சில நாட்களாகவே அந்த செந்நாயின் முகம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அது ஒரு வெறித்த பார்வையாகவும் இருக்கலாம் அல்லது என்னோடு வா இந்த கானகத்தை சிறிய இடைவெளி கூட விடாமல் சுற்றிக் காண்பிக்கிறேன் என்கிற அன்யோன்யமகாவும் இருக்கலாம். ஆனால் அது அங்கேயே நின்று வெறித்துக் கொண்டுள்ளது. என்னுடைய வருகையின் தீவிரத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன் மாஞ்சோலைக்கு சென்றிருந்த போது ரூபக்தான் கேட்டுக்கொண்டே இருந்தான், 'பாஸ் இவ்ளோ தூரம் வந்த்ருக்கோம் ஒரு மிருகத்த கூட பார்க்க முடியல, அட்லீஸ்ட் ஒரு புலிய கூட பார்க்கமுடியல' என்றவாறு வருத்தப்பட்டான். அவன் வருத்தம் என்னை வருத்தமடையச் செய்தது உண்மைதான் என்றாலும் 'அட்லீஸ்ட் ஒரு புலிய கூட பார்க்கமுடியல' என்ற அவனது ஆதங்கத்தைத் தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. புலியைப் பார்ப்பதில் என்னவொரு அசால்ட்டான தைரியம் அவனுக்கு. ஒருவேளை எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் கம்பீரமாக வந்து நின்றுவிட்டால். உள்ளுக்குள் அந்த பயமும் இல்லாமல் இல்லை. காரணம் நாங்கள் நடந்து கொண்டிருப்பது சர்வசாதாரணமாக புலிகளும் சிறுத்தைகளும் நடமாடும் பகுதி.
கானகத்தில் நடந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் நம்மை கவனித்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இல்லை நாமே கூட நம்மில் இருந்து விலகி நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கலாம். அதுவொரு அசாத்தியமான பாதுகாப்பு உணர்வு. மர்மங்கள் நிறைந்த இடைவெளிகளில் இருந்து ஏற்பட இருக்கும் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கான உத்தி. இன்னமும் காடுக்கும் நமக்குமான இடைவெளி குறைந்திருக்கவில்லை என்ற அச்சத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். அதைப் போக்கிக்கொள்ள நாம் காட்டை நெருங்க வேண்டும். ஆனால் இங்கு யாரும் அவ்வளவு எளிதில் காட்டினை நெருங்கிவிட முடியாது. குறிப்பாக மனிதர்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு உச்சியான குதிரைவெட்டி சென்றுவிட்டு அங்கிருந்து ஊத்து நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தோம். மணி மதியம் மூன்று. இதுவே சென்னை என்றால் அந்த மூன்று மணி வெயிலில் அரை கிமீ கூட நடக்க முடியாமல் எங்கேனும் சூஸ் குடிக்க ஒதுங்கி இருப்போம். இப்போது நாங்கள் இருப்பது மரங்கள் அடர்ந்த மலைப்பகுதியும் என்பதால் கொஞ்சம் கூட வெயில் தெரியவில்லை. அதேநேரம் குளிரவும் இல்லை. அவ்வப்போது மேகங்கள் மூடிக்கொள்ளும் போது மட்டும் குளிர்ந்த காற்று வருடிக் கொண்டிருந்தது. ஆங்காங்கு சில இடங்களில் காட்டருவிகளும் ஓடைகளும் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தன. சில பெயர் தெரியாத பறவைகள் மட்டும் தங்கள் இணையோடு காதல் பேசிகொண்டிருந்தன.
குதிரைவெட்டியில் இருந்து ஊத்து நோக்கி எப்படியும் ஐந்து கிமீ நடந்து இருப்போம். தூரம் குறைந்தபாடில்லை. நடக்க நடக்க தூரம் கூடிக்கொண்டே இருப்பது போன்ற உணர்வு. 'பாஸ் புலிய பார்ப்போமா மாட்டோமா' என்றான் ரூபக். 'புலி வரட்டும் கேட்டு சொல்றேன்' என்றேன். முறைத்தான்.
அந்த நேரத்தில்தான் சற்று தூரத்தில் இருந்த பாறையின் மீது நாய் ஒன்று நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். ரூபக்கை அழைத்து 'ஒரு மிருகத்த கூட பார்க்க முடியலன்னு சொன்னியே, அதான் யாரோ அவங்க வீட்டில இருந்து நாய அவுத்து விட்ருக்காங்க, நல்லா பார்த்துக்கோ' என்றேன். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அது ஒரு தெருநாய் போலத்தான் இருந்தது. அதனை நெருங்க நெருங்க கொஞ்சம் பாலிஷான இதுவரைக்கும் சொறிசிரங்கு எதுவும் பிடிக்காத தெருநாய் போல் இருந்தது. எங்களைப் பார்த்ததும் என்ன நினைத்ததோ தெரியவில்லை திடிரென காட்டினுள் ஓடி மறைந்துவிட்டது.
மீண்டும் சில நிமிடங்களில் மேலும் பல நாய்கள் அந்த பாறையில் இருந்து இறங்கி சாலையைக் கடந்து மறுபக்கம் ஓடின. அப்போதுதான் அவற்றை தெளிவாகப் பார்த்தோம். சூளையில் வைத்து எடுக்கப்பட்ட சிவந்த செங்கலைப் போன்ற நிறம். உடலில் கொஞ்சம் கூட ரோமங்கள் இல்லை. அவற்றின் வால் மட்டும் ஒரு பட்டுக் குஞ்சம் போல சிவப்பு நிறத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இப்போது எங்கள் நடையில் தயக்கம் கூடியிருந்தாலும் அவற்றை பார்த்துவிடும் அவசரத்தில் தயக்கத்தை உதறி வேகமாக நடக்கத் தொடங்கினோம். மேலும் அவை தெருநாய் இல்லை செந்நாய், காட்டு விலங்கு அபூர்வமானது என்பதையும் கண்டு கொண்டோம். இதற்குள் பாதி செந்நாய் அடர்ந்த மரங்களின் ஊடாக ஓடி மறைந்திருந்தன.
'ச்ச சீனு போட்டோ எடுக்கலியே சீனு, வா வேகமா வா' என்றவாறு முத்து என் கையைப் பிடித்து இழுத்தான். உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடுத்தபோது தான் தனித்து நின்று கொண்டிருந்த அந்த ஒரேஒரு செந்நாயைக் கவனித்தேன். உடன் வந்த அத்தனையும் காட்டினுள் ஓடி மறைய இந்த ஒன்று மட்டும் அங்கேயே நின்றுகொண்டு எங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பார்வையில் இருந்த தீவிரத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அங்கேயே நின்றுகொண்டு வெறித்துக் கொண்டிருந்தது. ஒரு சில நிமிடங்களில் அதுவும் காட்டினுள் ஓடிப்போக எங்களோடு வந்த சில நண்பர்கள் மீண்டும் அவற்றைக் காண வேண்டும் அட்லீஸ்ட் ஒரு செல்பியாவது எடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் துரத்திச் சென்றனர். ம்ம்கூஉம் அவற்றை மீண்டும் காண முடியவில்லை.
நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகில் குடிநீர் தேக்கி வைப்பதற்காக வெட்டபட்டிருந்த குட்டை இருந்தது. அக்குட்டையில் நீர் அருந்துவதற்காக அந்த நாய்கள் வந்திருக்கக் கூடும். எங்களைப் பார்த்ததால் ஓடி ஒளிந்துகொண்டு நாங்கள் சென்றதும் மீண்டும் வரக்கூடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தோம். முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆகியும் அவை வந்தபாடில்லை. இனி அவை வரவே வராது என்ற நம்பிக்கையில் அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம். எங்களுடைய பேச்சு முழுக்க அந்த செந்நாய்களே நிறைந்திருக்க என் மனம் மட்டும் அந்த ஒரே ஒரு செந்நாயை நினைத்துக் கொண்டிருந்தது. மறக்க முடியாதது அதனுடைய முகம்.
ஊத்தில் இருந்த சில பெரியவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது செந்நாயைப் பார்த்தது குறித்து கூறினோம். எவ்வித உணர்வுகளையுமே வெளிக்காட்டாமல் எங்களைப் பார்த்தவர்கள் 'செந்நாய் எப்பவாதுதான் இந்தப்பக்கம் இறங்கும், ரொம்ப வலுவுள்ள விலங்கு. கூட்டமாத்தான் அலையும். இரைய பிடிக்க பெரிய திட்டம் போடும், பார்த்தாக்க பதுங்கி வந்திரணும்' என்றார். முத்துவைப் பார்த்தேன் செந்நாயை துரத்திச் சென்ற கூட்டத்தில் அவனும் உண்டு. 'நல்லவேள சீனு அதுங்க திரும்பி வரல, வந்திருந்ததுன்னு வையி போட்டோ எடுக்கப்போன என்ன போட்டோவிலதான் பார்த்திருப்ப' என்றான்.
சென்னைக்கு வந்ததும் செந்நாய்கள் குறித்துத் தேடினேன். பெரிதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றாலும், ஜெமோ தன்னுடைய காடு, யானை டாக்டர் மற்றும் ஊமைச்செந்நாய் கதைகளில் இவற்றைப் பற்றி எழுதியுள்ளதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெமோவும் அதையே தான் கூறுகிறார். செந்நாய் அதிகமாக யோசிக்கக் கூடியது. கூட்டமாக மட்டுமே சுற்றித் திரியும். தலைவனின் ஆணைக்கு அடிபணியக் கூடியது. தலைவனின் கட்டளை இல்லாமல் ஒரு முடிவும் எடுக்காது என்று. இவற்றையெல்லாம் பார்த்தால் அன்று எங்களை கூர்ந்து நோக்கிய்து அந்தக் கூட்டத்தின் தலைவனாகத்தான் இருக்கவேண்டும். எங்களில் யாரோ ஒருவர் செய்த புண்ணியத்தால் வந்தவழியே சென்றுவிட்டது. அல்லது மனிதர்களைப் பார்த்து பழகி அவர்கள் நமது இரை இல்லை என்று ,முடிவு செய்தும் விலகி ஓடியிருக்க வேண்டும். நான்கு செந்நாய் நினைத்தால் புலி என்ன யானையையே சுற்றி வளைத்து இரையாக்கி விடுமாம்.
கடந்தவாரம் அலுவலகத்தில் செந்நாயைப் பார்த்த அனுபவத்தை பேசிக்கொண்டிருக்கும் போது ரூபக்கும் கூறினான் அந்த செந்நாயின் முகத்தை அவனாலும் மறக்க முடியவில்லை என்று. எனக்கும் கூட சில நாட்களாகவே அந்த செந்நாயின் முகம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதனுடைய வெறித்த பார்வை என்னுடைய வருகையின் தீவிரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
படம் - நன்றி கூகுள்
Tweet |
//சூளையில் வைத்து எடுக்கப்பட்ட சிவந்த செங்கலைப் போன்ற நிறம்.//
ReplyDelete:)))))))))
தண்ணீரில் மூழ்கினால் மனிதன் பிழைக்க மூன்று சான்ஸ் கொடுக்கும் என்பார்கள். இங்கு ஒரே சான்ஸ்! இது உங்களிடம் "இந்தமுறை பொழச்சிப் போங்க... உங்களுக்குக் கிச்சா.. மவனே அடுத்ததரம் உங்களை இங்கு பார்க்கும்போது இருக்கு" என்று நினைத்திருக்குமோ!
செந்நாய் மிகவும் ஆபத்தான மிருகம்...!
ReplyDelete//நான்கு செந்நாய் நினைத்தால் புலி என்ன யானையையே சுற்றி வளைத்து இரையாக்கி விடுமாம். //
ReplyDeleteதங்கள் அனுபவத்தினைப் படிக்க மிகவும் த்ரில்லிங்காக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
பகீர் அனுபவமா இருக்கே !
ReplyDeleteயம்மாடி...! திட்டத்தில் மாட்டவில்லை...
ReplyDeleteதிகில் அனுபவத்தை திகில் இல்லாம அனுபவிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க!
ReplyDeleteசூப்பர் சீனு , அழகாய் விவரிச்சு எழுதி இருக்கிறத வச்சே எல்லாரும் சுற்றிபார்கலாம் .. காலநேரம் கூட தெளிவாய் இருக்கு .. இன்னும் நிறைய இடங்கள் போங்க நாங்களும் உங்கள் எழுத்தில் பயணிப்போம்
ReplyDelete