நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் செல்வது என்பார்களே அப்படி ஒரு அனுபவம் தான் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு பேய்படம் பார்ப்பதும். அந்த இரவில் அந்த அமைதியில் அந்த திகிலில் ஜிலீரென நம்முன் வந்து நிற்கும் அந்தப் பேயை நினைத்துப்பாருங்கள். கற்பனை செய்து பார்க்கவே ஜிலீரென்று இல்லை!
அன்னபெல் - கம்ஸ் கோம் நள்ளிரவு காட்சிக்கு முன்பதிவு செய்யும் போது என்னையும் சாண்டியையும் தவிர அரங்கில் வேறு யாரும் முன்பதிவு செய்திருக்கவில்லை. ஒருவேளை கடைசிவரை யாருமே முன்பதிவு செய்யாதிருந்தால் அந்த அனுபவம் இன்னும் திகிலாக இருந்திருக்கும். விதி வலியது. பாதி அரங்கம் நிறைந்திருந்தது. AMC Dolby Sound system உடனான அரங்கம். இசையின் துல்லியமும் உச்சத்தில் இருக்கும்.
*****
காஞ்ஜூரிங் சீரஸ் பார்க்கும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், இவை அனைத்தும் உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டவை என்பது தான். எட் மற்றும் வாரன் தம்பதியினர் நடத்தி வரும் அருங்காட்சியகத்தில் அன்னபெல் இன்னும் பேயுள்ள ஒரு காட்சிப்பொருளாக வைக்கபட்டிருகிறது என்பது மிக முக்கியமான விஷயம். அன்னபெல் - கம்ஸ் கோம் வெளிவருவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் வாரன் தனது 92-வது வயதில் மரணித்துள்ளார். அவருக்கே இந்தத் திரைப்படத்தினை சமர்ப்பித்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.
*****
அன்னபெல் முடியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது அன்னபெல் - கம்ஸ் கோம். தீயசக்தி புகுந்து பேயாட்டம் ஆடிய அன்னபெல் பொம்மையைக் கைப்பற்றி அதனை தங்களுடைய வீட்டிற்கு எடுத்து வருகின்றனர் எட் மற்றும் வாரன் தம்பதியினர். எடுத்து வரும்முன்னரே அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டகப்படுகிறது, இந்த பொம்மையை அழித்துவிட்டால் என்ன? அதற்கு எட் கூறுகிறார், பேயானது இதனுள் இருக்கும் வரைதான் நம்மால் இதனை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், அழித்துவிட்டால் இதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இது மிக மிகப் பத்திரமாகப் பாதுக்காக்கப்பட வேண்டிய ஒரு பொருள்.
நள்ளிரவில் தன்னந்தனியாக எட் மற்றும் வாரன் அன்னபெல்லை பின்னிருக்கையில் வைத்தபடி தங்கள் வீடு நோக்கிப் பயணிக்கிறார்கள். சாலையில் ஏற்கனவே நிகழ்ந்திருந்த விபத்து, இவர்கள் பயணத்தை வேறுபாதையில் மாற்றியமைக்கிறது. அதிலிருந்து சரியாக சில நிமிடங்களில் கார் மக்கர் செய்ய, மயானத்தின் முன் வண்டி நிற்கிறது, அன்னபெல் லேசாக தன் வேலையைக் காண்பிக்கிறது. வாரனுக்கு ஆவிகளைக் காணும், அவற்றோடு பேசும் சக்தி உண்டென்பதால், அந்த சம்பவத்தை மிக லாவகமாக கையாள்கிறார். அன்னபெல் வீடு வந்து சேர்க்கிறது. மந்திர உச்சாடனத்திற்குப் பின், அன்னபெல் ஒரு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கபடுகிறது.
அந்த அறை முழுவதுமே அமானுஷ்ய சக்திகள் அடங்கிய பொருள்களாக நிறைந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தருணத்தில் பிடிபட்டவை. அவையனைத்தும் சுதந்திரமாக காற்றாட இருக்க, புதிதாக வந்த அன்னபெல் மட்டும் இரண்டடுக்குப் பாதுகாப்புக் கருதி கண்ணாடிப் பேழையினுள் நுழைகிறது. "எக்காரணத்தைக் கொண்டும் திறக்காதீர்கள்" என்ற எச்சரிக்கையின் பின் அன்னபெல் மிக சுவாரசியமாக அமரிந்திருக்கிறாள். அமானுஷ்ய சமாச்சாரங்கள் பாதுகாத்து வைக்கபட்டிருக்கும் அறை என்பதால் அதன் பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு வாரமும் அறை முழுமையும் மந்திரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
எட் வாரன், அலுவல் காரணமாக வெளியூர் பயணப்பட, அவர்களது குழந்தை ஜுடியை கவனித்துக்கொள்ளும் பொருட்டு மேரி எலனும், டேனியலும், வாரனின் வீட்டிற்கு வருகிறார்கள். டேனியலின் குறுகுறுப்பு காரணமாக, அமானுஷ்ய அறை திறக்கபடுகிறது. சிறுவயதிலேயே இறந்து போன அவள் அப்பாவை அங்கு தேட முயல்கிறாள். நிஜமாகவே அது ஓர் அமானுஷ்ய அறை என்றால் அதை நிரூபிக்கும் பொருட்டு ஏதுனும் ஒரு சமிக்ஷை வேண்டும் எனப் பேய்களிடம் கட்டளையிட, கெஞ்ச, பேய்கள் எதுவும் அசைந்து கொடுக்காத விரக்கதியில் டேனியலா அங்கிருந்த கிளம்ப எத்தனிக்க, அந்த நொடியில் ஓர் ஆச்சரியம் நிகழ்கிறது. இங்கிருந்து ஆரம்பமாகிறது ரோல்ஸ் ghoester ரைட்.
அன்னபெல் உருவாகிய கதை தெரியும், காஞ்சஜுரிங்கில் அன்னபெல் எவ்வாறு விளையாட்டுக் காட்டியது என்பதும் தெரியும். அன்னபெல் - கம்ஸ் கோம், இரண்டுக்கும் இடைப்பட்ட கதை என்பதால், நல்லவேளை பிளாஷ்பேக் எதுவும் இல்லை என்பது லேசான மன ஆறுதல். வழக்கமான ஒரே வீடு, ஓர் அறைக்குள் நிகழும் வகையறா திரைக்கதை என்றாலும், கதை என ஒரு ஓரத்தில் சில உணர்ச்சிகரமான மென்மையான சம்பவங்களும் நிகழ்கின்றன.
அன்னபெல் - ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொருவரையும் வகைவகையாய் மிரட்ட, முழுமையான சுழலுக்குள் சிக்குவது என்னவோ டேனியலா தான். எட் வாரன் தம்பதிகள் வீட்டில் இல்லாத போது அன்னபெல்லின் அட்டகாசத்திற்குள் சிக்கிக்கொண்ட இந்த மூவரும் என்னவாகிறார்கள், யாரேனும் பிழைத்தார்களா, அன்னபெல் என்னவானது என்பதை மிக ஜாலியான திரைக்கதையாக எழுதி இருக்கிறார்கள். மூவரின் நடிப்பும் அபாரம். ஒரு பேய்ப்படத்திற்கான அத்தனை பேயம்சங்களும் உள்ள படம்.
படத்தின் ஒரேகுறை பேய்த்தனமான காட்சிகளுக்கான வாய்ப்புகள் திரைக்கதையில் ஏராளமாக இருந்தாலும் அவற்றை ஏன் முறையாக உபயோகபடுத்தவில்லை என்பதுதான். பேய்ப்படத்தில் திடீர் ஜிலீர் காட்சிகள் இல்லை என்பது ஒரேகுறை மட்டுமில்லை பெருங்குறையும் கூட. அதற்காக படம் ரசிக்கும் படி இல்லையா என்றால், என்னைப்பொறுத்தவரை கொண்டாட்டமாகவே இருந்தது. என்ன சிக்கன் பிரியாணியை எதிர்பார்த்து சென்றவனுக்கு பரோட்டா சால்னாவைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். மற்றபடி படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.
30 Jun 2019
29 Jun 2019
+9-1-1
வெளியில் சற்றும் பழக்கம் இல்லாத மார்ச் மாதத்துக் குளிர், மணி நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. கதவு வேகமாக தட்டப்படும் சத்தம்.
ஓர் உள்ளுணர்வு. ஒருவேளை அது போலீசாக இருக்குமோ. ஒருவேளை போலீசாக இருந்தால் ! கதவின் துவாரம் வழியாக நோக்கினேன், நின்று கொண்டிருந்த இரண்டு பேருமே போலீஸ். ஒருவர் குள்ளமாக மற்றொருவர் மிக உயரமாக. இருவரின் கைகளும் இடுப்பில் இருந்த துப்பாக்கியின் மீது. துப்பாகிகள் பளீரென மின்னின.
'மகேஷ் போலீஸ் வந்து இருக்காங்க, இப்போ என்ன பண்றது' இதைக் கேட்ட கணத்தில் மெத்தையில் இருந்த துள்ளிக் குதித்த மகேஷின் கண்களில் கோபம், முகத்தில் பரபரப்பு. என் உடல் முழுக்க ஜில் என்று இருந்தது. அமெரிக்கா வந்த முதல் வாரத்திலேயே, எது அமெரிக்கா என புரியும் முன்னமே வீட்டு வாசலில் போலீஸ் நின்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.
'பாஸ் போலீஸ் வார அளவுக்கு என்ன செஞ்சீங்க', கேட்டுக்கொண்டே என்னை நெருங்கியவரின் முகம் இன்னும் சிவப்பாய் மாறியது.
'இப்போ என்ன பண்ண', இதற்குமேல் அப்பாவியாய்க் கேட்க முடியாது. அடுத்த கேள்வி கேட்டால் அவரே என்னைச் சுட்டுத்தள்ளிவிடுவார் போல் இருந்தார்.
'என்ன பண்ணவா, மொதல்ல கதவ தொறங்க பாஸ்' பேசிக் கொண்டிருக்கும் போதே கதவு மீண்டும் பலமாக தட்டப்பட்டது. திறந்தேன்.
'ஹலோவ்வ், வீ ஆர் ப்ரம் ப்ளேனோ போலீஸ் டிபார்ட்மென்ட்', மூளை மிக வேகமாக செயல்படத் தொடங்கியது. எங்கே எப்போது எப்படிப் பிசகியது. அவர்களை அழைத்தது நான் தான்.
*****
அமெரிக்கா வந்து டி-மொபைல் வாங்கிய நாளில் இருந்தே பெரும் பஞ்சாயத்தாக இருந்தது எனக்கும் டி-மொபைலுக்கும். வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி எங்கு நின்று பேசினாலும் சிக்னல் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அமெரிக்காவின் மிக முக்கியமான நெட்வொர்க் என்றுதான் வாங்கிக் கொடுத்தார்கள். ஜெட்லாக் வேறு தீர்ந்தபாடில்லை. இதில் இரவு பதினோரு மணிக்குமேல் தான் offshore மக்கள் வந்து சேர்வார்கள். முதல்முறை ஆன்சைட், பழகாத மனிதர்கள், புரியாத மொழி, இடம், அலுவலகம். மூளை வெகுவாக சோர்வடைந்திருந்தது. இதற்கு மத்தியில் இந்த டி-மொபைல் வேறு.
ஜெட்லாக் போகாத அரைத்தூக்கத்தில், என்ன பேசப்போகிறோம் எனத்தடுமாறும் நள்ளிரவில், 'ஜீ உங்க சிக்னல் ரொம்ப வீக்கா இருக்கு, கொஞ்சம் தெளிவா பேசுறீங்களா' என்ற அதட்டலான குரல் அந்தப்பக்கம் இருந்து வரும். வீடு முழுக்க சுற்றுவேன், எங்கேயும் சிக்னல் இருக்காது. கால் கனெக்ட் ஆகும். டிஸ்கனெக்ட் ஆகும். இப்படியே சுற்றிச்சுற்றி ஒரு வழியாக நன்றாக சிக்னல் கிடைக்கும் இடத்தை கண்டுபிடித்தேன். வீட்டு பால்கனி. எப்போது திறந்தாலும் சில்லென்ற காற்று வெளியே வீசும் பால்கனி. அந்த நள்ளிரவில் அந்தக் குளிரில் இன்னும் ஒரு நிமிடத்திற்கு மேல் நின்றாலும் ஜன்னி வந்துவிடும்.
'பாஸ் ஒழுங்கா ரூம் உள்ள வந்து பேசுங்க, நாளைக்கு ஆபீஸ் போணுமா வேணாமா?' எச்சரித்தது மகேஷ் தான். 'இல்ல உள்ள சிக்னல் கிடைக்கல, அதான்' என்றேன். ஏதோ யோசித்தார். எதுவும் பேசாமால் சென்றுவிட்டார்.
அடுத்தநாளும் வந்தது. offshore காலுக்கான நேரமும் வந்தது. அறையில் இருந்த ஒரு பழைய கார்ட்லெஸ் போனைக் கொண்டுவந்து கையில் கொடுத்தார். 'இந்த போன்ல பேசுங்க. இன்டர்நெட் காலிங் போன். இதுக்கு எந்த சிக்னலும் அவசியம் இல்ல. நெட் இருந்தா போதும். இத ரொம்ப நாளா யூஸ் பண்ணல. உங்களுக்காகத்தான் தேடி கண்டுபிடிச்சேன். பட்டன் எல்லாம் கொஞ்சம் ஹார்டா இருக்கும். ஒரு தடவைக்கு ரெண்டு தடவ அழுத்தினாதா போகும்' என்றார். பலநாள் பயன்பாட்டில் இல்லாத பழைய டவுன் பஸ் போல் இருந்தது அந்த கார்ட்லெஸ்.
*****
கதவைத் திறந்த அடுத்தநொடி அந்த இரண்டு போலீஸ் உருவமும் உள்ளே நுழைந்தது. 'இந்த வீட்ல இருந்து தான் எங்களுக்கு அழைப்பு வந்தது, எதுவும் பிரச்சனையா?' துப்பாக்கியின் மீதிருந்த கைகளை அவர்கள் எடுக்கவே இல்லை
என்னசொல்வதெனத் தெரியாமல் நடந்து முடிந்த அத்தனை கதையையும் அவர்களிடம் விவரித்தேன். அவர்கள் நம்புவதாக இல்லை. உங்கள் எண்ணில் இருந்து அழைப்பு வந்து, எங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் மீண்டும் மீண்டும் அழைத்தோம், எதுவும் பதில் இல்லை. அதனால் தான் நேரில் வந்தோம் என்று விளக்கம் கொடுத்தார்கள்.
அவர்கள் கூறியது முற்றிலும் சரி, அவர்கள் மீண்டும் மீண்டும் அழைத்தபோது 'அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்' என்று கையில் இருந்த கார்ட்லெஸ் போனை அவரிகளிடம் காண்பித்தேன். இரண்டு மூன்று நிமிடம் அதை ஆராய்ந்தவர்கள் "உள்ளே வரலாமா?" என்றார்கள். அதுவரை வாசலிலே தான் நின்று கொண்டிருந்தார்கள். நுழைந்தர்வகள், நாங்கள் என்ன செய்கிறோம், எங்கே வேலை பார்க்கிறோம், அறையில் மொத்தம் எத்தனை பேர், மற்றவர்கள் எங்கே என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுகொண்டே சமையலறைக்குள் நுழைந்தார்கள். போலீஸ் நெடி கொஞ்சம் அச்சுறுத்துவதாக, விபரீதமாக இருந்தது. அரை முழுக்க மௌனம். பார்வையால் வீட்டை அளந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நெஞ்சில் இருந்த சீக்ரெட் கேமெரா எங்களைப் படம் பிடிப்பது தெரிந்தது.
சௌசௌ வெட்டி வைத்திருந்தேன். அடுத்தநாளுக்கான சமையல் நடந்து கொண்டிருந்தது. அறைக்குள் அசம்பாவிதமான, அசாதாரணமான சூழல் எதுவும் நிகழ்கிறதா, நிகழ்ந்துள்ளதா என்பதை நோட்டம் விட்டுக்கொண்டே கொஞ்சம் நட்பாக பேச ஆரம்பித்திருந்தார்கள். அதுவரை இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்தது. சமையலறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த பெரிய கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டார் அந்த உயர் அதிகாரி. கத்தி காய் வெட்ட மட்டுமே என் நம்பிக்கையின் மீது அவருக்கு நம்பிக்கை போலும். சௌசௌ என்றால் என்ன அது எப்படி இருக்கும், எப்படி அதை வைத்து சமைக்க வேண்டும், அதன் சுவை எப்படி இருக்கும். சாம்பார் என்றால் என்ன என்றெல்லாம் கேட்டுவிட்டு, தயவுசெய்து இனி இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் என்ற அட்வைசி விட்டுச் சென்றனர். அவர்கள் கவனம் எண்ணம் செயல் என்னவாக இருந்தாலும் துப்பாக்கியின் மீதிருந்த கைகளை அவர்கள் கடைசிவரை எடுக்கவே இல்லை. அவர்கள் சென்ற பின் மகேஷ் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே!!!
*****
மகேஷ் ஒரு கார்ட்லெஸ் போனை என்னிடம் கொடுத்து உபயோகிக்கச் சொன்னார் என்று சொன்னேன் இல்லையா அதுதான் நடந்த அத்தனை கூத்துகளுக்கும் காரணம். அதில் ஒரு எண்ணை அழுத்தினால் வேறோர் எண்ணும், மற்றோர் எண்ணை அழுத்தினால் சம்மந்தமே இல்லாத எண்ணும் பதிவாகிக் கொண்டிருந்தன, அதனுடன் போராடிக் கொண்டிருக்கும் போதே இந்திய அழைப்புக்கான 91 ஐ அழுத்துவதற்குப் பதிலாக 911 ஐ அழுத்தியிருக்கிறேன், என்னை அறியாமல் எதுவோ நடந்திருக்கிறது. சௌசௌ வைப்பது எப்படி எனக்கேட்க அம்மாவிற்கு அழைத்தால் என்னடா சம்மந்தமே இல்லாமல் யாரோ பேசுகிறார்கள் என அழைப்பை துண்டித்துவிட்டு சாவகாசமாக அம்மாவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டால். சமூகம் வீட்டிற்கே வந்திருக்கிறது என்னவோ ஏதோ என்று.
28 Jun 2019
தென்காசி - வளைவுகளின் ஊடாக
விகடனில் கிக்கி கதை படிக்க ஆரம்பித்த கணத்தில் இருந்தே தென்காசி ஞாபகமாக இருக்கிறேன். அதற்காக கிக்கியை உயர்த்து மதிப்பிடாதீர்கள், நேர விரயம். இருந்தும் சில கதைகளில் வரும் சில வரிகள் போதுமானது காணாமல் போன கடந்த காலத்தினுள் நம்மைக் கொண்டுசேர்க்க. கிக்கியில் திருடன் போலீஸ் விளையாடும் சிறுவர்கள் வழியாக கள்ளாம் போலீஸ் நினைவுகள் வந்து போகின்றன. சின்னச்சின்ன சந்துபொந்து என தென்காசியின் அத்தனை முடுக்குகளிலும் திருடனாகவும் போலீசாகவும் ஓடியிருக்கிறோம். எங்கிருந்து எப்படி எவனை வளைப்பது என்பது முதற்கொண்டு ஓடிக்கொண்டே கட்டம் கட்டுவோம். சொல்லபோனால் திருடனாக இருப்பது மிக எளிது, வளையைக் கண்டுபிடித்து அதனுள் ஒளிந்துகொள்வது மட்டுமே வேலை. அவ்வப்போது வளையை மாற்றிக்கொண்டே இருந்தால் போதும். ஆனால் போலீசாக இருப்பதற்கு கொஞ்சமே கொஞ்சமேனும் மூளை வேண்டும். திருடனின் பாதையிலேயே சென்று திருடனை வளைத்துப் பிடிக்கும் உத்தி தெரிய வேண்டும். தெருவில் எத்தனை வளைகள் இருக்கின்றன, எத்தனை வழிகள் இருக்கின்றன, திருடன் ஓட ஆரம்பித்தால் அவன் ஓடும் திசையில் மற்றொருவனை நிறுத்தி எப்படி அணை கட்ட வேண்டும் என்பது முதற்கொண்டு அனைத்தும் விரல் நுனியில் இருக்க வேண்டும்.
தொட்டுப்பிடிச்சி, கல்லா மண்ணா, கண்ணாம்பொத்தி, கபடி, செவண்டிஸ் என பல விளையாட்டுக்கள் இருந்தாலும் அவை எதுவும் திருடன் போலீசின் அருகில் கூட வர முடியாது.
ஐந்து பேர் திருடன். ஐந்து பேர் போலீஸ். போலீஸ்கள் கண்ணை மூடிக்கொள்ள திருடன் தனக்கான வளையைத் தேடி ஓட வேண்டியதுதான் பாக்கி. ஒரே விதிமுறை யாரும் யாருடைய வீட்டினுள்ளும் ஒளியக் கூடாது. இதுதான் மிகமுக்கியமான விதியும் கூட. இந்த விதியில் இருந்துதான் தென்காசியின் எல்லைகள் எனக்குள் விரியத் தொடங்கின. கீழப்பாளையத்தின் அத்தனை முடுக்குகளிலும் நாங்கள் இருந்தோம். 'ஏலப்பிடில அவன', 'தொரத்துல அவன' எனப் பம்பரங்க்களாய் சுழன்று கொண்டிருந்த வளைவுகள் அவை. அத்தனை வளைவுகளும் ஏதோ ஒரு வளைவினுள் நுழைந்து எங்கெங்கோ சென்று மீண்டும் ஒரு வளைவினுள் கொண்டுபோய் சேர்ந்திருக்கும், பலநூறு புள்ளிகளை இணைத்த கோலம் போல, வளைந்து நெளிந்து ஓடும் ரத்த நாளம் போல, முடிவில்லா முடிவிலியைப் போல.
தொண்ணூறுகளின் மத்தியில் எனக்குத் தெரிந்த தென்காசிக்கும் இன்றைய தென்காசிக்கும் துளியும் சம்மந்தமில்லை. இத்தனைக்கும் கால ஓட்டத்தில் வெறும் இருபது வருடங்கள் மட்டுமே நகர்ந்திருக்கிறோம். இந்த இருபது வருடங்களில் தென்காசி பெரும்பாலும் கான்கிரீட்டாக மாறிவிட்டது. குறைந்தது ஐந்து கிமீ சுற்றளவிற்காவது நகரம் தன்னை விரித்து மாற்றிக் கட்டமைத்திருக்கிறது. அன்றைய தென்காசி அப்படி இல்லை. வாய்க்காபாலம், யானைப்பாலம், ரயில்வே பாலத்தை மீறி விரிந்திருக்கவில்லை. இருள் மங்கிய நேரங்களில் யாரும் தங்கள் அலுவல்களை வைத்துக்கொள்வதில்லை. சுற்றிலும் நதியும், தென்றலும், அதன் பின் மலைகளும், அருவியும் சூழ்ந்த பேரூர் அது.
நகரம் விரிவடைகையில் 'ஏல இப்டி ஒரு அத்ததுல போயா பஸ்டாண்ட வப்போனுவ கிறுக்குத் தாயோளியோ' என பலரும் வசை பாடியதை கேட்டதுண்டு. இன்றைக்குப் புது பஸ்டாண்டு நகரின் மத்தியைப் போல ஆகிவிட்டிருக்கிறது. அன்றைக்கு தென்காசிக்கு என இருந்த அந்த ஒரேயொரு பேருந்து நிலையமும் அத்தனைப் பெரிதாகத் தெரிந்ததுண்டு, புது பஸ்டாண்ட் பழைய பேருந்து நிலையத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டிருந்தது. பல வருடங்களுக்கு ஒரு பாழடைந்த பங்களாவைப் போல், வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கடைசி மதில் சுவரைப் போல் நின்று கொண்டிருந்தது பழைய பேருந்து நிலையம். அதனுள் நிறைந்திருந்த ஜனத்திரள் இன்றைக்கும் மங்கலான வெளிச்சத்தில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. தென்காசிக்கான பெரிய மாற்றம் அந்த பேருந்து நிலையத்தில் தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஊரின் முகம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. திண்ணை வைத்துக் கட்டப்பட்ட அத்தனை வீடுகளும் வழக்கொழிந்து போய்விட்டன. ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் பெரும்பாலும் இல்லாமல் ஆகிவிட்டன. தகரம் வேய்ந்த எங்கள் வீட்டுக்கூரை இன்றைக்கு கான்கிரீட்டாக மாறி நிற்கிறது. பல வளைவுகள் வீடுகளாக வீட்டு மதில்களாக மாறி நிற்கின்றன. மிக நெருக்கமான வீடுகள், வீதிகள். ஊரின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் தெரியும் தென்காசி பெரிய கோவில் கோபுரம் கூட கான்கிரீட்டின் கூரைகளுக்கு மத்தியில் தனியொருவனாக நின்று கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் அது ஒன்றுதான் தென்காசியின் பழைய கட்டிடமாக நிற்கும் என நினைக்கிறேன். இன்றைக்கும் தென்காசியில் மாறாதிருக்கும் ஒன்று என்றால் அது பெரிய கோவில் காத்துதான். ஒரு கடற்கரையைப் போல மாறிவருகிறது அந்த இடம்.
இரவு நேரங்களில் தென்காசி ரயில்வே கேட்டைத் தாண்டிப் போவதற்கே பயப்படுவார்களாம், நிஜ கள்ளன் போலீஸ் விளையாட்டு நடைபெறும் இடமாக இருந்திருக்கிறது அந்தப்பகுதி. ரயில்வே கேட்டைத்தாண்டி இருந்த ஒரேயொரு முக்கியமான இடம் நாங்கள் படித்து வளர்ந்த கவர்மென்ட் ஸ்கூல். ஏழுமணிக்கு மேல் ஒரு ஈ காக்கா அங்கு இருக்காதாம்.
நகரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. காற்றாலைகள் ஒருபுறம் ஈரப்பதத்தையும் நிலத்தடி நீரையும் இல்லாமல் செய்தாலும், பலபேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது என்னவோ உண்மை. முன்னெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியும் வயக்காடுகள் அருகி வருகின்றன. நகரின் குளுமை வெகுவாக குறைந்துவிட்டது. ஐந்து தெருவுக்கு ஒரு அடிபம்பு இருந்த காலம் போய், தெருவுக்கு ஐந்து அடிபம்பு வந்து அதுவும் போதாமலாகி இன்றைக்கு போர்வெல் குழாய்க்கும் அடிபிடி சண்டை நடக்குமளவிற்கு தீவிரம் அடைந்திருக்கிறது தென்காசியின் தண்ணீர்ப் பிரச்சனை.
ஊர்முழுக்க செண்பகவனம் நிறைந்திருந்த சிற்றாற்றுக் கரை ஓரங்களில் நீர் அருந்த புலி வருமாம். இதைக் கேட்ட என்னால் அந்தக்காட்ச்சியை கற்பனை செய்ய முடிந்ததே தவிர நம்ப முடியவில்லை. சிற்றாற்றில் கடல் போல் வெள்ளம் போகும் என்பதையும் மிகப்பெரும் கற்பனையாகவே உணர்கிறேன். நாளை சிற்றாரே மிகப்பெரும் கற்பனை என்றாகிவிடுமோ என்பதை நினைக்கும் போதுதான் புலி நீர் அருந்தி இளைப்பாறிச் சென்ற கதையை என்னால் வெறும் கதையென நம்ப முடியவில்லை. நதிக்கரையில் கட்டமைக்கப்பட்ட நாகரீகம் அதே நதிக்கரைகளை உடைத்தெடுப்பதன் மூலம் தன் அடுத்த பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நீங்களும் நானும் ஒரு நாடோடியாக, ஒரு பார்வையாளனாக, ஒரு சாட்சியாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு நாமே சாட்சி.
தொண்ணூறுகளின் மத்தியில் எனக்குத் தெரிந்த தென்காசிக்கும் இன்றைய தென்காசிக்கும் துளியும் சம்மந்தமில்லை. இத்தனைக்கும் கால ஓட்டத்தில் வெறும் இருபது வருடங்கள் மட்டுமே நகர்ந்திருக்கிறோம். இந்த இருபது வருடங்களில் தென்காசி பெரும்பாலும் கான்கிரீட்டாக மாறிவிட்டது. குறைந்தது ஐந்து கிமீ சுற்றளவிற்காவது நகரம் தன்னை விரித்து மாற்றிக் கட்டமைத்திருக்கிறது. அன்றைய தென்காசி அப்படி இல்லை. வாய்க்காபாலம், யானைப்பாலம், ரயில்வே பாலத்தை மீறி விரிந்திருக்கவில்லை. இருள் மங்கிய நேரங்களில் யாரும் தங்கள் அலுவல்களை வைத்துக்கொள்வதில்லை. சுற்றிலும் நதியும், தென்றலும், அதன் பின் மலைகளும், அருவியும் சூழ்ந்த பேரூர் அது.
நகரம் விரிவடைகையில் 'ஏல இப்டி ஒரு அத்ததுல போயா பஸ்டாண்ட வப்போனுவ கிறுக்குத் தாயோளியோ' என பலரும் வசை பாடியதை கேட்டதுண்டு. இன்றைக்குப் புது பஸ்டாண்டு நகரின் மத்தியைப் போல ஆகிவிட்டிருக்கிறது. அன்றைக்கு தென்காசிக்கு என இருந்த அந்த ஒரேயொரு பேருந்து நிலையமும் அத்தனைப் பெரிதாகத் தெரிந்ததுண்டு, புது பஸ்டாண்ட் பழைய பேருந்து நிலையத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டிருந்தது. பல வருடங்களுக்கு ஒரு பாழடைந்த பங்களாவைப் போல், வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கடைசி மதில் சுவரைப் போல் நின்று கொண்டிருந்தது பழைய பேருந்து நிலையம். அதனுள் நிறைந்திருந்த ஜனத்திரள் இன்றைக்கும் மங்கலான வெளிச்சத்தில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. தென்காசிக்கான பெரிய மாற்றம் அந்த பேருந்து நிலையத்தில் தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஊரின் முகம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. திண்ணை வைத்துக் கட்டப்பட்ட அத்தனை வீடுகளும் வழக்கொழிந்து போய்விட்டன. ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் பெரும்பாலும் இல்லாமல் ஆகிவிட்டன. தகரம் வேய்ந்த எங்கள் வீட்டுக்கூரை இன்றைக்கு கான்கிரீட்டாக மாறி நிற்கிறது. பல வளைவுகள் வீடுகளாக வீட்டு மதில்களாக மாறி நிற்கின்றன. மிக நெருக்கமான வீடுகள், வீதிகள். ஊரின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் தெரியும் தென்காசி பெரிய கோவில் கோபுரம் கூட கான்கிரீட்டின் கூரைகளுக்கு மத்தியில் தனியொருவனாக நின்று கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் அது ஒன்றுதான் தென்காசியின் பழைய கட்டிடமாக நிற்கும் என நினைக்கிறேன். இன்றைக்கும் தென்காசியில் மாறாதிருக்கும் ஒன்று என்றால் அது பெரிய கோவில் காத்துதான். ஒரு கடற்கரையைப் போல மாறிவருகிறது அந்த இடம்.
இரவு நேரங்களில் தென்காசி ரயில்வே கேட்டைத் தாண்டிப் போவதற்கே பயப்படுவார்களாம், நிஜ கள்ளன் போலீஸ் விளையாட்டு நடைபெறும் இடமாக இருந்திருக்கிறது அந்தப்பகுதி. ரயில்வே கேட்டைத்தாண்டி இருந்த ஒரேயொரு முக்கியமான இடம் நாங்கள் படித்து வளர்ந்த கவர்மென்ட் ஸ்கூல். ஏழுமணிக்கு மேல் ஒரு ஈ காக்கா அங்கு இருக்காதாம்.
நகரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. காற்றாலைகள் ஒருபுறம் ஈரப்பதத்தையும் நிலத்தடி நீரையும் இல்லாமல் செய்தாலும், பலபேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது என்னவோ உண்மை. முன்னெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியும் வயக்காடுகள் அருகி வருகின்றன. நகரின் குளுமை வெகுவாக குறைந்துவிட்டது. ஐந்து தெருவுக்கு ஒரு அடிபம்பு இருந்த காலம் போய், தெருவுக்கு ஐந்து அடிபம்பு வந்து அதுவும் போதாமலாகி இன்றைக்கு போர்வெல் குழாய்க்கும் அடிபிடி சண்டை நடக்குமளவிற்கு தீவிரம் அடைந்திருக்கிறது தென்காசியின் தண்ணீர்ப் பிரச்சனை.
ஊர்முழுக்க செண்பகவனம் நிறைந்திருந்த சிற்றாற்றுக் கரை ஓரங்களில் நீர் அருந்த புலி வருமாம். இதைக் கேட்ட என்னால் அந்தக்காட்ச்சியை கற்பனை செய்ய முடிந்ததே தவிர நம்ப முடியவில்லை. சிற்றாற்றில் கடல் போல் வெள்ளம் போகும் என்பதையும் மிகப்பெரும் கற்பனையாகவே உணர்கிறேன். நாளை சிற்றாரே மிகப்பெரும் கற்பனை என்றாகிவிடுமோ என்பதை நினைக்கும் போதுதான் புலி நீர் அருந்தி இளைப்பாறிச் சென்ற கதையை என்னால் வெறும் கதையென நம்ப முடியவில்லை. நதிக்கரையில் கட்டமைக்கப்பட்ட நாகரீகம் அதே நதிக்கரைகளை உடைத்தெடுப்பதன் மூலம் தன் அடுத்த பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நீங்களும் நானும் ஒரு நாடோடியாக, ஒரு பார்வையாளனாக, ஒரு சாட்சியாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு நாமே சாட்சி.
27 Jun 2019
சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்!!!
சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சுந்தர் பிச்சையிடம் இருந்து நட்பு அழைப்பு வருமென. மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். அது அவர்தானா. இல்லை அவருடைய போலியா என. சுந்தர் பிச்சையின் பக்கத்திற்குள் நுழைந்து அத்தனை தகவல்களையும் ஆராய்கிறேன், அவையனைத்தும் 'சுந்தர் பிச்சையாகிய நான்' என்கிறது. உலகம் ஒருமுறை நின்று சுற்றுவது போல் இருக்கிறது இல்லையா. இல்லை. உங்களுக்கெப்படித் தெரியும். அவர் நட்பழைப்பு விடுத்தது எனக்கல்லவா. ஆகலையால்...
அவருடைய முகப்புப் படத்தையே மிகக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதெப்படியெனத் தெரியவில்லை, பெரிய மனிதர்களுக்கெல்லாம் அட்டகாசமான முகப்புப்படம் கிடைத்துவிடுகிறது. முகம் முழுக்கப் பிரகாசம், லேசாக ஒரு பக்கம் திரும்பிய, அதீத மலர்ச்சியுடனான, பாந்தமான முகம். தேவையை விட கொஞ்சம் கூட அதிகமாக சிரிக்காத விழிகள். கொஞ்சமே கொஞ்சம் நரைத்த தாடி என பக்கத்து வீட்டு அண்ணனைப் போல் இருக்கிறார் சுந்தர் பிச்சை. கூகுள் சுமந்தாலும் தமிழ்ப்பிள்ளை அல்லவா (முக்கிய குறிப்பு : சாதி அல்ல).
சுந்தர் பிச்சையிடம் பிடித்ததே அந்த பவ்யம் தான். என்றைகாவது ஒருநாள் அவரோடு அமர்ந்து காபி சாப்பிடும்போது அவரிடம் இதைக் கூற வேண்டும் என்று நினைத்திருந்தேன். கூறியிருந்தால் அதற்கும் அதே பவ்யத்தோடு சிரித்திருப்பார், லேசாக தலையசைத்திருப்பார். உள்ளுக்குள் கொஞ்சம் பெருமைப்பட்டிருப்பார்.
சுந்தர் பிச்சையின் மீது அதீத நேசம் வந்த சம்பவத்தைக் கூற வேண்டும் எனில் அது தமிழன் ஒருவன், அகில உலகின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவன், உலகின் மெத்தப் படிப்பையெல்லாம் படித்ததாக நம்பும் உலகில் தலைசிறந்த நீதிபதிகளாக தங்களைக் கூறிக்கொள்பவர்களின் முன் அதே பவ்யத்தோடு அமரிந்திருந்த, கதைத்த அந்த நொடிகளைத்தான். அரியாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துகொண்டு பவ்யமாக பதில் கூறுபவனை விட, பவ்யமாக அமர்ந்துகொண்டு கம்பீரமாக பதில் கூறுவதில்தான் சாமர்த்தியமும் திறமையும் இருக்கிறது என சுந்தர் பிச்சை நிகழ்த்திக் காட்டிய கணங்கள் அவை. நீங்கள் அந்த காட்சியை பார்த்திருக்கிறீர்களா தெரியவில்லை. ஆனால் நான் பார்த்ததில்லை. பார்த்தவர்கள் சொன்னார்கள். பார்த்தவர்கள் சொன்னதையெல்லாம் நம்பிவிடும் ஆசாமி நான் இல்லை என்றாலும் சுந்தர் பிச்சையைக் குறித்து யார் சொன்னாலும் நம்பியிருப்பேன். (குறிப்பு : நல்ல விதமாக).
கூகுளை கூக்ளி என அழைத்த நாட்களில் இருந்தே கூகுள் அறிமுகம் எனக்கு. ஆனால் சுந்தர் பிச்சை அப்படியில்லை. அவருக்கும் எனக்குமான நட்பு இன்னும் கணங்களைக் கடந்திருக்கவில்லை. அவரோடு பேசவேண்டியதும் நட்பு பாராட்ட வேண்டியதும் ஏராளம் இருக்கிறது. எத்தனை பெரிய மனிதர். தனக்குக் கிடைத்த அப்ரைசல் ஹைக்கை உதறித்தள்ளவெல்லாம் தனி மனதைரியம் வேண்டும்.
கூகுளில் ஒரு தொழிற்பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது எனக்கூறி சாண்டி என்னை அங்கு அழைத்துச் சென்றபோது கூட நம்பவில்லை, நானும் அமேரிக்கா வருவேன், கூகுள் நிறுவத்தினுள் காலடி எடுத்து வைப்பேன் என, ஆனால் பாருங்கள் இன்றைக்கு சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார். நண்பர் சுந்தர் நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் பூலோக சுவர்க்கம். அப்படித்தான் இருக்கிறது அங்கிருக்கும் பணிச்சூழல். ஸ்டார்பக்ஸ் காபி இலவசமாக தருகிறார்கள் என்பதைவிட வேறென்ன எளிமையான உதாரணத்தைக் காண்பித்துவிட முடியும் உங்களுக்கு.
பல மாடி கட்டிடத்தின் உயரத்தில் அமர்ந்திருக்கும் அந்த காபிடேரியாவில் இருந்து பார்த்தால் ஆஸ்டினின் மொத்த அழகும் தெரியும், அதன் வலது ஓரத்து இருக்கைகளில் அமர்ந்து "வணக்கம் சுந்தர்" என்றபடி அவரோடு ஒரு காபி குடிக்க ஆசைப்பட்டேன். ஆசைப்பட்டதெல்லாம் நடந்துவிடுமா என்றால்? அதற்காக ஆசைப்படாமல் இருக்க முடியுமா? தர்க்க அதர்க்கங்களை எல்லாம் விடுங்கள் இதோ சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார். அப்படி அவரோடு காபி குடிக்கும் போது அவரிடம் சிக்மென்ட் ஃப்ராய்ட் படித்திருக்கிறீர்களா என்று கேட்க வேண்டும். அவரிடம் அவரைப்பற்றி அதிகம் பேச வேண்டும். இந்த அவரிடம் என்ற இடத்தில் சுந்தர் பிச்சையையும், அவரைப்பற்றி என்ற இடத்தில் நண்பர் ஃப்ராய்டையும் என்று வாசித்துக்கொள்ளுங்கள்.
ஃப்ராய்ட் மனித இயல்புகளை மிக நுப்டமாக கவனித்து அதை மனிதர்களுக்கு சற்றும் எளிதில் புரியாதபடி மனிதர்களிடமே சொல்வதில் வல்லவர். பல்கோண முக்கோணத்தின் எண்கோண கணிதத்தை மனம்போன போக்கில் எழுதவெல்லாம் தனித்திறமை வேண்டும். அப்படி ஒரு திறமை அவருடையது. அவர் எழுத்துகளைப் படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது எனக்கு. தலையைப் பிய்த்துக் கொள்ளலாமா, பதினைந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து விடலாமா என்றெல்லாம் தோன்றும். என்னைப் போல எளிமையாக எழுதக் கற்றுக்கொள்ளுங்கள் ஃப்ராய்ட் என்று அவரிடம் கூறவேண்டிய நிமித்தம் ஒன்று இருக்கிறது. சரி அதை விடுங்கள் சுந்தர் பிச்சைக்கு வருவோம். சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்.
மனிதனின் மனதை மிகத்துல்லியமாக காண்பிக்கும் கண்ணாடி ஒன்று இருக்கிறது. ஃப்ராய்ட் அதனைக் கனவு என்கிறார். நான் அதனை சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார் என்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)