பெரும்பாக்கத்தில் சரவணாவை இறக்கி விட்டு மேடவாக்கத்தை நெருங்கிய போது நேரம் நள்ளிரவைக் கடந்து பின்னிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. தூறலும் ஈரமான காற்றும் நள்ளிரவை நனைத்துக் கொண்டிருக்க எதிர்பட்ட லாரிகளை எல்லாம் மடக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் காக்கிச் சட்டைக்காரர்கள்... நான் அவர்களுத் தேவையில்லை என்பதால் எனக்குக் கவலையில்லை. அவர்களைக் கடந்து மேடவாக்கம் பேருந்து நிறுத்தத்தைக் கடக்க முயலும் போது தான் அவரைக் கவனித்தேன்.
மெலிந்த தேகம். கருத்தமேனி. கையில் ஒரு சேல்ஸ்மேன் அல்லது லேப்டாப் பேக். டக்-இன் செய்திருந்தார். தாம்பரம் பேருந்திற்காக காத்திருந்திருக்க வேண்டும். கடைசி பேருந்தைத் தவற விட்டிருக்க வேண்டும். வாகன உதவி கேட்டு வழிமறித்துக் கொண்டிருக்க வேண்டும். .
இன்னும் சில அடி தூரத்தில் என் வீட்டிற்கு திரும்பும் வளைவு என்பதால் என்னால் லிப்ட் கொடுக்க முடியாது என்பதை சைகையின் மூலம் கூறினேன். அவருக்குப் புரியவில்லை. வண்டியை மெல்ல ஸ்லோ செய்தேன்.
நான் வண்டியை ஸ்லோவாக்குவதைப் பார்த்த அவர் எங்கே லிப்ட் தான் கொடுக்கப் போகிறேனோ என்ற ஆர்வத்தில் என்னை நெருங்கி ' தாம்பரமா சார்' என்றார். வயது நாற்பதை நெருங்கியிருக்க வேண்டும். அல்லது கடந்திருக்க வேண்டும். நல்லவர் என நம்பலாம் போல் தான் தோன்றியது. கெட்டவன் என்றாலும் உருவுதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. மாசக் கடைசி வேறு.
'சார் இங்க பக்கத்துல தான் என் வீடு. இந்நேரத்துல பஸ் உண்டு.' என்றேன்.
'இல்ல தம்பி ஒரு மணி நேரமா நிக்குறேன், பஸ்ஸே இல்ல' அது சற்றே மிகைப்படுத்தப்பட்ட பொய் என்றாலும் அவரின் கவலை உண்மை.
ஒருவேளை அவர் செல்ல வேண்டிய இடம் அருகில் தான் என்றால் இறக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் எங்க போகணும் என்றேன்.
'சந்தோஸ்புரம் போகணும் தம்பி, ஆட்டோ கூட இல்ல, வேளச்சேரில பஸ் இல்ல. இங்கயாது கிடைக்கும்னு வந்தேன், இங்கயும் இல்ல' என்றார்.
சந்தோஸ்புரம் அப்படியொன்றும் எனக்குத் தூரம் இல்லை, மூணு கிமீ, வெறும் ஐந்து நிமிடம். ஆனால் மணி பன்னிரெண்டைக் கடந்து பல நிமிடம் ஆகியிருந்தது. என்னை எதிர்பார்த்து அம்மா நிச்சயம் அரைத் தூக்கத்தில் காத்திருப்பார் என்று தெரியும்.
'வாங்க சார், நான் உங்கள விடுறேன்'
'god bless you' என்றபடி சந்தோசமாக ஏறிக் கொண்டார்.
நகரத் தொடங்கினோம்.
என்னைப் பற்றி என் வீடு இருக்கும் ஏரியாவைப் பற்றி விசாரித்தார். அவரும் அந்த ஏரியாவில் வசித்ததாகக் கூறினார். அவர் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால் வீட்டிற்கு உடனே போக வேண்டும் என்று கூறினார். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்று வருந்தினார். இதன் பின் தான் பேச்சு மெல்ல வேறு பக்கம் சென்றது.
'தம்பிக்கு சௌத்தா'
'ஆமா சார் தென்காசி'
'அதான், நீங்க உதவி செய்யிறத பார்தததும் தெரிஞ்சது. நீங்க சௌத்து-தான்னு, உங்க ஏரியாகாரங்க தான் தம்பி நல்லா உதவி பண்ணுவாங்க, எனக்குக் கூட கோயமுத்தூர் தான். நானும் பலருக்கும் உதவி செஞ்சிருக்கேன். இதோ இப்ப கூட நானா கேட்கல, நான் செஞ்ச உதவி தான் எனக்கு இப்ப உதவி பண்ணுது' என்றார்.
சிரித்தேன். இது எனது வழக்கமான சிரிப்பு தான்.
'தம்பி கிறிஸ்டியனா' என்றார்
'இல்ல சார் இந்து என்றேன்'
'இல்ல கிறிஸ்டியன்னா உடனே உதவி பண்ணுவாங்க, அவங்களுக்கு உதவுற மனப்பான்மை ஜாஸ்தி, நீங்களும் நான் கேக்காம உதவுனீங்க, அதான் கேட்டேன்' என்றார்.
அதற்கும் சிரித்தேன். இதுவும் வழக்கமான சிரிப்பு தான்.
'தம்பி பைபிள் படிச்சி இருக்கீங்களா, எனக்கு பைபிள் ரொம்ப புடிக்கும், டெயிலி பைபிள் படிப்பேன். நம்பிக்க ஜாஸ்தி'
'இல்ல சார் படிச்சது இல்ல' என்றேன்
'வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா படிங்க தம்பி' என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே வண்டியின் வேகத்தை மெல்ல அதிகரித்தேன். பின்னால் உட்கார்ந்திருக்கும் அவர் பயப்படக் கூடாது என்பதற்காக வண்டியை உருட்டிக் கொண்டிருந்தேன். அதனால் வந்த சோதனை இது. என் வழக்கமான வேகத்திற்கு வண்டியை மாற்றிக் கொண்டிருந்தேன். அவரும் தொடர்ந்து பேசத் தொடங்கினார்.
'பைபிள்ல்ல எல்லாமே உண்ம தம்பி, மத்த எல்லா வேதமும் கடவுள் எப்படி இருப்பார்ன்னு சொல்லுது, ஆனா கிரிஸ்தவம் மட்டும் தான் கடவுள் எப்படி உலகுக்கு வருவார்ன்னு சொல்லுது., நீங்க படிச்சது கிரிச்ட்டியன் ஸ்கூலா' என்றார்.
'ஆமா சார்' என்றேன்.
'அங்க படிச்சுமா பைபிள் படிக்காம இருக்கீங்க, இப்பல்லாம் முன்ன மாதிரி கிறிஸ்டின் ஸ்கூல் இல்லப்பா, அப்போ ஒழுக்கத்த சொல்லிக் கொடுத்தாங்க, இப்ப எங்க. அங்க படிச்சு பைபிள் கூட படிக்காம வந்து இருக்கீங்க' என்று அங்கலாய்த்தார்.
இப்போதும் சிரித்தேன். ஆனால் இது வழக்கமான சிரிப்பு இல்லை. ஒருவன் சிரித்துக் கொண்டே இருந்தால் தொடர்ந்து என்ன வேண்டுமானாலும் பேசிக்கொண்டே போகலாம் என்று நினைத்த அவரின் அறிவுஜீவித்தனம் குறித்த சிரிப்பு.
'தம்பி பைபிள் படிச்சா இரக்க குணம் அதிகமாகும். கிறிஸ்டியன் இரக்கமா இருக்கக் காரணம் பைபிள் தான்.' என்றார்.
இப்போதும் சிரித்தேன். ஆனால் இதுவும் வழக்கமான சிரிப்பு இல்லை. அலுவலக அலுப்பு அசத்திக் கொண்டிருக்க 'ஏண்டா லிப்ட் கொடுத்தோம்' என்ற நிலைக்கு என்னைத் தள்ளியிருந்த சிரிப்பு.
'தம்பி சண்முகநாதன்ன்னு ஒருத்தர். ஓர் அன்புக்... தம்பி ஸ்டாப் வந்த்ருச்சு..ஸ்டாப் வந்த்ருச்சு..' என்று எச்சரிக்க.' ஷப்பாடா' என்றபடி அவரை இறக்கிவிட்டேன்.
ஒரே ஒரு நிமிஷம் என்றவர், அந்த இருளில் சிறிது நேரம் பையை துழாவிட்டு ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார். அவர் அதைச் செய்வார் என்று எதிர்பார்த்தேன். 'ஓர் அன்புக் கடவுளின் உண்மைக் கதை' சண்முகநாதன்னு நம்ம நண்பர் எழுதிய புத்தகம். கிறிஸ்தவம், பைபிள் பற்றிய அழகான தெளிவான விளக்கம் இருக்கு, நீங்க படிக்கணும். அவரு ஒரு பெரிய ஆராய்ச்சியாளர்' என்றபடி என்னிடம் கொடுத்தார்.
வாங்கிக்கொண்டு நன்றி என்றேன்.
'god bless you' என்றபடி ஹெல்மட்டில் சிலுவையை வரைந்தார். அதற்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை. என்னுடைய தொலைபேசி எண் கேட்டார். அவரின் உள்ளர்த்தம் எதற்கு என்று தெரிந்ததால் என்னிடமிருந்த அணைத்து வைக்கப்பட்ட எண் ஒன்றைக் கொடுத்துவிட்டு அங்கிருந்துக் கிளம்பினேன்.
வெகுசமீபத்தில் கிடைத்த கேப்பில் மதப்பிரசங்கம் செய்த ஒரு பாஸ்டருக்கு லிப்ட் கொடுத்திருந்தேன். இவர் இரண்டாமவர். இவர் போன்றவர்களிடம் கோபப்பட்டோ வாக்குவாதம் செய்தோ எதுவும் ஆகப் போவதில்லை. எதிர்வினை ஆற்றத் தெம்பும் இல்லை.
வீட்டிற்கு வந்ததும் அந்தப் புத்தகத்தைத் திறந்தேன். அறிவுக் கண்ணைத் திறக்கப் போகும் புத்தகமல்லவா! அந்தப் புத்தகத்தின் நான்காவது கட்டுரை
'இந்து சகோதர மக்களின் வேதம் எது?'
பதில்
ஒரு மிகபெரிய விளக்கத்திற்குப் பின் :
சூலாயுதம் தீமையை அழிக்கும் ஆயுதம். இந்துக்களின் முக்கிய அடையாளம்.
வேதாகமத்தின் படி தீமையை அழிக்க வல்லவர் இறைவன் ஒருவரே. அப்படி தீமையாகிய சாத்தானை அழிக்க வல்லவர் சிலுவைநாதரே. சிலுவையின் மீது வீற்றிருக்கும் அவரே சூலாயுதத்தின் குறியீடு.
இந்து சகோதரர்களே இப்போது கூறுங்கள் உங்களின் வேதம் எது? நீங்கள் முக்தியடைய இது தவிர வழியே கிடையாது என்றபடி நிறைவடைகிறது அந்த கட்டுரை.
அந்த கட்டுரையின் கீழே ஒருபடம் வரைந்திருந்தார்கள். அந்தப் படத்தில் சிலுவைநாதர் சூலாயுதம் வடிவத்தில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார் .
இப்போதும் சிரித்தேன். இது வழக்கமான சிரிப்பா இல்லை வழக்கத்திற்கு மாறான சிரிப்பா தெரியவில்லை!
ஹல்லேலுயா...!