உங்களுக்குக்
கனவு வருமா? கனவு பிடிக்குமா? கனவுகளைப் பற்றி...? இவை எதற்கும் உங்களிடம் நேரடியான பதில்
இல்லை என்றால் இந்தப் பதிவும், இந்த நாவலும் உங்களுக்கு அந்நியமாகப்படலாம்.
இந்த நாவல் வெளியானபோதே பல நேர்மறையான விமர்சனங்களைக் கடக்க நேரிட்டதாலும்,
நாவல் கனவைச் சுற்றி பின்னப்பட்ட ஒன்று என்பதாலும் கண்டிப்பாக
வாசித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். கடந்தமுறை இந்தியா வந்தபொழுது
அரசனிடம் இருந்து சுட்டுவிட்டேன். (அரசனுடைய கருவூலம் வற்றாத அமுத சுரபி.)
கனவுராட்டினம்
எனும் கொண்டாட்டமான அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிடும் முன் மாதவன் ஸ்ரீரங்கம்
குறித்து சில வரிகள். எனக்கு இவரை யாரென்றே தெரியாது, கனவுராட்டினம் என்ற நாவலின்
ஆசிரியர் என்பதைத் தவிர. நமது தெருவில் நம்மைக் குறுக்கிடும் முகம்
மறக்காத ஆனால் யார் என்றே தெரியாத ஒரு அண்ணனைப்போல ஆங்காங்கு இவரை பேஸ்புக்கில்
பார்த்திருக்கிறேன் என்றாலும் இவர் எழுதிய எதையும் வாசித்தது இல்லை. இவருக்கு
நட்பு அழைப்பு விடுப்பதிலும் ஏதோ ஒரு தடை இருந்தது. போனவாரம்தான் அதையே கடக்க
முடிந்தது; எப்படியும் இந்தவாரத்தில் புத்தகத்தை வாசித்துவிடுவேன் என்று உறுதியாக
நம்பியதால்.
சரி மீண்டும்
அதே கேள்வி? உங்களுக்குக் கனவு வருமா? கனவுகளை ஞாபகத்தில் வைத்திருக்கும் பழக்கம் இருக்கிறதா? கனவுகளுடன் வாழ்ந்திருக்கிறீர்களா? அதையும்
மீறி அவற்றைக் குறிப்பெடுத்து வைக்கும் பழக்கம் இருக்கிறதா? ஏன்
கேட்கிறேன் என்றால் இவையெல்லாமும் எனக்கு இருக்கின்றது.
கனவுகள் இல்லாது
கிடைக்கும் ஆழ்ந்த உறக்கம் எப்போது கிடைத்தது என்பதெல்லாம் நிச்சயமாக நினைவில்
இல்லை. நன்றாக நினைவில் இருப்பது என்னைச் சூழ இருக்கும் கனவுகள் மட்டுமே. என்னால்
கனவுகளை உணர முடிகிறது. அவற்றுடன் ஒத்திசைந்து பயணிக்க முடிகிறது. சமயங்களில் கனவு
நிலையிலேயே அவற்றைக் கனவென்று உணர்ந்து சமநிலைகொள்ள முடிகிறது. அப்படியில்லாது
போகும் நாட்களிலும் பாதகமில்லை அவற்றை கனவென்று உணரும்போது அதுவும் அன்றாடம்தானே
என்ற பக்குவம் வந்திருக்கிறது. ரொம்பவே வெட்டியாக இருக்கும் நாட்களிலோ அல்லது
வித்தியாசமான கனவுகள் வரும் நாட்களிலோ அவற்றைக் குறிப்பெடுக்கும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. குறிப்பெடுக்காத நாட்களில் கூட ஒரு கனவை இரண்டு மூன்று
நாட்களுக்கு நன்றாக நினைவில் வைத்திருக்க முடிகிறது. கனவுகள் நம் நிழல் உலகின் நிஜ
உலக வெளிப்பாடுகள் என்பதில் தொண்ணூறு சதம் உண்மை. பத்து சதம் பொய்யாக இருக்கலாம்.
அது பொய்யாக இருக்கலாம் என்பதற்கான சாட்சி இன்றைக்குக் காலையில் எனக்கு வந்த கனவு.
காரணம் அந்த கனவின் சூழலுக்கும் என் ஆழ்மனதிற்குமான சம்மந்தம் எவ்வளவு யோசித்தும்
ஞாபகத்திற்கு வரமறுக்கிறது.
கனவு சார்ந்த
பலவிதமான ஆராய்சிகள் உலகம் முழுக்கவே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. யாராலும்
அறுதியிட்டுக் கூடமுடியாத பெரும் புதிராகவே கனவென்னும் மாயநிலம் இருந்து வருகிறது.
அதனை அட்டகாசமான திரைக்கதையின் மூலம் அறுவடை செய்த திரைப்படம் இன்செப்ஷன்.
கனவுராட்டினம் நாவலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் ஜீவகரிகாலன் கூட இவ்வகையிலான
எழுத்து தமிழ்ச் சூழலில் பரந்துபட்ட அளவில் இல்லை என்றாலும் கனவு சார்ந்த
படைப்புகள் இருக்கின்றன என்றே குறிப்பிடுகிறார். நான் வாசித்தவரையில்
புதுமைப்பித்தனின் சிறுகதைகளைக் கடந்து வேறெதுவும் ஞாபகத்தில் இல்லை.
கனவென்பது ஒரு
அத்தியாயமாக வருவதைவிட, ஒரு சிறுகதையாக வருவதைவிட அதுவே ஒரு
நாவலாக அந்த நாவலின் களமாக விரிந்தால் எத்தனை அற்புதமாக இருக்கும். அதுதான்
கனவுராட்டினம்.
சுந்தர்
என்பவனுக்கு உறங்குவதில் பிரச்சனை இருக்கிறது, அவன்
சந்திக்கும் சித்தர் உன் வாழ்வில் நீ தொலைத்த ஒன்றை உன் கனவுகளின் வழியே தேடிக்
கண்டுபிடிப்பதன் மூலம் உன் உறக்கத்தை மீட்டெடுக்கலாம் என்று ஒரு வழிமுறை கூறுகிறார்.
கூடவே கனவு நிலையில் செய்ய வேண்டியது செய்யக் கூடாதது என சில கட்டளைகளையும்
பிறப்பிக்கிறார். சுந்தரின் கனவுராட்டினம் சுழலத் தொடங்குகிறது.
அந்த
கனவுராட்டினம் தன் ஒவ்வொரு சுழற்சியிலும் முன்னுக்குப்பின் முரணான பல்வேறு
உலகினுள் அவனை அழைத்துச்செல்கிறது. தன் வாழ்வில் தான் சம்மந்தப்பட்ட, சம்மந்தப்படாத பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறான். அவர்களின் மூலம்
வேறொரு கனவு அனுபவம் அவனுக்கு வாய்க்கிறது. சித்தர் சொன்ன அவன் தொலைத்த பொருளைத்
தேடும் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் விசித்திர அனுபவம் என்னவாகிறது, அவன்
என்னவாகிறான் என்பதை நோக்கி நகர்கிறது இறுதிக்கட்டம்.
இங்கே
எழுத்தாளர் மாதவன் ஸ்ரீரங்கம் அவர்களின் எழுத்துநடை பற்றிக் குறிப்பிட வேண்டும்.
மிக மிக எளிமையான எழுத்து நடையின் மூலம் தன் ஒட்டுமொத்த புனைவு உலகையும் மிக
சுவாரசியமாகக் கட்டமைத்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. மிகக் கடினமான
ஒரு கதைக்களத்தை, மிகக் கடினமான ஒரு கதையாடலை மிகச்
சுலபமாக வாசிக்கக் கொடுத்திருப்பதுதான் இந்த நாவலின் மிகப்பெரும் பலம். அதேநேரம்
எளிமை என்றதும் குறைவாகவும் நினைத்துவிட வேண்டாம். ஒரு கதைக்களத்தை கடுமையான
வார்த்தைகளின் மூலம் மெருக்கூட்டி அதனை மேம்படுத்த முடியும் என்றால் ஜெமோவைக்
குறிப்பிடலாம். (ஜெமோ பள்ளியும் சேர்த்தி). இவர்களுக்கு அப்படியே நேரேதிரானவர்கள்
சுஜாதா மற்றும் சாரு நிவேதிதா. மிக எளிதான சொற்களின் மூலம் பரந்துபட்ட
வாசிப்பனுபவத்தைத் தர வல்லவர்கள். முன்னதில் இருக்கும் அழகியல் ஒரு சுகம் என்றால்
பின்னதில் இருக்கும் அழகியல் வேறொரு சுகம். இவையிரண்டுமே ஒன்றுக்கொன்று குறைந்தவை அல்ல.
சொல்லவருவது இரண்டுமே வேண்டும் என்பதுதான். ஏதேனும் ஒன்றில் தேங்கி நிற்பதும் நம்
வாசிப்பில் பாதகத்தை உண்டாக்கக்கூடும். மிகை ஒப்பனை செய்த பெண் பேரழகு என்றால்
ஒப்பனை கலைந்த பின்னும் அவள் பேரழகிதான் என்ற பக்குவமே அழகின் தரிசனத்தை
மேன்மையடைச் செய்யக்கூடும்.
மாதவன்
ஸ்ரீரங்கம் வெற்றிபெறுவது நிச்சயமாக கதை சொல்லல் முறைக்கு அவர் தேர்ந்தெடுத்த
வார்த்தைகளின் மூலமே. நூற்றைம்பது பக்கங்கள் எவ்விதத்திலும் ஒரு சுமையாக இல்லை.
அதேநேரம் சொல்லவந்த கதையில் இருந்து அவை விலகிச்செல்லவும் இல்லை. எங்கே கொஞ்சம்
பிசகினாலும் நம்மை நட்டாத்தில் விட்டுவிடுமோ என்ற கவலையும் இல்லை. கனவு உலகம்
என்றாலும் அது ஒரு சட்டகத்தினுள்தான் அடங்கி நிலைபெறுகிறது. தனக்கென ஒரு வடிவம் பெறுகிறது.
இந்த நாவல்
கொண்டாட்ட உணர்வைக் கொடுத்ததன் காரணம் நிச்சயமாக அதுகொண்ட வடிவமே. சுந்தர் எவ்வாறு
ஒரு கனவில் இருந்து இன்னொரு கனவிற்குள் வழுக்கிச் செல்கிறானோ அதேபோல்தான் என் கனவு
உலகமும் அமைந்திருக்கிறது. ஏன் நம் எல்லோரின் கனவு உலகமும் கூட. அதைக் கவனித்து
அதை ஆராய்ந்து அதை நுணுக்கமாகக் காட்சிப்படுத்த ஒரு நுட்பம் வேண்டும். அந்த
நுட்பத்தை ஒருவித அழகியலோடு கையாண்டு இருக்கிறார். பல இடங்களில் பல கனவுகளில்
நாமும் சுந்தரோடு பயணிக்கிறோம் என்ற உணர்வே அலாதியாக இருக்கிறது.
மாதவன்
ஸ்ரீரங்கமிடம் அட்டகாசமான பகடி நடை இருக்கிறது. இந்த நாவல் முழுக்க நம்மைக்
கைபிடித்து அழைத்துச் செல்லும் அவர் எழுத்து ஆங்காங்கே வெளிப்படுத்தும் பகடியின்
மூலம் நம்மை புன்னகைக்க வைக்கிறது. மலர்சியடையச் செய்கிறது.
நாவல் உச்சம்
தொடும் என்றால் நாவலின் நூற்றியிரண்டாவது பக்கத்தையே குறிப்பிடுவேன்.
"வெளியிலிருக்கும் எனக்கு உள்ளிருக்கும் நான் நான்தான் என்பது நன்றாகவே
தெரிகிறது. உள்ளிருக்கும் எனக்கு வெளியிலிருக்கும் நான் யாராகத் தெரிவேன் என்பது
குழப்பமாக இருந்தது...." என்று நீளும் அந்த பத்தி அதகளம். நாவல் தன்னளவில்
உச்சமடையும் இடம் நிச்சயமாக இங்குதான்.
நாவலில் பல்வேறு
விதமான வட்டார வழக்குகள் வருகின்றன அவற்றையும் முறையாகவே கையாண்டிருக்கிறார் என்று
நினைக்கிறேன் என்றாலும் பெரும்பாலான வழக்குமொழி நெல்லைத் தமிழ் போல் தோன்றியது.
ஒருவேளை என்மொழி நெல்லை வட்டாரத்தைச் சார்ந்தது என்பதால் என்னால் அவற்றை அப்படிப்
பார்க்க முடிந்ததா, இல்லை ஜெமி கூறும் கதையில் சுந்தரின்
ஆதி திருநெல்வேலி என்பதால் அப்படியாக உருமாறியதா என்று தெரியவில்லை. என்றாலும் பல
இடங்களில் அவரின் நுட்பம் அட்டகாசமாக இருந்தது. சுந்தர் தன் கனவின் ஒரு இடத்தில்
நாக்கைக் கடித்துக்கொள்வான். லேசாக ரத்தம் வரும். அதே காட்சியில் குளிர்பானமும்
குடிப்பான். அப்படி அவன் அருந்தும் பானம் ரத்தம் வந்த இடத்தில் சுர்ரென்று
எரிந்தது என்பான் எனும் இடம் நுட்பத்திற்கான சாட்சி.
இப்படி நாவல்
முழுக்கக் குறிப்பிட்டுச்சொல்ல எத்தனையோ அட்டகாசமான பகுதிகள் இருக்கின்றன. குறையே
இல்லையா என்றால் ஒன்றே ஒன்று இருக்கிறது. அதுதான் நாவலின் பலம் அதுதான் நாவலின்
பலவீனம். அது ஸ்பாய்லராக மாறிவிடக்கூடும் என்பதால் ஸ்பாய்லர் அலர்ட்.
*** நாவல்
கடைசி பத்து பக்கங்களுக்கு முன்பே முடிவடைந்துவிடுகிறது, அதன்
பின் வருவதெல்லாம் சுந்தர் கூறுவதுபோல் ஒரு செமினாரைக் கேட்பது. அதுவல்ல நான் கூற
வந்தது. மாதவன் ஸ்ரீரங்கம், தன் நாவல் முழுக்கவே பல்வேறு புள்ளிகளை
வைத்துக்கொண்டே வருகிறார். அவை ஒவ்வொன்றுமே ஒன்றுகொன்று தொடர்பில்லாத புள்ளிகள்.
அவ்வாறு அவர் வைத்துகொண்டு வரும் புள்ளிகள் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டு ஒரு
ஊடாடத்தை நிகழ்த்துமோ என்று எதிர்பார்த்தேன், அப்படி
எதுவுமே இல்லை. ஒருவிதத்தில் அது உண்மை, பெரும்பாலும்
கனவுகளுக்கும் கனவுகளுக்கும் இடையிலான தொடர்புகள், ஒருபுள்ளியில் இணைய வேண்டும்
என்ற அவசியம் இல்லை; என்றபோதிலும் இவை கட்டுபடுத்தப்பட்ட கனவுகள் என்பதால் மிக
சுவாரசியமான புள்ளியில் இணையுமோ என்று யோசித்துப்பார்த்தேன். அப்படியில்லை.
அப்படியென்றால் கடைசி பத்துப் பக்கம் வரை நாவல் உங்களை கனவு நிலையிலேயே
வைத்திருக்கிறது என்றால் கடைசி பத்துப்பக்கத்தை மட்டுமே படித்தாலும் நாவலின்
ஒட்டுமொத்த சாரமும் உங்களுக்குப் புரிந்துவிடும். இது பலவீனம் என்றால்! இந்த
நாவலின் அந்த கடைசிப் பத்துபக்கம் தவிர்த்து ஏனைய பக்கங்களைப் படித்தாலும்
இந்தநாவல் உங்களுக்கு ஒரு கொண்டாட்ட மனநிலையைக் கொடுக்க வல்லது என்பதே இதன் பலம்
***
இது யாருக்கான
நாவல் என்றால் - அதைத்தான் முதல் பத்தியிலேயே கேட்டுவிட்டேன்.
Tweet |
இப்போது வரும் நனவுகளுக்கே நம்பிக்கை இல்லை... கனவுகள்...? வல்லரசு ஆகும் கனவையும் சேர்த்து... நல்லரசு ஆகாதா எனும் கனவு அதிகம்...!
ReplyDeleteஇப்போது உள்ள மனநிலையில் கனவுநிலையுரைத்தல் அதிகாரத்தை எழுத முடியுமா என்கிற கனவும் அதிகம்...!
என்னைப்பொறுத்தவரை :
ReplyDeleteநன்றாக என்பதை விட திருப்தியாக செய்யும் தொழிலை செய்து விட்டு தூங்கினவன், அதிகாலை சரியான நேரத்திற்கு எழுபவனே (அலாரம் வைக்காமல்) கொடுத்த வைத்த மகான்...!
கனவுகள் வரும் அளவிற்கு தூங்குபவனும் 'வேறு ஒரு விதத்தில்' கொடுத்த வைத்தவனே...
அப்புறம், தொடர்ந்து நீங்கள் இங்கு பயணிக்க வேண்டியது கனவாக மாறிடக்கூடாது என்பதே எனது இப்போதைய நனவு...!
கொடுத்த வைத்த → கொடுத்து வைத்த
Deleteகொடுத்த வைத்தவனே → கொடுத்து வைத்தவனே... கெடுத்து என்று கூட இருக்கலாம்...!
நிச்சயமா தனபாலன் அய்யா :-)
Deleteநல்லதொரு அறிமுகம். ஆசிரியரும் எனக்கு ஒரு அறிமுகம். இதுவரை இவரைப் பற்றி, இவர் எழுத்துகளைப் பற்றி அறிந்ததில்லை. நன்றி சீனு.
ReplyDeleteவாவ் சூப்பர்... நிச்சயமா வாசிச்சுப் பாருங்க.. உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும் :-)
Delete