தடங்கல் நாம் நம் அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகி விட்டோம் என்பதை தோல்விக்கு காட்டுவதற்கான தடங்கள். வாழ்கையில் ஒவ்வொரு வேளையில் ஒவ்வொரு விதமான தடங்கல் வருவது இயல்பு. சமீப காலத்தில் இணையத்துடன் இணைய முடியாத அளவிற்கு ஒரு தடங்கல் ஏற்பட்டது, மிகவும் சோர்ந்து விட்டேன், பழைய நிலைக்கு வர முடியுமா மீண்டும் நம்மால் ப்ளாக் எழுத முடியுமா என்பது போன்ற பல கேள்விகளை கேட்டுக் கொண்டும் சமாதானம் அடைய முடியாத பல பதில்களை எனக்கு நானே கூறிக் கொண்டும் இருந்தேன், இறுதியாக நான் எடுத்த முடிவு, இனி எழுத வேண்டாம் (உங்கள் சந்தோசம் புரிகிறது, காத்திருங்கள் இன்னும் பதிவு முழுமையடையவில்லை), மற்ற நண்பர்களின் பதிவுகளை மட்டும் படித்து அவர்களை உற்சாகப்படுத்துவோம் என்ற முடிவுக்கு வந்தேன்.
ஒருவாரம் கழித்து ப்ளாக்கை திறந்தால் பல சந்தோசங்கள் என்னை வரிசையாக வரவேற்றன. அதில் நான் பெற்ற முதல் சந்தோசம் இதை முதல் சந்தோசம் என்பதை விட முதல் விருது என்றும் சொல்லலாம். என்னை மதித்து(!) சகோதரி கலை, அவர் பெற்ற விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டது. என் வாழ்வில் நான் பெற்ற விருதுகளில் இதை எத்தனையாவது விருதாகக் கொள்ளலாம் என்று என்னுடைய வாழ்க்கையை சிறிது பின்னோக்கிப் உற்றுப் பார்த்ததில் ஒன்றைப் புரிந்து கொண்டேன் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் விருது இது தான். அதனால் அந்த மகிழ்ச்சியை எனக்கு அளித்த கலை அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் (ஆண்டவரே கோட்டான கோடி நன்றிகள் ஆண்டவரே கோட்டான கோடி நன்றிகள்).
எனக்கு அளித்த விருதுகளை நான் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு தடங்கலுக்கு வருத்தமும் அதற்கான காரணத்தையும் அதிலிருந்து மீள காரணமானவர்களையும் பற்றி பகிர்ந்துகொள்ள கடமைபட்டுள்ளேன்.
பத்தாவது முடித்தவுடன் "அடுத்து என்ன குரூப் எடுக்க போற" என்ற கேள்விக்கு விடை தேடி ஆரம்பித்த பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பிளஸ் டூ நான் முடிப்பதற்கு முன்பே சமுதாயம் அடுத்த கேள்வியை தயார் செய்து விட்டது "இஞ்சினியரிங் படி" என்ற குரல் திரும்பிய இடங்களில் எல்லாம் எதிரொலித்தது. நான் எடுத்த மிக மோசமான நல்ல மதிப்பெண்களுக்கு (சமுதாயத்தைப் பொறுத்தவரை அது மோசமான மதிப்பெண் நான் படித்த படிப்பை பொறுத்தவரை அது நல்ல மதிப்பெண்!) இஞ்சினியரிங் படிப்பு என்பது கனவாகிப் போனது.மிகப் பெரிய போராட்டத்தின் முடிவில் கலை அறிவியல் கல்லூரியில் படிப்பதற்க்கான இடம் கிடைத்தது. இளங்கலை முடியும் தருவாயில் வேலைக்குச் செல்லபோகிறேன் என்ற என் வாயை அடைத்து "முதுநிலை படி"க்கச் சொல்லியது சமுதாயம்.
சென்னையின் மிகப் பெரிய பொறியியல் கல்லூரி என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிற ஒரு கல்லூரியில் அரசாங்க உதவியுடன் இடம் கிடைத்தது. இறுதி ஆண்டின் இறுதியில் கேம்பஸ் இண்டர்வியு என்ற சம்பிரதாயத்தின் உதவியில் தலைசிறந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சமுதாயதிற்கு தெரியாது அந்த நிறுவனம் வேலைக்கு அழைப்பதற்கு பல நாட்கள் ஆகும் என்று. படிப்பு முடிந்ததும் "எப்ப ஜாயின் பண்ண போற" என்ற கேள்வியையும் அது கேட்கத் தவறவே இல்லை. எனக்குத் தான் தெரியுமே. அதனால் தற்சமயத்திற்காக ஒரு சிறு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நல்ல நாளில் வந்து சேர்ந்துகொள்ளுமாறு அந்த பெரிய நிறுவனம் அழைத்தது. நான் தேர்வானதில் இருந்து சரியாக ஒரு வருடம் பத்து நாட்கள் கழித்து அந்த நிறுவனத்தில் ட்ரைனிங் ஆரம்பமாகியது.
மூன்று மாதங்கள் முடிந்ததும் ப்ராஜெக்ட் கிடைத்து விடும் என்று நம்பிக்கொண்டிருந்த சமுதயத்திற்குத் தெரியாது அங்கே பெஞ்ச் என்ற ஒரு சடங்கு உண்டு என்று. பெஞ்ச் என்றால் ட்ரைனிங் முடிந்து ப்ராஜெக்ட் கிடைக்கும் வரை சும்மா இருக்க வேண்டும் வேலை எதுவும் கிடையாது. ஆனால் சம்பளம் உண்டு. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அது நரகம் என்பது பெஞ்சில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும். சமுதாயம் விழித்துக் கொண்டது "எப்போ ப்ராஜெக்ட் கிடைக்கும்? ஏன் இன்னும் சும்மாவே இருக்க?" கேள்விகளை கேட்டுக் கொண்டே சென்றது. அதற்க்கான பதிலை நானும் தேடிக் கொண்டே இருந்தேன். ஒரு நிருபனின் வேலை நிஜத்தைத் தேடுவது, பெஞ்சில் இருப்பவனின் வேலை நிழலைத் தேடுவது காரணம் அலுவலகத்தினுள் செல்ல அனுமதி கிடையாது. தினசரி அலுவலகம் செல்வது, கிடைக்கின்ற நிழலில் உட்காருவது, சிறுவயதில் உட்கார்ந்து கொண்டு விளையாடும் அனைத்து விளையாட்டுக்களையும் விளையாடுவது, கிண்டல் கேலி மதிய சாப்பாடு பின் வீட்டுக்குப் புறப்பாடு என்ற நிலையிலேயே வாழ்க்கை இரண்டு மாதங்களுக்கு நகர்ந்து கொண்டிருந்தது.
முடிவில்லா நிலை என்பது எதிலுமே இல்லை, பெஞ்ச் வாழ்க்கையும் நிறைவுக்கு வந்து சென்ற வாரம் ப்ரோஜெக்டும் கிடைத்து விட்டது. நான் இருக்கும் ஆவடியிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அலுவலகத்தில் தான் இனி என் வேலை. அங்கு தான் நான் செல்ல வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஆவடி இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து இருந்து சென்னை கடந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் சிறுசேரி சென்று திரும்ப வேண்டும். தலை சுற்றுகிறதா சென்னையில் பலபேரின் அலுவல் நிமித்தம் இப்படித் தான் இருக்கும்.காரணம் சென்னையின் புறநகரில் தான் வீட்டு வாடகை குறைவு. இருபது கி.மீ தொலைவிற்குள் ரூம் பார்த்து அங்கே சென்றுவிட்டேன். இருந்தும் வேலை பழக்கத்திற்கு வரும் வரை கொஞ்சம் கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
என் வாழ்வில் வந்த இந்த மாற்றங்கள் தான் தடங்களுக்குக் காரணம். அதனால் மற்ற நண்பர்களின் எழுத்தை உற்சாகப்படுத்துவதோடு நின்று கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்தேன். அந்த முடிவோடு தான் ப்ளாக்கையும் ஓபன் செய்தேன். ஆனால் முடிவு மாறிவிட்டது இல்லை என்னை உற்சாகப்படுத்தும் உங்களால் மாற்றப்பட்டுவிட்டது. நான் பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை என் பதிவை முதல் ஆளாக படித்து வரும் லாய், பதிவுலகின் முதல் நண்பராய் வந்து என் எழுத்தை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு எப்பொழுது அடுத்த பதிவு எழுதப் போகிறாய் என்று உற்சாகபடுத்துகிற சதீஷ் அண்ணா, முதல் விருது கொடுத்த சகோதரி கலை, பதிவில் நடை எப்படி எப்படி இருந்தால் அது நல்ல பதிவாக இருக்கும் என்று பாடம் சொல்லிக் கொடுத்து என்னை திருத்தும் என் சின்ன வாத்தியார் கணேஷ் சார்,லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக கமெண்ட் கொடுக்கும் நிரஞ்சனா, பல சிறுகதைகள் எழுதி வரும் மெலட்டூர். இரா.நடராஜன் சார், என் ஒவ்வொரு பதிவிலும் இருக்கும் குறை நிறைகளை தவறாது எடுத்துரைக்கும் என் அண்ணன், ஸ்ரீமதி மற்றும் ஜனனி, தவறாது என்னை உற்சாகப்படுத்தும் மணிசார் பிரவீன் வில்வா பவி ராஜி மணிமாறன் மதுரைதமிழன் சீனி ராஜபாட்டை ராஜா ரமணி விச்சு சென்னையை சுற்றிக் காட்ட அழைக்கும் சின்னமலை புதியதாய் கிடைத்த நண்பர்கள் யுவராணி பாலா துளசி கோபால் வெங்கட் நாகராஜ் மூத்த பதிவர்களான லெக்ஷ்மி அம்மா வை கோபால கிருஷ்ணன் ராஜராஜேஸ்வரி அம்மா மற்றும் மனோ சாமிநாதன் என் பதிவிற்க்கான புகைப்படங்களை தந்து உதவும் நண்பன் காளிராஜ் என்று ஒவ்வொருவரும் என் உற்சாகதிற்கான காரணங்கள்.
என் கல்லூரி தோழர்கள், என் உடன் வேலைக்குச் சேர்ந்த தோழர்கள் என்று அனைவர் கொடுக்கும் உற்சாகமும் மிக முக்கியமான காரணங்கள். 'கொஞ்சம் தாமதமாக வந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன் வாத்தியரே. விதி வழியில் செல்வதால் சதி ஒன்று நிகழ்ந்து விட்டது' என்று கணேஷ் சாரிடம் கூறினேன், அதற்க்கு அவர் உதிர்த்த மிக மிக உற்சாகமான வார்த்தைகள் 'விதி வழி செல்லும் வாழ்வில் உங்களுக்கும் சோதனைகள் நேர்கின்றனவா... மீண்டு வாருங்கள். எல்லாம் நமக்கு உரமே...'. .அடுத்ததாக நான் எதிர் பார்க்காத நிகழ்வு என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்து வைத்திருந்த தோழி சசிகலா "தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன்" என்று என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்திருந்த தோழி சசிகலா அவர்கள். எப்போது அடுத்த பதிவு என்று கேட்ட சதீஷ் அண்ணா. இனி பதிவெழுதுவாயா என்று கேட்ட ஸ்ரீ அண்ணா? இப்படி ஒவ்வொருவரிடமும் இருந்து கிடைத்த உற்சாகம் என்னை மீண்டும் பதிவெழுத தூண்டியது. இனி கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற ஆர்வமும் பிறந்ததது.இன்னும் ஒரு மாத காலத்திற்கு என்னால் தொடர்ந்து எழுத முடியுமா என்று தெரியவில்லை ஆனால் உங்களை தொடர்ந்து கொண்டிருப்பேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.
இனி விருது கொடுக்கு நேரம்
என் எழுத்துகளை தன் மின்னல் வரிகளால் பாரட்டும் சின்ன வாத்தியார் கணேஷ் சார் அவர்களுக்கு
தன் சிறுகதைகள் சிறந்த சிந்தனைகள் என்று பலவேறு விதங்களில் எழுதி வரும் அய்யா மெலட்டூர். இரா.நடராஜன் சார்அவர்களுக்கு
எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வரும் நம்மைக் காக்கும் சீரிய பணியில் இருந்தாலும் சிறப்பாக தன் அனுபவங்களை எழுதி வரும் அண்ணன் சதீஷ் அவர்களுக்கு
அலையல்ல சுனாமி என்ற பெயரில் பதவு எழுதி வரும் அண்ணன் விச்சு
எடக்கு மடக்கு என்று பெயர் வைத்திருந்தாலும் தன் மனதில் தொட்ரியதி அப்படியே எழுதும் முட்டாப்பையன் (!) அவர்களுக்கு
எதாவது எழுதுவோம் என்று எழுதினாலும் திருக்குறளை பாமர விளக்கங்களுடன் எழுதி வரும் ஐயா வியபதி அவர்களுக்கு
நிழலுலகில் நிஜத்தை தேடும் சராசரிப் பெண்ணான யுவராணி தமிழரசனுக்கு
சினிமா சினிமா என்ற தலைப்பில் தான் ரசித்த ஆங்கிலத் திரைப்படங்களை அழகான விமர்சனத்துடன் தரும் நண்பன் ராஜ் அவர்களுக்கு
தான் நினைத்ததைச் சொல்லும் தன்னுடைய பதிவில் நூரைக்கண்ட முரளிதரன் அவர்களுக்கு
தன் கவிதை வரிகளால் கவி பாடும் என் வகுப்புத் தோழன், மண்ணின் மைந்தன், உடன் பணியாற்றுபவன் என்று பல சிறப்புகளை பெற்ற கவிபாலா அவர்களுக்கு
என்று இந்த விருதுகளை பகிர்ந்து கொடுக்கிறேன். இந்தச் சிறுவன் மகிழ்வோடு தரும் விருதை பெற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கிறேன்.