முன் குறிப்பு :
இது என்னுடைய நூறாவது பதிவு, நூறாவது பதிவை பதிவுலகத்திற்கு நன்றி சொல்லி எழுதலாம் என்று நினைத்தால் 25 மற்றும் 50லும் அதைத் தான் செய்துள்ளேன், நான் ஏன் வந்தேன் எதற்கு எழுதுகிறேன் என்றெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் வரும் கொஞ்ச நஞ்ச நண்பர்களும் வரமால் போய் விடும் சாத்தியக்கூறு அதிகம். :-)
உங்கள் அனைவருக்கும் என் நன்றி நன்றி நன்றி...!
என்றும் என்னை புதிதாக புதுப்பித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...!
தமிழ் மீடியம் விடாது கருப்பு
சில நாட்களாகவே எழுத நினைத்த பதிவு நேற்று ஜீவன் சுப்புவின் இந்த பதிவை படித்ததும் தான் இதையே நூறாவது பதிவாக எழுதலாம் என்று தோன்றியது. எழுதுகிறேன் என் பார்வையை...
அந்த அறையில் மிக மெல்லிய அளவில் ஏசி பரவியிருந்தது. மேஜையில் ஐ.டி துறை சம்மந்தமான அத்தனை புத்தகங்களும் மெகா சைஸில் விரவிக் கிடந்தன. என்னை நேர்முகத்தேர்வு காணப் போகும் அந்த ஹெச்.ஆருக்காக காத்துக் கொண்டிருந்தேன்.
இந்தியாவின் மிகப் பெரிய ஐ.டி கம்பெனியின் சென்னை கிண்டி கிளையில் எனக்கான ஒரு வேலைக்காக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த நேரம். காலை எட்டு மணியில் இருந்தே கூட்டம் அள்ளிக் கொண்டிருந்தது. கம்பெனியின் கட்டிடமே மிக கவர்ச்சியாக இருந்தது என்றால் அன்றைய தின பெண்களின் விஷுவல் இன்னும் கவர்ச்சியாக இருந்ததுத் தொலைத்தது என் இளமையை, இந்தக் கம்பெனியை இன்னும் அதிகமாக விரும்பச் செய்தது!
முதல் ரவுண்ட் ஆப்ஸ் கிளியர், இரண்டாம் ரவுண்ட் டெக்னிகல் கிளியர், வந்திருந்த ஆயிரக் கணக்கானவர்களில் நூற்றுக் கணக்கானவர்களை ஜலித்து நேர்முகத் தேர்வுக்கு அனுப்பினார்கள். ஒவ்வொரு கட்டம் தாண்டும் போதும் அம்மாவிடமும் நண்பர்களிடமும் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
2008 ரிசஷன் என்ற சொல்லால் ஐ.டி துறை அதால பாதாளத்தில் இருந்த நேரம் தேவை ஒரு வேலை. இளநிலை முடித்தவுடன் சென்னைக்கு வெளியே திருவள்ளூரில் குடியேறி இருந்த நேரம், மிக அவசரத் தேவை ஒரு வேலை. இல்லை என்றால் சமாளிப்பது மிக கஷ்டம். நான் படிப்பு வராத கேஸ் இல்லை, படிக்கும் நேரமெல்லாம் விளையாட்டுத் தனமாய் இருந்துவிட்டு தேர்வு அன்று காலையில் அவசர அவசரமாக படித்து 75 சதவீதம் வாங்கி பாஸ் ஆகும் கேஸ்.அதனால் என்னுடைய படிப்பை நம்பி முதுநிலை படிக்க வைக்க யோசித்த குடும்பக் கஷ்டம். அதை உணர்ந்து படிக்க விரும்பாத என் மனம்.
மணி மாலை ஐந்து, நேர்முகத் தேர்வுகள் தொடங்கி விறுவிறுப்பான நிமிடங்களில் நகர்ந்து கொண்டிருந்த நேரம், எனக்கான ஹெச்.ஆருக்காக காத்திருந்தேன். நேர்முகத் தேர்வுகாக என்னுடன் ஒரு குழுவாக பிரிக்கப் பட்டவர்கள் மொத்தம் இருபது பேர், பாதிக்கும் மேல் பெண்கள். பெர்ப்யும் மணம் அனைவரின் உடைகளில் இருந்தும் காற்றில் கலந்து கொண்டிருந்தது. என் சட்டையை மோந்து பார்த்தேன் நல்ல வேலை வியர்வை நாற்றம் இல்லை.
அருகில் அமர்ந்து இருந்தவர்கள் அனைவரது விரலிலும் உதட்டிலும் ஆங்கிலம் விளையாடிக் கொண்டிருந்தது. அறையின் குளுமை கை நடுக்கத்தை இன்னும் அதிகமாக்கி இருந்தது. சி, சி++ என்று அவர்கள் பேச்சு மொத்தத்மும் ஆங்கிலமாக, அவ்வபோது சன்னமாக சிரித்த சிரிப்பு கூட ஆங்கிலத்தில் ஒலித்தது போன்ற பிரமை. அந்த சூழ்நிலை என் மொத்த தன்னம்பிக்கையையும் கெடுத்திருந்தது.
படித்த சிலபல இண்டர்வ்யு டிப்ஸ் மற்றும் பிரிபரேசன் கூட மறந்து போயிருந்தது, எனக்கான தருணம் வந்தபொழுது, இதயம் காதுக்கு வெளியில் துடிக்கத் தொடங்கியிருந்தது. வயிறு முழுவதும் பயம், ஏதோ காற்றுப் போய் சப்பிப் போன பலூன் போல என் வயிரை உணர்ந்தேன்.
உள்ளே இறுக்கமான டீ.சர்ட், தொடை பிதுங்கித் தெரியும் ஜீன்ஸ் அணிந்த ஒரு கல்யாணமான மாது (பதிவின் சீரியஸ்னஸ் குறித்து அந்த ஆங்கில வார்த்தையை தவிர்க்கிறேன்!) என் நேர்முகத் தேர்வாளராக. முகத்தில் பெயரளவில் கூட சிரிப்பின் ரேகைகள் இல்லை. இப்போது கூட அவர் என் கண்முன்னே அமர்ந்து என்னை நோக்கி அதே கேள்விகளைக் கேட்பது போன்ற ஒரு பிரமை.
கடமைக்கு ரெஸ்யும். 'வாட்ஸ் யுவர் நேம்', அந்த ஆங்கிலம் புரிவதற்கே எனக்கு அரை நிமிடம் தேவைப்பட்டது, ஸ்ரீநிவாசன், 'அபவுட் யவர் ஸெல்ப்', பி.சி.ஏ, SPKC, +2 தென்காசி கவர்மெண்ட் ஸ்கூல், 'கவர்மெண்ட் ஸ்கூல்' இதை சொல்லும் பொழுது அவரது முக மாற்றத்தை கவனித்தேன், உன்ன நா எப்பவோ ரிஜெக்ட் பண்ணிட்டேன், இதுக்கு மட்டும் எதுக்கு தனி ரியாக்சன் என்பது போல் என்னைப் பார்த்தார்.
'கேன் யு ஜஸ்ட் எலாபரெட் ஆல் திஸ்' என் மனம் துடித்த துடிப்பில் பொருள் சுத்தமாக புரியவில்லை. 'எனக்கு வேல கூட வேணாம், என்ன இந்த இடத்துல இருந்து அப்புறப்படுத்தினா போதும்' என்ற நிலையில் இருந்தேன். முழுதாக மூன்றாம் கேள்வியிலேயே இந்த நிலைக்கு வந்துவிட்டேன்.
'கேன் யு ஜஸ்ட் எலாபரெட் ஆல் திஸ்' மீண்டும் அந்த அம்மா என்னை நோக்கி கேட்டார் இல்லை கத்தினார் என்று கூட பொருள்பட்டுக் கொள்ளலாம், கேவலமான ஒரு எக்ஸ்பிரசன் கொடுத்தேன், ஓகே இப் யு ஆர் செலக்ட்டட், வீ வில் கால் யு' இந்த வார்த்தை ஒரு நிமிடம் என்னுள் 'யு ஆர் செலக்ட்டட், வீ வில் கால் யு' என்பதாக பதிந்தது, மீண்டும் ஒரு முறை அவளை நோக்கினேன் 'வீ வில் கால் யு, நவ் யு கேன் லீவ் அண்ட் மை அட்வைஸ் இஸ் இம்ப்ரூவ் யுவர் கம்யுனிகேசன்'.
'இம்ப்ரூவ் யுவர் கம்யுனிகேசன்' எத்தனை முறை எத்தனை பேரிடம் கேட்ட அட்வைஸ் சட்டனெ புரிந்து கொண்டது, அந்த இறுக்கமான சூழலிலும் சிரித்துவிட்டு எழுந்தேன், திரும்பிப் பார்க்கவில்லை, இது தான் நடக்கப் போகிறது என்று தெரியும், நிதானமாய் யோசித்துப் பார்த்தால் எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருக்கிறது, இருந்தாக வேண்டும், காரணம் அவர் கேட்பது என்னைப் பற்றி, ஆனால் சொல்லத் தெரியவில்லை, எப்படி சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.
எப்போதுமே என்னை தமிழ் மீடியத்தில் படிக்க வைத்ததற்காகவோ இல்லை அரசு பள்ளியில் படிக்க வைத்ததற்காகவோ என் பெற்றோர் மீது கோபம் கொண்டதில்லை, காரணம் என் குடும்பம் பற்றிய புரிதல் எனக்கு விபரம் தெரியும் முன்பே எப்படியோ என் மனதில் பதிந்துவிட்டது.
ஸ்போகேன் இங்க்லீஸ் கிளாஸ் அனுப்பினார்கள், ஹிந்து பேப்பர் வங்கிக் கொடுத்து படிக்க சொன்னார்கள் லிப்கோ, பிரிலியண்ட் எக்ஸட்ரா எக்ஸட்ரா டிக்சனரி வாங்கிக் கொடுத்து படிக்க சொன்னார்கள், ஆங்கிலம் கற்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள், ஆனால் ஆங்கிலம் மீது எனக்கொரு பயம் வரபோகிறது என்ற புரிதலும் எனக்கு விபரம் தெரியும் முன்பே எப்படியோ என் மனதில் பதிந்துவிட்டது.
நான் ஐந்தாவது படிக்கும் வரை ABCD சொல்லத் தெரியாது.
ஏழாவது படிக்கும் வரை எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியாது.
பன்னிரெண்டாவது படிக்கும் வரை கிராமர் என்றால் எமக்கு சாலப் பயம்.
இளநிலையில் ஸ்போகேன் இங்கிலீஷ் பயம்.
நேற்று இந்தியன் இங்க்லீஷ்.
இன்று அமெரிக்கன் இங்க்லீஷ்.
நாளை விடாது கருப்பு...!
இன்று கூட டிவியில் எதாவது ப்ரோக்ராம் முடிவில் எழுத்துகள் போடும் பொழுது அதில் வரும் ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசிக்க சொல்வது என் அம்மாவின் தவிர்க்க முடியா செயலாக உள்ளது. புள்ள மேல அம்புட்டு நம்பிக்க!
விடாது கருப்பு தொடரும்...!