ஸ்டாலின் கொலைவெறியோடு என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தபோது ஒட்டுமொத்த தேர்வறையும் காலாண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தது. நான் மட்டும் ஸ்டாலினை நக்கலாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படிப்பார்க்க பார்க்க அவனுடைய கோவம் இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. கையிலிந்த பேனாவை நீட்டி 'குத்திருவேன்' என்பது போல் சைகை செய்தான். சிரித்தேன். அவசரமாக என்னுடைய பேப்பரைக் கசக்கினான். அதற்கும் சிரித்தேன். பேனாவை உதறி கொஞ்சம் இங்க்கை பேப்பரின் மீது தெளித்தான். அது சிதறி பேப்பர் முழுவதும் பரவியது. அதற்கும் சிரித்தேன். அதற்கு அடுத்த நொடி அவன் கசக்கிய, அவன் மை ஊற்றிய அந்த பேப்பரை மெதுவாகக் கசக்கி எனக்கு அருகில் இருந்த ஜன்னலின் வழியே தூற எறிந்தேன். நான் பம்முவேன் என எதிர்பார்த்தவன் இதை எதிர்பார்க்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டான். முகத்தை சுருக்கி, சுழித்து பெஞ்சின் மீது ஓங்கிக் குத்தினான். அமைதியாக இருந்த அந்த ஒட்டுமொத்த தேர்வறையும் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பியது.
'என்னடே சத்தம்', தேர்வறையின் வாசலில் அப்போதுதான் வந்த டீயை உறிஞ்சிக்கொண்டே கேட்டார் வாத்தியார். ஒட்டுமொத்த வகுப்பறையும் ஸ்டாலினைப் பார்க்க, ஸ்டாலின் என்னைப் பார்க்க, 'ஒண்ணும் இல்ல சார்' என்றேன். அமைதியான அறையில் என்னுடைய குரல் மிகத் தெளிவாகக் கேட்டது. 'ஒண்ணுமில்ல' என்ற பதிலைக் கேட்டதும் மீண்டும் டீயை உறுஞ்சுவதில் சுவாரசியம் காட்டினார் அந்த வாத்தியார். இங்கே நடந்து கொண்டிருப்பது அத்தனைக்கும் காரணம் அவர் தான். அவர் தான் என்றால் அவர் மட்டும் இல்லை. ஆனால் அவரும் தான். ஸ்டாலின் என் மீது கோவப்பட்டதற்கு, மை தெளித்ததற்கு, பேப்பரை கசக்கியதற்கு. இது எதையும் அறியாமல் டீயை உறுஞ்சிக் கொண்டிருந்தார்.
ஸ்டாலினுக்கும் எனக்கும் எந்த சம்மதமுமில்லை அவனும் நானும் பதினொன்றாம் வகுப்பு என்பதைத் தவிர. அவனுக்கும் எனக்கும் இன்றைக்கு இயற்பியல் தேர்வு என்பதைத் தவிர. ஒரே வித்தியாசம் அவன் சயின்ஸ் க்ரூப். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ்.
அரசாங்கப் பள்ளி என்பதால் பாதிநாள் வகுப்பு நடக்காது. அப்படி நடக்கும் மீதி நாட்களிலும் ஸ்டாலின் வந்திருக்க மாட்டான். இதற்கு முன் ஓரிருமுறை அவனைப் பார்த்திருக்கிறேன். குற்றாலம் போகும் வழியில் இருக்கும் சிந்தாமணி தான் அவனுடைய கிராமம். ஒருமுறை யானப்பாலம் பஸ் ஸ்டாப்பில் ரன்னிங்கில் ஏறியபோது புட் போர்டில் நின்று கொண்டிருந்த என் மீது மோதி என்னுடைய இடத்தை பறித்துக்கொண்டான் என்பதைத் தவிர அவன் மீது எனக்கு எந்தக் கோவமும் இல்லை. அப்போதே முறைத்தேன். அந்த தருணத்தில் அவன் என்னைக் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. கொசு யானையைப் பார்ப்பதைப் போல என்னை நினைத்திருக்கக் கூடும்.
ஸ்டாலின் முரடன். பார்ப்பதற்கு மட்டும் இல்லை நிஜமாகவே முரடன். அவனுக்கென்று ஒரு கூட்டம் உண்டு. அவனைச் சுற்றிவர, அவனுக்கு சேவகம் செய்ய, அவன் கண்ணைக் காட்டினால், காட்டிய இடத்தில் நிற்பவனை அடிக்க. அதனாலும் அவனை எனக்குத் தெரியும். அவனைப் பற்றிய பரபரப்பு எழும்போதெல்லாம் எவனையாவது ரத்தம் வர அடித்திருப்பான். ஆனால் அவனுக்கு என்னைத் தெரியாது. இப்போது தெரிந்துகொள்ள வேண்டிய அவசரத்தில், இருக்கிறான். மீண்டும் சிரித்துக் கொண்டேன். எப்போது வேண்டுமானாலும் அவன் என்னை அடிக்கலாம் என்பதற்கான வாய்ப்பின் பிரகாசம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மேலும் என்னுடைய குழந்தை முகம் அவனை அதிகமாக தொந்தரவு செய்திருக்க வேண்டும். இந்த அப்பாவி முகம் அவனை நோக்கி கேவலமாக சிரிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதற்காக என்னால் சிரிக்காமல் இருக்கவும் முடியவில்லை.
அரசாங்கப்பள்ளி என்பதால் எதற்குமே ஒரு வரைமுறை கிடையாது. காட்டாற்று வெள்ளம் போல அதுஅது அதனதன் போக்கில் நடைபெறும். யார் எக்கேடு கெட்டாலும் வெள்ளம் தன் பாதையிலேயே போய்க்கொண்டிருக்கும். வெள்ளத்தோடு சேர்ந்து எல்லாமும் போய்க்கொண்டிருக்கும். அப்படித்தான் நாங்களும். எங்களுடைய அரசாங்கப்பள்ளி வாழ்க்கையும். அதிலும் மிகக்கண்டிப்பான ஒரு கிறிஸ்த்தவ பள்ளியில் படித்த எனக்கு இந்த சுதந்திரம் அலாதியாக இருந்தது. அல்லது அதீத சுதந்திரத்தைக் கொடுத்தது. விருப்பபட்டால் பள்ளிக்கூடம். வெறுப்பானால் பத்மம், பாக்கியலச்சுமி திரையரங்கம். அப்படி போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் தான் திடிரென காலாண்டுத் தேர்வு எட்டிப்பார்த்தது. முதல் இடைத்தேர்வு நடந்தது என்றாலும் நாங்கள் எழுதவில்லை. அவர்களும் கேட்கவில்லை. ஆனால் இந்த காலாண்டை எழுதியே ஆகவேண்டுமென உத்தரவு. அப்படித்தான் ஸ்டாலின் என்னருகில் வந்து அமர்ந்திருக்கிறான்.
வாத்தியார் வினாத்தாளுடன் தேர்வறைக்குள் நுழைந்த அடுத்த நொடி 'என்ன பத்தி கேள்விபட்ருப்பிய. எவனவன் கையில பிட்டு இருக்கோ இங்க வந்து குடுத்துருங்க. உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம்' என்றார். மிடுக்கான அந்த குரலைக் கேட்டதும் வகுப்பறையில் ஒரே சலசலப்பு. ஸ்டாலின் திரும்பி அவனுக்குப் பின்னால் இருந்தவனைப் பார்த்து எதோ சைகை செய்தான். ஓரிருவர் மட்டும் முன்னால் சென்று தங்களிடம் இருந்த பேப்பரை வீசிவிட்டு வந்தார்கள்.
'எனக்கு தெரியும் இன்னும் எப்டியும் பத்து பேராவது பிட்டு வச்சிருப்பியன்னு. கண்டுபிடிச்சேன் தொளிய உறிச்சிருவேன். மரியாதையா வந்திருங்க' என்றார். இப்போது ஸ்டாலின் மீண்டும் திரும்பி தனக்குப் பின் இருந்தவனைப் பார்த்தான். அவன் எழுந்து முன்னால் சென்றான். அவனைத் தொடர்ந்து இன்னும் சிலரும் தங்களிடம் இருந்த பிட்டை தியாகம் செய்தார்கள். நம்பிக்கை இல்லாத வாத்தியார் ஒவ்வொருவரின் அருகிலாக வந்தார்.
சிலருடைய முகத்தைப் பார்த்தாலே தெரியும் இவனெல்லாம் பிட்டே அடிக்கத் தகுதியில்லாதவன், தெரியாதவன் அல்லது 'உறுதியா இவன்ட்ட பிட்டு இருக்காது' என்று, அப்படி ஒரு முகம் என்னுடையது. ஆனால் ஸ்டாலின் அப்படியே எதிர்மறை. அவனிடம் பிட்டே இல்லை என்றாலும் சோதித்துப் பார்க்கத் தூண்டும் முகம். நல்ல கருப்பு. அடர்த்தியான முகவெட்டு. கட்டுமஸ்தான தேகம். எப்போதும் எவரையும் கோபமாகவே பார்க்கும் சிறிய கண்கள்.
வாத்தியார் ஸ்டாலினை நெருங்கிய போது 'என்னடே' என்றார்.
'சார் பிட்டு இல்ல சார்' என்றான்.
'நெசமா' என்றார்.
'சத்தியமா' என்றான் கையை காற்றில் வீசி சத்தியம் செய்துகாட்டி.
'கண்டுபிடிச்சேன். தெரியும்லா' என்றார்.
'தெரியும் சார்' என்றான்.
அந்த தெரியும் சொல்லி முடிப்பதற்குள் சிரித்துவிட்டேன். அதுதான் பிரச்சனையே. ஒவ்வொருவரிடமும் வினாத்தாளை கொடுத்துவிட்டு ஒரு ஓரமாக வாத்தியார் உட்காரவும் ஸ்டாலின் என்னிடம் வம்பிழுக்கவும் மிகச்சரியாக இருந்தது. எழுத ஆரம்பித்த முதல் பேப்பரை இழுத்து கிழித்துவிட்டான். முறைத்தேன். 'மொறச்ச, மொகரக்க்கட்ட பேந்திரும்' என்பது போல் சைகை செய்தான். 'சார் காத்துல கிழிஞ்சிருச்சு, வேற பேப்பர் கொடுங்க' என்றேன். சலித்துக் கொண்டார் என்றாலும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
மேலும் பத்து நிமிடம் கடந்திருக்கும். காற்றில் அலையும் பேப்பர் சத்தத்தையும் தாண்டி வெளியில் இருந்து கேட்கும் சப்த்தங்கள் மிகத் துல்லியமாக கேட்டுக்கொண்டிருந்தன. இந்நேரத்தில்தான் ஒரு கசங்கிய காகிதம் என்னருகில் வந்து விழுந்தது. தலையை நிமிர்த்திப் பார்த்தேன். அது ஒரு பிட். ஸ்டாலின் தான் தூக்கிப் போட்டான். அதனை அப்படியே விட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்திருக்கலாம் தான். என்னுடைய கொழுப்பு அல்லது வீம்பு அதனை தூக்கி அவனருகிலேயே எறிந்தேன். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. ஏன் நானே எதிர்பார்க்கவில்லை அப்படிச் செய்வேன் என. மீண்டும் என்னருகில் தூக்கி வீசினான். மெல்ல அதனை பிரித்துப் பார்த்தேன். அன்றைய தேர்வுக்கு சற்றும் உபயோகமில்லாத ஒரு பிட். தேர்வறையே அமைதியாக இருக்க அவனைப் பார்த்து சிரித்தேன். ஏன் சிரிக்கிறேன் என்பதை புரிந்துகொண்ட அவனுடைய கோவம் இன்னும் அதிகமாவது தெரிந்தது. அவனுடைய கோவம் அதிகமாவது நல்லதில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு குதிரை என்னை எட்டி உதைத்துக் கொண்டே இருந்தது அவனிடம் வம்பிழுக்கும்படி. அந்த தாளை கசக்கி ஒரு பந்துபோலாக்கி ஜன்னல் வழியே வீசி எறிந்தேன்.
'இப்ப எனக்கு அந்த தாள் வேணும் போய் எடுத்துட்டு வா' என்றான். 'முடியாது' எனும்படி மண்டையை ஆட்டிட்டேன். பேனாவை எனக்கு மிக அருகில் வீசி பயமுறுத்தினான்.
பின்னால் இருந்து ஒரு கால் என்னை உதைத்தது. செல்வா தான். திரும்பிப் பார்த்தேன். 'அவன்கிட்ட வச்சிக்காத. அமைதியா இரு' என்பது போல் சைகை செய்தான் செல்வா. ஆனால் ஸ்டாலின் இதற்கு மேலும் என்னை அப்படியே விடுவான் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதற்காக இவனை இப்படியே விடவும் முடியாது. விட்டால் ஆபத்து. வளரவிடக்கூடாது என இன்னொரு குதிரை உதைக்க 'சார்' என்றேன். 'என்னடே' என்றார். ஒட்டுமொத்த தேர்வறையும் ஒரு நிமிடம் தலை தூக்கி என்னைப் பார்த்தது.
'பேனா எழுத மாட்டேங்குது'.
'அதுக்கு'.
'பையில இன்னொன்னு இருக்கு', என்று கூறிவிட்டு வெளியில் சென்றேன்.
இல்லாத பையில் பேனாவைத் தேடாமல் தூர எறிந்த பிட்டை எடுத்துகொண்டு உள்ளே நுழைந்தேன். வாத்தியார் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பெஞ்சில் அமரும் போது 'இருக்காடே' என்றார். 'எடுத்துட்டேன் சார்' என்றேன். 'பேப்பரு, பேனான்னு சின்னபயளுவாலவே இருக்கிய டே' என்றார். அதற்கும் சிரித்துக் கொண்டேன்.
அதேநேரத்தில் ஸ்டாலினுக்கு என்னைப் பற்றிய புரிதல் ஓரளவிற்கு வந்திருக்கும் என நினைக்கிறன். ஆச்சரியமாக என்னைப் பார்த்தான். கோபம் குறையாத ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை ஒரு நிமிடத்தில் கலைத்துவிட்டான் அல்லது கலைத்துவிட்டேன். பிட்டை தூக்கி அவனிடம் வீசினேன். இதை எதிர்பார்க்காத அவன் கோபம் மீண்டும் தலைக்கேற, அவனருகில் விழுந்த பிட்டை எடுத்து ஜன்னலின் வழியாக தூர எறிந்தான். இனி நான் வெளியில் சென்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த பிரக்ஞையும் இல்லாமல் இல்லை. அதேநேரம் ஸ்டாலினின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அந்த ரவுடி பிம்பம் என்னை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமே அவன் பிட்டடிக்கும் விதம் தான்.
பிட்டடிப்பது ஒரு கலை. பிட்டடிப்பவன் முகத்தில் எவ்விதமான உணர்ச்சிகளையும் வைத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக பயமோ அல்லது அதீத தன்னம்பிக்கையோ ஆகவே ஆகாது. தேர்வறைக்கு ஒன்று சீக்கிரமாக வரவேண்டும் அல்லது தாமதமாக. கூட்டத்தோடு கூட்டமாக சென்றால் மாட்டிக்கொள்வோம். மாட்டிகொள்வோம் என்று பட்சி கூறினால் எவ்வித கருணையும் இல்லாமல் பிட்டை தூக்கி தூர எறிந்துவிட வேண்டும். பிட்டை விட பட்சி முக்கியம். இவை எல்லாவற்றையும் மீறி பிட்டை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். அதற்கென பிரத்தயேகமான சட்டைகளை உருவாக்க வேண்டும். கூடவே நமகேற்ற நண்பர்களையும் உருவாக்க வேண்டும். மிகமுக்கியமான ஒன்று நம்மோடு பிட்டை சுமந்து வரும் நண்பனும் தைரியமனவனாக இருக்க வேண்டும். எந்த தருணத்திலும் சிக்கிக்கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கை உடையவனாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் மீறி ஒருவேளை மாட்டிகொண்டால் நமக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லாதவன் போல் நடந்துகொள்ள வேண்டும்.
அப்படி மாட்டிக்கொண்டால் 'வேற எவன்ட்டல்லாம் பிட்டு இருக்கு' என்பது தான் வாத்தியாரின் அடுத்த கேள்வியாக இருக்கும். பயத்தில், அவருடைய மிரட்டும் தொணியில் சிக்கிகொண்டவன் நம்மை பலியாடாக்கிவிடுவான். அவன் மீதிருந்த கோபம் முழுவதும் இப்போது நம் மீது திரும்பி இருக்கும். அதற்காகவே பித அடிக்கும் போது ஒன்று கூட்டு சேர்த்துக்கொள்ளக் கூடாது அல்லது தெளிவான சேர்க்கையாக இருக்க வேண்டும். சிலர் எல்லாம் பிட்டடிப்பதைப் பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வரும். பிட்டடித்து முடிப்பதற்குள் ஆளையே காலி செய்திருப்பார்கள்.
பிட்டடிப்பதற்கென சில குறிப்பிட்ட தருணங்கள் இருக்கின்றன. அவசரம் அறவே கூடாது. வாத்தியார் எனப்படுபவர்கள் வேவு பார்க்கும் கழுகு போல. எப்போ பிட்டை எடுப்போம் எப்போ கழுத்தைப் பிடித்து தூக்கலாம் என வேவு பார்க்கும் கழுகு. தேர்வு ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு நம்மையே சுற்றி சுற்றி வரும் கழுகுக்கு இரையாகி விடக்கூடாது. அதேநேரம் கழுக்குக்கும் ஓய்வு தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது ஓய்வுக்கு போகும் வரை நமக்கு தெரிந்த எல்லாவற்றையும் எழுத வேண்டும். தெரியாவிட்டாலும் எதையாவது எழுத வேண்டும். முடிந்தளவு அதிகமாக பேப்பர் வாங்க வேண்டும். பேப்பர் வாங்கும் போது ஒருவித பவ்யமான பாவனை இருக்க வேண்டும். எக்காலத்திலும் சந்தேகம் வரக்கூடாத பாவனை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விசயம் பிட்டை பார்த்து எழுதும் போது வரக்கூடிய நடுக்கம் அறவே கூடாது. அதுவே ஆளை காலி செய்துவிடும். இத்தனைக்கும் திறமை இல்லாதவன் தான் வாத்தியார் கேட்ட மாத்திரத்தில் தங்களிடம் இருக்கும் பிட் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு வருபவர்கள். ஸ்டாலினைப் போன்றவர்கள். பிட்டு கூட அடிக்கத் தெரியல, இவன்லாம் பெரிய ரவுடியா என்ற எண்ணம் தான் அவன் மீதான பிம்பத்தை சிதைத்தது. எத்தனுக்கு எத்தன் எங்காவது ஒளிந்து கொண்டிருப்பான். என்னைப் போல.
ஸ்டாலினின் கோவம் உச்சத்திற்கு சென்ற போது அவனிடம் ஒரு பிட்டை தூக்கி எறிந்தேன். பதட்டமடைந்தவன். அவசர அவசரமாக அதைப் பிரித்தான். அவன் முகத்தில் சந்தோசம். பதினாறு மதிப்பெண் வினாவில் ரெண்டு ஆ. எழுது என்றவாறு தலையாட்டினேன்.
அதுவொரு மைக்ரோ பிட் காலம். உள்ளங்கை நெல்லிக்கனி போல. தென்காசி புது பஸ்டாண்டில் ஒரு ஜெராக்ஸ் கடையில் மைக்ரோ பிட் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி செல்வாதான் அழைத்துச் சென்றான். செல்வா என் ரகம். என்னவானாலும் மாட்டிக்கொள்ளமாட்டான். மாட்டினாலும் மாட்டிவிட மாட்டான். என்ன ஒரே ஒரு பிரச்சனை என்றால் தேர்வறைக்கு பிட்டை எடுத்துவர மாட்டான். அப்படி எடுத்துவந்தால் மாட்டிக்கொள்ளும் ராசி. அதனால் எப்போதுமே பிட் எடுத்துவரும் வேலை மட்டும் என்னுடையது. மேலும் நானும் அவனும் சேர்ந்து செய்த எந்தவொரு ஆப்பரேஷனும் தோற்றது இல்லை. பெயர் வரிசைப்படி எனக்குப் பின்னால் வரும் வரம் வாய்த்தவன் என்பதால் இன்னும் வசதி.
ஸ்டாலின் அந்த பிட்டை எழுதிமுடித்த அடுத்த நிமிடம் 'என்ன செய்ய' என்பது போல் பிட்டை என்னிடம் நீட்டினான். எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த செல்வாவை நோக்கி கைய நீட்ட அடுத்த சில நொடிகளில் அந்த துண்டு காகிதம் செல்வா கைகளுக்கு மாறியிருந்தது. 'வேற ஏதாச்சும் இருக்கா' என்றான். இப்போது சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தான். தேர்வறையில் கிடைக்ககூடிய மிகபெரிய சந்தோசம் என்ன தெரியுமா பிட் எதுவுமே இல்லாத கையறு நிலையில் யாராவது பிட்டு கொடுத்து உதவுவதுதான். அதிலும் வழக்கமாக பெயில் ஆகும் கூட்டம் என்றால் அவர்களுடைய சந்தோசத்திற்கு அளவே இல்லை. என்னிடம் இருந்த இன்னொரு பிட்டை அவனிடம் நீட்டினேன். அவனுடைய ஆச்சரியத்தை அந்த சிறிய கண்களில் வைத்துக்கொள்ள முடியவில்லை. மெல்ல அவனை என்னிடம் அழைத்தேன் 'என்ன' என்றான். மிக மெதுவாக அவனிடம் 'பிட் கொண்டு வாறது பெருசு இல்ல, என்ன கேள்வி வரும்ன்னு யோசிச்சு கொண்டு வரணும்' என்றேன். என்ன சொல்வதெனத் தெரியாமல் வெடுக்கென திரும்பிகொண்டான்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பேப்பரை கட்டிவிட்டு அங்கிருந்து நகர முயல 'முடிச்சிட்டியா' என்றான். 'நாப்பது வந்துரும் போதும்' என்றேன். ஒருநிமிடம் மேலும் கீழும் பார்த்தவன், 'என் பேரு ஸ்டாலின்' என்றான். முதல்முறையாக என்னைப் பார்த்து சிரித்தான். 'தெரியும். செல்வாகிட்ட இன்னும் ரெண்டு பிட்டு கொடுத்திருக்கேன். வேணும்ன்னா வாங்கிக்க' என்றேன். 'ம்ம்' என்றான் ஆர்வமாக. எனக்கும் அவனுக்கும் இடையில் இருந்த விரோதம் மறைந்து ஒருவித சிநேகம் வளர்ந்திருந்தது. இதைத்தான் அந்த குதிரை முதலிலேயே கூறியது.
பேப்பரை வாத்தியாரின் கையில் கொடுத்துவிட்டு வெளியில் நகர அதிலிருந்து சில நிமிடங்களில் செல்வா வந்தான். செல்வா வந்த சில நிமிடத்தில் ஸ்டாலினும் வந்தான். வந்தவன் நேரே என்னருகில் வந்து கையைப்பிடித்து குலுக்கி 'நான் மாட்டிக்காம பிட்டச்ச மொத பரீச்ச இதான்' என்றான். 'நிச்சயம் பாசாயிருவேன்' என்றான். அவனிடம் இருந்த சந்தோசம் அலாதியானது. 'இனி நாம எல்லாரும் பிரண்ட்ஸ்' என்ற உறுதி அவனிடம் இருந்தது. அதுதான் எனக்கும் தேவை. அதேநேரம் இவனிடம் அதிகம் வைத்துகொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இல்லை. செல்வா அவசரமாக கையைப் பிடித்து இழுத்தான்.
'போலாம் செல்வா' என்றபடி நானும் செல்வாவும் அங்கிருந்து நகர முயல, 'மக்கா' என்றான். 'என்ன மக்கா' என்றேன். செல்வாவை நோக்கி கைகாட்டி 'நீ எப்ப அவங்கிட்ட பிட்ட கொடுத்த, நான் பாக்கவேயில்லையே' என்றான். நான் பதில் சொல்வதற்குள் செல்வா அவனை நோக்கி, 'ஏன்டே அவன் எப்பம் பிட்டடிச்சான்னே உன்னால கண்டுபிடிக்க முடியல. இதுல அவன் எப்ப பிட்ட மாத்தினான்னு மட்டும் உனக்கு தெரியவா போகுது' என்றான். பிட்டடிப்பது வாத்தியாருக்கு மட்டுமில்லை அருகில் இருப்பவனுக்குக் கூடத் தெரியக்கூடாது என்பதெல்லாம் அனுபவ விதி. ஆயுள் ரேகை.