ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து முழிப்பு வந்தபோது ஓரிடத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தது பேருந்து. முழுவதுமாக விடிந்திருக்காத அந்த அதிகாலையில் முழித்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்தது ஒட்டுமொத்தப் பேருந்தும். ஒருவேளை பேருந்தானது குறித்த நேரத்திற்கு தாம்பரத்தை வந்தடைந்திருந்தால் இந்நேரம் தேனியை அடைந்திருக்க வேண்டும். யார் கொடுத்த வரமோ, இரண்டு மணிநேரத் தாமதம். திண்டுக்கல்லாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் ஜன்னலின் திரையை அகற்றி எங்கவாது ஊர்ப்பெயர் தென்படுமா என பார்வையை அலையவிட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்துப் பேருந்தில் நின்று கொண்டிருந்த இளைஞன் தனக்கு மேல் இருந்த கம்பியைப் பிடித்தபடியே ஆடிக்கொண்டிருக்க, தூக்கம் அவனை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. கூடவே அன்றைய தினத்தின் முதல் அதிர்ச்சியும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது.
இந்நேரம் டிரைவர் குமார் என்ற எண்ணில் இருந்து அழைப்பு வர 'ஹல்லோ' என்றேன். என் ஹல்லோவை காதில் வாங்கிக்கொள்ளும் பொறுமை அவரிடம் இல்லை. 'சார் மூணாறு டிரைவர் பேசுறேன், இப்ப தேனீ பஸ் ஸ்டாண்ட்ல நிக்கேன், எங்க இருக்கீங்க' என்றார். ஐந்து மணிக்கெல்லாம் பேருந்து தேனியை அடைந்துவிடும் என்று நிர்வாகம் கூறியதை நம்பித் தொலைத்ததால், எங்களை அழைத்துச் செல்ல வேண்டிய வேன் டிரைவரை நான்கரைக்கெல்லாம் தேனீ பேருந்து நிலையத்திற்கு வரும்படி கூறியிருந்தேன். யாருக்குத் தெரியும் அவருடைய பங்க்சுவாலிட்டி அத்தனைத் துல்லியமானது என்று. மனுஷன் நான்கரையில் இருந்து பலமுறை என்னை அழைத்துத் தோற்றுப்போய் இப்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். பேச்சில் ஒருவித விரக்தி தெரிந்தது. இப்போது அவரிடம் நான் கூறப்போகும் பதில் அவருடைய விரக்தியை இன்னும் அதிகமாக்கப்போகிறது என்பது நான் மட்டுமே அறிந்த உண்மை.
வழக்கமாகவே ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்திலும் என் பள்ளி கல்லூரித் தோழர்களுடன் எங்காவது ஊர்சுற்றச் செல்வது வழக்கம், இந்த வருடம் மைசூர் செல்லலாம் என்று திட்டமிட்டு, கிடப்பில்போட்டு பின் யாரும் ஆர்வம் காட்டாததால் அந்தப் பயணத்திட்டத்தைக் கைவிட்டிருந்தோம். ஒரு மாலைநேர கடற்கரைச் சந்திப்பில் 'எதவாது பிளான் போடு, சுதந்திர தினமப்ப மூணு நாள் லீவ் இருக்கு. வேஸ்ட்டா போயிரும்' என்றான் நந்தா. 'ஆமாடா, சும்மா வேல வேலன்னு ஓடிட்டு இருந்தா பைத்தியம் புடிச்சிரும், இந்தவாட்டி ரிலாக்ஸா எங்கியாது போயிட்டு வரலாம்' என்றான் ராகுல். போதாகுறைக்கு செல்வாவும் அவன் பங்கிற்கு கூற, யோசித்துச் சொல்வதாகக் கூறினேன். 'எங்கனாலும் ஓகே, ஆனா எங்கயாது போகணும்' என்பது தான் அவர்களின் உடனடி விருப்பம்.
எல்லாம் சரி, ஆனால் என் நிலைமை. இந்த வருடத்தின் ராசியோ என்னவோ, இவ்வருடம் முழுவதும் கொஞ்சம் அதிகமாகவே பயணித்துவிட்டேன். மாதாமாதம் எதாவது ஒரு பயணத்திட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதை அவர்களிடம் கூறினால் 'நீ ஜாலியா போயிட்டு வன்ட, நாங்க?' என்றார்கள். ஒரு தீவிர யோசிப்பிற்க்குப் பின் 'மூணாறு போவோமா' என்றேன். எங்களில் யாருமே மூணாறு பார்த்ததில்லை. பார்க்கவேண்டிய லிஸ்ட்டில் வெகுநாட்களாக இடம் பெற்றிருந்த ஒரு ஊர் மூணார். சமீபத்தில் ஸ்கூல்பையன் கூட தான் சென்றுவந்த மூணாறு பயணத்தொடர் எழுதியிருந்தார்.
எப்போதுமே மூணார் என்றதும் நியாபகத்திற்கு வரும் முதல் நபர் நண்பர் வருண் பிரகாஷ். இணையம் மூலம் மட்டுமே பழக்கம் என்றாலும் 'எப்போ மூணாறு வாறதா இருந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க, நிச்சயம் ஹெல்ப் பண்றேன்' என்று கூறியிருந்தார். முதல் வேலையாக பேஸ்புக்கில் அவருக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு விட்டு, ஸ்கூல்பையனிடம் தொடர்பு கொண்டு 'சார் மூணார் போலாம்னு ஒரு பிளான், டிப்ஸ் ப்ளீஸ்' என்றேன். மூணாறு என்ற வார்த்தையைக் கேட்டதுமே ஸ்கூல்பையன் என்னிடம் கூறிய முதல் பதில் 'நீங்க என்கிட்ட கேக்குறதுக்கு பதிலா, வருண்ட்ட கேக்கலாம், என்னவிட அவருதான் நல்லா கைட் பண்ணுவார்' என்றார். இங்கே ஸ்கூல்பையனின் குரலைப் பற்றிக் குறிபிட்டே ஆகவேண்டும். அவரின் குரலானது எப்போதுமே ஒரு ஹெட்மாஸ்டரிம் பேசும் ஸ்கூல்பையனின் பணிவை ஒத்து இருக்கும். அதனால் மட்டுமே அவருக்கு அந்தப் பெயர் பொருந்திப் போவதில் எனக்குச் சாலசந்தோஷம்.
அன்றைய இரவே நான் அனுப்பியிருந்த செய்தியையைப் பார்த்துவிட்டு சற்றும் தாமதியாமல் போன் செய்தார் வருண். அன்றைய தினம் அவர் போன் செய்தததில் இருந்து பயணத்திட்டம் வகுத்துக்கொடுத்து, அறை மற்றும் ஊர்சுற்ற வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்ததில் இருந்து அத்தனை வேலைகளையும் அவரே பார்த்துக்கொண்டார். கிட்டத்தட்ட நான் சுமக்க வேண்டிய எழுபது சதவீத சுமையை அவர் ஏற்றுக்கொண்டார். இதுவரை நேரில் பார்த்திராத, பதிவுகள் மற்றும் முகநூல் வாயிலாக மட்டுமே தெரிந்த ஒரு நண்பர் இவ்வளவு தூரம் உதவி செய்வதென்பது என்னளவில் இதுவே முதல்முறை. மூணாறில் இருந்த ஒவ்வொரு தருணங்களிலும் அவரது உதவியைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம்.
வெறும் வார்த்தைகளாலோ எழுத்துகளாலோ மட்டும் அவருக்கான எங்கள் நன்றியைக் கூறிவிட முடியாது. இருந்தாலும் மிக்க மிக்க நன்றி வருண். தொடர்ந்து மூணாரினுள் பயணிக்கும் பொழுது அவருடைய உதவி எவ்வகையில் எங்களுக்குப் பேருதவியாக மாறியது என்பதைக் குறிப்பிடுகிறேன். இப்போது மீண்டும் டிரைவர் குமார்,
'சார் காலையில நாலு மணிக்கே எந்திச்சு குளிச்சு முடிச்சு தயாரா இருக்கேன். இப்ப எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, இன்னும் எவ்ளோ நேரத்துல வருவீங்கன்னு சொல்லுறேன்' என்று என்னைப் பேசவிடாமல் பேசிக் கொண்டிருந்தார்.
மணி ஐந்தரையைக் கடந்து ஆறை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது. நான் கண்டுபிடித்திருந்த ரகசியத்தை மெல்ல அவரிடம் கூறினேன்.
'அண்ணே வண்டி இப்ப தான் திருச்சிக்கே வந்த்ருக்கு'
'என்னது இப்பதான் திருச்சிக்கே வந்த்ருக்கா...!'
எங்கள் இருவரின் அதிர்ச்சியையும் பொருட்படுத்தாமல் திருச்சி பேருந்து நிலையத்தின் வெளியே சாவகாசமாக இளைப்பாறிக் கொண்டிருந்தது எங்கள் வெள்ளை ரதம்.
தொடரும்...
Tweet |
படித்துவிட்டேன் இந்த தொடரை......தொடர்கிறேன். சுத்தமான ரோடை பார்த்து வியந்தேன் இன்னும் குப்பைகளமாக ஆகாமல் இரூக்கும் ரோடுகளும் உள்ளன இந்தியாவில்...
ReplyDeleteதமிழா ....அது எந்த ரோடுன்னு கேளுங்க சீனுவ.....ஆனா இப்பல்லாம்...எல்லா மலை ரோடுகளும் சுத்தமாக இருக்கின்றன....அட்லீஸ்ட் கேரளா பார்டரிலிருந்து தொடங்கும் ரோடுகள்....நம்ம தமிழ் நாட்டில் அருவிகளில் மக்கள் ஷாம்பு, சோப்பு என்று போட்டு தண்ணியா என்று தெரியாத அளவிற்கு அதகளம் பண்றாங்க....கேரளாவில் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை....மேபி கேரளாவில் உள்ள நீர்னிலைகள் காட்டிற்குள் நடந்து செல்லும் அளவு, பொது மக்கள் நெருங்குவதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருப்பதாலோ என்னவோ.....
Deleteஇப்பதான் திருச்சியா.....அப்ப சரி மூணாறு போக அம்மாடியோவ்.....வெள்ளை ரதம் ல...அதான் மாப்பிள்ளை ரதம்னு நினைச்சுருச்சு போல.....டிரைவர் குமார் நொந்து நூடுல்ஸ் ஆகிருப்பாரே! சுவாரஸ்யம்....தொடர்கின்றோம்.....
ReplyDeleteஹா...ஹா... திருச்சியே இப்போதுதானா? ஹா...ஹா...
ReplyDeleteநான்கூட தேனியை நெருங்கிடீங்கன்னு பார்த்தேன். அவ்வ்வ்வ்வ்வ். இப தான் திருச்சியா?
ReplyDeleteஆஹா! திருச்சியிலா இருக்கீங்க... உச்சி பிள்ளையார், தாயுமானவசுவாமி, பெருமாள் எல்லாரையும் வேண்டிக்கிட்டீங்களா?
ReplyDeleteதொடர்கிறேன்..
ஆஹா வெள்ளைரதம் இப்படியா பாவம் குமார்:)) தொடர்கின்றேன்.
ReplyDeleteஅண்ணே !! அடுத்த தொடர் சென்சார் இல்லாம தான வரும் ? அந்த ட்ரைவர் திட்டுனதெல்லாம் சென்சார் பண்ணிட்டு , 'அவர் எங்களை கோவமாய் முறைத்தபடியே வண்டியை எடுத்தார் 'னு பொய்ய சொல்லிடாதிங்க!! மூனாறு ட்ரிப் நாணும் ஒரு காலத்துல போனேன் . எப்படி போனேன்னு கேட்டுடாதிங்க , ஏன்னா எனக்கே தெரியாது .
ReplyDeleteகண்ணுக்கு குளிர்சியாக மூணார் படங்களை போடவும்,
ReplyDelete//எப்போதுமே மூணார் என்றதும் நியாபகத்திற்கு வரும் முதல் நபர் நண்பர் வருண் பிரகாஷ். இணையம் மூலம் மட்டுமே பழக்கம் என்றாலும் 'எப்போ மூணாறு வாறதா இருந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க, நிச்சயம் ஹெல்ப் பண்றேன்' என்று கூறியிருந்தார்.//
ReplyDeleteநான் சென்றபோது எல்லா ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்திருந்ததால் வருண் பிரகாஷை அழைப்பதற்கு அவசியம் இருந்திருக்கவில்லை. இனிமே போனா வருண் தான்....
//ஸ்கூல்பையனின் குரலைப் பற்றிக் குறிபிட்டே ஆகவேண்டும். அவரின் குரலானது எப்போதுமே ஒரு ஹெட்மாஸ்டரிம் பேசும் ஸ்கூல்பையனின் பணிவை ஒத்து இருக்கும். அதனால் மட்டுமே அவருக்கு அந்தப் பெயர் பொருந்திப் போவதில் எனக்குச் சாலசந்தோஷம்.//
ReplyDeleteஇதுல ஏதும் உள்குத்து இல்லையே... நானும் நாலு நாளா யோசனை பண்ணிட்டிருக்கேன்....
உடன் நாங்களும் வருகிறோம். சற்று தாமதமாகலாம். பொறுத்துக்கொள்க.
ReplyDelete