் இளித்தது. 'இன்னோவ்' என்றேன். 'இன்னாப்பா' என்றா. 'எவ்ளோக்கு போட சொன்னேன்' என்றேன். மீட்டரில் இரண்டு லிட்டர் காண்பிப்பதை பார்த்த அவர் கேவலாமாக சிரித்துவிட்டு 'இரநூறா, ரெண்டு லிட்டர்ன்னு நினைச்சேன்' என்றபடி மீட்டரை மறைத்துக் கொண்டே மீண்டும் பம்பை உள்ளே சொருகினார். இப்போது சைத்தான் மீண்டும் சாட்டையை கையிலெடுக்க பம்பை உள்ளே விட்ட வேகத்தில் வெளியே எடுத்து, வேகமாக பெட்ரோல்-பம்ப் மெஷினில் பைப்பை வைக்கும் பகுதியில் இருக்கும் பட்டனை அழுத்த அதில் ரூபாய் நான்கு என்று காட்டிய எண் மறைந்து ஜீரோவைக் காட்டியது. இப்போதும் நான் விடவில்லை. 'எவ்ளோக்கு போட்டீங்க' என்றேன். போட்டாச்சுப்பா என்றார். நல்ல உயரம். கருத்த தேகம். வயது முப்பதைக் கடந்திருக்க வேண்டும். பதிலேதும் பேசவில்லை. நான் பணத்தைக் கொடுக்கவில்லை. 

'இன்னும் முழுசா போட்டமாதிரி தெரியல' என்றேன் முறைத்துக்கொண்டே. என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை, 'சாரிப்பா பம்பு ஒழுங்கா வேல செய்யல, நான் கூட போட்ருச்சோன்னு நினைச்சேன்' என்றபடி பம்பை அழுத்த, வண்டியை கொஞ்சம் முன்னுக்கு நகர்த்தி மீட்டரைப் பார்த்தேன். அறுபது ரூபாயில் வந்து நின்றது. முறைத்தபடியே பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். ஒருவேளை ஏமாந்திருந்தால் நஷ்டம் அறுபது ரூபாய். இப்போது கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் நிகர லாபம் நான்கு ரூபாய். அதுவும் எனக்குத்தான். மீண்டும் சென்னையின் வாகன நெரிசலுக்குள் என்னை நுழைத்துகொண்டேன். மனம் கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ம்ம் நீங்களும் பெட்ரோல் போடாமலா இருக்கப் போகிறீர்கள். பார்த்து சூதானமாக நடந்து கொள்ளுங்கள். இல்லை சூ... சரி வேணாம் விடுங்கள் எதற்கு கெட்டவார்த்தை எல்லாம் பேசிக்கொண்டு. உங்கள் பெட்ரோல் உங்கள் உரிமை.

23 Jun 2015

விடைகொடு என் ஏர்டெல் ஏகாதிபத்தியமே...

ஏர்டெல் மொபைல் மற்றும் இணைய சேவைக்கு என்னவாயிற்று எனத்தெரியவில்லை. கழுதை தேய்ந்த கட்டெறும்பாக தேய்ந்து தேய்ந்து இப்போ கட்டெறும்பு கூட இல்லை அதற்கும் கீழே எங்கோ சென்றுவிட்டது. அழைப்பு வந்தால் கைபேசியை தூக்கிக்கொண்டு அலைவரிசை இருக்கும் இடத்தை தேடி ஓடி ஒரு பிரளயத்தையே நடத்த வேண்டி இருக்கிறது. 

வம்சம் படம் நினைவிருக்கிறதா? படம்வந்து சில வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலும் அந்தப்படத்தில் கிராமத்து மனிதர்கள் சிக்னல் கிடைக்காத கைபேசியை வைத்துகொண்டு என்னபாடு படுகிறார்கள் என்பதை அட்டகாசமாக பகடி செய்திருப்பார்கள். கிட்டத்தட்ட எங்கள் நிலமையும் இப்போது அப்படித்தான் இருக்கிறது. நீங்கள் ஹலோ சொன்னால் ஒன்று ஹ கேட்கும் இல்லை லோ கேட்கும். அப்படியும் இல்லையா தேமே என இணைப்பைத் துண்டித்துவிடும்.  

'சீனு இப்போல்லாம் உன் போன் நாட் ரீச்சபிள்லையே இருக்கு' என யாரேனும் கூறினால் என்னுடைய பதில் ' வீட்டுகுள்ளயும் சிக்னல் கிடைக்காது, ஆபீஸ் உள்ளயும் சிக்னல் இருக்காது'. 'எப்போதும் கோமா நிலையில் இருக்கும் கைபேசியை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது'. 



எங்கிருந்தாலும் சிக்னல் தராத ஒரு நிறுவனத்துடன் தொடர்ந்து இயங்குவதில் சில லாபங்கள் இருக்கத்தான் செய்கிறது. அர்த்தராத்திரியில் வரும் அழைப்புகளுக்கு வழக்கம் போல 'நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்' என்று கூறிவிடும். உறக்கம் தடைபடாது.

கைபேசி சேவையையாவது பொறுத்துக் கொள்ளலாம். இந்த இணைய இணைப்பு இருக்கிறதே இணைய இணைப்பு. இப்போது நினைத்தாலும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. 7.1 MBPS வேகம். 6 ஜிபி டேட்டா, சேவை வரியுடன் சேர்த்து ஆயிரத்து நூறு ரூபாய். சிக்னல் ஒழுங்காக வருகிறதோ இல்லையோ ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து மாதாமாதம் கட்டண தொகைமட்டும் வந்துவிடும். 

ஆவடியில் இருக்கும் போது பிஎஸ்என்எல் உபயோகித்தோம். அரசு இயந்திரத்தில் சொல்லிக்கொள்ளும்படியான உருப்படியான சேவையை வழங்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. பிரச்சனை என்று சொன்னால் போதும் அடுத்த நிமிடம் வீடுதேடி வந்துவிடுவார்கள். எப்போதுமே மட்டுப்படாத வேகம் என ஆவடியில் இருக்கும் வரை இணைய இணைப்பு எவ்வித தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. எப்போது மேடவாக்கம் வந்தோமோ அப்போது தொடங்கியது பிரச்சனை. BSNL, AIRTEL என எல்லோருமே கம்பிவழி சேவைக்கு 'No feasibility' என்று கூறிவிட்டார்கள். 

நண்பர் ஒருவர் ரிலையன்ஸ் நன்றாக இருக்கிறது எனக்கூற அவர் பேச்சைக்கேட்டு ரிலையன்ஸ் டேட்டாகார்ட் வாங்கினால் கூகிள் பக்கத்தை திறப்பதற்குள்ளாகவே அந்த மாதம் பில் வந்துவிட்டது. தொடர்ந்து தெண்டமாக 700 + 700 ரூபாயை அழுதுத்தொலைக்க, இப்படியே போச்சுனா பைசா பெறாதுடா என உடனடியாக ஏர்டெல் சேவைக்கு மாற்றிவிட்டேன்.

ஆரம்பத்தில் கொஞ்சம் பராவாயில்லை. அல்லது ரிலையன்ஸ் ஏற்படுத்திய பாதிப்பா தெரியவில்லை - நன்றாக வேலை செய்வது போல் தோற்றமளித்த ஏர்டெல்லும் நாளாக ஆக பல்லிளிக்கத் தொடங்க மாயா மாயா எல்லாம் சாயா சாயா! கூகிள் என்று தட்டிவிட்டு உடகார்ந்தால் நாளை மாலைக்குள் திறந்துவிடும். இருந்தாலும் பரவாயில்லை பல சமயங்களில் தட்கல் புக் செய்யும் போது மட்டும் ஆபத்பாந்தவனாக காப்பாற்றி இருக்கிறது. அவ்வகையில் நன்றி என் தெய்வமே. 

இப்போதெல்லாம் ஏர்டெல் இணைய இணைப்பு சுத்தமாக வேலை செய்வதில்லை. வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் செய்து புகார் செய்து அலுத்துவிட்டது. பாவம் அவர்களும் என்ன செய்வார்கள். மூன்று நாளைக்கு முன் தற்செயலாக இந்த மாத உபயோகத்தில் எத்தனை MB உபயோகம் செய்திருக்கிறேன் என்று பார்த்தால் பெரிய அதிர்ச்சி. கடந்த இருபது நாட்களில் வெறும் 500 MB மட்டுமே உபயோகித்து இருக்கிறேன். என்ன அநியாயம். மீதம் இருக்கின்ற அடுத்த பத்து நாட்களில் மிஞ்சிப்போனால் 300MB வேண்டுமனால் உபயோகிக்கலாம். மீதி 5 GB கடலில் கரைத்த பெருங்காயமாக காற்றில் கரைய இருக்கிறது. இது இந்த மாதத்திற்கான நிலை. அப்படியென்றால் ஒவ்வொருமாதமும் நான் இழந்த டேட்டாக்களின் நிலை? 

இத்தனைக்கும் நான் அண்ணன் கௌதம் உட்பட மூன்று பேர் இணையத்தை உபயோகிக்கிறோம். வரவர இணைப்பு மிக மோசமாகிப் போனாதால் உபயோகிக்கவே கடுப்பாக இருக்கிறது. சமயங்களில் சுற்றிக் கொண்டே இருக்கும் இணையத்தை பார்த்தால் தலைசுற்றல் வாந்தி மயக்கம் எல்லாம் ஏற்படுகிறது. யார்யாரிடமெல்லாமோ கேட்டுபார்த்துவிட்டேன் மேடவாக்கத்தில் வேறொரு சேவை நிறுவனம் சிக்கவே இல்லை. பலரும் ஆரம்பித்துவிட்டு தலையில் துண்டை போட்டுகொண்டு ஓடிவிட்டதாகக் கேள்விபட்டேன். பதிவர் கார்த்திக் சரவணன் ஒருசமயம் MITS நன்றாக இருக்கிறது எனக்கூற அதனை வாங்கலாமா என யோசித்துக் கொண்டிருந்த அடுத்த மாதத்தில் இப்படி ஒரு பதிவு எழுதி பீதியைக் கிளப்பினார். ( டியர் எம்.டி.எஸ்)

அச்சச்சோ இதுக்கு ஒரு விடிவு காலமே இல்லையா? என்னைய காப்பாத்த யாருமே இல்லையா என அபலையாக, கதாநாயகனை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் அப்பாவியாக கூக்குரல் கொடுத்தபோது தான் ACT சேவை குறித்து தெரியவந்தது. கௌதமின் நண்பன் உபயோகிப்பதாக கூற அதைப்பற்றி விசாரித்தால் அடுத்த அதிர்ச்சி. நான் செலுத்தும் அதே ஆயிரத்து நூறுரூபாய்க்கு 40 GB கொடுக்கிறார்கள் அதுவும் 40MBPS வேகத்தில். கடவுளே. அதிர்ச்சியாயில்லை. அடுத்த நிமிடமே ACT நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு சேவைகுறித்து விசாரித்தால் அதற்கு அடுத்தநாளே இணைய சேவையுடன் வீடுதேடி வந்துவிட்டார்கள். விசாரித்ததில் பெங்களூர் ஹைதராபாத் மாநகரங்கள் மொத்தமும் ACT உபயோகிக்கிறார்களாம். 

மேலும் வாத்தியார் பாலகணேஷ், மெட்ராஸ்பவன் சிவக்குமாரும் கூட ACTக்கு மாறிவிட்டார்களாம். அட்டகாசமாய் இருக்கிறது. ஒருவழியாக weird கனக்சனில் இருந்து wired கனெக்சனுக்கு மாறியாயிற்று. கடவுளே இதுவாது தொடர்ந்து நன்றாக இருக்க வேண்டும். கூடிய விரைவில் ஏர்டெல் மொபைல் சேவையில் இருந்தும் என்னைத் துண்டித்துக் கொண்டு வேறு யாரையேனும் நாடலாம் என்று இருக்கிறேன். நான் மட்டும் இல்லை. எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் கூறப்போகிறோம் பை பை ஏர்டெல்.   

21 Jun 2015

பழைய மகாபலிபுரம் சாலை - அடுத்தவர்களுக்கான அனுபவங்கள்

சோளிங்கநல்லூர் வளைவில் திரும்பும் போது தான் அந்த விபத்து நடந்தது. வாகனங்கள் அனைத்தும் நிதானமாக அந்த திருப்பத்தில் திரும்பிக் கொண்டிருக்க, திடிரென ஏற்பட்ட அசாதாரண சூழலில் - எனக்கு முன் சென்று கொண்டிருந்த பைக் தனக்கு முன் சென்று கொண்டிருந்த காரின் பின்புறத்தில் மோதி, மோதிய வேகத்தில் பைக்கின் பின்சக்கரம் கிட்டத்தட்ட ஒரு அடி உயரத்திற்கு எழும்பி அமர்ந்தது. 

சம்பவம் இங்கேயே நிற்கட்டும். அதற்குமுன் சோளிங்கநல்லூர் சிக்னலில் நடைபெறும் அட்ராசிட்டியை கூறிவிடுகிறேன். 

சோளிங்கநல்லூர் சிக்னலில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். அதனால் மேடவாக்கத்தில் இருந்து செல்கையில், வலப்பக்கம் திரும்பி மகாபலிபுரம் செல்லும் சாலையை அடையும் பாதையை அடைத்துவிட்டார்கள். அதற்குப் பதிலாக இடப்புறம் திரும்பி கிட்டத்தட்ட இரண்டு கிமீ சுற்றி மகாபலிபுரம் செல்லும் சாலையை அடைய வேண்டும். நிச்சயமாக இது வரவேற்கத்தக்க மாற்றம் தான். அதில் எந்தப் பிரச்சனையில்லை. பிரச்சனைகள் எல்லாம் விதிமுறைகளை மீறும் இந்த வாகன ஓட்டிகளால்தான். 

மிக அகலமான சாலையில் கொஞ்சம் தடுப்புகளை வைத்து வலப்புறம் திரும்பவிடாமல் இடப்புறம் வழியாக திருப்பிவிட்டதால், இரண்டு கிமீ சுற்ற வேண்டுமே என்ற வருத்தத்தில் - நான் பார்த்த அத்தனை ஆட்டோகாரர்களும், சில இருசக்கர வாகன ஓட்டிகளும் அந்த தட்டியில் ஒரு U அடித்து, ஒருவழிச் சாலையில் புகுந்து மகாபாலிபுரம் சாலையை அடைகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் அந்த பகுதியில் ஒருவித எதிர்பாராத அசாதாரண சூழலை உருவாக்குகிறார்கள். 


மிகக் குறுகிய சாலையில், நேராக மட்டுமே வாகனத்தை செலுத்த முடியும் என்ற நம்பிக்கையில் வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்கும் ஓட்டுனரின் கவனத்தை திடிரென குழப்பிவிட்டால் எப்படி இருக்கும்! அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த மாகானுபாவர்கள். எதைபற்றியும் அக்கறை இல்லாமல் சட்டென வாகனத்தை ஒடித்து, ஒரு U டர்ன் எடுத்து எதிர் பாதையில் நுழைந்து, எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்களையும் குழப்பி - ஓ.மை.காட்!

போக்குவரத்து அதிகாரிகள் இவர்களை கண்டிக்காமல் இல்லை. இவர்களின் தொல்லை தாங்கமால் தட்டியின் நீளத்தை அதிகரித்தும் பார்த்துவிட்டார்கள், அடங்குவதாய் இல்லை. அவர்களும் என்னதான் செய்வார்கள்? அவ்வளவு பெரிய சிக்னலை கவனித்துக் கொள்ளும் ஒரேயொரு காவலரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. 

நேற்றும் அப்படித்தான். வரிசையாக ஆறு வாகனங்கள் சென்று கொண்டிருக்க, முன்னால் சென்ற ஆட்டோ யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு U டர்ன் எடுத்து எதிர்புறம் நுழைய, பின்னால் வந்த வாகனங்கள் வரிசையாக அடுத்தடுத்து அடித்த பிரேக்கில் எனக்கு முன் சென்று கொண்டிருந்த பைக் தனக்கு முன் சென்று கொண்டிருந்த காரின் புட்டத்தை பதம்பார்த்துவிட்டது. எப்போதுமே கொஞ்சம் நிதானமான இடைவெளியில் வண்டியோட்டுவது என் வழக்கம் என்பதால் நிலைமையை சமாளிப்பதற்கான இடைவெளியில் நான் சுதாகரித்துக் கொண்டேன். நல்லவேளையாக என்னைத் தொடர்ந்து எந்த வாகனமும் வந்திருக்கவில்லை. 

ஒரு குலுங்கு குலுங்கி நின்றது கார். காரை ஓட்டிவந்தவர் சட்டென அதில் இருந்து இறங்க முனைந்து, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தன்னால் வாகன நெரிசல் எற்பட்டுவிடக்கூடாதென்ற அக்கறையில் காரை சாலை ஓரமாக நிறுத்த முனைய, காரினை இடித்தவன் வண்டியை நிறுத்தாமல் செலுத்தத் தொடங்கிவிட்டான். ஏற்கனவே காரின் பின்புறம் நாஸ்தியான அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்காத அந்த நபர் நிச்சயம் இந்த ட்விஸ்டினை எதிர்பார்த்திருக்க மாட்டார். நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்ட அவர் அந்த பைக்கைத் துரத்தமுயல, ம்கும் சென்னையின் நெரிசலில் இடித்துவிட்டு செல்பவனை தப்பிக்கவிட்டதே மடத்தனம் இதில் துரத்திப்பிடிக்கவா முடியும்! 

அந்த பைக் இன்னும் எங்கள் கண்களில் இருந்து மறைந்திருக்கவில்லை என்பதால் கார் பைக்கைத் துரத்த, என்ன நடக்கிறது என்பதைக் காணும் ஆவலில் இவர்களை நான் துரத்த ஆரம்பித்தேன். அந்த இரவிலும் ஒருவித பரபரப்பு என்னுள் தொற்றிக்கொண்டது. 

இடித்தவன் பிடிபட்டு விடக்கூடாது என்ற பதட்டத்தில் இருப்பான். இடிபட்டவன் அவனை குற்றம் தீர்க்கும் அவசரத்தில் இருப்பான். இவர்களுக்கு மத்தியில் அப்பாவியாய் மாட்டிக்கொண்டு முழிக்கும், நிலைமையின் தீவிரம் புரியாத சென்னையின் வாகன் நெரிசல். அவர்கள் இருவரும் சென்ற வேகத்தில் ஒன்று பைக் விபத்திற்குள்ளாகி இருக்கவேண்டும். இல்லை கார் மற்றொரு விபத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும். நல்லவேளை அப்படி  நடக்கவில்லை. 

இடிபட்டவனின் விதி மிக ,மோசமாக இருந்தது. மிக முக்கியமான சிக்னலில் சிகப்பு விழ, பைக்கை செலுத்தியவன் மற்ற வாகனங்கள் ஏற்படுத்திய இடைவெளியில் புகுந்து சிவப்பு வண்ணத்தை மதிக்காமல், ஒரு பேருந்து கொடுக்க விருந்த முத்தத்தில் இருந்து தப்பித்து மறைந்துவிட்டான். அவ்வளவுதான் இனி அவனை நான் பார்க்கப் போவதில்லை. அவனும் அந்த காரின் கண்களுக்கு தெரியப் போவதில்லை. மேலும் அந்த பைக்காரன் இடத்தில் யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பார்கள் என்பது எனக்குக் கிடைத்த முதல் பாடம். 

காரின் ஓட்டுனர்தான் பாவம். வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்க வேண்டும். ஆசையாசையாய் அந்தக் காரினை வாங்கியிருக்க வேண்டும். பின்புறம் பலமாக சேதமடைந்து விட்டது. சென்னையில் புட்டத்தில் முத்தம் வாங்காத கார்களைச் சந்திப்பது மிக அரிது. என்ன இவருக்குக் கிடைத்த முத்தம் கொஞ்சம் பலமானது. காரினை ஓரமாக நிறுத்திவிட்டு கண்ணாடியை கழட்டி கண்களை கசக்க ஆரம்பித்துவிட்டார். நல்ல ஆறடி உயரம். ஆஜானுபாகுவான உடல். நிச்சயம் அந்த பைக்கை சமாளிக்கும் திடம் அவரிடம் இருந்தது. அவர்செய்த ஒரேயொரு மடத்தனம் காரினை அங்கேயே அப்படியே நிறுத்திவிட்டு, இறங்கி தன்னை இடித்தவனின் வண்டி சாவியை பிடுங்காமல்விட்டது. நம் இந்திய வாகன சட்டப்படி அந்த இருசக்கர வாகனத்தை ஒன்று செய்ய முடியாது என்றாலும் குறைந்தபட்ச ஆதங்கத்தை வெளிபடுத்தவாவது வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த திருப்தியிலாவது அன்றைய இரவு உறக்கத்தினை நிறைத்திருக்கலாம். அதனால் இப்படி ஒரு சூழ்நிலையில் சிக்கிக் கொண்டால் வண்டியின் சாவியை பிடுங்கிவிட்டு வண்டியை ஓரம்கட்ட வேண்டும் என்பது மற்றொரு பாடம். அந்த வண்டியின் எண்ணினை என்னால் குறித்திருக்க முடியும், ஆனால் நான் குறிக்கவில்லை என்பது பின்புதான் உறைத்தது. இது மூன்றாவது பாடம். ம்ம்ம் என்ன பாடம் படித்து என்ன, இவை மொத்தத்திற்கும் காரணமான அந்த முறையற்ற ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு யார் கற்றுத் தரப்போகிறார்கள் பாடம்.

இனி அடிபட்ட காரினை அவரால் அப்படியே ஓட்ட முடியாது. வாகன பாதுகாப்பு உதவி கிடைக்குமா தெரியவில்லை. குறைந்தது முப்பதாயிரம் ருபாய் வரைக்கும் செலவு இழுத்து வைக்கும். பாவம் அந்த நபர். அவருக்காக வருத்தப்படவும், அவரிடம் இருந்து பாடம் கற்பித்துக் கொள்ளவும் மட்டுமே என்னால் முடிகிறது. ஆறுதலாக ஒரு இரண்டு நிமிடங்கள் அவர் அருகில் நின்றுவிட்டுச் சென்றிருக்கலாம். என்னசெய்ய! அசுர வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த இயந்திரத்தின் மூளையில் அதற்கான கட்டளை அப்போது கிடைக்கவில்லை என்பதை நினைத்தால் இப்போது வருத்தமாயிருக்கிறது. 

18 Jun 2015

இரவெனும் புதிர்

மணி நள்ளிரவு ஒன்றை நெருங்கி இருந்ததால் தெருக்கள் ஜனங்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன. எப்போதும் தொல்லை செய்யும் நாய்கள் மட்டும் அலராம் வைத்தது போல் என்னை எதிர்பார்த்து காத்துக்கிடக்க, வானம் மழை வருவதற்கான சூழலை அவசரமாக உருவாக்கிக் கொண்டிருந்தது. கடந்த ஒருவாரமாகவே நள்ளிரவுகள் வானின் கொண்டாட்டக் களமாக மாறியிருக்கின்றன. ஓயாது அடிக்கும் கடல் காற்று. தூரத்தில் ஏதாவது ஒரு புள்ளியில் வெட்டிச் செல்லும் மின்னல். ஒருசில வினாடிகளுக்கு மட்டும் எட்டிப்பார்க்கும் மழைத்துளி. எங்கும் நிறைந்திருக்கும் நீலமென ஏகாந்தமாக கழிந்து கொண்டுள்ளன இந்த கோடைக்கால நள்ளிரவுகள். வண்டியின் மோட்டார் ஏற்படுத்திய சத்தம் மற்றும் சாலையோர தவளைகள், சுவர்க்குருவிகள் ஏற்படுத்திய சப்தத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

பெரும்பாக்கத்தில் சரவணாவை இறக்கிவிட்டுவிட்டு வண்டி அனிச்சையாக மேடவாக்கம் நோக்கித் திரும்பியபோதுதான் அந்தப் பெரியவரைக் கவனித்தேன். முதலாவது திருப்பத்தின் ஓரத்தில் நின்றுகொண்டு தெருவையே வெறித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ஒருஅடி முன்னால் வந்து கை நீட்டின்னார். வயது எழுபது இருக்கலாம். தலையில் குல்லா. பாய். பேன்ட்டை முழங்கால் வரைக்கும் மடக்கி விட்டிருந்தார். குர்தாவா பைஜாமாவா என அடையாளம் கண்டறிய முடியவில்லை. ஆனால் அதன் மட்டும் நிறம் வெள்ளை. 

பொதுவாக யார் லிப்ட் கேட்டாலும் தயங்காமல் கொடுத்துவிடுவேன். சில இரவுகளில் சோளிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் வரைக்கும் கூட துணிந்து லிப்ட் கொடுப்பேன். இந்தப் பகுதி வளர்வதற்கு முன் சென்னையிலேயே அதிகம் திருட்டு கொலை கொள்ளை நடக்கும் ஏரியா இந்த சாலைதானாம். இப்போது வெகுவாக குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். உள்ளுக்குள் சின்ன நடுக்கம் இருந்தாலும் லிப்ட் கொடுத்துவிடுவேன். இருளடைந்த அந்த ஒரு கிமீட்டரைக் கடந்துவிட்டால் போதும் ஊர்பகுதிக்குள் நுழைந்துவிடலாம். தாத்தாவைப் பார்த்தால் அப்பாவியாக நல்லவராகத் தெரிந்தார். 

'என்ன தாத்தா' என்றேன். சிறிது நேரம் என்னையே உற்றுபார்த்தவர் 'பெரும்பாக்கத்துக்கு புதுசு, ஏரியா மாறி வந்துட்டேன். வழி தெரியல' என்றார்.    

'பெரும்பாகத்தில எங்க?'

'இங்க ஒரு மசூதி உண்டு, அதுக்கு பக்கத்து தெரு' 

'ஆமா மசூதி உண்டு, சமுக நலக்கூடம் பக்கம், அதுவா?' என்றேன்

'சிறிது நேரம் யோசித்தவர். இருக்கலாம்' என்றார்.

'சரி வாங்க, நான் விடுறேன்' என்றேன். ஏறிக்கொண்டார்

எனக்கு மனிதர்களைக் கண்டால் பயம் இல்லை. இந்த நாய்கள் தான். 

நாய்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் வண்டியை மெல்ல செலுத்திக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் அவ்வளவாக நாய்களுக்குப் பயப்படுவதில்லை. அவைகளுக்கு அருகில் செல்லும்போதோ இல்லை அவை நம்மை நோக்கி குரைக்கும் போதோ வண்டியை நிறுத்தி முறைத்தால் போதும் தெறித்து ஓடிவிடும் இல்லை குறைப்பதை நிறுத்திவிடும். இது தெரியாமல் இத்தனை காலமாய் பயந்து பதறி சிதறி ஓடியிருக்கிறேன். நாய்கள் துரத்துவதற்கான காரணம் அமானுஸ்யமும் இல்லை ஆவி பேய் பிசாசுகளும் இல்லை வண்டியில் இருந்து வரும் மோட்டாரின் சப்தம் தான் காரணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய சமீபத்திய அவதானிப்பு. 

தூரத்தில் நான்கு நாய்கள் தெருவை மறித்து யோகாசனம் செய்து கொண்டிருக்க, அவற்றை கோபப்படுத்தி விடக்கூடாதென வண்டியின் வேகத்தை மெல்லக்க் குறைத்தேன். கடைசிப் பேருந்திலிருந்து இறங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்த கணவனும் மனைவியும் என் வண்டியின் வேகம் குறைவதைப் பார்த்தும் பயந்து, அந்தப் பெண் சட்டென இடம்மாறி கழுத்தில் இருந்த செயினை பத்திரமாக கையில் பிடித்துக் கொள்ள, அவள் கணவன் கேவலமான ஒரு முறைப்புடன் என்னைக் கடந்துசெல்ல அனுமதித்தான். நள்ளிரவில் மனிதர்களின் கண்ணில் சிக்கும் மனிதர்கள் அனைவருமே அயோக்கியகர்கள் தான் போலும். அதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? நிலைமையை நொந்துகொண்டே தாத்தாவிடம் பேச்சு கொடுத்தேன். 

'மணி ஒண்ணாகுது இந்த நேரத்திலையா வாக்கிங் வந்தீங்க'. சிரித்துக் கொண்டே வண்டியை செலுத்தினேன். தூரத்தில் செவளை நிச்சயம் எனக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும். மற்ற எல்லா நாய்களும் வண்டியை நிறுத்தினால் ஓடிவிடும். இந்த செவளை மட்டும் பதிலுக்கு முறைக்கும். உறுமும் அவ்வளவு எளிதில் விட்டுவிடாது. கொஞ்சம் பொறுமையாக கொஞ்சம் கோவமாக கொஞ்சமா தைரியமாக முறைத்தால் மட்டுமே வழிவிடும். 

'நான் மத்தியானமே வீட்ட விட்டு வந்துட்டேன்' என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டார். 

அவர் கூறிய பதிலைக் கேட்டு நான் தான் அதிர்ச்சியாகிவிட்டேன். 'என்னது மதியமே வந்துட்டீங்களா?, தேட மாட்டாங்களா?'

'தேடுவாங்க, ஆனா எனக்கு தான் வழி தெரியலையே?' என்றபடி சிரித்தார்.  

'அதான் ரோட்டுல இத்தன பேரு போறாங்க இல்ல, அவங்க யாருட்டயாவது வழி கேக்றதுதான?' 

'எல்லாதுக்கு அவனவன் வேலை தான முக்கியம். யாரு கண்ணுக்கும் நான் தெரியலையே. இந்த ஏரியாவ தான் ரெண்டு மணிநேரமா சுத்துறேன், வீட கண்டுபிடிக்க முடியல' என்றார். 

சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிப்போய் வழிதெரியாமல் எங்கெல்லாமோ சுத்திகொண்டிருந்த போது மாமா முதுகில் அடித்து இழுத்துக் கொண்டுபோனது ஞாபாகம் வந்தது. தெருவே களேபரமாகி இருந்தது. தெரு மொத்தமும் வீட்டுமுன் கூடி எனக்கு திருவிழா கொண்டாட காத்துக் கொண்டிருந்தார்கள். அம்மா மட்டும் அழுது கொண்டிருந்தாள். என்னைப்பார்த்த நொடியில் இறுக்கி அணைத்த அன்பின் ஸ்பரிசம் ஒருநிமிடம் கண்முன் வந்து சென்றது. 

'போன் வச்சிகோங்க தாத்தா, பாவம் வீட்டில தேடுவாங்க இல்ல' என்றேன். அவர் எதுவுமே பேசவில்லை. காற்றடிக்கும் போதெல்லாம் அவர் மீதிருந்து ஜவ்வாது வாசம் வந்தது. ஸ்பீட்பிரேக் வரும்போது மட்டும் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக செலுத்தினேன். அடுத்த திருப்பத்தில் செவளை எனக்காக காத்திருக்கும். விரைவில் அதனை நண்பனாக்கிக் கொள்ளவேண்டும். இந்த ஏரியாவில் செவளை தான் தாதா. எதிர்பார்த்தது போலவே காத்திருந்தது. குலைக்கவில்லை. முறைக்கவில்லை. மாறாக கூடவே ஓடிவந்தது. செவளைக்கு நல்ல கணீர் குரல். இந்த இரவில் அது குரைத்தால் நான்கு தெருவிற்குக் கேட்கும். இன்றைக்கு அது குறைக்காதது. ஏதோ உறுத்தியது. அந்த இரவை மேலும் நிசப்தமாக்கியது. வண்டியை நிறுத்தி அதனைத் திரும்பிப் பார்த்தேன். அதே முறைப்பு ஆனால் குரைக்கவில்லை. 

'மசூதி இன்னும் வரலை' என்றார் தாத்தா. 'இன்னும் ஒரு தெரு போகணும் தாத்தா' என்றபடி வண்டியை செலுத்தினேன். செவளை நடக்கவும் இல்லை. ஓடவும் இல்லை. ஆனால் ஒரு நான்கடி இடைவெளியில் கூடவே வந்தது. மெல்ல என் தோளின் மீது கைவைத்தார். அவர் மசூதியைப் பார்த்துவிட்டது புரிந்தது. 'அந்த திருப்பத்தில் தான் வீடு' என்றார். திரும்பினேன்.

வீட்டின் முன் பத்து பதினைந்து பைக் நின்று கொண்டிருந்தது. வண்டியில் இருந்து இறங்கிய தாத்தா திரும்பிக் கூடப் பார்க்காமல் நேரே வீட்டினுள் நுழைந்தார். இவ்வளவு தூரம் கூட்டிவந்த என்னிடம் ஒருவார்த்தை கூட பேசாமல் போகிறாரே என்ற வருத்தத்துடன் அங்கிருந்தவர்களை நோக்கினேன். அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும் ஒரு திருடனைப் பார்ப்பதைப் போல என்னை நோக்கினார்கள். அவர்கள் கண்களில் நள்ளிரவின் அயற்சி மற்றும் அதையும் மீறிய சோகம் தெரிந்தது. அந்த இடமே நிசபதமாக இருந்தது. அங்கிருந்த அமைதி எனக்குப் புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை. திரும்பி செவளையைப் பார்த்தேன். பேய்முழி முழித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒன்று உறுத்த மெல்ல அனைவரிடம் இருந்தும் விலகி பார்வையை மசூதியின் சுவற்றில் செலுத்தினேன். ஒரு பெரிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டபட்டிருந்தது. அதில் தாத்தாவின் மனைவி முறைத்துக் கொண்டிருந்தார். 


பின்குறிப்பு : இந்தக் கதையை ஆரம்பிக்கும் முன் 'பார்வையை மசூதியின் சுவற்றில் செலுத்தினேன். ஒரு பெரிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டபட்டிருந்தது. அதில் தாத்தா முறைத்துக் கொண்டிருந்தார்' என்றுதான் எழுத நினைத்தேன். அதனைவிட இந்த முடிவு கொஞ்சம் பொருத்தமானதாக இருந்ததால் மாற்றிவிட்டேன்.