30 Apr 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - தென்காசி வயக்காட்டைத் தேடி

கேள்விகேட்கும் உரிமை யாருக்கும் உண்டு ஆனால் அதனைக் கேட்கும் லாவகம் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அப்படியாக பிறந்தவன்தான் ஆனந்த். அன்றைய தினம் என்னோடு இவன் வந்திருக்கவில்லை என்றால் இப்படியொரு அனுபவத்தை பகிரும் வாய்ப்பு நிச்சயம் எனக்குக் கிடைத்திருக்காது.

கடந்தவாரம் தேர்தல் விடுமுறைக்காக தென்காசி சென்றிருந்த போது விவசாயம் மற்றும் அது சார்ந்த விசயங்களை தெரிந்து கொள்வதற்காக நேரடியாக களத்தில் இறங்கலாம் என முடிவு செய்தேன். அப்போது உடனடியாய் நியாபகத்தில் வந்தவன் ஆனந்த்தான். 'எலேய் ஆயிரப்பேரி பாதையில வயகாட்டுக்கு போகணும், நீயும் வாயேன்' என்றேன். ' நீ போன வை, இன்னும்பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்' என்றான். நான் ஆனந்த் மதன் மூவருமாய் கண்ணில் தென்பட்ட வயல்வெளிகளில் எல்லாம் இறங்கினோம். ஆராய்ச்சிக்காக! ஆராய்ச்சி என்றால் விவசாயம் குறித்த புரிதலுக்கான ஆராய்ச்சி. பத்தாம் வகுப்பு தாவரவியலில் தாவரங்களைப் பற்றி படித்ததோடு சரி அதன்பின் தாவரங்களுக்கும் எனக்குமான தொடர்பு என்பது சமைத்தல் சாப்பிடுதல் என்ற அளவில் மட்டுமே.


சமீபகாலமாக தென்காசி மற்றும் தென்காசியை சுற்றி அமைந்திருக்கும் வயல்வெளிகள் அனைத்தையும் ரியல்எஸ்டேட் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. தென்காசியின் உள்வட்டார வயல்களில் பெரும்பாலானாவை விளைநிலங்களில் இருந்து விலைநிலங்களாக மாறிவிட்டன. முதலில் தென்காசி - நெல்லை சாலையை காலி மனையாக்கியவர்களின் பார்வையில் தற்போது தென்காசி - அம்பை ரோடு பதிந்துள்ளது. தென்காசி - பழையகுற்றாலம் சாலை பெரிதளவில் பாதிக்கப்படா விட்டாலும், அதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர் ரியல்எஸ்டேட் முதலைகள். போதாகுறைக்கு வின்ட்மில்களை சுழலவிட்டு காற்றில் இருக்கும் ஈரப்பதம் மொத்தத்தையும் உறிஞ்சி விடுவதால் எப்போதும் இல்லாத வெப்பத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது தென்றல் 'தவழ்ந்த' தென்காசி.          

மதியம் பன்னிரண்டுமணி, கண்ணுக்கெட்டிய தூரத்தில் பொதிகை மலை காற்று வாங்கிக்கொண்டிருக்க. எங்களையோ வெயில் வாட்டிவதைத்துக் கொண்டிருந்தது. அந்த வெயிலிலும் அசராமல் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரை அணுகி எங்கள் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினோம். கேட்டுவிட்டோமே என்ற காரணத்தால் பதிலளித்தார். அதில் எங்களுக்கு திருப்தியில்லை. சரியாய்ச் சொல்வதென்றால் புரிதலில்லை. அவசர அவசரமாக என்னவெல்லாமோ கூறினார் 'பாக்சைட் காம்பள்க்ஸ் யூரியா தொளிச்சலு பிசானம்' என்னவெல்லாமோ கூறினார், ம்கும் புரியவில்லை. மெல்ல ஆனந்தத்தைப் பார்த்தேன் 'மச்சான் அண்ணே அவசரத்துல இருக்காரு, நாம வேற யாரையாது பாப்போம்' என்றான். எனக்கோ ஏமாற்றம். கிளம்பலாம் என்றேன். மச்சான் அங்க பாரு ஒரு அண்ணன் நமக்காகவே வேல பார்த்துட்டு இருக்காரு, அவர போய் பிடிப்போம், கமான் லெட்ஸ் கோ' என்றான். வேலன்னு வந்துட்டா அவன் வெள்ளக்காரன் மாதிரி. என்னைவிட அதிக உற்சாகமாய் களத்தில் இறங்கி இருந்தான்.

உளுந்து , மிளகா , வெங்காயம் என ஒவ்வொரு வரப்பாக கடந்து ஓரிடத்தில் மல்லிக்கு பாத்தி கட்டிக் கொண்டிருந்தவரிடம் சென்று சேர்ந்தோம். ' அண்ணே விவசாயம் பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னு வந்த்ருகோம், நீங்க உங்க வேலைய பார்த்துட்டே நாங்க கேக்குற சந்தேகத்த தீத்து வையுங்க போதும்' என்றான் ஆனந்த். இப்படி கேட்டதுதான் தாமதம். தலையில் இருந்த தலப்பாவை அவிழ்த்தவர் சிரித்த முகத்துடன் எங்கள் அருகில் வந்து ' அதுகென்ன சொல்லிட்டா போச்சு, என்ன சந்தேகமெல்லாம் இருக்கோ கேளுங்க' என்றார். இப்படித்தான் லட்சுமணன் அண்ணன் எங்களுக்கு அறிமுகம் ஆனார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நாங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் கூறியவர், சில கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டபோது கூட நிதானமாக விளக்கினார். இதற்கு மேல் கேட்பதற்கு ஒன்றும் இல்லை என்ற கட்டத்தை நெருங்கிய போது ஆனந்த் அவரிடம் 'எண்ணே நாங்க கிளம்புறோம், உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோசம். இன்னும் சந்தேகம்னா நேரா உங்ககிட்ட தான் வருவோம்' என்றபடி கையை நீட்டினான். ஆனந்தின் கையைப் பிடித்தவாறே 'தம்பி, அண்ணே பம்புசெட் வேணா போடுறேன், குளிச்சிட்டு போறியளா, தண்ணி சும்ம்மா ஐஸு தண்ணி மாறி இருக்கும்' என்றார்.


'எண்ணனே இப்டி சொல்ட்டீங்க, நீங்க மனசு வச்சா நாளைக்கு நாங்க வந்து குளிச்சிட்டு சமச்சி சாப்ட்டு தான் போறோம்' என்றான் ஆனந்த். எப்போது இப்படியொரு திட்டம் தீட்டினான், எந்த நம்பிக்கையில் கேட்டான் எதுவும் தெரியாது. மறுப்பார் அல்லது மழுப்புவார் என்று நினைக்கையிலேயே 'தராளமா வாங்க, நம்மகிட்ட சமைக்க பாத்திரம் எல்லாம் இருக்கு. காய்கறி அரிசி எல்லா நானே கொண்டுவாரேன்' என்றவர் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த அவரது மனைவியைக் காட்டி 'நல்லா சமைப்பா, நீங்க பம்புசெட்டுல நல்ல குளிங்க, நாங்க சமைச்சு கொடுக்குறோம்' என்றார் லட்சுமணன் அண்ணன். வெறும் ஒரு மணி நேரம் பழகிய எங்கிருந்தோ வந்து ஏதேதோ கேட்ட யாரோ ஒரு மூவரிடம் இவ்வளவு அன்யோன்யத்தைக் காண்பிக்க முடியுமா என்ன? ஒருநிமிடம் அசந்துதான் போனோம்.  

நாளை - வயகாட்டுச் சமையல்       

15 Apr 2014

Cab Driver - தட் கேப் டிரைவர் மொமன்ட்

'அநியாயமா அந்த பொண்ணு செத்து போச்சே சார்' OMR-ன் சிக்கலான வாகன நெரிசலில் சைலோவின் ஸ்ட்யரிங்கை ஓடித்தபடி பேசத் தொடங்கினார் என்னை நைட் ஷிப்டிற்கு அழைத்துச் செல்ல வந்த கேப் டிரைவர். யாரைக் குறிப்பிடுகிறார் என தெரிந்தபோதிலும் தொடர்ந்து அவர் பேசுவதற்காக மௌனித்திருந்தேன். 'பாவம் சார் உமா மகேஸ்வரிய இப்டி அன்யாயமா கொன்னுட்டாங்களே, ஆனா அது செத்ததும் இல்லாம இப்ப எத்தன பேருக்கு தொல்ல பாருங்க'. இந்த நேரத்தில் இப்படி ஒரு வார்த்தையை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

இவர் என்று இல்லை அந்த அசம்பாவிதத்திற்குப் பின்பாக அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால் அவஸ்தைப்படும் அத்தனை பேரும் உமாமகேஸ்வரி மீது ஒருமுறையாவது கோபப்பட்டு விடுகின்றனர். கோவமானது உமாவைக் கொன்றவர்களைத் தாண்டி உமா மகேஸ்வரி மீதும் பாய்வது வருத்தமான விஷயம். இரவு எட்டு முப்பதுக்கு மேல் பாதசாரியாக அல்ல பார்த்தசாரியாகக்கூட இருசக்கர வாகனத்தில் வெளியில் செல்லக்கூடாது, அலுவலக வாகனத்தை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற சட்டம் வந்ன் பின் பலரது நிலமையும் பரிதாபதிற்குரியதானதே இந்த கோபத்திற்கான காரணம். 



'we are providing cab services in our project' என்று ஆரம்பித்திலேயே கூறியிருந்தாலும் நைட்ஷிப்டிற்கு மட்டும்தான் என் ப்ராஜெக்டில் two way கேப். ஈவ்னிங் ஷிப்டில் இரவு பத்தரைக்கு அலுவலகம் முடிந்து, கேப் கிடைத்து வீடுவந்து சேருவதற்குள் மணி பதினொன்றரை ஆகிவிடும். சமயங்களில் பன்னிரண்டைக் கூட தொடும். அதன்பின் பதிவெழுதுவதைப் பற்றி யோசிக்கக்கூட முடியாது. பகலில் வீட்டு வேலைகள் இருப்பதால் பதிவெழுதுதல் என்பது இரவில் மட்டுமே11-மணிக்குள் வீட்டிற்கு வர வேண்டும் என்பதற்காகவே இத்தனை நாளாக வண்டியில் சென்று கொண்டிருந்தேன். 

தற்போது வண்டிக்கு தடா என்பதால் வீடு அடைய குறைந்தது பன்னிரண்டு ஆகிவிடுகிறது. இந்த சட்டம் யாரை பாதிக்கிறதோ இல்லையோ என்னை வெகுவாக பாதிக்கிறது. இதுபோக மதிய வெயிலில் வீட்டிலிருந்து பேருந்துநிறுத்தம் வரையிலும் ஒன்னரை கிமீ தூரத்திற்கு நடைவேறு, கோடைவெயில் ஆரம்பிக்கும் முன்வரை எதுவும் தெரியவில்லை, இப்போதோ வெந்து தணிந்து கொண்டிருக்கிறேன். இதில் நான் கருத்துவிட்டேன் என்று என் அம்மாவுக்கு கவலை வேறு.  

இப்போது கேப் டிரைவரின் கோபம் உமா மகேஸ்வரியில் இருந்து சமுதாயத்தின் மீது திரும்பி இருந்தது. அதுவரை வெறும் கோவக்காரராய் இருந்தவர் இப்போது அநியாயத்துக்கு கோபக்காரராய் மாறியிருந்தார். எதிர்பட்ட ஒவ்வொரு விஷயத்திற்கும் பொங்கிக் எழுந்து, மானாவாரியாக எழுச்சியுரை ஆற்றிக் கொண்டிருந்தது அவருடைய கோபம். ஒருகட்டத்தில் 'சைக்கிளு பைக்கு எல்லாம் காண்டேத்றான் சார், பாவமே பாக்க கூடாது. த்தா செத்தா இன்னான்னு அச்சி தள்ளிட்டு போயினே இருப்பேன்.' என்றவரை நோக்கி கேவலமாக லுக்குவிட்ட என் எண்ணத்தை புரிந்தவராக தொடர்ந்தார், 'ஒரு சைக்கிள்காரன காப்பாத்த போய் என் அம்பாசிடர் அப்பளமாயிருச்சு, அதான் இந்த காண்டு' என்றபடி மேலும் சூடேறி ஆக்சிலேட்ட்ர் மீது ஏறி நிற்காத குறையாக அழுத்தத் தொடங்கினார். அவர் அழுத்திய அழுத்தில் நூறைத்தாண்டி பறக்கத்தொடங்கியது சைலோ

முன்னிருக்கையில் அமர்ந்திருந்ததால் வண்டியின் வேகத்தை தாறுமாறாக உணர்ந்து கொண்டிருந்தேன். 'ன்னா கொஞ்சம் மெதுவா போலாமே' என்று கூற நினைத்தாலும் 'பின்னாடி பொம்பள புள்ளையே தைரியமா இருக்கு, நீ ஏன் சார் பயப்படுற' என்று கூறிவிட்டால். நமக்கு தான் உசுரவிட மானப்பெரிதாயிற்றே, அதுவும் பொம்பளப் புள்ள முன்னேயென்றால்!    

ஒருவேளை இதுவே 0136 ஆகவோ இல்லை அவர் தம்பி 9616 செல்வமாகவோ இருந்திருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம். கிட்டத்தட்ட அவை எனது ஆஸ்தான கேப். 0136 ஒரு நல்ல கதை சொல்லி, ஏறியதிலிருந்து இறங்கும்வரை எதாவது பேசிக்கொண்டே வருவார், அவருடைய சிங்கப்பூர் வேலையில் இருந்து இன்றுவரை வாழ்கையில் பட்ட கஷ்டநஷ்டங்கள் வரை அவர் பேசுவதற்கு இன்னும் ஓராயிரம் விஷயங்கள் இருக்கின்றன. இருந்தும் இதையெல்லாம் விடவும் அவருக்கு இருக்கும் தற்போதைய கவலை எனக்கொரு காதலி இல்லையே என்பது தான்!  

ரிட்சிஸ்ட்ரீட்டோ அல்லது மூர்மார்க்கெட்டோ சென்றால் ஒரு விஷயத்தை கவனிக்கலாம், அது அவர்களது தொழில்ஞானம். ஆதிகாலத்தில் வந்த மதர் போர்டிலிருந்து நேற்று வெளிவந்த ப்ராஸர் வரையிலும், மெடிக்கலொ கெமிக்கலொ மெக்கானிக்கோ எந்தவொரு பாடத்திற்குமான பாரின்ஆத்தர் பெயர் மொதற்கொண்டு அசால்ட்டாக உச்சரிப்பார்கள். நான் பார்த்தவரையில் இவ்விடங்களில் வேலை செய்வோரில் பெரும்பாலோரின் படிப்பு பள்ளிக்கூடத்தைத் கூடத் தாண்டியிருக்காது. அதே போன்றதொரு வியப்பை ஏற்படுத்துபவர்களே இந்த கேப் டிரைவர்களும். 

பாம்புக்கட்டம் போல் வளைந்து வளைந்து நூறு திருப்பங்களுடன் பயணிக்கும் சாலைகளில் ஒரே ஒருமுறை பயணித்தால் கூட பாதையை எளிதில் நியாபகம் வைத்துக் கொள்கின்றனர். ரூபக்கின் வீட்டிற்கு பலமுறை சென்றுவிட்டேன் இன்றளவிலும் அவன் வீடு நோக்கி நகரும் அந்த வளைந்பாதை ஒரே பனிமூட்டமாகத்தான் இருக்கிறது. 

கேபில் தினமும் என்னோடு பயணிக்கும் மேடவாக்கத்தைச் சேர்ந்த ஒரு மகானுக்கு மேடவாக்கத்தை சுற்றிக் காண்பிக்காவிட்டால் தூக்கம் வராது. மேடவாக்கத்தில் இருந்து மேடவாக்கத்தில் இருக்கும் அவர் வீட்டைச் அடைவதற்காக சுமார் இரண்டு கிமீ தூரத்திற்கு அழைத்துச் செல்லும் அவர் மட்டுமல்ல அந்த ஏரியாவில் இருக்கும் மொத்த கூட்டமுமே மகான்கள் தான்.


9616
சோளிங்கநல்லூர் சிக்னலில் சைலோ மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. 'சார் ஹைவேல மூணு நாளு ஓட்ட சொல்லு ஓட்டிருவேன், த்தா இந்த சிக்னல்ல அரமண் நேரங்கூட ஓட்ட முடியாது. கிளட்ச மிச்சி மிச்சே கால் வலியெடுக்கு சார்' கூறிக்கொண்டே மெல்ல ஸ்பீக்கரின் வால்யுமைக் கூட்டினார். பெரும்பாலும் கேப்களில் அவரவர் ரசனைக்கேற்ப ஒரேமாதிரியான பாடல்களே ஒலிபரப்பப்படும். 

'நீங்க நான் ராஜா சார்' தவிர வேறு எதையுமே 3595-ல் கேட்டதில்லை. ஆவடியில் இருந்து வரும் அம்பாசிடர் டிரைவருக்கு பழைய பாடல்கள் மட்டுமே தேவாமிர்தம் 'ரோஜா மலரே ராஜ குமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி' என்று பாட ஆரம்பிக்கும் பாடல்களோடு தானும் சேர்ந்து பாட ஆரம்பிப்பவர் அவரவர் வீடுகளில் அனைவரையும் இறக்கிவிடும் வரையிலும் தனது இசை சங்கமத்தைத் தொடர்ந்து கொண்டேதான் இருப்பார். 

குறிப்பிட்ட அந்த ஒரு கேபில் ஐட்டம் சாங்கும் குத்துப் பாடலையும் தவிர வேறேதும் ஒலித்து நான் கேட்டதில்லை, அன்றொருநாள் தற்செயலாக 0136 அந்த கேப் டிரைவரைக் காண்பித்து 'சீனு சார் சொன்னா நம்புவியலான்னு தெரில, அந்தா நிக்கான் பாருங்க அவனுக்கு போன மாசந்தான் மூணாவது கல்யாணம் ஆச்சு என்றார்.0136-ல் எப்போதும் எனது விருப்பபாடல்கள் மட்டுமே. அவருக்கு வேற சாய்ஸே கிடையாது.

சோளிங்கநல்லூர் சிக்னல் தாண்டியதும் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கிய சைலோ டிரைவர் தன்னுடைய வாலிப காதல்களையும், கார் ஓட்டும் பொழுது தான் செய்த வீரதீர சாகசங்களையும் பேசத் தொடங்கிருந்தார் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணுக்கும் கேட்கும்விதமாக. சீட்டின் நுனியில் அமர்ந்து சாலையை கூர்ந்து நோக்கிக் கொண்டே சைலோவை செலுத்திக் கொண்டிருந்த அவரை, அப்படி ஒரு வித்தியாசமான பொசிசனில் பார்க்கையில் கொஞ்சம் காமெடியாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. ஆனாலும் வண்டியை பிரேக் போடும் விதத்தை பார்த்த போதுதான் வயிறில் புளியைக் கரைத்து. வகுப்பில் பாடம் கவனிக்கும் பொழுது நமது இரண்டு கைகளையும் டெஸ்க்கின் மீது நீளவாக்கில் வைத்து அரை மயக்கத்தில் படுத்திருப்போமே அதேபோல் தனது இரண்டு கைகளையும் ஸ்டியரிங்கின் மத்தியில் வைத்துக் கொண்டு எதோ ஒரு மையநோக்கு விசையை ஸ்டியரிங்கில் செலுத்தி, ஒடித்து வளைத்து வண்டியை நிலைபடுத்திக் கொண்டிருந்தார். சீட்டின் நுனியில் அவர் அமர்ந்திருந்த நிலையும், நிலைகுத்திய பார்வையும், மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது.

இப்போதெல்லாம் பத்தரை மணிக்கு அலுவலகம் முடிந்து கேப் கிடைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது. ஓவர் கூட்டம். வழக்கமாக கேப் உபயோகிக்கும் எங்களைப் போன்றவர்கள் அல்லாமலும் பலர் வர ஆரம்பித்துவிட்டனர். மிக நீளமான ஒரு க்யுவைக் கடந்து, சண்டை போட்டு கேப் வாங்குவதற்குள் ஒரு யுகம் நகர்ந்துவிடுகிறது. அதிலும் மேடவாக்கம் தாம்பரம் பகுதிகளுக்கு காத்திருப்பவர்களின் நிலமை அந்தோ பரிதாபம்! அதிலும் அண்டர்கிரவுண்டில் காற்றுபுகக் கூட கஷ்டப்படும் இடத்தில் கேபிற்க்காக காத்துக்கிடத்தல் என்பது ஷப்பா மிடில.

சீக்கிரமாகவே கேப் கிடைத்த ஒரு சுபயோக சுபராத்திரியில் காற்று மண்டலத்தைக் கற்கண்டு மண்டலமாக மாற்றிக் கொண்டிருக்கும் யாழ் சுதாகரின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. இதற்குமுன் இவர் குரலை கேட்டிருக்கிறேனா தெரியவில்லை. ஒருவேளை கேட்டிருந்தாலும் மனதில் பதிந்திருக்கவில்லை. இம்முறை கேட்டதும் பிடித்துப்போனது. அதிலும் 'நாதகலா ஜ்ஜோதி இளையராஜ்ஜ்ஜ்ஜாவின்' என்ற உச்சரிப்பும் யாழ்ழ் ஸூதாகர் என்ற குரலும் ரொம்பவே பிடித்துப் போனது, பிரபா இவரை பற்றி ஏதோ எழுதியிருந்தார் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே 'யாரு பாஸு இந்தாளு இழவு வீட்டுல துண்ட பொத்திட்டு பேசுற மாதிரியே பேஸ்ரியான்' என்றான் சக அலுவலகன். அவன் அசிங்கபடுத்தியது யாழ்ழ் ஸூதாகரை மட்டுமல்ல என் ரசனையையும் சேர்த்துதான். வாட் டு டூ... தட் எமசவா மொமன்ட்...

செம்மஞ்சேரி செக்போஸ்ட் கடந்து நாவலூர் திருப்பத்தில் துல்ல்லியமான 110 கிமீ வேகத்தில் வளைந்து கொண்டிருகையில் சாலையோர விளக்குகள் லோ-வோல்டேஜில் மங்கலாக எரிந்து கொண்டிருந்தன. அடுத்த நூறடியில் வரப்போகும் நாவலூர் சிக்னலில் என்ன விளக்கு எறிந்தாலும் அதுபற்றி யாருக்கும் அக்கறையில்லை. யார் எப்போ குறுக்கே வருவார் என்பது நமக்கும் தெரியாது, வரப்போகிறவருக்கும் தெரியாது. மங்கலான ஒளியில் ரோடு வேறு தெளிவாகத் தெரியவில்லை.

 சிக்னலை நெருங்கும் வரையிலும் வண்டியின் வேகத்தையும் குறைக்கவில்லை. நெருங்கிய பின்னும் குறைக்கவில்லை. பச்சை எங்களுக்காக வழிவிட்டுக் கொண்டிருந்த தைரியத்தில் வேகத்தை சிறிதும் மட்டுப்படுத்தமால்  எத்தனிக்கையில் 'அப்படியெல்லாம் உன்ன போ விட்ருவோமா?' என்றபடி குறுக்கே புகுந்தார் ஒரு சைக்கிள்கார பெரியவர். எங்கிருந்து வந்தார் எப்படி வந்தார் எதுவும் தெரியாது. அதேசமயம் சிக்கலான இந்த சிக்னலில் ப்ரேக் பிடித்தால் வண்டி நிற்காதென்றில்லை. நிச்சயம் நிற்கும். என்னவொன்று நிற்கும் போது சைக்கிள் தூக்கி வீசப்பட்டிருக்கும். நொடிபொழுதுதான், இவரும் அவரும் தங்களுக்குள் என்னவோ செய்தார்கள் ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது. அவர் உயிர் காப்பாற்றபட்டது. 

டிரைவரும் நானும் ஒருசேர பெருமூச்சுவிட்டோம். ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது. மிகவேகமாக வண்டியோட்டினாலும் நேர்த்தியாக விபத்தை தவிர்த்த டிரைவரை எண்ணி வியக்கும்போதே மெல்ல சைலோவை சாலையோரத்திற்கு ஒதுக்கினார். பதட்டத்தை தணிப்பதற்காக என நினைத்தநேரத்தில் தனது ஸீட்டில் ஆசுவாசமாக உட்கார்ந்தபடி பாக்கெட்டில் இருந்து தனது கண்ணாடியை எடுத்தார். வெள்ளை சட்டையில் ஸ்டைலாக அதைத் துடைத்துக்கொண்டே 'நானும் கண்ணாடி போடாம சமாளிச்சிரலான்னு பாக்றேன் முடியலய சார், கண்ணாடி போட்டா எதோ வயசாயிட்ட மேரியே ஒரு பீலிங்' என்றபடியே கையிலெடுத்த கண்ணாடியை அணிந்து கொண்டு மெல்ல சைலோவை நகற்ற, மீண்டும் சைலோ வேகமெடுத்துப் பறக்கத் தொடங்கியது.

வாசகர் கூடத்தில்