அடுக்களையில் தொங்கும் குண்டு பல்பு வெளிச்சத்தில் விடியும் அந்த நாளுக்கும் சூரிய வெளிச்சத்தில் விடியும் மற்ற நாட்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
தீபாவளி அன்று காலையில் மெல்ல முழிப்பு வரும்பொழுது சர்வமும் இருளாக இருக்கும், மெட்ராஸில் இருந்து வந்திருக்கும் அப்பா. அடுக்களையில் எரிந்து கொண்டிருக்கும் குண்டுபல்பின் அடியில் அம்மிக்கல்லை உருட்டிக் கொண்டிருக்கும் பாட்டி. அதிகாலையிலேயே குளித்து முடித்து தலை காயவைக்கக் கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் அம்மா. இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு விறகடுப்பின் முன் வெந்து கொண்டிருக்கும் தாத்தா. இவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே இவ்வளவு மும்மரமாக செய்து கொண்டிருப்பது நிச்சயம் ப்ராஜெக்ட் பஜ்ஜி அல்லது ப்ராடெக்ட் பஜ்ஜியாகத் தான் இருக்கும்.
பஜ்ஜி சொஜ்ஜிக்களின் மணம் அந்த இடத்தையே நிறைத்திருந்தாலும் எங்கிருந்தோ கேட்கும் அந்த ஒற்றை யானை வெடிச்சத்தம் போதும் என் கைகால்களை பரபரக்கச் செய்யவும் அன்றைய தினத்தை சுறுசுறுப்பாக்கவும். எழுந்த வேகத்தில் அரங்கு வீட்டிற்குள் நுழைந்து எனக்கென பங்கு பிரிக்கப்பட்ட வெடிகளில் இருந்து ஒன்றை எடுத்து வெடியை வெடிக்கும் போது கிடைக்கும் சந்தோசமானது எல்லையில் பணிபுரியும் சதீஷ் அண்ணன் தனது எதிரியை வீழ்த்தும் போது அடையக் கூடிய சந்தோசத்திற்கு ஈடாகத் தான் இருக்கும்.
தீபாவளிக்கு முந்தைய தினத்தில் இருந்து தீபாவளி தொடங்கும் வரையிலான அந்த மனநிலையை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. சிறுவயது தொடங்கி நம்மை அதிகம் சந்தோசத்தில் ஆழ்த்திய, அதிகம் எதிர்பார்க்க வைத்த, அதிகம் உற்சாகம் கொள்ளச் செய்த ஒரு பண்டிகை உண்டென்றால் அது நிச்சயம் தீபாவளியாகத் தான் இருக்கும்.
நினைவு தெரிந்து முதன்முதலில் வெடிக்கப் பழகியது ரோல் கேப், ரோல் நிரப்பிய அந்த துப்பாக்கியை கையில் எடுத்தாலே அடுத்த ஒரு வாரத்திற்கு "தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்" என்ற பாட்டு தான் நாலாபுறமும் கேட்கும். அந்த பாட்டு எபெக்டிலேயே கண்ணில் படும் அத்தனை தீவிரவாதிகளையும் ஆசை தீர சுட்டுத் தள்ளலாம்.
ரோல் வெடி தீர்ந்து போனால் பொட்டு வெடி, ஆனால் இருப்பதிலேயே கடியைக் கொடுக்கக் கூடியது என்னவோ இந்த பொட்டு வெடிதான், இதனை வெடிக்கவைக்க ஒரு கல் வேண்டும், மேலும் இந்த வெடியை மண்ணில் போட்டு லொட்டு லொட்டு என்று தட்டினால் வெடிக்கவே வெடிக்காது, அதற்கு ஏதுவான ஒரு சிமின்ட் தரையை தேட வேண்டும். சிமிண்ட் தரையே கிடைத்தாலும் ஒரே லொட்டில் வெடிக்க வைக்கும் திறமையெல்லாம் நமக்குக் கிடையாது என்பதால் பக்கத்து வீட்டு கிழவி கொட்டப்பாக்கை தட்டுவது போல் அதனுடன் சேர்ந்து போராட வேண்டும், அதே நேரம் பத்து பொட்டு வெடியை போட்டுத் தள்ளுவதற்குள் சிமெண்ட் தரையில் பாதி பெயர்ந்திருக்கும். சிமிண்ட் தரைக்கு சொந்தக்கார கிழவியும் நம்மைக் கண்டதும் சுட தயாராக காத்திருப்பாள்.
அடுத்தது யானை வெடி, சிகப்பு கலரில் கொஞ்சம் நோஞ்சான் போல் இருக்கும் அந்த வெடிக்கு எவன் யானை வெடி என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. நெல்லை தவிர்த்து மற்ற ஊர்களில் அந்த வெடியை பிஜிலி வெடி என்பார்கள், பெயரா முக்கியம்? வெடி தான் முக்கியம்.
டவுசர் போட்ட பால்ய காலங்களில் நம்மை ஹீரோவாக்கும் ஒரே வெடி இந்த யானை வெடி தான். வெடியை கையில் வைத்து வெடிக்கப் பழகும் அத்தனை லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கும் யனையார் தான் ஆபத்பாந்தவர். வெள்ளை நிறத்தில் நீண்டிருக்கும் யானையாரின் காதைத் திருகி அதன் வாலில் கங்கை வைத்த பின், பொறிபறக்க, வெடிக்க தொடங்கும் அந்த நொடியில் வானை நோக்கி வீசி எரிய வேண்டும், ஒரு வேலை நாம் தூக்கி எறிந்த வெடி வானில் வெடிக்காமல் தரையில் விழுந்து வெடித்தால் நமக்கு இன்னும் பயிற்சி சரியில்லை என்று அர்த்தம், ஒரு வேளை அந்த வெடி வானத்திலேயே வெடித்து, அந்நேரம் அக்காட்சியை நாம் நோக்கும் பிகர் நோக்கினால் கன்பார்ம் லவ்வு என்று அர்த்தம், ஒருவேளை மேலே தூக்கி போட்ட வெடி பக்கத்து வீட்டு கிழவி மேல் விழுந்துத் தொலைத்தால் கட்டம் சரியில்லை என்று அர்த்தம்.
சமயங்களில் யானை வெடியை ஆல் இன் ஆல் அழகுராஜா போலவும் பயன்படுத்தாலம், யானையாரின் வயிற்றில் ஆபரேசன் செய்து, திரியைப் பற்ற வைத்தால் சங்குசக்கரம், ஆபரேசன் செய்யப்பட்ட அதே வெடியை முக்கோண வடிவில் தரையில் வைத்தால் புஸ்வானம், பலபிஜிலியை குஜிலியாக்கி பற்றவைத்தால் சரவெடி. இதுவே தத்துவார்த்தமான பதிவு என்றால் சரவெடியை சுறுசுறுப்புடன் ஒப்பிடலாம், பாருங்கள் சரவெடி எவ்வளவு சுறுசுறுப்பானது என்று,வாழ்கையை சரவெடியைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பீட்டர் விடலாம்.
நெக்ஸ்ட் லஷ்மி வெடி, என்ன கொஞ்சம் முன்கோபி, பற்றவைத்த வேகத்தில் கோபம் தலைக்கேறிவிடும், கைநடுக்கம் தொடைநடுக்கம் இருப்பவர்கள் அனைவரும் கொஞ்சம் அந்தாண்ட நின்று வேடிக்கைப் பார்க்க வேண்டிய வெடி. இந்த வெடி வெடிப்பதில் இருக்கும் ஒரு சுவாரசியம் மற்ற வெடிகளில் கொஞ்சம் குறைவு தான். லக்ஷ்மியாரின் வாகனம் குருவி வெடி, யானைக்கு சீனியர், லக்ஷ்மிக்கு ஜூனியர், கொஞ்சம் நடுத்தரம். நடுத்தரம் என்றாலே பிரச்சனை தானே.
வெடி வகையறாக்களில் ட்விஸ்ட் கொடுப்பவரே இந்த டபுள் ஷாட் தான், எப்போது கவிழ்ந்து எவன் காலில் சென்று வெடிக்குமோ என்று கடைசி நிமிடம் வரை நம்மை நகம் கடிக்க வைக்கக் கூடிய அத்தனை தகுதிகளையும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவர் இவர் ஒருவர் தான். அமெரிக்க மாப்பிள்ளைகள் போல் சில வெடிகள் உண்டு, பட்டர்பிளை வெடி, பறக்கும் பாம்பு வெடி, ரயில் வெடி, விசில் வெடி என்று ஆனால் பாவம் இவர்கள் எல்லாரும் கடைசி வரை அமெரிக்க மாப்பிள்ளைகளாகவே இருக்க வேண்டியது தான்.
இவர்களைத் தொடர்ந்து வருபவர் தான் நம் ஹீரோ. மிஸ்டர் அணுகுண்டு அடிகளார். இவரை வெடிக்க சரியான நேரம் எது என்று கேட்டால் அது மதியம் மூன்று மணி தான் என்பேன், எல்லாரும் நிம்மதியாக தூங்கத் தொடங்கி இருக்கும் அந்த சொப்பன நேரத்தில் தான் நாம் விஸ்வரூபம் எடுக்க வேண்டும். அத்தனை கதவுகளும் கண நேரத்தில் திறக்கப்பட்டு "ஏம்ல உசுர வாங்குறீங்க, நிம்மதியா தூங்க விடுங்கல" என்று அவர்கள் கதற வேண்டும் அவ்வளவு பவர்புல் பாம் தான் நம் அணுகுண்டு அடிகளார். இவரை வெடிக்க வைப்பது என்பது பொக்ரானில் அணுகுண்டு போடுவது போல சவாலான ஒன்று, தெருவில் வரும் சைக்கிள், பைக், தொடங்கி அந்த இடத்தைக் கிராஸ் செய்யும் பிகர் மொத்தக் கொண்டு நிறுத்தி வைத்து விடவேண்டும். இந்நேரம் நம் சகாக்கள் மறித்து நிற்பார்கள், ஒருவரையும் எல்லைக்குள் அனுமதித்து விடக் கூடாது.
சிலருக்கு பொறுமை இருக்காது,தைரியமாக பற்றவைத்த அணுகுண்டை கடக்க முயற்சி செய்வார்கள், கடந்துவிட்டால் நம் மதிப்பு என்னவாவது இல்லை நாம் வைத்த அணுகுண்டுக்கு தான் என்ன மதிப்பு. "அண்ணே வெடிச்சிரும், நீங்க போம்போது வெடிச்சிருச்சுனா எங்கள சொல்லக் கூடாது" என்று மிரட்ட வேண்டும், அதேநேரம் ஒதுங்கி நிற்கும் கூட்டத்தில் பிகர் ஏதும் நின்றால் "மாப்ள பாத்துடா, அணுகுண்டு டா வெடிச்சிரப் போகுதுடா" என்று உசுபெத்த வேண்டும். இருந்தும் பல நேரங்களில் இந்த அணுகுண்டானது மெகாபட்ஜெட் ஹீரோ போன்றது எப்போது சொதப்பும் என்றே தெரியாது. ஒட்டுமொத்த கூட்டத்தையும் நிறுத்திவைத்திருக்கும் நேரம், சிலபல பிகர்கள் குண்டையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும், ஆனால் இந்நேரம் நம் பவர்புல் ஸ்டாரோ பவர் ஸ்டாராகி புஸ் ஆகியிருப்பார். அணுகுண்டு வைத்தவனுக்கு மட்டும் தான் தெரியும் அது வெடிக்கவில்லை என்றால் அவன் மானம் கப்பலேறும் என்று கற்றது தமிழ் ராம் போல் கவிதை எழுத வேண்டியது தான்.
ராத்திரி நேர டப்பாசுகள். நாம் வாங்கி வந்த வரத்தின் அடிப்படையில் நமக்கு வாய்ப்பது என்னவோ ஒரு புஸ்வானம் டப்பா, ஒரு சங்கு சக்கரம் டப்பா, ஒரு சூரிய காந்தி அட்டை இவ்வளவு தான், இதை எல்லாம் போட்டு தீர்த்துவிட்டு, எவனாவது வானவேடிக்கை காட்டுவான் அதைப்பார்த்துக் கொண்டே கம்யுனிசம் பேசவேண்டியது தான்.
வெடி அத்தனையும் தீர்ந்து போனபின் சோம்பி உட்கார்ந்து விடக்கூடாது, பின் எதற்காக புது டிரெஸ் எடுத்துள்ளோம், நாம் நோக்கும் பிகர்கள் இருக்கும் தெருக்களில் எல்லாம் வலம் வந்து கொண்டே இருபதற்காகத்தானே, நமது வீதிவுலாவை உடனடியாகத் தொடங்கிவிட வேண்டும். அவள் பார்க்கிராளா இல்லையா என்பது வேறுவிசயம், அவளைப் பார்க்கப் போகும் சாக்கில் வேறு எவளாவது நம்மைப் பார்த்து நாமும் அவளைப் பார்த்து, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் பாஸ்.
வெடி புத்தாடை பலகாரம் விடுமுறை மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என்று மிக உற்சாகமாகக் கழியும் அந்த ஒருநாள் எப்போதுமே கொஞ்சம் வழக்கத்திற்கு மாறான நாளாகத் தான் இருக்கும்.
சென்னை வந்தபின்பு தீபாவளி என்பது நாளை மற்றொரு நாளே என்பது போலாகிவிட்டது. உறவினர்கள் இல்லை, உற்சாகம் இல்லை, வெடி இல்லை, முக்கியமாக எனது நண்பர்கள் இல்லை. ஐந்து வருடங்களுக்குப் பின் தென்காசி செல்கிறேன் தீபாவளி கொண்டாடுவதற்காக... இப்போது என்னுள் இருக்கும் இந்த தீபாவளி மனநிலையைக் கூட எப்படி விவரிப்பது என்று தெரியாத ஒருவித தீபாவளி மனநிலையில் தான் நானும் உள்ளேன் காரணம் தென்காசி செல்கிறேன் தீபாவளி கொண்டாடுவதற்காக...