12 Feb 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - குடுமியான் மலை - குடவரைக் கோவில்

சிவகாசிக்காரன் ராம்குமார் தனது வலைப்பூவில் புதுகோட்டையில் இருக்கும் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த குடவரைக் கோவில்கள் குறித்து எழுதிய போதே அங்கு  செல்ல வேண்டுமென முடிவெடுத்திருந்தோம். புதுக்கோட்டை வருவதாய் இருந்தால் அருகில் இருக்கும் அனைத்து இடங்களையும் சுற்றிக்காட்டுவதாக ராம்குமாரும் வாக்குறுதி கொடுத்திருந்தார். பல்வேறு காரணங்களால் புதுக்கோட்டைப் பயணம் தடைபட்டுக்கொண்டே இருந்த நிலையில் அரசன் தங்கையின் திருமணம் வர அதை ஒரு காரணமாய்க் கொண்டு புதுக்கோட்டை நோக்கி பயணப்பட்டோம்   

இந்த நல்லநாளில் சென்னையில் இருந்து கிளம்பும் சமயம் ராம்குமாரிடம் இருந்து அழைப்பு வந்தது ' நண்பா  மானேஜர் வாராரு என்னால உங்க கூட வரமுடியாத நிலை. எப்படி போகணும்ன்னு சொல்றேன், நீங்க சுத்தி பார்த்துகோங்க' என்றார் அசால்ட்டாக. மனிதர் வேறு ஏகத்துக்கும் பிரபலம் ஆகிவிட்டாரா, அவரை எதிர்த்து கேள்வி கேட்கவே பயமாய் இருக்கிறது. ஒருவேளை ஏதேனும் கேட்டுவிட்டால் அதையே ஸ்டேடஸாக்கி விடுவதில் வல்லவர் என்பதால் 'சரி நண்பா, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்' என்றேன்.

புதுக்கோட்டைக்கு சென்று சேர்ந்தபோது மணி இரவு பத்தரை. பிரபலமாகிவிட்ட காரணத்திலோ என்னவோ தெரியவில்லை நாளுக்குநாள் பாலிசாகிக் கொண்டே போகிறார் ராம்குமார் (ராம்குமாரது காதலிகளின் கவனத்திற்கு). ராம்குமார் அறையின் மொட்டைமாடியில் ஒரு இலக்கிய கூட்டத்தை நிகழ்த்திவிட்டு நித்திரைக்கு செல்லும்பொழுது மணி ஒன்றரையைக் கடந்திருந்தது. 

அன்றைய தினத்தில் எங்கெல்லாம் செல்லவேண்டும், எப்படியெல்லாம் செல்ல வேண்டும் மேலும் செல்லும் இடங்கள் பற்றிய சிலகுறிப்புகள் முதலானவற்றை கொடுத்துவிட்டு ராம்குமார் கழண்டுகொள்ள நாங்கள் குடுமியான் மலையை நோக்கி பயணப்பட்டோம்.

புதுக்கோட்டை நகரத்தில் இருந்து சரியாக 20 கி.மீ தொலைவில் மணப்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ளது குடுமியான் மலை. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மட்டுமே சற்றேனும் பெரிய நகரம், மற்றவை அனைத்தும் கிராமங்களே. அதிலும் நாங்கள் பயணித்த அத்தனை பகுதிகளும் மிகவும் வறண்ட கிராமங்கள். செல்லும் பாதை முழுவதும் மரங்கள் இருந்தாலும் எதிலும் பசுமையே இல்லாத ஒருமாதிரியான வறண்ட பூமி. நல்லவேளையாக அனல் காற்று இல்லை. தப்பித்தோம்.   

குடுமியான் மலையில் இறங்கியதுமே ஆச்சரியம். கூட்டம் கூட்டமாக சிறியதும் பெரியதுமாய் கும்மாளமடித்துக் கொண்டிருந்தன குரங்குகள். இவை அனைத்தும் ஆவியை வரவேற்க வந்த குரங்குக் கூட்டம் என்று தெரியும். இருந்தும் ஆவியை வரவேற்பதற்காக இத்தனை பேர் அதுவும் கூட்டம் கூட்டமாக வருவார்களென கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை ஆவியும் பிரபலமாகிவிட்டாரோ...!    

வழிகாட்டியை பிடித்துகொண்ட ஆவி 

ஒரு சிறிய குன்று, அந்த குன்றின் அடிப்புறத்தில் அமைந்திருக்கும் சௌந்தரநாயகி உடனுறை சிகாநாதர் ஆலயம். கோவிலினுள் நுழையும் போதே அங்கிருக்கும் அமைதியும் ரம்மியமும் கூறிவிடுகின்றன நான் காலத்தால் பழமையானவன் என்று. நுழைந்தவுடன் அமைந்திருக்கும் கல் மண்டபத்தில் விஷ்ணுவின் தசாவதாரா சிற்பங்களை செதுக்கி வைத்திருகிறார்கள். அவற்றை ரசித்துக் கொண்டிருக்கும் போதே ஊர்க்காரர் ஒருவர் அருகில் வந்து ஏதோ பேசத்தொடங்கினார். என்ன பேசினார் என்று தெரியவில்லை ஆனால் அவரது உடல் மொழி 'கோவில சுற்றிக் காட்டுறேன் பணம் தர முடியுமா?' என்பதுபோல் இருந்தது. 'எவ்வளவு வேண்டும்' என்றோம். ஆளரவமற்ற அந்தக் கோவிலில் எங்களை விட்டால் அவருக்கும் வேறு வழியில்லை என்பதால் 'எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை' என்றார். இவ்வளவு தூரம் வந்துவிட்டு இங்கிருக்கும் சிற்பங்களை வெறும் சிற்பங்களாக மட்டுமே பார்த்துச் செல்வதில் அர்த்தம் இல்லை. இக்கோவிலின் பின்னணி வரலாறு முதலியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்ததால் அவரை துணைக்கு அழைத்துக் கொண்டோம்.

அங்கே என்ன தெரிகிறது 

குடுமியான் மலையில் இருக்கும் இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில். தற்போது இந்திய தொல்பொருள் துறையின் கீழ் இருக்கும் இக்கோவிலில் ஓசைவழிபாடு குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. நாங்கள் சென்றிருந்த நேரம் கோவிலின் நடைசாத்தபட்டிருந்தது. 

மின்சார வெளிச்சம் இல்லாமல் இருள் நிறைந்திருந்த கற்பகிரத்தினுள் மௌனமாய் வீற்றிருந்த சிவலிங்கத்தை  ஒருவழியாய்க் கண்டுபிடித்து விட்டோம். இருந்தும் சிவனை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. தற்செயலாய் கவனித்தபோது சிவனுடைய தலையில் நாகம் போன்ற அமைப்பு காணப்பட்டது. முதலில் அது என்ன என்று தெரியாமல் குழம்பினாலும் நாகம்தான் என்ற முடிவுக்கு வந்திருந்தோம். இந்நேரத்தில் எங்களுக்கு வழித்துணையாய் வந்தவர் ஸ்தல வரலாறு குறித்த கதையைக் கூறினார்.

இந்த பகுதியை ஆண்டுவந்த சோழ மன்னன் கோவிலில் நடைபெறும் தினசரி பூஜையில் நாள்தவறாது கலந்து கொள்வான். ஒருநாள் மிக அதிகமான வேலைப்பளு காரணமாக அவனால் குறித்த நேரத்திற்கு பூஜைக்கு வர இயலவில்லை. மன்னன் வரமாட்டான் என்று முடிவு செய்த கோவில் பூசாரி, பூஜையை முடித்துவிட்டு, இறைவனுக்கு வைத்த மலர்களை அந்த ஊரில் இருந்த தேவதாசியிடம் கொடுத்துவிட்டானாம். இந்நேரத்தில் மன்னன் பூஜைக்கு வந்துவிட, என்ன செய்வதென தெரியாத பூசாரி, அந்த மலர்களை தேவதாசியிடம் இருந்து வாங்கிவந்து மீண்டும் இறைவனின் பூஜைக்கு வைத்துள்ளான். பூஜை முடிந்ததும் அவற்றில் இருந்து ஒரு மலரை எடுத்து மன்னனிடம் பிரசாதமாய் கொடுக்க, அப்படி கொடுத்த ஒரு மலரில் தாசியின் மயிர்கற்றை ஒன்று இருந்துள்ளது. இதுகண்டு ஆத்திரம் அடைந்த மன்னன் பூசாரி மீது கடும் கோபம் கொள்ள, அது இறைவனின் சிகை என்றும். இந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு சிகை இருப்பதாகவும் கூறுகிறான். மன்னன் நம்ப மறுக்கிறான்.

அடுத்தநாள் மன்னன் கோவிலுக்கு வருவதற்கு முன் லிங்கத்தின் மீது ஒரு மயிர்கற்றையை வைத்துவிட்டு, இறைவனிடம் மனமுருகிப் தன்னை மன்னிக்க வேண்டி பிராத்திக்கிறான் பூசாரி. அன்றையதினம் கோவிலுக்கு வந்த மன்னன் நேராக சிவலிங்கத்தின் அருகில் சென்று சிகை இருக்கிறதா என்று பார்கிறான். மன்னன் பார்ப்பதை உணர்ந்துகொண்ட பூசாரி லிங்கத்தின் மீது  தான் வைத்த மயிர்களில் இருந்து ஒன்றை எடுத்து காண்பிக்கிறான்.நம்ப மறுக்கும் மன்னன் தன் கைகளாலேயெ ஒரு மயிர்கற்றையைப் பிடித்து இழுக்கிறார். வரவில்லை. மீண்டும் மீண்டும் வலுகொண்டு இழுக்கிறார். ஒரு பெரிய போராட்டத்திற்குப் பின் அவர் கைகளில் ஒரு சிகை சிக்குகிறது. ஆனால் அதிசியமாக அந்த சிகை பிய்த்து எடுக்கப்பட்ட பகுதியில் இருந்து ரத்தம் கசிகிறது. 

புணரமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம்  

அன்றிலிருந்து சிவனார் சிகாநாதர் ஆனார். இதுதான் தலபுராணம் என்றார் எங்கள் வழிகாட்டி. 

திருநலக்குன்றம் என்றும் சிகாநாதர் கோவில் என்றும் அழைக்கப்பட்ட இடம் தற்போது குடுமியான் மலை என்றழைக்கப்படுகிறது.

சோழ மன்னனால் கட்டப்பட்ட இக்கோவிலானது பல்வேறு மன்னர்களின் ஆட்ச்சிகாலத்தில் விரிவு செய்யப்பட்டுள்ளது. சோழன் சிகாநாதருக்கு ஆயிரங்கால் மண்டபத்துடன் கூடிய ஆலயம் எழுப்ப, பாண்டியனோ பத்தாம் நூற்றாண்டில் சௌந்தர நாயகிக்கு ஆலயம் எழுப்பியுள்ளான். இவர்களைத் தொடர்ந்து பதினைந்தாம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த விஜயநகர பேரரசர்கள் கோவிலை புணரமைத்துள்ளனர். மூலவர் சந்திக்கு செல்லும் அர்த்த மண்டபத்தில் பல சிற்பங்கள் உள்ளன. இவை அனைத்துமே மாலிக்கபூர் என்னும் மொகலாய மன்னனின் படையெடுப்பின் போது சிதைக்பட்ட சிற்பங்கள். சிலவற்றில் கை இல்லை, சிலவற்றில் கால் இல்லை, சில மூளியாய் நிற்கின்றன, சில முண்டமாய் நிற்கின்றன. 

சிதைக்கப்பட்ட சிற்பங்கள் 

அதன்பின் பதினேழாம் நூற்றாண்டில் நாயக்கர்களின் கீழ் வந்த ஆலயத்தில் நாயக்கர்கள் நூற்றாண்டு மண்டபம் எழுப்பி புணரமைத்துள்ளனர். இங்கு விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள் இருப்பதால் இதனை தசாவதார மண்டபம் என்றும் குறிப்பிடுகிறார்கள், மேலும் இச்சிற்பங்களுக்கு மத்தியில் ஒரு நிர்வாண மங்கையின் சிலையும் அவளை சிவனடியார்கள் காமத்தோடு நிர்வாணமாக துரத்தி செல்வது போன்றும் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலையானது சைவ வைணவ சண்டைகளை சித்தரிக்கும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளதாக இருக்க வேண்டும். இதே மண்டபத்தின் இரண்டு தூண்களில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. குதிரையின் மீது அமர்ந்திருக்கும் இளவயது கல்கி பகவானாக ஒரு தூணிலும், அதையே குதிரையில் முதியவராக அமர்ந்திருக்கும் கல்கி பகவானாக மற்றொரு தூணிலும் மிக அற்புதமாக வடிவமைத்துள்ளனர். 

மேலும் நாயக்கர்கள் கட்டிய இந்த நூற்றுக்கால் மண்டபமானது மாலிக்கபூர் படையெடுப்பிற்கு பின்னர் கட்டப்பட்டது என்பதால் எவ்வித சேதாரமும் இல்லாமல் தப்பித்து நிற்கிறது. இருந்தும் முறையான பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட இக்கோவிலை இந்த தொல்பொருள் துறை தனது கட்டுப்பாட்டினுள் கொணர்ந்து புணரமைத்து வருகிறது. இடிக்கப்பட்ட/இடிபட்ட மண்டபங்களை மீண்டும் எழுப்பியுள்ளனர் என்பது கூடுதல் தகவல்எங்குமே இயற்கை வெளிச்சத்தைத் தவிர வேறு வேறு வெளிச்சம் இல்லை. நல்லவேளை பகல் பொழுதில் சென்றதால் தப்பித்தோம். 

    

கல்கி பகவான் இளமை மற்றும் முதுமை நிலைகளில் 

எங்கள் வழிகாட்டி அடுத்ததாக எங்களை அழைத்துச் சென்ற இடம் திருமேற்றளி என்னும் ஆதிகோவில். குடுமியான் மலையில் கட்டப்பட்ட முதல் குடவரைக் கோவிலும் இதுவே. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டார். குடவரைக் கோவிலினுள் நுழையும் முன் அதனருகில் பாறைகளில் பொறிக்கப்பட்ட சில கல்வெட்டுகளைக் காட்டினார். பாலிகிரந்த மொழியில் எழுதப்பட்ட இக்கல்வெட்டானது இசைக் கல்வெட்டு என்றும். இசைக்கான இலக்கண குறிப்புக்கள் இங்கு மட்டுமே கல்வெட்டில் பொறிக்கபட்டுள்ளதாயும் கூறினார். மேலும் இவற்றின் அருகே தொன்மை இசைக் கருவிகளின் சிற்பங்களும் செதுக்கபட்டிருந்தன.  ஆவி எப்படியாவது அதில் இருக்கும் படிமங்களை படித்துவிடுவது என்று எவ்வளவோ முயன்று பார்த்தார். அந்தோ பரிதாபம் அவருக்கு பாலிகிரந்தம் தெரியவில்லை என்பதால் இசைக் கல்வெட்டு தப்பித்தது கூடவே நாங்களும்.       

சிலபல படிகளுடன் மேலேறினால் வருவது குடவரைக் கோவில். திருசெந்தூரில் வள்ளியை மணமுடித்த பின் முருகன் இருந்ததாய் கூறப்படும் ஒரு குகைக் கோவில் உண்டு. அது இயற்கையான மிகபெரிய குகை. அதுபோலவே இங்கும் ஒரு குகை உள்ளது இது மனிதர்களால் செயற்கையாக குடையப்பட்ட குகை (அ) குடவரைக் கோவில்.

சிங்கத்தின் குகையைப் போன்ற மிகபெரிய குகையைப் போல் குடைந்துள்ளார்கள். ஒரே நேரத்தில் இருபது பேர் வரை நிற்கமுடியும் அளவிற்கு மிகபெரிய குடவரைக் கோவில். அன்றைய தினத்தில் நாங்கள் பார்த்த மிகபெரிய குடவரைக் கோவிலும் இதுவே. கோவிலின் உள்ளே சிவபெருமான் தனியே தவம் புரிந்து கொண்டுள்ளார். இந்த லிங்கமானது தனியாக செய்து பொருத்தப்பட்ட லிங்கமல்ல, அங்கே அப்படியே செதுக்கப்பட்ட லிங்கம். மலையைக் குடையும் பொழுது, அதே பாறையிலேயே சிவபெருமானுக்கான லிங்கத்தையும் வடித்துள்ளனர்.  

குடவரைக் கோவில் என்பதால் இயற்கை வெளிச்சம் நுழையவும் தடா. அந்த இடமே கும்மிருட்டாக இருந்தது. எங்கள் வழிகாட்டியின் கையிலிருந்த டார்ச் லைட் தான் ஒளி வழங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் குடவரைக் கோவிலின் இடப்புறம் வெளிச்சம் பாய்ச்சினார் வழிகாட்டி. அசந்துவிட்டோம். அத்தனை இருட்டில், திடிரென்று வெளிச்சம் பாய்ச்சப்படும் பொழுது உங்கள் அருகில் பிரம்மாண்டமாய் ஒரு உருவம் நின்றால் எப்படியிருக்கும். அப்படித்தான் நாங்களும் உணர்ந்தோம். அவர்கள் வேறுயாருமில்லை துவார பாலகர்கள்தான். இக்கோவிலின் இருபுறமும் பிரம்மாண்டமாய் நின்ற நிலையில் புன்னகை சிந்துகிறார்கள் இரு துவாரபாலகர்களும். அப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ இத்தனை திறமையானவனா தமிழன். ஆர்வமிருப்பின் தவறவிட்டு விடாதீர்கள். தமிழனின் கலையார்வத்துக்கும், கலை நுணுக்கத்துக்கும், கலை நேர்த்திக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்த குடவரைக் கோவில்.

புன்னகையுடன் துவாரபாலகர் 
மற்றொரு முக்கியமான விஷயம், எங்களுடன் வந்த வழிகாட்டி இல்லையென்றால் அடைத்துக் கிடக்கும் இந்த குடவரைக் கோவிலை அடைத்த நிலையில் அது ஏதோ ஒரு அறை என்ற மனநிலையிலேயே கடந்திருப்போம். நல்லவேளை அவர் அங்கிருந்தார், எங்களை அழைத்தார், காண்பித்தார். நாங்களும் மகிழ்ந்தோம். எங்கள் பயணத்தின் ஆரம்பமே அசத்தலாய் இருந்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வழிகாட்டிக்கு நூறு ரூபாய் வழங்கிவிட்டு அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் சித்தன்னவாசல்.

11 Feb 2014

தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி ஐந்து

'கார்ல போலாமா?' என்ற ஆவியின் கேள்விக்கு ஒருவேளை ரூபக் 'முடியாது' என்றிருந்தால் இந்நேரம் ரயிலில் பயணித்திருப்போம். நல்லவேளை ரூபக் சம்மதித்துவிட்டான்(ர்). பேருந்தில் ஏறியவுடன் தூங்கிப் போகும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒருமுறை கூட பகலில் பயணித்ததில்லை. ஆனால் இன்றோ காரில், கூடவே வலையுலக தோழமைகளும். எனது இப்போதைய மனஉணர்வுகளை விவரிக்க இன்னும் சில பல பத்திகள் தேவைபடும் என்றாலும் உங்கள் நலன் கருதி அவற்றைத் தவிர்த்து விடுவதே நலம்.

தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி ஐந்தின் தேசிய நீரோட்டத்தோடு கலந்திருந்த போது நேரம் - இரண்டு நாற்பத்தி ஐந்து. பெருங்குளத்தூர் கடக்கும் வரையிலும் அடாவடியாக நகர்ந்து கொண்டிருந்த வாகனங்கள் அதன்பின் உல்லாசமாக தங்கள் சிறகுகளை விரிக்கத் தொடங்கியிருந்தன. 

சென்னையில் இருந்து புதுகோட்டை குறைந்தது ஏழு மணி நேரப்பயணம். ஆவியும் ரூபக்கும் மாற்றி மாற்றி வண்டியை ஓட்ட, நான், வாத்தியார் ஸ்கூல்பையன் மூவரும் பின் இருக்கையில் அமர்ந்து நேர்த்தியாக காரை செலுத்துவது எப்படி என வகுப்பெடுத்துக் கொண்டிருந்தோம். ஒருவேளை நாங்கள் மூவரும் கற்றுக் கொடுத்திராவிட்டால், பாவம் ஆவி மற்றும் ரூபக்கின் நிலமையை நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது. நல்லவேளை அப்படியெதுவும் நடந்துவிடவில்லை.  

ஆங்காங்கு தென்படும் சாலையோர மரங்கள். அவ்வபோது வந்து செல்லும் கிராமங்கள் இவை தவிர்த்து இருபுறமும் பரந்து வறண்ட வெட்டவெளி மற்றும் ரியல்எஸ்டேட் வீட்டுமனைகள். என்றாவது ஒருநாள் விலையேறும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் வாங்கப்பட்ட வீட்டுமனைகள் அவை. வானம் பார்த்த புன்செய் நிலங்களில் பெரும்பாலானவற்றை அரசாங்கம் அடிமட்ட விலைக்கு பேரம் பேசி பறித்திருக்க, எஞ்சிய நிலங்கள் வறட்சியாலும், பயிர்செய்ய ஆள் இல்லாத காரணத்தாலும், கோடீஸ்வர  ஆசையாலும் இலவு காத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் மேலும் விவசாய நிலங்கள் மனைகளாக மாறிக்கொண்டே உள்ளன. இப்போதே திண்டிவனம் சென்னைக்கு மிக மிக அருகில் வந்துவிட்ட நிலையில் திண்டுக்கல்லும் சென்னைக்கு மிக மிக அருகில் வந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.  

செங்கல்பட்டு கடந்ததும் வரும் அந்த மிகபெரிய ஆறானது பொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது. செங்கல்பட்டு என்றில்லை வழியெங்கும் நாங்கள் பார்த்த அத்தனை ஆறுகளும் குளங்களும் வறண்டு போய்த்தான் கிடக்கின்றன. வறண்டு போன ஆறுகள் மணல் அள்ள வசதியாய் போய்விட்டதால் மணல் வியாபாரம் ஜெகஜோதியாய் நடைபெற்றுக் கொண்டுள்ளது. நீர் மனிதனுக்கு ஆதாரம். மண் நீருக்கு ஆதாராம். இரண்டையுமே மெல்ல மெல்ல சுரண்டிக் கொண்டிருக்கிறோம். சீக்கிரம் கடல்நீரை குடிக்கப் பழகிக்கொள்ளுங்கள். என்ன ஆனாலும் வாழ்ந்ததாக வேண்டுமே!   

நெடுஞ்சாலையோர கிராமத்து மக்கள் நிலையை நினைத்தால் நிஜமாகவே பரிதாபமாக இருக்கிறது. கணநேரம் கூட ஓய்வில்லாமல் அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு மத்தியில் சாலையை கடத்தல் என்பது பிரம்மபிரயத்தனமாகவே இருக்கிறது. பொறுமை இழந்து சாலையை கடப்பவர்கள், குடித்துவிட்டு சாலையை கடப்பவர்கள், கவனக்குறைவால் சாலையை கடப்பவர்கள் என்று பல விதங்களில் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். பலரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பலரும் தங்களின் பல சவுகரியங்களைத் தியாகம் செய்தாக வேண்டியுள்ளது, அவற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் தவிர்க்க முடியா ஒன்றாகிவிட்டது.

பகலில்கூட பரவாயில்லை, வாகன ஒட்டிகளால் கிராமத்தார்களையும், கிராமத்தார்களால் வாகன ஓட்டிகளையும் தெளிவாக கவனிக்க முடியும். ஆனால் இரவிலோ நிலைமை கொஞ்சம் சிக்கல் தான். அதிலும் இந்த ஏழு மணியிலிருந்து பத்து மணி வரை அதிக கவனத்துடனேயே வாகனம் ஓட்ட வேண்டியுள்ளது. கிராமத்தார்கள் சாலையை கடக்கிறார்களா? இல்லை கடப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்களா? என்பதை அந்த இருளில் கணிக்கவே முடிவதில்லை. பல சந்தர்பங்களில் சிலரின் உயிர் மயிரிழையில் காப்பற்றபட்டது. 

உயிர்காக்கும் வாசகங்கள், பாதுகாப்பு குறிப்புகள் அடங்கிய டிஜிட்டல் பதாகைகள் என்று ஆங்காங்கு நட்டுவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது நெடுஞ்சாலைத்துறை. இருந்தும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வழிசொல்லும் வழிகாட்டிப் பலகைகள் எங்குமே இல்லை. எங்கெல்லாமோ சுற்றி பலரிடமும் வழிகேட்டு ஒருவழியாய் வழியைக் கண்டுபிடித்தோம். ஆனால் மதுரையில் இருந்து புதுகோட்டை வருபவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை, சரியான இடத்தில் வழிகாட்டிப் பலகைகள் இருக்கின்றன. ஒருவேளை சென்னையில் இருந்து வருபவர்கள் அனைவரும் புத்திசாலிகள் எப்படியாவது கண்டுபிடித்து வந்து விடுவார்களென அரசாங்கம் நினைத்திருக்கக் கூடும் போல ஆச்சரியக்குறி.

ரூபக்ராம் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன் என நினைக்கிறன். அவன் எம்.ஜி.ஆர் பட்டு போட வாத்தியார் பாட பாடியே படுத்தியெடுத்து   விட்டார்கள். இதையாவது பொறுத்துக் கொள்ளலாம், நல்ல பாட்டு போடுகிறேன் பேர்வழி என்று தனக்கு மட்டுமே பிடித்த தமிழ்மொழி தவிர்த்த பிறமொழி பாடல்களாக போட்டு படுத்தியெடுத்துவிட்டார் ஆவி.  என்ன மாதிரியான காரில் பயணித்துக் கொண்டுள்ளோம் என்பதை நினைத்து பார்த்துக்கொண்டேன். ஆனாலும் வாத்தியார் கூறிய சில சினிமா குறித்த அரிய தகவல்கள் ஆச்சரியம். 

ரஜினி குறித்து பேசத் தொடங்கிய போது ஒருகட்டத்தில் சிவகாசிக்காரன் ராம்குமாருக்கும் வாத்தியாருக்கும் இடையே கைகலப்பு வந்துவிடுமோ என நினைத்தேன் இறுதியில் அதையே கலகலப்பாக்கி காமெடி செய்துவிட்டார்கள் அவர்கள் இருவரும். மீண்டுமொருமுறை என்ன மாதிரியான காரில் பயணித்துக் கொண்டுள்ளோம் என்பதை காரின் விட்டத்தை நோக்கி தலையை உயர்த்தி, இடமும் வலமும் சிலுப்பி நினைத்து பார்த்துக்கொண்டேன்.   

நெடுஞ்சாலையோரக் கடைகளைப் பற்றி குறிபிட்டே ஆக வேண்டும். கூடுவாஞ்சேரி அருகில் 'காரைகுடில்' என்ற உணவகத்தில் மதிய உணவருந்தினோம். பெயருக்கு ஏற்ப குடில் போன்ற அமைப்பில் கட்டப்பட்ட உணவகம், சுவை சொல்லிக்'கொல்லும்' படியாக இருந்தது. அடுத்ததாக விழுப்புரம் அருகே ஒரு சாலையோர சாயா கடையில் நிறுத்தினோம். அரை கப் பால், கொஞ்சம் காப்பி/டீ தூள் கொஞ்சம் ஜீனி போட வேண்டிய இடத்தில், கொஞ்சம் பால், கொஞ்சம் காப்பி/டீ தூள், அரை கப் ஜீனி போட்டதால் ஏற்பட்ட விளைவு மூன்று காப்பி ஒரு டீ கேட்ட எங்களுக்கு நான்கு கப் பாயாசம் கிடைத்தது. இதில் வாத்தியாருக்கு சுகர் கம்மியாம்...ப்ப்ப்பூப்பூ ஒருவேளை மின்னல் வரிகளின் தொடர் வாசகனாய் இருந்திருப்பான் போல. பழிவாங்கிவிட்டான். இடைப்பட்ட நேரத்தில் அனைவருக்கும் காப்பி வந்து சேர எனக்கு மட்டும் டீ வராத நிலையில் 'தம்பி டீ இன்னும் வரல' என்று ஸ்கூல்பையன் பஞ்ச் அடிக்க, அதைகேட்டு அவன் எங்களை அடிக்கும் முன் எஸ்சானோம்.

விரைவில் 
குடுமியான் மலை, சித்தனவாசல், நார்த்தா மலை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்...