16 Jan 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - பத்மநாதபுரம் அரண்மனை - ஒரு விஸிட்

ண்டைக்காடு பயணம் முடித்து தக்கலையில் இறங்கிய போது 'சீனு பத்மனாதபுரம் போவமே' என்றான் குமார். சிறுவயதில் கல்விச் சுற்றுல்லாவில் பார்த்த பத்மனாதபுரம் அரண்மனை யின் நினைவுகள் மூளையின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிகொண்டிருந்த போதும், தக்கலையில் இருந்து வெறும் 1.5 கிமீ தூரத்தில், மிஞ்சிபோனால் ஓரிரு மணிநேரத்தில் சுற்றி முடிக்கக் கூடிய இடம் மேலும்  இதேபோல் வேறொரு வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. 



க்கலையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அத்துனை பேருந்துகளும் அரண்மனை வழிதான் சென்றாக வேண்டும், இருந்த போதும் இவ்வழியே செல்லும் நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகள் மிகக்குறைவு.வெறிச்சோடிக்கிடந்த பேருந்து நிலையத்தில் 'எப்போதும் கிளம்புமோ?' எனத்தெரியாத மினிபஸ் ஒன்று தேவுடு காத்து கொண்டிருந்தது. 'நாப்பது ரூவா கொடுத்தா போலாம் தம்பி' என்றார் ஒரு ஆட்டோ. '35 ரூபாய் நுழைவுக் கட்டணம்' என்றார் அரண்மனை அலுவலக ஓபிசர். அரண்மனை தமிழகத்தில் இருந்தாலும், நிர்வாகம் கேரளா. 

ரண்மனை வளாகமானது வட இந்தியர்களாலும், வெளிநாட்டு கலா ரசிகர்களாலும் நிரம்பி வழிந்த நிலையில் தென்னிந்திய முகங்களைக் காண்பதோ அரிதிலும் அரிதாக இருந்தது. அரண்மனையினுள் காலணி அணிய அனுமதியில்லை, ஓபீஸ் அருகில் காலணி பாதுகாக்கும் இடம் இருக்கிறது, அங்கே காலணிகளை வைத்துவிட்டு வாருங்கள் உள்ளே செல்வோம்.

வாயில் சூயிங்கம் மென்று கொண்டிருந்தால், துப்பிவிட்டு வாருங்கள், இல்லையேல் உள்ளே விடமாட்டார்கள். அரண்மனையின் ஓரிடத்தில் ஒரு தூணில் எவனோ ஒருவன் ஒட்டி வைத்திருந்த சூயிங்கம்மை, பிய்த்து எடுக்க பிரயத்தனப்பட்டு, எடுக்க முடியாமல் அலங்கோலமாக மாறியிருந்த ஒரு தூணை உங்களிடம் காண்பிக்கிறேன், அப்போது பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள் நாமெல்லாம் இந்தியர்கள் என்று. அதனால் தானோ என்னவோ அரண்மனைப் பராமரிப்பு விசயத்தில் மிக கவனமாக இருக்கிறார்கள். மிக கண்டிப்புடனும் இருக்கிறார்கள்.  



வெளியிலிருந்து பார்த்தால் அரண்மனையானது ஏதோ ஒரு சாதாரண பழைய பங்களா போல்தான் தோன்றும். திரைப்படங்களில் காட்டுவது போல் பிரமாண்டமான கோட்டை, கோட்டையை சுற்றி ஆயிரக்கணக்கான படை வீர்கள், பிரம்மாண்ட முகப்பு என்று எவ்வித இத்யாதிகளையும் உங்களால் காண முடியாது, இருந்தும் சாதரணமான முகப்பைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள், உள்ளே உங்களை ஆச்சரியபடுத்த வேண்டுமென்றே சில விஷயங்கள் காத்துக்கொண்டுள்ளன. மேலும் அரண்மனையின் உட்புறம் செல்ல செல்ல அரண்மனைப்பகுதிகள் அனுமாரின் வால் போல வெகுதூரத்திற்கு நீண்டு செல்கின்றன. 

கிபி 1550ல் இந்த வழியாக சென்று கொண்டிருந்த சேர மன்னன் ரவிவர்ம குலசேகர பெருமாளுக்கு ' இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியையே தலைநகராகக் கொண்டு ஏன் ஆட்சி புரியக்கூடாது' என்ற எண்ணம் உதயமாகியிருக்க வேண்டும், மேலும் தனது அரசை பலப்படுத்த, பாதுகாக்க கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலை இருக்கிறது, வாணிபத்திற்கு முக்கடல் இருக்கிறது, இதனை விட வேறு என்ன வளம் வேண்டும். திருவிதாங்கூர் மாகாணத்தின் தலைநகரமானது பத்மநாதபுரம்.

ராஜ ரவிவர்மா மற்றும் அவர் வழிவந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிய, தற்போது கேரள அரசாங்க பராமரிப்பில் இருக்கும் இந்த அரண்மனையின் உள்புறம் தாய்க்கொட்டாரம் என்று ஒரு கட்டிடம் உண்டு, அதுவே இந்த  அரண்மனையில் முதன்முதலாக கட்டப்பட்ட கட்டிடமாகும். 

லையடிவாரம் என்பதால் இயற்கையாகவே அரண்மனை முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. போதாகுறைக்கு மொத்த அரன்மையையும் தேக்கு கொண்டு இழைத்திருக்கிறார்கள். மேலும் அரண்மனையினுள் எவ்வித அலங்கார மின்விளக்குகளும் கிடையாது. இயற்கை தரும் வெளிச்சம் கொண்டே அரண்மனை முழுமையையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதால் மாலை 4.30 மணி வரை மட்டுமே அரண்மனை உலாவிற்கு அனுமதி.           

ரண்மனையினுள் முக்கியமான இடங்களிலெல்லாம் நிற்கும் அரண்மனை ஊழியர்கள் அந்த இடங்களின் சிறப்பை, அதன்பின் இருக்கும் வரலாற்று புராணத்தை நமக்குக் கூறுகிறார்கள். அனைவருமே மலையாளிகள், ஆங்கிலம் ஹிந்தி சரளமாக பேசுகிறார்கள், தமிழ் புரிந்து கொள்கிறார்கள், பேச்சு அவ்வளவு சரளமில்லை. இருந்தும் அவர்களது மலையாளத் தமிழ் நமக்கு புரியும் படியாகவே இருக்கிறது.  

ஆசியாவிலேயே மரத்தால் (தேக்கால்) ஆன மிகபெரிய அரண்மனையினுள், நுழைந்த அடுத்த வினாடி நம்மை வரவேற்பது குதிரை வீரன் விளக்கு. விளக்கின் மேற்புறம் ஒரு குதிரைவீரன் போருக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டதே இவ்விளக்கின் பெயர்காரணமாகும். 




தேக்காலான வரவேற்பு மண்டபத்தின் மேற்கூரையில் இருந்து கீழ்நோக்கி தொங்கிக் கொண்டிருக்கும் சிக்கலான வடிவமுடைய இரும்புச் சங்கிலி இந்த விளக்கை தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளது மேலும் விளக்கை நீங்கள் எந்த திசையில் அல்லது கோணத்தில் திருப்பினாலும் அது அந்த திசை நோக்கியே வெளிச்சம் கொடுக்கும், எத்தனை பலமாக காற்றடிப்பினும் அசையவே அசையாது, விளக்கின் முகமும் மாறாது. தொடாதீர்கள். இங்கிருக்கும் எந்த ஒரு பொருளையும் தொட்டு ரசிப்பதற்கு அனுமதியில்லை. 

குதிரைவீரன் விளக்கை தவிர்த்து குறிப்பிடும்படியான மற்றொரு விஷயமும், விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும் தேக்கால் ஆன மேற்கூரையில் ஒன்றிற்கொன்று ஒற்றுமையில்லாத தொண்ணூறு விதமான தாமரை மலர்கள் மிகமிக நெருக்கமாக அருகருகே பொறிக்கப்பட்டுள்ளன. சீன தேசத்தவர்கள் அன்பளிப்பாக வழங்கிய நாற்காலி மற்றும் கட்டிலையும் அந்த மண்டபத்தில் பார்வைக்கு வைத்துள்ளார்கள். 

முகப்பு மணடபத்தின் ஓரத்தில் குறுகலான அமைப்பையுடைய மர ஏணி மேல்தளம் நோக்கி ஏறுகிறது. (இங்கே மரம் எனப்படுபவை அனைத்தும் தேக்காலனவை) இந்த ஏணியின் அருகில் இருக்கும் கண்ணாடிப் பேழையினுள் அரசர்களுக்கு வந்த ஓண வாழ்த்து அட்டைகளை பார்வைக்கு வைத்துள்ளனர். 

ணியானது நம்மை அழைத்துச் செல்லுமிடம் அரசவையின் மந்திராலோசனைக் கூடம். அரசர் தன் குழாமுடன் இணைந்து ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டுமாயின் அம் மந்திராலோசனை இங்கு வைத்தே நடைபெறும். மிக சிறிய இடமாயினும் அரசரின் அரியணை, மந்திரி, தளபதி இன்னபிறர் அமரும் இருக்கைகள்,  ஊர்ப் பெரியவர்கள் மற்றும் ஊரார் அமரும் இடம் என்று அனைவருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. 



கேரளா பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையின் ஜன்னல்கள் உள்ளிருந்து பார்த்தால் வெளிப்புறம் தெரியும்படியாகவும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் இருளாய் தெரியும் படியாயும் கட்டப்பட்டுள்ளது. ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு செல்லும் வாயில்கள் மிகக் குறுகலாகவே கட்டப்பட்டுள்ளன. இந்த அரண்மனையில் இருக்கும் பெரும்பாலான அறைகளின் தரைப்பகுதி நல்ல வளுவளுப்பாக இருப்பதன் காரணம் முட்டை ஓடு, முட்டையின் வெள்ளைக்கரு, தேங்காய் செரட்டை, சுண்ணாம்பு. 

ந்திராலோசனைக் கூடம் கடந்து அடுத்ததாக நாம் நுழையும் இடம் அன்னதான மண்டபம். இரண்டு தளங்களாக அமைந்திருக்கும் அன்னதான மண்டபத்தில் ஒரேநேரத்தில் இரண்டாயிரம் ஆயிரம் பேர் வரை அமர்ந்து உணவருந்த முடியும். மேலும் தினசரி இங்கே அன்னதானம் நடைபெறுமாம். உணவு சமைக்கும் இடம், ஊறுகாய் பராமரிக்க பயன்படுத்திய சைனா களிமண்ணால் செய்யப்பட்ட தாளிகள் போன்றவற்றை பத்திரமாக பராமரித்து வருகிறார்கள். 

ன்னதான மண்டபம் தொடர்ந்து வருவது தாய்க்கொட்டாரம். மிகபெரிய கூட்டுக்குடும்பம், அங்கே வாழ்ந்ததற்கான சாட்சியங்களை விட்டுச் சென்றுள்ளது இந்த தாய்க்கொட்டாரம். ராஜா ரவிவர்மா முதன் முலில் கட்டிய தாய்க்கொட்டாரத்தை சுற்றியே அவரைத் தொடர்ந்து சமஸ்தானத்தை ஆட்சி புரிந்தவர்கள், அரண்மனை மொத்தத்தையும் விஸ்தரித்துள்ளார்கள். தற்போது அமைந்திருக்கும் அரண்மனையின் மொத்த பரப்பளவு ஆறரை ஏக்கர். 

தாய்க் கொட்டாரத்தைத் தொடர்ந்து வருவது மூன்று அடுக்குகளைக் கொண்ட ராஜ மாளிகை. இங்கு மன்னரின் படுக்கையறை மற்றும் ஓய்வெடுக்கும் அறைகள் அமைந்துள்ளது. மன்னரின் படுக்கையறையில் இருக்கும் கட்டிலானது 64 மூலிகைகள் சேர்த்து செய்யப்பட்ட மருத்துவ குணமுடைய கட்டிலாகும். மேலும் இக்கட்டிலை டச்சுகார்கள் மன்னருக்கு நட்பு நிமித்தமாக பரிசளித்துள்ளனர் . 


ந்த அறையைத் தொடர்ந்து வருவது அரச குமாரிகளின் அந்தபுரம். இங்கு அரசனைத் தவிர வேறு யாருக்குமே அனுமதி இல்லை. நல்ல நீளமான அறைகளையுடைய அந்தபுரத்தின் இருபக்க சுவர்களிலும் ரசம் மங்கிய ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிகள் தொங்குகின்றன. ஒரு கண்ணாடியின் அருகில் ஒப்பனை செய்துகொள்ள வசதியாக ஊஞ்சல் ஒன்று கட்டித்தொங்க விடப்பட்டுள்ளது. 

திருவிதாங்கூர் அரச குடும்பத்தைப் பொருத்தவரையில் பெண்களுக்கே அதிக மரியாதைகள் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளனர். மேலும் இங்கே ராணியின் மகள்வழிப் பேரனே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் என்றொரு விதியும் உள்ளது.

ந்தபுரத்தைத் தொடர்ந்து வரும் மற்றொரு நீளமான அறையில் மன்னரின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற சாதனைகள், போர்கள், மன்னரிடம் அடிபணிந்தவர்கள், மற்ற முக்கிய நிகழ்வுகள் முதலியவை ஓவியங்களாக வரையப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன. 

தைத் தொடர்ந்து வருவது இந்திர விலாசம். இந்திர விலாசமானது மாட வீதிககளை நோக்கியபடி அமைந்துள்ளது. மாட வீதிகளில்  இறைவன் உலா வரும்போது தரிசிக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னர் நகர்வலம் செல்லும் போது யானையின் அம்பாரியில் ஏறி அமர்வதற்குண்டான இடமும் இங்கே இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் விருந்தினர்களுடன் மன்னர் உரையாடும் இடம் இந்திரவிலாசம் என்பதால் சற்றே நவீனபாணியில் கொஞ்சம் அகலமாக விசாலமாக கட்டப்பட்டுள்ளது.

தைத் தொடர்ந்து வரும் இடம், முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட நவராத்திரி மண்டபம். மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் இங்கிருந்த சரஸ்வதி சிலை தற்போது இல்லை. அரண்மனையின் கலாசாலையும் இம்மண்டபமே. அரசி மற்றும் அரச குடும்பத்துப் பெண்டிர் கலை நிகழ்சிகளை பார்த்து ரசிக்கும் படியாக மரத்தாலான மறைவான தடுப்பு ஒன்றும் இவ்விடத்தில் இருக்கிறது.



ரண்மனையின் வெளிப்புறதில் மிகபெரிய தடாகம் ஒன்றை கட்டியுள்ளார்கள். மன்னரின் அறையில் இருந்தும், அந்தபுரத்தில் மற்றும் கோவிலில் இருந்தும் தடாகத்தினுள் செல்லும் படியாக மொத்தம் மூன்று வழிகளை அரண்மனையின் உட்புறம் இருந்து அமைத்துள்ளார்கள். 

ரண்மனையினுள் மிக ஒடுக்கமான ஆயுதசாலைகள் உள்ளன, ஈட்டி, வேல்கம்பு, கையெறி குண்டு, துப்பாக்கி முதலான போர்க்கால ஆயுதங்களை மிகவும் ரகசியமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருந்திருக்கிறார்கள். மேலும் இந்த பகுதியை சுற்றி கடுமையான காவல் இருந்துள்ளது. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில்  பெரும்பாலான ஆயுதங்கள் மிலேச்சர்களால் அபகரிக்கப்பட்டதாக கூறுகின்றனர், எஞ்சிய ஆயுதங்களை அருகில் இருக்கும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.

திரைப்பட ஷூட்டிங்களுக்கு வாடகைக்கு விட்டே நாயக்கர் மகாலைநாசம் செய்துவிட்டோம், முறையான பராமரிப்பின்றி, வேலூர், செஞ்சி மற்றும் இன்னபிற கோட்டைகளின் முக்கால்வாசி வீதம் அழிந்தே போய்விட்டது. தமிழகத்தில் உருப்படியாய் இருக்கும் ஒரே ஒரு அரண்மனை இதுவாகத்தான் இருக்கவேண்டும் .அதுவும் பாழ்பட்டுப் போகுமுன் ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிடுங்கள். 

ரண்மனையை சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்புபோது 'ஏ இங்கதாண்டி சந்திரமுகி படமும் ராரா பாட்டும் எடுத்தாங்களாம்' என்று கூறிக்கொண்டே கடந்த அந்த அழகிய மங்கையை உள்ளிருக்கும் மன்னர்களின் ஆன்மா மன்னிக்கவே போவதில்லை :-)  

படங்கள் : நன்றி கூகுள் 

பயணிப்போம்...

19 comments:

  1. வணக்கம்
    சீனு(அண்ணா)

    நாங்கள் பார்க்க முடியதா இடங்கள் பற்றி தங்களின் பதிவின்வழி பார்க்க கிடைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.படங்கள் எல்லம் மிக அழகு தொடருங்கள் பயணத்தை....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிக மிக சிறப்பான பார்வை.

    ReplyDelete
  3. அருகே உதயகிரி கோட்டை ஒன்று உள்ளது தமிழக பராமரிப்பில்...அங்கே பலான பலான சம்பவங்கள் நடப்பதாக கேள்வி, எனது குடும்பமும் கே ஆர் விஜயன் குடும்பமும் அங்கே போனபோது உதயகிரி கோட்டைக்கு போகாமலேயே திரும்பினோம்...

    சிறப்பான வர்ணிப்புகள்...!

    ReplyDelete
  4. அற்புதமான விவரிப்பு, அழகான படங்கள். சபாஷ் சீனு.

    ReplyDelete
  5. எப்போதோ போனது! சரியாக நினைவில்லை!பெங்கல் வாழ்த்து!

    ReplyDelete
  6. கூடவே இருந்து பார்த்தது போல் வர்ணிப்பு... நன்றி + வாழ்த்துக்கள் சீனு...

    ReplyDelete
  7. ஏன் பாஸ் அந்தப்புர போட்டோவ மட்டும் போட மறந்துட்டீங்க..?

    ReplyDelete
  8. // அந்த அழகிய மங்கையை உள்ளிருக்கும் மன்னர்களின் ஆன்மா மன்னிக்கவே போவதில்லை :-) //

    ஏன் உங்கள திரும்பி பார்க்காமையே போயிடுச்சா?

    ReplyDelete
  9. சிறப்பான தகவல்கள்.. பார்த்துடணும் ஒருமுறை...

    ReplyDelete
  10. அருமையான விவரிப்பு! இறுதியில் வைக்கும் பஞ்ச் டயலாக் பெஸ்ட்! ’வளுவளுப்பு ’என்பது “ வழுவழுப்பு” என்று இருந்திருக்க வேண்டும். மற்றபடி ஓர் அருமையான பயணக்கட்டுரை! நன்றி!

    ReplyDelete
  11. நேரில சென்று பார்க்காத குறையை நிவர்த்தி செய்து கொள்ளும் விதமாக விவரிப்பு + படங்கள்!

    ReplyDelete
  12. அருமையான தகவல்கள்..வழிகாட்டி துணை இல்லாமல் சுற்றிப்பார்த்து வெளியேறமுடியாத அளவில் மிகப்பெரிய அரண்மனை..!

    ReplyDelete
  13. படங்கள் : நன்றி கூகுள்
    >>
    படங்களை அக்காக்கிட்ட கடன் வாங்கி இருக்கலாமே சீனு!!
    http://rajiyinkanavugal.blogspot.in/2013/09/blog-post_16.html

    ReplyDelete
  14. அரண்மனையை நேரில் கண்ட உணர்வு..... வாழ்த்துகள் சீனு.

    தொடர்கிறேன்..... நானும் போகணும்! வீட்டுல வேற பார்க்கணும்னு போட்டு இருக்காங்களே!

    ReplyDelete
  15. நிறைய தகவல்கள் விக்கிபீடியால இருந்து எடுத்தீங்களா? சாதரணமா ஒருமுறை சுற்றிப்பார்த்தால் இவ்வளவு தகவல்கள் கிடைக்காதே....

    ReplyDelete
  16. வொய் கமென்ட் மாடரேஷன்?

    ReplyDelete
  17. அரண்மனையின் 5வது வாசல் எதனால் திரக்கவில்லை அதை திரக்க நான் தயார்

    ReplyDelete