30 Mar 2012

பிட்டடித்து வாழ்வோரே வாழ்வர்



     பத்தாம் வகுபிற்கான முதல் மற்றும் இரண்டாம் இறுதித் தேர்வு கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகி இருந்ததால் மூன்றாம் இறுதித் தேர்வு கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆகவே நடைபெற்றுக் கொண்டுள்ளது.அறிவியல் தேர்வு ஆரம்பமாக சில நிமிடங்களே இருந்தன. தேர்வுக்கு முன்னால் ஏதாவது ஒரு மாணவனிடம் சென்று "எப்படி படிச்சிருக்க " என்று கேட்டால் "ஒன்னுமே படிக்கலடா பயமா இருக்கு" என்ற பதில் வரும். ஸ்டேட் பர்ஸ்ட் எடுப்பவனாகவே  இருந்தாலும் அந்த பதில் தான் வரும். பதில் கூறியதோடு மட்டுமில்லாமல் "நீ" என்று ஒரு கேள்வியும் கேட்பான். "நீயே படிக்கலை நான் எப்படி படிச்சிருப்பேன்" என்ற பழைய பாடலை டேப் ரிக்காடார் பாடத் தொடங்கும்.

     நாம் நன்றாகப் படித்திருக்கிறோமா என்பதை விட அடுத்தவன் நன்றாக படிக்கவில்லை என்ற தெம்பில் தான் மாணவ சமுதாயமே ஒவ்வொரு தேர்வையும் எழுதிக் கொண்டுள்ளது. தேர்வுக்கு முன், எந்த கேள்வி கேட்பார்கள் என்ற ஆராய்ச்சியில் ஒரு கூட்டமும், எந்த கேள்வி தான் கேட்டால் என்ன? நாம் என்ன  எழுதவாப் போகின்றோம் என்ற அயர்ச்சியில் ஒரு கூட்டமும், எந்த பிட்டை எந்த நேரத்தில் எப்படி பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற பயிற்சியில் ஒரு கூட்டமும், இப்படி கூட்டம் கூட்டமாக பல்வேறு கூட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கும்.

     தேர்வுக்காலங்களில் பிட் அடிக்கும் கூட்டத்திற்கு தலைவன் போல் செயல்படுபவன் செல்வமணி. செல்வமணியின் தளபதியாக தன்னைக் கருதிக் கொள்பவன் கிருஷ்ணா. செல்வமணி ரௌடி என்ற பெயர் தாங்கியும், கிருஷ்ணா படிக்கின்ற பையன் என்ற பெயர் தாங்கியும் தனித்தனியே வலம் வந்தவர்களை ஒருங்கிணைத்த பெருமை 'பிட்' என்ற அற்புதமான சக்தியைத் தான் சாரும்.

     படிக்கின்ற பையனுடன் கூட்டு சேர்ந்தால் தண்டனைகள் குறையும் என்ற பாதுகாப்பு உணர்வு செல்வமணிக்கும், ரௌடியுடன் இருந்தால் எதிரிகள் அஞ்சுவார்கள் என்ற பாதுகாப்புணர்வு கிருஷ்ணாவுக்கும் இருந்ததால் அவர்கள் நட்பும் தடையில்லாமல் வளர்ந்தது. 

     கிருஷ்ணாவுக்கு பிட் அடிக்க சொல்லிக் கொடுத்ததே செல்வமணி தான். நான்காம் வகுப்பு அறிவியல் தேர்வில் ' வேதிச் சமன்பாட்டை எழுதும் விதிகளை எழுதுக? ' என்ற கேள்விக்கு விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. யாரிடமிருந்தாவது விடை கிடைக்காத என்று தலையை அங்கும் இங்கும் திருப்பிக் கொண்டு திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தவன் முன்னால் அமர்ந்திருந்த தினேசை காலால் ஒரு மிதி மிதித்தான். 

தலையை பூனை போல் மெதுவாக திருப்பி "என்ன " என்றான்.
"கொஸ்டின் நம்பர் ஆறு ஏ" .
" அதுவா எனக்கு ஒரே ஒரு விதி தான் தெரியும் "
" பரவாயில்ல சொல்லு "
" வினை பொருட்கள் ஒரு புறமும் வினைபடு பொருட்கள் மறுபுறமும் வரவேண்டும் " என்றான் தினேஷ்.
" வினை பொருள் வலது புறம் வரணுமா இடது புறம் வரணுமா? "
" எனக்கே இவ்ளோ தான் தெரியும் " அதற்க்கு மேல் பொறுமை இல்லாமல் திரும்பிக் கொண்டான்.

     திருதிருவென முழித்துக் கொண்டே பின்புறம் பார்த்தவனுக்கு அதிர்ச்சி, செல்வமணி பிட் அடிப்பதை பார்த்துவிட்டான். கிருஷ்ணா பார்த்து விட்டானே என்ற அதிர்ச்சியில் நெளிந்து கொண்டிருந்தான் செல்வமணி.

" பிட்டா அடிக்கிற! "
" பின்ன பொங்கலா வைக்கிறாங்க, மவன மாட்டிவிட்ட அவ்ளோ தான் நீ! "
" என்ன கேள்வி அது "
" ஆறு ஏ"
இதைக் கேட்டதும் கிருஷ்ணாவுக்கு இருப்பு கொள்ளவில்லை 
" நீ எழுதிட்டு குடு இல்லாட்டி மாட்டி விட்ருவன்!"
" சரி தாரன், ஆனா ஒன்னு மாட்டிக்கிட்டா என்ன மாட்டி விட்ற கூடாது "

     நான்காம் வகுப்பில் ஆரம்பித்த இவர்கள் நட்பு இன்றைய தேர்வில் முடிவுக்கு வரும் என்று கிருஷ்ணா கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.  

"கிருஷ்ணா இன்னிக்கு நீ என்ன பிட்டு வச்சிக்க போற" பரபப்புடன் கேட்டான் செல்வமணி  
"இல்ல இன்னிக்கு எனக்கு எதும் வேணாம், நீ கொண்டு வா வேனும்ன உன்கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்"

     கிருஷ்ணா இப்படி சொன்னதற்கு காரணம் பயம் இல்லை. இதுவரை ஒருமுறை கூட பிட் அடித்து மாட்டியதில்லை. செல்வமணி கூட பிடிபட்டுள்ளான், கிருஷ்ணா ஒருமுறை கூட பொறியில் சிக்கியது கிடையாது. இருந்தும் ஏதோ ஒரு உள்ளுணர்வு வேண்டாம் என்று தடுத்தது.

   கிருஷ்ணா இப்படி சொல்வான் என்று செல்வமணி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதைக் கேட்டதும் கிருஷ்ணாவை கொன்றுவிடுவது போல் பார்த்த செல்வா, கிருஷ்ணாவுக்கான பிட்டை மணியிடம் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

     அவர்கள் படிப்பது ஒரு கிறிஸ்துவப் பள்ளி என்பதால் " தேவரீர் ஆகிய பிதாவே உமது பிள்ளைகள் தேர்வை  நெறிதவாறாமல் தவறான செயலில் ஈடுபடாமல், நேர்மையாகவும் திறமையாகவும் எழுத  ஆசீர்வதிப்பீராக" என்று சிஸ்டர் சொல்லவும் ஒட்டுமொத்த மாணவர்களும் "அமேன்"  சொல்ல தேர்வு ஆரம்பமாகியது.

    தேர்வு அறை மிகப்பெரியது. இருநூறு பேர் வரை அமரலாம். தரையில் உட்கார்ந்துதான் தேர்வெழுத வேண்டும். குறைந்தது இருபது ஆசிரியர்களாவது இருப்பார்கள்.தேர்வு ஆரம்பித்து இருபது நிமிடம் கியிருந்தது. காதையே கிழித்து விடக்கூடிய மௌனம். அனைவரும் குனிந்த தலை நிமிராமல் தேர்வெழுதிக் கொண்டிருந்த்தனர். செல்வமணி தனது முதல் பிட்டை பேப்பரினுள் சொருகுவதை கிருஷ்ணா பார்த்துவிட்டான். 

     "டீச்சர்......"  அங்கிருந்த மௌனத்தை கலைத்தது கிருஷ்ணாவின் குரல். எங்கே தன்னை  மாட்டிவிடப் போகிறானோ என்ற பதட்டத்துடன் கிருஷ்ணாவையே வெறித்தான் செல்வமணி.
     "என்ன கிருஷ்ணா" என்றபடி அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தார் அந்த ஆசிரியர். எல்லா தலைகளும் நிமிர்ந்து கிருஷ்ணாவையே  பார்த்தன.

     " பேப்பர் " என்றான்  கிருஷ்ணா. அதுக்குள்ள அடிஷனல் ஷீட்டா முனங்கிய அத்தனை மாணவர்களின் வயிற்றெரிச்சலையும் ரசித்தபடியே பேப்பரை வாங்கிகொண்டு அமர்ந்தான். 

     பிட் அடிக்காமல் எழுதும் இந்தத் தேர்வை வேண்டா வெறுப்புடனேயே எழுதிக் கொண்டிருந்தான். 'பிட் அடித்து மாட்டாமலிருப்பது எப்படி? ' என்னும் ரகசியத்தை சிதம்பர ரகசியமாகவே பாதுகாத்து வந்தான். கிருஷ்ணா பிட் அடிப்பான் என்பதே செல்வமணி சொல்லித்தான் பலருக்கும் தெரியும்.

     எடுத்த எடுப்பிலேயே பிட் அடிக்க மாட்டான். ஒரு கிரிக்கெட் போட்டியில் முதல் மற்றும் இறுதி பத்து ஓவர்களில் எவ்வளவு பரபரப்பு இருக்குமோ, அது போல் தேர்விலும் முதல் மற்றும் இறுதி முப்பது நிமிடங்களில் ஆசிரியர்களின் பார்வை கழுகுப் பார்வையாக இருக்கும். அந்த நேரத்தில் எக்காரணம் கொண்டும் பிட் அடிக்க மாட்டான்.

   எப்போதும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை எழுதுவது  போல் நடிக்கவாவது தெரியவேண்டும். எழுதுகிறோமோ இல்லையோ அடிஷனல் சீட் வங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதிகமான அடிஷனல் சீட் வாங்குவதால்  நன்றாக படிக்கும் மாணவன் என்று ஆசிரியர் நினைத்தாலும் பிட்டை எளிதாக ஒளித்து வைக்க வசதியாக இருக்கும் என்பதே உண்மை. 

     மிக முக்கியமான விஷயம், தேர்வுக்காக எதைப் படிக்கிறோமோ இல்லையோ தேர்வறையில் நம்மைக் கண்காணிக்கும் வாத்தியாரின் மனநிலையைக் கண்டிப்பாக படிக்க வேண்டும். அதை ஒழுங்காக செய்தாலே பிட் அடிப்பதன் கனம் பாதி குறைந்துவிடும். பிட் அடித்துக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் அருகில் வந்தால் சிரிக்க வேண்டும், இல்லை நம் பொழப்பு சிரிப்பாய் சிரித்துவிடும். 

     இன்றைய தேர்வில் மூன்று கேள்விக்கான விடை கிருஷ்ணாவுக்கு தெரியவில்லை. இந்த மூன்று கேள்விக்கான பிட்டும் கிருஷ்ணாவின் கடைசி நேர மனமாற்றத்தினால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணா தேர்வு செய்யும் பிட் பொய்த்துப் போனதாக சரித்திரம் இல்லை. அதனாலேயே செல்வமணி கிருஷ்ணாவை தன் தளபதியாக ஏற்றிருந்தான். 

     இந்தக் கேள்விக்கான மூன்று பிட்டுகளும் மணியிடம் இருப்பது கிருஷ்ணாவுக்கு நியாபகம் வந்தது. கூப்பிடும் தூரத்தில் மணி இருந்ததால் கேட்கலாமா என்று யோசித்தான் இருந்தும் மனம் இடம் கொடவில்லை.  பின்னால் ஒருவன் அடி வாங்கி அழும் சப்தம் கேட்கவே திரும்பினான். பிட்டடித்த ஒருவன் மாட்டிக்கொண்டான். ஆசிரியர் பட்டாளமே அவனை  பிரித்து மேய்த்துக் கொண்டிருந்தது. 

     சிறிய விசயத்திற்கே படுபயங்கரமாக கோபப்படும் அறிவியல் டீச்சர் செலஸ்டினின் ருத்ரதாண்டவம் ஆரம்பமகியாயது

     "என்ன நினைச்சு பரிட்ச எழுதறீங்க, ஒரு பயலையும் பப்ளிக் எக்ஸாம் எழுத விட மாட்டேன். எல்லா பய தோலையும் உரிச்சு தொங்க விட்டாதான் அடங்குவீங்க". கத்திக்கொண்டே செயலிலும் இறங்கிவிட்டார். படிக்கும் மாணவர்கள் ஐந்து பேருடன் செல்வமணியையும் சேர்த்துக்கொண்டு "எவன் எவன்லாம் பிட் வச்சிருக்கான்னு கண்டுபிடி, போ ஒரு பயலையும் விடாத" இராணுவ உத்தரவு பிறபிக்கப்பட்டது. 

     செல்வமணி செலஸ்டின் டீச்சருக்கு பிடித்தமான மாணவன் என்பதால் " செல்வா உன் கூட ஒருத்தனையும் சேர்த்துக்க ஒரு பயலையும் விடாத செக் பண்ணு " என்ற சிறப்பு அந்தஸ்த்தை அவனுக்கு மட்டும் வழங்கினர் செலஸ்டின்  டீச்சர்.

     தன்னை சேர்த்துக் கொள்வான் என்று கிருஷ்ணா எதிர்பார்த்த வேளையிலே செல்வாவோ மணியை அழைத்துக் கொண்டான். செல்வமணியின் புதிய தளபதி மணி. புறப்பட்டது புதிய படை. பிட் வைத்திருந்தவன் எல்லாம் உருண்டு கொண்டு இருக்க கிருஷ்ணா மட்டும் கருமமே கண்ணாக  தேர்வெழுதிக் கொண்டிருந்தான். அங்கு நடந்த எதையுமே கொண்டுகொள்ளவில்லை. இது எல்லாம் ராச தந்திரம் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். 

     இதுநாள் வரை ஹீரோவாக இருந்த செல்வமணி வில்லன் அவதாரம் எடுத்து கிருஷ்ணாவின் பக்கம் வந்தான். உடன் மணியும் இருந்தான்.

" பிட்டு எதும் வச்சிருந்தா சத்தமில்லாம குடுத்று மத்தத நா பாத்துகறேன், மவன மாட்டின செத்த "
" என்கிட்டே பிட்டு இல்லன்னு உனக்கே தெரியும் " சொல்லிவிட்டு முறைத்தான், அது செல்வமணியின் கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. 
" அப்போ வேற எவன் பிட்டு வச்சிருக்கான்னு சொல்லு "
" உன்கிட்ட ஆறு பிட்டு இருக்கு" இதைக் கேட்ட செல்வா கிருஷ்ணாவை அடிக்க முயல மணியின் தயவால் தேர்வறை தேர்வறையாகவே இருந்தது.
" தினேஷ் கிட்ட நிறைய பிட்டு இருக்கு போய் வங்கிக்கோ" தினேஷ் முதல் தரம் வாங்கும் மாணவன் என்பது செல்வாவுக்கும் தெரியும். 

     கிருஷ்ணா செல்வாவை மேலும் மேலும் வெறுப்பேற்றவே தன்னிடம் இருந்த அத்தனை பிட்டையும் கிருஷ்ணாவிடம் திணித்துவிட்டு " இதுல்லாம் என்னோட பிட்டு யாராவது வந்து கேட்டா குடு " கிருஷ்ணாவின் பதிலை எதிர்பாராமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். செல்வமணி தப்பிப்பதற்காக கிருஷ்ணாவை பலியாடக்கியிருந்தான்.
தலைவனைப் பார்த்த தளபதி மணியும் தன் கையிலிருந்த பிட்டை அவனிடம் திணித்து விட்டு நகர்ந்தான்.

     தன்னிடம் பிட் எதுவும் இல்லை என்ற தைரியம் தான் கிருஷ்ணாவை துணிச்சலாக பேசச் செய்தது. இப்போதோ நிலைமை தலைகீழ். என்ன செய்வது?  என்ன செய்ய முடியும் ? தவறு செய்த போதெல்லாம் தட்டிக் கேட்காத விதி, தவறே செய்யாத இந்த நொடியில் தன்னை புதை குழிக்குள் தள்ளப் போவதை எண்ணி நொந்து கொண்டான்.       

     கிருஷ்ணா இருந்த வரிசையை சோதானையிட்டுக் கொண்டிருந்தவன் கார்த்திக். கார்த்தி கிருஷ்ணாவை  நெருங்கிக் கொண்டிருந்தான். தனது ஏழாவது ரேங்க்கை எப்போதும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான் கிருஷ்ணா. அதனாலேயே கார்த்திக் எப்போதும் எட்டாவது ரேங்க் வாங்கி கொண்டிருந்தான். அதுவும் பிட் அடித்து தான் ஏழாவது இடத்தில் இருக்கிறான் என்று தெரிந்த நாளில் இருந்து கிருஷ்ணா மீது இருந்த வெறுப்பு ஜென்மப் பகையாக மாறியிருந்தது.தன்னிடம் பிட் இருப்பது மட்டும் கார்த்திக்கு தெரிந்தால் கிருஷ்ணாவின் கதி அதோ கதி தான். 

     காரணம் அந்தப் பள்ளியில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கிருஷ்ணாவின் அம்மா நல்ல பழக்கம். பள்ளியின் அருகிலேயே அவன் வீடு இருப்பதால், அவன் வீட்டைக் கடக்காமல் பள்ளியை அடைய முடியாது. எமன் கார்த்திக்கின் கையில் கொடுத்து அனுப்பிய பாசக்யிற்றின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் போதே,

     "கிருஷ்ணா ....." என்ற இடியோசை அவனை நிலைகுலையச் செய்தது. அந்தக் கோபக் குரலைக் கேட்டதும் ஆடிப் போய்விட்டான். கூக்குரலிட்டது செலஸ்டின் டீச்சர். அவர் அருகிலேயே செல்வமணியும் நின்று கொண்டிருந்தான். பிட் இருப்பது தெரிந்து விட்டதோ என்ற பயத்திலேயே பவ்யமாக எழுந்தான். கோபத்துடன் அவனை நெருங்கியும் விட்டார்.

     "அங்க பாரு கார்த்தியும் செல்வமணியும் பிட் செக் பண்ணிட்டு இருக்காங்க, உனக்கு மட்டும் எக்ஸாம் முக்கியமாப் போச்சா? போ போய் அவங்களோட சேர்ந்து செக் பண்ணு, வேல சீக்கிரமா முடியும். வந்து நிதானமா எழுதிக்கலாம் போ முதல்ல" சொல்லி கொண்டே கோபத்துடன் பிடித்து தள்ளியும் விட்டார். 

     டீச்சர் கிருஷ்ணாவைப் பிடித்துத் தள்ளிய வேகத்தில் பலமாக ஆடிப் போயிருந்தான் ' சந்தோஷத்தில் '. 

     போர்க்களமாக இருந்த தேர்வறை மீண்டும் தேர்வறையாக மாறிய பொழுது மணி தன்னிடம் திணித்த பிட்டை வெளியில் எடுத்தான். மணிக்கான நன்றியை மனதிற்குள் கூறிக்கொண்டே ஆடத் தொடங்கினான் தனக்கான   ஆட்டத்தை.  

     " பிட்டடித்து வாழ்வோரே வாழ்வர் மற்றவரெல்லாம் 
     அரியர் வைத்தே சாவர் "

26 Mar 2012

பயணக் கைதி

     மணி ஆறு. திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் தனியார் பேருந்து கிளம்ப தயாராக இருந்தது. மனமும் உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது. 

     காற்றை விட வேகமானது மனம், என் மனம் இங்கே இல்லை. சென்னையை அதிலும் என் குடும்பத்தை முழுவதுமாக மையம் கொண்டிருந்தது. மனதின் வேகத்தோடு உடலும் பயணம் செய்ய முடியும் என்றால் ஆதி மனிதன் சக்கரம் கண்டுபிடித்ததே வீணாகியிருக்கும்.

   
 இப்படி ஏதாவது சிந்தித்து என் எண்ணத்தை திசை திருப்ப முயன்றேன் முடியவில்லை. இன்று நான் நெல்லைக்கு வந்ததே தவறு. முதலாளியிடம் முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். இருந்தும் எஜமானனுக்கு விசுவாசமான விசுவாசி என்பதால் மறுக்காமல் கிளம்பி விட்டேன். இப்போது என் மனம் கிடந்தது துடித்துக் கொண்டிருக்கிறது.

     நான் ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா? என் பையனுக்கு ஆக்சிடென்ட் என்று மாலை மூன்று மணிக்கு போன் வந்தால் எந்த அப்பாவால் தான் பதட்டப்படாமல் இருக்க முடியும். 

     மூன்று மணிக்கே என்னால் சென்னைக்கு கிளம்பி இருக்க முடியும். ஆனால் வந்த வேலையை முடிக்க வேறு ஆள் இல்லை.  அனுபவமுள்ளவன், கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்பவன், நேர்மையானவன் மேலும் முதலாளிக்கு என்னை விட்டால் வேறு ஆள் இல்லை. 

     சிறு விசயத்திற்கு கூட அதிகமாக பயப்படும் என் மனைவி தைரியமாக எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். பதட்டப்படாமல் தைரியமாக இருங்கள். மகனை நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் கும்பிடும் தெய்வம் நம் மகனைக் காப்பாற்றும் என்றெல்லாம் என்னைத் தேற்றினாள். எனக்குத் தெரியும் அவள் எனக்கு சமாதனம் சொல்வது போல், அவளுக்கு அவளே சமாதனம் சொல்லிக் கொள்கிறாள் என்று . இருந்தும் நான் சமாதானம் ஆகவில்லை.   

     பேருந்தின் சீட்டில் உட்கார்ந்திருக்கும் போது கை கால்கள் நடுங்குவதை உடன் வந்தவன் கவனித்து விட்டான். " என்னன்னே உடம்பு சரி இல்லையா" என்று கேட்டும் விட்டான். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று விளக்க மனமில்லை. யாருடைய பரிதாபமும் எனக்குத் தேவையில்லை. தேவை ஆறுதல். என் பிள்ளை பிழைத்து விடுவான் என்று நம்பிக்கை தரக் கூட வார்த்தைகள். உலகில் வேறு எதுவும் தேவையில்லை. 'இறைவா என் பிள்ளையைக் காப்பாற்று'.

     மணி பத்து. இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அவசர அவசரமாக எல்லாரும் சாப்பிடச் சென்றார்கள். நான் மட்டும் அவசரமாக என் மனைவிக்குப் போன் செய்தேன். நல்லது நடக்காத என்ற ஆசையை விட நல்லது மட்டுமே நடக்காத என்ற பேராசையில் இருந்தேன். 

     போன்  முழுவதுமாக அடித்து நின்றது. எடுக்க ஒருவரும் இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தேன் எடுக்க வில்லை. ஒவ்வொருமுறை முயற்சிக்கும் போதும் என் மனம் வேகமாகத் துடித்தது. நான் ஒரு மடையன். என் மகனை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியவன், ஆறுதலாக என் மனைவியுடன் இருக்க வேண்டியவன் நெடுந்தொலைவு பயணத்தின் பயணக் கைதியாக தவித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நொடியும் என் பயத்தை ஆழம் பார்துக்கொண்டுள்ளது . மிகவும் குழம்பியிருந்தேன்.

      செல்போன் அழைப்பொலி கேட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினேன். அவசர அவசரமாக எடுத்தேன். மனைவி தான் பேசினாள்.இப்போது எதுவும் கூற முடியாது, அதிகாலைக்குள் தெரிந்துவிடும் என்றும் என்னைப் பதட்டப் படாமல் இருக்குமாறும் கூறினாள். அப்போது தான் ஒரு விசயத்தைக் கவனித்தேன். செல்போன் ரிங்டோன். செல்போன் வாங்கிய நாள் முதல் எனக்குப் பிடித்த ஒரு சாமி பாடலை வைத்திருந்தேன். இது அலுத்துவிட்டது என்று கூறிய மகன், புதிதாக வந்த பாடலை ரிங்டோனாக மாற்றியும் கொடுத்தான்.

     ஒருவேளை ரிங்டோன் மாற்றியது தான் காரணமோ என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். சிந்தித்த அடுத்த நொடியில் பழைய ரிங்டோனுக்கு மாறியிருந்தேன். பேருந்தில் எல்லாரும் அமர்ந்தது விட்டார்கள். கடைசி ஆறு இருக்கையில் கல்லூரி மாணவர்கள் அமர்ந்திருந்த்தனர்.பேருந்தில் ஏறியது முதலே கலகலப்பாக பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்ததனர். அவர்களுக்கும் என் மகனின் வயது தான் இருக்க வேண்டும். என் மகன் இருந்தாலும் அந்த இடம் இப்படி கலகலப்பகத்தான் இருக்கும்.  உயிரின் அருமை யாருக்குத் தெரியுமோ இல்லையோ பெற்றோருக்குத் தெரியும்.
அதனால் தான் நடக்கக் கூடாதது நடந்து விடக்கூடாது என்ற தவிப்பிலேயே பயணித்துக் கொண்டிருந்தேன்.
  
     பேருந்தே தூங்கி வழிந்து கொண்டிருந்ததது. பேருந்தின் வேகம் மட்டும் உற்சாகமாக இருந்தது. திடிரென்று பின்பகுதியில் ஒரு சத்தம். அதிக பாரம் ஏற்றி தன் அகலத்தை இன்னும் அகலமாக்கியிருந்த இருந்த லாரியின் மீது பேருந்து உரசி விட்டது.

     பயணிகள் அனைவரும் விழித்துக் கொண்டனர். டிரைவரை திட்ட ஆரம்பித்தனர். எல்லா டிரைவருமே மோசமான டிரைவர் இல்லை. உயிரின் மதிப்பு தெரிந்த்தவர்கள் தான். ஆனால் ஒரு சில டிரைவருக்கோ எதைப் பற்றியுமே கவலை இல்லை. அப்படிப்பட்ட ஒரு மோசமான டிரைவரிடம் சிக்கியதன் விளைவு இன்று என் மகனின் உயிர் ஊசலாடிக் கொண்டுள்ளது.

     நகரும் பேருந்தினுடன் மணித்துளிகளும் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க நானும் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருந்தேன். என்னுடன் வந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். எனக்கோ என் மனைவியிடமும் மகனுடனும் பேச வேண்டும் போல் இருந்தது. இருந்தும் எந்த ஒரு  அதிர்ச்சியான தகவலையும் கேட்க நான் இன்னும் என்னைத் தயாராக்கிக்  கொள்ளவில்லை.   

     அதிகாலை ஐந்து மணி. காபி குடிப்பதற்காக பேருந்து ஓரம் கட்டப்பட்டிருந்தது. முதலாளிக்கு போன் செய்யலாம் என்று நினைக்கும் போதே என் செல்போன் அந்த பக்திப் பாடலைப் பாடியது. 

     போனை எடுத்தவுடன் சற்றும் எதிர்பாராத விதமாக மகனின் குரலைக் கேட்டேன். குரலைக் கேட்ட மாத்திரத்தில் கண்ணில் இருந்து நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஆனந்த அதிர்வுகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தேன். நான் அழுவதை அவன் அறிந்து கொண்டான். 

     ஆறுதலாகக் கூறினான் " அப்பா நான் நார்மலா இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க எத பத்தியும் கவலை படமா,  பஸ்ஸ பாத்து நிதானமா ஓட்டிட்டு வாங்கப்பா... "      

23 Mar 2012

கர்ணன்








வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா

வஞ்சகன் கண்ணனடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா 
     தலைப்பு கர்ணன் படத்திற்கான விமர்சனம் என்று நினைத்து விட வேண்டாம். கர்ணன் படத்திற்கு நான் எப்படி சென்றேன் என்பதற்கான விமர்சனம். மகாபாரதக் கதை பரிச்சியமானவர்களுக்கு கர்ணனின் கதாப்பாத்திரம் மிகப் பத்திரமாக நினைவில் இருக்கும். கதை தெரியாதவர்களுக்கு நான் பரிந்துரைப்பது மகாபாரதக் கதையல்ல. மணிரத்னத்தின் தளபதி உருவான கதை .

     வெள்ளி இரவு சென்னை டூ தென்காசி சென்ற பயணக் களைப்பு, சனி பகல் தென்காசி செங்கோட்டை கேரளா என்று ஊர் சுற்றிய பயணக் கொழுப்பு எல்லாமே என்னை வாட்டியது. இருந்தும் இரவு எங்கு செல்வது என்ற விவாததிற்கு வந்தோம். முந்தின நாள் பேருந்துப் பயணத்திலேயே உறுதியாகக் கூறிவிட்டேன் " என்ன நடந்தாலும் சரி நாளை இரவுக் காட்சி கர்ணன்" என்று. சரி என்று தலையாட்டிய அத்தனை தலைகளும் வேண்டாம் என்று மறுக்கத் தொடங்கியது.காரணம் கர்ணன் திரையிடப்பட்டிருந்த திரையரங்கு கர்ண கொடுரமான,  மொக்கையோ மொக்கையான திரையரங்கு. 

     நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தென்காசியிலேயே உருப்படியான திரையரங்கு பத்மம் மட்டுமே.  திருட்டு டி வி டி கலாச்சாரத்தினாலும், அதிகமான பணம் வசூல் செய்யும் பேராசையினாலும் கூட்டம் குறைந்து, திரையரங்கையும் திரைப்படத்தையும் கவனிப்பாரற்று என்னால் மொக்கையிலும் மொக்கை என்ற பெயர்தாங்கி நிற்கின்றது.

     புதிதாக வந்த படங்கள் கழுகு மாசி. கழுகு திரையிடப்பட்ட திரையரங்கோ மொக்கையிலும் மொக்கை ( புதியதாக வந்த தகவல் படமும் மொக்கை என்று). மாசி  திரையிடப்பட்ட திரையரங்கு தென்காசியின் சத்யம் என்று வர்ணிக்கப்ட்டாலும் மாசி பார்க்கும் ராசி எங்களுக்கு இல்லை. இல்லை, என்னால் இல்லாமல் செய்யப்பட்டது என்று கூட சொல்லலாம். மாட்சிமை தாங்கிய anto எவ்வளவோ வற்புறுத்தியும் கூட பங்குனி மாதத்தில் மாசிக்கு என்ன வேலை என்று மாசிக்கு செல்லும் திட்டம் எங்களால் ஒத்தியோ ஒதுக்கியோ வைக்கப்பட்டது.   

     இவ்வளவுக்குப் பின்னாலும் கர்ணன் பார்த்தே ஆக வேண்டுமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். கெளதம் உறுதியாக இருந்தான், இரவுக் காட்சி. படம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. வீட்டிலும் அனுமதி கிடைத்துவிட்டது! ( ஆச்சரியக்குறியை கவனித்துவிட்டுப் பின் தொடரவும் )

     மாமாவுக்கு தொலைபேசினேன். ஒரு பிரச்சனையும் இல்லை இன்னும் பத்து நிமிடத்தில் ஆஜராவேன் என்றார். சூர்யா உடன் வர மாமாவும் ஆஜர். பலநூறு முறை கர்ணன் பார்த்துவிட்டேன் என்று கையில் அடித்து சத்தியம் செய்த குமாரை தலையிலடித்து இழுத்துச் சென்றேன் என்பது வேறு கதை.

     நான் கெளதம் குமார் மாமா சூர்யா என்று ஒரு படையையே திரட்டிவிட்டேன்.  மக்கர் செய்தது anto மட்டுமே. இருந்தும் அவரை சம்மதிக்க வைத்த தமிழக அரசுக்கும், மின்சாரவாரியதிக்கும் என் நன்றியை சொல்லிக்கொள்ள கடமை பட்டிருக்கிறேன் . காரணம் மிகவும் பவர்புல்லானது என்பதை விட பவர்கட்டானது என்றும் சொல்லலாம். இருட்டைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட இருட்டில் படம் பார்ப்பது எவ்வளவோ மேல் என்று படையின் பலத்தை அதிகரிக்க எங்களோடு சேர்ந்துகொண்டார். 

     திரையரங்கினுள் நுழைந்தோம். மொத்தத்தில் ஆறு பேர் இருந்தார்கள். எங்கள் வருகையினால் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. ஐந்து நிமிடம் தான் ஆகியிருக்கும் ஏறக்குறைய அரங்கமே நிறைந்துவிட்டது.  கடைசியாக நான் பார்த்த எந்த புதிய திரைப் படத்திலும் இவ்வளவு கூட்டத்தைப் பார்த்தது இல்லை. 


     ஒருமுறை கூட கர்ணன் பார்த்து இல்லை என்பதால் என் எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. படம் ஆரம்பமாகியது முதலே பத்து நிமிடத்திற்கு ஒரு பாடல் வந்தது கொடுமை என்றால் ஒவ்வொரு பாடலும் பத்து நிமிடத்திற்கு நீடித்தது கொடுமையிலும் கொடுமை. இருந்தும் பெரும்பாலான நேரங்களில் மொத்த திரையரங்கமும் இருக்கையின் நுனியில் உட்கார்ந்துதான் படத்தை ரசித்துக் கொண்டிருந்தது. சிம்மம் போன்ற நடை, கர்ஜனை, தமிழை தமிழாக வெளிபடுத்திய வசன உச்சரிப்பு, நொடிகொரு முறை மாற்றிக் கொண்டே இருந்த முக பாவனை உண்மையிலேயே அவர் நடிகர் திலகம் தான். 

     படத்தில் சிவாஜியும் என் டி ஆரும் மட்டுமே பாத்திரத்துடன் ஒன்றி நடித்திருந்தனர். மற்றவர்கள் அனைவரும் நடிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தின் பேரில் நடித்தது போல் இருந்தது. கிருஷ்ணனாக வந்த என் டி ஆர் சிவாஜிக்கு இணையாக நடித்து இருந்தார். பாரதப் போர் தொடங்கும் போது கிருஷ்ணன் பாடும் பாடலும், ' உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது ' பாடலும் இன்றளவும் நம் மனதில் உறங்காது ஒலித்துக் கொண்டுள்ளது. 


   


படம் முடிந்து வெளியே வரும் போது மாமா பையன் சூர்யாவிடம் படம் எப்படி இருந்தது என்றேன். "கர்ணன் நடிப்பு சூப்பர்" என்று கூறிய அவன் வயது பதினொன்று. 

22 Mar 2012

ஹாய் கங்ராட்ஸ்


     வெகு நேரமாக யாரோ என்னைக்  கவனித்துக்கொண்டு இருப்பது போலவே ஒரு உணர்வு. அந்த உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தவள் ஒரு பெண். அவள் என்னைப் பார்க்கின்றாளா இல்லை எனக்குத்தான் அது போன்ற பிரமையா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. என்னைச் சுற்றி மிகப் பெரிய கூட்டம் இருந்தது. எனக்கும் அவளுக்கும் இடையில் இருந்த தூரமும் மிக அதிகம். இருவருக்குள்ளும் இருந்த இடைவெளியை குறைத்துக் கொண்டே வந்தேன். அவளைத் தெளிவாக பார்க்க முடியும் அளவிற்கு எங்கள் இடைவெளியைக் குறைத்து விட்டேன். 


     இப்போது உறுதியாகக் கூற முடியும் அவள் பார்த்துக் கொண்டிருப்பது என்னைத் தான் என்பதை. அவள் கண்களை என்னுடைய கண்கள் நேருக்கு நேர் சந்தித்த பொழுது, பெண்மையின் வெட்கம் அவளுக்குள் வந்திருக்க வேண்டும். பார்வையை மாற்றிக் கொண்டாள். எங்கள் பார்வை சந்திக்கும் பொழுது எல்லாம், அவளுடைய பார்வையை மாற்றிக் கொண்டாள். அவள் உதட்டில் ஏற்படும் சிறு புன்னகையைக் கூட தெளிவாக ரசிக்கும் அளவிற்கு என்னுடைய பார்வையை அவள் மீது கவனமாக பதித்திருந்தேன்.  

"கோல்ல்ல்ல்....." 

     இந்த சப்தம் என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருந்தது. இன்டெர் காலேஜ் ஸ்போர்ட்ஸ் மீட். எங்கள் கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் foot ball semi final நடந்து கொண்டிருக்கிறது. நின்று கொண்டிருப்பது கல்லூரி மைதானம். நின்று கொண்டிருப்பது என்பதை விட விளையாடிக் கொண்டிருப்பது என்னும் வார்த்தை மிகச் சரியாக இருக்கும். 

     விளையாட்டை மறந்து, கண்டதும் காதல் அல்லது காதல் போன்ற ஒரு உணர்வுக்குள் தள்ளப்பட்டு இருந்தேன். "காதல் மிகப் பெரிய அவஸ்தை", என்பது காதலர்கள் சொல்லும் கதை. காதலிக்காமல் இருப்பது அதை விட மிகப் பெரிய அவஸ்தை. அதிலும் இவள் போல் ஒரு பெண்ணை காதலிக்காமல் இருப்பது உலகிலேயே மிகப் பெரிய அவஸ்தை.  

     எப்போது எங்கள் கல்லூரி கோல் அடித்தாலும் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தாள். அதற்காகவே ஒரு கோல் அடிக்கலாம் போல் இருந்தது. உறுதியாகத் தெரிந்தது அவள் எங்கள் கல்லூரி தான் என்று. மணி பதினொன்றைத் தாண்டி இருக்க வேண்டும். சூரியனின் பார்வை சற்று அதிகமாவதை உடலில் விளையாடிக் கொண்டிருக்கும் வியர்வைத் துளிகள் எக்காளமிட்டு சொல்லிக் கொண்டிருந்தன. அந்தச் சூரியனே அவளிடம் தோற்றுவிடுவது போன்ற பிரகாசம் அவளது முகத்தில் இருந்தது. இத்தனை பிரகாசமான முகம் இவ்வளவு நாள் பரிச்சியமில்லாமல் போனது எப்படி என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.   

     கால் பந்தாட்டத்தில் பந்தின் மீதிருந்து கவனம் சிதறினால் நாம் சிதறி விடுவோம். வேறு வழி இல்லாமல் பந்தையும் தொடர்ந்து அவளையும் தொடர்ந்து கொண்டிருந்தேன். பந்தைத் தவற விட்டாலும் விடுவேனே தவிர அவளைத் தவற விடக் கூடாது என்பதில் மனம் உறுதியாக இருந்தது. சூரியன் மேகத்தினுள் மறையும் போதெல்லாம், அவளது முகம் முழு நிலவு போல் அழகாகவும் மென்மையாகவும் இருந்தது. இதை அவளிடம் இப்போதே சொல்ல வேண்டும் என்கின்ற அவசரம் வேறு என்னைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது.


     தோளின் மீது ஒரு கை படர்வதை உணர்ந்து திரும்பினேன். சிவா. என்னை அதிகமாக நேசிக்கும் தோழன். நான் கால் பந்தாட்டம் விளையடுவதற்குக் காரணமே அவன் தான். என்னை பற்றி எனக்கு தெரிந்ததை விட அவனுக்குத் தான் அதிகமாகத் தெரியும். 

     "என்னடா ரொம்ப நேரமா அந்தப் பொண்ணையே பார்த்துட்டு இருக்ற போல", எப்படி என்ற ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தேன். எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல புன்னகைத்தான். 

     "congrats டா, அந்தப் பொண்ண இம்ப்ரெஸ் பண்றதுக்காக இன்னைக்கு மேட்ச் நல்லா விளையாடற மாதிரி தெரியுது. இப்படியே விளையாடு சீக்கிரமா கேப்டன் ஆகிறலாம்" போகும் போது ப்ரீ அட்வைஸ் வேறு கொடுத்துவிட்டுச் சென்றான்.

     அவன் சொன்னதன் பின்தான் தெரிந்தது, நான் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்பது . நமக்குப் பிடித்தவர்கள் நம்மை ரசிக்கும் பொழுது நாம் செய்யும் வேலைகள் சிறப்பாக அமைவது ஆச்சரியமான அதிசியம் தான். 

     பந்தை விரட்டிக் கொண்டு எங்கு சென்றாலும் மீண்டும் ஆரம்பப் புள்ளியிலேயே வந்து நின்றேன் அவளை ரசிப்பதற்காக. 2:2 என்ற கணக்கில் போட்டி சென்று கொண்டிருகின்றது. இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். யாராவது ஒருவர் கோல் போட்டாலும் வெற்றி தோல்வி தெரிந்து விடும். வெற்றி பெற்றால் மட்டுமே final உள் நுழைய முடியும். பரபரப்பான இறுதி நிமிடங்கள் ஆரம்பித்து விட்டது.

     அவளுடைய கைகளை ஒருத்தி பிடித்து இழுப்பதும் இவள் செல்ல மறுப்பதும் தெரிந்தது. எங்கள் அணி ஜெயிக்க வேண்டும் என்று இறைவனிடம் கேட்கத் தோன்றவில்லை. இறைவா நான் வரும் வரை அவள் அந்த இடத்தை விட்டு நகரக் கூடாது. நான் அவளிடம் பேச வேண்டும். ஒரு வார்த்தையாவது பேச வேண்டும். மீண்டும் ஒரு முறை அவளைப் பார்த்துக் கொண்டேன் எங்கும் செல்லவில்லை. அங்குதான் நின்று கொண்டிருந்தாள். 

     நாம் ஒரு திசையில் செல்ல நினைத்தால் விதி நம்மை வேறு பாதைக்கு அழைத்துச் சென்று விடும். பந்து என்னை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது, இந்த இடத்தில இருந்து நகர மாட்டேன் என்று சபதமிட்டவனை நகர்த்திக் கொண்டு செல்ல பந்து என் காலருகில் வந்து விட்டது. 


      அந்த இடத்தில் இருந்து நகரத் தொடங்கினேன். அங்கிருந்து விலகிச் செல்ல விலகிச் செல்ல எனக்கு அவளிடமிருந்தே விலகிச் செல்வது போல் இருந்தது.பந்தை சிவா தான் என் பக்கம் திருப்பி விட்டிருந்தான். பந்தைத் தடுத்தாடுவதிலும் கோல் கீப்பரை ஏமாற்றி கோல் போடுவதிலும் நான் திறமையானவன். வெற்றியைத் தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கும் மன நிலையில் சிவா இல்லை.அவளைத் தவிர வேறு எதைப் பற்ற்யும் சிந்திக்கும் மனநிலையில் நான் இல்லை. ஆனால் வெற்றி என்னைத் துரத்துகிறது. என் மனமோ அவளைத் துரத்துகிறது. தொட்டுவிடும் தூரத்திலிருப்பது வெற்றிமட்டும் தான். அவளை பின்பு தேடிக் கண்டு பிடித்துக்கொள்ளலாம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டேன். 

     பந்து என்னிடம் உதைவாங்கிக் கொண்டே மெதுவாக முன்னேறிச் சென்று கொண்டிருந்தது. கோல் கீப்பர் பார்வையை நான் கை காட்டிய திசைக்கு மாற்றிய பொழுது பந்தை திசை திருப்பினேன். யாரும் எதிர் பார்க்காத ஆனால் நான் எதிர் பார்த்திருந்த நேரத்தில் ஆட்டத்தின் கடைசி உதையை பந்திற்குப் பரிசளித்தேன். பந்து வெற்றியைச் சென்றடைந்திருந்தது. 

     வெற்றிக் களிப்பில் ஒட்டு மொத்த அணியும் என்னைத் தூக்கிக் கொண்டாட ஆரம்பித்தது. கல்லூரி மாணவர்கள் அனைவரும் வெற்றியைக் கொண்டாட மைதானத்தினுள் சிதற ஆரம்பித்தார்கள். இந்தக் கூட்டத்தினுள் என்னால் அவளைத் தேட முடியவில்லை. கூட்டம் மெதுவாக கலைய ஆரம்பித்திருந்தது. தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு அவள் நின்றிருந்த இடம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். அவள் இல்லாத அந்த இடம் வெறுமையாகக் காட்சியளித்தது. 


     களைத்திருந்தேன். கை கால்கள் வலியெடுக்க ஆரம்பித்தன. ஒரு இருக்கையில் படுத்த நிலையில் அமர்ந்தேன். கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, மீதியை தலைவலியாக ஊற்றினேன். அழ வேண்டும் போல் இருந்தது. சிவா என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

     கண்களை இருக்க மூடினேன். என் முன் நிழல் ஆடுவது போல் இருந்தது. மெதுவாக கண்களைத் திறந்தேன், முகத்தின் அருகில் கைகளை நீட்டியபடி ஒருவர் நின்று கொண்டிருந்தார். கண்களை முழுமையாகத் திறந்தேன். அவள் தான், ஆம் அவளே தான். என் எதிரே நின்று கொண்டிருந்தது நான் தேடிய தேவதை தான். அதே முகம். அதே புன்னகை. 


     மெதுவாக இதழ் பிரித்துக் கூறினாள் " ஹாய் கங்ராட்ஸ்    "...