28 Jun 2019

தென்காசி - வளைவுகளின் ஊடாக

விகடனில் கிக்கி கதை படிக்க ஆரம்பித்த கணத்தில் இருந்தே தென்காசி ஞாபகமாக இருக்கிறேன். அதற்காக கிக்கியை உயர்த்து மதிப்பிடாதீர்கள், நேர விரயம். இருந்தும் சில கதைகளில் வரும் சில வரிகள் போதுமானது காணாமல் போன கடந்த காலத்தினுள் நம்மைக் கொண்டுசேர்க்க. கிக்கியில் திருடன் போலீஸ் விளையாடும் சிறுவர்கள் வழியாக கள்ளாம் போலீஸ் நினைவுகள் வந்து போகின்றன. சின்னச்சின்ன சந்துபொந்து என தென்காசியின் அத்தனை முடுக்குகளிலும் திருடனாகவும் போலீசாகவும் ஓடியிருக்கிறோம். எங்கிருந்து எப்படி எவனை வளைப்பது என்பது முதற்கொண்டு ஓடிக்கொண்டே கட்டம் கட்டுவோம். சொல்லபோனால் திருடனாக இருப்பது மிக எளிது, வளையைக் கண்டுபிடித்து அதனுள் ஒளிந்துகொள்வது மட்டுமே வேலை. அவ்வப்போது வளையை மாற்றிக்கொண்டே இருந்தால் போதும். ஆனால் போலீசாக இருப்பதற்கு கொஞ்சமே கொஞ்சமேனும் மூளை வேண்டும். திருடனின் பாதையிலேயே சென்று திருடனை வளைத்துப் பிடிக்கும் உத்தி தெரிய வேண்டும். தெருவில் எத்தனை வளைகள் இருக்கின்றன, எத்தனை வழிகள் இருக்கின்றன, திருடன் ஓட ஆரம்பித்தால் அவன் ஓடும் திசையில் மற்றொருவனை நிறுத்தி எப்படி அணை கட்ட வேண்டும் என்பது முதற்கொண்டு அனைத்தும் விரல் நுனியில் இருக்க வேண்டும்.

தொட்டுப்பிடிச்சி, கல்லா மண்ணா, கண்ணாம்பொத்தி, கபடி, செவண்டிஸ் என பல விளையாட்டுக்கள் இருந்தாலும் அவை எதுவும் திருடன் போலீசின் அருகில் கூட வர முடியாது.

ஐந்து பேர் திருடன். ஐந்து பேர் போலீஸ். போலீஸ்கள் கண்ணை மூடிக்கொள்ள திருடன் தனக்கான வளையைத் தேடி ஓட வேண்டியதுதான் பாக்கி. ஒரே விதிமுறை யாரும் யாருடைய வீட்டினுள்ளும் ஒளியக் கூடாது. இதுதான் மிகமுக்கியமான விதியும் கூட. இந்த விதியில் இருந்துதான் தென்காசியின் எல்லைகள் எனக்குள் விரியத் தொடங்கின. கீழப்பாளையத்தின் அத்தனை முடுக்குகளிலும் நாங்கள் இருந்தோம். 'ஏலப்பிடில அவன', 'தொரத்துல அவன' எனப் பம்பரங்க்களாய் சுழன்று கொண்டிருந்த வளைவுகள் அவை. அத்தனை வளைவுகளும் ஏதோ ஒரு வளைவினுள் நுழைந்து எங்கெங்கோ சென்று மீண்டும் ஒரு வளைவினுள் கொண்டுபோய் சேர்ந்திருக்கும், பலநூறு புள்ளிகளை இணைத்த கோலம் போல, வளைந்து நெளிந்து ஓடும் ரத்த நாளம் போல, முடிவில்லா முடிவிலியைப் போல.

தொண்ணூறுகளின் மத்தியில் எனக்குத் தெரிந்த தென்காசிக்கும் இன்றைய தென்காசிக்கும் துளியும் சம்மந்தமில்லை. இத்தனைக்கும் கால ஓட்டத்தில் வெறும் இருபது வருடங்கள் மட்டுமே நகர்ந்திருக்கிறோம். இந்த இருபது வருடங்களில் தென்காசி பெரும்பாலும் கான்கிரீட்டாக மாறிவிட்டது. குறைந்தது ஐந்து கிமீ சுற்றளவிற்காவது நகரம் தன்னை விரித்து மாற்றிக் கட்டமைத்திருக்கிறது. அன்றைய தென்காசி அப்படி இல்லை. வாய்க்காபாலம், யானைப்பாலம், ரயில்வே பாலத்தை மீறி விரிந்திருக்கவில்லை. இருள் மங்கிய நேரங்களில் யாரும் தங்கள் அலுவல்களை வைத்துக்கொள்வதில்லை. சுற்றிலும் நதியும், தென்றலும், அதன் பின் மலைகளும், அருவியும் சூழ்ந்த பேரூர் அது.
நகரம் விரிவடைகையில் 'ஏல இப்டி ஒரு அத்ததுல போயா பஸ்டாண்ட வப்போனுவ கிறுக்குத் தாயோளியோ' என பலரும் வசை பாடியதை கேட்டதுண்டு. இன்றைக்குப் புது பஸ்டாண்டு நகரின் மத்தியைப் போல ஆகிவிட்டிருக்கிறது. அன்றைக்கு தென்காசிக்கு என இருந்த அந்த ஒரேயொரு பேருந்து நிலையமும் அத்தனைப் பெரிதாகத் தெரிந்ததுண்டு, புது பஸ்டாண்ட் பழைய பேருந்து நிலையத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டிருந்தது. பல வருடங்களுக்கு ஒரு பாழடைந்த பங்களாவைப் போல், வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கடைசி மதில் சுவரைப் போல் நின்று கொண்டிருந்தது பழைய பேருந்து நிலையம். அதனுள் நிறைந்திருந்த ஜனத்திரள் இன்றைக்கும் மங்கலான வெளிச்சத்தில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. தென்காசிக்கான பெரிய மாற்றம் அந்த பேருந்து நிலையத்தில் தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

ஊரின் முகம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. திண்ணை வைத்துக் கட்டப்பட்ட அத்தனை வீடுகளும் வழக்கொழிந்து போய்விட்டன. ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் பெரும்பாலும் இல்லாமல் ஆகிவிட்டன. தகரம் வேய்ந்த எங்கள் வீட்டுக்கூரை இன்றைக்கு கான்கிரீட்டாக மாறி நிற்கிறது. பல வளைவுகள் வீடுகளாக வீட்டு மதில்களாக மாறி நிற்கின்றன. மிக நெருக்கமான வீடுகள், வீதிகள். ஊரின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் தெரியும் தென்காசி பெரிய கோவில் கோபுரம் கூட கான்கிரீட்டின் கூரைகளுக்கு மத்தியில் தனியொருவனாக நின்று கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் அது ஒன்றுதான் தென்காசியின் பழைய கட்டிடமாக நிற்கும் என நினைக்கிறேன். இன்றைக்கும் தென்காசியில் மாறாதிருக்கும் ஒன்று என்றால் அது பெரிய கோவில் காத்துதான். ஒரு கடற்கரையைப் போல மாறிவருகிறது அந்த இடம்.

இரவு நேரங்களில் தென்காசி ரயில்வே கேட்டைத் தாண்டிப் போவதற்கே பயப்படுவார்களாம், நிஜ கள்ளன் போலீஸ் விளையாட்டு நடைபெறும் இடமாக இருந்திருக்கிறது அந்தப்பகுதி. ரயில்வே கேட்டைத்தாண்டி இருந்த ஒரேயொரு முக்கியமான இடம் நாங்கள் படித்து வளர்ந்த கவர்மென்ட் ஸ்கூல். ஏழுமணிக்கு மேல் ஒரு ஈ காக்கா அங்கு இருக்காதாம்.

நகரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. காற்றாலைகள் ஒருபுறம் ஈரப்பதத்தையும் நிலத்தடி நீரையும் இல்லாமல் செய்தாலும், பலபேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது என்னவோ உண்மை. முன்னெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியும் வயக்காடுகள் அருகி வருகின்றன. நகரின் குளுமை வெகுவாக குறைந்துவிட்டது. ஐந்து தெருவுக்கு ஒரு அடிபம்பு இருந்த காலம் போய், தெருவுக்கு ஐந்து அடிபம்பு வந்து அதுவும் போதாமலாகி இன்றைக்கு போர்வெல் குழாய்க்கும் அடிபிடி சண்டை நடக்குமளவிற்கு தீவிரம் அடைந்திருக்கிறது தென்காசியின் தண்ணீர்ப் பிரச்சனை.

ஊர்முழுக்க செண்பகவனம் நிறைந்திருந்த சிற்றாற்றுக் கரை ஓரங்களில் நீர் அருந்த புலி வருமாம். இதைக் கேட்ட என்னால் அந்தக்காட்ச்சியை கற்பனை செய்ய முடிந்ததே தவிர நம்ப முடியவில்லை. சிற்றாற்றில் கடல் போல் வெள்ளம் போகும் என்பதையும் மிகப்பெரும் கற்பனையாகவே உணர்கிறேன். நாளை சிற்றாரே மிகப்பெரும் கற்பனை என்றாகிவிடுமோ என்பதை நினைக்கும் போதுதான் புலி நீர் அருந்தி இளைப்பாறிச் சென்ற கதையை என்னால் வெறும் கதையென நம்ப முடியவில்லை. நதிக்கரையில் கட்டமைக்கப்பட்ட நாகரீகம் அதே நதிக்கரைகளை உடைத்தெடுப்பதன் மூலம் தன் அடுத்த பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நீங்களும் நானும் ஒரு நாடோடியாக, ஒரு பார்வையாளனாக, ஒரு சாட்சியாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு நாமே சாட்சி.

3 comments:

  1. தென்காசி நினைவுகள் சிறப்பு. வளர்ச்சி என்ற பெயரில் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  2. தென்காசியில் தண்ணீர்ப்பிரச்சினை!!! ஆ என்று சொல்ல வைத்துவிட்டது சீனு. நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் என் கிராமத்திற்கும் பொருந்தும் டிட்டோ. எங்கள் ஊர் குறுக்காலே நாலுவழிச் சாலை வருகிறதாம்...என்ன சொல்ல? கடைசி பாராவை நானும் வழிமொழிகிறேன். இனி கூகுள் வரைபடத்தில் ஆறுகள் காணாமல் போகும் நிலை நெருங்கிவருகிறது என்பது நிதர்சனம்.

    கீதா

    ReplyDelete
  3. தென்காசி நினைவுகள் அருமை

    ReplyDelete