ஈழ
இலக்கியத்தைப் பொறுத்தவரையில் நான் வாசிக்கும் முதல் நெடுங்கதை, கலாதீபம் லொட்ஜ் என்பதால் வழக்கமான வாசிப்பு வேகத்தை என்னால் இந்தப்
புத்தகத்தில் காட்ட முடியவில்லை. மொழி ஒரு தடையாக இல்லை என்ற போதிலும் மொழி
இலகுவாக இல்லை என்பதே உண்மை. நான் வாசித்தவரையில் ஈழம் சேர்ந்த பத்தி
எழுத்துக்களில் பெருமளவு வட்டாரச் சொற்களை அதன் ஆசிரியர்கள் கலப்பதில்லை என்று
நினைக்கிறன். ஏனெனில் பத்தி எழுத்துகளில் ஒருசில வார்த்தைகளைத் தவிர அவை எனக்கு
சவாலாக இருந்ததில்லை. ஆனால் நாவலோ சிறுகதைகளோ அவற்றிற்கு நேர் எதிரான உணர்வைக்
கொடுப்பதைப் போல் தோன்றியது. அகரமுதலவனின் சிறுகதையாகட்டும், அனோஜனின் கதைகள் ஆகட்டும். அனோஜன் ஓரளவிற்குப் பரவாயில்லை என்று
நினைக்கிறன். அதற்காக இவற்றைப் பிரச்சனைகளாகச் சொல்லவில்லை, எனக்கான
சவால்கள். மேலும் நாவலின் ஆரம்பத்தில், புரிதலில் சில
சவால்கள் இருந்ததே தவிர, தொடர்ந்து வந்த ஒருசில வார்த்தைகளை
இரண்டாம் மூன்றாம் முறை வாசிக்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. உதாரணமாக
பேட்டரி, பேட் போன்ற வார்த்தைகளுக்கான இணை வார்த்தைகள்.
- இவை மொழி அளவில்.
புனைவைப் பற்றி
- வாசுமுருகவேல் கட்டமைக்கும் களத்துடன் என்னால் இயல்பாக ஒன்ற முடிந்தது.
விவரணைகள் பிரமாதம். மொழியை காட்சிப்படுத்திப் பார்க்க முடிந்தது - புனைவு
மொழிக்குத் தேவையான மிகமுக்கியமான அம்சமே மொழியைக் காட்சிப்படுத்துதல், அதில் எவ்வித இடையூறும் இல்லை. சந்திரன், தாரிணி,
விசாகர் ஆகியோரின் படகுப் பயணம் ஆகட்டும், கப்பல்
பயணம் ஆகட்டும், அவர்கள் செல்லும் அந்தப் பயணத்தில்
என்னையும் பொருத்திப் பார்க்க முடிந்தது. பௌர்ணமியை ஒட்டிய அந்த இருளில் அவர்களோடு
பயணித்தாகட்டும், அதற்கு முந்தைய பொழுதுகளில் விசாகரின்
ஊரைவிட்டுப் பிரியும் இழப்பைக் காட்டியதாகட்டும், கலாதீபம்
லொட்ஜில் அவர்கள் நாட்கள் கடத்திய விதத்தைக் கூறியதாகட்டும், காட்சிகள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் மனதில் நின்றன. இவர்களுக்கு
அடுத்ததாக மனதில் நின்றவர்கள் கொழும்பன்றியும், பஞ்சவர்ணமும்.
கூடவே பொறுப்பு எனும் கதாபாத்திரமும்.
புனைவின் கதை -
ஈழத்தின் மிகப்பதட்டமான சூழலில் பல்வேறு குடும்பங்கள் ஈழத்தில் இருந்து நேச
நாடுகளுக்குத் தப்போயோட முயல்கின்றனர். அப்படியொரு குடும்பமாக விசாகரின் குடும்பம்
கனடா செல்ல முயல்கிறது. கனடா செல்வது அத்தனை சாதாரண விஷயம் இல்லை. கனடா என்ற
பெயர்தான் அவர்களுக்குத் தெரியுமே தவிர்த்து அங்கு செல்வதற்கான எவ்வித
டாக்குமெண்டுகளும் இவர்களிடம் இல்லை. அவற்றைத் தயார் செய்ய வேண்டும்.
டாக்குமெண்டுகள் கிடைப்பதெற்கென ஆகும் காலம் எத்தனை மாதங்களாக வேண்டுமானலும்
இருக்கலாம். ஆக அதுவரைக்கும் கொழும்பில் தங்கியாக வேண்டிய கட்டயாம் அவர்களுக்கு.
இதில் மிக முக்கியமான விஷயம், அவர்கள் பயணத்திற்கான டாக்குமெண்டுகள்
அவர்களுக்குக் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். அப்படியொரு சூழலில்தான்
விசாகரின் குடும்பம் தங்கள் சொந்த ஊரை விடுத்து கொழும்புவிற்கு, கொழும்புவில் இருக்கும் கலாதீபம் லொட்ஜிற்கு வந்து சேர்கிறது.
விசாகரைப் போலவே
பல்வேறு குடும்பங்கள் இதேபோன்ற பல்வேறு காரணங்களுக்காக அந்த லொட்ஜில் நிலைபெற்றுத்
தங்கி இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருமே நாவலின் முக்கிய அம்சமாக, கதையோட்டத்தின் முக்கிய நகர்வாக வந்து போகிறார்கள். அதன்காரணமாகவே
கதையில் எண்ணற்ற கதாபாத்திரங்களைக் காணமுடிகிறது. குறுநாவலில் இத்தனை
கதாபாத்திரங்கள் சவாலான ஒன்று என்றபோதும், நாவல் மொத்தமும்
ஒரு லொட்ஜை மையப்படுத்திய ஒன்று என்பதால் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இவர்களில்
முக்கியமான கதாபாத்திரங்களாக வந்து சேர்வது விசாகரின் குடும்பம். மிகப்பெரும்
மனபாரத்துடனே ஊரைவிட்டுப் பிரிகிறது இவர்களின் குடும்பம். விசாகரின்
குடும்பத்திற்கு ஊரைவிட்டுப் பிரிகிறோமே என்ற ஏக்கம் என்றால், இவர்களை உற்றுநோக்கும் சில குடும்பங்களுக்கோ இவர்களைப் போல நம்மால்
புலம்பெயர முடியவில்லையே என்ற ஏக்கமும் இருக்கிறது. இப்படிப் பிரிதலின் பின்
இருக்கும் நுணுக்கங்களை கூறிக்கொண்டே நம்மையும் விசாகரையும் அழைத்துச் செல்கிறார்
நாவலாசிரியர்.
தங்கள்
ஊரைவிட்டுப் புரிந்து வரும் விசாகரின் மனவோட்டங்கள், புறப்பாட்டிற்கு
நேரமாகிய பின்னரும் அதுவரை அவர் கும்பிப்பிட்ட முருகனை ஒரேயயொருமுறை தரிசித்துவர
வேண்டுமென ஓட்டமெடுத்து ஓடும் காட்சி என சொந்த நிலத்தைப் பிரியும் மக்களின்
வேதனையை ஆரம்பம் முதலே காட்சியாக்கத் தொடங்கியிருப்பார் வாசு முருகவேல். விசாகரின்
குடும்பம், எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல்
பத்திரமாகக் கனடா போய்ச்சேர்ந்துவிட வேண்டும் என்ற பதட்டம் அவர்கள் அந்த
டால்பினுள் ஏறிய நொடியில் இருந்தே என்னையும் தொற்றிக்கொண்டது நிச்சயமாக உண்மை.
கூடவே நம் இனம் அங்கே எத்தகைய பதைபதைப்புக்கு உள்ளாகியது என்ற துன்பவியல் நிகழ்வு
ஒவ்வொரு வார்த்தைகளின் மூலமும் மேலும் மேலும் அழுத்தத்தைக் கூட்டிக்கொண்டே
சென்றது. இந்த நாவலை நான் நேரமெடுத்து வாசிக்க அதுவும் ஒரு காரணம். ஓர் எழுத்தால்
உணர்வுகளைக் கடத்த முடியுமென்றால் அதுவே வெற்றி. அவ்வகையில் நீங்கள் நிலை
பெற்றுவிட்டீர்கள்.
எனக்குப்
பிரச்சனையாகத் தெரிந்த இடங்கள் - மையக் கதாப்பாத்திரமமான சங்கரின் கதை. கதையின்
திருப்புமுனையே சங்கர்தான். அப்படியிருக்க சங்கர் மீது நிகழ்த்தப்படும் வாதை
இன்னமும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கலாமோ என்று தோன்றியது. கதையின் மைய
விசைகளில் சங்கரும் ஒருவன் எனும்போது சங்கரின் மீது எழுந்திருக்க வேண்டிய
கழிவிரக்கம் மொத்தமும் சந்திரனை நோக்கிச் சென்றுவிட்டது. அதற்குக் காரணம், சங்கருக்குத் தந்திருக்க வேண்டிய தரவுகள் குறைந்துவிட்டதோ என்று
தோன்றுகிறது. சங்கரின் சித்திரம் - வருகிறான், குளிக்கிறான்,
பாண் போடுகிறான், திடிரென சயனைட் தின்ற தன் காதலிக்காக
வாழ்க்கையைத் தொலைக்கிறான், அது ஒட்டுமொத்த கலாதீபம் லொட்ஜையும்
அசைத்துப் பார்க்கிறது என்ற அளவில் அமைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. லொட்ஜில்
பல்வேறு கதாபாத்திரங்கள் வந்து போகிறார்கள் அவர்களில் பலரை நியாபகத்தில்
வைத்திருப்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்றபோதிலும் ராசன் போன்றவர்களுக்குக்
கொடுத்த கதையைவிட சங்கருக்குக் இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்திருக்கலாம். ராசனைவிட
சங்கர் முக்கியம். அதேநேரம் ராசனின் கதையும் சுவாரசியமான ஒன்றே என்பதில் எவ்வித
மாற்றுக்கருத்தும் இல்லை. கதையோட்டத்தில் ராசன் எவ்வித அதிர்வையும்
ஏற்படுத்தவில்லை. ஆனால் நாவலின் மையவிசை சங்கர்தானே? அவனை
ஏன் அந்தரத்தில் விட்டீர்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இடைச்சொருகலாக
வந்து இணையும் குடு தர்மபாலாவின் கதை புனைவில் எழுதப்பட்ட இடமும் அது சந்திரனின்
கதையோடு வந்து இணையும் புள்ளியும் கச்சிதமாக நிகழ்ந்துள்ளது மாயாஜாலமே. காரணம்
தர்மபாலாவின் கதை எங்கிருந்து எந்த வருடத்தில் ஆரம்பமாகிறது என்பதும் அது ஒரு
பின்னிருந்து முன்னோக்கி நகரும் கதை என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தாதபோதும் கூட,
அது அப்படியாகவே உருபெற்று வந்து இணையும் புள்ளி பிரமாதம். மென்டிஸ்
குறித்த சித்திரம் குறைந்த வார்த்தைகள் என்றாலும் அபாரமாகப் புனையப்பட்டுள்ளது.
அதேநேரம் குமரவை காட்சிப்படுத்திப் பார்க்க கடினமாக இருந்தது.
இவை அனைத்தையும்
கடந்து, கதை இன்னும் ஆழமாக சொல்லப்பட்டிருக்கலாமோ என்று
தோன்றாமல் இல்லை. நிறைய சம்பவங்கள் சம்பவங்களாகவே முடிந்துபோவது கதையை ஒரு புனை
உலகில் இருந்து சற்றே அந்நியப்படுத்தியதைப்போல் தோன்றியது. ஒரு பெரும்
சித்திரத்திற்கான கதைக்களம் குறுநாவலாக முடிந்துபோனதைப் போன்ற உணர்வு. லொட்ஜில்
தொடங்கி லொட்ஜில் முடியும் கதை என்ற போதிலும், தாரிணி,
விசாகர், சங்கர், பஞ்சவர்ணம்,
அன்றி என்று எத்தனையோ அழுத்தமான கதாபாத்திரங்களும்
காட்சிப்படுத்தல்களும் கச்சிதமாக அமைந்தபோதிலும், அவர்களுக்குள்
- உள் நிகழும் மனப்போராட்டங்கள் எங்குமே பதிவு செய்யப்படவில்லையோ என்றும்
தோன்றியது.
இதைச் சொல்வதன்
காரணம் முன்னுரையில் நீங்கள் கூறி இருந்த இந்த வரிகளும், நாவலில்
ஆங்காங்கு இடம்பெறும் சில தனித்துவமான வரிகளும்
"என்
ஒரு சொல்லுக்கும் அச்சம் கிடையாது. அத்தோடு தமிழ்வாசகப்பரப்பு ‘ஜெப்னா பேக்கரி’க்கு அளித்த வரவேற்பும் ஊக்கமும் நான்
எதிர்பார்க்காத ஒன்று.",
"அவர்களுக்கு
வாழ்க்கை என்பதே அதிசயமான பயணம்தான்." ,
"படகு
அசைந்தது. வாழ்வுதான் அசைய மறுத்தது."
"கடலிலேயே
துள்ளி, கடலிலேயே வீழ்ந்து போக வாழ்க்கை மீனுக்கு
வாய்த்திருக்கிறது. பிறக்கும் நிலத்தில் வாழும் சுகத்தை இந்தக் கப்பலில் உள்ள
எவரும் இனி அறியார்."
இப்படியான பல
இடங்கள் நாவலில் கச்சிதமாக வந்துபோவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.
ஒரு பெருங்கதை சொல்லும் வல்லமை உங்களிடம் இருக்கிறது. அதை சுவாரசியமாக காட்சிப்படுத்தும்
மொழி இருக்கிறது. அப்படி ஒரு படைப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்ற
நம்பிக்கையைத் தருகிறது கலாதீபம் லொட்ஜ். அந்த படைப்பில் காத்திரமான ஒரு உலகை
எங்களுக்கு வாசிக்கத் தருவீர்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது.
Tweet |
கொடுத்துள்ள சில வரிகளே மனதை உருக்குகிறது...
ReplyDeleteமிக நுட்பமான வாசிப்பு வாழ்த்துகள்
ReplyDelete