பத்தாம் வகுபிற்கான முதல் மற்றும் இரண்டாம் இறுதித் தேர்வு கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகி இருந்ததால் மூன்றாம் இறுதித் தேர்வு கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆகவே நடைபெற்றுக் கொண்டுள்ளது.அறிவியல் தேர்வு ஆரம்பமாக சில நிமிடங்களே இருந்தன. தேர்வுக்கு முன்னால் ஏதாவது ஒரு மாணவனிடம் சென்று "எப்படி படிச்சிருக்க " என்று கேட்டால் "ஒன்னுமே படிக்கலடா பயமா இருக்கு" என்ற பதில் வரும். ஸ்டேட் பர்ஸ்ட் எடுப்பவனாகவே இருந்தாலும் அந்த பதில் தான் வரும். பதில் கூறியதோடு மட்டுமில்லாமல் "நீ" என்று ஒரு கேள்வியும் கேட்பான். "நீயே படிக்கலை நான் எப்படி படிச்சிருப்பேன்" என்ற பழைய பாடலை டேப் ரிக்காடார் பாடத் தொடங்கும்.
நாம் நன்றாகப் படித்திருக்கிறோமா என்பதை விட அடுத்தவன் நன்றாக படிக்கவில்லை என்ற தெம்பில் தான் மாணவ சமுதாயமே ஒவ்வொரு தேர்வையும் எழுதிக் கொண்டுள்ளது. தேர்வுக்கு முன், எந்த கேள்வி கேட்பார்கள் என்ற ஆராய்ச்சியில் ஒரு கூட்டமும், எந்த கேள்வி தான் கேட்டால் என்ன? நாம் என்ன எழுதவாப் போகின்றோம் என்ற அயர்ச்சியில் ஒரு கூட்டமும், எந்த பிட்டை எந்த நேரத்தில் எப்படி பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற பயிற்சியில் ஒரு கூட்டமும், இப்படி கூட்டம் கூட்டமாக பல்வேறு கூட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கும்.
தேர்வுக்காலங்களில் பிட் அடிக்கும் கூட்டத்திற்கு தலைவன் போல் செயல்படுபவன் செல்வமணி. செல்வமணியின் தளபதியாக தன்னைக் கருதிக் கொள்பவன் கிருஷ்ணா. செல்வமணி ரௌடி என்ற பெயர் தாங்கியும், கிருஷ்ணா படிக்கின்ற பையன் என்ற பெயர் தாங்கியும் தனித்தனியே வலம் வந்தவர்களை ஒருங்கிணைத்த பெருமை 'பிட்' என்ற அற்புதமான சக்தியைத் தான் சாரும்.
படிக்கின்ற பையனுடன் கூட்டு சேர்ந்தால் தண்டனைகள் குறையும் என்ற பாதுகாப்பு உணர்வு செல்வமணிக்கும், ரௌடியுடன் இருந்தால் எதிரிகள் அஞ்சுவார்கள் என்ற பாதுகாப்புணர்வு கிருஷ்ணாவுக்கும் இருந்ததால் அவர்கள் நட்பும் தடையில்லாமல் வளர்ந்தது.
கிருஷ்ணாவுக்கு பிட் அடிக்க சொல்லிக் கொடுத்ததே செல்வமணி தான். நான்காம் வகுப்பு அறிவியல் தேர்வில் ' வேதிச் சமன்பாட்டை எழுதும் விதிகளை எழுதுக? ' என்ற கேள்விக்கு விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. யாரிடமிருந்தாவது விடை கிடைக்காத என்று தலையை அங்கும் இங்கும் திருப்பிக் கொண்டு திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தவன் முன்னால் அமர்ந்திருந்த தினேசை காலால் ஒரு மிதி மிதித்தான்.
தலையை பூனை போல் மெதுவாக திருப்பி "என்ன " என்றான்.
"கொஸ்டின் நம்பர் ஆறு ஏ" .
" அதுவா எனக்கு ஒரே ஒரு விதி தான் தெரியும் "
" பரவாயில்ல சொல்லு "
" வினை பொருட்கள் ஒரு புறமும் வினைபடு பொருட்கள் மறுபுறமும் வரவேண்டும் " என்றான் தினேஷ்.
" வினை பொருள் வலது புறம் வரணுமா இடது புறம் வரணுமா? "
" எனக்கே இவ்ளோ தான் தெரியும் " அதற்க்கு மேல் பொறுமை இல்லாமல் திரும்பிக் கொண்டான்.
திருதிருவென முழித்துக் கொண்டே பின்புறம் பார்த்தவனுக்கு அதிர்ச்சி, செல்வமணி பிட் அடிப்பதை பார்த்துவிட்டான். கிருஷ்ணா பார்த்து விட்டானே என்ற அதிர்ச்சியில் நெளிந்து கொண்டிருந்தான் செல்வமணி.
" பிட்டா அடிக்கிற! "
" பின்ன பொங்கலா வைக்கிறாங்க, மவன மாட்டிவிட்ட அவ்ளோ தான் நீ! "
" என்ன கேள்வி அது "
" ஆறு ஏ"
இதைக் கேட்டதும் கிருஷ்ணாவுக்கு இருப்பு கொள்ளவில்லை
" நீ எழுதிட்டு குடு இல்லாட்டி மாட்டி விட்ருவன்!"
" சரி தாரன், ஆனா ஒன்னு மாட்டிக்கிட்டா என்ன மாட்டி விட்ற கூடாது "
நான்காம் வகுப்பில் ஆரம்பித்த இவர்கள் நட்பு இன்றைய தேர்வில் முடிவுக்கு வரும் என்று கிருஷ்ணா கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.
"கிருஷ்ணா இன்னிக்கு நீ என்ன பிட்டு வச்சிக்க போற" பரபப்புடன் கேட்டான் செல்வமணி
"இல்ல இன்னிக்கு எனக்கு எதும் வேணாம், நீ கொண்டு வா வேனும்ன உன்கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்"
கிருஷ்ணா இப்படி சொன்னதற்கு காரணம் பயம் இல்லை. இதுவரை ஒருமுறை கூட பிட் அடித்து மாட்டியதில்லை. செல்வமணி கூட பிடிபட்டுள்ளான், கிருஷ்ணா ஒருமுறை கூட பொறியில் சிக்கியது கிடையாது. இருந்தும் ஏதோ ஒரு உள்ளுணர்வு வேண்டாம் என்று தடுத்தது.
கிருஷ்ணா இப்படி சொல்வான் என்று செல்வமணி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதைக் கேட்டதும் கிருஷ்ணாவை கொன்றுவிடுவது போல் பார்த்த செல்வா, கிருஷ்ணாவுக்கான பிட்டை மணியிடம் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அவர்கள் படிப்பது ஒரு கிறிஸ்துவப் பள்ளி என்பதால் " தேவரீர் ஆகிய பிதாவே உமது பிள்ளைகள் தேர்வை நெறிதவாறாமல் தவறான செயலில் ஈடுபடாமல், நேர்மையாகவும் திறமையாகவும் எழுத ஆசீர்வதிப்பீராக" என்று சிஸ்டர் சொல்லவும் ஒட்டுமொத்த மாணவர்களும் "அமேன்" சொல்ல தேர்வு ஆரம்பமாகியது.
தேர்வு அறை மிகப்பெரியது. இருநூறு பேர் வரை அமரலாம். தரையில் உட்கார்ந்துதான் தேர்வெழுத வேண்டும். குறைந்தது இருபது ஆசிரியர்களாவது இருப்பார்கள்.தேர்வு ஆரம்பித்து இருபது நிமிடம் ஆகியிருந்தது. காதையே கிழித்து விடக்கூடிய மௌனம். அனைவரும் குனிந்த தலை நிமிராமல் தேர்வெழுதிக் கொண்டிருந்த்தனர். செல்வமணி தனது முதல் பிட்டை பேப்பரினுள் சொருகுவதை கிருஷ்ணா பார்த்துவிட்டான்.
"டீச்சர்......" அங்கிருந்த மௌனத்தை கலைத்தது கிருஷ்ணாவின் குரல். எங்கே தன்னை மாட்டிவிடப் போகிறானோ என்ற பதட்டத்துடன் கிருஷ்ணாவையே வெறித்தான் செல்வமணி.
"என்ன கிருஷ்ணா" என்றபடி அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தார் அந்த ஆசிரியர். எல்லா தலைகளும் நிமிர்ந்து கிருஷ்ணாவையே பார்த்தன.
" பேப்பர் " என்றான் கிருஷ்ணா. அதுக்குள்ள அடிஷனல் ஷீட்டா முனங்கிய அத்தனை மாணவர்களின் வயிற்றெரிச்சலையும் ரசித்தபடியே பேப்பரை வாங்கிகொண்டு அமர்ந்தான்.
பிட் அடிக்காமல் எழுதும் இந்தத் தேர்வை வேண்டா வெறுப்புடனேயே எழுதிக் கொண்டிருந்தான். 'பிட் அடித்து மாட்டாமலிருப்பது எப்படி? ' என்னும் ரகசியத்தை சிதம்பர ரகசியமாகவே பாதுகாத்து வந்தான். கிருஷ்ணா பிட் அடிப்பான் என்பதே செல்வமணி சொல்லித்தான் பலருக்கும் தெரியும்.
எடுத்த எடுப்பிலேயே பிட் அடிக்க மாட்டான். ஒரு கிரிக்கெட் போட்டியில் முதல் மற்றும் இறுதி பத்து ஓவர்களில் எவ்வளவு பரபரப்பு இருக்குமோ, அது போல் தேர்விலும் முதல் மற்றும் இறுதி முப்பது நிமிடங்களில் ஆசிரியர்களின் பார்வை கழுகுப் பார்வையாக இருக்கும். அந்த நேரத்தில் எக்காரணம் கொண்டும் பிட் அடிக்க மாட்டான்.
எப்போதும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை எழுதுவது போல் நடிக்கவாவது தெரியவேண்டும். எழுதுகிறோமோ இல்லையோ அடிஷனல் சீட் வங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதிகமான அடிஷனல் சீட் வாங்குவதால் நன்றாக படிக்கும் மாணவன் என்று ஆசிரியர் நினைத்தாலும் பிட்டை எளிதாக ஒளித்து வைக்க வசதியாக இருக்கும் என்பதே உண்மை.
மிக முக்கியமான விஷயம், தேர்வுக்காக எதைப் படிக்கிறோமோ இல்லையோ தேர்வறையில் நம்மைக் கண்காணிக்கும் வாத்தியாரின் மனநிலையைக் கண்டிப்பாக படிக்க வேண்டும். அதை ஒழுங்காக செய்தாலே பிட் அடிப்பதன் கனம் பாதி குறைந்துவிடும். பிட் அடித்துக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் அருகில் வந்தால் சிரிக்க வேண்டும், இல்லை நம் பொழப்பு சிரிப்பாய் சிரித்துவிடும்.
இன்றைய தேர்வில் மூன்று கேள்விக்கான விடை கிருஷ்ணாவுக்கு தெரியவில்லை. இந்த மூன்று கேள்விக்கான பிட்டும் கிருஷ்ணாவின் கடைசி நேர மனமாற்றத்தினால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணா தேர்வு செய்யும் பிட் பொய்த்துப் போனதாக சரித்திரம் இல்லை. அதனாலேயே செல்வமணி கிருஷ்ணாவை தன் தளபதியாக ஏற்றிருந்தான்.
இந்தக் கேள்விக்கான மூன்று பிட்டுகளும் மணியிடம் இருப்பது கிருஷ்ணாவுக்கு நியாபகம் வந்தது. கூப்பிடும் தூரத்தில் மணி இருந்ததால் கேட்கலாமா என்று யோசித்தான் இருந்தும் மனம் இடம் கொடவில்லை. பின்னால் ஒருவன் அடி வாங்கி அழும் சப்தம் கேட்கவே திரும்பினான். பிட்டடித்த ஒருவன் மாட்டிக்கொண்டான். ஆசிரியர் பட்டாளமே அவனை பிரித்து மேய்த்துக் கொண்டிருந்தது.
சிறிய விசயத்திற்கே படுபயங்கரமாக கோபப்படும் அறிவியல் டீச்சர் செலஸ்டினின் ருத்ரதாண்டவம் ஆரம்பமகியாயது.
"என்ன நினைச்சு பரிட்ச எழுதறீங்க, ஒரு பயலையும் பப்ளிக் எக்ஸாம் எழுத விட மாட்டேன். எல்லா பய தோலையும் உரிச்சு தொங்க விட்டாதான் அடங்குவீங்க". கத்திக்கொண்டே செயலிலும் இறங்கிவிட்டார். படிக்கும் மாணவர்கள் ஐந்து பேருடன் செல்வமணியையும் சேர்த்துக்கொண்டு "எவன் எவன்லாம் பிட் வச்சிருக்கான்னு கண்டுபிடி, போ ஒரு பயலையும் விடாத" இராணுவ உத்தரவு பிறபிக்கப்பட்டது.
செல்வமணி செலஸ்டின் டீச்சருக்கு பிடித்தமான மாணவன் என்பதால் " செல்வா உன் கூட ஒருத்தனையும் சேர்த்துக்க ஒரு பயலையும் விடாத செக் பண்ணு " என்ற சிறப்பு அந்தஸ்த்தை அவனுக்கு மட்டும் வழங்கினர் செலஸ்டின் டீச்சர்.
தன்னை சேர்த்துக் கொள்வான் என்று கிருஷ்ணா எதிர்பார்த்த வேளையிலே செல்வாவோ மணியை அழைத்துக் கொண்டான். செல்வமணியின் புதிய தளபதி மணி. புறப்பட்டது புதிய படை. பிட் வைத்திருந்தவன் எல்லாம் உருண்டு கொண்டு இருக்க கிருஷ்ணா மட்டும் கருமமே கண்ணாக தேர்வெழுதிக் கொண்டிருந்தான். அங்கு நடந்த எதையுமே கொண்டுகொள்ளவில்லை. இது எல்லாம் ராச தந்திரம் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
இதுநாள் வரை ஹீரோவாக இருந்த செல்வமணி வில்லன் அவதாரம் எடுத்து கிருஷ்ணாவின் பக்கம் வந்தான். உடன் மணியும் இருந்தான்.
" பிட்டு எதும் வச்சிருந்தா சத்தமில்லாம குடுத்று மத்தத நா பாத்துகறேன், மவன மாட்டின செத்த "
" என்கிட்டே பிட்டு இல்லன்னு உனக்கே தெரியும் " சொல்லிவிட்டு முறைத்தான், அது செல்வமணியின் கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.
" அப்போ வேற எவன் பிட்டு வச்சிருக்கான்னு சொல்லு "
" உன்கிட்ட ஆறு பிட்டு இருக்கு" இதைக் கேட்ட செல்வா கிருஷ்ணாவை அடிக்க முயல மணியின் தயவால் தேர்வறை தேர்வறையாகவே இருந்தது.
" தினேஷ் கிட்ட நிறைய பிட்டு இருக்கு போய் வங்கிக்கோ" தினேஷ் முதல் தரம் வாங்கும் மாணவன் என்பது செல்வாவுக்கும் தெரியும்.
கிருஷ்ணா செல்வாவை மேலும் மேலும் வெறுப்பேற்றவே தன்னிடம் இருந்த அத்தனை பிட்டையும் கிருஷ்ணாவிடம் திணித்துவிட்டு " இதுல்லாம் என்னோட பிட்டு யாராவது வந்து கேட்டா குடு " கிருஷ்ணாவின் பதிலை எதிர்பாராமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். செல்வமணி தப்பிப்பதற்காக கிருஷ்ணாவை பலியாடக்கியிருந்தான்.
தன்னிடம் பிட் எதுவும் இல்லை என்ற தைரியம் தான் கிருஷ்ணாவை துணிச்சலாக பேசச் செய்தது. இப்போதோ நிலைமை தலைகீழ். என்ன செய்வது? என்ன செய்ய முடியும் ? தவறு செய்த போதெல்லாம் தட்டிக் கேட்காத விதி, தவறே செய்யாத இந்த நொடியில் தன்னை புதை குழிக்குள் தள்ளப் போவதை எண்ணி நொந்து கொண்டான்.
கிருஷ்ணா இருந்த வரிசையை சோதானையிட்டுக் கொண்டிருந்தவன் கார்த்திக். கார்த்தி கிருஷ்ணாவை நெருங்கிக் கொண்டிருந்தான். தனது ஏழாவது ரேங்க்கை எப்போதும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான் கிருஷ்ணா. அதனாலேயே கார்த்திக் எப்போதும் எட்டாவது ரேங்க் வாங்கி கொண்டிருந்தான். அதுவும் பிட் அடித்து தான் ஏழாவது இடத்தில் இருக்கிறான் என்று தெரிந்த நாளில் இருந்து கிருஷ்ணா மீது இருந்த வெறுப்பு ஜென்மப் பகையாக மாறியிருந்தது.தன்னிடம் பிட் இருப்பது மட்டும் கார்த்திக்கு தெரிந்தால் கிருஷ்ணாவின் கதி அதோ கதி தான்.
காரணம் அந்தப் பள்ளியில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கிருஷ்ணாவின் அம்மா நல்ல பழக்கம். பள்ளியின் அருகிலேயே அவன் வீடு இருப்பதால், அவன் வீட்டைக் கடக்காமல் பள்ளியை அடைய முடியாது. எமன் கார்த்திக்கின் கையில் கொடுத்து அனுப்பிய பாசக்யிற்றின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் போதே,
"கிருஷ்ணா ....." என்ற இடியோசை அவனை நிலைகுலையச் செய்தது. அந்தக் கோபக் குரலைக் கேட்டதும் ஆடிப் போய்விட்டான். கூக்குரலிட்டது செலஸ்டின் டீச் சர். அவர் அருகிலேயே செல்வமணியும் நின்று கொண்டிருந்தான். பிட் இருப்பது தெரிந்து விட்டதோ என்ற பயத்திலேயே பவ்யமாக எழுந்தான். கோபத்துடன் அவனை நெருங்கியும் விட்டார்.
"அங்க பாரு கார்த்தியும் செல்வமணியும் பிட் செக் பண்ணிட்டு இருக்காங்க, உனக்கு மட்டும் எக்ஸாம் முக்கியமாப் போச்சா? போ போய் அவங்களோட சேர்ந்து செக் பண்ணு, வேல சீக்கிரமா முடியும். வந்து நிதானமா எழுதிக்கலாம் போ முதல்ல" சொல்லி கொண்டே கோபத்துடன் பிடித்து தள்ளியும் விட்டார்.
போர்க்களமாக இருந்த தேர்வறை மீண்டும் தேர்வறையாக மாறிய பொழுது மணி தன்னிடம் திணித்த பிட்டை வெளியில் எடுத்தான். மணிக்கான நன்றியை மனதிற்குள் கூறிக்கொண்டே ஆடத் தொடங்கினான் தனக்கான ஆட்டத்தை.
" பிட்டடித்து வாழ்வோரே வாழ்வர் மற்றவரெல்லாம்
அரியர் வைத்தே சாவர் "
Tweet |
பிட் அடிக்கிறதுல இவ்வுளவு trick ah .... இது
ReplyDeleteதெரியாம நா நிறைய தடவ Fail ஆயிடேனப்பா !!!!
Ha Ha Ha Boss Final Dialogue awesome boss, hmm kadaisila ena bali aada akiyachu hmm paathukuran
ReplyDeleteநாம் நன்றாகப் படித்திருக்கிறோமா என்பதை விட அடுத்தவன் நன்றாக படிக்கவில்லை என்ற தெம்பில் தான் மாணவ சமுதாயமே ஒவ்வொரு தேர்வையும் எழுதிக் கொண்டுள்ளது.. gr8 liines
ReplyDeleteஅடையாளம் இல்லாத அருமையான எழுத்துக்கள்.பிரபலம் இல்லாததால் பல எழுத்துக்கள் அனைவரிடமும் செல்வதில்லை....நீளமான பெரிய பதிவுகளை தொடர் பதிவாக எழுதுங்கள்.
ReplyDelete" பிட்டடித்து வாழ்வோரே வாழ்வர் மற்றவரெல்லாம்
அரியர் வைத்தே சாவர் " கலக்குங்க ...வாழ்த்துக்கள்.இணைந்திருப்போம்
நம்ம ஊரு கதைக்கு நம்ம ஊரு போட்டோ போடுங்க பாஸ்.. வாழ்த்துக்கள் இணைந்திருப்போம்.
ReplyDeletenostalgic feel!
ReplyDeleteu really scored on creating tension!!
was good but felt little lengthy...!!!
- Ananth Deepam
// தேர்வுக்காக எதைப் படிக்கிறோமோ இல்லையோ தேர்வறையில் நம்மைக் கண்காணிக்கும் வாத்தியாரின் மனநிலையைக் கண்டிப்பாக படிக்க வேண்டும்.// பிட்டடிப்பதும் ஒரு கலைதானோ!
ReplyDelete