
"வாங்கண்ணா, எப்போ வந்தீங்க, எப்டி இருக்கீங்க? " அவளைத் துரத்தும் அவசரத்தில் கால் படபடக்க விடுவிடுவென அவர்மேல் கேள்விகளைத் தொடுத்தேன். படபடபிற்குக் காரணம் நான் அவளைத் துரத்துவதைப் பார்த்துவிட்டாரோ? வீட்டில் வத்தி வைத்து விடுவாரோ என்ற கவலை தான். இத்தனை கேள்விகள் கேட்டும் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே என்னை ஏற இறங்கப் பார்த்தார்.
அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. ஏளனச் சிரிப்பா? இந்தப் பொடியனுக்குப் போய் பதில் சொல்ல வேண்டுமா என்ற எகத்தாளச் சிரிப்பா?நான் ரூட் விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்த வில்லன் சிரிப்பா? புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியும் முன் என்னைத் தரதரவென இழுத்துக் கொண்டு கூட்டத்திற்குள் ஓடினான் என் நண்பன் முத்து.
இவ்வளவு பெரிய கூட்டத்திற்குள் கரைந்த தீபிகாவை எப்படிக் காண்பது? கண்டுபிடிப்பது? என்ற கேள்விகளோடு முத்துவைப் பார்த்தேன். இரவு பத்து மணிக்கு தெருவில் தனியாக நடந்து வரும் பொழுது கடிக்குமா கடிக்காதா என்ற நிலையில் ஒரு நாய் நம்மைப் பார்த்தல் எப்படி இருக்குமோ! அப்படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் இன்று மூன்றாம் திருவிழா. காலை எழுந்தவுடன் திருவிழவிற்கான பத்திரிக்கையை எடுத்து இன்று என்ன நிகழ்ச்சிகள் உள்ளன என்று நோட்டம் விட்டேன்.
108 சங்காபிசேகம் காலை ஏழு மணி தலைமை திரு கண்ணன் அக்ரஹாரம்.
இதைப் பார்த்தவுடன் மனதிற்குள் சொல்ல முடியாத அவசரம். அதே வேகத்துடன் சைக்கிளை முத்துவின் வீட்டை நோக்கி செலுத்தினேன்.
யாரவது எழுப்பினால் தான் விடிந்ததே அவனுக்குத் தெரியும். அதிலும் காலை ஏழு மணியை எல்லாம் அவன் வாழ்நாளில் பார்த்தது கூட கிடையாது. மணியோ ஆறு. அவசர அவசரமாக அவனை எழுப்பினேன். எழுப்புவது நான் என்பதால் எழுந்துவிட்டான். தூக்கம் கலைவதற்கும், கேள்வி கேட்பதற்கும் கூட அவனுக்கு நான் நேரம் கொடுக்கவில்லை.
"இந்தா, இந்த நோட்டிச பாரு. 108 சங்காபிசேகம், தலைமை தீபிகா தாத்தா, கண்டிப்பா அவளும் வருவா." சொல்லச் சொல்ல புரிந்து கொண்டான்.
"நீ வீட்டுக்குப் போய் குளிச்சு ரெடியா இரு, ஏழு மணிக்கு கோவில்ல பாப்போம்" சிரித்துக் கொண்டே எழுந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பும் பொழுது " ஒரு நிமிஷம் என்றான்".
"இன்னிக்கு ஸ்கூல் லீவ் போடணும் அவ்ளோதான" அவன் கேள்வி கேட்க்கும் முன்னே பதிலளித்து விட்டு எந்த இடத்தை விட்டகன்றேன்.
இவ்வளவு துடிப்போடு செயல்படுவதால் தீபிகாவை சைட் அடிப்பது நான் என்று நினைத்து விடவேண்டாம். இடுக்கண் களைவதாம் நட்பு என்று எப்போதோ படித்த குறளை சொல்லிக்காட்டி நட்பு நட்பு என்று வெருப்பேற்றுகிரானே இந்த முத்து அவனுக்காகத் தான் இவ்வளவும்.

"என்ன?" என்றேன்.
"அங்க பாரு, அவ தாத்தா பக்கத்துல உக்காந்த்ருக்கா பாரு" கண்டுபிடித்த பெருமிதத்தில் கத்த ஆரம்பித்தான். ஒட்டு மொத்த கூட்டமும் எங்களை முறைத்து விட்டு மீண்டும் அய்யரின் 'ஓம் க்ரீம் க்லீம்' க்குள் ஐக்கியமாகியது.அவளைப் பார்த்து விட்ட சந்தோசத்தடன் அவனைப் பார்த்தேன், அவன் முகமூ வாடிப் போயிருந்த்தது.
"அதான் பாத்தாசுல்ல அப்புறம் என்ன?"
"அப்போ ஸ்கூல்க்கு லீவ் போட்டது வேஸ்ட்டா!"
"படிச்சா மட்டும் கலெக்டரா ஆகப் போறோம்! நீ ஏழா ரேங்க், நா ரெண்டு அவுட்" அந்த நேரத்திலும் தத்துவம் சொல்ல ஆரம்பித்தான்.
மணி எட்டு சங்காபிசேகம் முடிந்து எல்லாரும் சாமியைப் பார்க்கச் சென்ற பொழுது நானும் அவனும் மட்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு வழக்கமாகச் செல்லும் பாலத்தின் அருகே சென்றோம்.

பள்ளி முடிந்து அவள் மீண்டும் திருவிழாவிற்கு வரும் வரை திருவிழா சுவாரசியம் இல்லாமல் தான் சென்று கொண்டிருந்ததது. எல்லாரும் பொங்கல் வைக்க ஆரம்பித்திருந்தார்கள். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரி ஆயிரம் முகத்தாளைப் பற்றி எப்போதோ பாடியதை ராமு சவுண்ட் சர்வீஸ் இப்போது பாட வைத்துக் கொண்டிருந்த்தார். பத்தாம் வகுப்பு தாண்டிய பையன்கள் ராட்டினத்தில் சுற்ற அனுமதி இல்லாததால் தாவணியில் வரும் தேவதைகளை சுற்றத் தொடங்கி இருந்தார்கள்.
.jpg)
அவள் குடும்பம் பொங்கல் வைக்குமிடம், ராட்டினம் சுற்றுமிடம், கலை நிகழ்ச்சிகள் நடக்குமிடம், பலூன் வளையல்கள் விற்குமிடம், இப்படி எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் தேடினோம். கிடைக்கவில்லை. என்னால் தான் அவளைத் தொலைத்துவிட்டோம் என்ற கோபத்திலேயே எதுவும் பேசாமல் வந்து கொண்டிருந்தான். ஒருவழியாக அவளை கண்டுபிடித்துவிட்டோம். அவள் வயதையொத்த பெண்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். இதை பார்த்ததும் முத்து அவள் நின்றதற்கு எதிர் திசையில் ஓடினான். திரும்பி வரும் பொழுது கையில் ஒரு பலூன் இருந்தது.
அவளுக்கான திருவிழாப் பரிசு அது. பார்வையாலேயே பழகி இருந்ததாலும், திருவிழா கொடுத்த தெம்பும், எங்களை தடையில்லாமல் அவளருகே அழைத்துச் சென்றது. அவளருகே சென்றதும் கொடுக்காமலேயே அவன் கையிலிருந்த பலூனைப் பறித்தாள். எனக்கு அந்த இடத்தில் நிற்பதற்கே கஷ்டமாக இருந்தது. பொறாமையாகவும் இருந்தது. இரண்டு நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், கிளம்பலாம் என்று என் கையைப் பிடித்து இழுத்தான்.
"ஒரு நிமிஷம்" அழைத்தது அவள் தான். "உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்" என்றாள். அந்தக் கேள்வியை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. சந்தோஷத்தில் அவளையே நோக்கினோம். இதழில் புன்னகை சுமந்து மெதுவாக
"டெய்லி அந்த பாலத்துக்குப் பக்கத்துலயே நிக்ரீங்களே யாரையும் ரூட் விடறீங்களா அண்ணா" என்றாள் அப்பாவியாக. நெஞ்சின் மீது யானை ஏறியது போல, காதுக்கு மிக அருகில் இடி விழுந்தது போல இருந்தது. காரணம் அந்த வார்த்தை 'அண்ணா'.
"என்னது அண்ணனா, குட்ரீ பலூன" கோபத்துடன் அவள் கையிலிருந்த பலூனை பிடுங்கினான், பிடுங்கும் போதே பலூன் வெடித்தது. உடைந்த பலூனை ஒரு கையிலும், என்னை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு உடைந்து போன இதயத்துடன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். இன்னது என்று சொல்ல முடியாத நிலையில் நானும் அவனைத் தொடர்ந்தேன்.

அவன் கேட்ட அந்தக் கேள்விக்கு விடையாக புன்னகையை பதிலளிக்கும் பொழுது தான் புரிந்தது அன்று ஸ்ரீ அண்ணா எனக்களித்த புன்னகைக்கான பதில்.
திருவிழாக்கள் இருக்கும் வரை தீபிகாக்கள் அழிவதில்லை.
பின் குறிப்பு : இந்தக் கதையில் இடம் பெற்றுள்ள பெயர்கள் அனைத்தும் உண்மையானவையே
பின் குறிப்பில் மற்றுமொரு குறிப்பு : இது கதையே!