நேற்றைக்கு வெகுநாள் கழித்து மீண்டும் ஒருமுறை கற்றது தமிழ் பார்த்தேன். தற்சமயம் நான் பணிபுரியும் மென்பொருள் துறையை கடுமையாகச் சாடி படமெடுத்து இருப்பார் இயக்குநர் ராம். கணிப்பொறியியல் துறையால் ஏற்பட்ட சமூக மாற்றங்களும் அதனால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும் மட்டுமே கதையின் மையம்.
2007-ல் வெளிவந்த படம். நானும் மணிக்குமரனும் முதல் நாள் முதல் காட்சி பார்த்தே ஆக வேண்டும் என்ற அவசரத்தில், கல்லூரியில் ஹால்டிக்கெட் வாங்கப்போன இடத்தில் - ஹால்டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த ஆபீஸ் அசிஸ்டென்ட் அதனைக் கொடுக்காமல் இழுத்தடிக்க, அவருக்கும் எங்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் எங்கள் ஒட்டு மொத்த வகுப்பும் அவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்து பின் ஒரு சிறிய பஞ்சாயத்திற்குப் பின் அவசர அவசரமாக ஆழ்வார்க்குறிச்சியில் இருந்து நெல்லை சென்று, சென்ட்ரலில் பார்த்த படம் கற்றது தமிழ். நிற்க. நான் இங்கே கற்றது தமிழ் கதையெல்லாம் சொல்லப்போவதில்லை.
முதல்நாள் முதல் காட்சி என்பதால் அரங்கம் நிறைந்திருந்தது. வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதைக் கடந்திருந்ததவர்கள். அன்றைய தினத்தில் பாடலும் ட்ரைலரும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியிருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது. கவிதை போல் நகரும் காதல் காட்சிகள், மயிர்நீப்பின் மானப்பெரிது என வாழும் நாயகன், கேட்க கேட்க சிலிர்க்க வைக்கும் வசனங்கள் என்று படம் முடிந்த போது அப்போதைய அன்றைய தினத்தில் படம் என்ன மாதிரியான தாக்கத்தை, தர்க்கத்தை என்னுள் ஏற்படுத்தியது என்பதை சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் தாகத்தை ஏற்படுத்தியது என்பது மட்டும் உண்மை.
பள்ளியில் படித்த காலத்தில், கல்லூரியில் சென்று படித்தால் அது தமிழ் எம்.மே வாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது நடைமுறைச் சாத்தியமாக இருக்கவில்லை. அப்போதைய வேலை வாய்ப்புகள், என் எதிர்காலம் சார்ந்த கேள்விகுறி என்று எவ்வளவோ காரணிகள் அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது. மேலும் கல்வி சார்ந்த தொலைநோக்குப் பார்வை நம் சமுதாயத்தில் மிகக் குறைவு. அறிவியல் படித்தவனாவது டியுசன் எடுத்து பிழைத்துக் கொள்ளலாம், கலை படித்தவன் பாடு பெரும் திண்டாட்டமே.
சமகாலத்தில் தொழிற்கல்வியானது மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் கணிப்பொறியியல் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. யாரைக் கேட்டாலும் பில்கேட்ஸின் நேரடி கண்காணிப்பில் வேலை செய்யப்போவதே தனது லட்சியமாகக் கூறுவார்கள். படித்து முடித்த அடுத்தநாளே அமெரிக்காவில் தனக்கொரு இடம் இருப்பதாக கனவு கண்டார்கள். போதாக்குறைக்கு கம்ப்யுட்டர் இன்ஸ்டிட்யுட்கள் தங்கள் பங்கிற்கு சமுதாயத்தின் காதில் வேதம் ஓதியது. பணம் பண்ணும் இயந்திரமாகவே கணிப்பொறியியல் துறையை சமூகம் பார்க்க ஆரம்பித்தது. கற்றது தமிழ் படமும் அதையே கட்டியம் கூறியது.
நாயகனுடன் படித்தவன், நாயகன் நடுத்ததெருவில் சந்திக்கும் பிபிஓ ஆசாமி என்று அனைவருமே செல்வச்செழிப்பில் வாழ்பவர்கள். பைக்கில் காரில் பெண்களுடன் மட்டுமே வலம் வருபவர்களாக காண்பிக்கப்பட்டார்கள்.
சாதாரணமாகவே ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது என்றால், இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது. இந்நேரத்தில் இப்படம் குறித்து மிகப்பெரிய சர்ச்சைகளும் விவாதங்களும் வாக்குவாதங்களும் நிகழத் தொடங்கியிருந்தன. அனைத்து பத்திரிக்கைகளும் தங்கள் பங்கிற்கு கணினித்துறையை வறுத்து எடுத்தார்கள், வெகுசிலர் மட்டும் ராமை.
அதிலிருந்து சில மாதங்களில் பச்சையப்பன் கல்லூரியில் மிகப்பெரிய கலவரம், பஸ்டே கொண்ட்டாட்டம் ஜாதிப் பிரச்சனையாக வெடித்து பின் இரு கல்லூரிகளுக்கு இடையே நிகழ்ந்த வன்முறையாக மாறி இருந்தது. பேனாக்களின் கவனம் மீண்டும் கலை அறிவியல் கல்லூரிகளின் பால் விழுந்தது. தொழிற்கல்வி படித்தவன் ஏதாவது ஒரு வகையில் பிழைத்துக் கொள்வான் ஆனால் கலை அறிவியல் படித்தவன் பாடு பெருந்திண்டாட்டம் இதில் கலவரம் வேறா அய்யகோ என்றார்கள். யோசித்துப் பார்த்தால் அதுதான் உண்மையும் கூட. மேலும் கலை பயிலும் மாணவர்களின் உளவியலைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமான காரியம். இங்கே யாருமே அவர்களைப் புரிந்துகொள்ள முயன்றதே கிடையாது. அவர்களும் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதே இல்லை என்பது வேறுவிசயம்.
பெரும்பாலும் கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் பெரும்பாலானோர் மத்தியதர, அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் (அதாவது பொருளாதரத்தில்). இவர்களிடம் வாழ்க்கை சார்ந்த புரிதல், தெளிவு, முன்னோக்குப் பார்வை என்பது அதிகம் (அறவே) இருக்காது. இதற்கு சமூகக்காரணிகள் பல. என்னைக் கேட்டால் முதல் காரணியாக அவர்கள் குடும்பச் சூழலையும் இரண்டாவதாக கல்வி நிலையங்களை, முக்கியமாக பள்ளிகள் அதிலும் முக்கியமாக அரசாங்கப் பள்ளிகளையும் கூறுவேன். கலைக் கல்வி கற்போரின் நிலைமை இன்றளவிலும் ஒரே இடத்தில் தான் தேங்கி நிற்கிறது.
பெரும்பாலும் கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் பெரும்பாலானோர் மத்தியதர, அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் (அதாவது பொருளாதரத்தில்). இவர்களிடம் வாழ்க்கை சார்ந்த புரிதல், தெளிவு, முன்னோக்குப் பார்வை என்பது அதிகம் (அறவே) இருக்காது. இதற்கு சமூகக்காரணிகள் பல. என்னைக் கேட்டால் முதல் காரணியாக அவர்கள் குடும்பச் சூழலையும் இரண்டாவதாக கல்வி நிலையங்களை, முக்கியமாக பள்ளிகள் அதிலும் முக்கியமாக அரசாங்கப் பள்ளிகளையும் கூறுவேன். கலைக் கல்வி கற்போரின் நிலைமை இன்றளவிலும் ஒரே இடத்தில் தான் தேங்கி நிற்கிறது.
2008 - இந்த வருடத்தை மென்பொருள் துறையில் வேலை பார்த்தவனும், கணிப்பொறியியல் படித்து முடித்து வெளியேறியவனும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இன்றளவும் கூட 2008-ன் தாக்கத்தில் இருந்து மீள முடியாத பலரையும் சந்திக்க முடிகிறது.
யாருமே எதிர்பாராத ஒருநாளில் ஓரிரவில் அதாள பாதாளத்தை நோக்கி இறங்கிவிட்டது இத்துறை. கொஞ்சம் கொஞ்சமாக ஊதிக் கொண்டிருந்த கணிப்பொறியியல் என்னும் பலூனில் இருந்து மெல்ல காற்று கசியத் தொடங்கியதையே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் வேலை இல்லாத் திண்டாட்டம். மென்பொருள் துறையில் பெரும்பான்மையாக அடி வாங்கியது ITIS/ITES என்று சொல்லப்படக்கூடிய மென்பொருள் சார்ந்த துறை தான். அமெரிக்கா மற்றும் அமெரிக்கா சார்ந்த வர்த்தகத்துறைகள் தங்கள் வாடிக்கையாளர் சேவைகளை cost cutting என்ற வகையில் பாதிக்கும் கீழாகக் குறைக்க, அவர்களை நம்பி கீழை நாடுகளில் இயங்கிவந்த அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் இயங்கிவந்த நிறுவனங்களுக்கு பெருத்த அடி. அதுவரையிலும் தாராளமாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் மென்பொருள் நிறுவனங்கள் கூறிய பதில் இனி இவ்வளவு தான் ஊழியம் கொடுக்க முடியும் விருப்பம் இருந்தால் வேலை செய் இல்லையேல் வேறு வேலை தேடிகொள்.
இருபதாயிரம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவனிடம் சென்று இனி உனக்கு பத்தாயிரத்திற்கும் குறைவாகத்தான் சம்பளம் சமாளித்துக்கொள் என்றால் என்ன செய்வான், ஏற்கனவே காஞ்ச மாடு கம்பம் புல்லைத் தேடி வயக்காட்டில் குதித்ததைப் போல் திடிரென சகட்டுமேனிக்கு செலவு செய்து கொண்டிருந்தவனிடம் 'ராஜா இனி உனக்கு அவ்வளவு சம்பளம் கிடையாது, செலவை குறைத்துக் கொள்' என்றால் என்ன செய்வான். வாங்கும் சம்பளத்தை நம்பி வாங்கிப்போட்ட கார், வீடு, வீட்டு உபயோகப்பொருள் அத்தனைக்கும் கடன் தொகை செலுத்த வேண்டுமே. அது மட்டுமா மென்பொருள் துறையினரை நம்பி பல பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து போய் இருந்தது, இப்போது அதையும் சமாளிக்க வேண்டும்.
அமெரிக்க வர்த்தகத்தில் நிகழ்ந்த திடீர் பணமுடக்கத்தின் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் மென்பொருள் உற்பத்தி வேலைகளை ஆனது ஆனபடி நிறுத்திவிட்டன, இது மென்பொருள் துறையை குடிசைத் தொழிலாய்க் கொண்டு நடத்தி வந்த மொத்தப் பேரையும் பாதித்து, பெருநிறுவனங்களையும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது. வளர்ந்த மென்பொருள் நிறுவனங்கள், ஊழியர்களின் பல சலுகைகளைக் குறைத்தும் 'அதுலக் கொஞ்சம் கொற இதுலக் கொஞ்சம் கொற' என்ற வகையில் ஒருவாறு சம்பளத்தில் கைவைத்தும் தாக்கு பிடிக்கத் தொடங்கின. ஊழியர்களும் வேறு வழியில்லாமல் 'தல தப்பினது தம்புரான் புண்ணியம்' என்று ஒரு பெரிய கும்புடு போட்டுக்கொண்டு தொடர்ந்து இயங்கத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட 2009-ன் பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக மந்த நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியது சந்தை. ஆனாலும் வீழ்ந்த நிலையில் இருந்து முழுவதுமாக எழ முடியவில்லை. இரண்டாம் உலகப் போரைக் காட்டிலும் மிக மோசமான ரெகவரி இந்த 2008 ரிசஷன் என்று வர்ணித்தார்கள் உலகப் பொருளாதார மேதைகள்.
எல்லாம் சரி ஆனால் மாணவ ஜாதி, மாணவ ஜாதி என்று ஒரு கூட்டம் இருந்ததே அது என்னவாயிற்று? அந்த சுழலில் சிக்கிய மாணவ ஜாதியின் நிலைமை இன்னும் என்ன? பதில் தான் கொஞ்சம் மோசமானது. கணிப்பொறியியல் துறை வளர்ச்சியின் சங்கிலித் தொடரில் இரக்கமே இல்லாமல் அறுபட்டுப் போனது இந்த சோ கால்ட் மாணவ ஜாதி தான். எங்கு பார்த்தாலும் வேலை இல்லாத் திண்டாட்டம், அல்லது அடிமாட்டு சம்பளத்திற்கு வேலைக்கு ஆள் எடுத்தல், அதுவும் இல்லையா பத்தாம் வகுப்பு முடித்தவன் செய்ய வேண்டிய வேலையை கல்லூரி முடித்துவிட்டு செய்ய வேண்டியது. எதை நம்பி எந்தக் கனவுகளை நம்பி கணிப்பொறியியல் துறையில் அல்லது தொழிற்கல்வி துறையில் சேர்ந்தார்களோ அந்தக் கனவில் மண் மட்டும் இல்லை கருங்கல் செங்கல் பாறாங்கல் இன்னும் என்னவெல்லாமோ விழுந்தது. ஆறுமாதம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய ஒரு இடம் காலியாக இருக்கிறது என்றால் அதற்கும் நூறு பேர் க்யூவில் நிற்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதில் இருந்தும் சென்னையை நோக்கி படையெடுத்து வரும் இளைஞர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஏற்கனவே வாழ வழி தெரியாமல் தேங்கிப் போய் நிற்கும் கலை அறிவியல் மாணவர்களின் கூட்டம் ஒருபக்கம் நிற்க, தொழிற்கல்விக்காவது வேலை கிடைக்கும் என்று கடன உடன வாங்கி பொறியியல் படித்தால் இன்று அதற்கும் வழியில்லாது மெல்ல தேங்கிக் கொண்டிருக்கிறது மற்றொரு கூட்டம். போதாகுறைக்கு தரமான கல்வி இல்லை, தரமான கல்விச் சாலைகள் இல்லை, தரமான கல்வி மற்றும் சாலைகள் இருந்தும் அதில் கற்றவர்களின் திறமைக்கு இந்தியாவில் மதிப்பு இல்லை என்று எத்தனையோ இல்லைகள் நாட்டில் அதுவும் இளைஞர்கள் மத்தியில் பெருகிக் கொண்டே தான் செல்கிறது. இப்படியே சென்றால் இன்னும் சில வருடங்களில் மழுங்கிய மழுங்கடிக்கப்பட்ட இளைய சமுதாயம் முழுவதுமாக உற்பத்தியாக்கபடும் அபாயம் இருக்கிறது. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்படுமானால் கற்றது தமிழ் படத்தின் இறுதிக் காட்சியில் ராம் ஒரு வசனம் எழுதி இருப்பார் 'நீங்க வாழுற இந்த ஊர் ரொம்ப ரொம்ப ரொம்ப மோசமானது, நீங்க சாப்புடுற ஒரு வாய் பீசாக்காக ஷூக்காக கண்ணாடிக்காக கொல செய்யப்படலாம். பண்ணிட்டு இருக்காங்க' என்று சமுதாயத்தை நோக்கி மிரட்டும் தொனியில் ஒரு காட்சி அமைத்திருப்பார். அதை இங்கேக் குறிப்பிடக் காரணம் இருக்கிறது.
எதுவுமே அமைதியாய் இருக்கும் வரையில் ஆபத்தே இல்லை. இங்கே சர்வமும் அமைதியாய் இருக்கிறது. இந்த அமைதியைஅரசியல்வாதிகளும் பெருத்த முதலாளிகளும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டின் மிக முக்கியமான முதுகெலும்புகளான இளைஞர்களின் முதுகில் கூன் விழுந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிய அக்கறை இல்லாமல் நாட்டை இயங்கிக் கொண்டுள்ளார்கள். அதற்கு ஆயிரம் கோடி இதற்கு ஆயிரம் கோடி என்று கோடிகோடியாய் சொத்து சேர்த்துக் கொண்டுள்ளார்களே தவிர இங்கு இருக்கும் மனிதவளத்தை எப்படி முறையாக உபயோகபடுத்துவது என்பது பற்றிய எந்த திட்டமிடலையும் யோசிக்கக் கூடக் காணோம். யோசிக்கவே இல்லை எனும் போது எப்போது செயல்படுத்தப் போகிறார்கள்?
ஒருகட்டத்தில் இந்த சமுதாயத்தில் வாழ வழியே இல்லை என்ற நிலை ஏற்படுமாயின் கற்றது தமிழில் ராம் சொல்வது போல் 'அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை' என்ற நிலையம் வரலாம். அப்படியொரு நிலை வராமல் தடுப்பது பல கண்ணிகளை ஒழுங்கில்லாமல் சுழலச் செய்து கொண்டிருக்கும் இந்த நாட்டின் பெருந்தலைவர்களிடமும் மெத்தப் படித்த ஆட்சியாளர்களிடமும் மட்டுமே இருக்கிறது.
பார்க்கலாம் மாற்றம் ஒன்று தானே மாறாதது. மாற்றம் நல்லதாய் அமைந்துவிட்டால் யாருக்கும் பிரச்சனையில்லை. இல்லாது போனால்...
Tweet |
இன்றைய சிறப்புப் பார்வை!
ReplyDeleteசீனு, நிறைய விஷயங்களில் நாம் சர்ச்சை செய்தாலும் எப்போதும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மையக் கருத்து என்னை மெய்சிலிர்க்க வைத்துவிடும்.. இதோ இந்த பதிவும் அப்படித்தான்.. எனக்குள் நான் தட்டிக் கொடுத்து உறங்கச் செய்திருந்த கணிப்பொறியாளன் மீண்டும் கண்விழித்து சம்மணமிட்டு உட்கார்ந்து விட்டான்..!
ReplyDeleteகோடிகளையும் கொடிகளையும் கொண்டாடுபவர்கள்
ReplyDeleteகோடியில் வாழும் ஏழைகள் பாட்டை அறிவாரோ?
உங்கள் 'பாட்டை' படித்தால், ஒருவேளை , அறியலாம்னு நினைறேன் ணா !!
Deleteமாற்றம் ஒன்று தானே மாறாதது. மாற்றம் நல்லதாய் அமைந்துவிட்டால் யாருக்கும் பிரச்சனையில்லை..
ReplyDeleteநல்லதே நடக்க பிரார்த்திப்போம்.
எப்போதும் விளையாட்டுத்தனமான விஷயங்களையும், எல்லா விஷயங்களையும் விளையாட்டுத்தனமாவும் எழுதுற உங்களிடமிருந்து இந்த மாதிரி ஒரு சீரியசான பதிவை எதிர்பார்க்கவே இல்லை. உணர்சிகரமான பதிவு.
ReplyDeleteமற்ற துறைகளில் நாலாயிரம் ஐந்தாயிரம் சம்பளம் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் மென்பொருள் துறையில் தேவைக்கு அதிகமாக 30 ஆயிரம் 40 ஆயிரம் என்று கொட்டித் தரப்பட்டது. அவனுங்களும் பணத்த வெச்சுட்டு என்ன பண்றதுன்னு தெரியாம விலைவாசியையும் முக்கியமா வீட்டு வாடகையையும் எல்லா ஏரியாவுலயும் ஏத்தி வுட்டானுங்க. நிலைமை மாறினதும் ஆப்பசைச்ச குரஞ்கு கதையாய்ட்டுது. அனுபவிச்சுத்தானே ஆவணும்.... அந்தப் படம் சொல்லாம சொன்ன கருத்துகள்ல இதுவும் ஒண்ணு சீனு.
ReplyDeleteமற்றபடி உன் கட்டுரை சொல்லும் அந்த ஆழ்ந்த கவலை சமுதாயப் பொறுப்புள்ள உன் என் போன்ற பலப்பல பேர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. கோடிகளில் சொத்துக் குவித்தது போய் இப்போது லட்சம் கோடிகளில் சொத்துக் குவிக்கும் அரசியலாளர்களுக்கு இதைப் பற்றில்லாம் சிந்திக்க மனமும் நேரமும் இல்லை. அமைதி ஒருநாள் மாறும் போது...?
அப்பப்பா!! யாரோ சீனு அண்ணன்கிட்ட 'உனக்கென்னப்பா , நீ சாஃப்ட்வேரு'னு ஏத்தி விட்ருக்கானுங்கபோல . மனுஷன் , இந்த பொங்கு பொங்கிருக்காப்ல . என்னணே ராம்குமார் அண்ணன் எஃபக்டா ? பட்டாசு கிளப்பறிங்களே !
ReplyDelete:)
Deleteநீங்கள் சொல்வது மிகவும் உண்மை. நமது மட்டில் மனிதவளம் அபரிமிதமாக இருக்கிறது. ஆனால் பயன்படுத்தப்படாமலேயே வீணாக்கப்படுகிறது. அதற்கு இணையாக சூரிய சக்தி. இரண்டுமே அதிக அளவில் கிடைப்பதாலோ என்னவோ அத்தனை மதிப்பில்லை.
ReplyDeleteஎப்படி மனித வளத்தை நல்லமுறையில் பயன்படுத்தலாம் என்று இந்தப் பதிவு வாசிப்பவர்கள் யோசனைகள் சொல்லலாமே!
இதோ எனது யோசனை: பள்ளிப்படிப்பு முடிந்ததும் அனைவருக்கும் 2 வருட ராணுவ சேவை. ராணுவ பயிற்சி எப்படிப்பட்ட மனிதனையும் புடம் போட்டுவிடும். நேரத்தின் அருமையை உணர வைக்கும். வெட்டிப்பேச்சு, ஊர்சுற்றல் எல்லாமே குறைந்துவிடும்.
ஐ.டி. துறை பாரபோலா வளைவு போல தனது உச்சத்தை எட்டி விட்டு
ReplyDeleteமறுபடியும் 0,0 க்கு வர வில்லை என்றாலும்
5,5 .....லேயே நிற்கிறது. மேலேயோ கீழேயோ போகவில்லை.அதுவரைக்கும்
திருப்தி அடைவோம்.
எதிர்காலம்இந்திய ஐ. டி.நிறுவனங்களுக்கு போதிய இடம் தருவதாக இருக்கும் என்று தோன்றவில்லை.
எனக்குத் தெரிந்த ஒரு பத்து சாப்ட் வேர் என்ஜிநீர்கள் இப்போது , சொன்னால் நம்ப மாட்டீர்கள். கறிகாய் வியாபாரம் செய்கிரார்கள். கட் வேஜிடப்லஸ் பாக் செய்து தருகிறார்கள். ஐம்பது பர சென்ட் லாபமாம்.
யாரும், சீட் கிழிக்க முடியாது.எனக்கு நானே ராஜா என்றார் ஒருவர்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
சிந்திக்கத்தூண்டும் பகிர்வு மற்ற வேலைகளிலும் இப்போது நெருக்கடிகள் தான் சீனு.பொருளாதார நெருக்கடி இன்னும் தொடரும் நிலையில்தான் இங்கேயும்!
ReplyDeleteநல்லதொரு அலசல்தான் நண்பரே...
ReplyDeletesuper post....
ReplyDeleteநல்ல அலசல்......
ReplyDeleteஇந்தியாவில் இருக்கும் மனித வளம் இன்னமும் முழுதாய்ப் பயன்படுத்தப்பட வில்லை என்பது தான் உண்மை. என்று திட்டமிட்டு என்று செயல்படுத்துவார்கள் என்ற கேள்வி எனக்குள்ளும்.....
யதார்த்தத்தை யதார்த்தமாக பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு சீனு! இதில் ஒன்றைப் பற்றிச் சொல்ல வேண்டும். நமது மாணவ சமுதாயமும் சரி பெற்றோர் சமுதாயமும் சரி பொறியியல், மருத்துவம், என்றுதான் யோசிக்கின்றதே தவிர கலைக் கல்வி கற்றாலும் ஆசிரியப் பணி செய்து வாழலாம் என்ற யோசனை வருவதில்லை. அரசும் ஒரு காரணம். எத்தனை பள்ளிகளில் கற்பிபதற்கு ஆசிரியர்கள் இல்லை தெரியுமா? அதே போன்று கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் உண்மை. பள்ளிகளையும், கல்லூர்ரிகளையும் அரசு சீர்திருத்தம் செய்து, ஆசிரியப் பணிகளையும் பொறியியல் பணி போன்று ஈர்க்கும் வண்ணம் செய்தால் வேலை வாய்ப்புகளைப் பெறுகச் செய்தால், மனித வளமும் இன்னும் முழுதாய் பயன்படுத்தப்படலாம். எத்தனையோ ஆசிரியப் பணிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. இது போன்ற பல கேள்விகள் எழுகிறது.....
ReplyDeleteஅருமையான பதிவு.