30 Aug 2014

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் - அவர்களும் மனிதர்களே...!


இந்த நட்ட நடுராத்திரியில் வேறு வழியே இல்லாமல் தான் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்தேன், பொதுவாக இந்த நேரத்திற்கு எல்லாம் அவர்களை அழைத்தால் உச்சகட்ட உறக்கத்தில் இருப்பார்கள், அதிலும் இரவு பத்து மணியில் இருந்தே 'வணக்கம் சார் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்' என்று பேசத் தொடங்குவதால் பாவம் விரக்தியின் உச்சத்தில் இருப்பார்கள். இது அவர்களுக்கு எத்தனாவது நாள் இரவுப்பணி என்று நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. உறக்கம் தொலைத்த இரவுகளில் இரக்கம் இல்லா மனிதர்களுக்கு சேவை செய்து கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்கள் அவர்கள். 'அதற்குத் தான சம்பளம் வாங்குகிறாங்க' என்ற கேள்வி எழுந்தாலும், உள்ளூர் சேவைக்கெல்லாம் மிஞ்சிப்போனால் எட்டாயிரம் கொடுப்பார்கள் அதற்கு மேல் எதிர்பார்த்தால் வீட்டிற்கு கிளம்பி விடலாம்.  

அலுவலகம் ஓ.எம்.ஆரிலோ அம்பத்தூரிலோ, போரூரிலோ இருக்கலாம். தங்கியிருப்பது நகரின் மூலையில் எங்கோ ஒரு பத்துக்கு பத்து அறையில் தன்னைப் போன்ற ஐந்து பேருடன். ஒவ்வொருவரும் வேறுவேறு ஷிப்டிற்கு சென்று வருவதால் 'உறங்க ஒரு இடம்' என்பது பிரச்சனையே இல்லை. 'வாழ ஒரு வேலை' என்பது மட்டும்தான் பிரச்சனை. கூடவே சாப்பாடு. நல்ல சாப்பாடு என்பது என்றாவது ஒருநாள் அரிதாகக் கிடைப்பது. மற்றபடி சாப்பாடு என்பது பசியை அடக்கினால் போதும். மூன்று வேளையும் சாப்பாடு என்பதெல்லாம் கையில் தாராளமாகக் காசு இருக்கும் நாட்களில் மட்டுமே. காசு இல்லையா, இரண்டு வேளை சாப்பாடு. ஒருவேளை தம். உடம்பை வளர்த்து உயிரை வளர்த்துவிடலாம். 


மூன்று வேளை சாப்பாடு கிடைக்கிறதோ இல்லையோ மூன்று வேளையும் வேலை நேரம் மாறிக்கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருக்கும் இந்த வேலை நேரத்திற்கு அவர்கள் தங்களைத் தயராய் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தயாராய் இருந்தாலும் அவர்களுடைய உடல் தயாராய் இருக்க வேண்டும். உடல் தயாராய் இருந்தாலும் எடுத்துக்கொள்ளும் உணவு தயாராய் இருக்க வேண்டும். இத்தனையும் மீறி வேலை பார்க்கும் இடத்திற்கு நள்ளிரவில் வரச்சொன்னாலும் வரவேண்டும், அதிகாலை தூங்கி நண்பகல் வரச்சொன்னாலும் மறுக்காது வரவேண்டும். பெரும்பாலான அலுவலகங்களில் இரவுப்பணி என்றால் வாகனவசதி உண்டு என்றாலும் வீட்டுவாசல் வரை எல்லாம் வரமாட்டார்கள். அருகில் எங்காவது ஒரு கிமீ தொலைவில் வரச் சொல்வார்கள், அங்கு போய் ஏறிக் கொள்ள வேண்டியது தான். 

'பேசிட்டே தான இருக்கணும், இதுல என்ன இருக்கு' என்று நினைத்தால் அதில் தான் பிரச்சனையே, அதை விடப் பிரச்சனை அவர்கள் பேசிக்கொண்டிருப்பது மனிதர்களுடன். பெரும்பாலான நேரங்களில் மனிதர்கள் என்ற போர்வையில் பேசும் மிருங்கங்களுடன். 'வண்ணாந்துறையில உள்பாவாடை காணாமப் போனக்கூட என்ன தான் புடிச்சு உள்ள போடுறாங்க எசமான்' என்பது போலத் தான் இவர்களின் நிலையம். 

மனிதர்களின் அறச்சீற்றமானது எப்போதுமே தன்னை விட பலகீனமானவனின் மீதோ அல்லது எவனை அடித்தால் திருப்பி அடிக்கமாட்டானோ 'அவன்' மீதும் மட்டுமே எளிதில் பாயும். இங்கே இந்த 'அவன்' வாடிக்கையாள சேவை மைய அதிகாரிகள். உயிர் வாழ்தலுக்காக வேறுவழி தெரியாமல் சிக்கிக்கொண்ட ஆடுகள். அட்டகத்திகளின் வீரத்தை, கழுத்தறுப்பை வேறுவழியே இல்லாமல் தாங்கிக் கொண்டிருப்பவர்கள். எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே நடித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர்கள்.

வேலையில் சேர்ந்த முதல் சில வாரங்களுக்கு 'வாடிக்கையாளர்களைக் கையாளுவது எப்படி?' என்பது குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். அதில் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் முதல் சூத்திரம் 'உன் குடும்பத்தையே திட்டினாலும், சிரித்துக் கொண்டே நன்றி தான் சொல்லணும், கோவப்பட்டு பேசிற கூடாது, தொடர்ப துண்டிக்கக் கூடாது'. இதை என் நண்பன் என்னிடம் கூறும் போது அவன் கண்கள் கலங்கியிருந்தது. 

ஒரு நள்ளிரவில் அவனுக்குப் போன் செய்து கிண்டல் செய்த பெண்ணின் எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டு அடுத்த நாள் அழாத குறையாக 'அப்படிச் செய்யாதே' என்று கூறியிருக்கிறான். அவள் பணத்திமிர் அடங்கவில்லை. பதிலுக்கு இவனை மிரட்டியிருக்கிறாள். மறுநாள் ஏதோ ஒரு பாத்ரூம் சுவரில் கிறுக்கிவிட்டு வந்துவிட்டான். அதில் இருந்து சில நாட்களில் அந்த நம்பர் டஸ் நாட் எக்சிஸ்ட். ராஜாராணி படம் பார்த்துவிட்டு அடுத்த நிமிடமே போன் செய்தான் 'ஜெய் சரியான லூசுப்பய பாஸு, கஸ்டமர டீல் பண்ணத் தெரியல' என்றான். 'ஆனா எங்களையெல்லாம் பார்த்தா எல்லாவனுக்கும் நக்கலா இருக்கு இல்ல', அட்லீ மீது பெருங்கோவம் இருக்கிறது அவனுக்கு.  மொத்த அரங்கமும் ஜெய்யை கிண்டல் செய்து சிரிக்கும் போது தான் மட்டும் அழுது கொண்டிருந்ததாகக் கூறினான். அவ்வளவு எளிதில் யாராலும் உணர்ந்துவிட முடியாத வலி அது.

ஆண்டோ கூறாத கதைகளையா என்னிடம் வேறு யாரேனும் கூறிவிட முடியும். ஒவ்வொரு நாள் வேலை முடிந்து வந்ததும் விரக்கதியின் உச்சத்தில் இருப்பார். வீட்டில் பிரச்னை, காதலில் பிரச்னை அங்கே இங்கே என்று திரும்பிய இடத்தில் எல்லாம் பிரச்சனையில் இருந்தவருக்கு கிடைத்த வேலையிலும் பிரச்சனை. பேசும் எந்த ஒரு மனிதரும் நிதானத்தில் இருக்கவில்லை. நிதானம் என்பதை சரக்கடித்தவர்கள் என்ற தொணியில் கூறவில்லை. அடிக்காதவர்களையும் சேர்த்துதான். கோபம் கிண்டல் நக்கல் நையாண்டி எகத்தாளம் திமிர் இன்னும் என்ன என்ன உண்டோ அத்தனையையும் ஓரிரவிலும் ஒவ்வொரு இரவுகளிலும் அனுபவிப்பவர்கள். 

2007ம் வருடம் என்று நினைக்கிறன். ரிலையன்ஸ் கைபேசி பரவலாகிக் கொண்டிருந்த நேரம். என்.எஸ்.எஸ் முகாமில் இருந்தோம். அந்த நேரத்தில் ரிலையன்சில் மட்டும் ஒரு வசதி உண்டு, அது வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்தால் இலவசம். தினமும் நாட்டுநலப் பணிகளை முடித்துவிட்டு பத்து பேர் கொண்ட குழுவாக ஓரிடத்தில் கூடுவார்கள். ரிலையன்சில் கூடுதல் வசதி ஒன்றையும் செய்திருந்தார்கள். அது எத்தனை முறை போன் செய்தாலும் பெண்கள் தான் பேசுவார்கள். இது போதாதா இவர்களுக்கு. வட்டமாக அமர்ந்து எதையாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பிளான் என்ன, இந்தப் பிளான் என்ன, ஏன் பாப்பான்கொளத்துல ஒழுங்கா சிக்னல் எடுக்க மாட்டேங்குது என்று வரிசையாக பேசுவார்கள். தினசரிப் பேசுவார்கள். ஆரண்ய காண்டத்தில் ஒரு வசனம் வரும் 'ஸ்பீக்கர் போன்ல போட்டு பேசுனா கிடைக்கிற கிக்கே தனி' அதைதான் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நேரம்! தினமும் ஒரே பிள்ளையே சிக்கியது. நான்காவது நாள் ஸ்பீக்கரில் அது அழும் குரல் கேட்டது. 

படிப்பறிவில்லாத கிராமத்து மனிதர்களிடம் பேசும் போது மட்டுமே வாடிக்கையாள சேவை மைய அதிகாரிகள் உண்மையான அக்கறையுடன் பேசுவார்கள். 'தலையில செங்கலு சொமந்து சம்பாதிச்ச காசு தம்பி மொத்தமா போயிட்டு', என் வீட்டுக்கராரு வந்த காச என்னடி பண்ணினன்னு போட்டு அடிப்பாரு தயவு செஞ்சு ஏத்தி விட்ருங்க தம்பி' என்று அழுத பெண்களை, பெரியவர்களைப் பற்றியெல்லாம் ஆண்டோ கதைகதையாகக் கூறியிருக்கிறார். 'இவுங்க ஒண்ணா அமுக்கு, இரண்ட அமுக்கு, *** அமுக்குன்னு போன் பன்னிருவாங்க பாவம் டா அவங்க, படிப்பறிவில்லாதவங்க. எதையாது அமுக்கிருவாங்க. தப்பு அவங்க மேல இருக்கது அவங்களுக்குப் புரியாது. அழுவாங்க, நாம எப்படி காச கொடுக்க முடியும்' என்பார். இருந்தாலும் சிலருக்கு இவரது சொந்த காசையே போட்டு ரீசார்ஜ் செய்து கொடுத்த சம்பங்களும் உண்டு.

ஒன்பது மணிநேரம் தொடர்ந்த வேலை. இடையில் அரை மணிநேரம் மட்டுமே இடைவேளை. டார்கெட் அச்சீவ் செய்ய பேசிக் கொண்டே இருக்க வேண்டும். காது எரிய வாய் வலிக்க பேசிக்கொண்டே இருக்க வேண்டும். 

இப்போது நீங்கள் ஒரு வாடிக்கையாள சேவை மைய அதிகாரியோடு பேசுகிறீர்கள் உங்களுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் சரிபார்க்க சில நிமிடங்கள் ஆகலாம், அந்த சில நிமிடங்களும் அவர்கள் வாய் சும்மா இருக்கக் கூடாது, 'உங்களுக்குத் தேவையான விசயங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்று எதையாவது கூறி தான் வேலை பார்த்துக் கொண்டே இருப்பதை நிருபிக்க வேண்டும். யாரிடம்? தன்னைத் தொடர்ந்து கண்காணிக்கும் மென்பொருளிடம். ஆம் எல்லாவற்றிற்குமே மென்பொருள் தான். 

அவ்வபோது மேலதிகாரி இதனை ஆராய்ந்து கொண்டே இருப்பார். ஒரு நிமிடத்திற்கு மேல் பேசாமல் இருந்ததைக் கண்டுபிடித்தாலோ, வாடிக்கையாளரிடம் கொஞ்சம் நக்கலாக அல்லது அலுப்பை வெளிபடுத்தும்படி பேசினாலோ அவ்வளவு தான். மானம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் அதிசியமான பொருளே தவிர அத்தியாவசியப் பொருள் அல்ல. வேண்டுமானால் இணையத்தில் தேடிப்பாருங்கள் இவர்களை கிண்டல் செய்து மகிழ்ந்தவர்கள் மகிழ்பவர்கள் எத்தனை பேர் என்று தெரியும். 

வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டால் முப்பது நொடியில் எடுக்க வேண்டும் என்பது விதி. நூறு அதிகாரிகள் இருக்கும் இடத்தில் நிமிடத்திற்கு இருநூறு அழைப்பு வரும். தொடர்ந்த மணியோசை கேட்டுக் கொண்டே இருக்கும். அழைக்கும் நமக்குப் பொறுமை இருக்காது. அது நமது கோவத்தை இன்னும் அதிகப்படுத்தும். பாவம் மரத்துப் போனவர்கள். நீங்கள் கூறுவதையும் மறந்து தான் ஆக வேண்டும்.  

ஆனால், ஏதோ வாடிக்கையாள சேவைமைய அதிகாரிகள் தங்களுக்கு அடிமைகள் என்ற நினைப்பிலேயே இங்கு பலரும் அவர்களைக் கையாளுகிறார்கள். அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் இதயம் இருக்கிறது, மனது இருக்கிறது தன்மானம் இருக்கிறது கவலை இருக்கிறது எல்லாவற்றையும் தாண்டி அவர்களுகென்று ஒரு உலகம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். எத்தனையோ விதமான மனிதர்களைக் கையாண்டு கையாண்டு வாழ்வில் மனிதர்களுடன் பேசவே தயங்குகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அப்பாவோ அம்மாவோ அழைத்தால் 'வணக்கம் சார் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்' என்று கேட்கும் பல இளைஞர்களின் மூளை வலு இழந்துவிட்டது.   


இருந்தும் ஏன் இப்படியொரு மோசமான வலையில் போய் விழுந்து தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்களா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். சென்னையில் இந்த வேலையாவது கிடைக்காதா என்று அலையும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர். பெருத்த போட்டிக்கு இடையில் கஷ்டப்பட்டுக் கிடைத்த வேலை. அப்படியெல்லாம் எளிதில் விட்டுவிட மாட்டார்கள். தயவுசெய்து எதையாவது ஏற்குமாறா பேசி தங்கள் வேலையை விட்டுவிட வைத்துவிடாதீர்கள். உங்களுக்குக் கோடி புண்ணியம்.    

ஒரு காலத்தில் நானும்கூட வாய் வலிக்க வலிக்கவெல்லாம் சண்டையிட்டிருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்த்தால் எவ்வளவு மோசமான செயல் அது என்று புரிகிறது. பரவாயில்லை அந்த கடந்த காலத்திற்குப் பிராயச்சித்தமாகவேனும்  இந்தக் கட்டுரை இருந்துவிட்டுப் போகட்டுமே. 

படங்கள் : நன்றி இணையம் 

28 Aug 2014

மூணாறு - ஒரு பயணத்தின் பயணம்


ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து முழிப்பு வந்தபோது ஓரிடத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தது பேருந்து. முழுவதுமாக விடிந்திருக்காத அந்த அதிகாலையில் முழித்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்தது ஒட்டுமொத்தப் பேருந்தும். ஒருவேளை பேருந்தானது குறித்த நேரத்திற்கு தாம்பரத்தை வந்தடைந்திருந்தால் இந்நேரம் தேனியை அடைந்திருக்க வேண்டும். யார் கொடுத்த வரமோ, இரண்டு மணிநேரத் தாமதம். திண்டுக்கல்லாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் ஜன்னலின் திரையை அகற்றி எங்கவாது ஊர்ப்பெயர் தென்படுமா என பார்வையை அலையவிட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்துப் பேருந்தில் நின்று கொண்டிருந்த இளைஞன் தனக்கு மேல் இருந்த கம்பியைப் பிடித்தபடியே ஆடிக்கொண்டிருக்க, தூக்கம் அவனை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. கூடவே அன்றைய தினத்தின் முதல் அதிர்ச்சியும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. 

இந்நேரம் டிரைவர் குமார் என்ற எண்ணில் இருந்து அழைப்பு வர 'ஹல்லோ' என்றேன். என் ஹல்லோவை காதில் வாங்கிக்கொள்ளும் பொறுமை அவரிடம் இல்லை. 'சார் மூணாறு டிரைவர் பேசுறேன், இப்ப தேனீ பஸ் ஸ்டாண்ட்ல நிக்கேன், எங்க இருக்கீங்க' என்றார். ஐந்து மணிக்கெல்லாம் பேருந்து தேனியை அடைந்துவிடும் என்று நிர்வாகம் கூறியதை நம்பித் தொலைத்ததால், எங்களை அழைத்துச் செல்ல வேண்டிய வேன் டிரைவரை நான்கரைக்கெல்லாம் தேனீ பேருந்து நிலையத்திற்கு வரும்படி கூறியிருந்தேன். யாருக்குத் தெரியும் அவருடைய பங்க்சுவாலிட்டி அத்தனைத் துல்லியமானது என்று. மனுஷன் நான்கரையில் இருந்து பலமுறை என்னை அழைத்துத் தோற்றுப்போய் இப்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். பேச்சில் ஒருவித விரக்தி தெரிந்தது. இப்போது அவரிடம் நான் கூறப்போகும் பதில் அவருடைய விரக்தியை இன்னும் அதிகமாக்கப்போகிறது என்பது நான் மட்டுமே அறிந்த உண்மை. 

வழக்கமாகவே ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்திலும் என் பள்ளி கல்லூரித் தோழர்களுடன் எங்காவது ஊர்சுற்றச் செல்வது வழக்கம், இந்த வருடம் மைசூர் செல்லலாம் என்று திட்டமிட்டு, கிடப்பில்போட்டு பின் யாரும் ஆர்வம் காட்டாததால் அந்தப் பயணத்திட்டத்தைக் கைவிட்டிருந்தோம். ஒரு மாலைநேர கடற்கரைச் சந்திப்பில் 'எதவாது பிளான் போடு, சுதந்திர தினமப்ப மூணு நாள் லீவ் இருக்கு. வேஸ்ட்டா போயிரும்' என்றான் நந்தா. 'ஆமாடா, சும்மா வேல வேலன்னு ஓடிட்டு இருந்தா பைத்தியம் புடிச்சிரும், இந்தவாட்டி ரிலாக்ஸா எங்கியாது போயிட்டு வரலாம்' என்றான் ராகுல். போதாகுறைக்கு செல்வாவும் அவன் பங்கிற்கு கூற, யோசித்துச் சொல்வதாகக் கூறினேன். 'எங்கனாலும் ஓகே, ஆனா எங்கயாது போகணும்' என்பது தான் அவர்களின் உடனடி விருப்பம். 

எல்லாம் சரி, ஆனால் என் நிலைமை. இந்த வருடத்தின் ராசியோ என்னவோ, இவ்வருடம் முழுவதும் கொஞ்சம் அதிகமாகவே பயணித்துவிட்டேன். மாதாமாதம் எதாவது ஒரு பயணத்திட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதை அவர்களிடம் கூறினால் 'நீ ஜாலியா போயிட்டு வன்ட, நாங்க?' என்றார்கள். ஒரு தீவிர யோசிப்பிற்க்குப் பின் 'மூணாறு போவோமா' என்றேன். எங்களில் யாருமே மூணாறு பார்த்ததில்லை. பார்க்கவேண்டிய லிஸ்ட்டில் வெகுநாட்களாக இடம் பெற்றிருந்த ஒரு ஊர் மூணார். சமீபத்தில் ஸ்கூல்பையன் கூட தான் சென்றுவந்த மூணாறு பயணத்தொடர் எழுதியிருந்தார். 



எப்போதுமே மூணார் என்றதும் நியாபகத்திற்கு வரும் முதல் நபர் நண்பர் வருண் பிரகாஷ். இணையம் மூலம் மட்டுமே பழக்கம் என்றாலும் 'எப்போ மூணாறு வாறதா இருந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க, நிச்சயம் ஹெல்ப் பண்றேன்' என்று கூறியிருந்தார். முதல் வேலையாக பேஸ்புக்கில் அவருக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு விட்டு, ஸ்கூல்பையனிடம் தொடர்பு கொண்டு 'சார் மூணார் போலாம்னு ஒரு பிளான், டிப்ஸ் ப்ளீஸ்' என்றேன். மூணாறு என்ற வார்த்தையைக் கேட்டதுமே ஸ்கூல்பையன் என்னிடம் கூறிய முதல் பதில் 'நீங்க என்கிட்ட கேக்குறதுக்கு பதிலா, வருண்ட்ட கேக்கலாம், என்னவிட அவருதான் நல்லா கைட் பண்ணுவார்' என்றார். இங்கே ஸ்கூல்பையனின் குரலைப் பற்றிக் குறிபிட்டே ஆகவேண்டும். அவரின் குரலானது எப்போதுமே ஒரு ஹெட்மாஸ்டரிம் பேசும் ஸ்கூல்பையனின் பணிவை ஒத்து இருக்கும். அதனால் மட்டுமே அவருக்கு அந்தப் பெயர் பொருந்திப் போவதில் எனக்குச் சாலசந்தோஷம். 

அன்றைய இரவே நான் அனுப்பியிருந்த செய்தியையைப் பார்த்துவிட்டு சற்றும் தாமதியாமல் போன் செய்தார் வருண். அன்றைய தினம் அவர் போன் செய்தததில் இருந்து பயணத்திட்டம் வகுத்துக்கொடுத்து, அறை மற்றும் ஊர்சுற்ற வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்ததில் இருந்து அத்தனை வேலைகளையும் அவரே பார்த்துக்கொண்டார். கிட்டத்தட்ட நான் சுமக்க வேண்டிய எழுபது சதவீத சுமையை அவர் ஏற்றுக்கொண்டார். இதுவரை நேரில் பார்த்திராத, பதிவுகள் மற்றும் முகநூல் வாயிலாக மட்டுமே தெரிந்த ஒரு நண்பர் இவ்வளவு தூரம் உதவி செய்வதென்பது என்னளவில் இதுவே முதல்முறை. மூணாறில் இருந்த ஒவ்வொரு தருணங்களிலும் அவரது உதவியைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம். 

வெறும் வார்த்தைகளாலோ எழுத்துகளாலோ மட்டும் அவருக்கான எங்கள் நன்றியைக் கூறிவிட முடியாது. இருந்தாலும் மிக்க மிக்க நன்றி வருண். தொடர்ந்து மூணாரினுள் பயணிக்கும் பொழுது அவருடைய உதவி எவ்வகையில் எங்களுக்குப் பேருதவியாக மாறியது என்பதைக் குறிப்பிடுகிறேன். இப்போது மீண்டும் டிரைவர் குமார்,

'சார் காலையில நாலு மணிக்கே எந்திச்சு குளிச்சு முடிச்சு தயாரா இருக்கேன். இப்ப எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, இன்னும் எவ்ளோ நேரத்துல வருவீங்கன்னு சொல்லுறேன்' என்று என்னைப் பேசவிடாமல் பேசிக் கொண்டிருந்தார்.

மணி ஐந்தரையைக் கடந்து ஆறை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது. நான் கண்டுபிடித்திருந்த ரகசியத்தை மெல்ல அவரிடம் கூறினேன். 

'அண்ணே வண்டி இப்ப தான் திருச்சிக்கே வந்த்ருக்கு'      
   
'என்னது இப்பதான் திருச்சிக்கே வந்த்ருக்கா...!' 

எங்கள் இருவரின் அதிர்ச்சியையும் பொருட்படுத்தாமல் திருச்சி பேருந்து நிலையத்தின் வெளியே சாவகாசமாக இளைப்பாறிக் கொண்டிருந்தது எங்கள் வெள்ளை ரதம்.


தொடரும்... 

20 Aug 2014

சுதந்திர தினத்திற்கு முந்தைய அந்த வியாழக்கிழமை இரவு

சுதந்திரதினத்திற்கு முந்தைய அந்த வியாழக்கிழமை இரவு மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. சாதாரணமாகவே சென்னையின் வார இறுதி இரவுகள் பரபரப்புடன் தான் கழியும் என்ற போதிலும் சனி ஞாயிறுடன் வெள்ளியும் சேர்ந்து கொண்டதால், புறநகரானது வாகன நெரிசலில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. பிறந்த வீட்டிற்குச் செல்வோர், புகுந்த வீட்டிற்க்குச் செல்வோர், எங்களைப் போல விடுமுறையைக் களிக்கச் செல்லும் நாடோடிகள் என்று சென்னை தன்னைக் காலி செய்து கொண்டிருக்க, கோயம்பேடு வடபழனியில் ஆரம்பித்த வாகனநெரிசல் தாம்பரத்தில் உச்சகட்டத்தை அடைந்திருந்தது. பெருங்களத்தூர் தாண்டி வண்டலூர் கடந்தால் மட்டுமே ஊருக்குச் சென்று சேரும் துல்லியமான நேரத்தைக் கூற இயலும். அதுவரைக்கும் 'சீக்கிரம் ட்ராபிக் குறைய வேண்டுமே' என நமக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டிருக்கலாமே ஒழிய அதுவாகக் குறையாத வரைக்கும் வாகனநெரிசல் குறைய வாய்ப்பே இல்லை. 

தாம்பரம் மேம்பாலத்தின் மீது பேருந்து ஊரும் போதுதான் கவனித்தேன் ஹிந்து மிஷன் ஆஸ்பத்திரியின் முன் நின்று கொண்டிருந்த அந்த மிகப்பெரிய கூட்டத்தை. குறைந்தது ஆயிரம் பேராவது நின்று கொண்டிருந்திருக்க வேண்டும். அத்தனையும் தாங்கள் செல்ல வேண்டிய ஆனால் அப்போதுவரை வந்து சேர்ந்திராத ஆம்னி பஸ்சுக்காகக் காத்துக் கிடந்த கூட்டம். அருகில் உட்கார்வதற்குக் கூட இடம் இல்லாத புறநகர்ச்சாலை அது. பொழுதன்னிக்கும் வேலை பார்த்திருந்த களைப்பில் கால்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்க மனம் என்னென்னவோ கணக்குப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஒன்று அடுத்தவாட்டி எப்டியாது ட்ரைன்ல டிக்கெட் புக் பண்ணிறனும் இல்லாட்டி சீக்கிரம் ஒரு கார் வாங்கணும் அல்லது இனி இவ்ளோ கஷ்ட்டப்பட்டு ஊருக்கே போகக் கூடாது. 

தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையமே வெறிச்சோடிக் கிடந்தது. இரவு ஒன்பதரை மணிக்கு அந்தப் பேருந்து நிலையம் அப்படிக் கிடப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. வரிசையாக அடுக்கப்பட்ட இருக்கைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் படுத்திருந்தார்கள். ஒரேயொரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது. புதிதாய்க் கட்டப்பட்ட பேருந்து நிலையம் என்றாலும் சுற்றிலும் சிதறிக் கிடந்த குப்பைகளுக்குப் பஞ்சம் இல்லை. 

ஒரு ப்ரீ அட்வைஸ். ஒருவேளை சானிடோரியம் பேருந்து நிலையத்திற்குச் சென்றால் அங்கிருக்கும் இலவச நவீன கழிப்பிடதிற்குள் சென்று வாருங்கள். அங்கிருக்கும் கழிப்பறைக் கதவுகள் ஒவ்வொன்றும் ஆண் சமுதாயதிற்கு என்னவோ கூற விழைகின்றன. பல்லவனும் பாண்டியனும் சேர சோழனும் கூற விழையாத கருத்துகளை இவர்கள் தம் சிற்பங்கள் மூலம் கூற விரும்புகிறார்கள். விதவிதமான ஓவியத் தீட்டல்கள், ஆண்பெண்களின் போன் நம்பர்கள். அதற்கு ஆள் தேவையா இதற்கு ஆள் தேவையா விளம்பரங்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களை வஞ்சம் தீர்த்துக் 'கொல்லும்' வசைமொழிகள், வரும்போதே கையில் கரியையோ மார்க்கரையோ எடுத்து வந்துவிடுவார்கள் போல தீயா வேலை பார்த்திருக்கிறார்கள். 

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒன்பதரைக்கு தாம்பரத்திற்கு வந்திருக்க வேண்டிய பேருந்து இன்னும் கோயம்பேடுக்கே வந்திருக்கவில்லை. சுந்தர்ராமனிடம் இருந்து அவரசமாய் ஒரு கால் 'டேய் சீனு பஸ் இன்னும் சி.எம்.பி.டி.க்கே வரல. இப்ப தான் அண்ணாநகர் வெஸ்ட் தாண்டிருக்காம் என்றான். இப்போது இருக்கும் ட்ராபிக்கில் அண்ணாநகர் வெஸ்ட் டூ சி.எம்.பி.டிக்கு மட்டும் ஒரு மணிநேரம் ஆகும். இந்த லட்சணத்தில் சி.எம்.பி.டி டூ தாம்பரம். நாளை மதியத்திற்குள்ளாவது மூணாறு சென்று விடுவோமோ என்று யோசிக்கத் தொடங்கினேன். SRT ட்ராவல்ஸில் புக் செய்யும் போதே ஏதோ ஒரு சந்தேகம் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்போது விதி விளையாடிக்கொண்டுள்ளது.

சுதந்திர தினத்திற்கு முந்தைய அதே வியாழக்கிழமையில் சென்னையின் போக்குவரத்து நெரிசலைப் போலவே குருவும் உக்கிரம் அடைந்திருக்க வேண்டும். காலையில் இருந்தே வரிசையாய்ப் பிரச்சனைகள் கட்டம் கட்டத் தொடங்கியிருந்தன. மூணாறு பயணத்திற்கு வருவதாய்க் கூறியிருந்த மணி நம்பர் சுவிட்ச்ஆப். பேஸ்புக் மூலமாக தகவல் அனுப்பியும் பதில் எதுவும் இல்லை. ஒருவேளை அவன் வராது போனால் அதனால் ஏற்படும் நஷ்டம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மொத்தமும் என் தலையில் விழும். காரணம் மூணாறு சென்று வருவதற்காக அவனுக்கும் சேர்த்து டிக்கட் புக் செய்திருந்த மகாபிரபு நான்தான். அதேநேரம் அவன் வராவிட்டால் ஆகப்போகும் மொத்தச்செலவின் சுமையும் எங்கள் ஒட்டுமொத்தக் குழுவின் தலையில் விழும். சரி அதையாவது சமாளித்துக் கொள்ளலாம். அந்த ஆயிரத்து ஐந்நூறுக்கு விடை.

காலையில் எழுந்ததில் இருந்து ஒரு நூறுமுறையாவது அவனுக்குப் போன் செய்திருப்பேன். நூறுமுறையும் 'த நம்பர் யு ஆர் ட்ரையிங் டூ ரீச் இஸ் கரன்ட்லி அன் அவைளபிள்' என்று கூறிய பதிலையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தது. அவனது ரூம் மேட், உடன் வேலை செய்யும் நண்பர்கள் என எத்தனையோ பேரைப் பிடித்தும் அவனை மட்டும் பிடிக்க முடியவில்லை. ஒருவழியாக ராமுவைப் பிடித்து அவன் அப்பாவைப் பிடித்தால் 'அவனா போன் போட்டு பேசினாத் தான் உண்டு. அவன் நம்பர் என்கிட்டயும் இல்ல' என பொறுப்பாகப் பதில் கூறினார். 'சரி இனி அவன நம்பிப் பிரயோசனம் இல்ல அந்த டிக்கட்ல வேற யாரைவது பிடிப்போம்' என வேறு யாரிடமாவது கேட்டால் 'எலேய் கடைசி நேரத்துல கூப்பிடுறியே அறிவு இல்ல' என அன்பாய்த் திட்டத் தொடங்கினார்கள். இடைபட்ட நேரத்தில் அலுவலகத்திற்கும் கிளம்ப வேண்டும். பேஸ்புக் சேவையும் ஆற்ற வேண்டும். 

இப்போது நான் டென்சனாய் இருப்பதைக் கண்டுகொண்ட குடும்பம் இதுதான் சாக்கு என மெல்ல தன் அர்ச்சனையைத் தொடங்கியது. 'இதுக்கு தான் சொல்றது சும்மா ஊர் சுத்தாத ஊர் சுத்தாதன்னு, இனிமே வாங்குற சம்பளத்த ஒழுங்கா கையில கொடு, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் வேற பண்ணனும்!' என அம்மா ஆரம்பிக்க எங்களுக்கிடையிலான த்வந்த யுத்தம் தொடங்கியது. 

இடைப்பட்ட நேரத்தில் பலருக்கும் போன் செய்தால், பலரும் தங்களுக்கான வரமுடியாத காரணங்களுடன் தயாராயிருந்தனர். இந்நேரத்தில் தான் செல்வா போன் செய்து அவன் நண்பன் வருவதாய்க் கூற பிரச்சனை முடிந்தது. முடிந்தது என்று தான் சந்தோசப்பட்டேன். அவன் நண்பன் வருவதாய்க் கூறிய அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் செல்வாவிடம் இருந்து போன் 'சீனு அவன் வீட்ல எதோ வேல இருக்காம் வல்லியாம்' என்றான் சோகமாக. இப்போது மணியின் மீதிருந்த கோபம் உச்சபட்ச கோவமாய் மாறியிருந்தது. ஒரேநாளில் சென்ம விரோதியாய் மாறியிருந்தான். உள்ளுக்குள்ளோர் எரிமலைக் குமுறிக் கொண்டிருந்தது. வீட்டுக்குப் போனதும் முதல்ல அவன பேஸ்புக்ல இருந்து பிளாக் பண்ணனும். இப்போதெலாம் பெரும்பாலானோரின் உச்சபட்ச வன்முறையே யாரைவாது பிளாக் பண்ணுவது தானே :-)

அலுவலகத்தில் ஒவ்வொருவரிடமாக கேட்டுக் கொண்டிருந்தேன், அத்தனை பேறும் வேறு வேலையிருப்பதாகக் கூறி ஜகா வாங்க, ஒரு ஓரத்தில் அப்பாவி ஜீவன் ஒன்று கணினியைத் தட்டிக் கொண்டிருந்தது. 'தெய்வம் இருப்பது எங்கே, அங்கே' பாடல் பின்னால் ஒலிக்க மெல்ல அவனை நெருங்கினேன். 'நீ வாறியான்னு கேட்கல. வாறன்னு சொல்றேன்' சேது மாதிரி பஞ்ச் டயலாக் பேச ஆசைதான். பட் தம்பி எஸ் ஆயிட்டாருன்னா. மெல்ல ஆரம்பித்தேன். 'சூர்யா மூணாறு ட்ரிப் போறோம், ஒரு டிக்கெட் இருக்கு வாரியா' என்றேன். யோசிக்க ஆரம்பித்தான். அவன் யோசிப்பது ஒரு வகையில் நல்லது 'ஹி இஸ் கன்சிடரிங் மீ', ஆனா ஓவரா யோசிக்கிறது நல்லது இல்ல பயபுள்ள வரமாட்டேன்னு சொல்லிட்டா. ஒருவழியாய் சம்மதித்துவிட்டான், திக்க வைத்துவிட்டேன் என்றும் சொல்லலாம். 

மணி பதினொன்றைக் கடந்திருந்ததும் பேருந்து வந்தபாடில்லை. 'தாம்பரம் பெருங்களத்தூர் சுத்திப் போனா ட்ராபிக்ல மாட்டிப்போம், சானிடோரியம் வந்தீங்கன்னா முடிச்சூர் வழியா வண்டலூர் போயிறலாம்' என்று அட்டகாசமாகத் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருந்தார் எங்கள் பேருந்து டிரைவர் ஆனால் கடைசி நேரத்தில் ஏசி லீக் ஆனதால் அதை சரி செய்ய தாமதமாகிவிட்டதாம். அதுவரை பேருந்து குறித்து இருந்த பயம் வலுத்திருந்தது. 

ரெட்பஸில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஓரளவிற்கு காசு கம்மி ஏசி பஸ்சும் கூட என்ற நப்பாசையில் தான் இந்த பஸ்ஸை புக் செய்தேன். இதுவரை கேள்வியேபட்டிராத ட்ராவல்ஸ், எஸ்.ஆர்.டி ட்ராவல்ஸ். எங்கே துட்டை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுவார்களோ என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஏமாற்றவில்லை ஆனாலும் டப்பா பஸ் போல. ஆரம்பத்திலேயே ரிப்பேர் ஆகிவிட்டது. இன்னும் என்னவெல்லாம் ஆகப்போகுதோ அட ஆண்டவா! 

பேருந்து நிலையத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கும் மேல் காத்துக் கிடந்தோம். 'சீனு மூணாறு போயிருவோமா?, தம்பி இதுக்குத்தான் எங்கள ஒம்போது மணிக்கே வரச் சொன்னீங்களா!' என அவ்வபோது செல்லமாக என்னை ஓட்டிக் கொண்டிருந்தாலும் நிலைமையைப் புரிந்து கொண்ட என் நண்பர்கள் பொறுமை காத்தார்கள். இதைவிட வேறு என்ன நல்லூழ் வேண்டும் எனக்கு. ஒருவழியாய்ப் பேருந்து கோயம்பேடு கிண்டியில் நின்று கொண்டிருந்த எனது நண்பர்களை ஏற்றிக் கொண்டு தாம்பரம் வந்து சேர்ந்தபோது மணி பன்னிரெண்டை நெருங்கியிருந்தது. 


சும்மா சொல்லக் கூடாது அட்டகாசமான புத்தம் புதிய பேருந்து அது. உயர்வாய்ச் சொல்லலாம் என்றால் வெள்ளை ரதம் அது. இதுவரை இப்படியொரு அட்டகாசமான பேருந்தில் பயணித்ததில்லை. உள்ளே ஏசி காற்று மெல்ல கசிந்து கொண்டிருக்க கூடவே பேருந்தின் புதிய மணமும் காற்றில் பரவிக் கொண்டிருந்தது. மெல்ல அவரவர் இருக்கையில் செட்டில் ஆனபோது தான் காதின் அருகில் இடி விழுந்தது போல் ஒரு சத்தம். சட்டெனத் திரும்பினேன்...

ஓயாமல் ஒழியாமல் உழைப்பாண்டா போலீஸ்
இரவென்ன பகலென்ன உறங்காது போலீஸ்
 
சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம் (அது ஹீ இஸ் துரசிங்கம் தான், கூகுள் தப்பா காமிக்குது, இருந்தாலும் என்ஜாய்)
இவன் நின்றால் கூட படையும் பதுங்கும்  
சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம்
இவன் வந்தால் போதும் வன்முறை அடங்கும் 


விழுந்தது இடி அல்ல இசை... தேவி ஸ்ரீ பிரசாத் தனது தொண்டைக் கட்டிய குரலில் அலறிக் கொண்டிருக்க, ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்றபடி சிங்கம் 2 தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தது. 


சுதந்திர தினத்திற்கு முந்தைய அந்த வியாழக்கிழமை இரவில் எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்தாயிற்று. அனுபவித்தாயிற்று. இதையெல்லாம் பார்த்த ஆண்டவனுக்குக் கொஞ்சமேனும் எங்கள் மீது கருணை இருந்திருக்க வேண்டும். அவர்தான் எங்களோடு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த அந்த அரசியல்வாதி மூலம் சிங்கம் டூ போடச்சொல்லி சண்டையிட வைத்திருக்க வேண்டும். சிங்கம் டூவும் போடப்பட்டிருக்க வேண்டும். 

தலைவர் பேருந்தின் முதல் இருக்கையில் அமர்ந்து சீரியசாகப் படம் பார்த்துக் கொண்டிருக்க, ஒட்டு மொத்தப் பேருந்தும் அவருடன் சேர்ந்து படுசீரியஸாகப் படம் பார்த்துக் கொண்டிருந்தது. சமநேரத்தில் சிங்கம் பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி சீறப்பாய நாங்களோ எங்கள் பங்கிற்கு கெக்கபிக்க கெக்கபிக்கவென விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கியிருந்தோம்.   

13 Aug 2014

படகு இல்லம் - பறத்தலினும் மிதத்தல் இனிது

குமரகம் மெல்ல எங்களைத் தன் எல்லைக்குள் அனுமதித்துக் கொண்டிருந்தது. தமிழகத்தில் இதுவரை எங்குமே பார்த்திராத சில காட்சிகள் கண்முன்னே விரிந்து கொண்டிருக்க, ஆச்சரியம் நிறைந்த பார்வையை அலைய விட்டுக்கொண்டே அவ்வூரின் அழகையும் அமைதியையும் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். கோட்டயத்தைத் தாண்டும் வரை அடித்துப் பெய்து கொண்டிருந்த பெருமழை கூட இப்போது மெல்லிய தூறலாக மாறியிருந்தது. 

குமரகம் - கேரளா டூரிஸ்ட் ஹோம் வந்ததும் வண்டியை சாலையோரமாய் ஒதுக்கி நிறுத்த, நிறுத்தியது தான் தாமதம் போட்ஹவுசிற்கு ஆள்பிடிக்கும் கூட்டம் எங்களைச் சூழ்ந்து கொண்டது. 'சாரே ஹவுஸ் போட் சாரே' , 'எத்தர பேருக்கு போட் வேணும், அத்தன பேருக்கும் இவட உண்டு', 'தமிழ்நாடோ, எங்ககிட்ட ஹவுஸ் போட் உண்டு' என்று பலரிடம் இருந்தும் பல விதங்களில் அழைப்புகள். இருந்தாலும் மாமா ஏற்கனவே போட்ஹவுஸிற்கு முன்பதிவு செய்திருந்ததால் புதிதாய் ஒரு போட்ஹவுஸ் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. கடந்த சில வருடங்களாக அவர் தனது நண்பர்களுடன் வந்து செல்லும் இடம் என்பதால் எங்கு யாரிடம் நல்ல தரமான அதே நேரம் நியாயமான விலையில் போட் கிடைக்கும் என்பதை எல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்தார். 


கடந்த வருடமே எங்களையும் போட்ஹவுஸிற்கு அழைத்துச் செல்லும்படி பெட்டிஷன் போட்டிருந்தோம். அந்த மனு பரிசீலிக்கப்பட்டு, அனுமதிபெற்று, இதோ இப்போது ஒருவழியாய் குமரகம் வரைக்கும் வந்தாயிற்று. படகில் ஏற வேண்டியதுதான் பாக்கி. சில நிமிடகளில் வழிகாட்டியாக ஒருவர் வந்துசேர, அவரின் வழிகாட்டுதலின்படி ஒரே ஒரு கார் மட்டுமே செல்லக்கூடிய மண்பாதையில் அடுத்த பயணம் ஆரம்பமானது. 

இடதுபுறம் வாழைத்தோட்டம் தன் மீது படிந்த நீர்த்துளிகளை கசிய விட்டுக் கொண்டிருக்க மறுபுறம் துறைமுகத்தில் புறப்படத் தயாராய் இருக்கும் கப்பல்கள் போல படகுகள் அனைத்தும் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன. சொல்லபோனால் ஏழைகளின் டைட்டானிக் அவை. ஒருவேளை நண்பர்களுடன் சென்றோமானால் 'டைட்'டானிக் ஆகவும் மாற வாய்ப்பிருக்கிறது. இப்போது நாங்கள் வந்திருப்பது குடும்பத்தோடு. (இப்பயணம் சித்தியின் ஸ்பெஷல் ட்ரீட் என்பதால் அவருக்கு கோட்டான கோடி நன்றிகள்)

ஒரு பயணத்தில் நாம் யாருடன் பயணிக்கிறோம் என்பதே அந்தப் பயணத்தின் திசைகாட்டியாகவும் மாறும். நண்பர்களுடன் பயணிப்பது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றால், குடும்பத்தோடு பயணிப்பது வேறு விதமான அனுபவத்தைக் கொடுக்கும். நண்பர்களைத் தவிர்த்து உறவினர்களுடன் பயணிக்க இருக்கும் இந்தப் பயணம் என்ன மாதிரியான அனுபவத்தை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது என்பது அப்போது தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தேன். 

மெல்ல படகுகினுள் காலடி எடுத்து வைத்தோம். கிட்டத்தட்ட பல மாதத்துக் கனவு, பல வாரத்து எதிர்பார்ப்பு. இன்னும் ஒரு நாளைக்கு இதே படகில்தான் எங்கள் மொத்த நாளையும் களிக்கப்போகிறோம் என்ற ஆர்வம். அவசரமாக அவசரமாக அந்தப் படகை எங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட ஒரு யானையைப் பார்க்கும் ஆர்வத்தில் ஒவ்வொரு ரூம் ரூமாக சுற்றிக் கொண்டிருந்தோம். 


முழுக்க முழுக்க மரத்தாலான படகு. படகின் முன் பகுதியில் பத்து பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஒரு உணவு மேஜை, அதற்குப் பின்புறம் சுவற்றில் மாட்டப்பட்ட டிவி. ஒரு சோபா மற்றும் படகோடு சேர்த்து வடிவமைக்கப்பட்ட மரஇருக்கைகள். மொத்தம் பத்து பேர் வந்திருந்ததால் நான்கு பெட்ரூம் கொண்ட படகை வாடகைக்கு எடுத்திருந்தோம். ஒவ்வொன்றிலும் இரு படுக்கைகள். ஒரு அட்டாச்ட் பாத்ரூம் டாய்லெட். நல்ல வசதியான ரூம். மெத்தைகள் ஒவ்வொன்றும் தரமான பஞ்சில் செய்திருக்க வேண்டும். கையை வைத்தவுடன் உள்ளே நன்றாக அமுங்கியது. மெத்தையின் மிக அருகில் ஜன்னலின் வழியே எட்டிப் பார்க்கும் நீர். ஆக்சுவலி ஸ்பீக்கிங் இட் இஸ் எ பெஸ்ட் ஹனிமூன் ஸ்பாட். 

நான்கு படுக்கை அறைகள் கொண்ட படகு என்பதால் சற்றே நீளமான படகு. மெல்ல நடந்தாலே காலடி ஓசை கேட்கும் அளவிற்குப் படகில் ஓர் அமைதி நிலவியது. மெதுவாக நடந்து படகின் பின்புறம் சென்றேன். கிச்சனில் எங்களுக்குத் தேவையான பதார்த்தங்கள் தயாராகிக் கொண்டிருக்க மூன்று இளைஞர்கள் மும்மரமாக சமையலில் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவர் மீன் நறுக்கிக் கொண்டிருக்க மற்ற இருவரும் வேறு ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும் புன்னகைத்துவிட்டு மீண்டும் குனிந்து கொண்டார்கள். அங்கிருந்த பிர்ட்ஜை திறந்து தண்ணீர்ப் புட்டியை எடுக்கும் போது தான் கவனித்தேன், தேர்ந்தெடுத்த பழச்சாறு கொண்டு தயாரிக்கபட்ட வேறு சில புட்டிகளும் இருந்ததை, சரி. எனக்கு அது தேவையில்லாத விஷயம். அங்கிருந்து அவர்களைக் கடந்து படகின் பின்புறம் சென்றேன். சமநேரத்தில் என் குடும்பத்தார் தங்கள் இருப்பை டிஜிட்டலில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். படகிற்கு வெளியில் நீர் சலனமற்று ஓடிக் கொண்டிருக்க படகின் பின்புறம் இருந்த அறையில் நாங்கள் பயணிக்க இருக்கும் டைட்டானிக் கப்பலைக் கிளப்புவதற்குத் தேவையான முன்ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் எங்கள் கேப்டன்.


துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல்கள் போல வரிசை வரிசையாக ஒவ்வொரு படகாகக் கிளம்பிச் சென்று கொண்டிருந்தன. சில படகுகள் வெளிநாட்டுக் காரர்களுக்காகவும் சில படகுகள் தேனிலவைக் களிபதற்காகவும் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருக்க, பெரும்பாலான படகுகள் பலரது அலுவலகத்து இம்சைகளை மறப்பதற்காக பயணப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது 'எப்படா எங்கள் படகை எடுப்பார்கள்' என்ற நிலைக்கு வந்திருந்தோம். ரஸ்னா போன்ற சுவையுடைய வெல்கம் டிரிங் வந்து சேர்ந்தது. அப்போது கிளம்பிய பசிக்கு அதுவே போதுமானதாக இருக்க சமநேரத்தில் மாலுமி எங்கள் கப்பலைச் செலுத்தத் தொடங்கியிருந்தார். 

அதுவரை கேரளத்தின் பசுமை நிறைந்த ஊர்களையும், வளைந்து நெளிந்து பயணிக்கும் சாலைகளையும், அவ்வபோது வந்து போகும் ஆறுகளையும் மட்டுமே காண்பித்துக் கொண்டிருந்த கேரளம் தனது வரைபடத்தின் மற்றொரு முக்கியமான அங்கத்தைக் காண்பிக்க தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. நாங்களும் அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தோம்.

படகு கிளம்பிய சில நிமிடங்களிலேயே கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் நீர் நீர் நீரைத் தவிர வேறெதையும் பார்க்க முடியா ஒரு இடத்தை அடைந்திருந்தோம். இதுவரைக்கும் கடலை மட்டுமே அத்தனை பிரம்மாண்டமாய் கற்பனை செய்து பார்த்திருந்த என் கண்களுக்கு இந்த நீர்பரப்பு நம்ப முடியாத ஒரு காட்சியை பரிணமித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஆங்காங்கு சிறுசிறு புள்ளிகளாக நூற்றுக் கணக்கான படகுகள் தங்கள் நீர்வழிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க, நாங்களும் அவர்களில் ஒருவராக அனுமதிக்கப்பட்டிருந்தோம். ஆச்சரியத்தில் சந்தோசத்தில் இன்னெதென்று கூறமுடியா மனநிறைவில் கண்களை சுழல விட்டுக்கொண்டே இருந்த நேரத்தில் படகு இருபது கிமீ வேகத்தில் நீரைக் கிழித்துக் கொண்டிருந்தது.. 


படகின் கீழே சலனமற்று ஓடிகொண்டிருக்கும் இந்த நீர் ஆற்று நீர் தான் ஆனால் ஆற்று நீர் அல்ல. ஆற்றில் இருந்து பிரிந்து வந்த கழிமுகத்து நீர். ஒவ்வொரு ஆறும் கடலை நோக்கிப் பாயும் போது தங்களுக்குள்ளாகவே இருவேறு பாதைகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. ஒன்று சுழித்து வேகமாய் ஓடும் பாதை,. மற்றொன்று எவ்வித சலனமும் இல்லாமல் கடலை சென்று சேர்ந்தால் போதும் என்ற அசமந்தத்தில் பயணிக்கும் பாதை. இப்படியாக பத்துக்கும் மேற்பட்ட பெரிய ஆறுகள் மற்றும் இன்னபிற நீரோட்டங்கள் இணைந்து இந்தக் கழிமுகத்தை ஏற்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட இருநூறு சதுரகிமீ பரப்பளவுள்ள இந்தக் கழிமுகமானது இந்தியாவிலேயே மிகபெரிய நன்னீர் ஏரியாகும். ஆனாலும் வருடம் முழுவதும் நன்னீராக இருப்பதில்லை. 

மார்ச் முதல் ஜூலை வரை மழைபொழியாத காலங்களில் இந்தப் பகுதியில் நன்னீர் வரத்துக் குறையும் போது ஏரியின் மட்டம் கடல் நீரின் மட்டத்தைக் விடக்குறைகிறது. இதைச்சாக்காக வைத்து கடல் நீர் உள்ளே புகுந்து மொத்த நீரும் உப்பு நீராகிறது. மழைக்காலங்களில் நன்னீர் வரத்து மிக அதிகமாக இருப்பதால் நன்னீர் மட்டம் உயர்ந்து தங்கள் பங்கிற்கு கடல்நீரைப் பழிவாங்குகிறது. அதனால் இங்கு ஒவ்வொரு ஆறுமாதங்களிலும் இருவேறு உயிர்ச்சூழல் நிலவுகிறது. குறைந்தபட்சம் மூன்று அடி ஆழத்தில் இருந்து அதிக பட்சமாக நாற்பது அடி வரை ஆழம் இருக்கிறது. இந்த ஏரியில் நீரின் ஆழம் எப்போதுமே சமநிலையில் இருப்பதில்லை என்பதால் ஆழத்தைக் கணக்கிடுவதற்காக ஆங்காங்கு குச்சிகளை நட்டுவைத்துள்ளனர். அவற்றின் மீது எங்கிருந்தோ வந்த அயல்தேசத்துப் பறவைகள் இளைப்பாறிக் கொண்டிருந்தன. பல தேசங்களில் இருந்தும் பறவைகள் வந்து போவதாகக் கூறுகிறார்கள். இப்படியாக வந்து போகும் பறவைகள் பறவைக் காதலர்களின் கண்களுக்கு நல்ல விருந்து படைக்க, நமக்கோ பறவையினத்திலே சற்றே உயரிய இனமான கோழியானது விருந்து படைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. 

எங்கள் படகு நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சரியாக நாற்பதாவது கி.மீட்டரில் கடல் இருப்பதாகக் கூறினார் எங்கள் கேப்டன். கண்ணும் கருத்துமாய் படகை செலுத்திக் கொண்டிருந்தவரின் அருகில் போய் அமர்ந்து கொண்டேன். பின்னே இந்தப் பதிவுக்கு மேலதிக தகவல் வேண்டாமா. என்னுடைய விசாரணைகளும் அவருடைய விவரணைகளும் ஆரம்பமாகியது. கடந்த பதினைந்து வருடங்களாக இதே தடத்தில் பல்வேறு வகையான மனிதர்களுடன் பயணித்துக் கொண்டுள்ளார். நன்றாகவே மலையாளத் தமிழ் பேசுகிறார், அதனால் அவரிடம் இருந்து தகவல்களைப் பிடுங்கவதில் அப்படி ஒன்றும் சிரமம் இருக்கவில்லை. இல்லை என்றாலும் மாமாவுக்கு மலையாளம் தெரியுமென்பதால் மொழி பெரிய பிரச்சனையில்லை.  

இந்த கழிமுகத்துக் கரையில் ஏகப்பட்ட சிறுகுறு கிராமங்கள் இருக்கின்றன. இவர்கள் அத்தனை பேருக்கும் படகு தான் முக்கிய போக்குவரத்துச் சாதனம். தூரத்தில் இரண்டு அடுக்குகள் கொண்ட படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. கீழே நான்கு மேலே நான்கு என மொத்தம் எட்டு படுக்கையறை வசதி கொண்டது. மூன்றாவது தளத்தில் ஒரு சிறிய நீச்சல் குளம் வேறு இருக்கிறதாம். ஷெராட்டன் மற்றும் ஓபராய் விடுதிகளுக்குச் சொந்தமான உல்லாசப் படகு அது. அங்கு அறையெடுத்துத் தங்கும் நபர்களுக்கு மட்டுமே அதில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.         

நீச்சல் குளத்துடன் கூடிய இரண்டடுக்குப் படகு இல்லம்

டிசம்பரில் இருந்து ஜூன் வரைக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளின் கூட்டம் அதிகமாய் இருக்குமாம். இந்த மொத்தக் கழிமுகத்தையும் சுற்றிவர ஒருவாரமாகுமாம். வெளிநாட்டுவாசிகள், ஆராய்ச்சியாளர்கள், திரைத்துறையினர் போன்றவர்கள் இந்த ஒருவாரப் படகுப் பயணத்தை தேர்ந்தெடுக்கும் நபர்கள் என்று கூறினார். சில இடங்களில் வலை கட்டிவைத்து அதன் நடுவில் குண்டு பல்பு தொங்க விட்டிருந்தார்கள். இரவு நேரத்தில் அந்த பல்பை எரிய வைத்தால் அதில் இருந்து வரும் வெளிச்சத்தின் கவர்ச்சியில் பல்பை நோக்கி வரும் மீன்கள் வலையில் மாட்டிக் கொள்ளுமாம். வலை விரிப்பதில் மனிதர்கள் தாம் கெட்டிக்காரர்கள் ஆயிற்றே. நல்லாவே விரித்திருந்தார்கள்.   

கொஞ்சநேரம் படகோட்டியுடன் பேசிகொண்டிருந்த கௌதம், அவரிடம் படகை ஓட்டுவது எப்படி என்று கேட்க, மறுப்பெதுவும் சொல்லாமல் கற்றுகொடுக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களுக்கு அவனும் மாலுமி ஆகியிருந்தான். பின்னர் கொஞ்சம் நேரம் சொந்தக்கதை சோகக்கதை பேசியபடி பயணித்துக் கொண்டிருந்த நாங்கள், சிறிதுநேரத்தில் ஒரு புதிய விளையாட்டைக் கண்டுபிடித்து விளையாடத் தொடங்கினோம். இடையிடையே கொண்டு வந்திருந்த அல்வாவும் மிக்சரும் உள்ளே நொறுங்கிக் கொண்டிருந்தன. விளையாட்டு முடிவடையும் தருவாய்க்கு வர படகையும் அருகிலிருந்த கரையோரம் ஒதுக்கியிருந்தார்கள் மதிய உணவிற்காக. 

மணி ரெண்டை நெருங்கியிருந்தது. நல்லபசி. சாம்பார் ரசம் மோர் ஒருபக்கம் இருக்க நல்ல சுடச்சுட மீன்குழம்பும் மீன்பொரியலும் எங்கள் பசியை அடக்கத் தயாராயிருந்தன. பசிக்கு ருசி தெரியாதென்றாலும் சும்மா சொல்லக் கூடாது நல்லருசி. நல்ல சமையல். 

*****
மீண்டும் படகு அங்கிருந்து வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது. தூரத்தில் ஒரு ஒரு சிறிய மேட்டின் மீது சின்ன சின்ன மரம் செடிகள் வளர்ந்திருப்பது  போல் ஒரு இடம் தெரிய, அருகில் நெருங்க நெருங்கத்தான் தெரிந்தது, அது சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள குட்டித் தீவு என்று. அந்த தீவின் அருகில் ஆழம் இரண்டடி தான் இருக்கும் என்பதால் படகு அங்கு செல்லமுடியாது என்று கூறிவிட்டார். இந்நேரத்தில் ஒரு ஸ்பீட்போட் எங்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்து, வந்த வேகத்தில் ஒரு வட்டமடித்து நின்றது. என்னவென்று கேட்டோம். அந்தக் போட்டில் ஒரு ரவுண்ட் போய்வர தலைக்கு நூறு ரூபாயாம். ஆசை யாரை விட்டது. ஸ்பீட் போட்டில் ஏறிக் கொண்டோம். ஏரி நீர் முகத்தில் அறைய அந்தக் குட்டித் தீவை ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டுவந்து இறக்கிவிட்டார். எங்களைப் பார்த்த பக்கத்து போட்டுக்காரர்களும் அவர்களை அழைக்க நொடிப்பொழுதில் அவருக்கு டிமாண்ட் ஜாஸ்த்தியாகிவிட்டது.

குட்டித் தீவு

குமரகத்தில் போட்ஹவுஸில் பயணிக்க விரும்பவில்லை சும்மா போட்டிங் மட்டும் போதும் என்று நினைத்தீர்கள் என்றால் அதற்கும் வழி இருக்கிறது. 

போட் ஹவுஸ் என்றால் தோரயமாக... (சீசனுக்கு சீசன் விலை மாறுபடும்)  
  •  சிங்கிள் பெட்ரூம் 7000/-
  •  டபுள் பெட்ரூம்   9000/- 
  •  ட்ரிபிள் பெட்ரூம் 11000/-
  •  போர் பெட்ரூம்   13000/-

சில படகுகளில் பால்கனி வசதியுடன் கூடிய மேல்தளமும் இருக்கின்றன. என்ன காசுதான் கொஞ்சம் அதிகம். மேலும் அனைத்து சிங்கிள் பெட்ரூம் படகுகளிலும் பால்கனி வசதியுள்ளது. ஆழப்புழை குமரகம் போட்ஹவுஸிற்கான மிக முக்கியமான சுற்றுல்லாத்தலங்கள். தென் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு குமரகமும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு ஆழப்புழையும் வந்து போவதற்கு வசதியான இடங்கள்.  

ஸ்பீட் போட்

மாலை கொஞ்சம் கொஞ்சமாக மயங்கத் தொடங்க, தூக்கம் யாருடைய அனுமதியும் கேட்டுப் பெறாமல் கண்களைச் சுழற்றத் தொடங்கியிருந்தது. கூடவே சேர்ந்துகொண்ட குளிர்ந்த காற்றும் சூழ்நிலையை ஏகாந்தப்படுத்த ராம்சங்கர் தூங்கியே விட்டான். நான் மாமா கௌதம் மூவரும் படகின் விளிம்பில் ஓரிடத்தில் உட்கார்ந்து கொள்ள, பஸ்ஸில் புட்போர்டு அடிப்பது போல் படகில் புட்போர்ட் அடித்துக் கொண்டிருந்தோம். சமநேரத்தில் சூடான நேத்திரப் பழம் பஜ்ஜியுடன் கூடிய சுவையான டீயும் வந்து சேர மீண்டும் புத்துணர்ச்சி அடைந்திருந்தோம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள் கேரளா சென்றால் தவறவிடக் கூடாத பதார்த்தம் இந்த நேத்திரம் பழம் பஜ்ஜி. செம டேஸ்ட்டு. 

தூரத்தில் ஒரு மிகபெரிய பாலம் கண்ணில் தட்டுபட்டது. கோட்டயத்தையும் ஆழப்புழையையும் இணைக்கக் கூடிய மிக முக்கியமான பாலம். பாலத்தின் நீளம் மட்டும் இரண்டு கிமீக்குக் குறையாமல் இருக்க வேண்டும். அதன் இரு ஓரங்களிலும் சற்றே அளவில் பெரிய படகு செல்லும் வகையில் வழி இருக்கிறது, அதன் உள்புகுந்து மறுபுறம் சென்றால் கடலுக்குச் செல்லும் பாதையை அடையலாம். பாலத்தின் மறுபக்கத்தில் மீன்பிடித் தொழில் மும்மரமாக நடந்து வருவதால் மறுபக்கம் செல்வதற்குத் தடா. பாலத்தின் மிக அருகில் செல்லச் செல்லச் தான் தெரிந்தது அதுவும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் என்று. அந்தவழியாகப் பயணிக்கும் மக்கள் அனைவரும் அங்கு சிறிது நேரம் நின்று இயற்கையை அனுபவித்துவிட்டே செல்கிறார்கள். 


மெல்ல இருட்டத் தொடங்கியது. வழியில் ஓரிடத்தில் மீன் வாங்கலாம் என்று சென்றால், எங்களுக்கு முன் வந்தவர்கள் மீன்கள் அனைத்தையும் அள்ளிச் சென்றிருக்க வெறும் இரால் மட்டுமே எஞ்சியிருந்தது. சரி அதுவாவது பிழைத்துப் போகட்டும் என விட்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். செல்லும் வழியில் படகு கட்டும் இடம் பரமாரிக்கும் இடம், எப்படிப் பராமரிப்பார்கள், எவ்வளவு நாளுக்கு ஒருமுறை பராமரிப்பார்கள் போன்ற தகவல்களைக் கூறிக்கொண்டே வந்தார் எங்கள் கேப்டன். சிலநிமடங்களில் படகை நிறுத்த வேண்டிய இடம் வந்து சேர, அன்றைய இரவு அங்கே தான். படகை இழுத்துப் பிடித்துத் தென்னை மரத்தில் கட்டி வைத்தார்கள். 

இங்கே படகோட்டிகள் அனைவரும் தாங்கள் நினைத்த இடங்களில் எல்லாம் படகுகளை நிறுத்திவிடுவதில்லை. மூன்று மூன்று படகுகளாகவே நிறுத்துகிறார்கள். அதில்தான் ஒரு சூட்சுமமும் ஒளிந்துள்ளது. இங்கிருக்கும் அத்தனைப் படகுகளிலும் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டிருந்தாலும் பகல் நேரத்தில் அதனை போடுவதில்லை. இரவில் உறங்கும் சமயத்தில் மட்டுமே போடுகிறார்கள். அதனால் அருகருகில் நிப்பாட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று படகுகளுக்கும் ஒரே ஒரு பெரிய படகில் இருந்தே மின்சாரம் சப்ளையாகிறது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் வந்திருந்த படகு பெரிய படகு என்பதால் எங்களிடம் இருந்து மற்ற படகுகளுக்கு மின்சாரம் சென்றது. இதற்காகவே பிரத்யேகமான பெரிய ஜெனரேட்டரைப் பொருத்தியிருக்கிறார்கள்.

குளிப்பதற்கு ஓர் இடம் தேடி வெகுதூரம் சென்றும் எங்குமே சுத்தமான நீர் இல்லை என்பதால் வந்தவழியே திரும்பிவிட்டோம்.  இந்நேரத்தில் மழை வலுக்கத் தொடங்கியிருந்தது. வெளியே பரந்து விரிந்த நீர்ப்பரப்பு, சுற்றிலும் கார்மேகங்கள், மொத்தமாக இருட்டியிருக்க தூரத்தில் ஆங்காங்கு நின்று கொண்டிருந்த படகுகள் மஞ்சள் ஒளியை ஏற்றிவிட்டிருந்தன. மழை பொழியும் சப்தம் தவிர வேறு எதுவும் இல்லா அமைதி. வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய சூழல் அது. அனுபவித்துக் கொண்டிருந்தோம். மழை வெறித்த இடைவெளியில் தவளைகளும் சில்வண்டுகளும் தங்கள் இசை மழையை ஆரம்பித்திருந்தன. 

படகில் ரிலையன்ஸ் டிஷ் வசதி இருக்க சிரிப்பொலியில் கவுண்டமணியும் செந்திலும் தங்கள் பங்கிற்கு எங்கள் கவலைகளை மறக்கச் செய்து கொண்டிருந்தார்கள். லேசாக அடித்த காற்றில் படகு அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருக்க இரவு உணவிற்குப் பின் மெத்தையில் படுத்தது தான் தெரியும் விடிந்திருந்தது.


லேசான தூறலுடன் ஆரம்பித்த அன்றைய காலை பலத்த மழையுடன் நீளத் தொடங்கியது. தண்ணீரில் கைவைக்க முடியா அளவிற்க்குக் குளிர்ந்து கிடக்க, அந்த நீரில் தான் குளிக்க வேண்டுமாம் 'நாங்கல்லாம் கொடைக்கனால்லையே பச்ச தண்ணியில குளிச்சவங்க எங்க கிட்டயேவா!'. குளித்துமுடித்து காலை சாப்பாடு முடிய மணி ஒன்பதாகியிருந்தது. கார்மேகங்கள் இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. 

ஒரு இரவுக்குப்பின், ஆரம்பித்த இடத்தை நோக்கிய பயணம் தொடங்க, இப்போதுதான் படகினுள் நுழைந்தது போல் இருந்தது அதற்குள் முடியப்போகிறதே என்ற கவலை எங்களைச் சூழ்ந்து கொண்டது. இந்நேரத்தில் காற்றின் வேகம் தாறுமாறாக அதிகரித்திருந்தது. எங்களுக்கு முன்னே மேகங்கள் கறுப்புப் பலூன் போல் கீழே இறங்கிக் கொண்டிருக்க அவசர அவசரமாக படகை கரையோரம் திருப்பினார் படகோட்டி. என்னாச்சு என்றேன். ஒரு பெரிய சுழல் காத்து வருது, அதுல போனா போட்ட சாச்சுரும். அது போனதும் போகலாம் என்றார். எப்படிக் கண்டுபுடிச்சீங்க என்றேன். எங்களுக்கு தெரியும் என்றார். அவருக்குத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். ஆனால் எப்படி?. சில கேள்விகளுக்கான பதில் எழுதப்படவில்லை. அனுபவத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை.     

அடுத்து ஒரு க்ரூப் சென்னையில் இருந்து வந்திருப்பதாகக் கூறினார். பேங்க் ஆபீசர்ஸாம். உடனே கிளம்ப வேண்டி இருக்கும் என்று கூறினார். 

என்றைக்குமே இயற்கை இயற்கை தான். அது தரக்கூடிய அமைதியை ஆன்ம திருப்தியை வேறு எதனாலும் கொடுக்கவே முடியாது. மீண்டும் ஒருமுறை படகை முழுமையாகச் சுற்றிப்பார்த்தேன். தன்னுடைய அடுத்த பயணத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. நேற்றைய தினத்திலேயே இருந்திருக்கலாம். இருந்தாலும் வேறு வழியில்லை. எங்கள் பொருட்கள் அத்தனையையும் அங்கிருந்து எடுத்துக் கொண்டு நினைவுகளை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் தென்காசி நோக்கிக் கிளம்பினோம்.  


பின்குறிப்பு 1 : குமரகம் போட்ஹவுஸ் சென்று வந்து ஒரு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. நானும் வந்தநாளில் இருந்து எழுத முயன்று தடைபட்டுக் கொண்டே இருந்த பதிவு இது. ஒவ்வொரு முறை மாமா போன் செய்யும் போதும் எழுதிட்டியாடா எழுதிட்டியாடா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். நானும் 'இன்னிக்கும் எழுதுறேன் மாமா, நாளைக்கு எழுதுறேன் மாமா ' என்று டபாய்த்துக் கொண்டே இருந்தேன். ஒருவேளை அவர் தொடர்ந்து கேட்டிருக்காவிட்டால் எழுதியிருப்பேனா தெரியாது. இதுவரை எந்தப் பதிவையும் யாருக்கும் டெடிகேட்டியது இல்லை. இந்தப் பதிவை அவருக்கு டெடிகேட்டுகிறேன் :-) 

பின்குறிப்பு 2 :  வாய்ப்பு கிடைத்தால், வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கடனவுடன வாங்கி வாய்ப்பை உருவாக்கிக் கொண்டாவது ஒருமுறை சென்று வாருங்கள். இயற்கை அது தரும் தனிமை, நமக்குப் பிடித்தவர்களின் அருகாமை இவையனைத்தும் ஒன்றுகூடும் போது கடவுளின் தேசம் உங்களுக்கொரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பது உறுதி.

பின்குறிப்பு 3 : பதிவு கொஞ்சம் பெருசாயிருச்சு. மன்னிச்சு. எவ்வளவோ தாங்கிட்டீங்க. இதையும் தாங்கிக்க மாட்டீங்களா :-)