30 Apr 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - தென்காசி வயக்காட்டைத் தேடி

கேள்விகேட்கும் உரிமை யாருக்கும் உண்டு ஆனால் அதனைக் கேட்கும் லாவகம் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அப்படியாக பிறந்தவன்தான் ஆனந்த். அன்றைய தினம் என்னோடு இவன் வந்திருக்கவில்லை என்றால் இப்படியொரு அனுபவத்தை பகிரும் வாய்ப்பு நிச்சயம் எனக்குக் கிடைத்திருக்காது.

கடந்தவாரம் தேர்தல் விடுமுறைக்காக தென்காசி சென்றிருந்த போது விவசாயம் மற்றும் அது சார்ந்த விசயங்களை தெரிந்து கொள்வதற்காக நேரடியாக களத்தில் இறங்கலாம் என முடிவு செய்தேன். அப்போது உடனடியாய் நியாபகத்தில் வந்தவன் ஆனந்த்தான். 'எலேய் ஆயிரப்பேரி பாதையில வயகாட்டுக்கு போகணும், நீயும் வாயேன்' என்றேன். ' நீ போன வை, இன்னும்பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்' என்றான். நான் ஆனந்த் மதன் மூவருமாய் கண்ணில் தென்பட்ட வயல்வெளிகளில் எல்லாம் இறங்கினோம். ஆராய்ச்சிக்காக! ஆராய்ச்சி என்றால் விவசாயம் குறித்த புரிதலுக்கான ஆராய்ச்சி. பத்தாம் வகுப்பு தாவரவியலில் தாவரங்களைப் பற்றி படித்ததோடு சரி அதன்பின் தாவரங்களுக்கும் எனக்குமான தொடர்பு என்பது சமைத்தல் சாப்பிடுதல் என்ற அளவில் மட்டுமே.


சமீபகாலமாக தென்காசி மற்றும் தென்காசியை சுற்றி அமைந்திருக்கும் வயல்வெளிகள் அனைத்தையும் ரியல்எஸ்டேட் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. தென்காசியின் உள்வட்டார வயல்களில் பெரும்பாலானாவை விளைநிலங்களில் இருந்து விலைநிலங்களாக மாறிவிட்டன. முதலில் தென்காசி - நெல்லை சாலையை காலி மனையாக்கியவர்களின் பார்வையில் தற்போது தென்காசி - அம்பை ரோடு பதிந்துள்ளது. தென்காசி - பழையகுற்றாலம் சாலை பெரிதளவில் பாதிக்கப்படா விட்டாலும், அதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர் ரியல்எஸ்டேட் முதலைகள். போதாகுறைக்கு வின்ட்மில்களை சுழலவிட்டு காற்றில் இருக்கும் ஈரப்பதம் மொத்தத்தையும் உறிஞ்சி விடுவதால் எப்போதும் இல்லாத வெப்பத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது தென்றல் 'தவழ்ந்த' தென்காசி.          

மதியம் பன்னிரண்டுமணி, கண்ணுக்கெட்டிய தூரத்தில் பொதிகை மலை காற்று வாங்கிக்கொண்டிருக்க. எங்களையோ வெயில் வாட்டிவதைத்துக் கொண்டிருந்தது. அந்த வெயிலிலும் அசராமல் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரை அணுகி எங்கள் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினோம். கேட்டுவிட்டோமே என்ற காரணத்தால் பதிலளித்தார். அதில் எங்களுக்கு திருப்தியில்லை. சரியாய்ச் சொல்வதென்றால் புரிதலில்லை. அவசர அவசரமாக என்னவெல்லாமோ கூறினார் 'பாக்சைட் காம்பள்க்ஸ் யூரியா தொளிச்சலு பிசானம்' என்னவெல்லாமோ கூறினார், ம்கும் புரியவில்லை. மெல்ல ஆனந்தத்தைப் பார்த்தேன் 'மச்சான் அண்ணே அவசரத்துல இருக்காரு, நாம வேற யாரையாது பாப்போம்' என்றான். எனக்கோ ஏமாற்றம். கிளம்பலாம் என்றேன். மச்சான் அங்க பாரு ஒரு அண்ணன் நமக்காகவே வேல பார்த்துட்டு இருக்காரு, அவர போய் பிடிப்போம், கமான் லெட்ஸ் கோ' என்றான். வேலன்னு வந்துட்டா அவன் வெள்ளக்காரன் மாதிரி. என்னைவிட அதிக உற்சாகமாய் களத்தில் இறங்கி இருந்தான்.

உளுந்து , மிளகா , வெங்காயம் என ஒவ்வொரு வரப்பாக கடந்து ஓரிடத்தில் மல்லிக்கு பாத்தி கட்டிக் கொண்டிருந்தவரிடம் சென்று சேர்ந்தோம். ' அண்ணே விவசாயம் பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னு வந்த்ருகோம், நீங்க உங்க வேலைய பார்த்துட்டே நாங்க கேக்குற சந்தேகத்த தீத்து வையுங்க போதும்' என்றான் ஆனந்த். இப்படி கேட்டதுதான் தாமதம். தலையில் இருந்த தலப்பாவை அவிழ்த்தவர் சிரித்த முகத்துடன் எங்கள் அருகில் வந்து ' அதுகென்ன சொல்லிட்டா போச்சு, என்ன சந்தேகமெல்லாம் இருக்கோ கேளுங்க' என்றார். இப்படித்தான் லட்சுமணன் அண்ணன் எங்களுக்கு அறிமுகம் ஆனார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நாங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் கூறியவர், சில கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டபோது கூட நிதானமாக விளக்கினார். இதற்கு மேல் கேட்பதற்கு ஒன்றும் இல்லை என்ற கட்டத்தை நெருங்கிய போது ஆனந்த் அவரிடம் 'எண்ணே நாங்க கிளம்புறோம், உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோசம். இன்னும் சந்தேகம்னா நேரா உங்ககிட்ட தான் வருவோம்' என்றபடி கையை நீட்டினான். ஆனந்தின் கையைப் பிடித்தவாறே 'தம்பி, அண்ணே பம்புசெட் வேணா போடுறேன், குளிச்சிட்டு போறியளா, தண்ணி சும்ம்மா ஐஸு தண்ணி மாறி இருக்கும்' என்றார்.


'எண்ணனே இப்டி சொல்ட்டீங்க, நீங்க மனசு வச்சா நாளைக்கு நாங்க வந்து குளிச்சிட்டு சமச்சி சாப்ட்டு தான் போறோம்' என்றான் ஆனந்த். எப்போது இப்படியொரு திட்டம் தீட்டினான், எந்த நம்பிக்கையில் கேட்டான் எதுவும் தெரியாது. மறுப்பார் அல்லது மழுப்புவார் என்று நினைக்கையிலேயே 'தராளமா வாங்க, நம்மகிட்ட சமைக்க பாத்திரம் எல்லாம் இருக்கு. காய்கறி அரிசி எல்லா நானே கொண்டுவாரேன்' என்றவர் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த அவரது மனைவியைக் காட்டி 'நல்லா சமைப்பா, நீங்க பம்புசெட்டுல நல்ல குளிங்க, நாங்க சமைச்சு கொடுக்குறோம்' என்றார் லட்சுமணன் அண்ணன். வெறும் ஒரு மணி நேரம் பழகிய எங்கிருந்தோ வந்து ஏதேதோ கேட்ட யாரோ ஒரு மூவரிடம் இவ்வளவு அன்யோன்யத்தைக் காண்பிக்க முடியுமா என்ன? ஒருநிமிடம் அசந்துதான் போனோம்.  

நாளை - வயகாட்டுச் சமையல்       

19 comments:

  1. நல்ல அனுபவம் சீனு. சிலர் இப்படித்தான் முதல் சந்திப்பிலேயே திகைக்க வைக்கிறார்கள்.

    ReplyDelete
  2. அந்த அன்பும் அன்னியோன்னியமும் எளிய மக்களிடம்தான் இன்னும் எஞ்சியிருக்கிறது. ஏதோ ஒரு படத்தில் சூப்பர்ஸ்டார் சொல்வதைப் போல அவர் பணத்தை சம்பாத்திருப்பார் தன் தேவைகளுக்கு. தேவைக்கதிகமாக பணம் இருந்திருந்தால் அது அவரை ஆளுமை செய்திருக்கும். இத்தகைய அன்பு வெளியாகாது. நகரத்து மனிதர்களிடம் இதைத்தான் காண்கிறோம். அப்புறம்... அவர்ட்ட என்னல்லாம் சந்தேகம் கேட்டீங்க. என்னல்லாம் அவர் ‘விம்’மினார் அப்படிங்கறதெல்லாம் நாங்க தெரிஞ்சுக்க தனிப்பகிர்வு வருமா சீனு ஸார்?

    ReplyDelete
  3. அன்பான மனிதர். எங்கிருந்தாலும் வாழ்க....

    இன்னமும் இப்படி சிலர் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

    ReplyDelete
  4. //தாவரங்களுக்கும் எனக்குமான தொடர்பு என்பது சமைத்தல் சாப்பிடுதல் என்ற அளவில் மட்டுமே//

    எனக்கெல்லாம் சாப்பிடுதல் மட்டுமே...

    பாத்திரம் இருக்கு, சமைச்சு சாப்பிட்டுப் போங்கன்னு சொல்ற மனசு யாருக்கு வரும். இவரைப் பார்த்ததும் எனக்கு நார்த்தாமலையில் பார்த்த பழனியப்பா ஞாபகம் வருது. இங்க சென்னைல இந்த மாதிரி விருந்தோம்பலை யார்கிட்டயும் எதிர்பார்க்க முடியாது...

    ReplyDelete
  5. தவிர்த்து அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது - அவர்களின் அன்பில்...

    ReplyDelete
  6. வியக்கத்தக பகிர்வுகள்..

    ReplyDelete
  7. Arumai Seenu, ippadipatta payanangal migavum suvaarasiyam mikkavai..... theriaatha ondrai therinthu kollum ungalathu aarvam rasikka vaikkirathu. adutha pathivukku kaathirukkiren !

    ReplyDelete
  8. வெறும் ஒரு மணி நேரம் பழகிய எங்கிருந்தோ வந்து ஏதேதோ கேட்ட யாரோ ஒரு மூவரிடம் இவ்வளவு அன்யோன்யத்தைக் காண்பிக்க முடியுமா
    >>
    அதான் உழைக்கும் கிராமத்து மக்களின் குணம்

    ReplyDelete
  9. இந்த வெள்ள‌ந்தியான வரவேற்பும் பேச்சும் உபசரிப்பும் கிராமத்து மக்களிடம் எப்போதுமே இருக்கும்!! மனிதம் இன்னும் சில இடங்களில் உயிர்ப்புடனிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்!

    சுவாரஸ்யமான பதிவு!!

    ReplyDelete
  10. இதைத்தான் கிராமத்து பாசம் என்பது! லட்சுமணன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் தோழர் சீனு ...

    ReplyDelete
  12. லட்சுமணன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!//
    சீக்கிரம் சொல்லி விடவும் தோழர் ...

    ReplyDelete
  13. உண்மையில் ஆச்சரியப் பட வைத்துவிட்டார் லட்சுமணன். வாழ்த்துகள் அவருக்கு. சிலசமயங்களில் எங்காவது தொலைவில் இருக்கும் கோவில்களுக்கு போகும்போது இது மாதிரியான அன்பு உபசரிப்பு கிடைக்கும்.
    ஒருமுறை மாயவரம் போய்விட்டு அருகே இருக்கும் கோவில்களை தரிசிக்க ஒரு கார் ஏற்பாடு செய்துகொண்டு கிளம்பினோம். திரு செம்பொன் அரங்கர் கோவிலுக்குப் போகும்போதே மதியம் ஆகிவிட்டது. குழந்தைகள் இருவரும் ரொம்பவும் சிறியவர்கள். பிள்ளை வாய்விட்டே கேட்டுவிட்டான். 'எப்போ மாயவரம் போவோம்? ரொம்ப பசிக்குது' என்று. கோவிலில் இருந்த அர்ச்சகர் ஸ்வாமி இதைக் கேட்டுவிட்டு, 'நம்மாத்துக்கு வாங்கோ, கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு போகலாம்' என்றார். கொஞ்சம் அல்ல நிறையவே போட்டார், அவரது மனைவி.
    அன்று அங்கு நாங்கள் சாப்பிட்டது சாப்பாடு அல்ல; அமுதம்!

    ReplyDelete
  14. //கேள்விகேட்கும் உரிமை யாருக்கும் உண்டு ஆனால் அதனைக் கேட்கும் லாவகம் சிலருக்கு மட்டுமே வாய்க்கும்.//

    ரெம்பச்சரி ....

    இன்றுமுதல், தி.கொ.போ.சீ க்கு பதிலா "தொடரும் சீனு" என்று அழைக்கப்படுவீர் ....

    ReplyDelete
  15. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  16. விருந்தோம்பும் பண்பு அருகி வரும் இக் காலத்தில் இப்படியான மனிதர்களைக் காணும்போது பிரமிப்புத்தான் ஏற்படுகின்றது.

    ReplyDelete
  17. அவர்களுடைய அன்பிற்கும் விருந்தோம்பலுக்கும் எல்லையே இல்லை. மறக்க முடியாத அனுபவம்.

    ReplyDelete
  18. அவர்களுடைய அன்பையும், விருந்தோம்பலையும் மறக்கமுடியாது. இவர்களைப் போல் நல்லுங்கள் ஆங்காங்கு இருப்பதை நினைக்கும்போது மனம் மகிழ்கின்றது.

    ReplyDelete